Monday, September 15, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பனிரெண்டு

ஆத்ம போதம் பா 47:
நன்று தனையறிவின் ஞானியாம் யோகியும்
ஒன்றுமெலான் தன்னில் உறுவதை - ஒன்றான
தானெல்லாமாய் உளதை தன்ஞானக் கண்ணினாற்றான்
காண்பான் என்றே தறி.
~~~
உண்மையாகவே தான் யார் என அறியும் யோகியும், தன்னில் தோன்றும் பேரின்பத்தை அறியுங்கால்,
எல்லாப் பொருட்களும், எல்லா பெயர்களும், எல்லா வடிவங்களும், இறுதியில் ஒன்றே என, ஒன்றாக தன்னில் வந்து இணைவதைக் காண்பான்.
அவனைத்தவிர வேறொரு பொருளோ, உயிரோ எதும் இல்லை என்பதை தன் ஞானக் கண்ணால் காண்பான்.
~~~
இதையே, வள்ளலார், பதினொன்றாம் திருஅருட்பாவில் "நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை..." என்பார்.
~~~
தன்னைத்தவிர வேறொருவரையும் காண இயலாத ஞானியால் எப்படி இன்னொருவரிடம் போய், தான் கண்டதைச் சொல்ல இயலும்? கண்டவர் விண்டிலார் அல்லவா!.


ஆத்ம போதம் பா 48:
ஆன்மாவே இவ்வுலகமெல்லாம் ஆகும் அற்பமும்
ஆன்மாவுக்கு அன்னியமாய் இல்லை - ஆன்மாவாய்க்
காண்பன் எல்லாமுங் கடாதிகள் மண்ணின்வேறாய்க்
காண்பதும் உண்டோ கழறு.
(கடாதிகள்: கடம் போன்ற மண்பாண்டங்கள்)

இவ்வுலகும், எவ்வுலகும், அண்ட சராசரமும், இவ்வான்மாவேயாகும்.
மிக மிக நுண்ணிய அணுவும், ஆன்மாவில் இருந்து வேறில்லை.
- இப்படி, எல்லாமும் ஆன்மாவாய்க் காண்பவனுக்கு எப்படி எல்லாம் ஒன்றாய் இருக்கும் என்றால்:
மண்பானை போன்ற மண்ணாலான பாண்டங்களில், மண்ணைத் தவிர வேறொன்றும் இல்லாமல் இருக்கிறதோ அதுபோல.
~~~
இதைப்போலவே, கபீரும்: மலையும் கடுகும், அவனுக்குள் அடக்கம் எனச்சொல்லியிருப்பதை,
திரு.கபீரன்பன் இங்கு குறிப்பிட்டிருப்பதை நினைவு கூர்கிறேன்.
~~~
இவ்வுலகம், அவ்வுலகம் என்றெல்லாம் வெவ்வேறாய் காண்பதே கானல் நீர்போலத்தான். கண்முன் தோன்றும் தோற்ற மயக்கங்கள் தான். வெவ்வேறு வடிவங்களில் காண்பது தற்காலிகமானது தான். அதன் தற்காலிகத் தன்மையிலும், அதன் மெய்ப்பொருள் வேறொன்றாய் இல்லை. பானையில் இருக்கும் சுட்ட மண்ணும், மண்ணாய்த் தான் இருக்கிறது. பானையின் வடிவம் மட்டுமே வேறு. அந்த வடிவம் போனபின், அந்தப் பானையும் மண் தானே.
பிரம்மம் இரண்டு வழிகளில் இருப்பதாக அறிகிறோம். ஒன்று விகாரப்பட்டது. இன்னொன்று விகாரப்படாதது. இந்த பிரபஞ்சம், விகாரப்படாததற்கான அடையாளம். ஜீவனோ, விகாரப்பட்டதற்கான அடையாளம் - மண் கடமாவதும் - அந்த கடம், மீண்டும் மண்ணாவதும் அதன் சுழற்சியில் அடங்கிடும்.
~~~
இதுவரை வந்த ஆத்ம போதம் பகுதிகளின் தொகுப்பு இங்கே.

3 comments:

  1. //இந்த பிரபஞ்சம், விகாரப்படாததற்கான அடையாளம். ஆன்மோவோ விகாரப்பட்டதற்கான அடையாளம் //
    மாத்தி சொல்லிட்டா மாதிரி இருக்கே!

    ReplyDelete
  2. வாங்க திவா சார்,
    அப்படியா?

    ReplyDelete
  3. //இந்த பிரபஞ்சம், விகாரப்படாததற்கான அடையாளம். ஆன்மோவோ விகாரப்பட்டதற்கான அடையாளம்//
    ஆன்மா விகாரப்பட்டது என்பதை மாற்றி, ஜீவன் என்று சொல்லியிருக்கிறேன், இப்போது!

    ReplyDelete