Saturday, May 14, 2005

ஏழே கணக்கா, இன்னும் இருக்கா?

அழகன் படத்தில் மரகதமணி இசையில் இந்த பாடலை கேட்டிருப்பீர்கள்:
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா, இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்...

சங்கீதம் என்பது பிறந்த குழந்தைகூட எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய இனிய மொழி. அந்த மொழியின் எழுத்துக்கள்தான் ஸ்வரங்கள். ஸ்வரங்கள்முத்துக்கள் என்றால் விதவிதமாய் கோர்க்கப்பட்ட முத்து மாலையே இசை. இசையில் மயங்காத மனிதனே இல்லை. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்கங்களால் பல்வேறு விதமாக சங்கீதம் இசைக்கப் படுகிறது. என்றாலும் அனைத்து இசைக்கும் மூலம் ஒன்றுதான். ஸ்வரங்கள் எல்லா வகை இசைக்கும் அடிப்படை. ஸ்வரங்களோடு சேர்த்து தாளமும் சங்கீதத்தின் ஜீவநாடி. இந்தப்பதிவில் ஸ்வரங்களைப் பற்றி பார்ப்போம்.

சகலமும் தருபவள் சங்கீத தெய்வம்
ஸரிகமபதநி அவள் உருவம் - உலகில்...(சகலமும்...)

ஆம், ஸ ரி க ம ப த நி .... என்ற ஏழு ஸ்வரங்கள் தான் அவை.

அதென்னது ஸ்வரம்?
ஒலி...சப்தம்...அ.....ஆ....இ....ஈ....இப்படி எதுவேண்டுமென்றாலும் இருக்கட்டும்...
ஒரு குறிப்பிட்ட அலைஎண்ணில் (frequency) ஒலி எழுப்பினால் அதுதாங்க ஸ்வரம்.
அதுசரி, என்ன அலை எண்ணில் ஒலி எழுப்புகிறோம் என்றெப்படி கண்டுகொள்வது?
மேற்கத்திய நாடுகளில் அலைஎண் அளக்கும் கருவியொன்று இசைக்கருவிகளை மீட்டிட பயன்படுத்தப் படுகிறது என்றாலும், ஒவ்வொரு ஸ்வரத்தையும் அளவெடுத்துக்கொண்டு இருக்க முடியாது. ஆதாலால், இசை கற்றுக்கொள்பவர் தன் காதுகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். எழுப்பும் ஒலி எந்த அலைஎண்ணில் வருகிறது என்பதை கணிக்க. இசைக்கருவிகளுக்கும் இது பொருந்தும். உதட்டை மூடிக்கொண்டு 'ம்ம்ம்ம்....' என்று சொல்லுங்கள். சற்றேறக்குறைய அதுதான் உங்களுடய 'ஸ'. 'ம்ம்ம்...' சொல்லிவிட்டு அதே தொனியில் வாயைத்திறந்து 'ஸ..அ..அ....' என்றீர்கள் ஆனால் இன்னமும் சரியான 'ஸ'. ஸ,ரி,க,...ஆகிய ஸ்வரங்கள் ஏறுமுகமான அதிர்வெண்ணில் இருப்பதால், அதிர்வெண்களைக் கூட்டிக்கொண்டே போனால், ஒவ்வொரு ஸ்வரத்தையும் சரியாக பிரயோகிக்க முடியும். இசை ஆசிரியரோ அல்லது சங்கீத ஞானம் உள்ள மற்றொருவரோ நீங்கள் சரியான ஸ்வர ஸ்தானத்தில் ஸ்வரத்தை ப்ரோயோகிக்கிறீர்களா என்று சொல்ல முடியும். அவ்வாறு அவர்களின் உதவியுடன் ஸ்வரங்களின் சரியான ஸ்வர ஸ்தானத்தை கற்றுக் கொள்ளலாம்.
போதுமான பயிற்சியுடன் கற்றதை பழகிக்கொள்ள வேண்டும். சங்கீத ஞானத்திற்கு நிறைய பயிற்சிகள் தேவை. நன்று தேர்ந்த சங்கீத வித்வானுக்கும் மற்றவர்களுக்கும் முக்கியமான வேறுபாடு மற்றவர்களிடம் பயிற்சி இன்மைதான்.

நமது இந்திய சங்கீதத்தில் மட்டுமல்லாமல் அனைத்து சங்கீதங்களுக்கும் ஸ்வரங்களே பிரதானம். மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், ஸ்வரங்கள், 'நோட்' என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீபோர்ட் ஒன்றைப் பார்த்தால், கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோட்-டைக் குறிக்கும். அவர்களது ஸ்வரங்கள் 'A', 'B', 'C' ,... போன்ற குறியீடுகளால் வழங்கப்படுகின்றன. கீழே உள்ள படத்தில் இருப்பதுபோல:


keyboard Posted by Hello

எழுத்து வடிவத்தில் 'A', 'B', 'C' ,... என்று குறிப்பிட்டாலும் பாடும்போது ஸ்வரங்களை குறிப்பதற்கு
'டோ', 'ரி', 'மி', 'ஃபா', 'ஸோ', 'லா', 'தீ'
என்று வழங்குகிறார்கள். இவை முறையே,
'ஸ', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி'
ஆகிய ஸ்வரஸ்தானங்களுக்கு சமானமாகும்.

ஆ, தலைப்பின் கேள்விக்கு வரும் தருணமாகி விட்டது. சங்கீதத்தில் ஸ்வரங்கள் இந்த ஏழுதானா, இன்னும் இருக்கா?
ஆம், இன்னும் இருக்கு, மொத்தம் பன்னிரெண்டு. பொதுவாக சொல்லும்போது அந்த கூடுதல் ஐந்தும் இந்த ஏழு ஸ்வரங்களுக்குள் அடக்கம்.
நமது சங்கீதத்தில் இவற்றை கீழே உள்ள பட்டியலில் இருப்பதுபோல் வழங்குகிறோம்.

ஸ - ஷட்ஜம்
ரி1 - சுத்த ரிஷபம்
ரி2 - சதுஸ்ருதி ரிஷபம் == க1 - சுத்த காந்தாரம்
ரி3 - ஷட்ஸ்ருதி ரிஷபம் == க2 - சதாரண காந்தாரம்
க3 - அந்தார காந்தாரம்
ம1 - சுத்த மத்யமம்
ம2 - ப்ரதி மத்யமம்
ப - பஞ்சமம்
த1 - சுத்த த்வைதம்
த2 - சதுஸ்ருதி த்வைதம் == நி1 - சுத்த நிஷாதம்
த3 - ஷட்ஸ்ருதி த்வைதம் == நி2 - கைசிகி நிஷாதம்
நி3 - ககாலி நிஷாதம்

இதற்கு ஈடாக மேற்கத்திய சங்கீதத்தின் 12 நோட்-கள்:
C, C#, D, D#, E, F, F#, G, G#, A, A#, B

இந்த ஸ்வரங்களின் அதிர்வெண்ணின் பின்னணியில் சுவரஸ்யமான கணிதமும், இயற்பியலும் இருக்கிறது!

அதிர்வலைகளின் நிறமாலையை(spectrum) எடுத்துக்கொண்டால், ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்கக்கூடிய ஒலியினை எழுப்பக் கூடியவை. இவற்றின் அதிர்வெண் 16Hz முதல் 16,000Hz வரை. அவற்றில் 1000 Hz முதல் 16,000 Hz வரையுள்ள பகுதியில்தான் காதுகளும், ஒலியை புரிந்துகொள்ள மூளையும் நன்றாக உணர முடியும். அதிலும் அதிலுள்ள ஒவ்வொரு அதிர்வெண் ஒலியையும் நம் காதுகளால் வேறுபடுத்தி அறிய இயலாது!. உதாரணத்திற்கு அதிர்வெண் 240Hz ஒலிக்கும், 241Hz ஒலிக்கும் வேறுபாடு எதிவும் நம் கேள்வியில் தெரியாது.


frequencyRanges Posted by Hello

மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதுபோல, ஒலிநிறமாலையை ஆக்டேவ் ஆக்டேவாக (ஆக்டேவ் என்பதற்கு எண்மம்? என்கிறார்கள் தமிழில்) பிரித்துக் கொள்ளலாம். மனிதர்களால் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து ஆக்டேவ்களில் ஒலி எழுப்ப முடியும். ஆக்டேவின் ஆரம்ப அதிர்வெண் f1 என்றால், முடியும் அதிர்வெண் தொடங்கிய அதிர்வெண்ணின் இரண்டு மடங்காக, 2 x f1 ஆக இருக்கும். விளக்குவதற்காக வேண்டி, ஒரு ஆக்டேவை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஒரு ஆக்டேவில் இருக்கும் ஒலி அதிர்வுகளை அதிர்வெண் வாரியாக பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அதிர்வெண்ணுக்கும் இடைவெளி, 1.059 இன் மடங்கு என்று வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு ஒலி அதிர்வின் எண் 240 Hz என்றால், அதற்கு அடுத்த அதிர்வெண், 240 x 1.059 = 254 Hz ஆக இருக்கும்.
இப்படியே, 240,254,269,...என்று, பன்னிரெண்டு மடங்கு செல்லுங்கள், பதிமூன்றாவது மடங்கு, தொடங்கிய 240Hz க்காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும்!. அதன் பின் அடுத்த ஆக்டேவ் துவங்கும். ஆக, ஒரு ஆக்டேவில் 12 அதிர்வெண் ஒலிகள். இந்த 12 என்னும் எண்ணுக்கும் நமது ஸ்வரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை இன்னேரம் ஊகித்து இருப்பீர்கள்!
ஆம், நமது 12 ஸ்வரங்களின் அதிர்வெண் இடைவெளியும் 1.509 Hz இன் மடங்குகள்தான்!.

மேற்கத்திய சங்கீதத்தில் மேற்சொன்ன பன்னிரெண்டு அதிர்வெண் கணக்கும், 240 Hz போன்றதொரு நிலையான அதிர்வெண் ஆக்டேவ் தொடக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்திய சங்கீதத்தில் இதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை. மேலும் இதை முதல் நிலையாக கொண்டு அதற்கு மேல் 'கமகம்' என்ற சொல்லப்படும் வழிமுறையையும் சேர்த்து, அடுத்த நிலையில் பயணிக்கிறார்கள். இம்முறை 16ஆம் நூற்றாண்டு ஃபிரன்ச் சங்கீதத்திலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எளிமைப்படுத்த வேண்டி, அவற்றை மேற்கத்திய சங்கீத வழக்கத்தில் அவ்வளவாக இல்லை. (Beatles, Simon போன்றவர்களின் ஆல்பங்களில் அவ்வப்போது காணலாம்).

என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லை பகலா, எனக்கும் மயக்கம்...
சங்கீத ஸ்வரங்கள், ஏழே கணக்கு, ஆனால்
இன்னும் இருக்கு, எனவே மயக்கம்...!

13 comments:

 1. ஜீவா,
  மிக அருமை. முதல் வேலையாய் இப்பதிவின் PDF காப்பியை சேமித்துக் கொண்டேன்.

  ReplyDelete
 2. தமிழகத்தில் சமணமதம் வலுவாக இருந்த காலத்தில் நிறைய தமிழிசை நூல்கள் அழிந்துவிட்டன, இசை காமத்தை மிகுவிக்கும் என்ற கருத்துடைய சமணமுனிவர்களாய் இருந்த தமிழர்கள் இதற்கு ஒரு காரணம். முத்தமிழ்களில் ஒன்றான இசைத்தமிழில் இன்று எச்சமிருப்பது மிகக்கொஞ்சமே என்பது மிக வேதனையான விஷயம்.

  தமிழிசையின் சுரங்கள்
  குறள் - ச
  உழி - ரி
  கைக்கிளை - க
  துத்தம் - ம
  இளி - ப
  விளரி - த
  தாரம் - நி

  ஜீவா,
  நீங்கள் எழுதியிருப்பது மிக அருமையாக இருக்கிறது. இதுபோல் நிறைய எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. நன்றி முத்து.
  சிலப்பதிகாரத்தில் இசைத்தமிழ் குறிப்புகள் நிறைய இருக்கிறதென படித்திருக்கிறேனோ தவிர, சிலம்பின் இசையை நுகர்ந்ததில்லை. சமயம் வாய்க்கும்போது படிக்க வேண்டும்.

  ReplyDelete
 4. நல்ல பதிவு!

  ReplyDelete
 5. அருமையான பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 6. நன்று ஜீவா. இதை ஒரு தொடராக நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள். பயனாக இருக்கும்
  அருள்

  ReplyDelete
 7. nalla pathivu, thanks.

  ReplyDelete
 8. அனைவரின் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  அருள்,
  கல்லாதது கடலளவு. கற்றவற்றை இயன்றவரை எழுத முயல்கிறேன்.

  ReplyDelete
 9. ரொம்ப அருமையான பதிவு. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நல்ல பதிவு! தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 11. Thx for demystifying the basics of music!

  ReplyDelete
 12. ஜீவா - நல்ல பதிவு. இசையைப் பற்றி தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 13. அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails