Monday, August 25, 2008

வெண்பா வகுப்பால் விளைந்த என் பாக்கள்:

பதிவர் அகரம்.அமுதா அவர்களின் வெண்பா எழுதலாம் வாங்க! பதிவைப் பார்த்தவுடன்,
ஆகா, குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ? என விரைந்தேற்றுக் கொண்டேன்.
இடுகை இடுகையாய் வரிசையாய் வகுப்பெடுக்க,
வெண்பா மரபினை இங்கே சொல்லித்தருகிறார்.
இடுகைகளின் பின்னூட்டங்களில் அவர் தந்த வினா விளக்கங்களுக்கும்,
தளை தட்டியபோதெல்லாம் திருத்தியமைக்கும் நன்றிகள் சொல்லி,
இவ்விடுகைகளை ஓரளவுக்கு படித்ததில் பெற்ற ஊக்கத்தில் விளைந்த ஆக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

அல்லும் பகலும் அகத்தில் தியானிக்க
நில்லுமா தாரம் அதனில் நிலைக்க
வெல்லும் இடரதை ஆனை முகத்தான்
இலங்காய் துலக்கத் துவங்கு.

நல்லூர் முருகனை நாளும் வணங்கிட
வல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்
நல்வினை யாவையும் நாளும் பெருகிடும்
நில்வாய் மனமே நிலை.

புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.

அணுவிலும் யாவிலும் ஆழ்ந்து அகண்டிடும்
நுண்ணிய அறிவே சிவமெனும் எண்ணமதில்
தன்னை உணர்ந்திடும் தன்னறி வாம்-அவ்
வணுவாற்றல் வேண்டும் அறி.

நிலையில் மனிதர் நிலைத்து வளர்ந்து
உலையில் உணவை சமைத்து இலையில்
விழுந்திட, ஏனோ மறந்தார் எனினும்
உழவின்றி உய்யா துலகு.

அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
விஞ்சி அமைதியே மிஞ்சிட தஞ்சமிலா
தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
அணுவாற்றால் வேண்டும் அறி.

உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆள
அணுவாற்றால் வேண்டும் அறி.

வரும்மொழி யெல்லாம் வளம்தரும் வாழை
தரும்பயன் போலத்தான் - பன்மொழிக் கலையாவும்
எம்மொழியில் சேர்த்திடபின் மெல்லத்தான் சாகும்
எனும்பேதை அச்சம் தவிர்.

துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு;
தணிந்திடும் தாகம்; பருகிட இன்பம்;
அணிந்திட ஆக்கம்; எனவே நாளும்
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு.

இதுவரை முயற்சித்தவை இவ்வளவு தாங்க. முதன் முதலில் முயற்சிக்க துவங்கிய போது, அரை மணி நேரம் முதல், முக்கால் மணி நேரம் வரையானது, ஒரு வெண்பா எழுதுவதற்கு. போகப்போக பயிற்சிக்குப் பின், ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் எழுத இயலுகிறது. இத்தனைக்கும் வெண்பா இலக்கியங்களை புரட்டிடவில்லை.

வெண்பாவில் சொல்லப்போகும் கருத்து, என்ன வரிகளில் சொல்லப்போகிறோம் என்பது சில சமயம் முன்பாகவே மனதில் தோன்றி விடுகிறது. சில சமயம், ஒரு பகுதி மட்டும் கிடைக்கும். கிடைக்கும் வரிகளை முதலில் நான்கு அடிகளில் எழுதிக் கொள்வேன். பின் சீர் பிரிப்பேன். இவ்வாறு சீர் பிரிக்கும்போது, தளை தட்டினால், சீர்களை மாற்றி அமைப்பேன். சீர்களை மாற்றி அமைக்க இரண்டு உத்திகள். ஒன்று, சொல்லையே மாற்றி அமைத்தல். இன்னொன்று, சொல்லை சற்றே மாற்றி அமைத்தல். உதாரணம் : 'உணர' என்ற சீரை, 'உணர்ந்திட' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!. 'மனதை' என்ற சீரை, 'மனத்தினை' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!.

அடுத்தாக, அடிகளை மாற்றி அமைக்கலாம். எத்தனையாவது அடி, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் இருப்பதால், அதற்கு இசைந்து வரும் விதத்திற்கு ஏற்ப அடிகளை மாற்றி அமைக்கலாம். இவையெல்லாம் துவங்குபவர்களுக்கு மட்டும். ஓரளவு பயிற்சி பெற்றபின், இயல்பாக, ஒரு சீர் முடித்தபின், அது மாச்சீரா, அடுத்த சீரை நிரையசையில் துவங்கு. அல்லது, அது காய்ச்சீர் அல்லது, விளச்சீரா, அடுத்த சீரை, நேரசையில் துவங்கு - என்பதுபோல உள்ளுணர்வு சொல்ல, நேரடியாகவே வெண்பா எழுதலாம்.

ஒவ்வொரு சொல்லுக்கும் பல மாற்றுச் சொற்கள் தெரிந்தால் நலமெனப் படுகிறது. எங்கு தளை தட்டுகிறதோ, அங்கு அந்த சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான மாற்றுச் சொல்லினைக் கொள்ளலாம். மேலும், எதுகை மோனை பளிச்சிட, அதற்கேற்ப சொல் கிடைத்துவிட்டால், வேறென்ன வேண்டும்?. சொற்களைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தச் சொல் அகராதி பயன்படுகிறது. முன்பொருமுறை இலவசக்கொத்தனார், ஒவ்வொரு சொல்லுக்குமான மாற்றுச்சொற்களின் பட்டியல் தரும் அகராதியை குறிப்பிட்டிருந்தார். அதைப்பற்றிய விவரம் ஏதும் இருந்தால், அறிந்தவர்கள் தரவும்.

மரபுக் கவிதைகள் எழுதுவது வசப்பட்டு விட்டால், அடுத்து என்ன, தன்னன்ன தன்னன்ன தான, தனனான்ன என்று இசைத்து வரும், சந்தக் கவிகளைப் படைக்கலாம்!

என்ன நீங்க எப்போ வெண்பா எழுத துவங்கப்போறீங்க? ஆசிரியர் அமுதா காத்திருக்கிறார்!
துவங்க விரும்புபவர்கள், இந்த இடுகையிலும் உங்கள் சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.

வெண்பா எழுத வசப்பெற்றவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் ஆக்கத்தையும் தரலாமே!

12 comments:

  1. துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு
    தணிந்திடும் தாகம்; பருகிட ஆக்கம
    அணிந்திட ஆக்கம்; ஆகவே நாளும்
    இனிய தமிழ் செய்வீர் ஈங்கு.

    அடடா! அருமை.
    பாரதியார் போல் ஆரம்பித்து,
    பாரதிதாசன் போல் முடித்திருக்கிறீர்கள்.

    சுலபமாக வெண்பா எழுத வகுப்பெடுத்திருக்கும் பாங்கும் அருமை!

    வாழ்க, வளர்க உங்களது, உங்களது ஆசிரியரது, தமிழ்த்தொண்டு!

    ReplyDelete
  2. கஷ்டப்பட்டு இந்த துறையில் போகாமல் இருக்கிறேன். :-))

    ReplyDelete
  3. வருக திரு.ஜீவி ஐயா,
    //பாரதியார் போல் ஆரம்பித்து,
    பாரதிதாசன் போல் முடித்திருக்கிறீர்கள்.//
    பெரிய வார்த்தைகள். அடியேன் சிறியேன்.

    ReplyDelete
  4. வாங்க திவா சார்,
    //கஷ்டப்பட்டு இந்த துறையில் போகாமல் இருக்கிறேன்//
    அதான் உங்க யானை இப்படி குதிக்கிறதோ?
    :-)

    ReplyDelete
  5. நீங்க சொல்றதை பார்த்தா ஈசியாத்தான் இருக்கும் போல... :) இதெல்லாம் வித்தகர்கள் மட்டுமே செய்ய முடியுமுன்னு நினைச்சேன்...

    ReplyDelete
  6. வாங்க மதுரையம்பதி,
    //நீங்க சொல்றதை பார்த்தா ஈசியாத்தான் இருக்கும் போல... :) //
    அப்போ நான் ஈசியாத்தான் சொல்லியிருக்கேன் போல!

    ReplyDelete
  7. ஜீவா. உண்மையைச் சொன்னால் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தேவை என்று நினைக்கிறேன். விளக்கம் இல்லாமல் படிக்கும் போது ஏதோ சிவவாக்கியர் பாடல்களைப் படிப்பது போல் தோன்றுகிறது. :-)

    அகரம் அமுதா என்னையும் வெண்பா எழுத அழைத்தார். ஏனோ எனக்கு அதில் இன்னும் ஆர்வம் ஏற்படவில்லை. முன்பு ஜீவாவும் கொத்தனாரும் சொல்லிக் கொடுத்த போதும் கற்றுக் கொள்ளவில்லை. இன்று இவர் சொல்லிக் கொடுக்கும் போது கற்றுக் கொள்ளவில்லை. :-)

    ReplyDelete
  8. ஆஹா, வெண்பாக்கள் அருமை. ஈற்றடிகளும் நீங்களே அமைத்துக் கொண்டீர்களா? "உள்ளிருள் நீக்கும் ஒளி" என்பது ரொம்பப் பிடித்தது. எனக்கு வெண்பா எழுத ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளாகும். அதனாலேயே எழுதுவதில்லை :) நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சுலபம் என்று தோன்றினாலும் நான் ஏமாறவில்லை :)

    ReplyDelete
  9. வாங்க குமரன்,
    //உண்மையைச் சொன்னால் இவற்றிற்கெல்லாம் விளக்கம் தேவை என்று நினைக்கிறேன்.//
    அதற்கு காரணம் நான் கண்டு சொல்வேன்!
    மற்றவர்க்கு ஒருபொருள் தோன்றினால், உங்களுக்கு அவற்றைப்படித்தவுடன், பலப்பல கோணங்களில் பல பொருள் தோன்றியிருக்கும், சரித்தானே! :-)

    ReplyDelete
  10. உங்கள் முயற்சிக்கும், மற்றவரை
    வரவேற்று ஊக்கப்படுத்தும்
    நல்லியல்புக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் நன்றியும்!

    முதல் பாட்டில் 'நில்லும் ஆதாரம்' -இப்படி எழுதினால் தளை தட்டும்.

    நில்லும்ஆ தாரம் -என்றோ
    நில்லுமா தாரம் என்றோ எழுதினால் சரியாக இருக்கும்.

    ஆக்கம் ஆகவே -இங்கும் தளை தட்டுவதைக் கவனியுங்கள்.

    ReplyDelete
  11. வெண்பாவை எதுக்கு வெண்மை ஏற்றி, "வெண்"-பான்னு சொல்லணும் ஜீவா?

    இப்போதிக்கு கேள்வி மட்டும் தான். இல்லீன்னா நானும் பின்னூட்டத்தில் வெண்பா எழுதி, அதைக் கொத்தனார் கண்டு குமுறி...ஹிஹி...வேணாம்! :)

    ReplyDelete
  12. நல்லது சிக்கிமுக்கி,
    தட்டிய தளைகள கண்டு சொன்னதற்கு நன்றிகள், இப்போது திருத்தி விட்டேன்.

    ReplyDelete