Sunday, February 17, 2008

மூன்றாம் படை வீடு, பழநி - திருப்புகழில்...

திமிர வுததி அனைய நரக

செனன மதனில், விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு

சிறிது மிடியும் அணுகாதே


அமரர் வடிவும் அதிக குலமும்

அறிவு நிறையும் வரவேநின்


அருள தருளி யெனையு மனதோடு

அடிமை கொளவும் வரவேணும்


சமர முகவெல் அசுரர் தமது

தலைகள் உருள மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை

தகர அயிலை விடுவோனே


வெம் அரவணையில் இனிது துயிலும்

விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி

விரவும் அமரர் பெருமாளே.

-------------------------------
அருஞ்சொற் பொருள்:

திமிர - இருண்ட

உததி - கடல்

சமரம் - போர்

சலதி - கடல்

பதலை - மலை

அயில் - வேல்

மிடறு - தொண்டை

-------------------------------------------------------------

பிறப்பின் தொடக்கமே இருளில் தானே, என் இறைவா,

கருவின் இருளில் தானே, இருண்ட கடலாய், இருளில் தானோ?

நிரந்தரம் இல்லா இவ்வுலகில் பிறப்பதும் நரகம் தானே?

இறைவா, இவ்வுலகம் எனக்கு நரகம் தானே?


இந்நரகம் தனில் உழலச் செய்தாலும், நீ எனைச் செய்தாலும்,

செவிடு, குருடு, ஊனம் அல்லது வறுமை,

பிறக்கும்போதே பிணித்திடும் மரபணு நோய்கள்,

என பலவும் எனை வாட்டி வருத்தாமல்,

அமரர் அழகும், நிறைந்த குலமும், அறிவின் நிறைவும்

பெற்றிட தருவாய் உனது திருவருளை.


சிறுபதரென என்னைப் புறம் தள்ளாது,

என்னையும் உன்மனதில் பொருட்படுத்தி

என்னையும் அடிமையென ஆட்கொள்ள வரவேண்டும்.


போர் முனையில், அசுரர் தலைகள் சிதறிட

அலறலில் ஓயாக் கடலலை போல் ஒலிகள் எழ,

நீண்ட மலையாக எழுந்து நின்ற அசுரனும் பொடிப்பொடியாக,

நெடிய வேலாயுதத்தினை செலுத்திய என் இறையே,


நீ யாரென என்று யாரேனும் கேட்டால் நான் இவ்வாறு சொல்வேன்:

அரவணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் மருகனும்

கருநீலகண்டம் கொண்ட சிவனாரின் குமாரனுமான

பழனி மலையில் தண்டம் தனைத் தரித்து

அமரர்கள் அருகில் வந்து தொழுதிடும் குமரன் என்று.

18 comments:

  1. இந்தக் கிழவன்
    கால் கடுக்க‌ காலைமுதல்
    கலங்கியே வாடி நின்றான் = அவன்
    ஒலி கேட்டும் கலி தீர்க்க எவருமில்லை.

    "பழனியப்பா ! பழம் நீ அப்பா !"
    கிழவி மனமுருகி பாடிய அப்பாடல் கேட்க‌
    சட் என நிற்கின்றான். தன்
    தட் டை நீட்டுகின்றான்.

    'தஞ்சம் எனக் கெஞ்சுகிறேன், பட்டினியால் வாடுகிறேன்.
    பஞ்சாய் அடைககும் என் செவிகளுக்கு
    பழஞ்சோறு இருந்தால் போதும், பசிக்கு அது அமிர்தம் என்பான்.'
    பழனிக்கு வ ந்தவன் பட்டினியாய்த்திரும்புவதோ !
    பெற்றிடும் நீர் தாகம் தீரும்
    பருகும் இதை, பசி தீரும் என்றார்.
    புலவர் அவர், உள்ளத்தில் வள்ளல் அவர்.


    அது பஞ்சாமிர்தம்.
    அது ஜீவாவின் வீடு.

    சுப்புரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullaValaipathivugal.blogspot.com

    ReplyDelete
  2. வீட்டுக்கு வந்தார்க்கு வேறென்ன சொல்வேன்,
    வரவுக்கு நன்றி!
    பசி ஆற்றுவான், பழனியப்பன் என்னும்
    தங்கள் வாக்கைக் கேட்கும்போதே
    எனக்கும் கிட்டியது பஞ்சாமிர்தம்.

    ReplyDelete
  3. pasi adangi panchamirtham thinra kizhavan nanri sollum vagaiyil oru thirupugazh padukiran..kezhungal
    asaveri thirupugazh vijay siva

    http://www.musicindiaonline.com/p/x/VUQ2cJy5S9.As1NMvHdW/?done_detect

    subbu rathinam
    thanjai

    ReplyDelete
  4. மிக எளிய திருப்புகழ். உததி என்னும் சொல் தெரிந்தாலே பாடல் விளங்கிவிடும்.

    திமிரும் கடல் போல நரகப் பிறப்பில் விடுவாயேல்....

    இந்தப் பிறப்புக்கு எல்லாரும் கடலைத்தான் சொல்வாங்க. ஏன்னா...அதுல விழுந்தா வெளிய வர எவ்வளவு தத்தளிச்சாலும் உள்ளதான் இழுக்கும். உள்ள போயிட்டா அவ்ளோதான். அதே மாதிரி உள்ளே வெளியேயும் ரொம்ப நேரம் விளையாட முடியாது. அப்படிப் பட்ட சூழலில் நம்மைக் காப்பாற்ற இறைவனே துணை. அதான் அருணகிரி முருகனிடம் வேண்டுகிறான்.

    வடிவு, குறைவின்மை..இப்பிடியெல்லாம் கேட்டுட்டு...அருளதருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேண்டும். :) மொதல்ல எல்லாம் வரும். ஆனா மனதோடு அடிமை கொளல் வந்துருச்சுன்னா மொதல்ல வந்த அத்தனையும் போயிரும். அதான் அப்படிக் கேட்டிருக்காரு.

    ReplyDelete
  5. 'அபகார நிந்தை' பாடலை வழங்கியதற்கு நன்றி சூரி ஐயா. இதற்கு முன் இந்தப் பாடலைக் கேட்டதில்லை.
    'உபதேச மந்திரப் பொருளை...' என்று வரும் இடத்தில் அப்பன் சுவாமிநாதனைப் பாடுகிறாரோ என நினைத்தேன்.
    பின்னர்தான் தவமாலை ஏந்தி நிற்கும் ஆண்டி

    ஆவினங்குடிப் பெருமானைத் தான் பாடுகிறார் அருணகிரியார் என அறிந்தேன்.
    பழநி தலப் பதிவில் இன்னொமொரு திருப்புகழினை ஒலித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ஆகா, மன்றங்களிலும் குழுமங்களிலும் முருகுத்தமிழ் வளர்த்த பெம்மான் இப்போது இங்கே, என் ஆனந்தத்தினை என்னென்று சொல்ல. (குமரனும் இதைப் பார்த்தால் மகிழ்வார்)

    இங்கேயும் ரொம்ப நல்ல சொல்லி இருக்கீங்க ஜிரா.

    குறைவேதும் இல்லாமலே இப்பிறவி தந்தென்னை

    ஏங்க விட்டு, பின் அகல நின்று வேடிக்கைக்
    காட்டும் அவனைக் கடிந்து அழைக்காமல்,
    தணிந்தே தணிகாசலம் அருள்வாய் என்கிறார்!

    ReplyDelete
  7. நல்ல திருப்புகழ்....நன்றி ஜிவா....

    ReplyDelete
  8. இந்தத் திருப்புகழைச் சிறுவயதில் படித்ததாக நினைவிருக்கிறது ஜீவா. நன்கு பொருள் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. அப்படியா குமரன், மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. பொருளை நீட்டி முழக்காமல் வரிக்கு வரிப் பொருளாக நன்கு சொல்லி இருக்கீங்க ஜீவா! அருமையான பழனித் திருப்புகழ்! அதிலும் ஆவினன்குடி என்னும் சிறப்புப் பெயர் கொண்டு முடிக்காது, பழனி என்று புழங்கும் பெயர் கொண்டே முடிக்கும் ஒரு சில புகழில் இதுவும் ஒன்று!

    //திமிர வுததி அனைய நரக//

    உததி = முதலில் இந்தக் கடலைக் காட்டி, இதில் வீழாது அருள் புரிய வேண்டினார்!

    //சலதி யலற நெடிய பதலை//

    சலதி = இப்போது சொன்ன கடலையே அலற வைத்தவன், முன்பு சொன்ன கடலையும் வீழ்த்தி, அதில் இருந்து என்னைக் காத்திடவும் தான் மாட்டானா என்று நம்பிக்கையும் ஊட்டுகிறார் பாருங்கள்!

    ReplyDelete
  11. ஆமாம் KRS, பலருக்கு பழனிதான் ஆவினங்குடி எனத் தெரியாது - அவர்களுக்கு நேரடியாகவும் இந்தப் புகழ், பழனியப்பன் புகழை உரைக்கும்.

    மேலும், இரண்டு கடல்களையும் அழகாக இணைத்துக் கூறியதும் அருமை!
    இந்த இரண்டு கடலும் வெவ்வேறு என்பதற்க்காகவோ, அங்கே உததி என்கிறார், இங்கே சலதி என்கிறார். அனேகமாக, அனைத்து தமிழ்ச்சொல்லுக்கும் மூன்றெழுத்தில் இவருக்கு ஒரு மாற்றுச்சொல் தெரிந்திருக்கும் போலும்! வாழ்க அருணகிரியார் புகழ்!

    ReplyDelete
  12. reading your various blog site, I wonder where I stand? you people are way ahead in creating / thinking / reviewing out of the box / out of the world issues / matter. U R GREAT, i dont have anything words to say...

    ReplyDelete
  13. Thanks for the compliments delhi_tamilan!

    ReplyDelete
  14. மனமுருக வைக்கும் திருப்புகழுக்கு, ரவி சொன்னது போல் 'நீட்டி முழக்காமல்[!!!] எளிமையான விளக்கம் தந்து இன்புறச் செய்திருக்கிறீர்கள்!

    மிக்க நன்றி திரு. ஜீவா!

    ReplyDelete
  15. வாங்க வி.எஸ்.கே சார்,
    எளிமையானதுதான், ஆனால் திருப்புகழில் மறைந்திருக்கும் மறைபொருள் அடியேன் அவ்வளவாக அறியேன். அதனால்தான் இந்தச் சுருக்கம்!
    விளக்கமாக, சம்பந்தப்பட்டவற்றையும் சேர்த்துச் சொல்வதும் நல்லதுதான். - இதை ரவியும் மடலில் சொல்லி இருந்தார்!

    ReplyDelete
  16. தொடர் ஊக்கத்திற்கு நன்றி மதுரையம்பதி.

    ReplyDelete
  17. //அருள தருளி யெனையு மனதோடு

    அடிமை கொளவும் வரவேணும//
    எங்கே ?
    மஹாராஜபுரம் ரேவதியில்
    உன்னிகிருஷ்ணன் ரேவதியில்
    பாம்பே ஜெயஸ்ரீ ரேவதியில்
    எம்.எஸ்.அம்மா ரேவதியில்
    ந்யூ ஜெர்சீயில் இளைஞர் இருவர் ரேவதியில்
    என்னது எல்லாருமே ரேவதி நக்ஷத்திரமா?
    இல்லை. ரேவதி ராகத்தில் பாடுகிறார்கள்.
    எங்கே.. அங்கே
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  18. இங்கும் பார்க்கவும் http://thiruppugazhamirutham.blogspot.com/2012/09/80.html
    https://thiruppugazhamirutham.shutterfly.com/meanings

    ReplyDelete