இடம் : கைலாயம்
சக்தியும், சிவனும் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் பேசுகிறார்கள் என்று கொஞ்சம் கேட்டுப்பார்ப்போமா?
சக்தி : உலகில் ராம பக்தி என்பது பிறவிக் கடலைக் கடக்க உதவும் உன்னதக் கப்பல் என்பது அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் இராமனைப் பற்றி எனக்கு சில ஐயங்கள் உண்டு, தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும், மகேசனே!
சிவன், புன்னகைத்தவாறு: கேள், சக்தி.
சக்தி: ஸ்ரீராமன், பரமனின் உருவமாக கருதப்படுவது அனைவரும் அறிந்ததே. உலகில் பலரும், அப்படிப்பட்ட புனிதனை அல்லும் பகலும் வணங்கி, வேண்டி, உருகி, அவனே பரமனாக, அவனை அடைய முயலுகின்றனர்.
ஆனால், வேறு சிலரோ, பிரம்மா சொன்ன பின்னர்தான், இராமனுக்கே தன் பரம சொரூபம் தெரிந்தாக சொல்கின்றனர். இன்னொருவர் சொல்லி எப்படி ஒரு ஆன்மா தன் பரம சொரூபத்தினை உணர இயலும்?
எல்லா உண்மையும் அறிந்த பரமனாக இருப்பின், சீதையை ராவணன் கவர்ந்த பின் எதற்காக அழுது புலம்ப வேண்டும்?
இராமன் பரமனை அறிந்திராமல், சாதரண மானுடனாகவே வாழ்ந்ததாகக் கொண்டாலோ, எல்லோராலும் போற்றத்தக்கதாகவோ, துதிக்கத்தக்கதாகவோ ஏற்றவன் என எப்படிக் கொள்ள இயலும்?
இந்த கேள்விகளுக்கான தக்க விளக்கங்களைக் கூறி என் சந்தேகங்களை களைவீர்களாக.
(இதைக்கேட்ட நமக்கு, சரிதான், நாரதர் இல்லாமலேயே நன்றாக கலகம் நேர்கிறது என்று நினைத்துக்கொண்டு, சற்றே உற்றுக் கேட்கலானோம்... சிவன் என்னதான் விளக்கம் தரப் போகிறார் என்ற ஆவலுடன்...)
சிவன் : சக்தி, உன்னுடைய அருமையான கேள்விகளுக்கான விளக்கங்களைச் சொல்லத் துவங்குமுன், ரகுகுலத் திலகன் இராமனுக்கு என் வணக்கங்கள்.
இராமன் எல்லாவற்றிலும் மேலானவன். அவன் பிரகிருதி அல்ல. அவனில் எல்லாமே உண்டு. தூய்மையான ஆனந்தமயமானவன் அவன்.
அண்ட சராசரங்களிலும், அனைத்து உயிர்களிலும் அவன் நிறைந்திருந்தாலும்,
அவன் இருப்பதை அவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கிறான். அவித்தையினால், அவர்களும் அதை அறியாமல் இருக்கிறார்கள். தங்கள் அறியாமையினால், தங்கள் பொன்,பொருள், பந்தம் போன்ற தளைகளோடு கட்டுண்டு, தங்கள் இருதயத்திலேயே மிளிரும் ஸ்ரீராமனைக் கண்டுகொள்ளாக் குருடராய் உள்ளனர் - கழுத்தில் ஆபரணம் இருந்தும் அதை மறந்து எங்கெங்கோ தேடுபவர் போல.
நான், எனது என்கிற அகங்காரத்தின் மமதை தலைக்கேற, ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில், செயல்கள் நிகழ்வதெல்லாமும் தன்னால்தான் எனக் கொள்வர்.
இந்த அறியாமைகளுக்கு எதிரே அவன் ஒரு பார்வையாளனாகத்தான் இருக்கிறானே தவிர, அதனால் அவனுக்கு பாதிப்பேதும் கிடையாது. அறியாமையின் சக்தியான மாயையும் அவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதோ தவிர, அதனால் அவனுக்கேதும் தாழ்வோ, குறைவோ கடுகளவும் கிடையாது.
என்னில் சரிபாதி கொண்ட உமையே, இதுபற்றி மேலும் விளக்க, முன்பொரு முறை நடந்த சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறேன். இது மோட்சம் அடைதல் பற்றியானதும் கூடவாகும்.
இராவணனை வென்று, சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகமும் இனிதே நிறைவேறிய பின்னர், இராமனும் சீதையும் அரியாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது அனுமனோ, ஒரு ஓரத்தில், அமைதியாக, இருகையையும் கூப்பியவாறு, தன் கடமைகளை நிறைவேற்றிய திருப்தியில், ஆசைகள் அற்று, உயர் ஞானம் ஒன்றே வேண்டி நிற்கிறான். இதைக் கண்ட இராமனும், சீதையைப் பார்த்து,
"என் அன்பின் சீதை, நம் பிரிய அனுமனுக்கு உயர் மெய்ஞானத்தை உபதேசித்தருள்வாயாக. அகத்தில் அப்பழுக்கற்ற அன்பன் அனுமன், பக்தியில் கரை கண்டவன். ஆக, ஞான ஒளி பெற ஏற்ற தகுதிகள் அவனுக்குண்டு." என்றான்.
அன்னை சீதா பிராட்டி - உலகெங்கும் அவள் ஆன்மாவின் உண்மையான சொரூபம் பற்றியான குழப்பங்களை தீர்த்து வைப்பவள். இராம பக்தன் அனுமனுக்கு, இராமன் உண்மையில் யாரென்பதை தெள்ளத் தெளிவாக உபதேசிக்கத் துவங்கினாள்.
(வளரும்...)
---------------- அத்யாத்ம இராமயணம் - ஒரு சிறு பின் குறிப்பு ------
இந்திய இதிகாசம் வால்மீகி இராமயணத்தை தழுவி பல்வேறு இராமயணங்கள் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டன. அவற்றில் ஒன்று அத்யாத்ம இராமயணம். இந்நூல் முழுவதும் சிவன் - சக்தி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வால்மீகி, இராமனின் இறைத்தன்மையை பின்புலத்தில் வைத்து, பொதுவாக மானுடனாக, காட்டியிருப்பார். ஆனால் அத்யாத்ம இராமயணத்தில் இராமன் பரமனாகவே காட்சி தருகிறான். இந்நூல் முழுதும், காவியப் பாத்திரங்கள் மூலமாக நீளமான தத்துவப் பாடல்களும், உரைகளும் படிக்கப்படுவது, இதன் சிறப்பம்சமாகும்.
சுவேதஸ்வதார உபநிடதம் சொல்லுவதுபோல், "பக்தியில்லாமல், எவ்வளவுதான் நூல்களைத் கற்றுத் தேர்ந்தாலும், எள் அளவும் ஞானம் கிட்டாது. பக்தியால் மட்டுமே ஞானம் சித்தியாகும்." என்பதனை இராமகாதை மூலமாக ஆன்ம ஞானத்தினை போதிக்கும் காவியமாக மிளிர்கிறது. பிற்காலத்தில், துளசிதாசரின் ராமயணத்திலும், அத்யாத்ம ராமயணத்தின் ஈடுபாட்டினைப் பார்க்கலாம்.
உண்மை தான் ஜீவா. இந்த இடுகையைத் தொடக்கத்தில் இருந்து படித்துக் கொண்டு வர துளசிதாசரின் இராமசரிதமானசத்தின் முகவுரை போன்றே தோன்றியது. நீங்கள் சொன்னது போல் அத்யாத்ம இராமாயணத்தின் தாக்கம் துளசிராமாயணத்தில் மிகுந்து இருக்கின்றது என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஆம், குமரன் - இது நேரடியாகவே - இந்நூலுக்கு உரை எழுதுபவர்களால் குறிப்பிடப் படுகிறது. நான் படித்தது - இராமகிருஷ்ண இயக்கத்தின் மூதறிஞர் சுவாமி தபஸ்யானந்தா அவர்களுடையது.
ReplyDelete// "பக்தியில்லாமல், எவ்வளவுதான் நூல்களைத் கற்றுத் தேர்ந்தாலும், எள் அளவும் ஞானம் கிட்டாது. பக்தியால் மட்டுமே ஞானம் சித்தியாகும்." //
ReplyDeleteஉண்மைதான்.. அதிலும் பக்தி உள்ளார்ந்த பக்தியாக இருக்க வேண்டும். ஏதோ 1-1.30 மணிநேரம் மூக்கை/மூச்சைப் பிடித்துக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் என்று தம்பட்டமடிப்பதாக இருக்க கூடாது :)
//சஹஸ்ரநாம பாராயணம் என்று தம்பட்டமடிப்பதாக இருக்க கூடாது//
ReplyDeleteஎனக்கும் இந்த பாராயணம் செய்யும் பொறுமை இல்லாததால், உங்களோடு சேர்ந்து கொள்கிறேன் திரு.மௌலி. :-)
முன்பொருமுறை அம்மா அருகே வைத்துக்கொண்டு பாராயணம் சொல்ல வைத்தார்கள். உச்சரிப்புக் கடினத்துடன் தான் சொன்னேன்!. இருப்பினும் அவர்களுக்காக செய்கிறோமே என்கிற திருப்தி இருந்தது!
ஆனால் இப்படி பயன் தெரிந்தால் தான் செய்வேன் செயல் என்றில்லாமல் செயலை செய்வதெப்போது?
அத்யாத்ம ராமாயணம் மிகுந்த மன நிறைவை அளித்தது.
ReplyDeleteயாழினிது குழலினிது என்பர் ராம காதை கேளாதார் என்றே சொல்ல தோன்றுகிறது..