Sunday, November 23, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினைந்து

பா 53:

உபாதிநா சத்த லுறுவான் முனிவ
னுபாதியில் விஷ்ணுவி னுள்ளே - யபேதமே
தோயத்திற் றோயமும் தூவிண்ணி லேவிண்ணும்
தீயிற்றீ யும்போலத் தேர்.

(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதி நாசத்தல் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே ஏய - பேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயிற் தீயும்போலத் தேர்.

பொருள்:
தான் உண்மையில் யாரென தெரியாமற் செய்யும் உபாதிகளை அழித்து ஒழித்தவன், உபாதி இல்லாத, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், விஷ்ணுவின் உள்ளே சென்று, அதுவாகவே ஆவான். அவனுக்கும், பரமனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது - தண்ணீரில் தண்ணீர் போலவும், தூய விண்ணில் விண் போலவும், நெருப்பில் நெருப்பு போலவும், தான் இரண்டற இருப்பதை அறிந்து தெளிந்தான்.

விளக்கம்:
தன் முந்தைய வினைகள் களையப்பட்டவன், உபாதிகளையெல்லாம் இழந்து, இறுதியான நிலையினை அடையுங்கால், எல்லாமும் ஆன பரமனும், தன் ஆன்மாவும், இரண்டு என்றில்லாமல், ஒன்றாக இருப்பதை அறிவான்.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.

ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர வெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.

முக்தி என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, அல்லலோ அல்லல் படும் நிலைகளில் இருந்து, சுதந்தரம் பெறும் நிலையே முக்தி என்பதாகும். பொதுவாக இரண்டு வகையில், குறிப்பிடுகிறார்கள்: ஜீவன் முக்தி - அதாவது, மனிதர் உடலில் உயிர் இருக்கும் போதே, அடையும் முக்தி நிலை. விதேக முக்தி - உடலை விடுத்தபின், அடையும் முக்தி நிலை. ஜீவன் முக்தர், உடலோடு இருப்பதனால், இன்னும் அவருக்கு, தன் ஆன்மாவும், பரமனும், இரண்டாகத் தெரியும் நிலையில் இருப்பார். ஆனால், அது உண்மையல்ல என்பதையும் அவர் அறிவார். உண்மையான இறுதி நிலை, ஒன்றான நிலை, என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதால், மனக் கலக்கங்கள் இல்லை. என்றாலும், அவர் பரமனின் நிலையான நிலையை அறிந்திருந்தாலும், தன் உடலைத் துறக்கும் வரையிலும், அவர் பரமனாகவே மாறுதல் நிகழாது. (உடலோடு, சேர்ந்து, மறைதல் என்னும் நிலையும் சொல்லப்படுகிறது. இந்நிலை, வேதாந்தத்தைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வலியுறுத்தப் படுகிறது.)

உபநிடதங்களில் இருந்து குறிப்புகள்:
"அவன் எப்போது, எல்லா தளைகளில் (கர்ம வினைகள்) இருந்து விடுபடுகிறானோ, அக்காலம் வரை, தாமதமாகின்றது. அதன் பின், அவன் முழுமை அடைகிறான்."
சாந்தோக்ய உபநிடதம் VI. xiv, 2

"அவனுக்கு, இறுதியில், எல்லா மாயைகளும், அவற்றால் ஏற்படும் எல்லா குறைபாடுகளும் முற்றுப்பெறுகின்றன."
ஸ்வேதஸ்வதார உபநிடதம் 1.10

"எப்படி, நதிகளெல்லாம், கடலினில் கலந்திடுகையில், தம், நாம, உருவங்களை இழக்கின்றதோ, அது போல, தன்னறிவு பெற்றவன், பரமனை அடைகையில், தன் நாம, உருவங்களை இழக்கிறான்."
முண்டக உபநிடதம் III. ii.8


இப்போது, இரண்டு பகுதிகளுக்கு முன்னால், கே.ஆர்.எஸ் எழுப்பிய வினாக்களை, திரும்பிப் பார்க்கலாமா?

1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?
ஜீவன் முக்தருக்கு, முழுமையாக எல்லா வினைகளும் முடிந்திருக்காவிட்டாலும், உபாதிகளால் குறைபாடுகள் இல்லை. அவற்றால், தான் இரண்டாகத் தெரிவதை நன்கறிந்திருப்பார்.

2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?
ஜீவன் முக்தருக்கு, உண்பது, உறங்குவது போன்ற உபாதிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அவற்றால், யாதொரு குறைபாடும் இல்லை.

3. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.

15 comments:

 1. //...தொயத்தில் தொயமும்...//

  சரியா?

  `தோயத்தில் தோயமும்’ என்றிருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.

  தோயம் - நீர்

  ReplyDelete
 2. வருக அ.நம்பி,
  பிழை தான், திருத்தி விடுகிறேன்,
  சுட்டியமைக்கு நன்றி!

  ReplyDelete
 3. //எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார். //

  கர்ம வினைகள் முடிந்த பின் தெளிவு ஏற்படுகிறது என்ற பொருளில் வருவதற்கு பதிலாக தெளிவு வந்தபின் பழைய வினைகளின் முடிவுக்காக காத்திருக்கின்றனர் ஜீவன் முத்தர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்கு தெளிவு ஏற்பட்டு விட்டதால் மேற்கொண்டு அவர்கள் வாழ்நாளில் புது கர்மங்கள் அவர்களை அண்டுவதில்லை. எஞ்சியுள்ள கர்மத்தை தீர்க்கவே உடலை வைத்திருந்து பின்னர் உகுத்து விடுகின்றனர்.

  ReplyDelete
 4. அருமை.

  இங்கே விஷ்ணு என்று குறிப்பிடுவது சொல்லின் பொருளை ஒட்டியே. எங்கும் பரவி உள்ளதாலேயே.

  கேள்விகளுக்கான பதில்களும் சரியே!மூன்றாம் கேள்விக்கு கூடுதலாக..
  எப்படி இந்த கர்ம வினைகள் முடிகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமானது. ஜீவன் முக்தனை போற்றி வணங்குபவர்கள் அவனது புண்ணியங்களையும் ( ஆமாம் அதுவும்தானே போக வேண்டும்?)
  போலி என்றும் மற்றபடியும் இகழ்பவர்கள் பாவங்களையும் கொண்டு போய் விடுகிறார்களாம்!!
  கர்ம வினைகள் தீர்ந்துவிடுவதால் அவனை சமாதி நிலையிலிருந்து வெளியே இழுக்கும் சமாசாரம் ஒன்றும் இல்லாமல் போய் எல்லாம் முடிந்துவிடும்.

  ReplyDelete
 5. வாருங்கள் கபீரன்பன் ஐயா,
  //எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார். //
  உடலோடு இருக்கும் வரை, முற்றிலுமாக, எப்போதும், எல்லாமுமே ஒன்று என்று உணர இயலாமல், சற்றேனும், இரண்டாக உணருதல் இருக்குமாம்!
  இந்தச் செய்யுளில், 'தேர்' என முடிதலைப் பார்க்கவும். தேர்ந்தான் தெளிவு முற்றிலுமாக ஏற்படுவது, பரமனுடன் இணைந்தபோதுதான் என்கிற பொருளில் வருகிறது.

  ReplyDelete
 6. வாருங்கள் திவாய்யா,
  //இங்கே விஷ்ணு என்று குறிப்பிடுவது சொல்லின் பொருளை ஒட்டியே. எங்கும் பரவி உள்ளதாலேயே.//
  அருமை!

  ReplyDelete
 7. //ஜீவன் முக்தனை போற்றி வணங்குபவர்கள் அவனது புண்ணியங்களையும் பெறுவார்கள்//
  அருமை. தாங்கள் குறிப்பிட்ட கைவல்ய நவநீதத்தில், இதற்கான குறிப்புச் செய்யுளைப் பார்த்தேன். "அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் கைக்கொள்வாரே" என்கிற வரிகள் அருமையாக இருந்தது. மேலும்,
  "சீவன்முக்தரைச் சேவித்தோர் சிவனனொடு மாலான

  மூவரு மகிழ நோன்பு முழுவதுஞ் செய்துசன்ம

  பாவன மானாரென்று பழமறை முழங்கு மிப்பான்

  மேவருஞ் சீவன் முக்தர் விதேகமுக்தியுநீ கேளாய்"
  என்றும், கைவல்ய நவநீதம் கூறுவது அருமை!

  ReplyDelete
 8. கபீரன்பன் ஐயா,
  //கர்ம வினைகள் முடிந்த பின் தெளிவு ஏற்படுகிறது என்ற பொருளில் வருவதற்கு பதிலாக தெளிவு வந்தபின் பழைய வினைகளின் முடிவுக்காக காத்திருக்கின்றனர் ஜீவன் முத்தர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்கு தெளிவு ஏற்பட்டு விட்டதால் மேற்கொண்டு அவர்கள் வாழ்நாளில் புது கர்மங்கள் அவர்களை அண்டுவதில்லை. எஞ்சியுள்ள கர்மத்தை தீர்க்கவே உடலை வைத்திருந்து பின்னர் உகுத்து விடுகின்றனர்.//
  கர்ம வினைகள் - என்று பொதுவாக சொன்னதை விளக்கி - எந்த கர்ம வினைகள் - பழைய கர்ம வினைகள் மட்டுமே - புதியவை ஏதும் வாரா - என விளக்கியமைக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. //இந்தச் செய்யுளில், 'தேர்' என முடிதலைப் பார்க்கவும்.//
  மேலும் இச்சொல்லின் பொருளைப் பற்றி யோசிக்கையில், 'தேர்' சொல்லுக்கு, இங்கு 'தேர்ந்து' - ஆராய்ந்து, தெளிந்து என்னும் பொருள் கொள்ளுவதைவிட,
  'தேர்' என்னும் சொல்லுக்கான இன்னொரு பொருளான 'சேர்' (தேர்த்தல்) என்பது போருத்தமாக இருக்குமோ என தோன்றுகிறது!

  ReplyDelete
 10. //'சேர்' (தேர்த்தல்) என்பது போருத்தமாக இருக்குமோ என தோன்றுகிறது! //

  அகராதி விளக்கத்தைப் பார்க்கும் போது “அறி” என்பது சரியாக இருக்கும். ஏனென்றால் உபதேசிப்பவர் எல்லாம் அறிந்தவர். ஆகையால் அவர் சொல்வதை முடிவாக (தீர்ப்பாக)கொள்ள வேண்டும். அங்கே யோசிப்பதற்கோ ஆராய்ச்சிக்கோ அவசியம் இல்லை :))

  தேர் [ tēr ] , தேரு, II. v. t. examine, investigate, ஆராய்; 2. discriminate, know, அறி; 3. consider, deliberate, யோசி; 4. say, tell, சொல்லு; v. i. be well versed or proficient in, பயில்

  ReplyDelete
 11. //ஆகையால் அவர் சொல்வதை முடிவாக (தீர்ப்பாக)கொள்ள வேண்டும். அங்கே யோசிப்பதற்கோ ஆராய்ச்சிக்கோ அவசியம் இல்லை :)) //
  :-)
  ஆம், ஐயா, அதனால் தான், ஆராய்தல் சரியாக இருக்காதென்று நினைத்தேன்!
  //“அறி” என்பது சரியாக இருக்கும்//
  இதற்கு மறு பேச்சில்லை. அற்புதமாக பொருந்துகிறது!

  ReplyDelete
 12. // ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
  எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.//


  முதல் வரியில் உள்ள வினாவுக்கு இரண்டாவது வரியில் பதில் உளதோ?
  "தானும் பரமனும் வேறல்ல என்பது" தெளிந்தபின்னே விதேஹ முக்தி
  பெற வேண்டிய நிலை. கேள்வி எப்போது வரும் என்பது.

  இது பரம் பொருளினால் தீர்மானிக்கப்படும் விஷயம். விசுவக் கிராசம் அல்லது
  உலக உயிர்ப்பு ஒடுக்கம் எனும் நேரம். அண்ட அகிலமும் இறைவனது
  பெரு நிலையில் ஒடுங்கப்பெறும் நேரம்.

  "அழிகின்ற சாயாபுருடனைப் போல‌
  கழிகின்ற நீரில் குமிழியைக் காணில்
  எழுகின்ற தீயில் கர்ப்பூரத்தை ஒக்கப்
  பொழிகின்ற இவ்வுடல் போம் அப்பரத்தே. (திருமந்திரம் 2587)

  அந்நேரம் வர முக்தரும் விதேஹ முக்தி பெறக்காத்திருப்பரெனவே
  தோன்றுகிறது.

  சரி. ஜீவன் முக்தி நிலைக்கும் விதேஹ முக்தி நிலைக்கும் நடுவே
  கர்மா செய்வதை விட்டு அகல இயலுமா?

  பூவுடல் உள்ளவரை, புலன்கள் அடங்குமோ ?
  புலன்கள் அடங்கும் வரை மனம் அடங்குமோ?
  மனம் அடங்கும் வரை புத்தி அடங்குமோ?

  புத்தி அடங்கும் வரை ஆன்மா தன் நிலை காணுமோ ?

  ஆகவே திவா சொல்வது "
  எப்படி இந்த கர்ம வினைகள் முடிகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமானது"
  இன்னமும் சிந்திக்க வைக்கிறது.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 13. வாருங்கள் சுப்பு ரத்தினம் ஐயா,
  //அந்நேரம் வர முக்தரும் விதேஹ முக்தி பெறக்காத்திருப்பரெனவே
  தோன்றுகிறது. //
  அப்படித்தான் சாந்தோக்ய உபநிடதமும் சொல்லுகிறது ஐயா.
  //எப்படி இந்த கர்ம வினைகள் முடிகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியமானது"//
  திவா ஐயா சொன்னதில் ஆச்சரியமானது என்னவென்றால், ஜீவன் முக்தனுக்கு, மற்றவர்களால், அவன் கர்ம வினைகள் கழியுமென்று!
  அதுதான் ஒரே வழியா என்பதும் கேள்வி!

  ReplyDelete
 14. விடைகளை மீண்டும் தொகுத்தளித்தமைக்கு நன்றி ஜீவா! அடியேன் கைங்கர்யம் இப்படி வினா விடையாகவே தொடரும் என்றும் "எச்சரித்துக்" கொள்கிறேன்! :))

  சத்சங்கத்வே நிஸ்சங்கத்வம்
  நிஸ்சங்கத்வே நிர்மோஹத்வம்
  நிர்மோஹத்வே நிச்சலதத்வம்
  நிச்சலதத்வே "ஜீவன்முக்தி"

  ReplyDelete
 15. கைங்கர்யம் தொடரட்டும் கே.ஆர்.எஸ், நித்யம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails