Friday, January 09, 2009

மார்கழி : விருத்தம் பாட வருத்தம் எதற்கு?

ன்றா இரண்டா, ஓராயிரம் விருத்தங்கள் பாடிக் கொண்டே இருக்கலாம்.
அதுவும், எழில்மலை வேங்கடவனை தீந்தமிழில் பாடிடுதல் என்பது, சொல்லில் அடங்கா சுகம் தருவது...
சமீபத்துல, அரங்கனா, வேங்கடவனா, என்றெல்லாம் இங்கே கேட்டாங்க. வேங்கடரங்கன் அப்படீன்னும் சொன்னாங்க.
"அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன், விரை
யார் பொழில் "வேங்கடவன்",
நிமலன் நிர்மலன் நீதி வானவன்,
நீள்மதில் "அரங்கத்து அம்மான்"
என திருப்பணாழ்வார் பாசுரத்தை எடுத்து விட்டு, அரங்கநாதனை பார்கையில், முதல்லே, வேங்கடவனும், அடுத்து, அரங்கனும் தெரியறாங்கன்னு சொன்னாங்க.
ஒருவேளே, எழுந்து நின்றால் முழுதும், எழில் பொழில் நிறை மலையான், ஏழுமலையானாய்த் தெரிவானோ!
வேங்கடவன், அவன் அலர்மேல் மங்கை மனாளன், அம்புஜ நாபன்,
தயா கரன், மலைமேல் உறைபவன், பாற்கடல் மேல் துயில்பவன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மன்னன் குலசேகரன் 8ஆம் நூற்றாண்டில், சேர நாட்டு மன்னன். வேங்கடவன் மீதும், அரங்கன் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். குலசேகரப்பெருமாள் என ஆழ்வார்களில் ஒருவனானவர். 'இராகவனே தாலேலோ', என தாலாட்டுப் பாடல்களை பாடியவர். திவ்யப் பிரபந்தத்தில், இவரது, 105 பாசுரங்களுக்கு, 'பெருமாள் திருமொழி' எனப்பெயர். அவற்றுள், 11 பாசுரங்கள், வேங்கடாசலன் மீது இயற்றப்பட்டவை. அவற்றில் மூன்றினை இங்கே பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவத்தில், ரஞ்சனி&காயத்ரி அவர்கள் இப்படித் தான் அழகான ஆழ்வார் பாசுரங்களைப் பாடி நம் மனதை உருக்கினர். இங்கே நீங்களும் கேளுங்கள்:

குலசேகரப் பெருமாள் திருமொழி (நாலயிர திவ்யப் பிரபந்தம்)

பி.கு: பாசுர விருத்தம் முடிந்த பின், 'ஸ்ரீநிவாச திருவேங்கட முடையான்...' எனும் பாபநாசம் சிவன் பாடல் தொடங்குகிறது. அப்பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.

பாசுரம் 1:
இராகம் : ஷண்முகப்பிரியா
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!


பி.கு: இந்தப் பாடலை, அமரர் கல்கி அவர்கள், மிகவும் பொருத்தமாக பொன்னியின் செல்வனின் பயன்படுத்தி இருப்பார். தன்னைப் பார்த்து, பரிகாசம் செய்யும், ஆழ்வார்க்கடியனிடம், பூங்குழலி "மண்ணரசு வேண்டேன்" எனச் சொல்ல, உடனே "ஆகா, நல்ல தீர்மானம் செய்தீர்கள்" எனச் சொல்லி, இந்தப் பாசுரத்தை பாடிக் காட்டுவார், ஆழ்வார்க்கடியான்!

பாசுரம் 2:
இராகம் : மோகனம்
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே.

பாசுரம் 3:
இராகம் : ஹம்சாநந்தி
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

எளிதான இப்பாசுரங்களுக்கு பொருள் சொல்ல வேண்டியிருக்காது. எனினும் இனிதானதை எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம் அல்லவா. கூடலார் குமரன் பதிவில் படித்து மகிழவும்!

மேலே ரஞ்சனி&காயத்ரி பாடுவது தான் உருக்கம் என்றால், இங்கு அருணா சாய்ராம் அவர்கள் பாடுவதை என்னவென்று சொல்வது? சொல்ல வார்த்தைகள் இல்லை. சே, இந்த பதிவு எழுதறதை விட, 'சும்மா' இருக்கலாம்! விருத்தம் பாடி முடித்தபின்: மீனாய்ப் பிறந்தாலும், படியாய்க் கிடந்தாலும், குலசேகரன் படியாய் உன் பவள வாயை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான் - மீனாய்ப் பிறந்தாலும், படியாய் கிடந்தாலும், குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா...' அடுத்த கிருதியினை தொடங்கிய விதமும் அருமை!

14 comments:

  1. ஆகா ஆழ்வார்க்கடியான். நல்ல நினைவுகளை கிளரிவிட்டீர்கள்!

    ReplyDelete
  2. வாங்க திவாய்யா,
    சின்ன வயதில், பொன்னியின் செல்வனை படிக்கையில், அடிக்கடி அவர் பாடல்களை பாடும்போது - வியப்பாக இருக்கும்!
    இப்போது அவற்றின் அருமை புரிகிறது!

    ReplyDelete
  3. தேனார்ப்பூஞ்சோலையில் ஒரு
    மீனாய்ப் பிறந்தாலும்,
    எம்பெருமான் மலைமேல் ஒரு
    தம்பகமாய்ப் பிறந்தாலும்
    அடியார் தினம் மிதிக்கும்
    படியாய்ப்பிறந்தாலுன் பவளவாய் கண்டாலும்
    குறையென்ன ? நிறையே ! இருந்தாலும்
    இறைவா ! நின்னிசையை
    இடையறாது பாடி மகிழ்
    சீவாவின் சீடனாகச் செய்.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    அவனிசைதனை இடைவிடாது இசைத்திடல் தவிர

    வேறென்ன வேண்டும். ஜன்ம சாபல்யம் பெற்றிட

    வேறென்ன வேண்டும்.
    பெரியவர்களின் ஆசிகளில்,
    இவன் அன்பு செய்யும் சீவன்.

    ReplyDelete
  5. ஸ்ரீனிவாசத் திருவேங்கடமுடையான் எப்ப வருவார் ?

    சுப்பு ரத்தினம்.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  6. அவர் அனுக்கிரஹம் செய்தால், அடுத்த இடுகையில் அனேகமாக...!

    ReplyDelete
  7. இரண்டு பகுதிகளையும் கேட்டு மகிழ்ந்தேன் ஜீவா. மிக்க நன்றி. தொடர்ந்து அடுத்த பகுதிகளையும் தாருங்கள்.

    ReplyDelete
  8. வாருங்கள் குமரன், தங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. //என்றெல்லாம் இங்கே கேட்டாங்க//
    //முதல்லே, வேங்கடவனும், அடுத்து, அரங்கனும் தெரியறாங்கன்னு சொன்னாங்க//

    என்ன ஜீவா இது? இம்புட்டு மரியாதை எல்லாம் தேவையா ஒரு பொடியன் அடியேன் பொடி அடியேனுக்கு? :)
    பேரைச் சொல்லியே திட்டலாம், குட்டலாம்! :))

    அருணா சாய்ராமின் லயித்த கூக்குரல் இந்தப் பாசுரங்களுக்கு மிகவும் வளம் சேர்க்கிறது!

    எம்பெருமானே,
    உன் கோயிலின் வாசலிலே...
    படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
    எம்பெருமான் பொன்மலை மேல் "ஏதேனும்" ஆவேனே!

    ReplyDelete
  10. //பேரைச் சொல்லியே திட்டலாம், குட்டலாம்! :))//
    இது வஞ்சகப் புகழ்ச்சி, KRS!

    ReplyDelete
  11. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    இது வஞ்சகப் புகழ்ச்சி, KRS!//

    ஆகா
    புகழ்வது போல் இகழ்ந்தீங்களா?
    இகழ்வது போல் புகழ்ந்தீங்களா?

    :)))))

    ReplyDelete
  12. இகழ்ந்தது போல எனக்குத் தெரியலை, ஒருவேளை அப்படித் தோன்றியதோ!

    ReplyDelete
  13. Can u please upload the video of aruna sairam kurai ondrum illai beginning with the virtham chediyaya val vinaigal .............padiyai kidandhalum.
    my e-mail id is kuvathe@gmail.com

    ReplyDelete
  14. can u please upload the kurai ondrum illai beginning with the virutham by aruna sai ram.

    Thanks.

    ReplyDelete