Thursday, September 11, 2008

அர்ஜூனன் சந்தேகம்! : பாரதி

வேடிக்கை கதைகள் என்கிற பகுதியில், சின்னச்சின்னதாய் சில கதைகளும் எழுதி வைத்திருக்கிறார் நம்ம பாரதி.
அவற்றில் ஒன்று - இந்த "அர்ஜூனன் சந்தேகம்":

ஊர்: ஹஸ்தினாபுரம்
இடம்: துரோணரின் பள்ளிக்கூடம்

பாண்டுவின் பிள்ளைகளும், துரியோதனாதிகளும் அங்கே பள்ளி பயில்கிறார்கள். ஒருநாள் சாயங்கால வேளையில்,
அர்ஜூனன், கர்ணனைப் பார்த்து, 'ஏ கர்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
'சமாதானம் நல்லது' என்று கர்ணன் சொன்னான்.
'காரணமென்ன?' என்று கிரீடி கேட்டான்.
கர்ணன் சொல்லுகிறான்: "அடே, அர்ஜூனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அதனால் உனக்குக் கஷ்டம். நானோ இரக்க சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால், சமாதானமே சிறந்தது' என்றான்!
அர்ஜூனன்: 'அடே, கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்' என்றான்.
அதற்கு கர்ணன்: "பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை' என்றான்.
இந்தப் பயலைக் கொன்றுபோட வேண்டும் என்று அர்ஜூனன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான்.

பிறகு துராணாச்சாரியாரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டான்.
'சண்டை நல்லது' என்று துரோணாச்சாரியர் சொன்னார்.
'எதனால?' என்று பார்த்தன் கேட்டான்.
அப்போது துரோணாச்சாரியர் சொல்லுகிறார்:
'அடே, விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும். இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம் - ச-ச-ச' என்றார்!

பிறகு அர்ஜூனன் பீஷ்மாச்சாரியாரிடம் போனான், 'சண்டை நல்லதா தாத்தா, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவர் சொல்லுகிறார்: 'குழந்தாய் அர்ஜூனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய க்ஷத்திரிய குலத்திற்கு நன்மையுண்டு. சமாதானத்தால் லோகத்திற்கே மகிமை' என்றார்.
'நீர் சொல்லுவது நியாயமில்ல' என்று அர்ஜூனன் சொன்னான்.
'காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும் அர்ஜூனா, தீர்மானத்தை அதன் பிறகு சொல்லுவாய்' என்றார் கிழவர்.
அர்ஜூனன் சொல்லுகிறான்: 'தாத்தாஜீ, சமாதானத்தில், கர்ணன் மேலாகவும், நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்' என்றான்.
அதற்கு பீஷ்மாச்சாரியார், 'குழந்தாய், தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால், உன் மனதில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப்போல பரஸ்பரம் அன்போடு இருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்.' என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.
...............................................
சில தினங்களாயிற்று...
ஹஸ்தினாபுரத்திற்கு வேத வியாசர் வந்தார். அர்ஜூனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான். அப்போது வேத வியாசர் சொல்லுகிறார்" 'இரண்டும் நல்லன. சமயத்துக்கு தக்கவாறு செய்ய வேண்டும்' என்றார்.
................................................
பல வருடங்களாயின...
காட்டில் இருந்து கொண்டு, துரியோதனாதிகளுக்கு தூது விடுக்கும் முன்பு, அர்ஜூனன், ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து 'கிருஷ்ணா, சண்டை நல்லதா?, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
அதற்குக் கிருஷ்ணன், 'இப்போதைக்கு, சமாதானம் நல்லது. அதனாலேதான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்' என்றாராம்.
------------------------------------------------
பாரதியின் கதை இத்துடன் இக்கதை முடிகிறது.
மகாபாரதக் கதையில் அதன்பின் நிகழ்ந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்ணனுக்கு அர்ஜூனனின் மேலே காழ்ப்பு.
அர்ஜூனனுக்கு 'நானா, கர்ணனா' எனக்கண்டறிவதே நோக்கம்.
துரணரோ, தனக்கு ஆகவேண்டியதைப் பேசுகிறார்.
பீஷ்மரோ சாகப்போகிற நேரத்தில் மட்டும் 'சங்கரா சங்கரா' என்கிறார்.
வியாசரோ, தத்துவம் சொல்கிறார்.
இறுதியில் கண்ணன், தக்க சமயத்தில் செய்ய வேண்டியதை செய்கிறார். :-)

8 comments:

  1. கதை பாரதி;

    //கர்ணனுக்கு அர்ஜூனனின் மேலே காழ்ப்பு.
    அர்ஜூனனுக்கு 'நானா, கர்ணனா' எனக்கண்டறிவதே நோக்கம்.
    துரணரோ, தனக்கு ஆகவேண்டியதைப் பேசுகிறார்.
    பீஷ்மரோ சாகப்போகிற நேரத்தில் மட்டும் 'சங்கரா சங்கரா' என்கிறார்.
    வியாசரோ, தத்துவம் சொல்கிறார்.
    இறுதியில் கண்ணன், தக்க சமயத்தில் செய்ய வேண்டியதை செய்கிறார். :-)//

    இது நீங்களா? நன்று நன்று :)

    ReplyDelete
  2. நல்ல கதை. நல்ல பாடம். நன்றி ஜீவா. :-)

    ReplyDelete
  3. //இது நீங்களா? நன்று நன்று :)//
    :-)
    ஆமாங்க, அடியேன் தான்!

    ReplyDelete
  4. வாங்க குமரன்,
    நல்லது, மகிழ்ச்சி!

    ReplyDelete
  5. //மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப்போல பரஸ்பரம் அன்போடு இருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்.'//

    ஆனால் இன்று எல்லாரும் இதை மற்ந்து விட்டன்ரே.

    அன்பே சிவம்.

    ReplyDelete
  6. வாருங்கள் கைலாஷி ஐயா,
    //அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்//
    சந்தேகமில்லாமல், அவை சத்திய வார்த்தைகள்தான்.

    ReplyDelete
  7. பாரதியாரின் சிறுகதையைச் சாரமாக்கிப் பிழிந்து தந்த தங்களுடைய இறுதி வரிகள் அருமை.

    அழுத்தம் தரப்பட்டிருக்கும் "செய்" என்கிற வார்த்தை ஆழமானது.

    "இந்த ஈரேழு லோகங்களிலும் நான் அடைய வேண்டியது என்று எதுவும் இல்லை; இருந்தாலும் நான் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்"என்று கர்ம யோகத்தில் கீதாச்சாரியன் சொன்னான் ஏன் என்றால் "சொன்னதைச் செய்வேன்; செய்வதைச் சொல்வேன்" என்கிற வார்த்தைகளைச் சொல்லிக் கொள்ள உண்மையான யோக்கியதை உடையவன் அவன் மட்டுமே.

    ReplyDelete
  8. வாருங்கள் ரத்னேஷ் ஐயா,
    அழகாக, கீதாசாரியனை மேற்கோள் காட்டியதற்கு நன்றி!
    //செய்வதைச் சொல்வேன்//
    இப்போதெல்லாம், ஊருக்கு உபதேசம் மட்டுமே சொல்பவர்கள் மட்டும் நிறைந்து விட்டார்கள்!

    ReplyDelete