Thursday, August 02, 2007

விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்களாமே?

இரண்டு பேரோ, அல்லது ஒரு குழுவோ ஒரு தலைப்பைப் பற்றி விவாதிக்கும் போது, அதில் கலந்து கொள்ளாமல், எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பதிலும் ஒரு தனி சுவை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் அவர்களுக்குள் முட்டிக்கொண்டால், கேட்கவே வேண்டாம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு அல்லவா கொண்டாட்டம்!, நாமும் பல சமயம், பின்னூட்டங்களை (பதிவைக் காட்டிலும்) மிக சுவாரஸ்யமாக படிக்கிறோமோ தவிர, நாமாக முன் வந்து பின்னூட்டம் இடுவது எப்போதாவதுதான். ஏதோமொக்கைப் பதிவுகளாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் தாராளம்! :-)

தலைப்பு என்னவோ இருக்கேன்னு பார்க்கறீங்களா, மேட்டருக்கு வரேன்!

இன்றைக்கு அட்லாண்டா ஜாவா பயனர் மின்மடல் குழுமத்தில் ஒரு புது மடல் வந்திருந்தது - "விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்க" என்ற தலைப்பில்!. ப்ரெயின் என்ற பெயர் கொண்ட அவர், இந்தியாவில் இருந்து, விப்ரோ ஜாவா ப்ரோக்ராமர்களை இங்கே கொண்டு வந்தால், தங்கள் வேலைக்கு உலை என்ற ரீதியில் எழுதி, தாங்கள் மகாண Congress உறுப்பினருக்கு மின்மடலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், மற்ற உறுப்பினர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் வலியுருத்தி இருந்தார்.

அவரது மடலுக்கு முதல் பதில் - எதிர்பாகவே வந்தது. (இதுவே நம்ம ஊராக இருந்தால் அடுத்த நிமிடமே ஆயிரம் பேர் கும்மி அடிச்சி இருப்பாங்க!)
இருக்கட்டும், டீன் என்ற பெயர் கொண்ட அவரோ, "ப்ரெயின், உலகச் சந்தையில் உங்களால் போட்டியிட முடியாவிட்டால் ஒதுங்கி வேறு வேலை பார்க்கலாமே" என்று சொல்லி விட்டு, "எதனால் எதிர்க்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லாமே" என்று கேட்டிருந்தார்.

ப்ரெயின் தன் பதிலில்: "காரணம் பல உண்டு - எனினும் அவற்றில் பெரிதானது - திடீரென அட்லாண்டாவில் நூற்றுக்கணக்கான ஜாவா ப்ரோக்ராமர்கள் வந்திறங்கினால் - வேலைகளெல்லாம் அவர்களுக்கு போய் விடும்"

இதற்கு டீன் பதில் சொல்வதற்கு முன்னால், ஜான் என்பவர் முந்திக் கொண்டு சொல்கிறார்: "உங்கள் பயம் தேவையற்றது. அவர்கள் அதிகமாக இங்கு வந்தால் - நம் ஊரில் ஜாவா வில் நிறைய வேலைகள் முடிவடையும், அதே போல் புதிய வேலைத் தேவைகளும் பல மடங்கு நம்மைத் தேடி வரும். அதனால் எல்லோருக்குமே நல்லதுதான். அவர்களுக்கு கிடைக்கும் அதிக வருமானம் போல நமக்கும் கிடைக்கும்" என்றாரே பார்க்கலாம்!. தொடர்ந்து டீன் அடுத்த மடலில் "சரியாக சொன்னீர்கள்!. அவர்கள் அதிகமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏற்றாற்போல் அதிக வேலைகளும் செய்கிறார்கள்" என்றார்!.

இவர்கள் இப்படிச் சொன்னதுதான் போதும் - இந்த மூன்று மடல்களைத் தொடர்ந்து, வெள்ளமாக தொடர்ந்து மடல்கள் பலரிடம் இருந்த்தும்! அவற்றில் சுவராஸ்யமான சிலவற்றில் இருந்து: (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்! ;-))

வாசு(அ)வசு என்ற இந்தியர்: "நான் இந்தியன் என்றாலும், இங்கேயே தங்கி விட்டேன். இது போன்று H1-இல் வருபவர்களுக்கு குறைந்த சம்பளமே தரப்படுகிறது. அவர்களுக்கு தரப்படும் சம்பளம், இங்குள்ள அமெரிக்கர்களுக்கு தந்தால், அதை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது. அதானால், அவர்களை வைத்துக் கொண்டே காலம் தள்ளி விடுவார்கள் - நமக்கெல்லாம் ஒன்றும் மிஞ்சாது. ஆதாலால், இதனை எதிர்க்கவேண்டும்" என்ற ரீதியில் Same-side Goal போட்டார். அல்லது அந்தப் பக்கம் சென்று விட்டார்!

அலெக்ஸ்: "வாசு/வசு, நீங்கள் சொல்வது புரிகிறது. எனக்குத் தெரிந்த இந்திய நண்பர்களும் இப்படித்தான். அவர்கள் குடும்பம் இங்கே இல்லாததால், அவர்களால் நிறைய சேமிக்க முடிகிறது. அவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கிக் கொண்டு பணத்தை மிச்சம் செய்கிறார்கள். மேலும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களோ, அவர்களுக்கு சேர வேண்டியதில் கணிசமானதை பிடுங்கிக் கொள்கிறார்கள்."

ஸ்காட்: நாம் அவர்களை வரவேற்கிறோமோ, இல்லையோ, அவர்கள் வரத்தான் போகிறார்கள். நம்மைக் காட்டிலும் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்பவர்கள், உலகத்தின் பல பகுதிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் அரசாங்கத்தை பின்வாங்கச் சொல்வதோ, தடுக்கச் சொல்வதோ - சிறுபிள்ளைத் தனமாகத்தான் உள்ளது."

ஜஸ்டின்: இந்தியாவிலும் இப்போது விலைவாசி கிடுகிடுவென உயரத் துவங்கி விட்டது. ஒவ்வொரு நாளும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான விலையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதே, இந்தியாவை அடுத்து மற்ற நாடுகளில் எங்கு ஆட்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார்கள். உலகச் சந்தை நம் தலைக்கு மேல், நாம் அதனை புறந்தள்ள முடியாது!"

பர் சட்டர்: விப்ரோவிற்கு அக்சென்சர், யுனிசிஸ், ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் தான் போட்டி. நம்மைப்போல சிறிய நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!

மார்டி: விப்ரோ அட்லாண்டா வருவதை தடை செய்தால், அவர்கள் வேறு ஊருக்கு செல்லப் போகிறார்கள், அதனால் நமக்கு கொஞ்சம் நஞ்சம் கிடைக்கக்கூடிய வேலையும் கிடைக்காமல் போய்விடும். ஜாவா டெவலப்பாராக இருப்பது எதிர்காலத்திற்கு நல்லதாகப் படவில்லை. விரைவில் நாம் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு பிடிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் பிழைக்க முடியும்!

டீன்: "உலகம் தட்டையானது" என்ற இந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். விப்ரோ இங்கு வருகிறதா, அல்லது கலிஃபோர்நியா விற்கு செல்கிறதா என்பது ஒரு பொருட்டல்ல. நாம் தான் அவர்களுடன் போட்டி போட்டு எப்படி வெல்வது என்ற கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.

பில்: ஆமாம் நண்பர்களே, தயாராகுங்கள்.
1) உங்கள் துறையில் சிறந்த விற்பன்னர் ஆக வேண்டும். பல ஓபன் சோர்ஸ் மென்பொருட்களை அறிந்திருப்பதோடு, அவற்றை ஒருங்கிணைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
2) AJAX போன்ற Web 2.0 தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளவும்.
3) உங்கள் காலில் நிற்க கற்றுக் கொள்ளவும் - நீங்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு அப்பால் அல்ல.
4) பொதுவாக - ஒரு தொழிலுக்கு, என்ன மென்பொருள் தீர்வு என்பதை அதிகமாக தெரிந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மட்டும் போதாது.
5) இந்தியாவுக்கு (அல்லது சீனா அல்லது ரஷ்யா) எப்படி வேலைகளை அனுப்பி சாதித்துக் கொள்ளலாம் என்பதில் விரிவுரியாளரவது எப்படி என்று கூட பார்க்கலாம் :-) ஆனால், அது எனக்கு சரிப்படாது!

கீத்: அடப்பாவிகளா, H-1 மற்றும் L-1 நபர்கள் இங்கு வருவதால் என்ன பாதிப்பு என்று உங்களுக்கு புரியவே இல்லையே? இந்தியாவின் 'NASCOM' என்ற அமைப்பு சொல்கிறது - நாம் அங்கிருந்து ஒரு மில்லியன் மென்பொருளாளர்கள் இங்கு வருவதை தடை செய்கிறோமாம்! ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள், இங்கு ஏற்கனவே இருப்பவர்களின் எண்ணிக்கை 600,000!

(பதில் மடல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, முடியவில்லை!)

4 comments:

  1. Anonymous9:59 AM

    ஜீவா,
    படிக்க சுவையாக இருந்தது!
    அமெரிக்கர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவியது....
    வித்யாசமாகவும், வியப்பாகவும் இருந்தது.
    சிரமம் பார்க்காமல், அழகாக மொழி பெயர்த்ததற்கு ஆயிரம் நன்றிகள்!

    ReplyDelete
  2. வாங்க ராஜா,
    பதிவிலேயே சொன்னது போல,
    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், அவ்வளவே!

    ReplyDelete
  3. ஜீவா,
    விவாதத்திற்கு நிலைக்களான சப்ஜெக்ட்டையும், அந்த விவாதத்தின்
    போக்கையும், அது புலப்படுத்தும்
    அவரவர் மனப்போக்கையும் படித்துத்
    திகைத்தேன்.
    திரு. ராஜா குறிப்பிட்டிருந்தபடி, உங்களின் பல வேலைகளுக்கிடைய
    சிரமம் பார்க்காமல், அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்களே.. இதைப் பார்க்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் உருப்படியாக இது மாதிரி செய்யக்கூடிய வேலைகள் ஓராயிரம் இருக்கின்றன என்கிற உணர்வுதான் ஏற்பட்டது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. //அது புலப்படுத்தும்
    அவரவர் மனப்போக்கையும் படித்துத்
    திகைத்தேன்.//

    அதே திகைப்பிலேயே, மடல்களை மொழி மாற்றி விட்டேன்!

    ReplyDelete