Tuesday, August 26, 2008

அரசியல் துப்புரவு தேவை இப்போது.

ந்தியாவிலும், ஏன் உலகெங்குமே மக்களாட்சி என்ற பெயரால் அரசியல்வாதிகள் பெரும்பாலும் சுரண்டல் சுண்டெலிகளாய் கொழுத்துப் பெருத்து, வாக்களித்த மக்களின் வாயில் வாய்க்கரிசி மட்டுமே போட்ட வண்ணம் இருப்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர, அரசியல்வாதிகளின் சுயநல ஆட்சிதான் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பொதுஜன வாக்காளன், வாக்கிடுவதோடு தன் வாக்குரிமையை பயன்படுத்திய மனநிறைவில், அடுத்த தேர்தல் வரை தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுகிறான். ஆட்சிக்கு வந்தோர் வைத்ததே சட்டம், தைத்ததே திட்டம், தந்ததே பட்டம். இதற்கிடையில், வாக்காளனுக்கு அரசியல் கசந்துவிடக் கூடாதே என்பதற்காக, ஆயிரமாயிரம் திரை மறைவு நாடகங்கள், கேளிக்கை கூத்தாட்டங்கள்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அரசியல் அமைப்பு பெரிதும் அங்கம் வகிக்கிறது. அரசாங்கம் நல்ல திட்டங்களை செயல்படுத்தினால்தானே, நாடு முன்னேறும். திட்டங்களா, இவர்களுக்கு தங்கள் நாற்காலியை தக்க வைப்பதற்கும், தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்புவதற்குமே நேரம் சரியாய் இருக்கும்போது, திட்டங்கள் தீட்டுவதெப்போது? அரசியல் கட்சிகளின் அமைப்பு எப்படி இருக்குமோ, அப்படித்தான் அந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியும் இருக்கும். ஒரே கட்சிக்குள்ளேயே, ஆயிரம் கோட்சிப்பூசல்கள், அடிதடி உதைகள்.

அரசியல் அமைப்புகள் இப்படி உடைந்து போயிருக்கையில் என்ன செய்தால் இவற்றை சீரமைக்கலாம் என யோசித்தபோது எனக்குத் தோன்றிய சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில், ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும் போது, குறைபாடுகளை விட நன்மைகள், அதுவும் நமக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையானவை அதிகமாக கிடைக்கும் என நினைக்கிறேன்.

1) முதலில் ஆயிரத்தெட்டு கட்சிகள் இருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் கட்சிகள். வலது சாரிகள் அனைவரும் ஒரு கட்சியிலும், இடது சாரிகள் ஒரு கட்சியிலும் இணையட்டும். வலது சாரிகளும், இடது சாரிகளும் போட்டியிட்டு ஆட்சி அமைக்கட்டும்.
* இதனால் என்னவாகும்? நாளடைவில், அரசியலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.
* எண்ணிக்கை குறைந்தால் என்னவாகும்? போட்டியும், பூசலும் குறையும். ஒன்றாக உழைப்பார்கள்.
* தேர்தலுக்குப்பின் எந்த ஒரு கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காமல், ஒரு பெரிய பட்டியலாய் கட்சிகள் கூட்டணி அமைத்து, அவர்களுக்குள் ஒன்றுக்கும் ஒப்புக்கொள்ளாமல் நடக்கும் குழப்பங்கள் குறையும்.
* வலது - இடது என எதிர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரியணையை பிடிப்பதற்காக தேர்தலுக்குப் பின் கூட்டணி கொள்ளும் சந்தர்ப்பவாதம் தவிர்க்கப்படும்.

2) அடுத்ததாக, அரசியலுக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் சில அரசியல் தேர்வுகளை எழுதி அவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால், திருக்குறள் முதலான நீதி நெறி நூல்களை கற்றுத் தேற வேண்டும். கற்க, பின் நிற்க அதற்குத் தக: தேர்ச்சி பெற்றபின் (மருத்துவர்கள் முதலில் house surgeon ஆக internship இல் இருப்பதுபோல்), நடைமுறை பயிற்சிக்காக குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு, இவர்கள் தூய, எளிய பொதுநலச் சேவை வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும். அதன் பின்னரே, இவர்கள் அரசியலில் எந்தப் பதவிக்கும் வரத் தகுதியானவர்கள். இந்த முறை மட்டும், வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டால், தேர்தலையே தவிர்த்துவிட்டு, தேர்வு ஒன்றே போதும் என்னும் அடுத்தகட்ட நிலைக்குப் பயணிக்கலாம், அல்லது தேர்வு பெற்றவர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும், அவர்களுக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.

3) சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி ஆகியோர் 'இந்த நாட்டை கடவுளாலும் காப்பாற்ற இயலாது' என மனம் வெதும்பிச் சொன்னார்கள். எதனால்? அரசு குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்து விட்டதால். இதுதான் இன்றைக்கு இருக்கின்ற நீதிமன்ற அதிகாரம். இது மாற வேண்டும். நமது நீதித் துறை மிகவும் வலுப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும். தவறிழைப்போர்களுக்கான தண்டணைகள் கடுமையாக்கப் பட வேண்டும். உதாரணத்திற்கு, குற்றம் நீருபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக குற்றம் இழைத்தவர், பாதிப்புக்கு ஏற்றதுபோல, ஒரு பெரிய அபராதத் தொகையை நஷ்ட ஈடாகத் தர வேண்டும். குற்றத்தை ஒப்புக்கொண்டு, பொதுமன்னிப்பு கேட்பவருக்கு, கவுன்சலிங் பெற்றுக்கொள்ள கட்டாயமாக அனுப்பப்பட வேண்டும். இதற்காக, அரசு சாரா (NGO) கவுன்சலிங் துறை ஒன்றி அமைக்கப்பட வேண்டும். கூடுதலாக அவர் மீண்டும் அரசியல் போன்ற பொதுநல வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமானால், மீண்டும் பொதுநலச் சேவையில் சில ஆண்டுகளுக்கு தன்னலமற்ற தொண்டாற்றி, தன் களங்கத்தை முதலில் துடைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களுக்கு, அரசு மற்றும் அரசியலில் இருக்கும் சார்பு பெரிதளவும் குறைக்கப்பட வேண்டும். முடிந்த வரை, ஒவ்வொரு துறையும், அரசியல் தலையீடின்றி நேரடியாக மக்களுக்குப் பயன்பட வேண்டும். எங்கே அரசாங்கத்தின் ஈடுபாடு அவசியம் தேவைப்படுகிறதோ, அங்கு மட்டுமே அது தன் கவனத்தை செலுத்த வேண்டும். அரசியல் தூய்மையோடு, நாட்டை முன்னேற்ற சீரிய திட்டங்களை தீட்டிட முனைந்தால், நாம் நாடு விரைவில் தன்னிறைவை எட்டி, சமுதாய வளம் மேம்பட்டு நிற்கும். அதற்காக, அரசியல் துப்புரவு தேவை இப்போது.

15 comments:

  1. கொஞ்சம் சிங்கப்பூர் அரசியலையும் ,குறைந்த பட்சம்
    அந்நியன் முதல் பகுதியையாவது பார்க்கவைக்கனும்.

    ReplyDelete
  2. ஜீவா, அரசியலில் நல்லா சம்பாத்திக்கலாம். லாபகரமான தொழிலா இருக்கு. இது ஒண்ணு மாறினாலே போதும். எவனும் அரசியல் பக்கம் தலை வைக்கமாட்டான்.
    54 வருஷங்களில் விவரம் தெரிந்த முதல் பார்த்து வருகிறேண். போகப்போக மோசமாகிகிட்டுதான் போகுது. இதை விட மோசமாக முடியாதுன்னு இப்பல்லாம் நினைக்கிறதில்லை.
    ஆண்டவன்தான் காப்பாத்தணும்.

    ReplyDelete
  3. குமார், சிங்கை அரசியலா? ஏறத்தாழ benevolent dictatorship ன்னு நினைச்சேன்.

    ReplyDelete
  4. அரசியலுக்கும் எனக்கும் டூ மச் தூரம். அதனால ஆஜர் மட்டும் போட்டுக்கறேன் :)

    ReplyDelete
  5. அஷ்டபதியும் அறுபடை வீடும்
    ஆதி சங்கரரும் ஆத்ம போதமும்
    இடையிடையே இராமனும்
    இராமனைப் பாடிய தியாகராஜனும்
    தீக்ஷிதரும்
    திருமுறையும் தேவாரமும்
    இயலும் இசையும்
    ஆங்காங்கே டாப் டென்னும்
    கனவும் கவிதையும்
    கர்மாவும் ஜாவாவும்
    அலுத்துப் போய்
    அரசியலுக்கு வந்துவிட்டீர்கள் !!

    ஆல் த பெஸ்ட் !!

    சுப்பு தாத்தா.
    தஞ்சை.

    ReplyDelete
  6. வாங்க வடுவூர் குமார்,
    //கொஞ்சம் சிங்கப்பூர் அரசியலையும் //
    சிங்கை வீதிகள் துப்பரவாய் இருப்பது இதனால் தானோ? :-)

    ReplyDelete
  7. வாங்க திவா சார்,
    //அரசியலில் நல்லா சம்பாத்திக்கலாம். லாபகரமான தொழிலா இருக்கு. இது ஒண்ணு மாறினாலே போதும். எவனும் அரசியல் பக்கம் தலை வைக்கமாட்டான்.//
    சரியா ஆணி அடிச்ச மாதிரி சொன்னீங்க!
    அரசியலும் ஆன்மீகமும் தொழிலாகலாம், ஆனா அதிலே லாபம் பார்க்கத் தொடங்கினா, கதை கந்தல் தான்!

    ReplyDelete
  8. வாங்க கவிநயா,
    //அரசியலுக்கும் எனக்கும் டூ மச் தூரம். //
    டூ மச் தானே, த்ரீ மச் இல்லையே!
    :-)

    ReplyDelete
  9. வாங்க சுப்பு தாத்தா,
    தங்கள் ஆல் த பெஸ்ட்டுக்கு நன்றி.

    உனக்கு எதுக்கு அரசியல் எல்லாம்?
    அப்படித்தானே சொல்கிறீர்கள். :-)
    Point Noted!

    ReplyDelete
  10. //முதலில் ஆயிரத்தெட்டு கட்சிகள் இருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் கட்சிகள்//

    இந்திய அரசியலில் இதற்கான சாத்தியக் கூறு மிக மிகக் கம்மி ஜீவா!

    அது தத்துவமாகட்டும், மதமாகட்டும், அரசியல் ஆகட்டும், கல்வி ஆகட்டும்...நமக்கு இரு துருவ அமைப்பு ஒத்து வந்ததாய் சரித்திரமே இல்லை! அப்துல் கலாம் இதை அழகாகச் சொல்லி விளக்குவார்!

    காரியச் செருக்கை விட ஞானச் செருக்கு நமக்கு அதிகமோ? :)

    ReplyDelete
  11. //முதலில் ஆயிரத்தெட்டு கட்சிகள் இருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் கட்சிகள்//

    அரசியல் சட்டம் இப்படி வந்தால் கூட...
    இரண்டு கட்சியில் ஆயிரத்தெட்டு கோஷ்டி என்று மாறி விடும்! :))

    ReplyDelete
  12. /அடுத்ததாக, அரசியலுக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் சில அரசியல் தேர்வுகளை எழுதி அவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்//

    உலகில் வேறெந்த நாட்டிலாவது இப்படி ஒரு முன் மாதிரி இருக்கா? யாராச்சும் அறியத் தருவீர்களா?

    //அவர் மீண்டும் அரசியல் போன்ற பொதுநல வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமானால், மீண்டும் பொதுநலச் சேவையில் சில ஆண்டுகளுக்கு தன்னலமற்ற தொண்டாற்றி, தன் களங்கத்தை முதலில் துடைத்துக் கொள்ள வேண்டும்//

    இதை ஈசியாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்!

    ReplyDelete
  13. வாங்க கே.ஆர்.எஸ்,
    உங்கள் கருத்துக்களை அறிந்ததில் மகிழ்ச்சி!
    //நமக்கு இரு துருவ அமைப்பு ஒத்து வந்ததாய் சரித்திரமே இல்லை!//
    முயன்றால் தானே சரித்திரம் படைக்க முடியும்?
    முயன்றால் முடியாதது இல்லை.
    ஆரம்பத்தில் நம்ப நாட்டில் இருந்த இரண்டே இரண்டு பெரிய கட்சிகள் : காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் மட்டுமே - எப்போது மற்ற கட்சிகள் வரத்தொடங்கியதோ, அப்போதே அவர்கள் முதல் இருவரையும் கெடுத்து விட்டார்கள்.
    அப்துல் கலாம் என்ன சொன்னார்ன்னு தெரியலை - அறிய ஆவல்.
    //அரசியல் சட்டம் இப்படி வந்தால் கூட...
    இரண்டு கட்சியில் ஆயிரத்தெட்டு கோஷ்டி என்று மாறி விடும்! :))//
    இருந்தாலும், இப்ப இருக்கிறதை விட கோஷ்டிகள் குறையும்ன்னு நான் நினைக்கிறேன்.
    ஏன்னா முக்காவாசிப்பேர் அரசியல் இனிமே லாபகாரமானது இல்லைன்னு, அரசியலை விட்டு விலகி வேற உருப்படியான வேலை பார்க்க போயிடுவாங்க! ஏன்னா, அரசியலை விட, மற்ற வேலை எல்லாமே, அதைவிட ஒருபடிமேல்.
    அரசியலையே குற்றம் சொல்லவில்லை, இப்படி அரசியல் செய்வதைத்தான் சொல்கிறேன்.

    இரண்டே கட்சிகள் இருந்தால்தான் - ஒன்றுக்கு ஒன்று நிகர் எதிராக நின்று போட்டியிடவது பொருந்தும். இப்ப நடப்பது - ஒப்புக்கு சப்பாணி அழுகாணி ஆட்டம். பத்து பதினைந்து கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்து குறைந்த பட்ச திட்டம் அமைப்பார்கள். குறைந்த பட்ச திட்டம் கடைசியில் மக்களின் குறைந்து குறைந்து ஒன்றுமில்லாமல் தான் போகிறது. அப்புறம் தேர்தல் முடிந்த பின் 'வெளியில்' இருந்து ஆதரவாம். அப்புறம் எப்போ வேண்டுமென்றாலும் ஆதரவை விலக்கிக்கொள்ளலாமாம். - இவையெல்லாம் சொல்லுவதெற்கே வெட்கமாக இருக்கிறது.

    ReplyDelete
  14. ஜீவா,
    உங்களுக்கு சமூகப் பிரச்சனையிலும் ஈடுபாடு இருப்பது கண்டு மகிழ்சி. பொதுவாக எந்த ஒரு பிரச்சனைக்கும் தொழில் நுட்ப ரீதியாக தீர்வு கொடுக்கலாம். ஆனால் தரமுள்ள மக்களால் மட்டுமே தரமுள்ள அரசாங்கத்தை தரமுடியும். இப்போதுள்ள தேர்வு முறையை சற்றே மாற்றி அமைத்தால் அரசியல்வாதிகளின் ஆட்டத்தை கட்டுக்குள் காலப்போக்கில் கொண்டுவரலாம். அதை ஒரு கதை வடிவமாக சுமார் ஒரு ஆண்டுக்கு முன் கற்கை நன்றே-வில் இரண்டு பாகங்களாகப் பதிந்தேன். விருப்பமுள்ளவர்கள் அதை சென்று படிக்கலாம். ஒரு முடிவுக்காக அதை black humor பாணியில் முடித்தேன். ஆனாலும் அடிப்படை கருத்து வலுவானது என்பதே என் எண்ணம். நமக்குத் தேவை ஒரு நல்ல தேர்தல் முறை.

    ReplyDelete
  15. வருக கபீரன்பன்,
    நமது தேர்வு முறை மாற்றி அமக்கப்பட வேண்டும் என்று தாங்களும் சொல்வது கண்டு மகிழ்ச்சி.
    தங்கள் கட்டுரையை மேலோட்டமாக படித்தில் Weighted Average முறை பற்றி விளக்கி இருக்கிறீர்கள் என்று தெரிந்தது. இனிமேல் தான் அதை ஊன்றி படிக்க வேண்டும், படித்துவிட்டுச் சொல்கிறேன்.

    ReplyDelete