Sunday, March 09, 2008

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்

சென்ற பகுதியில் சக்தி சிவனிடம் இராமனைப் பற்றி விளக்கங்கள் கேட்கிறதாகப் பார்த்தோம். மகேஸ்வரன் உண்மையில் இராமன் யாரெனச் சொன்னதுடன், அதை மேலும் விளக்கும் பொருட்டு, சீதை அனுமனுக்குச் சொன்ன விளக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பகுதியில் சீதா பிராட்டியின் உரையினைப் பார்ப்போமா?

தேவி சீதை: ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி சாட்சாத் பரப்பிரம்மமே. அவனே சத்-சித்-ஆனந்தம். ஒன்றென ஒன்றேயானவன். அவனைப் புலன்களால் ஒரு பொருளென உணர இயலாது, எனெனில் அவன் எந்த குணங்களும் அற்றவன். இராமன் மாசற்ற தூய ஆனந்தம். அவன் மாறுதலற்றவன். அறியாமையின் அறிகுறிகள் அற்றவன். எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
சீதையாகிய நானோ பிரகிருதி. எல்லாப் பொருட்களும் உருவாகுவதற்கான இயக்கப்பொருளாகவும், உருப் பொருளாகவும் இருக்கிறேன். அந்த பிரம்மாகிய இராமனின் 'இருப்பினால்' என்னால், அதாவது அவன் சக்தியான பிரகிருதியானால், இந்த அண்ட சராசரங்களை நான் படைத்தது.
(தொடர்ந்து, அயோத்தி நகரில், ரகுகுலத்தில் தசரதநந்தனன் இராமன் பிறந்தது முதல் தொடங்கி, தனக்கு அவனுடன் திருமணம் நடந்ததையும், இராவணன் மாயசீதையை அபகரித்ததையும், போரில் இராவணனை வதைத்து, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகம் நிறைவுற்றது வரை விவரமாக விவரித்தார்.)
இராமன் மேலே செய்தவை யாவும் பிரகிருதி ஆகிய என் மூலமாக நிறைவேற்றியவை. ஆனால் இராமனோ எந்த மாற்றங்களும் அற்றவன்.
மேலும், இராமன் நடப்பதுமில்லை, உட்காருவதும் இல்லை. சோகப்படுவதும் இல்லை. எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை. எதையும் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மொத்தத்தில் அவனிடம் எந்த ஒரு செயலும் நிகழ்வதற்கான தடையம் கூட ஒன்றுமில்லை. அவன் சுத்த ஆனந்தமாக நிறைந்திருப்பதால், அவனில் அசைவேதும் இல்லை, யாதொரு மாறுதலும் அவனில் இல்லை.
அதே சமயத்தில், இராமனை அவன் மாயையில் இருந்து பிரித்தறியும் உயர்ஞானம் இல்லாதவர்களுக்கு, மேற்சொன்ன மாறுதல்கள் யாவும் அவனில் நிகழ்வாதாக தவறாகக் கொள்வர். ஆனால் உண்மையில் மாயையின் உள்ளுக்குள் தான் மாறுதல்கள் எல்லாம் நிகழ்கின்றன.

இவ்வாறாக இராமனின் உண்மை சொரூபத்தினை பிராட்டியார் இயம்பி முடித்தார்.

---------------------- அத்யாத்ம ராமாயணம் : பின் குறிப்புகள் ----------------
மேலே தேவி சீதையின் உரையினைப் பார்க்கையில் அத்யாத்ம ராமாயணத்தின் இலக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. இராம காதையினைக் கொண்டு ஆன்ம உபதேசத்தினை தருவது என்பதே அந்த இலக்காகும். இராமனை பரப்பிரம்மாக பார்க்கும் இந்நூல் - இப்படித்தான் என்று நேரடியாக விளக்க இயலாத பிரம்மத்தினை இக்காதை மூலம் விளக்குகிறது. அதே சமயத்தில் பரமன் ஒருவனாக காட்டப்படுவதுடன், அவனே இஷ்ட தெய்வமாக - ஈஸ்வரனாகவும் பார்க்கப்படுகிறான்.
இராமன் காட்டுக்குச் செல்வதும், கைகேயி மற்றும் மந்திரை மூலமாக நிகழும் சம்பங்கள் அனைத்தும் அவன் மாயையின் திருவிளையாடலே என்று விளக்குகிறது அத்யாத்ம ராமாயணம்.
மேலும்: இராவணனால் கவரப்பட்ட சீதையும் உண்மையான சீதையல்ல. இராமனின் மாயசக்தியால் உருவாக்கப்பட்ட மாயசீதை. உண்மையான சீதையோ அக்னி தேவதைக்குள் ஒளித்து வைக்கப்படுகிறார். யுத்த காண்டத்தின் நிறைவில், மாயசீதை அக்னிப்பிரவேசம் செய்ய, இராமன் தன் சீதையை அக்னியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் போன்றோரோ, வன் கையாலேயே முக்தி அடைய விரும்பியதால், போரும் மூண்டு, அதில் தங்கள் அஞ்ஞானத்தை முடித்துக் கொள்கின்றனர். அவர்கள் விபீடனனைப்போல் பக்தி மார்கத்தில் செல்லாமல், இராமனுடன் சண்டை இடுவதே தங்களுக்கு எளிதாக முக்தி அடைவதற்கான வழியாகக் கொண்டனர்.
-----------------------------------------------------------------
கம்பராமாயணத்திலும்:

போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

முன்பு தன் அண்ணன் விபீடனனார் சொன்னதுபோல்,

'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

சிவன், பிரம்மன், திருமால் - இவர்களில் யாருமல்லன் இராமன் - இவர்களுக்கெல்லாம் மேலான பரமன் - வேதமுதல்வனோ என்கிறான்.

12 comments:

  1. //'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
    அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
    தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
    இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
    (கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)//

    கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு அற்புதமான பாடலை எடுத்து அதனை அழகாக
    கையாண்டதற்கு தங்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.
    ராவணனுக்கு ராமன் யார் ? எனத் தெரியும் என்பது போலவே வால்மீகி ராமாயணம் சொல்கிறது.
    போர்க்களத்தில் இன்று போய் நாளை வா எனும் வார்த்தைகளைக் கேட்டு
    நொந்து போன இராவணன் தனது பரிவார ராக்ஷஸர்களிடம் பேசுவதாக உள்ளது.
    "இந்திரன் போன்றவனுக்கு சமம் என்று கருதப்பட்ட நான் இப்பொழுது ஒரு
    மனிதனால் தோற்கடிக்கப்பட்டேன்." 6வது காண்டத்தில் 60 வது ஸ்லோகத்தில்
    இருப்பது இராவணனின் நினைவுக்கு வருகிறது. "மனிதனால் உனக்கு ஆபத்து
    வரும்"
    ராவணனுக்குத் தான் இறப்பதும் தெரிந்தேதான் இருந்தது.
    vidhitham maanusham manyE raamam dasarathmajam (VI 60 8 )





    "பிரும்மா அப்பொழுது என்ன சொன்னாரோ அது உண்மையாயிற்று."
    More than that,
    திடீரென இராவணனுக்குப் புலப்படுகிறது ( 6 60 8 ‍= 10)
    தனது ஒரு திக்விஜயத்தின்போது அனாரண்யர் மேல் யுத்தம் தொடுத்ததும், அனாரண்யரிடம் ஒரு சாபம் வாங்கிக்கொண்டதும் ஞாபகம் வருகிறது. "என்னுடைய‌
    குலமான இக்ஷ்வாகு வம்சத்தில் ஒருவன் ராமன் எனப்பெயருடன் பிறப்பான். அவன்
    உன்னை ஒரு யுத்தத்தில் கொல்வான்" என அனாரண்யர் சொன்னதும் இராவணன்
    ஞாபகத்திற்கு வருகிறது.


    ஆக, இராவணனுக்குத் தான் ஒரு மனிதனால் கொல்லப்படுவோம் எனத் தெரிந்ததுதான்.

    பின் ஏன் இவன் சிவனோ, திருமாலோ என ஐயமுறவேண்டும்?

    கம்பனையும், வால்மீகி இருவரையும் படித்தவர்கள் அருள் கூர்ந்து தொடர்ந்து
    சொல்லவேண்டும்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullavalaipathivugal.blogspot.com
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  2. வாங்க சுப்புரத்தினம் ஐயா.

    இராவணன் இராமனின் இறைத்தன்மையை மற்றவர் சொல்லக் கேட்டு அறிந்திருந்தாலும், தன் அகங்காரம் தலைக்கேறிய ஆணவத்தினால், அதை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. தன்னை வெல்ல யாரால் இயலும் என்ற கர்வம் அவன் அகக்கண்களையும் கட்டிவிட்டது.

    போரில் இராமன் என்னும் மானுடனை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற எண்ணிக்கையில் சரிவினை கொஞ்சம் கொஞ்சமாக சந்திக்கும் வேளையில்தான் அவனுக்கு முன்னால் விபீடனன் போன்றோர் சொன்ன அறிவுரைகளும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. அந்த நினைவுகளை அசை போட்டவாறே அவன் இந்த வாசகங்களை சொல்கிறான் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. excellent vilakam, i guess it is better to start the day by reading your blog first to experience fresh good thoughts...

    ReplyDelete
  4. Good Day to you, delhi tamilan!

    ReplyDelete
  5. // இராமனோ எந்த மாற்றங்களும் அற்றவன்.
    மேலும், இராமன் நடப்பதுமில்லை, உட்காருவதும் இல்லை. சோகப்படுவதும் இல்லை. எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை. எதையும் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மொத்தத்தில் அவனிடம் எந்த ஒரு செயலும் நிகழ்வதற்கான தடையம் கூட ஒன்றுமில்லை. அவன் சுத்த ஆனந்தமாக நிறைந்திருப்பதால்//

    சலனமில்லாதவன் சிவன் என்பார்களே அதனைப் போன்ற வரிகள்.

    அத்யாத்ம ராமாயணம், கேள்விப் பட்டிருந்தேன், இன்று படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி ஜீவா!

    ReplyDelete
  6. நண்பர்களே,
    இராவணன் ஏன் அவ்வாறு சொல்கின்றான் - கம்பர் வாக்கில் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.
    வால்மீகத்தையும்,இன்னும் மற்ற பிற வடமொழி இராமகாதையயும் படித்தவர்கள் கம்பனின் இராமகாதையைப் படித்தால் ஒரு பேருண்மையை தெற்றென அறிவார்கள்.
    வால்மீகம் இராமனை தெய்வாம்சம் என்றே பேசுகிறது.மாலின் அம்சமாகப் பிறந்தவன் என்று போற்றுகிறது;ஆனால் சம்பவக் கோர்வைகளில் ஒரு நிறைமனிதனுக்கும் கீழாக சில இடங்களில் உணர்வு வயப்படுகிறான் வால்மீக இராமன்.(கிட்கிந்தா காண்டம்-சீதையைக் காணாதபோது,சுக்ரீவனை மட்டுறுத்த வேண்டிய வேளையில்,அயோத்யா,ஆரண்ய காண்டங்கள்-தயரதன் மறைவு,சீதையுடன் வனம் போதல்).
    இந்த இடங்களில் வால்மீகம் காட்டும் இராமனின் உணர்வு வயப்பட்ட பேச்சுக்கள்,புலம்பல்கள் நிறைமனிதனின் கீழ்ப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
    இத்தனையும் அவன் தெய்வாமசமான மனிதன் என்று நிறுவிய பின்னும்.

    ஆனால் கம்பனின் இராமன் - முதலில் ஒரு நிறைமனிதன். அவனிடம் பரம்பொருளின் குணங்கள் இருக்கின்றன என அவனைச் சந்திக்கும் பாத்திரங்கள் வாயிலாகவே,அவர்களில் நோக்கிலே கம்பன் சொல்லிச் செல்கின்றான்.
    இராமன் எந்த இடத்திலும்,ஆசிரியன்(கம்பன்) வாக்கிலோ,தன் வாக்கிலோ-Self Person- தான் கடவுளின்,பரம்பொருளின் அவதாரம் என்று சொல்லுவதில்லை;மற்ற பாத்திரங்கள் வாயிலாகவே இக்கருத்து எடுத்துச் செல்லப்படுகிறது.
    இந்நோக்கிலே தான் இராவணின் இந்தப் பாடல் அமைகிறது.
    ஒரு மனிதனைத்தான் நான் எதிர்த்தேன்,பகைகொண்டேன்,(என்னையே நம்பி நானிந் நெடும்பகை தேடிக்கொண்டேன்..யுத்தகாண்டம்) என்றெல்லாம் நினைத்திருக்கும் போது,கடைசி நாளுக்கும் முந்தைய நாளின் போரில் இராமனின் வன்மையைப் பார்த்தபின் இராவணனுக்கு இந்த ஐயம் வருகிறது !!!!!!!!!!

    ReplyDelete
  7. இதிகாசாங்களும் புராணங்களும் சொல்லத்தலைப்படுவது சம்பவங்களைத்தாண்டிய உட்கருத்துக்களைத்தான். அதை அறியாத பலரும் ஏதோ ஒரு இலக்கியவாதியின் படைப்பை ஆராய்வது போல் ஆராய முற்படுவது அவர்கள் கடந்து செல்ல வேண்டிய தூரங்களை குறிப்பதாகவே அமைகிறது. ஒரு நிறைவான படைப்பை மிக நிறைவாக தருகின்ற தங்கள் பாங்குக்குஎன் வந்தனங்கள். வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  8. வாங்க மதுரையம்பதி,
    அத்யாத்ம இராமாயணத்தை தங்களுக்குத் தருவதில் எனக்குத்தான் மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. அறிவன்,
    நீங்கள் சொல்லுவது சரிதான். கம்பன் இராமனை பரம்பொருளாக - தெளிந்தவர் மூலமாகச் சொல்லி ஆனந்தப் படுகிறான்.
    இதன்மூலம் அவன் தெளிவிப்பது என்னவென்றால் - தெரிந்தால் அரக்கனுக்கும் தெரிவான் பரமன் - என்பதே!

    ReplyDelete
  10. அழகாச் சொன்னீங்க கிருத்திகா மேடம் - தூரம் குறைகிறது என்று. பரவாயில்லை, அவங்க இன்னும் கொஞ்சம் தூரம் கூட நடக்கணும் அவ்வளவதான். அவங்களும் சீக்கிரமாக வந்திடுவாங்க!
    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. இடுகையும் பின்னூட்டங்களும் மிக நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  12. வருக குமரன், இதன் அடுத்த பகுதியை தொடர வேண்டும் - அதுவே முக்கியமான பகுதி - ஸ்ரீராமஹிருதயம்!

    ReplyDelete