Friday, December 05, 2008

கண்ணன் காட்டும் கர்மயோகம்

நம்ம திவாய்யா பதிவில், கண்ணன் காட்டும் கர்ம வழி என்கிற தலைப்பில், கீதை மூன்றாம் அத்தியாய சுலோகங்களைச் சொல்லி, கர்ம யோகம் பற்றி விளக்கமா சொல்லியிருந்தார். அதன் முடிவில், அதைப்படித்ததில், நமக்குப் புரிந்ததை எழுதித் தரச் சொல்லி இருந்தார். இதோ அது:

செயலா, துறவா? செயல்களைத் துறந்து, தியானித்து,
சச்சிதானந்த சொரூபத்தினைக் காண விழைவது ஞான வழி.

செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!)
செயல்களை செய்யும்போதோ, நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக் கண்ணாடிகளால்,
இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்
ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை.

விருப்பு, வெறுப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?
செயலில் எப்படிப்பட்ட பலன் ஏற்படினும், அதை ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால்.
இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

கர்ம யோகம்:
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,
நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக் கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.

எல்லாம், இயற்கையால், முக்குணங்களின் தூண்டுதலால், நடப்பவை.
ஆகவே, தன்னால் நடந்தது என்ற ஆணவத்தினை அழித்தொழி.

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

இராஜச குணத்தால், தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி
- இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே குறிக்கோள்.

அந்த உயரிய குறிக்கோளை அடைய, ஆசையை ஒழித்து, பலன்களில் மேல் பற்று வைக்காமல்,
பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

27 comments:

  1. ////பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
    வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
    நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
    தானடை சிக்கெனத் தான்.////


    அருமை அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. //உடலை விட, புலன்களும்,
    புலன்களை விட மனமும்,
    மனத்தை விட புத்தியும்,
    புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது//

    ஆன்மாவை விட ?
    :)

    ஆன்மா = பரம ஆன்மா!
    ஆகவே, இந்த ஆன்மாவை அறிந்து அந்த ஆன்மாவை அடைவதே குறிக்கோள்! :)

    ReplyDelete
  3. //பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று//

    பிரசாதம் நிறைய கொடுக்கலீன்னா கோயில்ல இப்பல்லாம் பட்டரையே அடிக்க வராங்க ஜீவா! :))))

    Jokes Apart
    //பிரசாதமாக பலன்களை ஏற்று//
    கவனிச்சீங்களா?
    அதான் பிரசாத "பல" சித்திரஸ்து அப்படின்னு சொல்வது வழக்கம்!

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி அகரம்.அமுதா!

    ReplyDelete
  5. வாங்க கே.ஆர்.எஸ்!

    //ஆன்மாவை விட ?//
    புரியுது :-)

    //பிரசாதம் நிறைய கொடுக்கலீன்னா//
    பிராசாதம் மேலே நிறைய ஆர்வமா, அல்லது இலவசமா கிடைப்பது மேல அதிக ஆர்வமா தெரியலை!

    ReplyDelete
  6. //தானடை சிக்கெனத் தான்//

    என்ன இது? எனக்குப்புரியும்படி விளக்கினால் நல்லது.

    சுப்பு ரத்தினம்
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  7. // எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
    இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
    உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
    செய்வாய் மனமே நிதம். //

    பொதுவாக மனதுக்கு உபதேசம் என்பது ‘தனக்கு’ சொல்லிக்கொள்ளும் உபதேசம். அடுத்தவர்க்கு உபதேசம் செய்யும் போது அவருடைய மனதை அழைப்பதில்லை. மேலே உள்ள பாடலில் ”எல்லாமும் என்னால்” என்று வருவதால் கண்ணன் சொல்வது போல் ஆகிறது. அப்போது ’மனமே’ போய் ’நீயும்’ என்று வரலாமோ? மாற்றாக ’எல்லாமும் அவனால்’ என்று வைத்துக் கொண்டால் மனதிற்கு உபதேசம் சரியாகிவிடும்.

    இரண்டாவது வெண்பாவுக்கு பின்னூட்டம் திவா வோட பதிவில போயிடுச்சு :)

    ReplyDelete
  8. வாருங்கள் சூரி ஐயா,
    ஏதோ பிழையுளதோ, அதனால்தானோ விளக்கம்?!
    இதோ:
    //தானடை சிக்கெனத் தான்//
    "சரண மலர் பாதங்களை அடைந்து, சிக்கெனப் பற்றிக் கொள், விலகமால்" என்கிற பொருளில்.

    ReplyDelete
  9. வாருங்கள் கபீரன்பன் ஐயா,
    ஆம், நீங்கள் சொல்லும் பொருளும் வருகிறது.
    ஆனால் நான் சொல்ல விழைந்தது:
    "எல்லாமும் என்னால் என்று சொல்ல வைக்கும் அகந்தை" என்கிற பொருளில்...

    "எல்லாமும் என்னாலே என்ற அகந்தையும்

    இல்லாமல் சும்மா இருக்கவே - ..."
    என்று மாற்றினால், சிறிது தேவலையோ?!

    ReplyDelete
  10. //ஆனால் நான் சொல்ல விழைந்தது:
    "எல்லாமும் என்னால் என்று சொல்ல வைக்கும் அகந்தை" என்கிற பொருளில்... //

    நீங்கள் விழைவதைப் புரிந்து கொண்டேன். அதை கீழ் உள்ளவாறு சற்றே மாற்றியமைத்தால் பொருள் சிதறாமல் வருகிறதா என்று பாருங்கள். ’தளை’ கட்டுப்பாடு நீங்கள் தான் பார்த்துக் கொள்ளவேண்டும் :-)

    எல்லாமும் என்னாலே என்னும் அகந்தை
    இல்லாமல் சும்மா இருந்தே -எல்லாம்
    வருவது அவனரு ளென்றே கர்மமும்
    செய்வாய் மனமே நிதம்

    ReplyDelete
  11. பொருள் சிதறாமல் நன்றாக இருக்கிறது ஐயா.
    தட்டும் தளைகளை சரி செய்ய:

    எல்லாமும் என்னாலே என்னும் அகந்தையும்
    இல்லாமல் சும்மா இருந்திட - எல்லாமும்
    வருதல் அவனரு ளென்றேதான் கர்மம்
    புரிவாய் மனமே நிதம்.

    ReplyDelete
  12. நன்றாக வந்திருக்கிறது ஜீவா

    வாழ்த்துகள் !

    ReplyDelete
  13. நல்லது ஐயா, இன்னொரு இடத்திலும் தளை தட்டுகிறது, எனவே மேலும் ஒரு மாற்றம்:

    எல்லாமும் என்னாலே என்னும் அகந்தையும்
    இல்லாமல் சும்மா இருந்திட - எல்லாம்
    வருதல் அவனரு ளென்றேதான் கர்மம்
    புரிவாய் மனமே நிதம்.

    ReplyDelete
  14. வாழ்த்துகள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் ராஹினி.

    ReplyDelete
  16. //செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக் கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.//

    போர் செய்வது கடமை, தர்மம் என்றெல்லாம் புனிதப்படுத்தினாலும், பாரத போரில் பயன்படுத்தப்பட்ட பல உத்திகள் தர்மத்துக்கு எதிரானது, குறிப்பாக பீஷ்மரை அம்புப் படுக்கையில் வீழ்த்த அஸ்வதமன் என்ற யானையைக் கொன்றதாக தருமனைச் சொல்ல வைத்தது இன்னும் பலப்பல.

    அதர்மத்தை அதர்மவழியில் வெற்றி கொள்வதும் தர்மமா ? புரியவில்லை, விளக்க முடியுமா ?

    (பகவத் கீதை போர்களத்தில் சொல்லப்பட்ட நூல் என்பதாக இல்லாமல் இருந்தால் பலதரப்பினரும் போற்றும் ஒரு நூலாக இருக்கும் என்பது எனது எண்ணம்)

    ****
    உங்கள் கட்டுரைகளில் மற்றதையெல்லாம் விட்டுவிட்டு இதையே ஏன் கேட்கிறேன் என்று நினைக்கலாம், மற்றதெல்லாம் ஒப்புதல் என்றே பொருள், அதனைப் பாராட்ட பலர் இருக்கிறார்கள், பாராட்டுக்கள் என்ற ஒற்றை வார்த்தையைச் சொல்லும் சிலவரிகளை எழுதும் ஒருவராக பின்னூட்டம் போட்டால் போதும் என்று பெரும்பாலன பதிவுகளுக்கு நான் நினைப்பது இல்லை. அப்ப்பாடா இது சுயபுராணம் .... !

    ReplyDelete
  17. நல்லது கோவியாரே,
    பாராட்டுக்களை விட, விமர்சனங்களும், வினவல்களும்தான் முக்கியமென நினைக்கிறேன். அவை பேசப்படும் தலைப்புக்குப் பொருத்தமாக இருக்கும் வரையில், ஆட்சேபணை இல்லை.

    This is my take:
    பகவத் கீதையில் பகவான் கண்ணன் போதிப்பது, அர்ஜூனனுக்கு என்றாலும், படிக்கும் நமக்கு என்று கொள்வதே, நமக்கு முக்கியம்.
    போர் - யாருக்கும், யாருக்கும் இடையே?
    பாரதத்தை விடவும். நம்மிடமும் ஒரு பாரதப்போர் நடக்கிறது. அற வழியில் நடக்க வேண்டிய நமக்கும், அதை விடுத்து குறுக்கு வழியில் நடக்க நினைக்கும் நம் ஆசைக்கும். இப்போரில் வெல்லப்பட வேண்டியது நம் ஆசை. அதைத்தான் கண்ணன் இங்கே போதிக்கிறான் - பதினெட்டு அத்தியாயங்களில். போரில் யார், யாரை எப்படி வென்றார்கள் என்பதெல்லாம், கீதைக்கு அப்பாற்பட்டவை. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும். மகாஆஆபாரதம்ம்ம்... என்ற மெகா சீரியலுக்கு ஏற்ற களம் அது. அவற்றின் மூலத்தை தேடிக்கொண்டிருப்பதைவிட, கீதையில் கண்ணன் என்ன சொல்கிறான் என்பதில் கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்!
    //அதர்மத்தை அதர்மவழியில் வெற்றி கொள்வதும் தர்மமா ?//
    எப்போதுமே, அதர்ம வழி இறுதியில் வெல்லாது. தர்மத்தின் பாதைதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்பதே நமது மறைகளின் கூற்று. எது தர்மம் என்ற கேள்விக்கு, பொதுவாக, யாருக்கு? என்கிற பதில் வினாவை வைக்கிறார்கள். உதாரண நிகழ்ச்சி:
    ராகவேந்திர சுவாமிகளை சோதனை செய்து பார்க்க விரும்பிய ஒருவர், அவரைப் பார்க்க வருகையில், ஒரு தட்டில் மாமிசை உணவை மூடி வைத்துக் கொடுக்க, இராகவேந்திரர் திறந்ததும், அவை பழங்களாகப் போயிருந்தனவாம். புன்னகைத்தவாரே இராகவேந்திரர் சொன்னாராம்: 'உன் தர்மம் கொடுப்பது, அதைத்தான் நீ செய்தாய். என் தர்மம் அதை பழங்களாக பெற்றுக்கொள்வது என்றிருப்பதால், அப்படியே பெற்றுக் கொள்கிறேன்' என்றாராம்.
    மாமிசம் கொடுத்தவரின் மனநிலை எப்படி மாறி இருக்கும்?. அவர் மனதில் இருந்த அழுக்குகளெல்லாம் அப்போதே கரைந்திருக்கும் அல்லவா!.
    நமது நோக்கமும், இவ்வழுக்குகளை களைவதாக இருக்க வேண்டும். அச்செயல்களெல்லாம் தர்மமே.

    ReplyDelete
  18. சிக்கு எனும் சொல் நீங்காத அழுக்கு எனப்பொருள் படும் என்று நினைக்கிறேன்.
    தலை சிக்கு பிடித்திருக்கிறது என்றால் எத்தனை ஷாம்பூ போட்டாலும் பொடுகு
    போகவில்லை என்று பொருள் கொள்வோம்.
    இது ஒரு எதிர் மறைச் சொல் ( negative ).
    இருப்பினும், ஈசனின் சரண மலர் பாதங்களை சிக்கெனப்ப்ற்று எனின் ,
    சிக்கு பிடித்து நீங்காது போல் நிலைத்திருப்ப‌துபோல்,
    ப‌ற்றுக‌, ப‌ற்ற‌ற்றான் ப‌ற்றினை என‌ச் சொல்லியிருக்கிறீர்க‌ள்.

    ஸிம்ப்ளி ஒன்ட‌ர்ஃபுல்.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  19. வழக்கம்போல் சனிக்குக் கோவில் போனப்ப..... பிரசாதம் (உண்மையிலேயே பல பிரசாதமுன்னு சொல்லலாம்) கிடைச்சது.

    இன்னும் கொஞ்சம் சொல்லணும். பேசாம ஒரு பதிவைப் போடறேன்.

    அதான் செய்யும் தொழிலே தெய்வமாச்சே:-))))

    ReplyDelete
  20. //பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
    வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
    நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
    தானடை சிக்கெனத் தான்//.


    கீதையின் சாரம். நன்றி ஜீவா ஐயா.

    ReplyDelete
  21. சூரி ஐயா,
    //சிக்கு எனும் சொல் நீங்காத அழுக்கு//
    ஓ, அந்தப் பொருளிலா?
    உண்மையில், அப்பொருளினை நான் நேரடியாகக் கொள்ளவில்லை.
    'சிக்கென' == உறுதியாக என்ற பொருளில்.
    இச்சொல் திருவாசகத்தில் இருந்து,
    சிக்கெனப் பிடித்தேன், எங்கெழுந்தருளுவது இனியே? - என வருமல்லவா, அதைத்தான் கையாண்டேன். நம்மாழ்வாரும் இந்த சொல்லை கையாண்டிருக்கிறாராம்.
    நீங்கள் சொன்ன பின்பு, இச்சொல்லைப்பற்றி தேடிப்பார்த்தில் இவ்வின்பங்களைக் கண்டேன்:
    ~~~~~
    கம்பனும், "நெஞ்சிடை வஞ்சன் வந்து புக்கனன் போகாவண்ணம் கண்எனும் புலங்கொள் வாயில்
    சிக்கென அடைத்தேன்" எனச் சொல்கிறான்.
    - "கண் இமைகளை சிக்கென - உறுதியாக, இறுக்கமாக அடைத்தேன். என் நெஞ்சை விட்டு அவன் அகலா வண்ணம்."
    மேலும் கம்பன்,
    'சிக்கறத் தெளிந்தேன்' - அதாவது, 'அடைப்புகள் இல்லாமல், சந்தேகம் இல்லாமல், தடைகள் இல்லாமல்' தெளிந்தேன் என்
    ஆக - சிக்குற என்றால், உறுதியாக.
    சிக்கற - தடைகள் இல்லாமல்.
    எண்ணைச் சிக்கு மட்டுமல்லாமால், நூலில் சிக்கு என்றும் சொல்வோமல்லவா!
    இவற்றுக்கான வேர்ச்சொல் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும்!
    ~~~~
    வேறு என்ன சொல்வேன்:
    சிக்கலில் சிக்கிட சீர்செய்வாய் சித்தமதை
    சிக்கலூர் சிங்கார வேலனே - சிக்கெனச்
    சிக்கிட சீர்நல்கும் செந்தாள் விரல்தனைச்
    சீக்கிரம் பற்றிடத் தா.

    ReplyDelete
  22. வாருங்கள் துளசியம்மா,
    //பிரசாதம் (உண்மையிலேயே பல பிரசாதமுன்னு சொல்லலாம்) கிடைச்சது.
    //
    ஆகா, நல்லது.
    /பேசாம ஒரு பதிவைப் போடறேன்.//
    அப்படியே ஆகட்டும்!

    ReplyDelete
  23. வாருங்கள் கைலாசி ஐயா,
    //கீதையின் சாரம். நன்றி ஜீவா ஐயா.// :-)
    நல்லது, நன்றிகள்!

    ReplyDelete
  24. அருமை ஜீவா. உங்கள் பின்னூட்ட விளக்கங்களையும் மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  25. மிக்க மகிழ்ச்சி கவிநயாக்கா.

    ReplyDelete
  26. கவிதை நல்லா இருக்கு.

    பலர் ஞானத்திலும் இருக்க முடியாமல்
    கர்மமும் சரிவர செய்யாமல் (கர்ம விதிப்படி) ஊசலாடி

    ஞாகர்மத்திலோ
    கர்மனத்திலோ பாதிக்கு பாதியாய் உழன்று கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  27. வாங்க சக்திபிரபா!

    ReplyDelete