Saturday, June 21, 2008

அப்படியே ஆகட்டும்!

"அம்மா" என்று அன்போடு சத்யகாமன் அழைத்த குரல் கேட்டு, அவன் அன்னை திரும்பிப் பார்க்கிறாள்!

"அம்மா, நல்லதொரு வழிநடத்தும் குருவினைத் தேடி அடைய வேண்டிய தருணம் வந்துவிட்டது போல உணர்கிறேன் நான். நமது மூதாதையர் பற்றிச் சொல்லுங்களேன், குருவானவர் கேட்டிடச் சொல்ல வேண்டுமல்லவா..." என வினாவெழுப்பினான், சத்யகாமன்.

"தெரியாது அன்ப" என்பதுடன் அவள் சொல்கிறாள் - "என் இளவயதில் அங்கும் இங்குமாக நான் அலைந்து கொண்டிருந்த போது நீ பிறந்தாய். உன் பெயர் சத்யகாமன். என் பெயர் ஜபலை. நீ ஏன் "சத்யகாமன் ஜபலை" என உன்னை அழைத்துக் கொள்ளக்கூடாது" என்றாளே பார்க்கலாம்!

"அப்படியே ஆகட்டும்" எனச்சொல்லி அன்னையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்ட அவன் கௌதமரிடன் வந்து "மகரிஷிக்கு வணக்கங்கள். அடியேனைத் தங்கள் சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்" என்றான்.

அவரோ, எதிர்பார்த்தபடியே, அவனது குடும்பத்தினைப் பற்றிக் கேட்கலானார். அவனோ, உண்மையை மறைக்காமல், தன் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறான்.

அதைக்கேட்ட மகரிஷியோ, "உன் பெயரில் இருக்கும் சத்யம் போலவே, நீ உண்மையை உரைப்பதிலேயே உன் உயர் பிறப்பை உணர்கிறேன். உனக்கு உயர் ஞானத்தை அடையும் உபதேசத்தினை தொடங்கி வைக்கிறேன்." என்று சொல்லி, அவனை தன் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.

பின்னர், அவர் அவனிடம் நூறு மெலிந்து நலிந்த பசுக்களை ஒப்படைத்து அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் தந்தார். அவற்றை பெற்றுக்கொண்ட அவன், இந்த நூறு பசுக்களை ஆயிரமாக மாற்றிக் காட்டிய பின்னர், நமது குருவிடம் திருப்பி ஒப்படைக்கலாம்" என மனதில் சொல்லிக் கொண்டான்!

பல வருடங்களுக்கு காடுமேடுகளில் அலைந்து குரு தன்னிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை சிரமேற்கொள்கிறான் சத்யகாமன்.

பின்னொருநாள், அவன் மேய்த்த மாடுகளில் ஒன்று அவனருகே வந்து கேட்கிறது, "நாங்கள் இப்போது, ஓராயிரம் மாடுகளாகி விட்டோம். இப்போது உன் எண்ணப்படியே குருவிடம் எங்களை நீ திருப்பி ஒப்படைக்கலாமே?.". பின்னர், "இத்தனை வருடங்களாக நீ எங்களை கவனித்துக் கொண்டதுக்கு மாற்றாக, நான் உனக்கு பிரம்மத்தின் நான்கு பாதங்களில் ஒன்றினை சொல்லுவேன்" என்றது.

"அப்படியே ஆகட்டும் மாடு ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. இந்த நான்கும் பிரம்மத்தின் ஒரு பாதம் ஆகும். இந்த பாதத்தின் பெயர் "திகழ்ஒளி". இந்த நான்கின் மீதும் தியானிக்க ஒளியாக வேண்டும். நெருப்பாகிய அக்னி உனக்கு இதைப்பற்றி மேலும் சொல்லும்" என்றது மாடு.

மறுநாள், ஆயிரம் மாடுகளுடன், தனது குருவின் ஆசிரமத்தினை நோக்கி நடக்கலானான் சத்யகாமன். அன்று மாலைப்பொழுதைக் கழிக்க, நெருப்பினை மூட்டி அனல் வளர்க்க, அருகே வந்து அழைத்தது அக்னி, "சத்யகாமா...".

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது அக்னி.

"அப்படியே ஆகட்டும் அக்னி ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். பூமி, ஆகாசம், வானம், கடல் என்பன அந்த இன்னொரு பாதம். இதன் பெயர் "அந்தமில்லா". இந்த உண்மையினை நீ தியானித்து வந்தால், நீயும் முடிவில்லாதவனாக என்றென்றைக்கும் ஜீவித்திருப்பாய்" என்றது. மேலும் சொல்ல, அன்னப்பறவை ஒன்று வரும் என்றது.

மறுநாள் தொடர்ந்து நடந்த சத்யகாமன், அன்றைய மாலைப்பொழுதினைக் கழிக்கையில், அக்னி சொன்னது போலவே, அன்னமும் அவன் அருகில் வந்தழைத்தது.

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது அன்னம்.

"அப்படியே ஆகட்டும் அன்னம் ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். நெருப்பு, சூரியன், சந்திரன், மின்னல் என்பன. இவை நான்கும் பிரம்மத்தின் இன்னொரு பாதம். இதன் பெயர் "முழுஒளி". ஒளியால் நிறைந்து இந்தப் பாதத்தினை தியானித்தால், இதனை அறியலாம். நாளை, பறவை ஒன்று இதைப்பற்றி மேலும் சொல்லும்" என்றது.

அடுத்த நாள் அதைப்போலவே பறவை ஒன்று வந்து அவனை அன்புடன் அழைத்தது, "சத்யகாமா...".

"நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்" என்றது பறவை.

"அப்படியே ஆகட்டும் பறவை ஐயா" என்றான் சத்யகாமன்.

"மொத்தம் நான்கு பகுதிகள். மூச்சு, கண், காது, மனம் என்பன. இந்தப் பாதத்தின் பெயர் "நிறுவப்ப்பட்டது". இதை நன்கு தியானிக்க, இந்த உலகத்தில் இருந்தாவாறே ஆகாசத்தை அறிய வேண்டும்." என்றது.

இப்படியாக, பிரம்மத்தின் நான்கு பாதங்கள் என்னவென்று சொல்லியதைக் கேட்டவாறு, தனது குருவின் ஆசிரமத்தினை வந்தடைந்தான் சத்யகாமன்.

அவனை அருகில் அழைத்த குரு, "சத்யகாமா, உன் முகம் மிகுந்த தேஜஸுடன் ஒளிருகிறதே - உயர் ஞானத்தை அடைந்தவன் போலே. என்னிடம் சொல், உனக்கு உயர் ஞானத்தை சொல்லித் தந்தவர் யாரோ?" என்றாரே பார்க்கலாம்!

அதற்கு சத்யகாமன், "பெருமதிப்பிற்குரிய ஐயா, எந்த மனிதரும் எனக்கு ஏதும் சொல்லித் தரவில்லை. எனினும், உண்மையான உயர் ஞானத்தினை உங்களிடம் இருந்து பாடம் கேட்கவே நான் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆசிரியரின் ஞானம் மட்டுமே மாணவனுக்கு பலன் தரும் என்பதனால்." என்றான்.

பின்னர் அந்த ஆசிரியரும், தன் மாணவனுக்கு அதே ஞானத்தினை சொல்லித் தந்தாராம், எந்தக் குறைவும் இல்லாமல்.


- சந்தோக்ய உபநிடதம்

33 comments:

  1. நன்றி ஜீவா. உண்மையைச் சொல்லிடறேன். எனக்கு சரியா புரியல. சத்யகாமனுடைய சத்யமும் குருபக்தியும் மட்டும் புரிந்தது.

    ReplyDelete
  2. //சத்யகாமனுடைய சத்யமும் குருபக்தியும் மட்டும் புரிந்தது.//
    நல்லது கவிநயா!
    ஆன்மீகப் பெரியவர்கள் வந்து மேலும் எடுத்துரைத்தால் நல்லது!

    ReplyDelete
  3. ஃப்பு! இப்பவே கண்ண கட்டுதே!

    கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு- சரி.

    அதென்ன? ஆகாயம் வானம்? ஆகாயம் வேறு வானம்வேறா?

    பூமியில்தானே கடல் இருக்கிறது? இதுகூடப் பரவாயில்லை. நிலப்பகுதி நீர்ப்பகுதி எனக்கொள்ளலாம்.

    அதென்ன? நெருப்பு சூரியன்? நெருப்பு வேறு சூரியன்வேறா?

    ReplyDelete
  4. வாங்க அமுதா,
    //இப்பவே கண்ண கட்டுதே!//
    :-)
    //வேறு வேறா...?//
    வேறு வேறானதைத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை - ஒன்றுக்குள் இன்னொன்று என்றிருந்தாலும், அதன் எல்லைகளுக்குள் - அதனை தனியாக பார்க்கும்போது அது மட்டுமே தெரியும் போது, அதைத் தனியாக குறிப்பிடப்படுகிறது. கடல் வாழ் ஜீவராசிக்கு கடலே உலகம். கடலுக்கு அப்பால் இருக்கும் நிலத்தையோ இன்னொரு கடலையோ அறியாமல் இருப்பதுபோல!
    குலோத்துங்கன், தம்மாத்துண்டு சோழநாட்டை ஆண்டுகொண்டு, திரிபுவன சக்ரவர்த்தி என்று பட்டப்பெயர் வைத்துக்கொண்டது போல!
    ஆகாசம் - என்று நான் குறிப்பிட்டது - மேல் உலகம், சொர்க்கம் போன்றவற்றை. நேரடியாக அந்த பெயர்களைக் குறித்தால், அது வேறு உலகம் என பொருள் தருவதால், அதனைத் தவிர்த்தேன்.
    ஒன்றுக்குள் இன்னொன்று அடக்கமாவதுபோல், இவை எல்லாமும் அடங்கியது பிரம்மமாகும். இவை எல்லாமுமாய் நான் இருக்கிறேன் என்று நேரடியான தன்-அறிவு வந்து உணரும்போது, இந்த எல்லைகள் எல்லாம் மறைந்து போகின்றன என மறைகள் சொல்லுகின்றன.

    ReplyDelete
  5. அட! நான்மறை கற்றவரா நீங்கள்??நான் மறைகற்கவில்லை!

    ReplyDelete
  6. நான்மறை நான் மறை என்று பிரித்து சொல்விளையாட்டிற்காக அப்படி எழுதினேன். கோபித்துக் கொள்ளவேண்டாம்.

    ReplyDelete
  7. :-)
    நல்லவேளை, மறை கழலாமல் இருந்தால் சரி எனச்சொல்லவில்லை!
    :-)

    ReplyDelete
  8. மிக அருமையாக, அதே சமயம், எளிதாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா!

    ReplyDelete
  9. மிக்க நன்றி வி.எஸ்.கே ஐயா!

    ReplyDelete
  10. ஒரு பெரும் தத்துவத்தை எவ்வளவு அழகாக ஒரு குழந்தைக்கதையாக விளக்கியிருக்கிறார்கள்..'எங்கு போய் இது முடியும்' என்கிற ஆவலில் மிகுந்த சுவாரஸ்யத்துடன் அடுத்து அடுத்து படித்தேன்..

    படித்து முடித்ததும், 'அட!' என வியந்தேன்..

    அந்த 'ஒன்றுக்குள் ஒன்று அடங்கும்' வித்தைக்கதையை நீங்கள் சொன்ன விதம் அருமை!

    வாழ்த்துக்கள், ஜீவா!

    ReplyDelete
  11. சொன்ன வண்ணம் செய்த ஜீவா வாழ்க. சத்யகாமன் வாழ்க்கையின் வெளிப்பொருளை நன்கு வெளிக்கொணர்ந்தீர்கள். பிறகு வந்து உள் பொருளை சொல்கிறேன்

    ReplyDelete
  12. வாங்க ஜீவி ஐயா, வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. வாங்க தி.ரா.ச ஐயா,
    நல்லது. உட்பொருள் அறியும் ஆவலில் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  14. சத்யகாமனின் கதையை பலவேறு ஸ்திதிகளுக்கு உதாரணமாய் கொள்ளலாம் என்பது எண்ணம்.

    (மெலிந்த பசுக்களை பெற்றுக்கொள்ளுதல்) - குருவின் முன் கேள்விகளற்ற அர்ப்பணிப்பு.
    (அதை ஆயிரம் பசுக்களாக மாற்ற எடுத்துக்கொள்ளும் சங்கல்பம்) - குருவின் மீது கொண்ட நம்பிக்கை.
    (ஆயிரம் பசுக்களாக மாற்ற உழைக்கும் உழைப்பு) - எடுத்த சங்கல்பத்தை நிறவேற்ற எடுத்துக்கொள்ளும் விடா முயற்சி
    (பல்வேறு ஜீவ ராசிகளின் உபதேசத்தை செவிமடுத்தல்) - தான் என்கிற கர்வமற்று எல்லா ஜீவராசிகளையும் மதித்து அதன் மூலம் கற்றுக்கொள்ளுதலின் கவனம்.
    (கடைசியாக குருவிடம் கற்றுக்கொள்ளுதல்) அரைகுறை ஞானமன்றி பாதியிலேயே நாம் கற்றுக்கொண்டுவிட்டோம் என்ற மமதை அன்றி நீண்ட தேடுதல்களுக்கான பதில்களுக்குண்டான ஏக்கம் தரும் பரிபூரண சராணாகதி.

    எல்லோரும் கற்றுக்கொள்ளவேண்டிய மிகப்பெரும் குரு சரிதம் இது.

    ReplyDelete
  15. ஆகா, ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நீதியென அழகாக விளக்கினீர்கள் கிருத்திகா, மிக்க நன்றி.
    மேற்சொன்ன எல்லாமே - நம்பிக்கை, அர்பணிப்பு, விடா முயற்ச்சி, கவனம், சரணாகதி - இவை எல்லாமே இறைவனைத் தேடி அடையும் யோகத்தினை தொடங்குவதற்கு முன்னால் தேவையான, இன்றியமையாத பண்புகள் என காட்டுவதாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  16. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க, கிருத்திகா. மிக்க நன்றி!

    ReplyDelete
  17. சாந்தோக்ய உபனிஷதம் சாம வேதத்தின் இசையான உத்கீதமதை பிருமனுடன்
    ஐக்கியப்படுத்துவதாகத் துவங்கிச் செல்லச் செல்ல, சாம வேதமனைத்தையுமே
    பிருமனாகப் புரிந்துகொள்ள உதவி, "அது நீ ஆக இருக்கிறாய்" எனும் மஹா
    வாக்கியத்தை உணர்த்தி ஜீவாத்மா பிரும்மனே எனும் அறிவுக்கு ஈட்டுச் செல்கிறது.
    இதில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. இக்கதைகள் நமது வ்யவஹாரிக‌
    உலகத்தில் பிரும்மன் எவ்வாறு பரவி உள்ளான் என்பதைச் சொல்லும். சத்யகாமன்
    கதை போலவே ஸ்வேதகேது தனது தந்தையிடம் பிரும்ம அறிவு பெறுவதையும்
    சனத் குமாரன் பிரும்மன் ஆனந்த ஸ்வரூபம் என உணர்வதையும் கூட, இந்த‌
    உபனிஷத் சித்தரிக்கிறது.

    நிற்க. சத்யகாமன் கதையை எடுத்துக்கொண்டாலும், ஒரு கருத்து தெளிவாக்கப்படுகிறது.
    பிரும்மத்தை அறிய ஒரு குருவிடம் செல்கின்ற ஒருவனிடம் நீ இந்த மெலிந்த மாடுகளை
    மேய்த்துவிட்டுவா எனச் சொன்னால், இந்தக்காலமாக இருந்தால் என்ன நடக்கும் ?
    ( இன்னாய்யா இவரு ! நம்ம ஏதோ கேட்டா இவரு ஏதோ சொல்றாரு ! நாம சொன்னது
    வந்த விசயம் இவருக்கு புரியலையோ..எனத்தோன்றுமா இல்லையா ? ஸார் ! நான்
    எம்.டெக் ரான்க் ஹோல்டர் ! நான் வந்தது.. என்று ஒரு தெளிவாக்கம் செய்யத் துவங்குவோம்.)
    சத்யகாமன் செய்தது என்ன ? எதைக் கற்க முற்படினும் முதலில் விநயம். அடக்கம். பணிவு, வேண்டும்
    என்பதை விளக்குகிறது. குருவிடம் அவர் " சார் ! நான் செய்யறேன் . ஆனால் ஒரு க்ளாரிஃபிகேஷன்"
    என்று சொல்லவில்லை. குருவிடம் சரணடைந்தார். அவர் வார்த்தைகளிலே நம்பிக்கை வைத்தார்.
    ஆகவே, அடக்கம், பணிவுடன் நம்பிக்கையும் கொண்டார். பிறகு " என்னாடா, இந்த மெலீசு மாடு
    ஒன்னுலே ரண்டுலே நானூறு சொச்சம், என்னிக்கு குண்டாறது ! என்னிக்கு திரும்பி வந்து சார் !
    என்னிக்கு பிரும்ம வித்தை பாடம் கத்துக்க ஆரம்பிக்கறது ! தசாவதாரம் ரிலீஸை விட டிலே ஆகும்போல‌
    கீதே " என்று டெளட் அவர் மனதிலே எழவும் இல்லை. இல்லை. சரி, அப்படியே இந்த நானூறு மாட்டையும்
    குண்டாகினு கொண்டாந்துட்டோம்னா இன்னோரு ஆயிரத்தைக் கொடுத்து இத மேச்சுக்கிட்டு வா அப்படி
    ந்னு சொல்வாறோ என்ற சந்தேகமும் எழவில்லை.
    குருவின் கட்டளையில்
    மட்டுமல்ல, அவரது வார்த்தைகளின் தான், தான் விரும்பி வந்தது இணைந்திருக்கிறது என்ற ஒரு நம்பிக்கை.
    சாந்தோக்யம் கற்பிப்பது : எவனொருவன் பிரும்மத்தைப் பற்றி அறிய முற்படுகின்றானோ அவனுக்கு
    முதற்கண் தேவை you can say these as fundamentals
    விநயம், அடக்கம், பணிவு, ஆசான் என்று கொண்டபின் அவரது சொற்களில் நம்பிக்கை.
    இதற்கு அடுத்தது : ஈடுபாடு. சத்யகாமன் தனக்கு விதிக்கப்பட்டதை ஏனோ தானோ என்று செய்யவில்லை.
    சுன்டு விரல் வீக்கம் என்று சிக் லீவ் போட்டுச் செல்லவில்லை. தன் மனதை செய்யும் தொழிலில் முற்றிலுமாக ஈடுபடுத்திக் கொண்டான். எந்த ஒரு தொழிலுமே ஒருமைப்படுத்தப்பட்ட மனத்துடன் செய்தால்
    உள்ளத்தைப் பக்குவப்படுத்தும். செய்யும் தொழிலே தெய்வம் எனச் சொல்வோமல்லவா ? என்ன
    தொழில் என்பது முக்கியமல்ல, அதை எப்படிச் செய்கிறோம், எந்த மன நிலையில் செய்கிறோம், என்பதும்
    முக்கியம். செய்யும் தொழிலுக்கு ஏற்ற பலன் கிடைக்குமா, கிடைக்காதா, அது கிடைத்தால் அது போதியதாக இருக்குமா என்றெல்லாம் சத்யகாமன் எண்ணவில்லை. (இது பாட்டிலே ஓடட்டும், ஸைடுலே
    இன்னொரு லோ பட்ஜெட்டுலெ ஒரு படமும் எடுத்துகினே இருப்போம், இத ரிலீஸ் செய்யமுடியாட்டலும் அத ரீலீஸ் பண்ணி கொஞ்சம் காசு பாக்கலாம் ) சத்யகாமன் எடுத்துக்கொண்ட, விதிக்கப்பட்ட தொழிலை, உண்மையுடன் ( underline this ) தவமாகக் கொண்டு ( with truth and austerity ) செய்கிறான். மனம்
    பக்குவ நிலை அடைகிறது. ஞானம் தன்னால் பிறக்கிறது.
    மனம் பக்குவமாகும்போது, வானும் மண்ணும், ஒளியும், வெளியும், மலையும், நதியும் ஒவ்வொன்றுமே
    நமக்கு (உப ) குருவாக அமைகின்றன. அவை பேசாது பேசுகின்றன ! ஞானத்தினைப் புகட்டுகின்றன.
    மேய்த்த மாடொன்று பிரும்மனுடைய ஒரு கால் இது ஒரு கால் அது என்று சொல்லி விடாமல், நெருப்பு உன்னிடம் மேற்கொண்டு சொல்லும் என்கிறது. நெருப்பு அதுவும் சொல்லிவிட்டு மேலே அன்னபட்சி
    சொல்லும் என்கிறது. அன்ன பட்சி யும் தன் பங்குக்கு சொல்லிவிட்டு பறவையைக் காட்டி விட்டு போகிறது.
    ( நாமாக இருந்தால் என்ன நினைப்போம் ..வடிவேல் ஞாபகம் வருகிறது. என்னடா ஒரு மாடு, பட்சி இதெல்லாம் எனக்கு கத்துக் கொடுக்கிறேன்னு சொல்றது. எந்த யூனிவர்சிடிலெடா இதெல்லாம் டிகிரி
    வாங்கி வச்சிருக்கு. என் நேரம் ! அவனவனுக்கு பிரும்ம ஞானம்னா கிண்டலாப் போயிடுத்து..இஸ்டத்துக்கு உளர்றானே .. அதெல்லாம் என் தலையெழுத்து என நொந்து கொள்வார். நாமும் தான் ) சத்யகாமன் ச்ரத்தையுடன் கேட்டு நடக்கிறார். " எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்
    காணபதறிவு." சொல்லவில்லை. அதன்படி நடக்கிறார்.

    சத்யகாமன் திரும்பி வருகிறான். ( ஸார் ! நான் போன இடத்திலேயே எல்லாம் புரிஞ்சு போச்சு !
    என்னை சீக்கிறம் துட்டைக்குடுத்து ரிலீவ் பன்னுங்க சார், ரொம்ப ஹோம் சிக் ஆகிடுச்சு ! என்றா
    சொல்கிறான் ? இல்லையே ! )
    குரு என்ன சொல்கிறார் : சத்யகாமா ! உன்னிடம் ஒரு ஒளி தெரிகிறதே ! நீ ஞானத்தைப் பெற்றவன்போல்
    ஒளிமயமாக இருக்கிறாயே " அதற்கு சத்யகாமன் பதில் : ஐயா ! மனிதரல்லா மற்றவர்களிடமிருந்து
    நான் கற்றதென்பது உண்மையே. இருப்பினும் குருவாகிய உங்களிடமிருந்து தான் அதை நான் கற்க‌
    விரும்புகிறேன். நீங்கள்தான் அதை போதித்திடவேண்டுமென்பது எனது ஆசை "
    சத்யகாமன் குருவிடம் வந்தது அவரிடம் ஞானம் பெறுவதற்காக. அது இடையிலே கிடைத்தது. ஆயினும்
    எதன் பொருட்டு வந்தோமோ அது பூர்த்தி அடையவேண்டும். இது focussing on purpose.
    சத்யகாமன் சொல்லும் வார்த்தைகளைக் கவனிக்கவும் :
    சத்யகாமன் கதை இத்தனையும் சொல்லும். கடைசி வார்த்தைகளைக் கவனிக்க இன்னொன்றும்
    புலப்படுகிறது. ஆசானிடம் இன்னது தான் பேசவேண்டும் என்ற வரையறை எப்போதுமே உண்டு.
    சத்யகாமன் சொல்கிறான்: ஆசார்யாத் ஏவ வித்யா விதிதா ஸாதிஷ்டம் ப்ராபதீதி. ( குருவிடமிருந்து
    கேட்கப்படும் அறிவே எல்லாவற்றையும் விட உயர்ந்தது. ) இதைச் சொன்னபிறகு இருக்கும்
    வார்த்தைகள் : ந கிஞ்சன வீயாயேதி வீயாயேதி (ஒன்றுமே (சொல்லப்படுவதற்கு) விடப்படவில்லை.
    விடப்படவில்லை. )

    எல்லாவற்றிலும் காணப்படுவது உண்மை. வாய்மை. தூய்மை.
    எண்ணத்திலே, பேச்சிலே, செயலிலே
    உண்மை. பிரும்ம ஞானம் பிறக்கச்செய்யும் வழியே.
    MORAL OF THE STORY: A person dedicated to truth will alone attain knowledge and Bliss.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  18. Learning thro' a Guru/
    Neyveli Santhana gopalakrishnan
    demonstrates here:

    http://www.youtube.com/watch?v=9dgnr4iUdNc

    subbu rathinam.
    thanjai.

    ReplyDelete
  19. என்ன அருமயான விலாவரியான விளக்கம்...சுப்பு ஐயா மிக்க நன்றி... ஜீவி இதுபோன்ற மிக பொன்னான விளக்கங்களை படிக்கத்தரும் தங்கள் முயற்சிக்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    எங்கே இன்னும் காணுமே என்று பார்த்தேன்!
    ஆசிரியர் ஒருவர் குருவைப்பற்றி சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது!
    நீளமான விளக்கத்தினை பொறுமையாக வழங்கியதற்கு நன்றிகள் பலப்பல.

    ReplyDelete
  21. சுட்டியில் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் உரை கேட்டேன். தியாகராஜர் தன் குருவைப்பற்றி பாடும் கீர்த்தனையும், தன் சிஷ்யன் தன்னிடம் ஆளுய்ர இராமர் படத்தினைக் கொண்டுவந்ததையும் குறிப்பிட்டது நெகிழ்ச்சியாக உள்ளது. வழங்கியமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  22. //என்ன அருமயான விலாவரியான விளக்கம்...சுப்பு ஐயா மிக்க நன்றி... //
    ஆமாங்க கிருத்திகா மேடம், இதுபோல பெரியவர்கள் விளக்கிக் கேட்பதே பேறு.

    ReplyDelete
  23. வாழ்த்துகள் ஜீவா, அருமையான விளக்கங்களுடன் கூடிய எளிமையான பதிவைக் கொடுத்து வழக்கம்போல் அசத்தி விட்டீர்கள். கிருத்திகாவின் விளக்கமும், சூரி சாரின் அருமையான விளக்கக்கட்டுரையும் மேலும் அருமை!!! மீண்டும் வாழ்த்துகள், ஜீவா!!!!

    ReplyDelete
  24. சத்யகாமன் கதையை ஏற்கெனவே பலமுறை படிச்சிருந்தாலும், இம்முறை புரியாத பல விஷயங்களைப் புரிய வச்சதுக்கு நன்றி.

    ReplyDelete
  25. கிருத்திகா அவர்களின் analysis அழகாக இருக்கிறது!

    ReplyDelete
  26. வாங்க கீதா மேடம் மற்றும் திவா சார். தங்கள் கருத்துக்களைப் படிக்க மகிழ்ச்சி கொண்டேன்.

    ReplyDelete
  27. ஜீவா,
    எளிமையாக எழுதிய நல்ல கதை.
    ஒரு மாற்று கருத்து.

    இந்த கதையை மற்ற இடங்களில் சொல்லும்போது சத்யகாமனின் அன்னை ஒரு விபசாரினி போலவும் சத்யகாமனின் கோத்திரம் என்ன என்று அதனால் தெரியவில்லை என்றும் எழுதுகிறார்கள். ஜீவா அதை "பாலிஷ்டாக" எழுதிவிட்டார்.

    இதில் பிரச்சினையை கிளப்பக்கூடிய வார்த்தைகள் "பஹும் சரந்தி பரிசாரிணி". சாங்கர பாஷ்யத்தில் ஆச்சார்யாள் எழுதும்போது சிறு வயதில் கணவன் இல்லத்தில் அதிதிகளுக்கு "சேவை செய்வதிலேயே" காலம் கழிந்ததால் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ள நேரம் இல்லாமல் போனதாக ... என்று எழுதுகிறார். சரந்தி என்றால் "வேலை செய்து கொண்டு" இருப்பதாக பொருள். அலைந்து கொண்டு என்பதும் ஒரு பொருள். இதையே பிடித்துக்கொண்டு தவறாக சித்தரிக்கப்பட்டது. இப்படி குழப்பம் வரும்போது சரியான பொருள் கொள்ள மீமாம்சை சாஸ்திரம்தான் கை கொடுக்கும். அதன்படி வேலை செய்து கொண்டு என்பதே சரி.
    சாங்கர பாஷ்யம் மட்டும் இல்லாமல் ராமானுஜர் செய்த பாஷ்யத்திலும் அப்படியே தான் பொருள் கொள்ளப்பட்டு உள்ளது.

    அருமையாக எழுதி உள்ளீர்கள். எளிமை படுத்தலின் அவசியமும் புரிகிறது!

    உபதேசம் செய்தவர்கள்: வாயு பகவான் மகிழ்ந்து அவனுடைய மந்தையில் இருந்த காளை மாட்டில் புகுந்து உபதேசம் செய்தாராம். அப்படியே அவன் வளர்த்த சமிதா தான அக்னியும் அன்னத்தின் ரூபத்தில் சூரியனும், நீர் பறவை ரூபத்தில் பிராண தேவதையும் உபதேசித்ததாக இருக்கிறது.

    இந்த சத்யகாமன்தான் என் வலைப்பூவில் ( http://anmikam4dumbme.blogspot.com/2008/06/blog-post_16.html ) எழுதிய கதையில் குரு. சீடன் பெயர் உபகோசலன். இது அதே சாந்தோக்கிய உபநிஷத்தில் வரும் அடுத்த பிரகரணத்தில் உள்ள கதை!

    ReplyDelete
  28. மேலதிக தகவல்களை சேர்த்தமைக்கு நன்றி திவா சார். அந்த அக்னியை பாதுகாக்கச் சொல்லிவிட்டிப்போன குரு இந்த சத்யகாமன் தானா!
    ஆகா, இரண்டு கதைகளுடன் எதோ சம்பந்தம் இருப்பதாக அடி மனதில் ஏதோ தட்டுப்பட்டுக் கொண்டிருந்தது.

    ReplyDelete
  29. adi manasu eppavumee sariyaathaanee sollum!

    ReplyDelete
  30. //சிறு வயதில் கணவன் இல்லத்தில் அதிதிகளுக்கு "சேவை செய்வதிலேயே" காலம் கழிந்ததால் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ள நேரம் இல்லாமல் போனதாக ... என்று எழுதுகிறார். //

    நன்றி.

    ReplyDelete
  31. மிக அருமையாக உபநிடதத்தைத் தமிழாக்கி விட்டீர்கள் ஜீவா. அடியவனைப் போல் வெறும் பொருள் சொல்லும் கோனார் உரை முயற்சியாக இல்லாமல் அழகாகக் கதை உருவில் மூலத்தில் இருப்பது மாறாமல் இன்னும் அழகு கூடும்படி சொல்லியிருக்கிறீர்கள். இடுகை வந்தவுடன் பிரதி எடுத்துக் கொண்டேன். இன்று தான் படிக்க இயன்றது. அப்போது எந்தப் பின்னூட்டமும் வந்திருக்கவில்லை. பின்னூட்டங்கள் இல்லாமலேயே மிக மயங்கிப் போய் வந்தேன். வந்து பார்த்தால் பின்னூட்டங்களில் இன்னும் அதிகமாக உருக்கி மயக்கிவிட்டார்கள். நல்ல பாடம். எல்லாம் அறிந்தது போல் எழுதும் போது மற்றவர்கள் விளக்கங்களைச் சொல்லாமல் சென்றுவிடுகிறார்கள். நான் கதையைச் சொல்லிவிட்டேன்; விளக்கங்கள் பெரியவர்கள் சொல்வார்கள் என்று அடக்கமாக நீங்கள் சொன்ன போது பெரியவர்கள் வந்து விளக்கியிருக்கிறார்கள். இதுவும் ஒரு நல்ல பாடம்.


    திவா ஐயா சொன்ன விளக்கம் ரொம்ப முக்கியமானது. இது வரை நானும் தாசி என்ற விளக்கத்தையே படித்திருக்கிறேன். நேரடியாக உபநிஷத்தைப் படித்த போதும் அப்படிப்பட்ட பொருளையே தருவதாக எண்ணியிருந்தேன். இப்போது ஐயா சொன்ன விளக்கத்தைப் படித்த பின்னர் தெளிவாகிறது. தவறான பொருளைக் கொண்டிருந்ததற்கு வெட்கமாக இருக்கிறது.

    ReplyDelete
  32. தங்கள் புரிதலில் மிக்க மகிழ்ச்சி குமரன்!

    ReplyDelete