Tuesday, July 17, 2007

முள் குச்சியும் மெய் உச்சியும்!

'நிஷ்காம கர்மா' என்ற சொல்லை பயன்படுத்தக் கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்று பார்ப்போம். கர்மம் என்றால் செயல், 'நிஷ்காம கர்மம்' என்றால், 'ஆசைகளிலும் விளைவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும்' மனதை விட்டுவிடாத செயல் என்று சொல்லலாம். பகவத் கீதையின் முக்கிய சாரமான 'கர்ம யோகம்' தான் 'நிஷ்காம கர்மம்'.

இப்படிச் செய்தால் இன்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் மட்டுமே மனதை செலுத்தினால், செய்யும் செயலில் கவனம் இருக்காது. செய்யும் செயலில் கவனம் இல்லா விட்டால், செயலில் நிறைவு கிட்டாது.

செயலின் விளைவு எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதற்காக, என்ன ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளில்லை. நான், எனது, என்னால் தான் இந்த வெற்றி என்ற அகந்தை, என்னால் தான் இந்த தோல்வி என்கிற தாழ்வு மனப்பான்மையோ ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
.


என்ற குறளை இங்கே குறிப்பிடுவது இங்கே சரியாக இருக்கும்.
இன்பமோ துன்பமோ, எது வரினும் எல்லாம் எம்பெருமானின் பிரசாதம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.

ஒரு சம்பவத்தின் மூலமாக, ரமண மகரிஷி இதனை அழகாக விளக்குகிறார்:

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம் 'நிஷ்காம்ய கர்மம்' பற்றி கேட்டார். ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார். கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை நீக்கலானார்!. அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர் என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள்!

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்! இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

கேள்வி வினவிய பண்டிதரோ, ஆகா, என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றார்!

14 comments:

  1. Anonymous11:04 PM

    ரமணரின் குச்சிக் கதை மிகவும் நன்றாக இருந்தது. மேலும் இதுபோல நீதிக் கதைகளை கட்டுரைகளாக எழுதவும்...

    ReplyDelete
  2. //இதுபோல நீதிக் கதைகளை கட்டுரைகளாக எழுதவும்...//
    நிச்சயமாக!
    கரும்பு தின்னக் கூலி வேறு வேண்டுமா என்ன?

    ReplyDelete
  3. I do not know,when I will get this kind of wisdom. still trying.
    thank you for this good guidance.

    ReplyDelete
  4. //thank you for this good guidance...//
    Over to Maharishi!

    Thanks for dropping in!

    ReplyDelete
  5. தலைப்பை பார்த்தது குண்டலினி,ராஜ யோகம்னு சொல்ல போறிங்களோனு நினைச்சேன்!தத்துவம் எல்லாம் போதிக்கறிங்க , அப்போ பெரிய சிந்தனாவாதியா தான் இருப்பிங்க!

    இன்பத்துல் இன்பம் விழையாதவன் மட்டும் அல்ல , துன்பத்துகே துன்பம் தருபவனும் துன்பம் அடையமாட்டான்!

    இடும்பைக்கு கிடும்பை கொடுப்பர் இடும்பைக்கு

    இடும்பை படா ஆர்.

    ReplyDelete
  6. வாங்க வவ்வால்,

    சிந்தனாவாதியெல்லாம் ஒண்ணும் இல்லை. படித்தை திருப்பிச் சொல்கிறேன் - அவ்வளவுதான். அதனால் படித்ததும் சீராக மனதில் நிலைக்கிறபடியால்!
    

    ReplyDelete
  7. ஜீவா, நன்று - பதிவு அருமையாக இருக்கிறது. குறள், ரமணர் குச்சி கொடுத்து நிஷ்காம கர்மா பற்றி விளக்குவது. ம்ம்ம்ம்.

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே

    கடமையைச் செய் - பலனை எதிர் பாராதே

    ஸ்திரப்ப்ரக்ஞன் - பரப்பிரும்மம்

    மனதில் தோன்றிய அடிவேர் சலனம் காட்டுகிறது

    ReplyDelete
  8. சிந்திக்க வைக்ககூடிய பதிவு. ஆனால் இன்றைய வாழ்க்கை முறைக்கு ஒத்து வருமா ஜீவா ?

    உதாரணம்:

    நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஓரளவுக்கு பெயர் எடுத்த கணிப்பொறியாளன் என்ற நிலையில் இருக்கிறேன். என்போன்று ஒரு அமெரிக்கரும் உள்ளார். எனது வருவாயைவிட அவருடைய வருவாய் மும்மடங்கு. Extra அரை மணி நேரம் வேலை செய்தால் கூட கறாராகப் பணம் கறந்துவிடுவார். 'தான்' என்று அவர் அடிக்கும் தம்பட்டங்கள் சொல்லி மாளாது !

    அவரிடம் வேலை சொல்லவே தயங்கி, இதெல்லாம் செய்யாமல், அமைதி காக்கும் நம்மிடம், எதுவென்றாலும் தள்ளிவிடுவர்.

    தவறாகச் சொல்லவில்லை ... நாம் இது போல் பல அறிவுரைகளைப் படித்து அதன் வழி நடக்க நினைக்கையில் தற்கால வாழ்வில் வேதனை தான் மின்ஞ்சுகிறது !!!

    ReplyDelete
  9. வருக சதாங்கா,
    நன்நெறியில் பயில்பவருக்கும், நற்சிந்தனை கொண்டவருக்கும் தோல்வி என்பதே இல்லை, நீண்ட காலத்தில். பயனை எதிர்பார்த்து ஒரு செயலை செய்வதில் எந்த தவறும் இல்லை. பயனின் விளைவு எப்படி இருந்தாலும், அதை ஒரே மனப்பக்குவத்துடன் ஏற்றுக் கொள்ளும் இயல்பினைத்தான் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    இந்தக் கதையில், ரமண மகரிஷி, அந்த் குச்சியை தயார் செய்யும் போது, இதற்கு நிச்சயமாக பலன் இருக்கும் என்று அசைக்கமுடியாத, திடமான நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், அதற்கான பயன் இயற்கையாக ஏற்பட்டது. அதுபோல நாம் செய்யும் எந்த செயலிலும் நாம் திடமான நம்பிக்கை கொண்டு செய்ய வேண்டும். ஏனோ தானோ என்றிருக்கக் கூடாது.

    //அவரிடம் வேலை சொல்லவே தயங்கி, இதெல்லாம் செய்யாமல், அமைதி காக்கும் நம்மிடம், எதுவென்றாலும் தள்ளிவிடுவர்.//
    அவர் உங்களிடம் வேலைகளை தள்ளி விட்டதில், அதிலும் உங்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது எனக் கொள்ளவும். ஆனால் அந்த வேலைகளை அமைதியாக யாருக்கும் தெரியாமல் செய்ய வேண்டாம். உங்கள் மேலாளரோ, இல்லை அவரின் மேலாளரோ, மற்றவர்களோ, நீங்கள் அவரின் வேலைகளையும் சேர்த்து செய்கிறீர்கள் என்பதனை தெரியப் படுத்தவும். இதனை வேதனை இல்லாமல் இயற்கையாக செய்யவும்.
    உதாரணத்திற்கு. ஒரு நீங்கள் ஒரு சிக்கல் இன்னவென்று கண்டு பிடிக்கிறீர்கள் என்றால் அதனை மின் அஞ்சல் மூலமாக எல்லோருக்கும் தெரியப்படுத்தவும். யார் இந்த சிக்கலை சரி செய்கிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்க்கவும். நீங்களே அதற்கு தீர்வு கண்டுபிடுக்க வேண்டி ஏற்பட்டு விட்டால், அவ்வாறு செய்தவுடன், முதலில் மின் அஞ்சல் செய்த அனைவருக்கும், நீங்கள் இந்த சிக்கலை தீர்த்து விட்டீர்கள் இன்னொரு மின் அஞ்சல் செய்யவும். இதனால் அனைவருக்கும் இந்த சிக்கலையும் தீர்த்து வைப்பவர் என்று தெரிய வரும். எல்லோரிடையேயும் தானாக உங்களுக்கு மதிப்பு வந்து சேரும்.
    அதே சமயத்தில் இந்த வேதனை தரும் நபரிடம் நன்றாக, இயல்பாக பேசி, அவரிடம் நல்லுறவு கொள்ளவும். அவரிடம் நீங்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்தவதால் பெருமைகள் அடைவதாக அவருக்கு சொல்லவும். நாளடைவில் அவரே சில வேலைகளையும் செய்யத் துவங்குவார்.

    இப்படியாக இன்னும் சிலவற்றையும் சொல்லலாம். மற்றவருக்கு சொல்லுவது எளிது. அவரவர் சூழ்நிலை அவரவர்க்குத்தான் தெரியும். மேலும் இவையெல்லாம் உங்களுக்கே தெரிந்தவைதான், நான் எதையும் புதிதாக சொல்லவரவில்லை. மொத்தத்தில் திடமான நம்பிக்கையுடன் செயல்களைச் தொடர்ந்து செய்யவும். தானாக வழிகள் பிறக்கும். அவற்றை தகுந்த சமயத்தில் உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயலவும், வெற்றி நிச்சயம்.

    ReplyDelete
  10. சீனா சார்:
    //போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே
    //
    இந்த வரிகள் கண்ணதாசனை நினைவு படுத்துகின்றன!
    சர்வம் கிருஷ்ணார்பணம்.

    ReplyDelete
  11. ஜீவா, சதங்காவின் குழம்பிய மனதிற்கு ஆறுதல் அறிவுரை அழகாக அருமையாகக் கூறி இருக்கிறீர்கள். உண்மை. பலனை எதிர் பாராமல் செய்யும் எக்காரியமுமே வெற்றிக்கு அடி கோலும். எதிர் பாராமல் ஒரு நன்மை விளையும். நன்று நன்று

    ReplyDelete
  12. நன்றி சீனா சார்,

    மேலும் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நமக்கு சுய நம்பிக்கை குறைந்து விடும் சமயங்களில் எல்லாம் வல்ல இறைவனை நாடுதல் உதவி செய்யும்.
    ஏனெனில்,
    தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிதல்லவா!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ஜீவா, இந்த "சார்" விட்டுடுங்களேன்

    குறள் எல்லா இடத்தும் கை கொடுக்கிறது

    ReplyDelete