Sunday, July 29, 2007

டாடா தொழிற்சாலையும் சந்தர்ப்பவாத அரசியலும்

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் டாடாவின் புதிய டைட்டானியம் டை ஆக்ஸைட் தொழிற்சாலை நிறுவும் பணியில் பல்வேறு சர்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.

ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!

தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.

மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.

குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.

கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.

மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.

இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.

என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?

எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!

8 comments:

 1. ராஜா2:39 PM

  விஜய்காந்த் கட்சிக்கு அறிவுரை சொல்வது போல் இருக்கிறது உங்கள் பதிவு!

  ReplyDelete
 2. ஜீவா,

  எனக்கு தெரிந்து இப்போது தான் சூடான ஒரு விஷயத்தை தொட்டு இருக்கிங்க!

  டாடா சொல்வது போல அங்கே 1000 பேருக்கு நெரடியாகவும் , 3000 பேருக்கு மறைமுகமாவும் வேலை என்பதே ஏமாற்று வேலை ஏன் எனில் நிலம் கொடுப்போர் என்னிக்கையே 5000 பேருக்கு மேல் வரும் என்பதே தற்போதைய நிலை!

  இதில் தொழில் நுட்ப அடிப்படையில் அவர்கள் ஏற்கனவே வேலைக்கு என பலரை தேர்வு செய்துவிடுவார்கள், உண்மையில் நிலம் கொடுப்போர் அனைவருக்கும் மண் அள்ளிக்கொட்டும் கூலி வேலை தான் அங்கே கிடக்கும்!

  சரி வேலை வாய்ப்பே குறைவாக உள்ள பகுதியில் இதுவே பெரிய விஷயம் எனக்கொண்டால் கூட , அவர்களுக்கு என பணி நிரந்தரம் எதுவும் தருவார்களா?

  கடல் நீரை குடி நீர் ஆக்கி பயன்படுத்துவதாக சொல்கிறார்கள் அத்திட்டம் நடை பெரும் வரையில் நீர் தர வேண்டும் என மானில அரசை கேட்டுள்ளார்கள்(ஒப்பந்தம் அப்படி தான் உள்ளது). அவர்கள் கடல் நீரை நன்னீர் ஆக்குவது என்று? அதுவரைக்கும் நீருக்கு என்ன செய்வார்கள் , தாமிரபரனி நீரை தான் உருஞ்சுவார்கள்!

  உண்மையில் அங்கு நிலத்தின் சந்தை விலை ரொம்ப குறைவு(10000 முதல் 15000 தான் ஒரு ஏக்கர்) எனவே தான் அப்படி சொல்கிறார்கள், தற்போதைய போராட்டங்களின் விளைவாக 1.25 லட்சம் தரலாம் என அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

  எனவே தற்போது தருவதாக சொன்ன பணம் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. போராட்டம் எதிர்ப்பு என நடவடிக்கை இல்லை எனில் இது கிட்டியிருக்காது! எனவே இது போராட்டத்தின் பலன் என உறுதியாக சொல்லலாம்!

  சராசரியாக 3 டன் மண்ணை சுத்தப்படுத்தினால் , 1 டன் டைட்டானியம் டை ஆக்சைட் கிடைக்கும் என்கிறார்கள் , ஒரு டன் சந்தை விலை 1 கோடி. எனவே எப்படி பார்த்தாலும் , டாடாவிற்கு லாபம் தான்!

  டாடா , மற்றும் அரசு தற்போது சொன்ன வாக்குறுதியை செயல் படுத்தினால் அம்மக்களுக்கு சுபிட்ஷம் தான்!

  ReplyDelete
 3. வாங்க வவ்வால்!, முதலில் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி!  இப்போது என் மறுமொழிகள்:  //டாடா சொல்வது போல அங்கே 1000 பேருக்கு நெரடியாகவும் , 3000 பேருக்கு மறைமுகமாவும் வேலை என்பதே ஏமாற்று வேலை...//

  ஏமாற்று வேலை என்று இதை வைத்து மட்டும் சொல்ல முடியாது. நிலம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் வேலை என்ற உத்திரவாதம் தர எதிர்பார்க்க முடியாது...


  தொழில் நுட்ப அடிப்படையில்தான் வேலைவாய்ப்புகள் இருக்க வேண்டும்.

  அந்த ஊரில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைக்க வேண்டும் என்ற வட்டத்தை தாண்டி, சுற்றி இருக்கும் பல்வேறு இடங்களில், பல்வேறு மாவட்டங்களில், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை ஏற்படுத்தும் அல்லவா?

  மேலும், வேலைக்காக மொழி தெரியாத வெளி மாநிலங்களுக்கு சென்று அவஸ்தைப்படும் எத்தனை பேர், சொந்த மாநிலத்தில் வேலை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்?  நிலத்தை கொடுப்பவர்களுக்கு அந்த நிலத்தின் திறனுக்கு ஏற்ப கூடுதல் பணத்தையும் சேர்த்துக் கொடுக்கலாம். மேலும் தொழிற்சாலையின் பங்குப் பத்திரங்கள் தருவது போல பிற்காலத்தில் பயன் தரும் ஏதேனும் வழி செய்யலாம்.  நிலத்தடி நீரையோ, ஆற்று நீரையோ தொழிற்சாலைக்கு பயன்படுத்த மாட்டோம் என்று தொழிற்சாலை சார்பாக சொன்னதாக கேள்வி. கடல் நீர் சுத்திகரிப்பு முழுமை அடைந்த பின்னரே தொழிற்சாலை துவங்க வேண்டும் என்ற விதிமுறையை கொணரலாம்.  பிரச்சனைகளே இல்லாமல் இருந்துவிட முடியாது.

  ஆனால் அவற்றை பாஸிடிவ்வாக தீர்க்க முயல வேண்டும்.  இதற்கான தொலைநோக்கு அரசாங்கத்தில் இருந்து முதலில் வர வேண்டும். அதை விடுத்து, மக்களிடம் 'கருத்து கேட்கிறேன்' அவர்களும் கூடாரம் விரிப்பது சரியில்லை.  அதேபோல் எதிர்கட்சிகளும் என்னதான் முன்னேற்றம் ஏற்பட்டாலும் எதிர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள் பாருங்களேன்!

  ReplyDelete
 4. Anonymous4:11 PM

  கேரளாவில் அரசாங்கம்தானே டைடானியம் தயாரிக்கிறது?
  பல கோடிகள் லாபமும் ஈட்டுகிறது. தமிழ்நாட்டில் மட்டும்
  ஏன் இப்படி செய்ய முடியாதாம்?

  ReplyDelete
 5. வெளியில் இருந்து பார்த்தால் அவர்களின் வாக்குறுதிகள் எல்லாம் சர்க்கரை தடவியதாகத்தான் தெரியும்! உண்மையில் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

  நெய்வேலியில் நிலம் கொடுத்தவகளுக்கே இதுவரை வேலை முழுதாக கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அது மத்திய அரசு நிறுவனம் , அனல் மின் நிலையம் ஆரம்பித்து 50 ஆண்டுகளும் ஆயிற்று இன்னும் வழக்கு வாய்த்தா என ஓடிக்கொண்டு இருக்கிறது!

  ஓவ்வொருவருக்கும் வேலை இல்லை எனில் , என்னத்துக்கு இத்தனை விளம்பரம் , அங்குள்ளவர்கள் வேலை வாய்ப்பு மேம்படும் என்றெல்லாம் ஏன் சொல்லனும்!

  டாடா அங்கு எதுவும் புதிதாக தொழில் சாலை கட்டி புதிதாக எதுவும் உற்பத்தி செய்ய போவதில்லை அவர்களின் நிலத்தில் உள்ள மண்ணை தோண்டி தான் காசு எடுக்க போகிரது! எனவே மண் தான் மூலதனம் அதை தருபவனுக்கு நன்மை செய்தால் என்ன. இப்பொழுதே எல்லாருக்கும் வேலை தர வேண்டுமா என்று நீங்கள் கேட்பதை போலத்தான் அவர்களும் வருங்காலத்தில் கேட்பார்கள்!

  அதே போல மண்ணை தூய்மை செய்ய மிக அதிகமாக நீர் வேண்டும் , மண்ணை அலசி அலசிதான் எடுப்பார்கள், அதற்கான நீர் ஆதாரம் என்ன? கடல் நீரை குடி நீர் ஆக்கும் வரைக்கும் தாமிரபரணி நீர் தர வேண்டும் எனதான் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள் என சொன்ன பிறகும் எப்படி எனக்கேட்டால் என்ன சொல்வது!

  டாடாவோ யாரோ வரலாம் ஆனால் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் , மேலும் எவ்வகையிலும் சுரண்டல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம்!

  ReplyDelete
 6. அனானி, அரசாங்கமே ஏற்று நடத்தலாம். இது இல்லாவிட்டாலும் எத்தனயோ தொழில்கள் இருக்கின்றன.  நம்மிடம் இருக்கும் மனித வளத்தை தொழில் வளமாய் மாற்ற வேண்டும்!

  ReplyDelete
 7. //உண்மையில் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா//  //நெய்வேலியில் நிலம் கொடுத்தவகளுக்கே இதுவரை வேலை முழுதாக கொடுக்கவில்லை.//  நிறைவேற்ற வேண்டும்.

  அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற வகையில் நமது அரசியல் சட்டம் மாற வேண்டும்.  //இப்பொழுதே எல்லாருக்கும் வேலை தர வேண்டுமா //

  நான் சொல்வதை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். தொழில்நுட்ப வேலைக்கு, ஒன்றுமே தெரியாத ஒருவரை எப்படி வேலைக்கு அமர்த்துவது? அந்த பணிக்கான அனுபவமோ படிப்பறிவோ இருந்தால்தானே?  இன்றைக்கு அங்கிருப்பவர்களுக்கு அவ்வளவாக தொழில்நுட்ப வேலை கிடைக்காவிட்டாலும், அடுத்து வரும் சில வருடங்களில், அங்கு வளரும் மாணவர்களுக்கு, என்ன படித்தால் இங்கு வேலை கிடைக்கும் என்று தெரிந்து விடும். பின்னர் அதற்கேற்றார்போல் தங்கள் படிப்புகளே தேர்ந்தெடுத்துக்கொள்ள வழி வகையாகவும், ஊக்கமாகவும் இது வழி வகை செய்யும்.  விவசாயம் செய்ய இயலாமல் வரண்டு போன நிலங்கள் எத்தனை எத்தனை. அதுபோன்ற கிராமப்புறங்களில் தொழில் வளம் பெருகிட தொழிற்சாலைகள் பெருக வேண்டும்.  தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சீர்கேடு போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றுக்கும் சரியான தீர்வுகள் இல்லாமல் இல்லை.

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails