Thursday, August 28, 2008

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு...

ழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணார்ந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை - அது என்ன? என்பார்கள்.
'தேங்காய்' என்று உடனே பதில் வரும்! பசுமரத்தாணி போல பதிந்து விட்டது இவ்விடுகதை. சிறுவயதில் விடுகதையாய் இந்தக் கேள்வி வரும் போதெல்லாம், அதோடு சேர்ந்து ஆவலும் இருந்ததுண்டு. ஒரு தேங்காயை மண்ணில் நட்டு வைத்தால், அது மரமாய் வளர்ந்தபின் அந்த ஒன்றில் இருந்து தொண்ணூறு தேங்காய் வருமாமே! (இப்போது கேட்டால், தொண்ணூறு என்ன, எல்லாமே பரமன் ஒருவனில் இருந்து வந்ததுதான் என வேதாந்தம் சொல்வேன்!)

காஞ்சிபுரத்தில் சொந்தவீட்டில் வசித்த போது, வீட்டின் இடப்பக்கம் முழுதும் செடிகள் நிறைந்த தோட்டமாய் அம்மா அமைத்திருந்தார்கள். வாழை மரமும், செம்பருத்தி, துளசி, டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், நந்தியாவட்டை போன்ற செடிகளும் இருக்கும். டிசம்பர் மாதத்தில் ஏராளமாய் பூக்கும் டிசம்பர் பூக்களை பறிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்கும். குட்டி குட்டியாய் பூத்திருக்கும் அந்த பூக்களைப் பறித்துப் பறித்து தட்டில் சேர்க்க, இன்னமும் நிறைய இருக்கே என்ற மகிழ்ச்சியினால்!. அவற்றிலும் விதவிதமான வகைகள் - வெள்ளை, வெளிர் சிவப்பு, ஊதா, நாமம் என பல வகைகளில்!. வீட்டு வாசலில் கொடியாக படந்திருக்கும் நித்திய மல்லியும் அதன் அருகே, சம்பங்கிப் பூவின் கொடியும் படர்ந்திருக்க, சொல்லவே வேண்டாம், நறுமணமே, நான் இங்கே இருக்கிறேன் எனச் சொல்லும்!

தக்காளி,மணத்தக்காளி,சுண்டைக்காய் ஆகிய செடிகளும் இருந்தது. மனத்தக்காளி காய்க்கையில், காய் பச்சை நிறத்திலும், பின்னர் பழுத்தவுடன் திடீரென கறுப்பு நிறத்திலும் மாறி இருப்பது வியப்பைத் தரும். கனிந்த மணத்தக்காளிகளை, உடனே பறித்து வாயில் போட்டுக் கொள்வேன்! மணத்தக்காளிக் கீரைக் கூட்டும் அம்மா செய்து பறிமாற, அமுதாய் இருக்கும். ஆனால் பொதுவாக, காய்களாக இருக்கும்போதே அவற்றைப் பறித்து, மோரில் ஊறவைத்து, பின் வெய்யிலில் காய வைத்து, வற்றலாக்கி விடுவது வழக்கம்.

இந்தச் செடிகளை ஆடுமாடுகள் வந்து மேய்ந்திடாமல் தடுக்க, முதலில் 'ஆடாதோடா' செடிகளை வேலி போல நட்டு வைத்திருந்தார்கள். பின்னாளில் காம்பௌண்ட் சுவர் கட்டும் வரை, இந்த இயற்கையான வேலியே காப்பு! வீட்டில் இருந்து வெளியேறும் நல்ல தண்ணீர் எல்லாம் ஒரு கால்வாய் வழியாக செடிகளுக்குச் செல்லுமாறு வழி அமைத்திருப்பார்கள். சின்னப்பையனாய், அந்தத் தண்ணீர் செல்ல இயலா மற்ற இடங்களுக்கு ஹோஸ் பைப் மூலம் செடிகளுக்கு தண்ணீரை விடுவதும், பூக்களைப் பறித்து வந்து பூஜை அறையின் சுவரில் தலை முன் பக்கமாய் 'சற்றே சரிந்து நிற்கும்' சாமிப்படங்களுக்கு (செம்பருத்திப் பூவினை) வைத்ததும் இன்னும் மறக்கவில்லை!

ஓர் ஆண்டு, அவரை விதைத்து, அது கொடியாய்ப் படர, அதை, மொட்டை மாடியில் இருந்து கீழே வரும் மழைநீர் வடிகால் குழாயில் கட்டி விட, அது கொஞ்சம் கொஞ்சமாய் படர்ந்து, மொட்டை மாடியையே தொட்டு விட்டது. பின்னர் அங்கேயும், துணி உலர்த்தும் கம்பியில் தொடர்ந்து படர்ந்து வளர்ந்தது. பின்னர் அவரை காய்க்கும் பருவத்தில், அவரைக்காய் எக்கச்சக்கமாய் காய்த்துத் தள்ளியது!. வீட்டின் முன்புறத்தில் செடியாய் வைத்த முருங்கையும், சில ஆண்டுகளில் மரமாய் வளர்ந்து சுவையான முருங்கைகளை அள்ளித் தந்தது. முருங்கைக்காய்களைப் பறிக்க நீண்ட குச்சியில் ஆன தொரடு ஒன்றிருக்கும். (கே.ஆர்.எஸ், இந்த தொரடு என்கிற சொல்லைத் தேடியதில் தெரிந்தது - நீங்கதான், இந்த சொல்லைப் பதிந்த முதல் மற்றும் ஒரே பதிவர்!). தொரடின் நுனியில் இருக்கும் கொக்கியை தூக்கிப்பிடித்து, முருங்கையின் காம்புப் பக்கத்தில் இழுத்தால், கிளை முறியாமல், காய் மட்டும் கீழே வந்து விழும்.

----------------------------------------------------------
இவையெல்லாம் சின்னவயதின் நினைத்துப் பார்க்க இனிக்கும் நினைவுகள். இப்போ, அங்கிருந்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து அமெரிக்கா வருவோம். அங்கே அத்தனைச் செடிகளைப் பார்த்துவிட்டு, இங்கே?
அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் கொஞ்சம், வீட்டைச் சுற்றி வளர்த்த பூச்செடிகளை, நீங்களே பாருங்களேன். இவற்றைத் தவிர தொட்டிச்செடியாக, ஸ்டார் மல்லியும், துளசியும், ஆரஞ்சும் உண்டு.

* செம்பருத்தி (மே மாதம் முதல் செம்டம்பர் வரை பூக்கிறது); வெளிர் சிவப்பு (இது தவிர வெள்ளை நிறத்திலும் பூக்கிறது) - பெரினியல் (வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்திடும்)


* ரோஜா (மே முதல் அக்டோபர் வரை பூக்கிறது); சிவப்பு - பெரினியல்


* டே லில்லி (ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) (வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை) - பெரினியல் பல்ப்


* ஃபோர்சைத்தியா (மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் பூக்கும்) (மஞ்சள்) - பெரினியல்


* கிளாடியோலஸ் (ஜூன், ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) - பெரினியல் பல்ப்

24 comments:

  1. நட்சத்திர வாரப் பூக்களா ஜீவா? சூப்பரு!

    நம்மூர்ல மல்லிக்கொடி, அதுவும் ஜாதி மல்லிக் கொடி தானே வேகமாப் படரும்?
    இந்தூர்ல, படரும் ரோஜாவைப் பார்த்து மனம் பறி கொடுத்தேன்! Climbing Rose! கீழிருந்து வீட்டுக் கூரைக்கு மேலும் படருது! ஒரே கொடியில் ஐம்பது அறுபது ரோஜாப் பூக்கள்!

    பூசைக்குப் போக, மீதம் அவ்ளோ பூ இருக்கும்!
    பக்கத்து வீட்டு அக்காக்கள் எல்லாம் "நான் கொஞ்சம் பறிச்சிக்கிட்டுமா" ன்னு கேட்பாங்க! :))

    ReplyDelete
  2. //(கே.ஆர்.எஸ், இந்த தொரடு என்கிற சொல்லைத் தேடியதில் தெரிந்தது - நீங்கதான், இந்த சொல்லைப் பதிந்த முதல் மற்றும் ஒரே பதிவர்!)//

    ஆகா
    கூகுள்-ல தேடுனா, இப்படி எல்லாம் கூடவா வருது?
    தரவு, தரவு-ன்னு போயி
    தொரடு, தொரடு-ன்னு ஆகிறப் போது ஜீவா! :)

    ReplyDelete
  3. ஆகா.. ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே.. :) நாங்க "தொரட்டி"ன்னு சொல்லுவோம். தொரட்டில முருங்கக்காய், புளியங்காய், கொடுக்காப்புளி, இப்படி என்னென்னமோ பறிச்சிருக்கோம் :) நீங்க சொன்ன பூக்களோட மல்லிகைப் பூ, அரளிப்பூ, பூமில பாய் விரிக்கிற பவள மல்லி, இப்படி என்னென்னவோ.. ஹ்ம்..சரி சரி... இதோட நிறுத்திக்கிறேன் :)

    உங்க வீட்டுப்பூவெல்லாம் மிக அழகு. சுகந்தமான நினைவுகளைக் கிளறி விட்டதுக்கு நன்றி.

    ReplyDelete
  4. தொரட்டி .. ஆமாம். நான் சொல்லலாம் என்று நினைத்து எழுத முனைந்தபோது
    அதை மேடம் கவி நயா முன்னதாகவே சொல்லிவிட்டார்கள்.

    முருங்கை மட்டுமல்ல, மாங்காய் பறிப்பதற்கும், நெல்லிக்காய் அடிப்பதற்கும் கருவேப்பிலை மரத்தின் உயரத்தில் உள்ள தளிர் இலைகளை ( ஆஹா ! என்ன வாசனை !) உடைத்து பறிப்பதற்கும் வில்வ இலைகளைப் பறிப்பதற்கும் ( கையால் முடியாது. முட்கள் பட்டால் கடுக்கும்) தொரட்டி
    பயன்படும் இந்த நீண்ட குச்சி (ஒரு ஓரத்தில் ஒரு வளையம் கொக்கி கூராக இருக்கும்) வாசற்படியில் உட்கார்ந்துகொண்டே வாசற்சுவரை ( காம்பெள்ன்ட் )
    அண்டி வரும் ஆடுகளையும் விரட்ட உதவும்.

    நிற்க.
    இப்போதும் கிராமங்களில் 'தொரட்டி பிடிக்காதே' எனும் சொற்தொடர்
    நிலவுகிறது. முதலில் நான் இதை துரத்தி பிடிக்காதே என்னும் பொருளில்
    உணர்ந்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது.
    நமை விட்டு (ஏதோ ஒரு ரீதியில்) வெகுவாக விலகியிருக்கும் எதனையும்
    தொரட்டி கொண்டு பிடித்து பயனடையாதே. ஒன்று நமை வந்தடையும் என்றால்
    சாதாரண முயற்சிகளாலேயே வந்தடையும். அதீதமான, நாணயமில்லாத வகையிலே
    எதனையும் அடைய வேண்டாம் என்ற பொருளிலும்
    'தொரட்டி பிடிக்காதே' எனும் சொற்தொடர் பயன்படுத்தப்படுகிறது.


    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.

    ReplyDelete
  5. ஆஹா, துரட்டி, அல்லது தொரட்டி, கவிநயாவும், சூரி சாரும் எழுதி இருக்காங்க, அதே தான், எனக்கும் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே தான், அதுவும் அந்தப் பூச்செடிகளுக்கு வித, விதமா வண்ணாத்திப்பூச்சிகளும், கலர், கலரா வண்டுகளும், சின்னத் தேன் சிட்டுக்களும் வருமே, அதை விட்டுட்டீங்களே, இப்போ இங்கே அத்தனை இல்லாட்டியும் ஓரளவு தேன் சிட்டும், வண்ணாத்திப் பூச்சியும் வருது. அதுவும், வாசலிலே வேப்பம்பூக் காலத்தில் உட்கார்ந்தால், வண்ணாத்திப் பூச்சி நிலை தடுமாறி நம்மையே சுத்திவரும் பாருங்க, அழகோ, அழகு. மனதைக் கவர்ந்ததொரு பதிவுக்கு நன்றி. ராஜஸ்தானுக்கு எங்க க்வார்ட்டர்ஸுக்கு மானசீகப் பிரயாணம் பண்ணிட்டு வந்தேன்.

    ReplyDelete
  6. வாங்க கே.ஆர்.எஸ்,
    Climbing Roseஆ, ஆகா, படத்தில் மட்டும் பார்த்திருக்கிறேன். வேலியாக (hedge), பயன்படும்.
    //பூசைக்குப் போக//
    அதுதான் நமக்கு பூக்களின் முதல் பயன்.
    'பூப்பறித்திட்டு உண்ணாராகின்' என்கிற தேவார வரிகள் நினைவுக்கு வரும்!

    ReplyDelete
  7. வாங்க கவிநயா,
    //தொரட்டி//
    Exactly. தொரட்டிதான் சுருக்கி, 'தொரடு' ன்னு சொல்லப்படுது.
    //தொரட்டில முருங்கக்காய், புளியங்காய், கொடுக்காப்புளி, இப்படி என்னென்னமோ பறிச்சிருக்கோம் ://
    கலக்கறீங்க!
    //ஹ்ம்..சரி சரி... இதோட நிறுத்திக்கிறேன் :) //
    இப்போதைக்கு மட்டும் தானே, தனியா ஒரு இடுகையில் மொத்தமும் சொல்லுங்க!
    //சுகந்தமான நினைவுகளைக் கிளறி விட்டதுக்கு நன்றி.//
    இடுகையின் நோக்கம் நிறைவேறியது!

    ReplyDelete
  8. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    //தொரட்டி .. ஆமாம். நான் சொல்லலாம் என்று //
    நீங்களும் சொன்னது, Authorityயானது!
    /உடைத்து பறிப்பதற்கும் வில்வ இலைகளைப் பறிப்பதற்கும் ( கையால் முடியாது. முட்கள் பட்டால் கடுக்கும்) //
    Noted that detail!
    //வாசற்படியில் உட்கார்ந்துகொண்டே வாசற்சுவரை ( காம்பெள்ன்ட் )
    அண்டி வரும் ஆடுகளையும் விரட்ட உதவும். //
    ஓ, இப்படியும் பயன் இருக்கா!

    ReplyDelete
  9. //கிராமங்களில் 'தொரட்டி பிடிக்காதே' எனும் சொற்தொடர்//
    ஓ, பெயர்ச்சொல் மட்டுமல்ல, வினைச்சொல்லுமா!
    அறிவித்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  10. வாங்க கீதாம்மா,
    //அதுவும் அந்தப் பூச்செடிகளுக்கு வித, விதமா வண்ணாத்திப்பூச்சிகளும், கலர், கலரா வண்டுகளும், சின்னத் தேன் சிட்டுக்களும் வருமே, அதை விட்டுட்டீங்களே, இப்போ இங்கே அத்தனை இல்லாட்டியும் ஓரளவு தேன் சிட்டும், வண்ணாத்திப் பூச்சியும் வருது.//
    அதானே அதை மறந்து விட்டேன்.
    இங்கே வீட்டின் பின்புறம் வைத்துள்ள செம்பருத்தியில் தேனைக்குடிக்க, HummingBird வருகிறது. அது தேனைக் குடிக்கும் விதமே அலாதி. Japanese Beetles எனப்படும் வண்டுகள், பூக்கள் மற்றும் இலைகளை அரித்து சாப்பிட்டே விடுகின்றன!

    ReplyDelete
  11. இந்தப் பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சது ஜீவா.

    பூக்களே அழகுதான்,இல்லே?

    இந்தத் தொரட்டி என்ற சொல்லை நினைவுபடுத்தியதுக்கு நன்றி. தேவையா இருக்கு.

    ஹாலிஹாக் என்ற பூவும் கொஞ்சம் அசப்பில் பார்க்கச் செம்பருத்தி போலதான். வெண்டைக்காய் பூமாதிரியும் இருக்கும்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு...ரீவைண்ட் பண்ணி பார்த்துக்கிட்டேன்...

    இப்போதும் மதுரையில் தொரட்டி இருக்கு....என் தந்தை தானே தயாரித்து உபயோகித்தது...போன வாரம் மதுரை சென்றபோது கூட வில்வம், அரளி போன்றவற்றை பறித்தேன்..

    ReplyDelete
  13. எங்கள் அமெரிக்க வீட்டுல இந்த வருடம் தான் மலர்கள், தக்காளி, புதினா போன்றவற்றைப் பயிரிட்டிருக்கிறார்கள். எனக்கு இந்த மாதிரி மலரும் நினைவுகள் இல்லை. மலரெல்லாம் காய்கனியெல்லாம் கடையில் தான் வாங்கினார்கள் எங்கள் மதுரை வீட்டில். :-)

    ReplyDelete
  14. வருக குமரன். அப்படியா, தங்கள் பக்கத்து செய்தியையும் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. காஞ்சீபுரத்திற்கும் அமெரிக்காவுக்கும்
    மலர்களாலேயே ஒரு தோரணம் கட்டி விட்டீர்களே?..அழகான பதிவு, அந்த மலர்களைப் போலவே அழகாக இருந்தது.

    மலர்ந்து சிரிப்பதால் அவை மலர்களாயிற்றோ?.. 'மலர்களை நேசிப்பவர்கள், மென்மையான குணம் படைத்தவர்களாய் இருப்பார்கள்' என்று சொல்வார்கள். இது மலர் ஜோதிடம் இல்லை; மனசு பற்றிய ஜோதிடம். நூற்றுக்கு நூறு சரியாய் இருக்கும் என்பது என் கணிப்பு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாருங்கள் திரு.ஜீவி,
    //மலர்களாலேயே ஒரு தோரணம் கட்டி விட்டீர்களே?..அழகான பதிவு, அந்த மலர்களைப் போலவே அழகாக இருந்தது. //
    மலர்களே அழகுதானே.
    //இது மலர் ஜோதிடம் இல்லை; //
    :-)
    வழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. ஜீவா, தொரட்டிக்கு இன்னோரு உபயோகம்.... ர னா எழுத அப்பா எங்களுக்குத் தொரட்டி ரானா போடு என்பார்.
    ற னா எழுத பெரிய ற என்பார்;0)
    மலர்கள் பதிவில் நித்திய மல்லி இல்லையே. ம்ம் அதன் வாசம் எங்க கிடைக்கும்;)

    ReplyDelete
  18. @வல்லியம்மா,
    சின்ன ர னா, தொரட்டி ர னா வா!
    :-)
    நல்ல உவமை!
    தொரட்டி மாதிரி இருக்கு, தொரட்டியிலும் இருக்கு ர னா!

    ReplyDelete
  19. @வல்லியம்மா,
    //மலர்கள் பதிவில் நித்திய மல்லி இல்லையே//
    இருக்கே மேடம்!
    ''வீட்டு வாசலில் கொடியாக படந்திருக்கும் நித்திய மல்லியும் அதன் அருகே, சம்பங்கிப் பூவின் கொடியும் படர்ந்திருக்க, சொல்லவே வேண்டாம், ''
    எனச் சொல்லி இருக்கேன்!

    ReplyDelete
  20. Just a small correction.
    Butterfly has been wrongly called "vaNNaththippUcci" (washerwoman?) in Thamizh. It is actually "vaNNaththuppUcci" ( vaNNam + pUcci---colorful or multicolor insect/fly). Also called "paTTuppUcci" (silken insect/fly) to recognize the softness and shine.
    I have a backyard deck garden where we grow "butterfly bush" which attracts hummingbirds, butterflies, and another strange creature called "bee hummingbird". The last one is the size of a bee but it has the beak, antennae, and sucking tubules similar to that of the regular hummingbird. The hummingbird is so quick and flies away when it sights another person/bird etc. The bee hummingbird, however, stays around fluttering and sucking the nectar oblivious of other distractions. I was able to take several snaps with my camera. One has to be very agile because it keeps hopping from flower bunch to flower bunch. For some reason the hummingbird as well as the bee hummingbird do not visit the hibiscus or zinnia or mandavilla flowers that are in the vicinity but prefer only the butterfly bush.

    ReplyDelete
  21. //another strange creature called "bee hummingbird". The last one is the size of a bee but it has the beak, antennae, and sucking tubules similar to that of the regular hummingbird.//
    hummingbirdஏ சின்னதா இருக்கும், bee hummingbird அப்படி ஒண்ணு இருந்தா, my gosh, பார்க்க ஆவலாய் இருக்கு!
    //For some reason the hummingbird as well as the bee hummingbird do not visit the hibiscus //
    Not here!

    ReplyDelete
  22. Jeeva:
    I tried to copy/paste the picture of the bee hummingbird here. It does not work. I don't get the "paste" function. Let me try to send the pictures to you via email.
    Subramanian

    ReplyDelete
  23. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  24. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete