Friday, November 14, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிமூன்று

பா 49:
சீவன் முக்தன் வித்வான் தேருவதன் முன் தன்னை
மேவும் உபாதிகுணம் விட்டுடனே - மேவுவான்
தன்னுரு சச்சித் இன்பத் தாங்கிடும் வண்டினுருத்
தன்னையுறல் போலத் தறி.

சீவன் முக்தன், அவன் ஆன்மஞானி ஆவதற்கு முன்னம் இருந்த உபாதிகளை கைவிட்ட உடனேயே, சச்சிதானந்த நிலை தனை அடைவான். வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல.

ஜீவன் முக்தர் - என அழைக்கப்படுபவர், முக்தி என்னும் நிலையினை அடைந்த பின்னரும், உலக நன்மை பொருட்டு, தம் பூவுடலை துறக்காமல் இருப்பராவர். எனினும், அவருக்கு, அவருடைய ஞானத்தினால், அவர் சச்சிதானந்த சொருபீயாக இருப்பதினால், அவரே பிரம்மமாகவும் இருப்பவர். அவருக்கு முந்தைய உபாதிகள் ஏதும் அப்போது இல்லை. அதாவது, அவர் அந்நிலையை எட்டுமுன், அவருக்கு இருந்த, உடல், புலன் உணர்வுகள், மனம், போன்ற உபாதிகள் இல்லை.
எப்படி தங்கள் புழு போன்ற தோற்றத்தில் இருந்து, பறக்கும் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறிட, தங்கள் தோற்றத்தை, வண்டு போன்ற பூச்சிகள் இழக்கின்றனவோ, அதைப்போல.

பா 50:
மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று - யோகி
அமைதியொடு கூடியான் அவ்வின்பத்
தமைந்து ஒளிர்வானென்றே அறி.

மோகமெனும் கடலினைக் கடந்து, ஆசை, கோபம் எனும் அரக்கர்களைக் கொன்றபின், யோகியானவன், அமைதி என்னும் சாந்த நிலையினை அடைந்து, அது தரும் பேரின்ப நிலையில் ஒளிர்வான்.

மோகம், ஆசை, கோபம் என்னும் மூன்று அரக்கரையும் வெல்லுதல் யோகியின் முதற்செயலாகும். அவ்வாறு வென்றவன், எளிதாக, தான் யாரென்று அறியாமற் மறைக்கும் மாயைதனை வெல்வான். அறியாமை அகன்றால், பின் இனியெல்லாம் ஞானமே அல்லவோ. அங்கு, அமைதியைத் தழுவிதல் என்பது, "சும்மா இரு சொல்லற", என்பதைச் சொல்லுகிறதோ! அந்நிலையில், நான் யார் என வினவிட, அவ்வினவலின் தோன்றலின் ஆதாரத்தினை ஆராய்ந்திட, கிட்டாதோ யாதும்!.

(கடல் கடந்து, அரக்கரைக் கொன்று, பிரிந்த மனைவியொடு சேர்ந்து, ஒளிர்ந்தான் இராமனும்!.)

இந்தத் தொடரில், இரமண மகரிஷி அவர்கள், வெண்பாக்களாய் வடித்த, ஆத்மபோதம் தனைப் பார்த்து வருகிறோம். அடியேனுக்குப் புரிந்த வரையில், செய்யுட்களைப் பிரித்துப் பொருள் தேடி வருகிறேன். பிழைகளைச் சுட்டினால், திருத்திட ஏதுவாய் இருக்கும். இதுவரை வந்த பகுதிகளை இங்கே காணலாம்.

37 comments:

  1. ஆகா ராமாயணத்தை தத்துவ நோக்கில் காட்!டிவிட்டீர்கள்! அருமை!

    ReplyDelete
  2. //வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல//

    இரமணர் தரும் அருமையான எடுத்துக்காட்டு!

    //ஆகும் அரக்கர் அறக்கொன்று//

    அற/கொன்று = இரண்டுமே ஒழித்தல் தான்! ஏன் இரு முறை சொல்ல வேண்டும்?

    ஜீவன் முக்தி தொடர்பான அடியேனின் வேறு சில கேள்விகளுக்கு அனுமதி உண்டா ஜீவா? :)

    ReplyDelete
  3. வாங்க திவா சார்,
    அப்படியே, இராமயணம் போலவே உள்ளதல்லவா அந்தச் செய்யுள்!
    தத்துவ நோக்கில் அத்யாத்ம இராமயணம் அப்பொழுதே சொல்லப்பட்டுவிட்டதே!

    ReplyDelete
  4. கேளுங்கள் கே.ஆர்.எஸ்,
    தங்களுக்கு தெரியாத, புதிதாக நான் என்ன சொல்லப்போகிறேன்?

    ReplyDelete
  5. //
    அற/கொன்று = இரண்டுமே ஒழித்தல் தான்! ஏன் இரு முறை சொல்ல வேண்டும்?//
    அசுரர் அழிய, அவர்களைக் கொன்று - என்று நான் பொருள் கொண்டேன்;
    அல்லது வெண்பாவைப் பிரிப்பதில் ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம்!
    பிரிப்பதற்கு முன் அந்த அடிகள் இப்படி வருகின்றன:
    "மோகக் கடல்கடந்து மூளாசை கோபமுத

    லாகு மரக்க ரறக்கொன்று..."

    ReplyDelete
  6. //வண்டு...//
    ஆதி சங்கரரின் மூலச் செய்யுளிலும், அவரது விவேக சூடாமணியிலும், இந்த உதாரணத்திற்கு மேலும் சில குறிப்புகளையும் தருகிறார்:
    அதாவது, தேனி அல்லது குழவி போன்ற பூச்சிகள் - சிறிய புழுக்களை கொட்டி அவற்றை செயலிழக்கச் செய்வதால், அப்புழுக்களுக்கு, பூச்சிகளைக் கண்டால் எப்போதும் அச்சம். அந்த அச்சத்தினால் - எப்போதும், அப்புழுக்கள், பூச்சிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, பிந்நாளில், அப்புழுக்கள் பூச்சியாகவே மாறிவிடும்.
    அதுபோல, நாமும், நிலையான, பூரணமான மூல நிலையை அடைய, அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எடுத்துக் காட்டுகிறது.

    ReplyDelete
  7. //பூச்சிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்க, பிந்நாளில், அப்புழுக்கள் பூச்சியாகவே மாறிவிடும்.
    அதுபோல, நாமும், நிலையான, பூரணமான மூல நிலையை அடைய, அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எடுத்துக் காட்டுகிறது.//

    ஆஹா, அருமை. 'யத் பாவம் தத் பவதி'. வெண்பாக்களும் விளக்கங்களும் நன்று. நன்றி ஜீவா.

    ReplyDelete
  8. வாங்க கவிநயாக்கா,
    பிரஹதாரண்ய வாக்கியத்தினை மேற்கோள் காட்டியமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. //கேளுங்கள் கே.ஆர்.எஸ்,
    தங்களுக்கு தெரியாத, புதிதாக நான் என்ன சொல்லப்போகிறேன்?//

    ஆகா...தத்துவ வித்தகர் ஜீவா இப்படிச் சொன்னா எப்படி?
    அடியேன் அறிந்தது ஒன்றே ஒன்று தான்! - "அறியவில்லை" என்பதே அது!

    இதோ கேள்விகள்:
    ஜீவன் முக்தி = ஜீவன் இருக்கும் போதே முக்தி பெற்ற நிலை. ஆனால் உடலை விடாத நிலை. பழுத்த இலை மரத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது போல!

    1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?

    2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?

    3. தான் பரப்பரம்மம், ஜீவாத்மா அல்ல என்ற மாயை அகன்ற பின்னரும், பரத்தில் கலவாத நிலை! அவதாரங்கள் இவற்றுள் அடங்குமா? கண்ணனுக்குத் தான் ஜீவாத்மா அல்ல என்று தெரிகிறது! அப்போ கண்ணன் ஜீவன் முக்தனா?

    4. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?

    ReplyDelete
  10. The Greatest Truth are always the Simplest. நாம் தத்துவம் என்று சொல்லி, அதை ஏதோ எட்டாக்கனி போல பாவித்து வருகிறோம்.

    முதலில் எனது புரிதல்களைக் கொண்டு, விடை பகர்க முயல்கிறேன். இவை மேலோட்டமான புரிதல்களே:
    1) ஜீவன் முக்தருக்கு, அனைத்து வினைகளும் ஓய்ந்திருக்க வேண்டும். அல்லது வினைகளே இல்லாமல் பிறந்திருக்க வேண்டும். வினைகள் இல்லாமல் பிறப்பெப்படி என்றால், இறைவனின் சித்தத்தில் எல்லாம் சாத்தியமே.
    2) இயற்கைத் தேவைகளை, புலன்களை வென்று வென்று இருக்க வேண்டும்.
    3) இந்து மத அவதாரங்கள், இவற்றில் அடங்கா. கண்ணன், ஜீவாத்மா இல்லை என்ற போது, ஜீவன் முக்தனும் இல்லை. நானே பரப்பிரம்மமாய் இருக்கிறேன் என்று சொல்லும்போது, நாம் அந்நிலையை அறிவதற்காக மட்டுமே. ஏனெனில் பிரம்மாய் இருக்கும் போது, பேசுவதோ, செயலாற்றுவதோ சாத்தியமில்லை. ஆகையால், அவதாரம் என்பது ஒரு தனி நிலையாக இருக்க வேண்டும்.

    4) இது ஜீவன் முக்தரின் கையில் இருக்கிறது என நினைக்கிறேன். இறைவனின் விருப்பமும், அதற்கு மாறாக இல்லாத பட்சத்தில்.

    அப்புறம், ஜீவன் முக்தி இதுதான் என்று ஒரு வரையுறைக்குள் கொண்டு வந்து, அந்த வரையுறைக்குள் வராதவரை, ஜீவன் முக்தர் அல்ல எனவும் சொல்ல இயலாது. ஏனெனில், நம் ஞானிகள் பலவாறு இந்நிலைகளை, அடைந்தும், கடந்தும், மீண்டும் வந்துள்ளனர். ஜீவன் முக்தி அடைந்த பின்னரும், மீண்டும் சில சில சமயங்களில் ஜீவாத்மா போல, சாதாரண உணர்வுகளைக் கொண்டிருப்பதும் சாத்தியமே எனத் தெரிகிறது, இராமகிருஷ்ணரில் வரலாற்றைப் படிக்கையில்.

    ReplyDelete
  11. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    The Greatest Truth are always the Simplest. நாம் தத்துவம் என்று சொல்லி, அதை ஏதோ எட்டாக்கனி போல பாவித்து வருகிறோம்//

    சூப்பராச் சொன்னீங்க! உண்மை மட்டும் எளிதானதல்ல! உண்மையின் சொரூபமான இறைவனும் எளிதானவன் தான்! நாம் தான் தத்துவம் பல சொல்லி, எட்டாக் கனி ஆக்கி விடுகிறோம்! இதைத் தான் "சும்மா இரு" கந்தரலங்காரப் பதிவிலும் சொல்லப் புகுந்தேன்!

    //1) ஜீவன் முக்தருக்கு, அனைத்து வினைகளும் ஓய்ந்திருக்க வேண்டும். அல்லது வினைகளே இல்லாமல் பிறந்திருக்க வேண்டும். வினைகள் இல்லாமல் பிறப்பெப்படி என்றால், இறைவனின் சித்தத்தில் எல்லாம் சாத்தியமே//

    அருமை!
    வினைகள் இல்லாவிட்டால் கூடப் பிறப்பதும், மோட்சத்தில் இருப்பவர்கள் மீண்டும் அவதாரங்களோடு உடன் பிறப்பதும் எல்லாம் இறைவனின் திருவுள்ளக் குறிப்பே! பற்றுதலை இறைவன் மீது வைக்காது, மோட்சத்தின் மேலோ, வினை அறுத்தல் மேலோ வைப்பதால் வரும் வினை இது! :)

    //2) இயற்கைத் தேவைகளை, புலன்களை வென்று வென்று இருக்க வேண்டும்//

    வென்று இருக்க வேண்டும் தான்!
    ஆனால் அதற்காக அவர் உணவு உண்டால், உடனே அவர் ஜீவன் முக்தர் அல்லர் என்று சிலர் சொல்லி விடுவார்கள்! இரமணரை இவ்வாறு சொல்லியும் உள்ளனர்! :)

    வெல்லுதல் என்பது வேறு! வென்ற பின் துய்த்தல் என்பது வேறு! வென்றவன் துய்க்கவே கூடாது என்பது தவறான புரிதல்! தனி மனித அபிலாஷை அல்லவா? :)

    //3) இந்து மத அவதாரங்கள், இவற்றில் அடங்கா. கண்ணன், ஜீவாத்மா இல்லை என்ற போது, ஜீவன் முக்தனும் இல்லை//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்! பிறவான் இறவான் என்ற பாடலை வைத்து, கண்ணன் பிறந்தான் இறந்தான். எனவே அவன் ஜீவன் அல்லது ஜீவன் முக்தன் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்! அதான் கேட்டேன்!

    //ஏனெனில் பிரம்மாய் இருக்கும் போது, பேசுவதோ, செயலாற்றுவதோ சாத்தியமில்லை//

    இந்த வரிகளைச் சற்றே மாற்றிச் சொல்லட்டுமா?
    பிரம்மாய் இருக்கும் போது, பேசுவதோ, செயலாற்றுவதோ என்ற பேச்சே எழாது!

    பேச்சும் செயலும் கடந்த ஒன்றினால் பேசவும் முடியும்! பேசாது "இருக்கவும்" முடியும்! செய்யவும் முடியும்! செய்யாது "இருக்கவும்" முடியும்!

    //இது ஜீவன் முக்தரின் கையில் இருக்கிறது என நினைக்கிறேன். இறைவனின் விருப்பமும், அதற்கு மாறாக இல்லாத பட்சத்தில்//

    இங்கு தான் சற்றுப் புரியவில்லை ஜீவா! ஜீவன் முக்தர் ப்ரம்மத்தை அறிந்தவர் ஆகிறாரா? இல்லை ப்ரம்மாகவே ஆகிறாரா?

    ReplyDelete
  12. //அப்புறம், ஜீவன் முக்தி இதுதான் என்று ஒரு வரையுறைக்குள் கொண்டு வந்து, அந்த வரையுறைக்குள் வராதவரை, ஜீவன் முக்தர் அல்ல எனவும் சொல்ல இயலாது//

    Exactly!
    People go into this evaluation mode and tend to lose their objective!

    //ஜீவன் முக்தி அடைந்த பின்னரும், மீண்டும் சில சில சமயங்களில் ஜீவாத்மா போல, சாதாரண உணர்வுகளைக கொண்டிருப்பதும் சாத்தியமே//

    அருமை!
    முக்தி பெற்றவரும் மீண்டும் பிறப்பெடுத்து, இறைவன் திருவுள்ளக் குறிப்பால், காரண-காரியம் உணர்த்தப் புகுவதும் சாத்தியமே! அவதாரங்கள் ஆகி விட்டதாலும், அந்த அவதாரங்களுடன் மண்ணில் வந்து விட்டதாலுயுமே, அவர்கள் முக்த நிலை மாறுபடுவதில்லை!

    ஞான, கர்ம மார்க்கங்கள் மற்றும் பக்தி மார்க்கம், சரணாகதிக்கு இடையே உள்ள மெல்லிய நூலிழை இது தான்! பக்த நிலை கவனத்தை மோட்சம்/அடைதல்/விடுபடலின் மீது வைக்காமல் பகவானின் மீது மட்டும் வைக்கிறது!

    நின் அருளே புரிந்து "இருந்தேன்"! இனி என்ன திருக்குறிப்பே? என்பது அடியேனைக் கவர்ந்த வாசகம்! பந்தலின் வாசகம்! "என் வாசகம்"! :)

    ReplyDelete
  13. கால தாமத்தினை பொறுத்தருளவும் - இப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினேன்.

    //உண்மையின் சொரூபமான இறைவனும் எளிதானவன் தான்! //
    நல்லாச் சொன்னீங்க, உண்மையும், இறைவனும் கூட வேறல்லவே. சமீபத்தில் மெய்தான் பிரம்மம் என சூரி சார் எழுதியிருந்தார், சுட்டி இங்கே.

    ReplyDelete
  14. //பற்றுதலை இறைவன் மீது வைக்காது, மோட்சத்தின் மேலோ, வினை அறுத்தல் மேலோ வைப்பதால் வரும் வினை இது! :)//
    பற்றறுத்தல், பற்றறுத்தல் எனச்சொல்லி, அதன் மீது பற்று வந்து விட்டதா, ஹா ஹா!

    ReplyDelete
  15. //பேச்சும் செயலும் கடந்த ஒன்றினால் பேசவும் முடியும்! பேசாது "இருக்கவும்" முடியும்! செய்யவும் முடியும்! செய்யாது "இருக்கவும்" முடியும்!//
    பிரம்மம் எதையும் தானாக செய்யாமல், அதன் சக்தியான பிரகிருதிதான் செய்கிறது என்ற கூற்றினால் - பிரம்மம் செயலற்றது என்பார்கள்.

    ReplyDelete
  16. //இங்கு தான் சற்றுப் புரியவில்லை ஜீவா! ஜீவன் முக்தர் ப்ரம்மத்தை அறிந்தவர் ஆகிறாரா? இல்லை ப்ரம்மாகவே ஆகிறாரா?//
    பிரம்மத்தை அறிந்தவராகிறார்.
    இராமகிருஷ்ணர் சொல்லுவார் :
    "முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."
    இப்படியாக, முழுமையாக இல்லாமல் பகுதியாக இறையை அறிதலும், அடைதலும் சாத்தியப்படுகிறது. முழுமையாக இறையை அறிதலும், முழுமையாக, பிரம்மமாகவே ஆவதும், முடிவானது.

    ReplyDelete
  17. //ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? //
    இதற்கான விடை - அடுத்ததிற்கு அடுத்த ஆத்ம போதச் செய்யுளில் உள்ளது!
    அனைத்து உபாதிகளையும் இழந்த உடனேயே, ஜீவன் முக்தன், பிரம்மாகிறான் என்கிறார் சங்கரர். ஆகையால், ஜீவன் முக்தனாக இருக்கின்ற நிலையானது, மனம், உடல், அவையங்கள் அவற்றின் உணர்வுகளை இழந்து வருவதுதான். முற்றிலுமாக இந்த உபாதிகளை இழந்தபின்னரே, அவன் முற்றிலுமான அவன் பரமனை என்னவென்று அறிந்தானோ, அந்த பரமனாகவே ஆகிறான்.

    ReplyDelete
  18. //பிரம்மம் எதையும் தானாக செய்யாமல், அதன் சக்தியான பிரகிருதிதான் செய்கிறது என்ற கூற்றினால் - பிரம்மம் செயலற்றது என்பார்கள்//

    பிரம்மம் செயல்+அற்றது! சரி தான், அத்வைத நோக்கில்!

    //சாத்தியமில்லை// என்று நீங்கள் சொன்னதால், சாத்தியமே இல்லை என்று சொல்வதற்குப் பதிலாக, அந்தப் பேச்சு "எழாது" என்று சற்றே மாற்றி அமைத்தேன்! :)

    ReplyDelete
  19. //இராமகிருஷ்ணர் சொல்லுவார் :
    "முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். மேலும், "சில சமயம்", நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."
    //

    விசிஷ்டாத்வைதம் போல இருக்கு இராமகிருஷ்ணர் சொல்லுறது! :)

    ReplyDelete
  20. //அந்தப் பேச்சு "எழாது" என்று சற்றே மாற்றி அமைத்தேன்! :)//
    நல்லது :-)

    //விசிஷ்டாத்வைதம் போல இருக்கு இராமகிருஷ்ணர் சொல்லுறது! :)//
    அவருக்கு எல்லாமே ஒண்ணுதான் கே.ஆர்.எஸ்!

    ReplyDelete
  21. இராமகிருஷ்ணரின் முக்தி அடைதலுக்கு முந்தைய நிலைப்பாடு - சஹஜ நிர்விகல்ப சமாதி நிலை என்று சொல்லப்படுகிறது. இது நிர்விகல்ப சமாதி நிலைக்கும் (ஒன்றாய் தெரிந்தபின் திரும்புவதில்லை) சவிகல்ப சமாதி நிலை (ஜீவனும், பரமனும் இரண்டாகத் தெரியும் நிலை) க்கும் இடைப்பட்ட நிலையானதாகும்.

    ReplyDelete
  22. //ஆகையால், ஜீவன் முக்தனாக இருக்கின்ற நிலையானது, மனம், உடல், அவையங்கள் அவற்றின் உணர்வுகளை இழந்து வருவதுதான்//

    புரிகிறது ஜீவா! நன்றி!

    //முற்றிலுமாக இந்த உபாதிகளை இழந்தபின்னரே//

    மனம், உடல், அவையங்கள் உணர்வுகளை இழந்த பின்னர் இன்னும் வேறு எதை இழக்க வேண்டும்?

    ReplyDelete
  23. வாருங்கள் மௌலி சார்!

    ReplyDelete
  24. //பின்னர் இன்னும் வேறு எதை இழக்க வேண்டும்?//
    உபாதியை ஏற்படுத்தும் எல்லாவற்றையும். நான், எனது என்கிற அகங்காரத்தினை ஏற்படுத்தும் எல்லாவற்றையும்.

    அது அவனே எல்லாம், என சரணாகதி அடைந்து, அவன் அன்றி வேறொரு நினைவும் அண்டாமல், அதனால் உபாதி ஏதும் ஏற்படா வழியானாலும் சரி.

    செய்யும் செயல் யாவும், பரமனின் செயல், பலன் யாவும் அவன் தரும் பிரசாதம் எனக் கருமம் இல்லா நிலைக்கு அடைகோலி, அதன் மூலம், உபாதிகளை இழப்பதானாலும் சரி.

    அல்லது, தான் யார், தான் யாரெனக் கேட்கும் அக்கேள்வி எங்கிருந்து வருகிறது, அக்கேள்வியின் மூலம் யார், என்று தன்னைப் பார்க்கிறவனைத் திரும்பிப்பார்க்கிற வழியில் மூலமாக, ஞானம் ஒன்றே அவன் என உணர்ந்து, அதன் விளைவாக உபாதிகளை இழப்பதானாலும் சரி.

    ReplyDelete
  25. //நான், எனது என்கிற அகங்காரத்தினை ஏற்படுத்தும் எல்லாவற்றையும்//

    மனம், உடல், அவையங்கள் உணர்வுகளை இழந்த ஜீவன் முக்தர்கள், "அகங்காரத்தினை" முழுமையாக இழப்பதில்லையா ஜீவா? அதனால் தான் பழுத்த இலை போல் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்களா?

    //அது அவனே எல்லாம், என சரணாகதி அடைந்து, அவன் அன்றி வேறொரு நினைவும் அண்டாமல், அதனால் உபாதி ஏதும் ஏற்படா வழியானாலும் சரி//

    உம்...சரி தான்!
    ஞான, கர்ம, பக்தி யோகங்கள் மூலமாகவும் ஜீவன் முக்தி அடையலாம் என்று சொல்கிறீர்கள்! அடிப்படை உபாதிகளை இழப்பது தான்! உபாதிகள் இழந்த பின்னர் வரும் நிலை ஜீவன் முக்தி!

    ஜீவன் முக்தி பற்றி முப்பெரும் தத்துவங்கள் சொல்வது என்ன? அதாவது த்வைத, அத்வைதாதிகள்? பிரப்பிரம்மமும் தாமும் ஒன்றே என்று உணர்ந்த பின்னரும், அதனுடன் கலவாத நிலை பற்றி ஜகத்குரு சொல்கிறாரா?

    கைவல்ய முக்தி, ஜீவன் முக்தி இரண்டும் வெவ்வேறானவையா?

    ReplyDelete
  26. சரி,
    எப்போது, "என் வாசகத்தில்", "என்" மீது கோடு போட்டீர்கள்?
    நான் இப்போ தான் கவனிச்சேன்! :)

    ReplyDelete
  27. ஆம், கே.ஆர்.எஸ்,
    ஜீவன் முக்தர்கள் are in the Process of loosing உபாதிகள். பழுத்து, இலை உதாரணம் அருமை. அனைத்து உபாதிகளும் இழந்த பின், இலை உதிர்ந்து, தன் மிச்ச சொச்ச பச்சயத்தினையும் முழுதுமாக இழந்து, சருகாவது போல், ஜீவன் முக்தனும் முக்தி அடைகிறான்.
    முக்தியின் நிலைகளை, வகைகளைப் பற்றி விளக்கமாக இன்னொருநாள் அறிந்தெழுத முயல்கிறேன்.

    ReplyDelete
  28. இப்போதுதான் கோடு போட்டேன் கே.ஆர்.எஸ்.
    நெடுநாளாகவே, 'என் வாசகத்தில்' இருந்த 'என்' உறுதிக்கொண்டே இருந்தது...!
    என்-ஐ எப்போது இழப்பேன் என்று. இப்போது எளிதாய் கோடு போட்டாயிற்று. வாழ்க்கையிலும் *என்*னில் இப்படி எளிதாய் கோடு போட இயன்றால், நன்றாக இருக்கும் :-)

    ReplyDelete
  29. சரி ஜீவா! இன்னொரு நாள் இன்னொரு புலனத்தில் இது பற்றி மேலும் பேசுவோம்! உங்களிடம் உரையாடியதில் அடியேனின் அடுத்த பதிவுக்கும் சில குறிப்புகள் கிடைத்தன! ஒரு பத்தாம் நூற்றாண்டின் த்வைத/அத்வைத உரையாடல் :)

    //வாழ்க்கையிலும் *என்*னில் இப்படி எளிதாய் கோடு போட இயன்றால், நன்றாக இருக்கும் :-)//

    ஹா ஹா ஹா!
    கோடிட்ட இடக்களை நிரப்புக!

    எதைக் கொண்டு? இறைவனைக் கொண்டு!

    ReplyDelete
  30. அடுத்த சில ஆத்ம போதம் செய்யுட்களும், ஜீவன் முக்தனைப் பற்றியே இருப்பதால், அவற்றை உடனேயே தொடரத்துவங்கி விட்டேன். இதில் உங்கள் உந்துதலும் உண்டு!, அதற்கு மிக்க நன்றிகள். இங்கு நீங்கள் எழுப்பிய வினாக்களை அவற்றின் இறுதியில் மீண்டும் தொகுத்துச் சொல்லுகிறேன்.

    //கோடிட்டு நிரப்பு, இறைவனைக் கொண்டு.//
    ஆகா!, அதுவே பேறு.
    திருத்தம் திருத்திருத்தம்.

    ReplyDelete
  31. மனம் நிறைவாக இருப்பதால் எதுவும் எழுதத் தோன்றவில்லை.

    ReplyDelete
  32. வாருங்கள் திரு.வேளராசி,
    //மனம் நிறைவாக இருப்பதால் எதுவும் எழுதத் தோன்றவில்லை//
    இதற்கு மேல், வேறென்ன வேண்டும்!

    ReplyDelete
  33. என்கோடிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.
    :-))))))))))))
    கைவைல்லிய நவநீதத்தை முடித்தீர்களா ஜீவா?

    ReplyDelete
  34. வாங்க திவா சார்,
    //கைவைல்லிய நவநீதத்தை முடித்தீர்களா ஜீவா?//
    ஹி ஹி, இனிமேதான் துவங்கணும்!

    ReplyDelete
  35. ஜீவன் முக்த உரையாடல் நன்றாக இருந்தது.

    ReplyDelete
  36. நல்லது குமரன்!

    ReplyDelete