இந்தப் பகுதியில் ஒரு அருமையான பாடலை பார்க்கப்போகிறோம். இப்பாடலை வஞ்சகப் புகழ்ச்சி அல்லது 'தூற்றுமறைத் துதி' (நிந்தாஸ்துதி) என்கிற வகையில் சொல்லலாம். அதாவது, தூற்றுவது போல போற்றும் பாடல். சமீபத்தில் தான், வஞ்சகப் புகழ்ச்சி அணியினை, அகரம்.அமுதா அவர்கள், காளமேகப் புலவரின் கவியினைக் கொண்டு
வெண்பா வகுப்பினில் விளக்கி இருந்தார்.
தில்லையில் ஆனந்த நடம் ஆடும் ஈசன், கூத்தன், விரிசடை விண்ணவன், எப்போதும் ஒரு காலைத் தூக்கி நின்றாடுகிறான் அல்லவா! எதனால்? அவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடுவதன் மறைபொருள் ஒருபுறம் இருக்க, அவன் காலைத் தூக்கி நிற்பதால், அவன் முடமாகி நிற்கிறானோ, என்பதுபோல பலவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார் பாடலாசிரியர் இப்பாடலில். கவி காளமேகப் புலவரின் இந்த வெண்பா போல:
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?
சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாங்க, இவிங்க குடும்பமே நோய்வாய்ப்பட்ட குடும்பம் போல! இவிங்க நோய்களையே தீர்த்துக்கக் காணும், எங்கே நம்ப வினையை தீர்க்கறது?!!!
வாதம் - சீதம் என வருகிற மாதிரி, ஒரு நீண்ட பாடலே இயற்றி இருக்காரு, பாபவிநாசம் முதலியார் அவர்கள். இவர், நிறைய தமிழ்ப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இவர் இயற்றிய பெரும்பாலுமான பாடல்கள், இந்த வகையைச் சார்ந்த இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பாடலில் பாருங்கள் எப்படி அருமையா எதுகை அமைச்சிருக்காரு! :
நடம் - முடம் - திடம் - சடைஎடுப்பும், தொடுப்பும் என்னமா துடிக்குது!
இராகம் : காம்போதி
இயற்றியவர் : பாபவிநாச முதலியார் (1650-1725)
எடுப்புநடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!தொடுப்புதிடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்தசடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய(நடமாடித்..)
முடிப்பு1. திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழஉதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று(நடமாடித்..)
2. தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழசந்திலே முடி பிசகி நொந்ததுவோ?இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்முள்ளேறுண்டதோ சொல்லும்? - முறிந்ததுவோ?கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்ககண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று(நடமாடித்..)
3. பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றேதரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?(நடமாடித்..)
இந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடிடக் கேட்கலாம். அவர் முடிப்பில் முதல் சரணத்தை மட்டுமே பாடுகிறார். சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் இடம் பெறுவதில்லை. மேலும், சில புத்தகங்களில், இப்பாடல், கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டதென தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.
பாடலைக் கேட்டவாறு, அதன் பொருளை மேயலாமா?
நடம் - நடனம் ஆடித் திரியும்இதர கவிகளால், இப்படியெல்லாம், சிவன் நடம் ஆடுவதைப் பாடிவார்:
*
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை, அம்பலம் தன்னில் ஆனந்த நடம் ஆடுவார் தில்லை (நீலகண்ட சிவன் : பூர்வி கல்யாணி)
*
ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)
*
நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே, கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (கோபால கிருஷ்ண பாரதி : வசந்தா)
*
ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ (முத்துத்தாண்டவர் : மாயமாளவகௌளை)
இடதுகால் முடம் :இடதுகாலைத் தூக்கி நிற்பதால், இவருக்கு கால் முடமோ?, இவரால் காலை ஊன்றி நிற்க இயலாததன் காரணம் என்னவோ என வினவுகிறார்!
இதர கவிகள் இப்படியெல்லாம் 'காலை தூக்கி நின்றாடுவதை' பாடுவார்கள்:
*
இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே, நெஞ்சே (பாபநாசம் சிவன் - கமாஸ்)
*
காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே, எனை கைதூக்கி ஆள் தெய்வமே! (மாரிமுத்தாப்பிள்ளை - காம்போதி)
இவரோ, இடது கால் தூக்கி நிற்பதை 'முடம்' என்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரமாம் 'நமசிவாய' தனில் தொடக்கமாம் 'ந' வெனும் எழுத்தும், உனைப்போல் தூக்கிய காலுடன் நிற்பதுவே!
திடமேவும் தில்லை நகர்தில்லைத் தலம் என்று சொல்லத் தொடங்கினால், இல்லை பிறவி, பிணியும் பாவமும்! (கோபாலகிருஷ்ண பாரதி - சாமா)
அப்படிப்பட்ட தில்லைநகரில், "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்", சடைதனை விரித்த வண்ணம், பேரானந்தம் தரும் சத்-சித்-ஆனந்தம். எங்கெங்கும், எல்லாமுமாய் ஆகாசத்தில் பரந்து விரிந்து நிறைந்திருக்கும் பரப்பிரம்மம்.
சீதமும் வாதமும்சுடலைப்பொடி பூசும், உள்ளம் கவர் கள்வனே, திரு-நீறை உடலில் பூசியதால், சீதமாகியதோ, அதனால், வாத குணமும் வந்து, இடது காலைக் கீழே வைக்க இயலாமல் தவிக்கிறீரோ? நமக்கெல்லாம், திருநீறைப் பூசினால், நமது நீர் குறையும். ஆனால், இங்கே எதிர்மறையா சொல்லுகிறாரே!. ஒருவேளை, திருநீறை நாம் பூசி, நம் சீதம் குறைந்து, அதெல்லாம் அவனுக்குப் போய்விட்டதோ! ஹ ஹா!
காலனை ஒரு காலால் உதைத்த 'ஒரு-காலன்':நீரோ ஒற்றைக் காலில் ஆடுபவன்! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, உன் காலால், காலனை உதைத்க, அப்போது, உம் காலில் தான் சுளுக்கு ஏறியதோ? அதனால் தான், ஒற்றைக் காலை எப்போதும் தூக்கியவாறே நிற்கிறீரோ?
வாசல் படி இடறிற்றோ?ஈசனே, உமது 'நண்பர்' சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனைவி பரவையாரை மீண்டும் சேருவதற்காக தூது போனீரோ!. அப்படி அவசர அவசரமாக அவரது வீட்டுக்குள் நுழையும்போதுதான், பரவையாரின் வீட்டு வாசற்படித் தடுக்கி கீழே விழுந்து, அதனால் முடமாகிப் போனீரோ?
எந்தன் பாவமோ?ஒருவேளே, நான் செய்த பாவங்களால், அதனால் உனக்கு குறைவு வந்ததோ, அதனால் தான், நீர் முடமாகிப் போனீரோ?
இப்படியாக மற்ற இரண்டு சரணங்களிலும், ஒவ்வொரு கதையினைச் சொல்லி, அதில் தன் கற்பனையைப் புகுத்தி, இதனால் தான் சிவன் முடமாகிப் போனதுவோ, என்பதுபோல பாட்டினை வடிவமைத்திருக்கிறார் பாபவிநாசம் முதலியார்!
* சிவன் வேடனாக, தனஞ்செயன்(அர்ஜூனன்) உடன் போரில் நீர் அடிபட்டு விழ, அப்போது, உமது இடுப்பு எலும்பு இணைப்புகளில் வலி ஏற்பட்டு, அதனால், உம்காலைத் தூக்க இயலவில்லையோ? (சந்து: இடுப்பு; முடி:முடிச்சு:எலும்பு இணைப்புகள்; சமர்:போர்)
* தாருகா வனத்தில் பிச்சை எடுப்பவன் போல் திரிந்ததில், முள்ளும் உன்காலைத் தைத்ததுவோ?
* கனகசபை தன்னில், உமது ஆனந்த நடனம் கண்டு அதிசயத்தவர்களில் கண்பட்டுத்தான் இவ்வாறு நேரிட்டதோ?
* உன் இடது பாகத்தில் இருக்கும் சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?
* சத்தியலோக அதிபதியாம், பிரம்மனின் வேகமான தாளத்திற்கு ஏற்ப, நடமாடினீரே! அந்நடனமதில், உமக்குப் பிடித்த, அருமையான நடன முத்திரை இதுவென, ஒருகாலைத் தூக்கிக் காட்டுகிறீரோ எமக்கு!
ஏனையா, நடராஜனே, எனிப்படி ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறீர்?ஆணவம், மற்றும் மாயை ஆகியவற்றில் இருந்து விடுபட,
"இந்தா என் அருள்" என வழங்கிடும் வண்ணம்தனைக் குறிக்கத்தான், இப்படித் தூக்கிய காலுடன் நின்றீரோ, ஐயா!. பக்தி செய்பவர்களின் பாவமெல்லாம் நாசம் செய்யும், "
பரமபதம் இதுவென" உன் பாதம் தனைக் காட்டும் கருணையுள்ளம் கொண்ட பெருமானே, வந்தனம் செய்வேன் உம்மை!.
பி.கு:
* அடைப்புக்குறியில் () குறிக்கப்பட்டவை பாடலை இயற்றியவர் பெயரும், பாடலின் இராகமும்.
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் சென்னை ஆன்லைன் தளத்தில் இப்பாடலைப்பற்றி, தந்துள்ளவற்றை
இங்கே பார்க்கவும்.
* இப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தந்துதவிய திரு.ஸ்ரீநிவாசன் சபாரத்தினம், திரு.சேதுராமன் சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றிகள்.