Saturday, January 06, 2007

2006 டாப் டென் தமிழ்த்திரைப்பாடல்கள்

2006 அதற்குள் நிறைவடைந்து விட்டது. தமிழ்த் திரை இசையில் சொல்லிக் கொள்ளும்படியாக ஏதும் சிறப்பான பாடல்கள் வருவதற்கு முன்பாகவே 2006 சொல்லாமலே சொன்றுவிட்டது.

2006 இல் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் மற்றும் ஹேரிஸ் ஜெயராஜ் ஆகியோரிடமிருந்து தலா இரண்டே படங்கள்தான். யுவன் சங்கர் ராஜா, டி. இமாம் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களாக வலம் வரும் கனவில் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளனர். வித்யாசாகர், பரத்வாஜ், ஜோஷ் ஸ்ரீதர், ரமேஷ் விநாயகம், கார்த்திக் ராஜா ஆகியோர் ஏனைய இசையமைப்பாளர்கள். தரண்(பாரிஜாதம்), ஜீ.வி. பிரகாஷ்(வெயில்), சுந்தர் சி.பாபு (சித்திரம் பேசுதடி), பால் ஜே போன்ற புதியவர்களின் வரவையும் இந்த வருடம் கண்டது.

2005 ஆம் ஆண்டைப்போலவே, இந்த வருடமும் பார்முலா படங்களில் கானா பாடல் கண்டிப்பாக திணிக்கப்படுவது தொடர்ந்தது. அவற்றில் சில ஹிட்டாகவும் செய்தது!. சில இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் பாடல்களை முயற்சித்துள்ளார்கள். ரீமிக்ஸ் பாடல்கள் இதுவரை தனி ஆல்பங்களாக மட்டும் வெளிவந்தது, இப்போது வெள்ளித் திரையிலும்! வழக்கமாக பாடல்கள் வெளிவரும்போது பாடல்களை கேட்டு, பிடித்த பாடல்களை தரவிறக்கம் செய்து சி.டி யில் சேமித்து வைப்பது வழக்கம். 2000 ஆம் ஆண்டில் இந்த பழக்கத்தை தொடங்கியபோது, முதல் இரண்டு ஆண்டுகளின் வருடத்திற்கு 6 சி.டி என கருக்குவதுண்டு (burn CD!). இப்போது கழுதை தேய்ந்து கட்டெரும்பாய் ஆகி விட்டது. சென்ற வருடக் கருக்கல் கணக்கு - 2. இந்த வருடம் அதுவும்போய் - ஒன்றே ஒன்று. இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று இப்போது வரும் பாடல்கள் ஏதும் நல்ல பாடல்களாக இல்லாமல் இருக்கலாம். அல்லது இப்போது வரும் பாடல்கள் என்னுடைய ரசனைக்கு ஒவ்வாதவையாய் இருக்கலாம். For the sake of the Benefit of the doubt, Let's assume the later!. இந்த வருடம் சிறப்பானதொரு பட ஆல்பம் வராமைக்கு இன்னொரு காரணம், சிறப்பானதொரு திரைப்படமோ/இயக்குனரோ இல்லாமையும் சொல்லலாம். We miss you Manirathnam!

இவ்வளவு முன்னுரை போதும், பதிவின் கருவிற்கு நகர்வோம். இது என் ரசனையில் 2006 இன் டாப் டென் பாடல்கள். இதில் கானா பாடல்கள் ஏதும் இருக்காது, அவற்றை ஹிட்லிஸ்டில் தேடவும், என் லிஸ்டில் அல்ல. பாடலின் இசை மட்டுமே இங்கு முக்கியாமாக கணக்கில் கொண்டுள்ளேன், பாடலின் ஒளிப்பதிவை அல்ல.

* முன்பே வா என் அன்பே வா (ஷ்ரேயா கோஷல், நரேஷ்) / சில்லென்று ஒரு காதல் / ஏ.ஆர்.ரஹ்மான்

துவக்கத்தில் வரும் கிடார் முன்னீடு மனதை கொள்ளைபோகச் செய்யும், அப்புறம் என்ன ஷ்ரேயா கோஷலின் உச்சரிப்பு எப்படி இருந்தால் என்ன! ஆனாலும் அவர் நன்றாக பாடியுள்ளார். 'ரங்கோலி ரங்கோலி' என்று ஒரு கோலாட்டத்தின் கலப்பும் உள்ளது. நரேஷ் குரலும் இனிமை. பாடல் வரிகளில் புதுமை ஏதும் இல்லாவிட்டாலும், இசையின் அழகான வரிசைகளில் கார்த்திகை தீபமாய் மின்னுகிறது இந்த பாடல். இரண்டாவது இடையூட்டில் வரும் பியானோ/வயலின் பாடலோடு இரண்டற கலந்துபோவதும் அழகு. பின்னணியில் வரும் ஹம்மிங் பாடலுக்கு மேலும் மெருகேற்றுகிறது.

* மஞ்சள் வெயில் (ஹரிஹரன், நகுல், விஜய்) / வேட்டையாடு விளையாடு / ஹேரிஸ் ஜெயராஜ்

ஹேரிஸ் ஜெயராஜின் வழக்கமான துள்ளல் ரிதம் நிறைந்த பாடல். எளிதான ட்யூனாக இருந்தாலும் ஹரிஹரனின் குரல் பாடலை எங்கேயோ கொண்டு செல்கிறது!. பாடலில் சரணத்திற்கு பின் பல்லவியை திருப்பிப்பாடும்போது முதன்மை பாடகர் (lead vocalist) பாடாமல் கோரஸாக (நகுல், விஜய்) பாடுவது வித்யாசம் தருகிறது. இரண்டாவது இடையூட்டில் ஹெவி மெட்டல் ஒலிகளைத்தொடர்ந்து சேக்ஸ் வாசிப்பது, மிருதுவாக இதமளிக்கிறது. கடைசியில் 'ஹூஹூ' என்ற குரலோடு இசைப்பதும் நன்று.

இதே படத்தில் இன்னொரு பாடல் "பார்த்த முதல் நாளே". இந்த பாடலும் அழகான மெலடி - உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ சிறப்பாக செய்துள்ளார்கள் - சென்ற வருடத்தின் 'சுட்டும் விழிச்சுடரே' வை நினைவுபடுத்தும் பாடல். இந்த ஆண்டின் சிறந்த ஆல்பம் எதுவென்றால் 'வேட்டையாடு விளையாடு' - ஐயமில்லாமல்.

* தென்றல் என்னும் (மது பாலகிருஷ்ணா) / பாசக் கிளிகள் / வித்யாசாகர்

தொடக்க ஆலாபனையில் பாரதி பாடல் 'எதிலும்...' நினைவு படுத்தும். அழகான பாடல் வரிகள் கொண்டு மண்ணின் மணம் வீசும் இனிமையான பாடல். தமிழருக்கு தனிப்பெருமை தரும் நாதஸ்வர முழக்கங்கள் கேட்க இனிமை. தில்லானா சங்கதிகளைக் கேட்கும் போது 'சீரோங்கும் தென் பழனி மலை மேவும் கோவலா...' என்று பாடத் தோன்றுகிறது!

"தென்றல் என்னும் தேரேறி தமிழ் மன்றம் வந்த முல்லை மலரே..." என்பதே பல்லவி.

* உன்னைக்கண்டேனே முதல் (ஷ்ருதி, ஹரிசரண்) / பாரிஜாதம் / தரண்

மழையில் நனைந்து பாடும் பாடல்களுக்குத் தான் தமிழ்திரையில் பஞ்சமுண்டோ? இந்த பாடல் இசையில் இடி, மழையுடன் துவங்குகிறது. ஷ்ருதியின் குரல் இனிமையாகவும், இளமையான கீச்சுக்குரலாகவும் இருக்கிறது. ஹரிசரண் காதல் படத்திற்குபின் அதே இனிமையில் இன்னமும்!. ஹரிஷ் ராகவேந்திரா போல, ஹரிசரண் நிறைய பாடல்கள் பாடி புகழ்பெற அவருக்கு வாழ்த்துக்கள்.

* சரிகமபதநி சொல்லி (மதுமிதா, எஸ்.சரோஜா, அமீர்) / பருத்தி வீரன் / யுவன் சங்கர் ராஜா

சிறிய பாடலானாலும், மதுமிதாவின் குரல் காதுக்கு தேன். யுவன் கிராமியப் பாடலுக்கு இனிதாய் இசை அமைத்திருக்கிறார்.

வரிகளில் இருந்து:
ஏகப்பட்ட சரக்கிருக்குது வாய்வசந்தான் எங்கிட்ட,
வாங்கி நல்லா ஏத்துகுற காதிருக்கா உங்கிட்ட?


யுவன், காத்திருக்கும் காதிருக்கு எங்ககிட்ட, நல்ல இசையா போடுங்க அடுத்த வருடம்!

* ஏனோ இது ஏனோ (ஜெய்தேவ்) / கிழக்கு கடற்கரைச்சாலை / பால் ஜே

மழைத்துளிகளாய் விழும் இசையுடன் தொடக்கமே இனிமை. மூன்று நிமிடத்திற்கு குறைவான பாடலானாலும், பாடலில் உயிரோட்டத்திற்கு குறைவில்லை. இசையும், குரலும் ஜோடி சேர்ந்து நம் காதுகளில் தேனைத் தூவுகின்றன. ஜெய்தேவின் குரலை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. சில இடங்களில் இளையராஜாவின் குரலைப்போல் உள்ளது. பால் ஜே, புதியவர் - புதுமைகள் பல செய்ய வாழ்த்துக்கள்.

* முகிலே முகிலே (ஸ்ரீநிவாஸ்) / அரண் / ஜோஷ் ஸ்ரீதர்

ஸ்ரீநிவாஸ் குரலில் பாடல் கேட்பது, மயிலிறகில் தடவுவதுபோன்று இதமானது என்று சொன்னால் அதில் எள் அளவும் மிகை இருக்காது. நீங்களே கேட்டுப்பாருங்களேன். இந்த பாடலில் ஸ்ரீநிவாஸின் இரண்டாவது அவதாரமும் அவரோடு சேர்ந்து ட்யூட் பாடுகிறது - அதன் பெயர் புல்லாங்குழல்! ஜோஷ் ஸ்ரீதர் இந்த பாடலில் கொஞ்சமாவது வேறுபாடு காட்டியிருக்கிறார், அதனால் அவருக்கும் ஒரு சபாஷ்!

* சுடும் நிலவு சுடாத சூரியன் (உன்னி கிருஷ்ணன், ஹரிணி) / தம்பி / வித்யாசாகர்

ஹம் செய்ய வைத்து பல்லவியை திரும்ப திரும்ப நினைவில் நிறுத்தும் பாடல். இரு சிறப்பான பாடகர்களிடம் இருந்து சிறப்பானதொரு பாடல். முதல் இடையூட்டில் வயலின் வரிசையை மட்டும் கவனித்துப் பாருங்கள். உங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் வாசித்தது போலும் தோன்றும்!. இரண்டாவது இடையூட்டில் ஹம்மிங் மட்டுமே!

* நெஞ்சில் வாழ்கிற / ஒரு பொண்ணு ஒரு பையன் / கார்த்திக் ராஜா

அழகான கவிதையை அழகான இசையுடன் சேர்த்து படித்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும். கார்த்திக் ராஜா இசையில் அழகாக மலர்ந்திருக்கிறது இந்த குறிஞ்சி மலர். பாடகி (யாரது?!) குரலும் இனிமை.

* என் ஸ்வாசத்தில் காதலின் (கல்யாணி, மது பாலகிருஷ்ணா) / ஜெர்ரி / ரமேஷ் விநாயகம்

இன்னுமொரு ட்யூட்தான் என்றாலும், இந்த பாடலின் இசையில் ரமேஷ் விநாயகம் புல்லாங்குழலை துள்ளிக்குதிக்க வைத்திருப்பது அழகு. இசையின் எளிமைக்கும், அழகிற்கும் இந்த பாடலை எடுத்துக்காட்டாக சொல்லலாம்!

ஆண்: " இங்கு காதல் என்பது கடவுள் என்றால் இதுவரை நானொரு நாத்திகனே..."

பெண்: " நம் மனமே கோவில், முத்தம் - திருநீர், பக்தன் - நீயே காதலனே..."
ஒரு உவமைக்கு, மூன்று உவமை பதிலாக வருகிறது!சென்ற சில வருட டாப் டென்கள்:
2005
2004
2003

7 comments:

 1. இன்றுதான் இந்த பதிவை காணும் வாய்ப்பு நேர்ந்தது.
  நல்லதொரு பதிவு.

  உங்களின் தேர்வுகளும் நன்றாகவே இருக்கிறது. இன்னும் சில பாடல்களை விட்டிருக்கிறீர்களோ என தோன்றுகிறது.

  ReplyDelete
 2. வருக மஞ்சூர் ராசா!
  என்னால் இயன்றவரை சென்ற ஆண்டில் வந்த அத்தனை பாடல்களையும் கேட்டேன். இருப்பினும் ஏதேனும் விட்டுபோயிருக்கலாம் - அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காக டாப் டென்னில் இருந்து ஒதுக்கியிருக்கலாம்.

  என்ன பாடலென்று சொல்லுங்களேன்.
  நன்றி.

  ReplyDelete
 3. thErvukaL yellAm Super!

  ReplyDelete
 4. அருண்மொழி12:07 AM

  //அழகான பாடல் வரிகள் கொண்டு மண்ணின் மணம் வீசும் இனிமையான பாடல். தமிழருக்கு தனிப்பெருமை தரும் நாதஸ்வர முழக்கங்கள் கேட்க இனிமை//
  வேறு எந்த லிஸ்டிலும் இந்த இனிமையான பாடல் இடம் பெறவில்லை. சுட்டிக்கு நன்றி.
  நம் மண்ணின் மணம் மறந்துபோகாமல் - நமது சங்கீதம் என்று பெருமை பட்டுக்கொண்டு - அதே சமயம், புதிய இசைகளில் இனியவற்றையும் பாராட்டும் உங்கள் பதிவை பாராட்டாமல் இருக்கமுடிய வில்லை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. ராஜா மற்றும் அருண்மொழி, மறுமொழிகளுக்கு நன்றிகள்!

  ReplyDelete
 6. ஜீவா. உங்கள் பட்டியலில் முதல் இரண்டு (மூன்று, பார்த்த முதல் நாள் உட்பட) பாடல்களை மட்டுமே நான் இதுவரைக் கேட்டிருக்கிறேன். மற்ற பாடல்களையும் நேரம் கிடைக்கும் போது கேட்டுப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 7. வருக குமரன்.
  மற்ற பாடலகளையும் கேட்டு மெலடி மழைச்சாரலில் நனைந்திடுங்கள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails