கிருஸ்துமஸ் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. பரிசுப்பொருட்களின் விற்பனையும் வெகு ஜோராக வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த சமயத்தில் ஒரு சுவையான தகவல்:
சென்ற ஒரு மாதத்தில் மட்டும் இணைய 'தேடு' தளங்களில் (Search engines), அதிகமாக தேடப்பட்ட பொருள் என்ன தெரியுமா? - விடை: ஆப்பிளின் ஐ-பாட் (I-Pod). 6.6 மில்லியன் தேடல்கள். அதற்குபின், இரண்டாவது இடம்: X-பாக்ஸ் என்கிற மைக்ரோஸாஃப்டின் வீடியோ விளையாட்டு சாதனம் - 5 மில்லியன் தேடல்கள். மூன்றாவது இடம்: ஹாரி பாட்டர் - 4.8 மில்லியன் தேடல்கள். 'ஸ்டார் வார்ஸ்' - நான்காவது இடம், மற்றும், 'பார்பி' பொம்மைக்கு- ஐந்தாவது இடம்.
இந்த தகவலில் இருந்து இரண்டு விஷயங்கள் புலனாகிறது. ஒன்று : நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த பொருட்கள், எப்படி இத்தனை நபர்களிடம் இவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பது. மேலும், எப்படி, குழந்தைகளை திருப்திப்படுதுவது (இந்த பரிசுப்பொருள் விஷயத்திலாவது) என்பது தலையாய தேடலாக அமைந்து விட்டது என்பதும். பெரியவர்களின் பொருட்கள் இந்த தேடல்களில் முந்தவில்லையே!
இரண்டாவது: எப்படி இத்தனை நபர்கள் இணையத்தில் தேடு தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும்தான். தங்களுக்கு தெரியாத விஷயங்களைப்பற்றி அறிவுத்தேடலுக்கு இந்த தேடு தளங்களை நம்பி இருக்கிறார்கள் என்பதும். தேடு தளங்கள் தேடித்தரும் இணைய தளங்களில் எந்த அளவு நம்பிக்கை வைக்கமுடியும் என்பதில் எந்த யாரும் கவனம் செலுத்துவதாக இல்லை. அதற்கான சான்றிதழ் ஏதையும் தேடு தளங்கள் வழங்குவதும் இல்லை. இருப்பினும் அதை தேடு தளங்களின் குறையாக யாரும் கருதவில்லை!
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு பொருளை தேடும்போது வேண்டுமென்றே தேடுதளம் அந்த பொருளைவிட விலை குறைவான மாற்றுப்பொருளை உங்களுக்கு காட்டலாம். இது நல்லதுதானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம்!. ஆனால் எந்த பொருளைக் காட்டுவது என்பதை, எந்த பொருளின் விற்பனையாளர் அந்த தேடு தளத்திற்கு, கையூட்டு ஏதும் (!) அளித்திருக்கிறார், என்ற அடிப்படையில் அமைந்தால் என்ன செய்வது!
திறந்த சந்தையில் இதெல்லாம் நடப்பது சர்வசாதாரணம்தான். நுகர்வோர்தான் தனக்கு வேண்டிய பொருளை கவனமான ஆராய்ச்சியின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
இது இப்படி இருக்க, தேடு தளங்களின் முக்கியத்துவம் அதிகரிக்க, நீங்களும் ஒரு தேடுதளம் தொடங்கலாமே!. வட்டார மக்களின் தேவை மற்றும் வட்டார மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தினால், உங்களுக்கென்று ஒரு தொழில் உங்கள் கையில்!
No comments:
Post a Comment