Sunday, November 02, 2008

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ள வேண்டாம்!

கோபாலகிருஷ்ண பாரதியின், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவை. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை ஒரு தொடராகவே தந்திட நெடுநாளாகவே விருப்பம் இருப்பினும், அப்பெரிய சாதகத்திற்கு தயார் செய்து கொள்ளவே இன்னும் பல காலம் செல்ல வேண்டியிருப்பதால், அவற்றை பின்னர் தருகிறேன். அவற்றைத் தவிர, தனிப்பாடல்களையும், கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி இருக்கிறார்.
அவற்றில் ஒன்றான 'திருவடி சரணம்' பாடலை இங்கு பார்க்கப்போகிறோம்.

கோபால கிருஷ்ண பாரதியின் அனைத்து பாடல்களுக்குமான வரிகளை இங்கு காணலாம்.

இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். குறிஞ்சி எனும் பாடல் தொகுப்பில் நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடி முதலில் கேட்டது. முசிரி சுப்ரமணிய ஐயர், எம்.எஸ் அம்மா, மதுரை மணி ஐயர் போன்றோரின் கச்சேரிகளில் இடம்பெற்ற பாடல். வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளும் போது, வர்ணத்தினை தொடும் பொழுதே, இந்தக் கீர்த்தனையை சொல்லிக் கொடுக்கும் படி எனது ஆசிரியரிடம் கேட்டிட, அவரும் என் ஆர்வத்திற்கு அணை போடாமல், சொல்லிக் கொடுக்க முயன்றார். ஆனால், என்னிடம் போதிய பயிற்சி இன்மையால், அனுபல்லவியிலேயே நின்றுவிட்டது! (இந்தப் பாடல் அனுபல்லவியில் தொடங்கி, அதற்கு அப்புறம் பல்லவியில் தொடர்வது வழக்கம்)

இராகமோ, காம்போதி. 28ஆவது மேளம் ஹரிகாம்போதியின் ஜன்யம். இங்கு நிஷாதம், ககாலி நிஷாதம் (நி2). ஆகையால், சதுஸ்ருதி த்வைதம்(த2) ஸ்வரஸ்தானத்திற்கும், ககாலி நிஷாதம் ஸ்வரஸ்தானத்திற்கும் இடைவெளி அதிகம்.
ஆரோகணத்தில், நிஷாதம் இல்லை, ஆனால் அவரோகணத்தில் உண்டு. ஆகவே பத (ப-ஸ்த), நித (நி-நித) சஞ்சாரங்களில் நிறைந்திருக்கும் கமகங்கள் இசைக்கு செழுமை சேர்ப்பவை.

மா - கா - பா - தா - ஸ்அ ; - ஸ் ரீகா | ரிஸ்ஸ்த - ரீஸ்நீ - தா - பா ; தா ||
ம - று - ப - டி - யும் - கருவ | டையும் - கு.ழி - யில் - தள்.ளி ||

பா - தா - ஸ்அ - ஸ்நி - தா - பம - பா ; | தா ; ; பா - ; ; ப நி தா ||
வ - ரு - த்த - ப - டு - த்த - வேண் - | டா - ம் . . . . என்.னை ||

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இந்த சுட்டியில் கேட்கலாம்.

பல்லவி
திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
தேவாதி தேவா நின் (திருவடி சரணம்...)

அனுபல்லவி
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் - என்னை
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம்
பொன்னம்பலவா நின் (திருவடி சரணம்...)

சரணம்
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!

அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி சரணம்...)

(அடுத்து வருதல் : இடையறாது, தொடர்ந்து வருதல்)
பொன்னம்பலம் தன்னில் பொதுநடம் ஆடும் சபேசனே, உன் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்.
என்னை இதற்கு மேல், மீண்டும் மீண்டும் கருவடையும் கருங்குழியில் தள்ளி, வருத்தப்படுத்த வேண்டாம், ஐயா.
இப்பிறப்புக்கு மேல், இனி ஒரு பிறப்பில்லை எனும் பேறினைத் தாரும் ஐயா. அதற்காகவே, உங்கள் திருவடியே சரணம், என நான் நம்பி வந்தேன்.

புல்லாகி, பூண்டாகி, இன்னும் என்னவெல்லாம் என கணக்கெழுத முடியாத அளவிற்கு பிறப்பெல்லாம் பிறந்திளைத்தேன். தேவரீர், உம்மை இறைஞ்சிக் கேட்டு, இம்மானிட ஜன்மம் தனைப் பெற்றேன்.
அரிதாய் கிடைத்த இம்மானிடப் பிறப்பு நாளொரு வண்ணம், வீணாகி அல்லவோ போகின்றது.
எனினும், ஐயா, என் குறை இம்மியளவும், தீர்வதாகத் தெரியவில்லையே.
பிறந்த பிறப்பறுக்கும் பெம்மானே, என் பிறவிச் சுழலைதனை உடைத்திடுவாயே.

உன்னை இடையறாது, தொடர்ந்து வந்திடும், என்னை நீ ஒதுக்கித் தள்ளலாகாது.
உன்னை அரஹர வென சொன்னாலே, போதுமல்லவா.
சொல்கிறேன் நானும், அரகர, ஹரஹர, அரஹர.
ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர.
ஐயா, என்னை தடுத்தாட்கொள்ள, நீயும் வந்தருள நற்சமயம் ஈதய்யா.
கோபாலகிருஷ்ணன், உன்னை எப்போதும்,
புகழ்ந்து, பணிந்து, போற்றி, திருவடி சரணம் என,
உன் திருவடிகளில், உன் திருவருளுக்காக இறைஞ்சிப் பணிகிறேன் ஐயா.

திருமந்திரம்:
அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றோ.
(அரகர எனச்சொல்ல, அடைய அரிதானது ஏதுமில்லை. எனினும், அதைச்சொல்ல அறியாரே. அரகர எனச் சொல்ல, அமரராய் ஆவாரே, ஏனெனில், பிறப்பறுக்கும், பெரும் துயர் முடிக்கும், அருஞ்சொல் தானே அரகர.)

19 comments:

  1. காம்போதில இந்த பாட்டு அருமை...நான் ரஞ்சனி காயத்ரி பாடி கேட்டேன்.இதே போல இன்னொரு பாட்டும் ரொம்ப பிடித்தது.."வழி மறைத்திருக்குதே மலை போல் மாடு படுத்திருக்குதே".தோடியில்..கேக்கும்போது அழுகையே வந்துவிட்டது. மிக சமீபத்தில்தான் இந்த பாட்டு கேட்டேன்.எழுதியவர் கோபால க்ருஷ்ண பாரதியா தெரியவில்லை..!! தொடருங்கள் உங்கள் பணியை....

    ReplyDelete
  2. வாருங்கள் மேடம்,
    பாடலை இரசித்தமைக்கு நன்றிகள்.
    நீங்கள் சொல்லும் 'வழி மறைத்திருக்குதே...' பாடலும் அருமையான பாடல். அதை இயற்றியதும், கோபாலகிருஷ்ண பாரதிதான். நந்தனார் சரிதம் தான். தோடியில் கேட்டீர்களா நீங்கள்! ரஞ்சனி-காயத்ரி அருமையாக அந்த பாடலைப் நாட்டைக் குறிஞ்சியில் தான் நான் கேட்டிருக்கிறேன். டி.எம்.கிருஷ்ணா தான் தோடி ராகத்தில் பாடக் கேட்டிருக்கிறேன்.
    இந்தப் பாடலைக் கேட்கும்போது, நம் கர்ம வினையை மாடுபோல உருவகம் செய்து கொண்டால், அவ்வினைகள் தான், நம்மை உய்ய விடாமல் வழிமறைத்திருக்கும் தடைகள். *'சற்றே விலகாதோ, உந்தன் மாடு'*, என அகமுருகி நிற்க, ஈசனும் உருகி, *'சற்றே விலகி இரும் பிள்ளாய்'* என உத்திரவிடுவார்!

    ReplyDelete
  3. //'சற்றே விலகாதோ, உந்தன் மாடு'*, என அகமுருகி நிற்க, ஈசனும் உருகி, *'சற்றே விலகி இரும் பிள்ளாய்'* என உத்திரவிடுவார்!//

    இந்த க்ஷேத்திரம் திருப்புன்கூர். பலரும் சிதம்பரம் எனத் தவறாய் நினைக்கின்றார்கள். நந்தன் சரித்திரக் கதைகளை பாபநாசம் சிவனின் குரலிலும் கேட்க முடியும். பிரபலம் ஆனதுக்குக் காரணமும் ஒருவகையில் சிவனே ஆவார். எனினும் நித்யஸ்ரீ பாடியும் கேட்டிருக்கேன். நன்றி, இங்கே பகிர்ந்தமைக்கு.

    //இப்பிறப்புக்கு மேல், இனி ஒரு பிறப்பில்லை எனும் பேறினைத் தாரும் ஐயா. அதற்காகவே, உங்கள் திருவடியே சரணம், என நான் நம்பி வந்தேன்.//



    என்னைப் பொறுத்தவரையில் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாமல் இருத்தல் வேண்டும் என்பதே வேண்டுகோள். அது போதுமே!

    ReplyDelete
  4. அருமையான பாடல் ஜீவா சார்.

    இருப்பையூர் வாழ் சிவனே இன்னுமோர் கருப்பையூர் வாராமல் கா.

    பிறப்பெடுக்க பிறபபெடுக்க கர்ம வினைகள் ஏறிக்கொண்டே செல்லுமல்லவா எனவே பாசம் அறுத்து பதியுடன் சேர்ந்து அவருக்கு சேவை செய்தலே மானிட வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டுமல்லவா?

    ReplyDelete
  5. வாங்க கீதாம்மா,
    //சற்றே விலகாதோ, உந்தன் மாடு - இந்த க்ஷேத்திரம் திருப்புன்கூர்.//
    ஆமாம்மா, அந்தப் பாடலைப் பற்றி முன்பொருமுறை
    இங்கே
    பதிவிட்டிருந்தேன் - திருபுங்கூர் நந்தியின் படத்துடன்!

    //என்னைப் பொறுத்தவரையில் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மறவாமல் இருத்தல் வேண்டும் என்பதே வேண்டுகோள். அது போதுமே!//
    மறவாமல் இருந்தாலே - பிறவாமல் இருப்போமே, சரிதான்!
    பிறவா வரும் தாரும் பெம்மானே - பிறந்தாலும் திருவடி மறவா வரம் தாரும்!
    என பாபநாசம் சிவன் பாடுவாரே!
    மேலும் சொல்லுவார் சிவனார்:
    பார்வதி நேயா பக்த ஸஹாயா
    பந்தம் அறாதா வந்தருள் தாராய்
    முந்தை வினை கோர சிந்தாகுலம் தீர
    எந்தாயுன் பாதார விந்தம் துணை சேரப்
    பிறவா வரம் தாரும்!

    ReplyDelete
  6. வாருங்கள் கைலாஷி ஐயா,
    பொருத்தமான பட்டினத்தார் பாடலைச் சட்டெனச் சொன்னீரய்யா!
    முழுப்பாடலும் இங்கே:
    மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்
    வேதாவும் கை சலித்து விட்டானே - நாதா
    இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் வாராமற் கா!"
    கவியரசர் கண்ணதாசனும்:
    "பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து சோர்ந்தானம்மா - மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா - மீண்டும்
    பாவி ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா" என்பார்.

    பிறப்பெடுக்க பிறப்பெடுக்க, மீண்டும் மீண்டும், துவக்கப்புள்ளியில் இருந்து துவங்க வேண்டியுள்ளது. சம்பந்தர்போல் குழந்தையிலேயே, அருள்வாக்கு கிடைத்தால் நலம். ஆனால், அவன் சித்தம் எப்போதும் அப்படி இருப்பதில்லையே. அப்பர் போல் அலைந்து திரிய வேண்டியுள்ளதே!

    ReplyDelete
  7. நல்ல பாடல் ஜீவா. நன்றி.

    //வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளும் போது, வர்ணத்தினை தொடும் பொழுதே, இந்தக் கீர்த்தனையை சொல்லிக் கொடுக்கும் படி எனது ஆசிரியரிடம் கேட்டிட, //

    ஆஹா!...நீங்களும் வயலினிஸ்ட்டா?...இன்னும் பிராக்டிஸ் பண்றீங்களா ஜீவா?. நான் விட்டு 10 வருஷமாச்சு.....:(. வீட்டுல இருக்கும் வயலின்னைப் பார்க்கும் போதெல்லாம் மனதை ஏதோ செய்கிறது.

    ReplyDelete
  8. வாங்க மௌலி சார்,
    நின்னக்கோரி வர்ணத்தில் பாதியில் நிறுத்தியதுதான், அதற்கப்புறம் தொடரவேயில்லை!
    ஒவ்வொரு விஜயதசமிக்கும், மீண்டும் தொடரலாமோ என்கிற ஆவல் இருப்பதோடு சரி!

    ReplyDelete
  9. பின்னூட்டமெல்லாம் பாடலின் அழகுக்கு அழகு சேர்த்து விட்டன. நான் சொல்ல ஒன்றுமில்லை :)

    பிறவாத வரம் வேண்டும் - பிறந்தாலும்
    உன்னை என்றும் மறவாத வரம் வேண்டும்

    என்று முதலில் சொன்னது ஔவைதானே? அதுவேதான் என் வேண்டுதலும்.

    பி.கு. மௌலி & ஜீவா. புலம்பிக்கிட்டே இருக்காம மறூபடி வயலினை எடுத்து வாசிங்க :)

    ReplyDelete
  10. அச்சச்சோ. அது காரைக்கால் அம்மையார்னு நினைக்கிறேன். எது சரின்னு யாராச்சும் சொல்லுங்கப்பா.

    ReplyDelete
  11. வாங்க கவிநயாக்கா,
    ஆமாம், காரைக்கால் அம்மையாரும் அப்படிச் சொல்லி இருக்காங்க - ஆனா முதல்ல சொன்னது அவங்களான்னு தெரியாது - முதல்ல, அவங்களோட காலத்தைப் பற்றியே - முழுமையான ஆதாரங்கள் நம்ம கிட்ட இல்லை, மேலும் ஆராய்ச்சிக்கு உரியது.

    ReplyDelete
  12. நான் நான் வயலினிஸ்ட்! ஏன் இசை நுணுக்கங்களே சுத்தமா தெரியாது. (அசுத்தமா தெரியுமான்னு கேக்காதீங்க!)

    அட ஒரு 20 நிமிஷம் சும்மா வாசியுங்கப்பா. ரொம்ப நல்லது......

    ReplyDelete
  13. >>பிறவாத வரம் வேண்டும் - பிறந்தாலும்
    உன்னை என்றும் மறவாத வரம் வேண்டும்<<

    The actual film song goes as:
    "piRavAda varam vENDum enpizhaiyAlE nAn mINDum piRandu viTTAl unnai maRavAda manam vENDum.........."
    The above is a film song (Karaikkal ammaiyAr movie starring KBS) partly adapted from periya purANam by sEkkizhAr. You can hear the 3 songs from the movie at the following site:
    www.smashits.com/music/tamil/songs/3473/karaikkal-ammaiyar.html

    SEkkizhAr in his seyyuL/song #1781 (covering KAraikkAl ammaiyAr) writes:
    iRavAda inba anbu vENDippin vENduginRAr
    piRavAmai vENDum mINDum piRappuNDEl unnai enRum
    maRavAmai vENDum innum vENDum nAn magizhndu pADi
    aRavAnI ADum podun aDiyin kIzh irukka enRAr.

    Karaikkal ammaiyAr herself sang about 144 songs about tiruvAlangADu. You can read them at:
    http://www.shaivam.org/tamil/thirumurai/thiru11_peyar.htm

    As for tiruvaDi caraNam song of GKB, it is not part of nandanAr caritram. This and other songs are separately compiled wherein GKB eulogizes Lord Nataraja of Cidambaram. Whenever the mudra "gopalakrishNan" or "BAlakrishNan" appears in the song you can be sure that song is not part of nandanar caritram.

    ReplyDelete
  14. வருக சேதுராமன் சுப்ரமணியன் சார்.
    இந்தப் பாடல் நந்தனார் சரித்திரம் தொகுப்பில்லாமல், தனிப்பாடல்களா!
    தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள். நானும் இந்தப் பாடலை, எப்போது நந்தனார் பாடியிருப்பார் என வியந்து கொண்டிருந்தேன். முத்திரை வைத்து அதில் இடம்பெறாத பாடல்களை கண்டு கொள்ளலாம், என்ற புதிய செய்திக்கும் நன்றி.
    இடுகையின் முன்னுரையை மாற்றி அமைக்கிறேன்!

    ReplyDelete
  15. "பிறவா வரம் வேண்டும் என்பிழையாலே..." - காரைக்கால் அம்மையார் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறதா, செய்திக்கு நன்றி ஐயா.
    தாங்கள் தந்திருந்த சுட்டியினைப் பார்த்தேன்.

    ReplyDelete
  16. >>அடுத்து வந்த என்னை<<
    I would interpret this phrase as "I have come to you in surrender. So do not ignore me". That is GKB's plea. In Thamizh if you say "aDuttaDuttu" then it means often, successive, and persistent.
    >>கறுவடையும்<<
    Please change the vallina "Ru" to iDaiyina "ru"

    ReplyDelete
  17. வாங்க சார்,
    //In Thamizh if you say "aDuttaDuttu" then it means often, successive, and persistent.//
    I think I have meant the same with "(அடுத்து வருதல் : இடையறாது, தொடர்ந்து வருதல்)"
    //கறுவடையும்//
    சுட்டியமைக்கு நன்றி, திருத்தி விடுகிறேன்.

    ReplyDelete
  18. namaskarangal.melae kurippidapattulla "yu tube" il ulla thiruvalar.Unnikrishnan avargaludaya "MATHURAMANA" padalai kaetka mudiyamal MAKKAR pannu kirathey?YAEN?ganapathysathiyamurthy.

    ReplyDelete
  19. Enna arumai in the words surrendering to Eswaran and begging him.for ultimate moksha is what i also pray for

    ReplyDelete