Tuesday, August 26, 2008

தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்

மிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் உருவாக்கிய முன்னோடிகளான இம்மூவரில், மற்ற இருவரான முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை பற்றி ஏற்கனேவே முன்பொரு இடுகையில் பார்த்தோம்.

அருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:
  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • எப்படி மனம் துணிந்ததோ என் சுவாமி
    இராகம் : ஹூசைனி, தாளம் : கண்ட சாபு
    பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

    பாடலை இங்கு கேட்கலாம்:
    Eppadi Manam .mp3


பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

41 comments:

  1. அருமையான பதிவு. இதுல எனக்கு ரொம்பப் பிடிச்சது "ஏன் பள்ளி கொண்டீரய்யா". நடனம் அமைக்கப்பட்ட பாடல்ங்கிறதாலயும் இருக்கலாம் :) esnips கொஞ்சம் சரி பார்க்கணும்னு நினைக்கிறேன். மங்களமும் அருமை. நன்றி ஜீவா.

    ReplyDelete
  2. வாங்க கவிநயாக்கா,
    ஏன் பள்ளிகொண்டீரய்யா பாடலை நான் இங்கு குறிப்பிட்டு மட்டும் விட்டேன்.
    நடனத்தோடு சேர்ந்து பார்க்க அருமையாக இருக்கும் - வரிக்கு வரிக்கு - ஒரு கதை இருப்பதால் - ஒரு மணி நேரம் கூட இந்த ஒரு பாடலையே நீட்டிக்கலாம் இல்லையா!

    ensips - இப்போ சரி செய்து விட்டேன் - அந்த பாடலை தவறாமல் கேட்கவும் - இராமனின் இரும்பு மனம் பற்றி சொல்லும்!

    ReplyDelete
  3. கேட்டேன். அவர் சொல்வது உண்மைதானே. இராமனுக்கு இரும்பு மனம்தான் :(

    ReplyDelete
  4. அருணாசலக் கவிராயரைப் படிக்கும்போது எனது தந்தை நினைவு வருகிறது.
    ( சென்னை பச்சையப்பனில் தமிழாசிரியராகத் துவங்கிப் பின் சட்டம் படித்து
    பின் திருச்சியிலே பிரபல லாயராக இருந்தவர் அவர்
    எந்த ஒரு நடப்பிற்கும் கவிராயரின் இராம நாடகம் பாடல்களை உடன் எடுத்துச் சொல்வார்.
    நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பாடல்களும் எங்கள் வீட்டுச் சுவர்களும் சொல்லும்.

    ஒரு சமயம் எனது தந்தை கோர்ட்டில் வாதித்துக்கொண்டிருந்தபோது
    " சட்டம் தூங்குகிறது" என்பதை எடுத்துச் சொல்ல, இந்தப்பாடலைப் பாடினாராம்.


    " கும்பகர்ணன் இவன் ஐயா, நான் தம்பி, எனக்கு மூத்தவன் ஐயா ! "


    ஒரு குடும்ப சண்டை கோர்ட்டுக்கு வந்தது. கணவன் மிகவும் கொடுமைப்படுத்து
    வதாக மனைவியின் புகார். மனைவி கொடுமைப்படுத்துவதாக கணவனின்
    புகார். சமரசத்திற்காக ஒரு ஜட்ஜ் ஒரு கமிஷன் அமைத்தார். (அந்தக்கால‌
    நடப்பு அது) என் தந்தை அந்தக் கணவனைப்பார்த்து முதல் sitting
    லேயே பாட ஆரம்பித்தார்.


    " கேளடா இராவணனே ! நான் சொல்லும் புத்தி... "
    அந்தக் கணவனின்
    குற்றம் என்ன என எல்லோருக்கும் எதிரில் சொல்ல முடியாமல் தவிக்கும்
    மனைவியின் மனதைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது அந்த ப்பாட்டு.
    நான் சொல்ல முடியாததை நீங்க சொல்லிப்பிட்டீங்க என்றாராம் மனைவி.

    பாகப்பிரிவினை வழக்கு ஒன்று. cross examination
    நேரம். வழக்குத் தொடர்ந்தவர் ( எனது தந்தையின் கட்சிக்காரரின் தம்பி)
    கூண்டுக்கு வருகிறாராம்.
    அப்போது எனது தந்தை

    " வந்தான் வந்தான் பரதன் . ரகு ராமன் தம்பி பரதன்.. "

    என்று சன்ன குரலில் பாடினாராம். பரதன் என்ற வார்த்தை கேட்டவுடனே
    தனது கடமை என்ன என உணர்ந்தாராம் வாதி. தனது கேஸை வாபஸ்
    பெறுவதாக அறிவித்தாராம்.

    இப்படி பல நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  5. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    அருமையான சம்பங்களைச் சொல்லி, மெருகூட்டியமைக்கு நன்றிகள்.
    அந்தக் காலத்தில் பாட்டும், நீதியும் எப்படி மக்களிடம் ஊடுரூவியிருந்தது எனபது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது. பாட்டொன்று பாடினாலே, குற்றம் செய்தவனும் தவறை உணர்ந்து திருந்தி விடுவான் எனத்தெரிகிறது. இப்போது அந்தக் காலப்படத்தைப் பார்த்து, என்ன இத்தனை பாட்டு என முகம் சுளிக்கத்தான் இந்தக் காலத்துக்கு தெரிந்திருக்கே தவிர, இவற்றின் பின்னால் எத்தனை உன்னதங்கள் இருந்தன என்பது தங்களைப்போன்ற பெரியோர்கள் எடுத்தியம்பினால் மட்டுமே தெரிகிறது.

    ReplyDelete
  6. நம்மையும் இசையோடு சேர்த்துக் கட்டியமாதிரி மனசை மயக்கும் பாடல்கள்.

    சூரி சாரின் பின்னூட்டத்தைப் படிக்கும் பொழுது எவ்வளவு தீர்க்கமாகத் தெரிகிறது, பாருங்கள்!
    அந்தக் காலத்தில், பக்தி உணர்வை-- ஸ்தூலமாக 'ஏதோ வேண்டுவனவற்றை வேண்டும் ஒரு காரியமாக'த் தனித்துப் பார்க்காமல், வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு ஒன்றியவாறு பிசைந்து கலந்து அனுபவித்திருக்கிறார்கள்!
    கொடுத்து வைத்த உள்ளங்கள்.

    இப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது, பெரிய இழப்பு தான் மிஞ்சுகிறது!

    அருமையான சுகமான நினைவுகளை
    மீட்டும் சுந்திரப் பதிவுக்கு வாழ்த்துக்கள், ஜீவா!

    ReplyDelete
  7. பதிவும், பாடல்களும், பின்னூட்டச் சுவை அனுபவங்களுமாகச் சேர்ந்து, ஒரு இனிய உணர்வை வருடிக் கொடுத்து, நட்சத்திரப் பதிவுக்கு இலக்கணமாக மின்னுகிறது ஐயா!

    ரொம்பவே நெகிழ வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  8. வருக ஜீவி ஐயா,
    //இப்பொழுது இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது, பெரிய இழப்பு தான் மிஞ்சுகிறது!//
    சரியாகச் சொன்னீர்கள்.
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. வருக விஎஸ்கே ஐயா,
    பதிவு இனிய உணர்வினைத் தந்தது மகிழ்ச்சி.
    தங்கள் மறுமொழியாலும் நெகிழ வைத்துவிட்டீர்கள், மிக்க நன்றி.

    ReplyDelete
  10. அருணாசல கவிராயர் பற்றிய நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் எனக்கு புதிது...

    எனக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி ஹம் பண்ணும் பாடல்களை தொகுத்தௌ வழங்கியமைக்கு நன்றி ஜீவா! :)

    சேஷகோபாலன் கவிராயர் பாடல்களை தனியாக 2 சிடி தந்திருக்கிறார்.

    ReplyDelete
  11. அருணாசல கவிராயர் பற்றிய அருமையான இடுகை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை பாடல் ஜெயஸ்ரீ அவர்கள் பாடுவது கேட்க அருமையாக இருக்கும்.பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  13. வாங்க மௌலி சார்,
    //எனக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி ஹம் பண்ணும் பாடல்களை தொகுத்தௌ வழங்கியமைக்கு//
    அப்படியா! மிக்க மகிழ்ச்சி!
    //சேஷகோபாலன் கவிராயர் பாடல்களை தனியாக 2 சிடி தந்திருக்கிறார்.//
    அப்படியா, நான் அறியாதது. திரு.சேஷகோபாலன் பாடி ஒரே ஒரு பாடலை கேட்டிருக்கிறேன் - ஆனால் அதில் வார்த்தைகளே புரிபடவில்லை!

    ReplyDelete
  14. வாருங்கள் அகரம்.அமுதா,
    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாருங்கள் வேளரசி!
    //கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை பாடல் ஜெயஸ்ரீ அவர்கள் பாடுவது கேட்க அருமையாக இருக்கும்.//
    அப்படியா, நான் அவர்பாடிக் கேட்டதில்லை, சுட்டி இருந்தால் தாருங்களேன்.

    ReplyDelete
  16. அருணாசலக் கவிராயர் பற்றிய அறிமுகப் பதிவு மிகவும் அருமை ஜீவா!

    ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம் பாடல் மிகவும் இனிமை!(கொஞ்சம் கொஞ்சம் பொருள் புரியலைன்னாலும் கூட!)
    தமிழிசை மங்களப் பாடலாக மங்களகரமா மின்னுது!

    எப்பமே, எடுப்பு்-தொடுப்பு-முடிப்பு-ன்னு தானே போடுவீங்க!
    இன்னிக்கி, அதுவும் தமிழிசைப் பதிவில், பல்லவி-அனுபல்லவி-சரணம்-னு போட்டிருக்கீங்களே? :)

    ReplyDelete
  17. தாரு என்கிற விரிவான இசைப்பாடல், மற்றும் ரெண்டு ரெண்டா வரும் கண்ணி (த்வி-பதி) இவரோட பாடல்களின் தனியம்சம்!

    ஏன் பள்ளி கொண்டீரய்யா - நடனத்துக்கு என்றே உருவான பாட்டு! அதன் கதைகளை எல்லாம் ஒவ்வொரு பதிவாப் போடணும்-னு ஜீவா கிட்ட ஒரு முறை வேண்டுகோள் வைச்சேன்! இப்ப பார்த்து ஞாபகம் வருது! :)

    ReplyDelete
  18. //எந்த ஒரு நடப்பிற்கும் கவிராயரின் இராம நாடகம் பாடல்களை உடன் எடுத்துச் சொல்வார்.
    நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பாடல்களும் எங்கள் வீட்டுச் சுவர்களும் சொல்லும்//

    சூரி சார்!
    உங்கள் பின்னூட்டம் பெரும் நெகிழ்வை ஏற்படுத்தி விட்டது!

    நம் இசை, அதுவும் ஆன்மீக இசை என்பது வெறுமனே தத்துவத்துக்கும், உருகுதல்களுக்கும் தான் என்ற பரவலான எண்ணம் இக்காலத்தில் உண்டு!

    ஆனால் வாழ்வின் அன்றாட நடைமுறைகளுக்கும், தினப்படி அலைச்சல்-கழிச்சல் வாழ்வில், மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளவும் நம் இசை எப்படி எல்லாம் உதவும் என்பதை அற்புதமாகச் சொல்லி உள்ளீர்கள்!

    குடும்பச் சண்டை, பாகப் பிரிவினை, மனத் தளர்ச்சி, ஞானம் பெறுதல், அன்றாடக் கல்வி, பொழுது போக்கு என்று நம் இசைக்குத் தான் எத்தனை பரிமாணங்கள்!

    நீங்கள் உங்கள் தந்தையார் சொன்ன இராம நாடக இசை ஒப்பீடுகளை எல்லாம் தனிப் பதிவாகப் போட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்!

    இன்றைய தலைமுறையும் இசையைப் பொழுது போக்குக்கு மட்டுமன்றி, சமூக நிதி திரட்டல்களுக்கு எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறதே!
    கூடவே வாழ்வியல் நிதிக்கும் இசையைப் பயன்படுத்திக் கொள்ள, உங்களைப் போன்றோர், இப்படி எல்லாம் எடுத்துக் காட்ட வேண்டும் என்பதே அடியேன் ஆவல்!

    ReplyDelete
  19. jeeva i have the thiakopanishad files ready to upload. through megauploads or such service.
    pl let me know your mail id to send the link. post it in my blog.

    ReplyDelete
  20. வாங்க கே.ஆர்.எஸ்,
    //ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம் பாடல் மிகவும் இனிமை!(கொஞ்சம் கொஞ்சம் பொருள் புரியலைன்னாலும் கூட!)//
    எனக்கும் தான்!
    அனேகமாக, வார்த்தைகளை சற்றே மாற்றிப்போடணும்னு நினைக்கிறேன். முன்பு ஒரு கச்சேரியில் - யாரென்று நினைவில்லை - இந்தப்பாடலை பாடி முடித்ததாக ஞாபகம் - அதை தேடிப்போய் கேட்டுப்பார்க வேண்டும் - அதில் வரிகள் புரியும்படி கேட்கிறதா என்று.
    சேதுராமன் சுப்ரமணியன் சார், வந்து தீர்த்து வைக்கிறாரா பார்ப்போம்!

    ReplyDelete
  21. //கூடவே வாழ்வியல் நிதிக்கும் இசையைப் பயன்படுத்திக் கொள்ள, உங்களைப் போன்றோர், இப்படி எல்லாம் எடுத்துக் காட்ட வேண்டும் என்பதே அடியேன் ஆவல்!//
    ஆகா, இதை நான் வழிமொழிகிறேன்.
    இன்றைய இளைஞர்களின் ஆர்வத்தைக்கண்டு வியக்கிறேன் எனப் பலமுறை சொல்லி இருக்கிறீர்கள் சுப்புரத்தினம் ஐயா. இருப்பினும் பெரியவர்களின் நினைவுகூர்தலும், வழிகாட்டுதலும் இளைய சமுதாயத்திற்கு அவசியம் தேவை.

    ReplyDelete
  22. //அதன் கதைகளை எல்லாம் ஒவ்வொரு பதிவாப் போடணும்-னு ஜீவா கிட்ட ஒரு முறை வேண்டுகோள் வைச்சேன்! //
    அந்த வேண்டுகோளை, திருப்பி உங்களிடமே சமர்பித்து விட்டேன் கே.ஆர்.எஸ்.
    இல்லைனா, இந்தப்பாடலுக்காவே, ஒரு கூட்டுப்பதிவு உருவாக்கிடலமா? :-)

    ReplyDelete
  23. அருணாசலக் கவியாரின் பாடல்களை வைத்து ஆராய்ச்சியே செய்யலாம் என நினைக்கிறேன்.
    அப்படிச் செய்தும் இருக்கிறார்கள். முனைவர் அலேமேலு ரிஷி (சுமார் 72 வயது) என்பவர் இராம நாடகத்தையும், கம்ப இராமயணத்தையும் ஒப்பீடு செய்து அதில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார்!

    ReplyDelete
  24. 'ஆரோ இவர் ஆரோ' பாடலில் 'சந்திர பிம்ப முக வடிவாலே' என்று வரிகள் வரும். சந்திரனைப்போன்ற முக வடிவாலே என்று சொல்லி இருக்கலாம், எதற்காக 'சந்திர பிம்பம்' எனச் சொல்லி இருக்கிறார் என வியப்பதுண்டு! - சிருங்கார ரசம் இருப்பது போல் மேலோட்டமாகத் தெரிந்தாலும், இப்பதங்களில், மறைந்து இருக்கும் மறை பொருள் என்ன வென்று அறிய வேண்டும் என் நினைக்கிறேன். பெரியவர்கள் உதவ வேண்டும்!

    ReplyDelete
  25. Please excuse my response in english - I do not know how to post in tamil. If someone knows, pl let me know how to do this.

    I liked the post very much and the responses. Just a couple of adds -

    There is a two audio-tape set by Sri Kripanthanavariar on Arunachala Kavirayar's Ramanataka Keerthanai that is one of my favorite recordings. Below are a couple of highlights.

    The song "Aen palli kondeerayya" (excuse the english spelling) goes beyond merely the story of the Ramayana. "...irandu arru naduvile" refers to the two naadis - ida & pingala and the paambu on which Sri Ranganathar sleeps is the sushumna naadi.

    Kaviraayar includes episodes not in the original kambaramayanam. E.g. when parasuramar meets raamar, there is a back and forth discussion between them. 'Mannil mannarai pol thonruhiraaye aaseervaatham raghurama' 'kannil anthanar pol irukkiraaye vanakkam parasurama'. It goes downhill from there with parasuramar accusing raamar of killing a woman, thaatagai. Raamar comes right back with at least he didn't kill his mother and so on.

    A second beautiful song is when surpanakai informs raavana about seetha: '...sen_ulagenkum vaatti, thisai_yengum keerthi naatti thiryum raavana unthan irupathu kann pothaathe, kaana venum laksham kanngal, seetha devi than kaalukku nigaro pengal..'. Listening to the song, you can understand how raavana became so enamored of stealing seetha.

    Lastly, when vibhishanan comes to surrender to raamar vaariyar demonstrates how kaviraayar captured the mood and emotions in his 'raamanai kannaara kandaane vibhishanan, kai mani mudi mele vaiththu kondaane'. It brings home what a great sacrifice vibhishanan had to make to leave all of his relations, seinanri etc for his principles.

    Separately, yaaro ivar yaaro is actually sung by raamar recalling seetha (chandra bimba muga malaraale etc). This becomes apparent in the third stanza where he describes her breasts - this stanza is not sung on stage.

    Agaram.amutha - I only have the first vol of Seshagoplan's Ramanataka Keerthanaigal. Do you know where I can get the second volume?

    Others who have recorded exclusive albums of Kavirayar's keerthanaigal - DK Jayaraman, Bombay Sisters, Nithaysri. Many of the songs were tuned in new ragas by Ariyakkudi Ramanuja Iyengar in the mid-20th century and popularized by him as part of the carnatic concert repertoire.

    Sorry for the long post - but I enjoy kavirayar's songs a lot:-)

    ReplyDelete
  26. நீண்ட மறுமொழிக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் திரு.கிஷோர் அவர்களே.
    நீங்கள் எழுதியைதை சிலமுறைகள் மீண்டும் மீண்டும் படித்து புதிய செய்திகளை அறிந்து கொண்டேன், மிக்க நன்றி.

    தமிழில் எழுதுவது எளிது. விண்டோஸுக்கு

    இங்கே பார்க்கவும். Install eKalappai with Anjal Keyboard layout, and then use Alt+2 to switch to tamil. மேக் அல்லது லினக்ஸ் என்றால் சொல்லவும், அவை இன்னமும் எளிது.

    ReplyDelete
  27. கவிராயரைப் பற்றிய அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஜீவா.

    கடன்பட்டார் நெஞ்சம் போல்.... தொடர் கம்பரின் வரி என்று இது வரை நினைத்திருந்தேன். கம்பரும் அதையொட்டி சொல்லியிருக்கிறார் அல்லவா?

    ஆக அன்றைக்கே நவாபின் படைகளுக்கு எதிராக வீரர்களைத் திரட்ட அனுமனும் இராமனும் உதவியிருக்கிறார்கள். செய்தி அறிந்தேன்.

    நீங்கள் தந்துள்ள சுட்டிகளில் இருக்கும் பாடல்களை இனி மேல் தான் கேட்கவேண்டும். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா பாடலை இதற்கு முன்னரும் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  28. வருகைக்கு நன்றி குமரன்.
    //கடன் பட்டார் நெஞ்சம் போல்//
    நான் அப்படித்தான் நினைத்திருந்தேன், ஆனால் எந்தக் கம்பராமாயணச் செய்யுளிலும் இந்த வரிகள் இல்லையாம். இதுபோல இன்னும் நிறைய இருக்காம் - நாம் கம்பர் சொன்னதாக நினைத்துக் கொண்டிருப்பது.
    அருணாசலக் கவிராயரின் பாடல் வரிகளில் இப்படியாக கடன்பட்டார் நெஞ்சம் வருகிறது:

    இடம்விட்ட மீனைப் போலும் எரிதணல் மெழுகுபோலும்
    படம்எடுத் தாடுகின்ற பாம்பின் வாய்த்தேரை போலும்
    தடங்கொண்ட ராமபாணம் செருக்களத்துற்றபோது
    கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்!

    ReplyDelete
  29. கீதாம்மா வந்தால் மேலும் தகவல்கள் ஏதேனும் கிடைக்கும்.

    ReplyDelete
  30. http://www.raaga.com/channels/carnatic/moviedetail.asp?mid=CL00306.
    please see the link above for the song of " kanden seethai " by bombay jayasri.

    ReplyDelete
  31. ஸ்ரீ ராமசந்திரனுக்கு பாடலில் தவறுகள் உள்ளன. மேலும் உள்ள சரணங்கள் தரப்படவில்லை. இதோ முழுப்பாடல்:



    மங்களம்

    ராகமாலிகை
    அருணசலக்கவிராயர்
    ஆதி


    பல்லவி

    ஸுரடி

    ஸ்ரீராமசந்த்ரனுக்கு ஜய மங்களம் – நல்ல
    திவ்யமுக சந்த்ரனுக்கு சுப மங்களம்

    அ.பல்லவி

    மாராபிராமனுக்கு மனு பரந்தாமனுக்கு
    ஈராறு நாமனுக்கு ரவிகுல ஸோமனுக்கு (ஸ்ரீராம)

    சரணங்கள்

    ஸஹானா

    கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
    கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
    புண்டரீக தாளனுக்கு பூசக்ரவாளனுக்குத்
    தண்டுளுவதோளனுக்கு ஜானகி மணாளனுக்கு (ஸ்ரீ ராம)

    மத்யமாவதி

    பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
    பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
    ஸகல உல்லாஸனுக்குந் தருமந்தஹாஸனுக்கு
    அகில விலாஸனுக்கு அயோத்யாவாஸனுக்கு (ஸ்ரீ ராம)

    ReplyDelete
  32. திரு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு,
    நீங்களே வந்து குழப்பமாக இருந்த வரிகளைத் திருத்தியமைக்கு நன்றிகள் (புண்டரீக தாளனுக்கு, பூசக்ரவாளனுக்கு, தண்டுளதோளனுக்கு) என்ற இடங்கள் இப்போது பதிவிலும் சரி செய்யப்பட்டுள்ளன.

    மத்யமாவதி சரணத்தினையும் சேர்த்தமைக்கு நன்றிகள். மத்யமாவதி மங்களத்துக்கு உகந்த இராகமல்லவா! நன்று!

    பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு - என்கிற எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டன!

    ReplyDelete
  33. கே.ஆர்.எஸ்,
    இப்போது வரிகள் புரியும் படியாக இருக்கிறதா?

    ReplyDelete
  34. @கே.ஆர்.எஸ்.
    //இன்னிக்கி, அதுவும் தமிழிசைப் பதிவில், பல்லவி-அனுபல்லவி-சரணம்-னு போட்டிருக்கீங்களே? :)//
    நீங்க சொன்ன அப்புறம்தான் ஞாபகம் வந்தது, இப்போ அதையும் சேர்த்திட்டேன்.

    ReplyDelete
  35. //கீதாம்மா வந்தால் மேலும் தகவல்கள் ஏதேனும் கிடைக்கும்.//

    இந்தப் பின்னூட்டத்தை இப்போத் தான் பார்த்தேன், மீண்டும் ஒரு முறை கிஷோர் சொல்லி இருப்பதையும் வந்து படிக்கணும். இந்தப் பதிவை உள்வாங்கிக் கொள்ள திரும்பத் திரும்பப் படிக்கணும்னு நினைக்கிறேன், எனக்கு! :)))))))))

    ReplyDelete
  36. இன்னிக்கு என்னமோ பாட்டைக் கேட்க முடியலையே?? :((((((

    ReplyDelete
  37. வாங்க கீதாம்மா,
    எல்லாப்பட்டும் கேட்கணுமே, எந்தப்பாட்டு கேட்கலையோ?
    esnips - கிளிக் செய்தபின், கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டி இருக்கலாம் - இணைய இணைப்பின் வேகத்தைப் பொறுத்து.

    ReplyDelete
  38. Hi Jeeva:
    I saw your post at the yahoo groups a few days ago. I was traveling last week and couldn't access your blog. Only now (at home) I read it. It is very delightful to read your article and the comments of this gang. Let me add some of my own.
    1. I agree with Kishore that the song "yArO ivar yArO" is sung by Rama looking at SItA in mitilai. The legend (title) that AK gives for this song is "sItaiyaik kaNDu rAman aiyuRal" (Rama's suspicion , about sItA, as to who she is, upon seeing her. Here is the full song in Thamizh lyrics.
    பல்லவி: யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே (யாரோ)

    அனுபல்லவி: காருலாவும் சீருலாவும் மிதிலையில் கன்னிமாடம் தனில் முன்னே நின்றவர் (யாரோ)

    சரணம்1: பண்ணிப் பதித்தார்ப்போல் இரு ஸ்தனமும் கூட பாங்கியர்கள் இன்ன முத்துரைத்தனமும்
    எண்ணத்தாலும் வண்ணத்தாலும் பங்கயப் பெண்ணைப்போல்
    கண்ணிற் காணும் மங்கையர் (யாரோ)
    சரணம்2: பாக்கியம் என்பது இவர் தரிசனமே அதிங்கே
    பலித்ததென்ன புண்ணியமோ மனமே
    மூக்கும் முழியும் தீர்க்கமாய் இன்னமும் பெண்கள்
    பார்க்கப் பார்க்க நோக்கம் கொள்ளுமோ கண்கள் (யாரோ)
    சரணம்3: சந்த்ர பிம்ப முக மலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒருகாலே
    அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்
    இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (யாரோ)

    You can read an article that I wrote for chennaionline on this song at the URL:
    http://chennaionline.com/music/Thamizhsongs/2004/Song26.asp
    There was an extensive discussion about the identity of the person who sings this song at rasikas.org last year. As is obvious the first two caraNams are not sung by the musicians (for the sake of brevity).

    2. As for "En paLLi koNDIrayyA" song, I find the mention of the two celestial (?) rivers mentioned by Kishore interesting while the earthly rivers that AK mentions refer to kAvEri and koLLiDam. I have featured this song in the follwoing article I wrote for the monthly newsletter article for the Cary temple. The URL is:
    http://www.svtemplenc.org/Stories/StoryOfSrirangamPart3.pdf

    ReplyDelete
  39. I noticed the two URLs I gave earlier are not shown in their entirety. Here they are again.

    http://chennaionline.coom/music/Thamizhsongs/2004/Song26.asp
    http://www.svtemplenc.org/stories/StoryOfSriRangamPart3.pdf

    ReplyDelete
  40. வாங்க சேதுராமன் சார்!
    யாரோ இவர் யாரோ - பாடல் வரிகளை வழங்கியமைக்கு நன்றிகள். தங்கள் கொடுத்துள்ள சுட்டிகளுக்கு போய்ப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  41. அருமை...🙏🏻

    ReplyDelete