Sunday, December 07, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு

சென்ற சில வெண்பாக்களில், ஜீவன் முக்தரைப் பற்றியும், அவர் முக்தி அடைந்த பின், பரமனை முழுதும் அறிந்த நிலையில், அந்த பரமனும், ஜீவனும் வேறில்லா நிலைதனை அடைதலைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, நாம் பார்க்கப்போகிற சில பாக்களில், பரமனை எட்டிய ஜீவனின் ஆன்மா, பரமன் எப்படிப்பட்டதென அறியும் என்பது சொல்லப்படுகிறது.

பா 54:
எவ்வடை விற்பிறி தேதுமடை தாற்கின்றோ
வெவ்வின்பி னிற்பிறி தின்பின்றோ - வெவ்வறிவு
தன்னிற் பிறிதறிவு தானின்ற மோவது
தன்னைப் பிரமமெனச் சார்.
(சீர்களைப் பிரித்து)
எவ்வடைவில் பிறிது ஏதும் அடைதல் இன்றோ
எவ்வின்பினில் பிறிது இன்ப(ம்) இன்றோ - எவ்வறிவு
தன்னில் பிறிதறிவு தான் இன்றமோ அது
தன்னைப் பிரம்மம் எனச் சார்.

பொருள்:
எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.

பா 55:

எதுகாணக் கண்டார் கேதுவுமே யின்றோ
வேதுவான பின்சன்மா மின்றோ - வேதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
வானது தான்பிரம மாம்.
(சீர்களைப் பிரித்தபின்)
எதுக்காணக் கண்டார்க் ஏதுவுமே இன்றோ
எதுவானபின் சன்மா இன்றோ - எதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
ஆனது தான் பிரம்மமாம்.

பொருள்:
எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.

விளக்கம்:
எல்லோரும் ஏதோ ஒரு பொருளை அடைய, அன்றாடம் ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால், எதை அடைந்தாலும், அதனால் அடையும் நிறைவானது தற்காலிகமாகவே இருக்கின்றது. தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடைதலும், நிறைவின்மையும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறவிக்குப் பின் பிறவியிலும், இத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முற்றுப் பெறுவது எப்போது?
பிரம்மம், என்னும் அந்நிலைதனை அடைந்தால் மட்டுமே, தேடல் நிற்கிறது. அதன் பின், அடைவதற்கு வேறோன்றும் இல்லை என்னும் நிறைவினை தருகின்றது.
பொருள் மட்டும் இன்றி, இன்பத்தையும் தேடி அன்றாடம் அலைகின்றோம். ஆனால், கிட்டும் இன்பமெல்லாம் நிறைவினைத் தருவதில்லை. நிலையான பேரின்பம் மட்டுமே, அடைதலுக்கு வேறொரு இன்பம் தேவையில்லை என்கிற நிறைவினைத் தந்திட இயலுமாம்.
பொருளும், இன்பமும் மட்டுமல்ல, பலவற்றையும் கற்றும், கண்டும், கேட்டும், அறிகிறோம். புலன் வழி கற்கும் அறிவோ, பொருளறிவாகவே இருக்கிறது. பேரின்பம் தரும் பெரும் ஞானத்தினை, புலன்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவினைத் தருவதில்லை. பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது. (பார்க்க - கபீரின் கனிமொழிகள் : கற்றவர் படும் பாடு.) தான் யாரெனும் தன்னறிவு தந்திடும், உயர் ஞானத்தினை அடைந்திடுதல் மட்டுமே, பேரின்பம் தரும். அதுவே அடைய வேண்டிய எல்லா அறிவுகளிலும் உயர்வான ஞானம்.

அப்படிப்பட்ட பிரம்மத்தினைக் கண்டபின், காண்பதற்கு வேறொன்றுமில்லை. எல்லாமே ஒன்றாதக் தெரிவதால். தானும், அண்ட சராசரங்களும், அகில உலகமும், எல்லாமும், ஒன்றாகவே இருப்பதால், அந்த அனுபூதி நிலையில், வேறொன்று எனக் காண்பதற்கு இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மமாகவே மாறிய பின், பிறப்புச்சுழலும் அறுகிறது. மீண்டும் அல்லல் தரும் பிறப்பு என்னும் நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தினை அடைந்த பின், அடைவதற்கு உகந்த பொருள் என்று ஏதுமில்லை.

4 comments:

  1. //பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது//

    ஹா ஹா ஹா!
    என்ன அழகான முரண் பார்த்தீர்களா ஜீவா?

    அதான்,
    கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
    என்று பாடி விடுகிறார்!

    ஏன் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது?

    விறகுக் கட்டையைக் கொளுத்திக் குளிர் காயலாம்! ஆனால் நாம் வாங்கிய கட்டை என்று இறுக்கி அணைத்துக் கொள்ள முடியுமா? கற்றலும் அதே போலத் தான்!

    இறைவனை அறியத் தான் ஞானானுஷ்டானம் செய்கிறோம்! (கற்கிறோம்)!
    இறைவனை அறியத் தான் கர்மானுஷ்டானம் செய்கிறோம்! (செயல் புரிகிறோம்)!
    ஆனால் பழகப் பழக, குளிரைப் போக்கத் தான் கட்டை என்பது மறந்து போய், கட்டையையே அணைத்துக் கொள்கிறோம்! அதான் அதுவே தடையாகப் போய்விடுகிறது!

    கட்டைக்கு ரொம்ப தூரமும் போக முடியாது! ரொம்ப அருகிலும் போகக் கூடாது! அப்போது தான் வெப்பம் கிடைக்கும்!

    அகலில் அகலும், அணுகில் அணுகும் என்பார் திருவாய்மொழியில்!

    ReplyDelete
  2. வாங்க கே.ஆர்.எஸ்,
    அழகான உவமையையுடன் விளக்கம் சூப்பர்!

    ReplyDelete
  3. //பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது //

    கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்
    கற்றும் அறிவில்லாத என்
    கர்மத்தை யென்சொல்கேன் மதியை யென் சொல்கேன்
    கைவல்ய ஞானநீதி
    நல்லோருரைக்கிலோ கர்மமுக்கியமென்று
    நாட்டுவேன்;கர்மமொருவன்
    நாட்டினாலோ பழைய ஞான முக்கியமென்று
    நவிலுவேன்; வடமொழியிலே
    வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே
    வந்ததா விவகரிப்பேன்;
    வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியில்
    வசனங்கள் சிறிது புகல்வேன்;
    வெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த
    வித்தையென் முத்தி தருமோ
    வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைப் பெற்ற
    வித்தக சித்தர் கணமே
    -தாயுமானவர்

    இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கு?

    ReplyDelete
  4. ஆகா, அருமையான தாயுமானவர் பாடலைத் தந்தமைக்கு நன்றிகள் கபீரன்பன் ஐயா.

    கர்மம் பெரிதா, ஞானம் பெரிதா, பக்தி பெரிதா என்றே வாதிட்டு வாழ்நாளைக் கழிப்பவரே பலர்.
    கர்மம், பக்தி, ஞானம் - ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா?
    இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதுமில்லை என்பதை அறியார்.
    தமிழ் பெரிதா, வடமொழி பெரிதா, என்மொழிதான் பெரிது, இதற்கு நேர் வேறில்லை எனத் தலைக்கனம் பிடித்தார் தான் மிகுதி.
    இவ்வித்தையெல்லாம் முக்தி தருமோ?

    எத்தனைத் தான் வித்தை கற்றாலும் அகந்தை தனை அழித்தாலன்றி முக்தி முட்டினாலும் முந்தாதல்லவோ.

    ReplyDelete