Wednesday, October 29, 2008

இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?

நரேந்திரனின் பயிற்சிக் களம் - நான்காவது பகுதியினை எட்டியிருக்கிறோம், மெய்யன்பர்களே. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து படிக்கலாமா.
கடந்த பகுதிகளின் சுட்டிகள்:
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
----------------------------------
நரேந்திரனின் கூர்மையான மனது, இராமகிருஷ்ணரின் அறிவுரைகளில் இருந்த மிக நுண்ணிய செய்திகளையும் ஆழ்ந்து கவனித்து, அவற்றின் சாரத்தினை தன்னுள் வாங்கிக் கொண்டது.
ஒருநாள், இராமகிருஷ்ணர், வைணவத்தின் மூன்று முக்கிய கூறுகளாக - "இறைநாம அன்பு, இறையடியார் தொண்டு, எல்லா உயிர்களுடத்திலும் அன்பு" என குறிப்பிட்டார். மேலும், அதோடு சேர்த்து, எல்லா உயிர்களுக்குமான தொண்டு எனவும் குறிப்பிட்டார். அன்பு - தொண்டு; இதில் இருந்த வேறுபாட்டை மற்ற மாணவர்களால், அவ்வளவு எளிதாக உணர இயலவில்லை. நரேந்திரனோ, இளம் மாணவர்களை பின்னர் அழைத்து, அவர்களிடம், 'நம் குரு, என்ன அழகாக, அத்வைதத்தின் பற்றற்ற நெறியினையும், த்வைதத்தின் அன்பு நெறியையும், ஒரு சேர இணைத்து விட்டார் பாருங்கள்' என்று சொல்லி விளக்கினார்:
"அத்வைதமும், த்வைதமும் - ஒன்றுக்கு ஒன்று முரணானதே அல்ல. த்வைதம் உரைப்பவன், தன் மனதை கல்லாக்கிக் கொள்ள வேண்டியதில்லை, உலகை விட்டு ஒதுங்க வேண்டியதில்லை. பிரம்மம் எல்லாவிடத்திலும் இருப்பதால், அத்வைதம் உரைப்பவன், எல்லோரிடமும் அன்பு செலுத்தி, தொண்டும் ஆற்றிடத்தானே வேண்டும். எல்லோரிடத்திலும், அன்பு செலுத்த, அவர்களிடத்தில் இருக்கும் இறையைப் பார்த்தால் இயலுமல்லவா.", என்றதுடன் தொடர்ந்து நரேன் சொல்கிறார்:
"இறைவன் விருப்பம் அதுவானால், ஒருநாள், இந்த பேருண்மையை, இந்த உலகம் முழுமைக்கும் பறை சாற்றுவேன். அதனை எல்லோருக்கும் பொதுவான உடமையாக்குவேன்."
சில ஆண்டுகளுக்குப் பின் இதே கருத்தினை கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துவார் - அதன் இறுதி வரிகளில் இருந்து:
இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?:
எவன் ஒருவன், இயல்பாக எல்லா உயிர்களிலும் ,
அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில்!
அவனே இறைவனின் உண்மையான தொண்டன்.

இராமகிருஷ்ணர், கிட்டத்தட்ட மீண்டும் ஒருமுறை, இந்து மதத்தின் அடிப்படைகளை நரேந்திரனுக்கு கற்றுத்தந்தார் எனச் சொல்லலாம். நரேன், தனது அன்னையின் மடியில் கற்ற அரிச்சுவடிகளெல்லாம், அவரது கல்லூரி வாசத்தில் கரைபுரண்டிருக்க, இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டிற்குப்பின், இந்து மதம், வெறும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டது அல்ல, என உணர்ந்தார். அது ஒரு உள்ளார்ந்த அனுபவம், ஆழ்ந்தது, உள்ளடக்கியது, எல்லார் நம்பிக்கைகளையும் மதிப்பது என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் உயர்ந்த குறிக்கோள் எனவும் உணர்ந்தார்.

மதம் என்பது ஒரு இலட்சியப்பாதை என்றும், அது ஜாதி, மற்றும் இனம் போன்ற வேறுபாடுகளைக் கடக்க வேண்டும், காலம், இடம் போன்ற கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்றும் கற்றார். ஒருவர், குறியீடுகள் மூலமாக, தனது இஷ்ட தெய்வத்தை வணங்குதல் மூலமாக, எல்லாமுமாய் இருக்கிற பரம்பொருளை இறுதியில் எட்டிட முடியும் என்பதையும் கற்றார். இராமகிருஷ்ணர், தானே, ஒரு எடுத்துக்காட்டாய், நரேந்திரனுக்கு, எப்படி ஒரு மனிதன், தன் உயரிய உன்னத இலக்கினை எட்டிட இயலும் - என்பதனைக் காட்டினார்.

ஒருநாள் ஆனந்த நிலையில், இராமகிருஷ்ணர், அன்பர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: "பல்வேறு கருத்துக்களும், பல்வேறு வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவை எல்லாவற்றையும் நானும் கண்டிருக்கிறேன். இவை எல்லாம் எனக்குப் பிடிப்பதும் இல்லை. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட அன்பர்கள் தங்களுக்குள்ளே, வாக்குவாதமும், வீண் சண்டையும், செய்கின்றனர். ஒன்றை உங்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என் மக்கள். இங்கே அன்னியர் யாரும் இல்லை. முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். அவனே அரசன். அடியேன் அவன் வேலையாள். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."

நரேந்திரனை ஒப்பிடுகையில் இராமகிருஷ்ணர், "நான் பல அன்பர்கள் இங்கு வருவதைப் பார்க்கிறேன். சிலரைப் பார்க்கும் போது, பத்து இதழ் தாமரை போல் தோன்றும். இன்னும் சிலரை பார்க்கும்போது, நூறு இதழ் தாமரை போல் தோன்றும். ஆனால், நரேந்திரனோ, எல்லா தாமரைகளிலும், ஆயிரம் இதழ் தாமரை. மற்றவர்கள் பானை அல்லது கூஜா போன்றவர்கள், என்றால், நரேந்திரனோ பெரிய தண்ணீர் தொட்டி. மற்றவர்களோ, குளம் அல்லது குட்டை என்றால், நரேந்திரனோ, பெரிய நீர்தேக்கத்தைப் போன்றவன். நரேந்திரன், கூட்டங்களில் என் அருகாமையில் இருக்கும்போது, பெரும் சக்தியை உணர்கிறேன்." என்பார்.

தக்ஷினேஸ்வர் வனத்தின் மரங்களடியில் தியானம் மேற்கொண்டார், நரேன். இதே இடத்தில் தான் முன்பு இராமகிருஷ்ணரும், தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவ்விடத்தில் தொடர்ந்து, தியான பயிற்சிகளை மேற்கொள்ள, அவரது குண்டலினி சக்தி எழுப்பபெற்றார் என்றும், மேலும் சில ஆன்மீக தரிசனங்களைப் பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஒருமுறை, கிரிஷ் என்னும் சக தொண்டரோடு சேர்ந்து, தியானம் செய்ய அங்கு சென்றார். அன்று அந்த இடத்தில், நிறைய கொசுக்களாக இருந்தது. கிரிஷ் அவர்களால், கொசுகளின் தொந்தரவில் இருந்து, மனதை ஒருநிலைப்படுத்துவது சிறிது கடினமாக இருந்தது. அதே சமயத்தில், அருகில் இருந்த விவேகானந்தரை கவனித்தால், அவரோ, உடனேயே, ஆழ்ந்த தியானத்தில் சென்றிருந்தார் - அவரது உடல் முழுவதும் கொசுக்கள் போர்வையாய் மூடி மொய்த்துக் கொண்டிருப்பினும்!

ஒரு சில நாட்களில், நரேந்திரனுக்கு, தன் இலக்கினை அடையும் தாகம் வெகுவாக உயர்ந்திருந்தது. ஒரு நாள் இரவு முழுதும், கொல்கத்தா கோசிப்பூர் தோட்ட வீட்டினை ஓயாமல் சுற்றி வந்தவாறு, இராம நாமத்தினை உச்சரித்துக் கொண்டிருந்தார். விடியற்காலையில், இராமகிருஷ்ணர், நரேனின் குரலைக் கேட்டு, உள்ளே அழைத்து, 'குழந்தாய், ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய், பொறுமை இழப்பதால், என்ன பயன்?.' என்று கேட்கலானார். ஒரு நிமிடம் தாமதித்து விட்டு, இப்படியும் சொன்னார் : " நீ இப்போது செய்வதை, நான் 12 வருடங்களுக்கு செய்து வந்தேன். என் தலையில் அப்போது, பெருத்த புயல் வீசியது போலிருந்தது. ஒரு நாள் இரவில் என்ன இயலும்?' என்றார்.

இப்படிச் சொன்னாலும், இராமகிருஷ்ணருக்கு உள்ளூர, விவேகானந்தரின் ஈடுபாட்டில் மகிழ்ச்சியே. தனக்குப்பின் தன் சீடர்களை, நரேந்திரனே தலமையேற்று, வழிநடத்த வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதை வெளிப்படுத்தவும் தயங்கியதில்லை. "அவர்களை உன்னுடைய கவனிப்பில் விட்டுப்போகிறேன். அவர்களிடம், ஆழ்ந்த அன்பு செலுத்தி, அவர்கள் ஆன்ம நெறியில், என் இறப்புக்குப்பின்னரும் நடந்திட பார்த்துக்கொள்" என்றார் நரேந்திரனிடம். இளம் சீடர்களிடம், நரேந்திரனை தங்கள் தலைவராகக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், ஒருநாள், இராமகிருஷ்ணர், அவராகவே, இளம் சீடர்களுக்கு, துறவறத்தினை தொடங்கி வைக்க, பின்னாளில் விவேகானந்தரால் தொடங்கப்பட இருக்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு, அன்று அவரே பிள்ளையார் சுழியும் இட்டார்.

16 comments:

  1. //முழுமையில், நான் இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய் நான் இருப்பதையும் பார்க்கிறேன். அவனே அரசன். அடியேன் அவன் வேலையாள். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்.//

    அன்பு கூட சிலசமயங்களில் அனுபவித்துப் பார்த்தால் தான் தெரிகிறது. இறைவனின் அன்பும் அப்படித்தான். அன்பைப் புரிந்து கொள்வதைக் கூட பல சமயங்களில் தவற விடுகிறோம். இயல்பாக எல்லாம் நடப்பதாக நினைக்கிறோம்.
    பல சமயங்களில், நிழலின் அருமை போல, அன்பு கூட ஆதரவின்மையின் சுடுதலில் தான் புரிகிறது.

    நல்ல செய்திகளைச் சொல்லும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாருங்கள் திரு.ஜீவி,
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. //இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?:
    எவன் ஒருவன், இயல்பாக எல்லா உயிர்களிலும் ,
    அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில்!
    அவனே இறைவனின் உண்மையான தொண்டன்.//

    அருமையான வரிகள். ஆழமான உண்மை. இந்த நிலையை அடைவதோ அத்தனை சுலபமில்லை.

    படிக்கப் படிக்கத் திகட்டாத பொருளைத் தந்தமைக்கு நன்றிகள் ஜீவா.

    ReplyDelete
  4. வாங்க கவிநயாக்கா,
    ஆமாம், அந்த நிலையை அடைவது அத்தனை சுலபாய் இல்லை. ஏனெனில், நான் என்கிற நினைப்பௌ நம்மை எப்போதும் வந்து அலைக்கழிப்பதால்!
    தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. ஆஹா. மிக அருமையான பதிவு. ஒரே நாளில் என்ன தான் இயலும்? என ராமகிருஷ்ணர் கேட்பதும் பின் தன் சீடரின் ஆர்வத்தை நினைத்து மகிழ்வதும் நான் மிகவும் ரசித்தேன். நான் கூட சில சமயங்களில் அப்படி கடுமையாக முயற்சித்து பின் ஆன்மிகம் பொறுமை உள்ளவர்களுக்கே என்று நினைத்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
  6. வாருங்கள் ரமேஷ் சதாசிவம்,
    முருகப் பெருமான் அருணகிரியாருக்கும், பின்னர் அவனே இரமணராகவும் சொன்னதெல்லாம் - 'சும்மா இரு, சொல்லற' என்றல்லவோ!

    ReplyDelete
  7. ஆகா!
    ஆயிரம் வரிகள் தியரி கேட்பதைவிட அனுபவியின் வார்த்தைகள் ஒரு வரி ஆனாலும் பெரும் பொருளை உணர்த்துகின்றன.

    ReplyDelete
  8. வாருங்கள் திவா ஐயா,
    அருமையாகச் சொன்னீர்கள். அனுபவத்தைப் படிப்பதின் அருமையை!

    ReplyDelete
  9. அருமையான பதிவு. பயிற்சிக் களம் நமக்கும் தான். நரேந்திரனுக்கு மட்டும் அல்ல.

    ReplyDelete
  10. அருமையாகச் சொன்னீர்கள் கீதாம்மா,
    படிக்கையில், நம் நோக்கம் பயில்வதும், பயிற்சி பெறுவதுமாய் இருந்தால் நலம்.

    ReplyDelete
  11. மிக அருமையான இடுகை. நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி ஜீவா.

    ReplyDelete
  12. வருக மௌலி சார்,
    எல்லாம் பரமஹம்சர் அருள்!

    ReplyDelete
  13. எப்படி விட்டேன் இந்த பதிவுகளை என்று தெரியவில்லை.
    அருமையாக இருக்கு.

    ReplyDelete
  14. வாருங்கள் குமார், மறுமொழி தந்து நிறைய நாள் ஆச்சே!

    ReplyDelete
  15. குமார் பதிவை எப்படி விட்டீங்களா? துபாய் பானதால. :-))
    செட்டில் ஆயாச்சா? உங்க பதிவை பாத்தேன் அப்புறமா கமென்டறேன்.

    ReplyDelete
  16. //செட்டில் ஆயாச்சா? //
    வீடு பாக்குறதை விட, அங்கே இருக்கிற கட்டிடங்களை படங்களா எடுத்துக்கிட்டு இருக்காரு!

    ReplyDelete