Wednesday, October 29, 2008

இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?

நரேந்திரனின் பயிற்சிக் களம் - நான்காவது பகுதியினை எட்டியிருக்கிறோம், மெய்யன்பர்களே. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து படிக்கலாமா.
கடந்த பகுதிகளின் சுட்டிகள்:
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
----------------------------------
நரேந்திரனின் கூர்மையான மனது, இராமகிருஷ்ணரின் அறிவுரைகளில் இருந்த மிக நுண்ணிய செய்திகளையும் ஆழ்ந்து கவனித்து, அவற்றின் சாரத்தினை தன்னுள் வாங்கிக் கொண்டது.
ஒருநாள், இராமகிருஷ்ணர், வைணவத்தின் மூன்று முக்கிய கூறுகளாக - "இறைநாம அன்பு, இறையடியார் தொண்டு, எல்லா உயிர்களுடத்திலும் அன்பு" என குறிப்பிட்டார். மேலும், அதோடு சேர்த்து, எல்லா உயிர்களுக்குமான தொண்டு எனவும் குறிப்பிட்டார். அன்பு - தொண்டு; இதில் இருந்த வேறுபாட்டை மற்ற மாணவர்களால், அவ்வளவு எளிதாக உணர இயலவில்லை. நரேந்திரனோ, இளம் மாணவர்களை பின்னர் அழைத்து, அவர்களிடம், 'நம் குரு, என்ன அழகாக, அத்வைதத்தின் பற்றற்ற நெறியினையும், த்வைதத்தின் அன்பு நெறியையும், ஒரு சேர இணைத்து விட்டார் பாருங்கள்' என்று சொல்லி விளக்கினார்:
"அத்வைதமும், த்வைதமும் - ஒன்றுக்கு ஒன்று முரணானதே அல்ல. த்வைதம் உரைப்பவன், தன் மனதை கல்லாக்கிக் கொள்ள வேண்டியதில்லை, உலகை விட்டு ஒதுங்க வேண்டியதில்லை. பிரம்மம் எல்லாவிடத்திலும் இருப்பதால், அத்வைதம் உரைப்பவன், எல்லோரிடமும் அன்பு செலுத்தி, தொண்டும் ஆற்றிடத்தானே வேண்டும். எல்லோரிடத்திலும், அன்பு செலுத்த, அவர்களிடத்தில் இருக்கும் இறையைப் பார்த்தால் இயலுமல்லவா.", என்றதுடன் தொடர்ந்து நரேன் சொல்கிறார்:
"இறைவன் விருப்பம் அதுவானால், ஒருநாள், இந்த பேருண்மையை, இந்த உலகம் முழுமைக்கும் பறை சாற்றுவேன். அதனை எல்லோருக்கும் பொதுவான உடமையாக்குவேன்."
சில ஆண்டுகளுக்குப் பின் இதே கருத்தினை கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துவார் - அதன் இறுதி வரிகளில் இருந்து:
இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?:
எவன் ஒருவன், இயல்பாக எல்லா உயிர்களிலும் ,
அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில்!
அவனே இறைவனின் உண்மையான தொண்டன்.

இராமகிருஷ்ணர், கிட்டத்தட்ட மீண்டும் ஒருமுறை, இந்து மதத்தின் அடிப்படைகளை நரேந்திரனுக்கு கற்றுத்தந்தார் எனச் சொல்லலாம். நரேன், தனது அன்னையின் மடியில் கற்ற அரிச்சுவடிகளெல்லாம், அவரது கல்லூரி வாசத்தில் கரைபுரண்டிருக்க, இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டிற்குப்பின், இந்து மதம், வெறும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டது அல்ல, என உணர்ந்தார். அது ஒரு உள்ளார்ந்த அனுபவம், ஆழ்ந்தது, உள்ளடக்கியது, எல்லார் நம்பிக்கைகளையும் மதிப்பது என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் உயர்ந்த குறிக்கோள் எனவும் உணர்ந்தார்.

மதம் என்பது ஒரு இலட்சியப்பாதை என்றும், அது ஜாதி, மற்றும் இனம் போன்ற வேறுபாடுகளைக் கடக்க வேண்டும், காலம், இடம் போன்ற கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்றும் கற்றார். ஒருவர், குறியீடுகள் மூலமாக, தனது இஷ்ட தெய்வத்தை வணங்குதல் மூலமாக, எல்லாமுமாய் இருக்கிற பரம்பொருளை இறுதியில் எட்டிட முடியும் என்பதையும் கற்றார். இராமகிருஷ்ணர், தானே, ஒரு எடுத்துக்காட்டாய், நரேந்திரனுக்கு, எப்படி ஒரு மனிதன், தன் உயரிய உன்னத இலக்கினை எட்டிட இயலும் - என்பதனைக் காட்டினார்.

ஒருநாள் ஆனந்த நிலையில், இராமகிருஷ்ணர், அன்பர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: "பல்வேறு கருத்துக்களும், பல்வேறு வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவை எல்லாவற்றையும் நானும் கண்டிருக்கிறேன். இவை எல்லாம் எனக்குப் பிடிப்பதும் இல்லை. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட அன்பர்கள் தங்களுக்குள்ளே, வாக்குவாதமும், வீண் சண்டையும், செய்கின்றனர். ஒன்றை உங்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என் மக்கள். இங்கே அன்னியர் யாரும் இல்லை. முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். அவனே அரசன். அடியேன் அவன் வேலையாள். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."

நரேந்திரனை ஒப்பிடுகையில் இராமகிருஷ்ணர், "நான் பல அன்பர்கள் இங்கு வருவதைப் பார்க்கிறேன். சிலரைப் பார்க்கும் போது, பத்து இதழ் தாமரை போல் தோன்றும். இன்னும் சிலரை பார்க்கும்போது, நூறு இதழ் தாமரை போல் தோன்றும். ஆனால், நரேந்திரனோ, எல்லா தாமரைகளிலும், ஆயிரம் இதழ் தாமரை. மற்றவர்கள் பானை அல்லது கூஜா போன்றவர்கள், என்றால், நரேந்திரனோ பெரிய தண்ணீர் தொட்டி. மற்றவர்களோ, குளம் அல்லது குட்டை என்றால், நரேந்திரனோ, பெரிய நீர்தேக்கத்தைப் போன்றவன். நரேந்திரன், கூட்டங்களில் என் அருகாமையில் இருக்கும்போது, பெரும் சக்தியை உணர்கிறேன்." என்பார்.

தக்ஷினேஸ்வர் வனத்தின் மரங்களடியில் தியானம் மேற்கொண்டார், நரேன். இதே இடத்தில் தான் முன்பு இராமகிருஷ்ணரும், தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவ்விடத்தில் தொடர்ந்து, தியான பயிற்சிகளை மேற்கொள்ள, அவரது குண்டலினி சக்தி எழுப்பபெற்றார் என்றும், மேலும் சில ஆன்மீக தரிசனங்களைப் பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஒருமுறை, கிரிஷ் என்னும் சக தொண்டரோடு சேர்ந்து, தியானம் செய்ய அங்கு சென்றார். அன்று அந்த இடத்தில், நிறைய கொசுக்களாக இருந்தது. கிரிஷ் அவர்களால், கொசுகளின் தொந்தரவில் இருந்து, மனதை ஒருநிலைப்படுத்துவது சிறிது கடினமாக இருந்தது. அதே சமயத்தில், அருகில் இருந்த விவேகானந்தரை கவனித்தால், அவரோ, உடனேயே, ஆழ்ந்த தியானத்தில் சென்றிருந்தார் - அவரது உடல் முழுவதும் கொசுக்கள் போர்வையாய் மூடி மொய்த்துக் கொண்டிருப்பினும்!

ஒரு சில நாட்களில், நரேந்திரனுக்கு, தன் இலக்கினை அடையும் தாகம் வெகுவாக உயர்ந்திருந்தது. ஒரு நாள் இரவு முழுதும், கொல்கத்தா கோசிப்பூர் தோட்ட வீட்டினை ஓயாமல் சுற்றி வந்தவாறு, இராம நாமத்தினை உச்சரித்துக் கொண்டிருந்தார். விடியற்காலையில், இராமகிருஷ்ணர், நரேனின் குரலைக் கேட்டு, உள்ளே அழைத்து, 'குழந்தாய், ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய், பொறுமை இழப்பதால், என்ன பயன்?.' என்று கேட்கலானார். ஒரு நிமிடம் தாமதித்து விட்டு, இப்படியும் சொன்னார் : " நீ இப்போது செய்வதை, நான் 12 வருடங்களுக்கு செய்து வந்தேன். என் தலையில் அப்போது, பெருத்த புயல் வீசியது போலிருந்தது. ஒரு நாள் இரவில் என்ன இயலும்?' என்றார்.

இப்படிச் சொன்னாலும், இராமகிருஷ்ணருக்கு உள்ளூர, விவேகானந்தரின் ஈடுபாட்டில் மகிழ்ச்சியே. தனக்குப்பின் தன் சீடர்களை, நரேந்திரனே தலமையேற்று, வழிநடத்த வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதை வெளிப்படுத்தவும் தயங்கியதில்லை. "அவர்களை உன்னுடைய கவனிப்பில் விட்டுப்போகிறேன். அவர்களிடம், ஆழ்ந்த அன்பு செலுத்தி, அவர்கள் ஆன்ம நெறியில், என் இறப்புக்குப்பின்னரும் நடந்திட பார்த்துக்கொள்" என்றார் நரேந்திரனிடம். இளம் சீடர்களிடம், நரேந்திரனை தங்கள் தலைவராகக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், ஒருநாள், இராமகிருஷ்ணர், அவராகவே, இளம் சீடர்களுக்கு, துறவறத்தினை தொடங்கி வைக்க, பின்னாளில் விவேகானந்தரால் தொடங்கப்பட இருக்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு, அன்று அவரே பிள்ளையார் சுழியும் இட்டார்.

Friday, October 24, 2008

இயல் இசையில் : திருப்புகழ்

இராகம் : ஹூசைனி
தலம் : திருச்செந்தூர்

தன தனன தனன தந்தத் தனதான

இயல் இசையில் உசித வஞ்சிக் கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித் துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல்மூழ்கி

உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே


மயில் தகர்கலிடையர் அந்தத் தினைக் காவல்

வனஜகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே

கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.

-----------------------------------
தகர் : ஆடு - முருகனின் மூன்று (மயில், ஆடு, யானை) வாகனங்களுள் ஒன்று; மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்.
வனஜ : தாமரை/திருமகள் (வனஜம் - தாமரை ; தாமரையில் வீற்றிருப்பவள் திருமகள்- ஆகுபெயர்) (பூவெனப் படுவது பொறிவாழ் பூவே)
---------------------------
இந்த திருப்புகழ் பாடலை திரு.ஜேசுதாஸ் பாடிட இங்கு கேட்கலாம்: (PopUp விண்டோவில்)
(பிற்சேர்க்கை : இங்கு ஜேசுதாஸ் பாடுவது, ஹிந்தோளம் போல இருக்கிறது)
[play]
இந்தச் சுட்டியில் இருந்து உங்கள் கணிணிக்கு இறக்கிக் கொள்ளலாம்:


---------------------------

அருணகிரியார் சொல்கிறார்:
யலிசையில் சிறந்து விளங்கும் பெண்டிரின் நினைவில், இரவு பகலெல்லாம், வேறொரு நினைவும் இல்லாமல் அலைந்தேனே. அப்படிப்பட்ட எனக்கும், நீயும் கருணை புரிந்தாயே கந்தா. உன் கருணைக்கு நிலையான பாத்திரமாக நான் என் செய்வேன்?. அந்த நிலையான, உண்மையான, பேரின்பம் தரும் கருணைக்கடலில், நான் மூழ்கிடுவேன். அவ்வாறு மூழ்கிடுகையில், அப்பா முருகா, உன்னை, எந்தன் இதயத்தில், அறியும் அன்பைத் தருவாயே.
அன்பு, அன்பு - என்பார் எல்லோரும். இறையை அறிய அன்பு இருக்க வேண்டுமாம். இதயம் முழுதும் நிரம்பி வழியும் அன்பு வேண்டுமாம். முருகைய்யா, அந்த அன்பினை நீயே எனக்குத் தருவாய். உன்னை அறியும் அன்பை, எனக்கு நீயே தருவாய். அதற்காக, உன் நினைவிலே மூழ்குகிறேன். உன்னைப் பாடுகிறேன். நீயன்றி வேறொன்றும் அறியா நிலையில், உன் கருணை என்னும் சாகரத்தில் மூழ்குகிறேன்.
யில்களும், ஆடுகளும் நிறை மலைப்புறத்தில் தினைகள் விளையும் வேடர் நிலைத்தினை காவல் காக்கும், குறத்தி மகளாம் வள்ளி, இலக்குமிபோலவே அழகாக இருக்கிறாள். தாயைப்போலவே பிள்ளை! அவளுக்கு வணக்கம் செலுத்தி (கொடியிடையாள் வள்ளி - கொடிபோல் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய வள்ளி எனும் குண்டலினி), அவளை உன்பால் அணைத்தவனே (மூலாதாரத்தில் இருந்து மேலெழுப்பி, உன் நிலைக்கு உயர்த்தியவனே)
கயிலைமலைபோல் புகழ்பெற்று நிற்கும் புனித செந்தில் மாநகர் வாழ் பதியே, வேலா,
கரிமுகத்தான் கணபதிக்கு இளையவனே, கந்தப் பெருமானே.

Wednesday, October 15, 2008

துணை நீயே, குமரா, துணை நீயே!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(...?!).

அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.

இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி

எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா - என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.

தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, கந்தனே, கருணைக் கடலே.

முடிப்பு
கன்னித்தமிழ் கண்ட ஆண்டவனே, தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ?

பாடல் வரிகள் அழகாக இருக்கிறதல்லவா!
இப்போ பாடலை, பாலமுரளி சார் பாடிக் கேட்கலாம்:
துணை நீயே : இங்கே கேட்கலாம் : [play]
(Pop-Up window needs to be opened)

இராமா வர்மா அவர்கள் பாடிட யூ-ட்யூபில் இங்கு கேட்கலாம்.

பாலமுரளி சாரின் நடை அப்படியே பாடலில் தொனிக்கிறது. மெதுவாக பாடிடும் நடையை, இப்பாடலை வேகமாகப் பாடினால், எப்படி இருக்கும் என வியக்க வைத்தாலும், இந்நடையும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போ, வரிகளைப் பார்ப்போம்.

துணை நீயே குமரா, வினை தீர்ப்பாய் முருகா - என அட்டகாசமானதொரு எடுப்பு!

தொடுப்பில் - பார்தனில் என்ற இடத்தில் - அவர் பாடுவதைக் கேட்டால், சில சமயம் - 'பார்த்தனின்' என்று பாடுவது போல் இருக்கிறது.
அதனால், சற்றே வரிகளை இப்படியாக மாற்றிப் பார்க்கிறேன்!:
பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
கார்முகில் வண்ணன் மருகோன் கந்தனே, கருணைக் கடலே.
ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

முடிப்பில் - துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ? என்ற வரிகளுக்கு என்ன பொருள்? முரளி (குழலின்) கானத்தில் எப்போது முருகன் தன்னை மறந்தார்? நமக்குத் தெரியாமல் ஏதேனும் புராணம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும், நம்ம ஊரில் புரணாக்கதைகளுக்குத் தான் பஞ்சமே இல்லையே!
அப்படி ஏதும் இல்லையென்றால், இப்படி இருக்குமோ?. 'முரளி' என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் 'முரளி' என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?
அல்லது தன்னடக்கமாக இப்படிச் சொல்கிறாரோ?:
குமரா, உன்னை இதுநாள் வரை கானங்களால் துதித்து வந்தேன். என் துன்பங்களும் அதனால் மறைந்து வந்தன... ஆனால் இன்று, என்ன ஆயிற்று உனக்கு?
என் கானத்தில் தான் ஒருவேளே நீ மயங்கி விட்டாயோ?
கானத்தில் மயங்கி, என் குறைகளை தீர்ப்பதையெல்லாம் மறந்துவிட்டாயோ?
இருப்பினும், என்றும் துணை நீயே, குமரா.

நீங்க என்ன நினைக்கறீங்க?

Monday, October 13, 2008

ஆ!

ஆ!, அன்பர்களுக்கு இந்த தலைப்பு, பிடித்திருப்பதால்(!), இதனையே வைத்துவிடுகிறேன்!
ஆ! = ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா?

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் பொறுத்து, சண்முகனே கண் வளராய்!
(சாமி, மனம் பொறுத்து, அம்பிகையே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

தமையன் அடித்தானோ, உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகனே!
(நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் பூமகளே!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அக்காள் அடித்தாளோ, உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண் வளராய்!
(விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க துரையே நீ கண் வளராய்!
(அழாதே ,அழாதே! எங்கள் அரசி நீ
தொழுவார் பலர் இருக்க தூயவளே நீ கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

(அடைப்புக் குறியில் இருப்பவை, பெண் குழந்தைக்கான மாற்றங்கள்!)

பாடுபவர்: திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ

Saturday, October 11, 2008

இவ்வுலகம் எப்படிப்பட்டது : கபீர்

ன்றாடம், இந்த உலகத்தில் நாம் நிற்பதும், நடப்பதும், தூங்குவதும், சாப்பிடுவதும், வேலை செய்வதும், இன்ன பிறவற்றையும் செய்வதும், வழக்கமாகி விடவே, இவ்வுலகத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் இயல்பாகி விடுகிறது. நிற்பதும், நடப்பதும், இன்னபிறவும் அற்ப மாயை என்பதை அறியா மனம், இந்த அன்றாட நிகழ்வுகளைத் தாண்டிய ஆழ்ந்த பொருளை எண்ணாது, மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.
இவ்வுலகம் எப்படிப்பட்டது என்பதனை, இக்கவியில் எளிதாகச் சொல்கிறார், மகான் கபீர்தாஸ். துன்பத்தில் சிக்க வைக்கும் இவ்வுலகத்தில் இருந்து சுதந்தரம் பெறுவதெப்படி என்பதனையும் அவரே சொல்கிறார், கேளுங்கள்:

புகழ் பெற்ற கசல் பாடகர் ஜக்ஜீத் சிங் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்.

ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

யே சன்சார் காஹது கி புடியா பூண்ட் படே
குலு ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

யே சன்சார் ஜாடு அவுர் ஜாகடு
ஆகு லகே பர் ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

யே சன்சார் காடோ கீ பாடி
உல்ஜ் புல்ஜ் மர் ஜானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

கெஹத்து கபீரு சுனோ பாய் சாதோ
சத் குரு நாம் டிகானா ஹை
ரெஹ்னா நஹி தேஸூ பிரானா ஹை

(உச்சரிப்பில் பிழைகள் இருக்கலாம், பொறுத்தருள்க!)

இப்போ, இக்கவியை தமிழாக்கிப் பார்க்கலாமா?

இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே... அன்னியமான
இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...

இவ்வுலகம் காகித உருண்டைபோலே - ஒருவாளி
நீரிரைத்தால், கூழாகிடுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

இவ்வுலகம் முட்புதர் போலே - அதில் சிக்கித்
தம்மைத் தொலைக்கச் செய்யுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

இவ்வுலகம் வெறும் மரங்களும், புதர்களுமே - அதில்
சிறுதீ பற்றினாலும், பாழாகிடுமே...
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

கபீரன் சொல்வதைக் கேளும் - சாதுக்களே,
சத் குருநாதரின் நாமமே, நமது ஒரே இலக்கு!
(இவ்வுலகில் ஏதும் நிலையில்லையே...)

உருது கவிஞர் ஒருவரைப் பற்றிய இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில்,
இப்பாடலை தெருவில் பாடி வருவதுபோல அமைத்திருக்கிறார்கள்.
கீழே இருக்கும் அசைபடத்தில், இப்பாடலையும், அப்படத்தின் இதர காட்சிகளையும் காணலாம்:

Wednesday, October 08, 2008

நவராத்ரி : வாணி வாகதீஸ்வரி

சகலகலா வல்லி வாணி நின் அடிபோற்றி வணங்கியே பாடிட ஓர் பாட்டு.
இராக தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே, நீ அருள்வாயே, வேதரூபிணி, வித்யாதேவி.

"ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி"

குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையின் பத்து பாடல்களும், அவற்றின் பொருளும் படிக்க குமரன் அவர்களின் பதிவை இங்கே நாடிடவும்.

வாணி வாகதீஸ்வரி!
---------------
பாடலை இயற்றியது : B.A.சிதம்பரநாத்
இராகம் : வாகதீஸ்வரி
பாடுபவர் : கே.ஜே.யேசுதாஸ்

எடுப்பு
வாணி வாகதீஸ்வரி
வரம் அருள்வாய், இசைவாய் நீ வாகதீஸ்வரி!
வரம் அருள்வாய், இசைவாய் கலைவாணி, வாகதீஸ்வரி!

தொடுப்பு
வேணி, வேத புத்தக வாணி
வினைகள் அகற்றும் வித்யாரூப
(வாணி வாகதீஸ்வரி)

முடிப்பு
எத்தனை ஜென்மம் நீ எனக்களித்தாலும்
இசைஞானமும் நல்லொழுக்கமும் வேணும்!
அத்தனையும் நீ எனக்களித்தாலும்
என்னருகில் இருந்து ஆண்டிட வேண்டும்!
(வாணி வாகதீஸ்வரி)

Vaani
[play]

Tuesday, October 07, 2008

நவராத்ரி : அருள் மழை பொழி அலைமகள்

ஹிரண்மயிம் லக்ஷிமீம் பஜாமி எனத் தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதரின் கிருதி ஏற்பட்ட கதை இது:

ஒருமுறை தீக்ஷிதரின் சிஷ்யர் ஒருவர், அவரிடம் வந்து, ஐயா, நீங்கள் மகாராஜாவைப் போய் சந்திக்கலாமே, உங்கள் வரவுக்காக காத்திருக்கிறார் அவர். நீங்கள் போய் சந்தித்தாலே போதும், உங்களுக்கு அவர் பொன்னும் பொருளும் வாரி வழங்கிடுவார் என்று. அந்த சிஷ்யருக்குத் தெரியும் தீக்ஷிதரைப் பற்றி. இருப்பினும் தீக்ஷிதரின் மனைவியார் சில தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டாராம். அப்போது, அந்த சமயத்தில் குறிப்பாக, மகாராஜாவைப்பற்றிய செய்தியை காதில் போட்டு வைக்கலாமே என நினைத்தார் போலும்.

தீக்ஷிதரோ, இந்த ஆசைக்கு வளைந்தாரில்லை. ஸ்ரீவித்யா உபாசகரான அவர், சாட்சாத் இறைவனைப் பாடும் இந்த நாவால், சாமன்யர்களைத் துதிப்பதா, இயலாது என மறுத்துவிட்டார். அப்போது, தங்க விக்ரகமாக மஹாலஷ்மியே தன் இருதயத்தில் நிறைந்திருக்க, அவளே இதுபோன்ற நிலையில்லா உலகில் இருந்தென்னைக் காப்பாள், என்று பாடுகிறார். நிலையான செல்வம், இறையருள் மட்டுமே என்கிறார். அன்றிரவே, அவரது துணைவியாரின் கனவில் மஹாலஷ்மி தோன்றி, தங்க மழையாய் கனவில் பொழிவது போலவும், இது போதுமா, எனக் கேட்பது போலவும் கனாக் கண்டாராம். அப்போதுதான் அவருக்கு, சாட்சாத் திருமகளே அருள் பாலித்திடும்போது, இதைவிடவும் செல்வம் வேறுண்டோ என உணர்ந்தாராம்.

இராகம் : லலிதா
தாளம் : ரூபகம்
பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்


hiranmayeem_lakshm...


பல்லவி
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஸதா3 ப4ஜாமி
ஹீன மானவாஸ்1ரயம் த்யஜாமி

அனுபல்லவி
சிர-தர ஸம்பத்ப்ரதா3ம்
க்ஷீராம்பு3தி4 தனயாம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஹரி வக்ஷ:ஸ்த2லாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்4ரு2த குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

சரணம்
ஸ்1வேத த்3வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பி3காம் பராம்
பூ4த ப4வ்ய விலாஸினீம்
பூ4-ஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்3ஜ மாலினீம்
மாணிக்யாப4ரண த4ராம்
கீ3த வாத்3ய வினோதி3னீம்
கி3ரிஜாம் தாம் இந்தி3ராம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸீ1த கிரண நிப4 வத3னாம்
ஸ்1ரித சிந்தாமணி ஸத3னாம்
பீத வஸனாம் கு3ரு கு3ஹ -
மாதுல காந்தாம் லலிதாம்


பொருள்:
பல்லவி:
எப்போதும் என் இதயத்தில் கொலுவிருக்கும் தங்கமே, திருமகளே,
துணை நீ தானே, நிலையிலா மானிடர் தொடர்பினை அறுப்பாயே.

அனுபல்லவி:
நிலையான செல்வமாம், வீடுபேறுதனை வழங்குவாயே, பாற்கடலின் குமாரியே.
ஹரியின் ஹிருதயத்திலுருப்பாயே - மான் போலும், இளம்பாதம் கொண்டவளே.
தாமரை போன்ற கரங்களில் அல்லி மலரைத் தரித்தவளே,
மரகத வளை அணிந்தவளே.

சரணம் :
வெள்ளைத் தீவினில் வசிப்பவளே, கமலாம்பாள் நீதானே.
கணங்களும் தேவரும் தொழுதிட, தாமரைமாலை அணிந்தவளே.
நவரத்தின ஆபரணம் சூடி, ஒளி விடுபவளே.
இசைக் கருவிகளின் நாத இன்பத்தை இரசிப்பவளே.
குளிர் நிலவின் பொலிவே.
ஸ்ரீசக்ர சிந்தாமணியில் வீற்றிருந்து,
பக்தர்க்கு வேண்டியதை அளிக்கும் தேவ லோகத்து இரத்தினமே.
பட்டு பீதாம்பரம் அணிந்தவளே.
குருகுஹனின் மாமன் மனைவியே, லலிதாம்.

(குருகுஹ என்பது, தீக்ஷிதரின் முத்திரை; குஹன் என்பது இங்கு முருகனையும் குறிக்கிறது!. 'லலிதா' என இராக முத்திரையும் வருகிறது.)

Wednesday, October 01, 2008

நவராத்ரி : அம்பா, என்ன சொல்லிப் பாடுவேன்?

அம்பா, அடிமை நான், உனை என்ன சொல்லிப் பாடுவேன்?
பாபநாசம் சிவன் அவர்களைப்போல்,

அம்பா எனது அறிவு வந்த நாள் முதலாய்
அகமகிழ்ந்து, ஆலயம்தோறும் வந்து
செம்பொன் அடிவணங்கி...
அம்பா உனது பாத மலரே தஞ்சம்
என்று கேதார இராக கிருதியில்,
சிவராஜதானி நகர் வாழும் நாயகியை இராஜேஸ்வரி, பரமேஸ்வரி என்கிற பெயர்களால் அழைத்துப் பாடுவேனோ!

அல்லது,

பக்தர்கோடிகளை பரிந்து காக்கும் பரதேவதையும் நீயன்றோ, உனக்கு பாரபட்சம், ஓரவஞ்சனையும் உண்டோ, நான் என் செய்வேன்
முக்திமுக்தி சகல போகபாக்கியமும் பரிந்தருளும்
புவனேஸ்வரி
பூமகள், நாமகள் பணி
மயிலாபுரி கற்பகமே,
எளிய இராமதாசன் என்னைக் காத்தருள் அம்மா

என, 'என்னைக் காத்தருள்வாய் அம்மா' என்கிற சரஸ்வதி இராகக் கிருதியில் பாடுவேனோ!

------------------------------------------------------------------
தண்டபாணி தேசிகரைப் போல்,

அருள வேண்டும் தாயே
என்னும் சாரமதி இராகக் கிருதியில் சொல்லுவது போல்
பொருளும், புகழும் பொருந்தி வாழ
புவியின் நாதனை நினைந்து வாழ
கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்
காலம் கடவாமல் கருத்தை திரட்டவும்
உலகிலே நல்ல உண்மைகள் பேசவும் உனை நினைக்கவும், உறுதியாய் வாழவும்
அருள வேண்டும் தாயே,
அங்கயர்கண்ணி
நீயே!

என பட்டியல் வைத்திட இயலுமோ!

---------------------------------------------------------------------
பெரியசாமித் தூரனைப்போல்,

தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வள்ளி - ஜகமெல்லாம் படைத்த
தாயே திரிபுரசுந்தரி,
உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி, உன் தாளிணை மலரே சரணம்!

என்ற சுத்த சாவேரி இராகப் பாடலைப் பாடி உன்னை நாடிட வேண்டுமோ!

---------------------------------------------------------------
கனம் கிருஷ்ணயரைப்போல,

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
சுக ஸ்வரூபணி மதுர வாணி
சொக்கநாதர் மனம் மகிழும்
மீனாட்சி

என்ற ரதிபதிப்ரியா இராகக் கிருதியில் பாடி மகிழ்வேனோ!
பாடலின் சுட்டி இங்கே.
-------------------------------------------------------------------------
மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் போலத்தான்,
ஷ்யாம கிருஷ்ண சகோதரி,
சிவசங்கரி, பரமேஸ்வரி,
காமாக்ஷி அம்பா,
அனுதினமும் மறவேனே என்கிற பைரவி இராக ஸ்வரஜதியில்தான் பாடிட இயலுமோ!



-----------------------------------------------------------------------
அன்ன பூர்ணே விசாலாட்சி அகில புவன சாட்சி, கடாக்ஷி!

எனும் மும்மூர்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரின் சாமா கிருதியைத் தான் பாடி உன் அருளை நாடிட வேண்டிடுவேனோ! : பாடலின் சுட்டி இங்கே.
----------------------------------------------------------------------
கும்பிட்ட நேரமும் "சக்தி"யென்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

என்று மகாகவி சுப்ரமணிய பாரதி போல், பராசக்தியே உனை வேண்டி ஓம்கார சக்தி முழக்கமிடுவேனோ!
------------------------------------------------------------------
அடியேன், எளியேன், இப்பெரிய மகான்களெல்லாம் உன்னை உபாசித்தது போல், என்னால் இயலுமா எனத் தெரியவில்லை. இவ்வடியார்களின் அடியனாய், நின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்கும், என்னையும் நீ காத்து ரட்சி!. அருட்பிச்சை இட்டு என்னை ஆதரி!