Saturday, April 26, 2008

கனவில் வந்த கதைகள் : ஆலங்கட்டி மழை

திகாலை...
சுபவேளை...
ஒரு ஓலை வந்தது...
பாட்டொன்று காற்றில் கசிந்து கொண்டிருக்கிறது...
எனக்கெல்லாம், அதிகாலையில் தூக்கத்தில் கனவில் வந்தால்தான் உண்டு!
அட, இன்றைக்கு வந்த கனவினை நினைவிருக்கும் போதே சொல்லி விடுகிறேன்!

ன்றைக்கு ஏகாந்தமானதொரு இடத்தில் இருந்ததாக நினைக்கிறேன். எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை. அப்போதுதான் நன்றாக மழை பெய்து விட்டிருந்தது. கொஞ்சம் வித்யாசமாக ஆலங்கட்டி மழை வேறு. வீட்டைச்சுற்றியும் சின்னஞ்சிறிய கூழாங்கல் அளவிலான பனிக்கட்டிகள். வெளியே வந்து பார்க்கிறேன், வெள்ளை வெளேரென்று, வெள்ளைப்பூக்கள் உலகமாக வீதியெங்கும் இரைந்து கிடக்கின்றன. ஒரு பனிக்கட்டியினை கையில் எடுத்துப் பார்க்கிறேன். மத்தியிலோ வெள்ளை. ஓரங்களில் உருகிக்கொண்டிருக்கும் அந்த பனிக்கட்டி, தன் வெள்ளை நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. தன் எல்லைகளை இழப்பதால் அந்த பனிக்கட்டி வருத்தப்படுகிறதா, அல்லது எல்லாமும் ஆன பிரகிருதியுடன் இணைவதில் மகிழ்வடைகிறதா, என வியந்து கொண்டிருந்தேன்.

லங்கட்டிகளில் ஆழ்ந்துபோன என் கவனத்தை இன்னொன்றும் இழுத்தது. அந்த வெள்ளை வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக வட்ட வடிவத்தில் தடங்கள். ஆலங்கட்டிகளை காயப்படுத்தாமல் நடந்து செல்ல யாரோ பாதை அமைத்தது போல இருந்தது. அதன் அருகே சென்று பார்க்கிறேன். அந்த வட்ட வடிவத் தடத்தில் தண்ணீர் மட்டுமே இருந்தது. பனியெல்லாம் அங்கே உருகி விட்டது போலும். அருகே இருந்த மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கொண்டு, அந்த பள்ளத்தில் விட்டுப் பார்க்கிறேன். குச்சி உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்றடி ஆழம் இருக்கலாம். இன்னமும் தரை தட்டுப்படவில்லை. இன்னமும் எவ்வளவு ஆழம் இருக்குமோ தெரியவில்லை. இந்த தண்ணீர் நிறைந்த பள்ளத்தினைப் போலவே, தொடர்ந்து வரிசையாக இருந்த பள்ளத்தடங்கள் என் ஆவலை அதிகப்படுத்தியத்தில் வியப்பதற்கில்லை. தொடர் தடங்களாக நிறைந்திருக்கும் இந்தப் பள்ளங்கள் எங்குதான் செல்கிறனவோ என வியந்தேன்.

ந்த தடங்களை தொடர்ந்து செல்வதென முடிவு செய்து நடக்கலானேன். பனிக்கட்டிகளுக்கும், பள்ளத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில், காலை அதிகம் ஊன்றி விடாமலும், பட்டும் படாமலும் நடந்தேன். சற்றே நடந்தவுடன், அந்த தடங்கள் முடிவுக்கு வரலாயின - ஒரு குடிசையின் வாசலில். ஆகா, இந்த வீட்டுக்கான பாதை தானா இந்த தடங்கள் என்று எண்ணியவாறு, அந்த வீட்டின் கதவின் மேல் கையை வைக்க தானாக திறந்து கொண்டது. வீட்டினுள் குள்ளமாக ஒருவர் இருந்தார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைவில், யார் இவர் என்று பார்க்க, உள்ளே நுழைந்தேன். என் வருகையைப் பார்த்து திரும்பிய அவரோ, "என்ன இவ்வளவு நேரம்? உன் கால் பாதங்கள் எல்லாம் பனிக்கட்டிகளால் சுட்டு விட்டதா என்ன?" என்று கேட்டு சிரிக்கலானார்!

வரை இதற்குமுன் பார்த்ததில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன் நான். இதற்குமுன் நாம் பார்த்திராத ஒருவர், நம்மை எதிர்பார்த்திருந்ததுபோல் பேசுகிறாரே என்கிற வியப்பு ஒரு நொடி தோன்றினாலும், அது நெடுநேரம் நீடிக்கவில்லை. அதற்குக் காரணம், அவரது உருவமும் உடையும் - அவைகளே அவரொரு பௌத்த துறவியென சொல்லாமல் சொன்னது. "ஐயா, வெளியே வீதியில் இருந்த தடங்களை தொடர்ந்து வந்தேன். அவை இங்கு வந்து முடிந்தன. தங்கள் வீட்டினுள்ளும் இவை இருக்கின்றவே..." என்றென் வியப்பை அவரிடம் வெளிப்படுத்தினேன். அப்போதுதான் அவர் வீட்டினுள் இருக்கும் அத்தடங்களை கூர்ந்து கவனிக்கலானேன். அந்த தடங்களோ, அந்த வட்ட வடிவத்திலால் ஆன வீட்டின் மையப்புறத்தில் சென்று முடிந்தன. மையத்திலோ இன்னமும் பெரியதாக வட்ட வடிவிலான பள்ளம். என் கண்கள் மையப் பள்ளத்தினை அடைந்ததை தன் பார்வையால் கண்டு கொண்ட அந்த முனி, அதைக்காட்டி "அதோ, அதுவா?, அருகில் சென்று பார்!" என்றார்.

மையப் பள்ளத்தின் அருகே சென்று அதன் அருகில் மண்டியிட்டு சாய்வாக அமர்ந்தேன். துறவியும் அருகில் வரலானார். வீட்டின் வெளியே இருந்த பள்ளங்களைப்போல் இதில் நீரில்லை. ஒருவேளை மழைதான் அவற்றை நிரப்பி இருந்தது போலும். பள்ளத்தில் சதுரப் பட்டையான கற்கள் கறுப்பிலும் வெள்ளையிலும் ஆங்காங்கே இருந்தன. கூர்ந்து கவனித்தால், அந்த சதுரப் பட்டையில் ஒரு பக்கம் வெள்ளையாகவும், இன்னொரு பக்கம் கறுப்பு நிறத்திலும் இருப்பது தெரிந்தது. சில கற்கள் வெள்ளைப்பக்கமாகவும், மற்றவை கறுப்புப் பக்கமாகவும் வெளியே தெரிந்தன. "இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன, சொல் பார்க்கலாம்!" என்றார் துறவி என்னிடம். சமயத்திற்கு ஏற்ப எதாவது சொல்லி வைக்கலாம், என்றவாறு நானும் பதிலளிக்கலானேன். "வெள்ளை மனதில் கர்ம வினைகள் கறுப்பு நிறத்தில்" என்று.

ன்னைப் புன்னகையுடம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் கையில் குச்சி ஒன்றை அவர் எடுத்துக் கொண்டார். பள்ளத்தில் கீழே குச்சியை நீட்டி, கறுப்புப் பக்கத்தினைக் காட்டியவாறு இருந்து பட்டைக் கற்களை ஒவ்வொன்றாக திருப்பி, வெள்ளைப்பக்கம் தெரியும்படி செய்யதாவாறு, என்னிடம் கேட்டார், "இப்போது?" என்று. "கர்ம வினைகள் களையப் படுகின்றனவோ!?" என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். அதற்கும் அவரிடம் புன்னகை மட்டுமே விடையாய் கிடைத்தது. கடைசிக் கல்லினை திருப்பிட முயலும்போது அவரது குச்சி அந்தப் பள்ளத்திலேயே விழுந்து விட்டது. உடனே நான், பள்ளத்தின் கீழிறங்கி அதை எடுக்க எத்தனிக்கலானேன். என்னை தடுத்து நிறுத்திய அவரோ, "வேண்டாம், பள்ளத்தில் அடியில் கனல் நெருப்பு நீறுபூத்தவாறு இருக்கு. கீழே இறங்கினால், உன் கால் பாதங்கள் சுட்டுச் சுண்ணாம்பாகி விடும்" என்று.

ன்னைக் கேட்காமலேயே என் கண்கள் விரிந்தன, அவர் சொன்னதைக் கேட்டு. அவரோ, குனிந்து தன் கைகளை பள்ளத்தில் நீட்டினார். முதலில் அவருக்கு குச்சியோ எட்டவில்லை. ஆனால் அவரது கைகள் தானாக நீண்டிட, குச்சியை கையில் இலாகவமாக எடுத்துக் கொண்டார். பின்னர் கடைசி கல்லையும் அதன் வெள்ளைப் பக்கமாக திருப்பி விட்டுவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார்!. கடைசி கல்லும் திரும்பியவுடன், அந்தக் கடைசிப் புன்னகையில் எல்லா கற்களும் முழுதும் வெள்ளையாக தெரிந்தன. அண்ட கோடி சராசரங்களெல்லாம் ஒன்றாய் சமைந்திருப்பது போல், அந்தப் பள்ளம் முழுதும் வெள்ளையாக, எங்கும் நிறைந்த ஆனந்த வெளிச்ச வெள்ளத்தில் மூழ்கலானேன், கனவு கலையும் வரை...!

8 comments:

  1. //அந்த பனிக்கட்டி, தன் வெள்ளை நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. தன் எல்லைகளை இழப்பதால் அந்த பனிக்கட்டி வருத்தப்படுகிறதா, அல்லது எல்லாமும் ஆன பிரகிருதியுடன் இணைவதில் மகிழ்வடைகிறதா, //

    தன் எல்லைகளை இழந்து, 'தன்னை'யும் இழப்பதால்தான் அந்த பனிக்கட்டி பிரகிருதியுடன் இணையமுடிகிறது என்று நினைக்கிறேன்.... :-)

    ReplyDelete
  2. வாங்க மதுரையம்பதி.
    'தன்னை இழந்து' என்பதற்கு 'யான்/எனது' என்கிற அடையாளங்களை இழப்பதைச் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்...
    உண்மையான 'தான்' என்கிற சுயம் இந்த அடையாளங்களுக்கு அப்பாற்பட்டதல்லவா. அந்த உண்மை நிலையை உணர்வதில் இழப்பொன்றும் இல்லையே!

    ReplyDelete
  3. ஆலங்கட்டி உருகுவதில் தொடங்கி அடித்து நகர்த்திவிட்டீர்கள். அடிக்கடி இப்படி கனவு காண்பீர்களோ?

    அட்லாண்டா பக்கம் வந்தாலும் உங்களப் பார்க்காமல் வந்துவிடலாமோ என்று தோன்றுகிறது. :-) சும்மா. அசத்துகிறீர்கள்!!!

    ReplyDelete
  4. ஆகா, உங்களுக்கு பிடித்திருந்ததா, குமரன், மிக்க மகிழ்ச்சி!
    எப்போதும் ஏதாவது கனவு இருக்கும். ஆனால் காலை துயில் கலைவதற்கு சற்று முன்னால் வரும் கனவுகள் மட்டுமே நினைவில் இருக்கும். அந்த துயில் கலையும் வேளையில் கண்ட கனவை கொஞ்சம் அசைபோட்டு வைத்தால், அதை கதையாக எழுத உதவுகிறது.

    அட்லாண்டா பக்கம் எப்போ வரீங்க, சொல்லுங்க.
    என்னைப்பார்க்கமல், இந்தப் பக்கத்தில் இருந்து தப்ப முடியுமா என்ன?:-)

    ReplyDelete
  5. ஜீவா இது கனவா கதையா.. கனவென்றால் ஒரு செய்தியிருப்பது போல் தோன்றுகிறது..

    ReplyDelete
  6. வாங்க கிருத்திகா மேடம்.
    கதையாய் சொல்லப்பட்டக் கனவு!
    செய்தி இருப்பதை கண்டு கொண்டீர்கள், நல்லது!
    அன்றாடம் நம் அனுபவங்கள் நமக்கு கற்றுத் தருவதுபோல, கனவுகளும் கற்றுத்தரலாம் இல்லையா!

    ReplyDelete
  7. ஆஹா, தங்கள் உள்ளத்தில் 'ஆஹா'வை உருவாக்கியதில் மகிழ்ச்சி!

    ReplyDelete