தெளிவான தண்ணீரில் தெரியும் பகலவனின் பிம்பத்தினைப்போல,
இதயக் கண்ணாடியில் தெரியக்கூடிய சக்தியானது -
சகுணப் பிரம்மம்.
ஆனால் இந்தக் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது!
ஏனெனில் மாசு படிந்த கண்ணாடியில் தெரியும் பிம்பமானது சரியான ஒன்றாக இருப்பதில்லை.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
நம்முடைய புறக் கண்ணாடிகளில் அழுக்கு படிந்தாலும் தெரியும் பிம்பமானது மாறுவதில்லை. என்ன மங்கலாகத் தெரியும், அல்லது சில இடங்களில் தெரியாமல் போகும்.
இதயக் கண்ணாடியில் படிந்த மாசு என்பது - நான்/எனது என்பது போன்ற எண்ணங்கள். இந்த மாசினைத் துடைக்காவிட்டால், இதயக் கண்ணாடியில் - எந்த பரமனின் துகளாக இந்த ஜீவன் இருக்கிறதோ - அந்த பரமனின் சகுண பிம்பத்தினைக் காண இயலாமல் போகிறது. அதற்கு பதிலாக அவித்தையினால் தன் வயப்படுதலே நிகழ்கிறது. இதனால் தன் செயல்கள் எல்லாம் தன்னாலேயே நடக்கின்றதென நினைக்கின்றோம். உண்மையில் நம்மை ஆட்டுவிக்கும் சக்தியின் கையில் நாம் வெறும் கருவிதான் என்பதனை உணர முடிவதில்லை.
சுஃபி கவிஞர் ரூமியும் சொல்லுவார்:
இந்த மாசானது பிறக்கும்போதே இந்த ஜீவனோடு இணைந்தவிட்ட ஒன்று. சக்தியினால் பிறப்பானது நிகழச் செய்யப்பட்ட சித்து வேலை. இதனால் தான் சக்தி அன்னையை உலகத்தை ஈன்ற அன்னையாகச் சொல்கிறோம். அவள் அந்த மாயையினை ஏற்படுத்தியதனால் உலகில் உழல்கிறோம்.
இந்த கண்ணாடியை என்ன செய்வது?
இந்த கண்ணாடியில் மேல் படிந்த மாசினால் தெரியும் பிம்பமானது - நான், எனது போன்ற எண்ணங்களயே தோற்றுவிக்கிறது. ஆகையால் இந்த கண்ணாடியைப் புறந்தள்ளி வைக்க வேண்டியதாகிறது. மாயையினால் ஏற்படும் பிம்பத்தினை ஒதுக்க வேண்டியதாகிறது.
விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் - எவ்வாறு இந்த கண்ணாடியை புறந்தள்ளி வைத்து, ஜீவனானது உண்மையில் பரமனின் பிம்பம் என்பதனைக் கண்டறியும் வழியினை 16 சுலோகங்களில் சொல்கிறார்.
கண்ணாடியை புறந்தள்ளி வைப்பதினை - மனதினைக் கலைப்பது எனவும் சொல்லலாம். ஆழ்நிலை தூக்கத்தில் - கனவுகள் இல்லாத நிலையில் மனமானது கலைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். அந்நிலையில் இருந்து வெளி வரும்போது, மீண்டும் மனமானது செயல்படத் தொடங்குகிறது.
வசிஷ்ட மாமுனி இராமருக்கு சொல்லும் உபதேசத்தில் இருந்து:
ஓ இராமா! உடல், உணர்வு முதலான மனதில் தோற்றுவிக்கப்பட்ட கூற்றுகள் உண்மையானவையல்ல. உண்மையில் ஆன்மாவனது இதுபோன்ற கூற்றுகளால் குறுக்கப்பட்டவையல்லை. மாற்றாக, சுதந்திரமாக எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பது.
ஆகையால், நான் எனக் கண்ணாடியில் தெரிவதை நீக்கிட, நான் என்பது என் உடல் அல்ல, என் மனம் அல்ல. நான் அறிந்த எதுவுமே அல்ல, ஆனால் எல்லாமுமான நீ, நீ மட்டுமே - என்பதுவே பிறப்பின் இலக்கினை அடைதல் ஆகும்.
இது ஒரு வங்காளப் பாடல் - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி அன்னையை இப்பாடலில் பாடுவது வழக்கம்!
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
காளி காளி காளி போலே
காளி காளி காளி போலே
அஜபா ஜதி ஃபுராய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
(கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
என் கடைசி மூச்சு வரையிலும் சொன்னால்
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
கபு சந்தி நஹி பாய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
மூன்று சந்தி வேளையிலும் காளி என்ற பெயரைச் சொன்னால்
பூஜைகளும் பிரார்த்தனைகளும் தேவையா?
பூஜைகள் அருகாமையில் இட்டுச் செல்லலாம், ஆனால்
பூஜைகள் தன்னைக்காட்டிலும் தாண்டிச் செல்ல இயலா.
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)
ஜப யக்ன பூஜா ஹோம
ஆர் கிச்சு நா மன லய்
மதனெர ஜாக யக்ய
பிரம்மமயீர் ராங்கா பாய்
(ஜபங்கள், யக்னம், பூஜை மற்றும் ஹோமங்கள்
மனதை லயிக்க விட வில்லையே
மதனின் ஜபம் எப்போதும்
அன்னையின் பாத மலர்களே.)
காளி நாமெர் எத குன்
கெபா கா ஜான்டெ பாரெ டாய்
தேவாதிதேவ் மஹாதேவ் ஜர்
பஞ்சமுகெ குன காய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
(காளி அன்னையின் பெயரில் அத்தனை சக்தி
இருப்பதை யார் அறிவார்?
தேவாதிதேவன் மகாதேவனே அன்னையின் பெயரை
தன் ஐந்து முகங்களின் ஐந்து வாய் வழியே பாடிட
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)
இங்கு, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்து வருகிறோம் அல்லவா? இடையில் நீண்ட இடைவெளியாகி விட்டது. குரு, இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடன் நரேந்திரனின் பயிற்சிக்களம் எப்படி இருந்தது, என்பதை சென்ற நான்கு பகுதிகளில் பார்த்தோம். இங்கு, இறுதிப்பகுதியினை பார்ப்போம்.
இராமகிருஷ்ணருக்கு நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அவருக்கான பணிவிடைகளை நரேந்திரன் செய்துவந்திட, இராமகிருஷ்ணரின் ஆன்ம பலத்தினை நரேன் நன்கு அறிந்திட, அதுவே வழிவகுத்தது. இராமகிருஷ்ணரால், அவரது உடலில் ஏற்பட்டிருந்த நோயின் தீவிரத்திலும், அவரது உடலை விட்டு விலகி நிற்க இயன்றதைக் காண நரேந்திரனுக்கு வியப்பு மேலிட்டது. இராமகிருஷ்ணரின் உடலில் நோயினால் வலி ஏற்பட்டாலும், அவரது ஆன்ம பலத்தின் ஈடால், அவ்வலியைத் தாண்டியும் ஆனந்தக் களிப்பில் மிதந்திட இயன்றது. இரமணரும் இப்படித்தான் என்பது, ஜீவன் முக்தர்களுக்கான இலக்கணம் என்பது போல இருக்குது அல்லவா!
ஒருநாள், இராமகிருஷ்ணரைப் பார்க்க வந்திருந்த பண்டிதர் ஒருவர் ஒரு யோசனை சொன்னார். இராமகிருஷ்ணர் மட்டும், அவரது தொண்டையில் தியானத்தால், அவரது நோய் குணமாகி விடும் என்று. இராமகிருஷ்ணரோ, கடவுளில் இருந்து என் நினைவை அகற்றி, இந்தத் தொண்டையில் தியானிப்பதா, என்று மறுத்து விட்டார். ஆனால், நரேந்திரனோ விடாது, 'நீங்கள் காளி அன்னையிடம், இந்த நோயினைப் பற்றி வேண்ட வேண்டும்' என்று திரும்பத் திரும்ப வற்புறுத்திட, 'சரி, அவ்வாறே செய்கிறேன்' என்றார். சிறிது நேரத்திற்குப் பின் சோகமான குரலில் சொன்னார். 'என் தொண்டை ரணமாகி, என்னால், உணவேதும் விழுங்க இயலவில்லை' என அன்னையிடம் இதுபற்றிக் கேட்டேன். அதற்கு அன்னையோ, 'உனக்குத்தான் அத்தனை சீடர்கள் இருக்கிறார்களே?, அவர்களின் அத்தனை வாயிருந்துமா, உனக்குப் போதவில்லை' என்றாள். 'வெட்கித் தலைகுனிந்தேன், வேறேதும் பேச இயலேன்' என்றார்!. இதைக் காண நரேந்திரனுக்கு, இராமகிருஷ்ணர், இந்த நிலையிலும், எப்படி இறை எங்கும், எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது, என்பதனை நடைமுறைப் படுத்துகிறார் என்பது புலனாயிற்று. மேலும், அந்த உண்மையான ஞானம் ஏற்பட்டால்தான், வலிகளில் இருந்தும், தனிமனித துன்பங்களில் இருந்தும் மீள இயலும் என்பது, தெளிவாயிற்று.
நரேந்திரனுக்கு அவ்வப்போது, ஆன்ம சக்தியும் வெளிப்பாடுகளும், காணற்கரிய காட்சிகளும் கிட்டி வந்தன. இவற்றால், நாளடைவில், அவருக்கு, அலுப்பும் ஏற்படலானது. அத்வைத வேதாந்தம் சொல்லும் உன்னதமான அனுபூதி நிலையான நிர்விகல்பசமாதி நிலையினை எட்டிடும் ஆவலில் அவர் மனது ஏங்கியது. பெயர், உருவ வேறுபாடுகள் மறைந்து, தனி மனித ஆன்மாவும், அண்ட சராசரங்களும், அதுனுள்ள அத்தனையும் இரண்டென்றிலா பிரம்ம சொரூபத்தினை அடைந்திடும் நிலைக்காக அவர் மனம் ஏங்கியது. நரேந்திரன் இந்த ஆவலை தன் குருவிடம் வெளிப்படுத்திட, இராமகிருஷ்ணரோ மௌனம் காத்தார்! இருப்பினும், நரேன் ஏங்கிய அந்த அனுபவம் ஒருநாள் மாலையில் ஏற்படத்தான் செய்தது.
ஒருநாள், விவேகானந்தர், எப்போதும்போல தியானத்தில் அமர்ந்திருக்க, திடீரென, அவரின் தலையின் பின்புறம், விளக்கு ஒன்று எரிந்து கொண்டு இருப்பதுபோல அவருக்குத் தோன்றியதாம். அந்த விளக்கில் இருந்து வெளிச்சம் அதிகமாகிக் கொண்டே இருக்க, இறுதியில் பெரிதாய் வெடித்து முடிந்ததாம். அந்த வெளிச்சத்தில் மயங்கி விழுந்து விட்டார். சிறிது நேரத்திற்குப்பின் சுய உணர்வு மீண்டு வெளியே வந்து, அங்கிருந்த சக மாணவரிடம், 'கோபால், என் உடல் எங்கே, என் உடல் எங்கே?' என்று வினவினார். கோபாலோ, 'ஏன் நரேன், அங்கே தான் இருக்கிறது. உங்களால் உணர முடிய வில்லையோ?' என்று மறுமொழி சொல்லி விட்டு, எங்கே நரேந்திரன் இறந்திவிடப்போகிறாரோ என்ற அச்சத்தில் இராமகிருஷ்ணரிடம் முறையிடச் சென்றார். அங்கே இரமகிருஷ்ணரோ, அமைதியுடன், நடந்தது எல்லாவற்றையும் அறிந்தவராக புன்னகைத்தவாறு சொன்னார்: 'நரேந்திரன் அந்த நிலையிலேயே கொஞ்ச நேரம் இருக்கட்டும், நெடுநாள் ஏக்கத்தின் விளைவை அவ்வளவு சீக்கிரம் கலைக்க வேண்டாம்!' என்றாரே பார்க்கலாம்!. சிறிது நேரத்திற்குப் பின், சாதாரண நிலைக்குத் திரும்பிய நரேன், விவரிக்கமுடியா அமைதியிலும், நிறைவிலும் மூழ்கியவாறு இருந்தார். பின்னர், இராமகிருஷ்ணரின் அறையில் நுழைந்திட்ட நரேனிடம், குரு சொன்னார்: 'இப்போது, அன்னை, உனக்கு எல்லாவற்றையும் காட்டி விட்டாள். ஆனால், இந்த 'அறிதல்', பெட்டி ஒன்றில் வைத்து பூட்டப்பட்ட நகை போல. அதன் சாவியோ என்னிடம். இப்பூவுலகில், நீ வந்த நோக்கம் நிறைவு பெற்றபின், அப்பெட்டியினைத் திறக்கப்பெற்று, சற்றுமுன், நீ அறிந்தவற்றை நிரந்தரமாய் அறிவாய்.' என்றார்! இதுபோன்ற சமாதி உணர்வு, உடலில் சொல்லொணொ துயரங்களைத் தரக்கூடியது. அவதார புருஷர்களால் மட்டுமே, இவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றிருப்பார்கள். மேலும், இராமகிருஷ்ணர், நரேனிடம், அவர் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி, மிகவும் தூய்மையான உணவையே உண்ணும்படி அறிவுறுத்தினார்.
பின்னர் மற்ற ஆசரம மாணவர்களிடம், 'நரேந்திரன் தன் பூவுடலை அவனாக விட்டு முக்தி அடைவான். அவன் தன் சுய சொருபத்தினை உணர்ந்தபின், இப்பூவுலகில் நில்லான். வெகு விரைவில், தனது ஞானம் மற்றும் ஆன்ம சக்தியால், இந்த உலகத்தையே உலுக்கிடுவான். பிரம்ம ஞானத்தினை, நரேனிடம் இருந்து, மாயை எனும் திரை கொண்டு, மறைத்து வைக்கும்படியாக, அன்னையிடம் வேண்டிக் கொண்டுள்ளேன். அவன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. ஆனால், அவனை மறைக்கும் அந்த திரையோ, மிகவும் மெல்லியதாகத் தெரிகிறது. எந்நேரமும், அது கிழிந்து போகக்கூடும்' என்றார்!
பரமஹம்சரின் உடல்நிலை வெறும் எலும்பு தோல் போர்த்திய உடலாக நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. அவரோ உடலில் மிச்சமிருந்த சக்தியினை, தன் மாணவர்களின் பயிற்சிக்காக செலவிடலானார். இப்போதெல்லாம், நரேந்திரனைப் பற்றிய கவலைகள் குறைந்திருந்தன, நரேனுக்கு காளியன்னையின் பரிபூரண நல்லாசிகள் கிடைத்து விட்டமையால். பின்னொரு நாளில் விவேகானந்தர் இவ்வாறு சொன்னார்: 'அவர், என்னை அன்னையிடம் ஒப்படைத்த நாள் முதலாய் - ஒரு ஆறு மாதத்திற்கு அவரால் உடல் சக்தியினை நீட்டிக்க இயன்றது. ஆனால், அதற்குமுன், இரண்டு வருடங்களுக்கு அவர், சிரமப்பட்டார்' என்று.
குருவின் கடைசி மூச்சுக்கு சிலகாலம் முன்னால், சீடன் நரேனை தன் படுக்கைக்கு அருகே அழைத்தார். நரேனை முழுதுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார். நரேனின் உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல சூட்சுமசக்தி பாய்வதை உணர்ந்தவாறு, அவர் மூர்ச்சையாகி விட்டார். சற்றுநேரம் சென்ற பின், நரேன் இயல்பு நிலைக்கு திரும்பிட, அங்கே இராமகிருஷ்ணர் அழுது கொண்டிருக்கக் கண்டார். அவர் நரேனிடம், 'அன்பா, இப்போது என்னிடம் இருந்த எல்லாவற்றையும் உனக்குத் தந்து விட்டேன். இப்போது, நான் ஒன்றுமில்லா பக்கிரி போலத்தான். இந்த சக்தியெல்லாம் கொண்டு நீ அரியனவெல்லாம் சாதித்திடுவாய். அதுவரை, நீ புறப்பட்ட இடத்திற்கு திரும்பிடாமல் செயலாற்றுவாய்.' என்றார். கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னால், குருவின் படுக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நரேந்திரனக்கு, திடீரென ஒரு எண்ணம் ஏற்பட்டது. 'தம் குரு உண்மையிலேயே அவதார புருஷரோ?' என்பதுதான் அது. 'ஒருவேளே, குரு தானகவே அதனை ஒப்புக்கொண்டால்தான் என் மனம் தெளிவடையும்' என நரேன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவாறு, இராமகிருஷ்ணரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, மெதுவாக, அவரின் உதடுகள் அசைந்து, தெளிவான குரல் கேட்டது: 'என் அன்பு நரேன், இன்னுமா உன் மனம் ஒப்பவில்லை?. யார், முன் பிறப்புகளில் இராமனாகவும், கிருஷ்ணனாகவும், பிறந்தானோ, அவனேதான் இந்த உடலில், இராமகிருஷ்ணனாக இருக்கிறேன்.' என்று அவருடைய திருவாயினாலேயே மலர்ந்தருளினார்.
1886 ஆம் வருடம், ஆகஸ்ட் 15 இல், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. அன்று நள்ளிரவுக்குப்பின், சில நிமிடங்களுக்கு, சிறிது சீரான நிலை ஏற்பட, நரேந்திரனை, தன்னருகே அழைத்து, இறுதி அறிவுரைகளைச் சொல்லிவிட்டு, 16ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு, காளியன்னையின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு, இறுதியான சமாதி நிலைக்குள் நுழைந்தார். அதன்பின் அவரது மனம் பூவுலகிற்கு திரும்பிடவில்லை. பின்னர், கங்கை நதிக்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குப்பின், விவேகானந்தர், வழக்கம்போல் சக ஆசரம மாணவருடன், தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கையில், வெளிச்சமான ஒரு உருவம் தென்பட்டது. சந்தேகமில்லாமல், அது இராமகிருஷ்ணரின் உருவம் தான். ஆனால், நரேன், ஒருவேளை தான் எப்பொதும் குருவின் நினைவில் இருப்பதால் ஏற்பட்ட மனபிரம்மையோ என்கிற எண்ணத்தில் அமைதியாய் இருந்தார். ஆனால், அவரது சகாவோ, 'அங்கே பார், நரேன், அங்கே பார்!' என வியப்பில் அந்த உருவத்தினைக் காட்டிட, அது இராமகிருஷ்ணரின் உருவம்தான் என்பது உறுதியானது. ~~~ இராமகிருஷ்ணரிடம் 'இறைவனை எனக்கு காட்ட முடியுமா? என்று கேட்டவாறு, அவரது பயிற்சிக்களத்தில் நுழைந்த நரேந்திரநாத் தத்தா, எப்படி தமது குருவின் ஆத்மார்த்த சீடனாகி, அவர் மூலமாக காளியன்னையின் அருளைப் பெற்று, எல்லாம் வல்ல இறைவன், எப்படி எல்லாமுமாய், எல்லா நம்பிக்கைகளிலும் நிறைந்திருக்கிறான் என்பதினை நேரடியாகக் கண்டறிந்து கொண்டார் என்பதனை, கடந்த ஐந்து பகுதிகளில் பார்த்தோம். உசாத்துணை: (Swami) Vivekananda - A Biography. By Swami Nikhilananda. ~~~ குரு இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு வணக்கங்கள்! ~~~ இராமகிருஷ்ண ஆரத்தி பகுதி 1:
இராமகிருஷ்ண ஆரத்தி பகுதி 2:
விவேகானந்தர் இயற்றிய இந்த ஆரத்தி பாடலின் வரிகளும், பொருளும்:
நரேந்திரனின் பயிற்சிக் களம் - நான்காவது பகுதியினை எட்டியிருக்கிறோம், மெய்யன்பர்களே. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து படிக்கலாமா. கடந்த பகுதிகளின் சுட்டிகள்: பகுதி 1 பகுதி 2 பகுதி 3 ---------------------------------- நரேந்திரனின் கூர்மையான மனது, இராமகிருஷ்ணரின் அறிவுரைகளில் இருந்த மிக நுண்ணிய செய்திகளையும் ஆழ்ந்து கவனித்து, அவற்றின் சாரத்தினை தன்னுள் வாங்கிக் கொண்டது. ஒருநாள், இராமகிருஷ்ணர், வைணவத்தின் மூன்று முக்கிய கூறுகளாக - "இறைநாம அன்பு, இறையடியார் தொண்டு, எல்லா உயிர்களுடத்திலும் அன்பு" என குறிப்பிட்டார். மேலும், அதோடு சேர்த்து, எல்லா உயிர்களுக்குமான தொண்டு எனவும் குறிப்பிட்டார். அன்பு - தொண்டு; இதில் இருந்த வேறுபாட்டை மற்ற மாணவர்களால், அவ்வளவு எளிதாக உணர இயலவில்லை. நரேந்திரனோ, இளம் மாணவர்களை பின்னர் அழைத்து, அவர்களிடம், 'நம் குரு, என்ன அழகாக, அத்வைதத்தின் பற்றற்ற நெறியினையும், த்வைதத்தின் அன்பு நெறியையும், ஒரு சேர இணைத்து விட்டார் பாருங்கள்' என்று சொல்லி விளக்கினார்: "அத்வைதமும், த்வைதமும் - ஒன்றுக்கு ஒன்று முரணானதே அல்ல. த்வைதம் உரைப்பவன், தன் மனதை கல்லாக்கிக் கொள்ள வேண்டியதில்லை, உலகை விட்டு ஒதுங்க வேண்டியதில்லை. பிரம்மம் எல்லாவிடத்திலும் இருப்பதால், அத்வைதம் உரைப்பவன், எல்லோரிடமும் அன்பு செலுத்தி, தொண்டும் ஆற்றிடத்தானே வேண்டும். எல்லோரிடத்திலும், அன்பு செலுத்த, அவர்களிடத்தில் இருக்கும் இறையைப் பார்த்தால் இயலுமல்லவா.", என்றதுடன் தொடர்ந்து நரேன் சொல்கிறார்: "இறைவன் விருப்பம் அதுவானால், ஒருநாள், இந்த பேருண்மையை, இந்த உலகம் முழுமைக்கும் பறை சாற்றுவேன். அதனை எல்லோருக்கும் பொதுவான உடமையாக்குவேன்." சில ஆண்டுகளுக்குப் பின் இதே கருத்தினை கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துவார் - அதன் இறுதி வரிகளில் இருந்து: இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?: எவன் ஒருவன், இயல்பாக எல்லா உயிர்களிலும் , அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில்! அவனே இறைவனின் உண்மையான தொண்டன்.
இராமகிருஷ்ணர், கிட்டத்தட்ட மீண்டும் ஒருமுறை, இந்து மதத்தின் அடிப்படைகளை நரேந்திரனுக்கு கற்றுத்தந்தார் எனச் சொல்லலாம். நரேன், தனது அன்னையின் மடியில் கற்ற அரிச்சுவடிகளெல்லாம், அவரது கல்லூரி வாசத்தில் கரைபுரண்டிருக்க, இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டிற்குப்பின், இந்து மதம், வெறும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டது அல்ல, என உணர்ந்தார். அது ஒரு உள்ளார்ந்த அனுபவம், ஆழ்ந்தது, உள்ளடக்கியது, எல்லார் நம்பிக்கைகளையும் மதிப்பது என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் உயர்ந்த குறிக்கோள் எனவும் உணர்ந்தார்.
மதம் என்பது ஒரு இலட்சியப்பாதை என்றும், அது ஜாதி, மற்றும் இனம் போன்ற வேறுபாடுகளைக் கடக்க வேண்டும், காலம், இடம் போன்ற கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்றும் கற்றார். ஒருவர், குறியீடுகள் மூலமாக, தனது இஷ்ட தெய்வத்தை வணங்குதல் மூலமாக, எல்லாமுமாய் இருக்கிற பரம்பொருளை இறுதியில் எட்டிட முடியும் என்பதையும் கற்றார். இராமகிருஷ்ணர், தானே, ஒரு எடுத்துக்காட்டாய், நரேந்திரனுக்கு, எப்படி ஒரு மனிதன், தன் உயரிய உன்னத இலக்கினை எட்டிட இயலும் - என்பதனைக் காட்டினார்.
ஒருநாள் ஆனந்த நிலையில், இராமகிருஷ்ணர், அன்பர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: "பல்வேறு கருத்துக்களும், பல்வேறு வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவை எல்லாவற்றையும் நானும் கண்டிருக்கிறேன். இவை எல்லாம் எனக்குப் பிடிப்பதும் இல்லை. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட அன்பர்கள் தங்களுக்குள்ளே, வாக்குவாதமும், வீண் சண்டையும், செய்கின்றனர். ஒன்றை உங்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என் மக்கள். இங்கே அன்னியர் யாரும் இல்லை. முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். அவனே அரசன். அடியேன் அவன் வேலையாள். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."
நரேந்திரனை ஒப்பிடுகையில் இராமகிருஷ்ணர், "நான் பல அன்பர்கள் இங்கு வருவதைப் பார்க்கிறேன். சிலரைப் பார்க்கும் போது, பத்து இதழ் தாமரை போல் தோன்றும். இன்னும் சிலரை பார்க்கும்போது, நூறு இதழ் தாமரை போல் தோன்றும். ஆனால், நரேந்திரனோ, எல்லா தாமரைகளிலும், ஆயிரம் இதழ் தாமரை. மற்றவர்கள் பானை அல்லது கூஜா போன்றவர்கள், என்றால், நரேந்திரனோ பெரிய தண்ணீர் தொட்டி. மற்றவர்களோ, குளம் அல்லது குட்டை என்றால், நரேந்திரனோ, பெரிய நீர்தேக்கத்தைப் போன்றவன். நரேந்திரன், கூட்டங்களில் என் அருகாமையில் இருக்கும்போது, பெரும் சக்தியை உணர்கிறேன்." என்பார்.
தக்ஷினேஸ்வர் வனத்தின் மரங்களடியில் தியானம் மேற்கொண்டார், நரேன். இதே இடத்தில் தான் முன்பு இராமகிருஷ்ணரும், தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவ்விடத்தில் தொடர்ந்து, தியான பயிற்சிகளை மேற்கொள்ள, அவரது குண்டலினி சக்தி எழுப்பபெற்றார் என்றும், மேலும் சில ஆன்மீக தரிசனங்களைப் பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஒருமுறை, கிரிஷ் என்னும் சக தொண்டரோடு சேர்ந்து, தியானம் செய்ய அங்கு சென்றார். அன்று அந்த இடத்தில், நிறைய கொசுக்களாக இருந்தது. கிரிஷ் அவர்களால், கொசுகளின் தொந்தரவில் இருந்து, மனதை ஒருநிலைப்படுத்துவது சிறிது கடினமாக இருந்தது. அதே சமயத்தில், அருகில் இருந்த விவேகானந்தரை கவனித்தால், அவரோ, உடனேயே, ஆழ்ந்த தியானத்தில் சென்றிருந்தார் - அவரது உடல் முழுவதும் கொசுக்கள் போர்வையாய் மூடி மொய்த்துக் கொண்டிருப்பினும்!
ஒரு சில நாட்களில், நரேந்திரனுக்கு, தன் இலக்கினை அடையும் தாகம் வெகுவாக உயர்ந்திருந்தது. ஒரு நாள் இரவு முழுதும், கொல்கத்தா கோசிப்பூர் தோட்ட வீட்டினை ஓயாமல் சுற்றி வந்தவாறு, இராம நாமத்தினை உச்சரித்துக் கொண்டிருந்தார். விடியற்காலையில், இராமகிருஷ்ணர், நரேனின் குரலைக் கேட்டு, உள்ளே அழைத்து, 'குழந்தாய், ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய், பொறுமை இழப்பதால், என்ன பயன்?.' என்று கேட்கலானார். ஒரு நிமிடம் தாமதித்து விட்டு, இப்படியும் சொன்னார் : " நீ இப்போது செய்வதை, நான் 12 வருடங்களுக்கு செய்து வந்தேன். என் தலையில் அப்போது, பெருத்த புயல் வீசியது போலிருந்தது. ஒரு நாள் இரவில் என்ன இயலும்?' என்றார்.
இப்படிச் சொன்னாலும், இராமகிருஷ்ணருக்கு உள்ளூர, விவேகானந்தரின் ஈடுபாட்டில் மகிழ்ச்சியே. தனக்குப்பின் தன் சீடர்களை, நரேந்திரனே தலமையேற்று, வழிநடத்த வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதை வெளிப்படுத்தவும் தயங்கியதில்லை. "அவர்களை உன்னுடைய கவனிப்பில் விட்டுப்போகிறேன். அவர்களிடம், ஆழ்ந்த அன்பு செலுத்தி, அவர்கள் ஆன்ம நெறியில், என் இறப்புக்குப்பின்னரும் நடந்திட பார்த்துக்கொள்" என்றார் நரேந்திரனிடம். இளம் சீடர்களிடம், நரேந்திரனை தங்கள் தலைவராகக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், ஒருநாள், இராமகிருஷ்ணர், அவராகவே, இளம் சீடர்களுக்கு, துறவறத்தினை தொடங்கி வைக்க, பின்னாளில் விவேகானந்தரால் தொடங்கப்பட இருக்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு, அன்று அவரே பிள்ளையார் சுழியும் இட்டார்.
கிட்டத்தட்ட இப்போது, நரேந்திரன், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் சிறப்பு சீடன் எனப்பெயர் பெற்றுவிட்டார். சிறப்பானதொரு பயனுக்காக, இராமகிருஷ்ணராலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனல்லவா!. எல்லா மாணவர்களுக்கும் சமமாக தன் சக்தியினைச் செலவிட்டாலும், எப்போதும் இராமகிருஷ்ணர் நரேந்திரன் மீது ஒரு 'கண்' வைத்திருந்தார். இடர் வரும் போதெல்லாம், இராமகிருஷ்ணரின் உதவியை நாடினார் நரேந்திரன். ஒருமுறை பக்கத்தில் இருந்த ஒரு ஆலையில் இருந்து வந்த சங்கூதும் சப்தம் அடிக்கடி வர, அது தன் கவனத்தை திசை திருப்புவதாகச் சொல்ல, இராமகிருஷ்ணரோ, அந்த சப்தத்தின் மீதே கவனத்தை நிறுத்தச் சொன்னாராம். இன்னொருமுறை, தியானம் செய்யும் போது, தன் உடலை மறக்க கடினப்பட, இராமகிருஷ்ணர் நரேந்திரனின் புருவ மத்தியில் ஒரு விரலை அழுத்தி, அந்த அழுத்தத்தைக் கவனிக்கச்சொல்ல, அந்த செயல்முறை நரேந்திரனுக்கு உதவியாய் இருந்தது.
ஒருமுறை, மற்ற சீடர்களில் சிலர் இறைஇன்பத்தில் ஆட்டம் வந்து ஆடிட, நரேந்திரன், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுவதில்லை என தன் ஆசிரியரிடம் கேட்க, அவர் சொன்னார்: "குழந்தாய், ஒரு பெரிய யானை, சிறிய குளத்தில் இறங்கினால், அதிலுள்ள தண்ணீர் நாலாபக்கமும் தெறித்தோடும். ஆனால் அதே யானை கங்கையில் இறங்கினால், ஆற்றில் சலசலப்பேதும் இல்லை. நீ குறிப்பிட்டவர்கள், அவர்களின் மிகக் குறைந்த அனுபவத்தால் கூத்தாடுகிறார்கள். நீயோ, பெரும் ஆற்றுக்கு ஒப்பானவன்." என்றாராம்.
மற்றொருமுறை, அதிகப்படியான இறையருள் தந்த ஊக்கத்தினால், சற்றே பயந்துவிட்டார் நரேந்திரன். அதைப்பார்த்த இராமகிருஷ்ணர், அவரிடம் வந்து, 'இறைவன் இனிப்பான கடல் போன்றவன். நீ அதில் மூழ்குவதற்கு அஞ்சுவானேன்? ஒரு கோப்பையில் இனிப்பான ரசம் ஒன்று நிறைந்திருக்கிறது. அந்தப்பக்கம் மிகவும் பசியான தேனீ ஒன்று வருகிறது. அந்த தேனீயாக இருந்தால் நீ என் செய்வாய்?' என்று வினவினார். நரேந்திரனோ, 'நானாக இருந்தால் அந்த கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து கொண்டு, மெதுவாக அந்த இரசத்தைப் பருகப்பார்ப்பேன். இல்லாவிடின், அந்த இரசத்தில் தவறி விழுந்து மூழ்கி விட்டால், உயிரல்லவோ போகும்?' என்றாராம். இராமகிருஷ்ணரோ, 'நல்லது, ஆனால் நாம் இங்கே இரசமாக பார்ப்பது - பேரின்பம் தரும் சச்சிதானந்தக் கடல். இங்கே இறப்பென்பதே இல்லை. யாராவது இறை அன்பைப்போய் அதிகம் எனச் சொல்ல இயலுமா? எவ்வளவானாலும், அது அதிகமில்லை. நீ அந்தக் கடலில் ஆழத்திற்கு செல்ல வேண்டும்' என்றாராம்.
பின்னொருநாள், ஆசரமத்தில் மாணவர்கள் அனைவரும் இறைவனின் இயல்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறைவன் அவதாரமெடுத்து உண்மையா அல்லது இறைவன் எப்போதும் உருவமற்றவனா - இப்படியெல்லாம் விவாதங்கள். இவற்றில் நரேந்திரனும் உண்டு. நரேந்திரனோ, தனது கூரிய சொல் ஆற்றலால் அந்த விவாதத்தை பிரித்து மேய்ந்து, எல்லோரையும் வாயடைத்துப் போகும்படி செய்து விட்டு, அந்த வெற்றியில் பெருமிதம் கொண்டார். அவர்களின் விவாதத்தை இரசித்து வந்த இராமகிருஷ்ணர், அது முடிந்ததும், ஒரு பாட்டும் பாடினார். அதன் வரிகள்:
அன்பால் மட்டுமே அடையத்தக்கவன் அவன், அன்பிலாமல் அவனை அளக்கத்தான் இயலுமோ?
உறுதியால் மட்டுமே அவனை அடைய இயலும், மறுப்பினால் ஒருபோதும் இயலாது.
வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ ஒன்றும் உதவாது என அறிவாய்.
இதன் பொருளை உணர்ந்த நரேந்திரன், அறிவால் மட்டும் இறைவனை அளவிட, அவனை அறிந்திட முடியாது என உணர்ந்தார்.
உண்மையில், விவேகானந்தரின் இதயத்தில் பெரும் இறை அன்பு நிறைந்திருந்தது. அதை அவர், அவ்வளவாக எல்லோருக்கும் வெளிப்படுத்தியதுதான் இல்லை. ஒருமுறை இராமகிருஷ்ணர், நரேந்திரனின் கண்களைக் காட்டி, 'இறை பக்தனுக்கு மட்டுமே இப்படி இளகிய பார்வை இருக்கும். ஞானியின் கண்களோ வரண்டு இருக்கும்.' என்றாராம். பல ஆண்டுகளுக்குப் பின், விவேகானந்தர், தன்னையும் தன் குருவின் மெய்ஞான நிலைப்பாட்டினையும் ஒப்பிட்டு இவ்வாறு சொன்னாராம் : "என் குருவோ உள்ளே பெரும் ஞானி; ஆனால் வெளியே மற்றவர் பார்வைக்கு பக்திமான். நானோ உள்ளே பக்தியாளன்; வெளியில் உங்கள் கண்களுக்கு ஞானியாகத் தெரிகிறேன்." என்றாராம். அதாவது, இராமகிருஷ்ணரின் மிகப்பெரும் ஞானமெல்லாம், மிக மெல்லிய பக்தி எனும் திரையால் மூடப்பட்டிருந்தது என்றும் தன் பக்தியெல்லாம் தன்னுள்ளேயே இருப்பதை மற்றவர் அதிகம் அறியார், ஆனால், தான் செய்யும் பிரசங்கங்களினால், தான் ஞானிபோல தோன்றிடச் செய்கிறது என்கிற பொருளில்.
(நாம் இந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்க இருக்கிறோம், நீங்களும் தொடர்ந்து வரவும்.)
உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தர்.
இராமகிருஷ்ண ஆசரமத்தில் ஏனைய சீடர்களுள் ஒருவராக நரேந்திரனும், பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், அவர்களிடையே குன்றிலிட்ட விளக்கு போல ஒளி வீசித் திகழ்ந்தார் எனவே சொல்ல வேண்டும். நரேந்திரனின் பயிற்சிக் களத்தில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை முன்பொரு இடுகையொன்றில் பார்த்தோம். சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளான இந்த ஜூலை நான்கில், நரேந்திரனாய் இருந்தபோது நிகழ்ந்த முக்கியமானதொரு சம்பவத்தினையும், இன்னும் சிலவற்றையும் இங்கு பார்ப்போம்.
அப்போதெல்லாம், உருவ வழிபாட்டில் அவ்வளவு நம்பிக்கை இல்லாதவராக இருந்தார் நரேந்திரன். ஆனால் கடவுளை அவரால் முழுதுமாக மறுக்கவும் இயலவில்லை - அதற்கு காரணம் சிறுவயது முதலே அவருக்கு ஏற்பட்ட கடவுள் சம்பந்தப்பட்ட கனவுகளும், தன் குருவுடன் அவர் கண்ட காட்சிகளும்தான். இவையெல்லாம் உண்மையா என்கிற ஆர்வத்தினால்தானே, இராமகிருஷ்ண ஆசரமத்தில் ஒரு சீடராக பயில்கிறார். அந்த முயற்சியை அவ்வளவு எளிதாக விட்டுவிடவும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் எப்படியாவது கடவுள் இருக்கிறாரா என்று அறிந்து கொள்வதில் திடமாகிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒருநாள் அந்த சம்பவம் இப்படியாக நிகழ வேண்டும் என்றிருந்தது:
அன்றொருநாள், காலையில் வேலைதேடி வீட்டை விட்டுப் புறப்பட்டதுதான். அவர் வேலைதேடிச் சென்ற இடங்களில் எங்கும் அவரைப் பற்றி சரியானதொரு கருத்தில்லை. இருந்தால்தானே வேலை தருவார்கள்? அன்று நல்ல மழை வேறு. அன்று முழுதும் உணவும் இல்லை. மிகுந்த அலைச்சலுக்குப்பின், அந்த மாலை நேரத்தில் சற்றே ஓய்வுக்காக ஒரு வீட்டின் முன்னே திண்ணைப்புறமாக அமருகிறார். கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வருகிறது அவருக்கு. ஏதேதோ எண்ணங்கள் வரலாயின, சுயக்கட்டுப்பாடின்றி. திடீரென, நம்ப இயலாத காட்சி ஒன்றையும் காணலானார், ஒவ்வொரு திரையாக விலகுவதுபோல. அவரது ஆன்மாவைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொரு திரையும் விலகி விலகி, இறுதியில் இறைவனின் கருணையையும் சத்தியத்தையும் காண்கிறார்.
கருணையான இறைவனின் படைப்பினிலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும், இறைவனைக் கண்டறியும் இயல்பு மட்டும் இம்மியளவும் சிதையாமல் இருக்கிறது!
என்று வியந்தாராம் இந்த நிகழ்வைப் பற்றி பின்னர் விவரிக்கையில். இந்த நிகழ்விற்குப்பின், எல்லாவற்றையும் உணர்ந்தவராக அமைதி அடைந்தார். இந்த நிகழ்வு, கிட்டத்தட்ட ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம். மற்றவர்கள் என்ன சொன்னாலும், துறவே தனக்கான பாதை என்பதில் திடமானார். அமைதியும், சுதந்திரமும் அவரை வசீகரித்ததைக் காண முடிந்தது. இராமகிருஷ்ணர் இப்போதெல்லாம் கொல்கத்தாவிற்கு தினமும் வருகிறாராம், அவரது ஆசியினைப் பெற்று, துறவறத்தினை மேற்கொள்ள வேண்டியதுதான் என முடிவு செய்தார்.
அதுபோலவே, இராமகிருஷ்ணருடன் தக்ஷினேஸ்வரம் திரும்பினார் நரேன். ஆசரமத்தில், அன்றொருநாள், இராமகிருஷ்ணர், பாடலும், ஆடலுமாய் ஆனந்தக் களிப்பில் மூழ்கி இருக்கிறார். கண்கள் முழுதும் கண்ணீர். பாடல் வரிகளோ, நரேந்திரனின் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல இருந்ததாம். மற்ற சீடர்கள், இராமகிருஷ்ணரை அணுகி, அவரது துயரத்திற்கான காரணம் என்னவென்று வினவினர். சட்டென்று இராமகிருஷ்ணரோ, 'ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது எனக்கும் நரேந்திரனுக்கும் இடையிலானது, மற்றவர்களுக்கு அல்ல' என்றாராம்! பின்னர் அன்றிரவு, நரேந்திரனை தனியாக அழைத்து, 'எனக்குத் தெரியும் நீ அன்னையின் கைங்கர்யத்திற்காகவே பிறந்தவன் என்று. நீ துறவியாவாய் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், நான் இந்த உலகத்தில் இருக்கும் வரையாவது நீயும் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டாராம், மீண்டும் கண்ணீரோடு!.
சீக்கிரமே, ஒரு தற்காலிக வேலையும் கிடைத்திட, வீட்டுத்தேவைகளை கொஞ்சமாவது நிறைவேற்ற இயன்றது நரேந்திரனால். இருந்தாலும் வறுமை வலியதல்லவா?. ஒருநாள் நரேந்திரனுக்கு தோன்றியது - நம் குருநாதரின் பிரார்த்தனைகளை காளி தேவியோ கேட்டுக்கொண்டிருக்கிறாள். நம் குருநாதர் ஏன் நமக்காக பிரார்த்தனை செய்து, நமது வருமையை போக்கக்கூடாது? - என்று. இந்த எண்ணத்தினை நரேன் இராமகிருஷ்ணரிடம் சொல்ல, அதற்கவர், நீ ஏன் காளிமாதாவை நேரடியாக கேட்கக்கூடாது? என்று திருப்பிவிட்டார்!. அது போதாதென்று, 'நீ காளியன்னையை ஜகன்மாதாவாக கொள்ளாததால்தான் இப்படியெல்லாம்" என்றுவேறு சொல்லி வைத்தார். தொடர்ந்து, 'இன்று செவ்வாய்கிழமை. அன்னைக்கு உகந்த நாள். அவள் கோயிலுக்குச் சென்று, அவள் உருவமுன் மண்டியிடு. அங்கு உனக்கு என்ன வேண்டுமோ, அதை தயங்காமல் கேள்; அது நிறைவேறும்' என்றாரே பார்க்கலாம்.
அன்றிரவு, ஒன்பது மணிக்கு, காளி கோயிலை அடைகிறார் நரேந்திரநாத். கோயிலின் முன் பகுதியில் நுழையும்பொழுதே, அவரது இதயம் துள்ளிக் குதித்தது - இன்றேயாவது காளியின் தரிசனம் கிடைக்குமோ என்ற ஆவலில். உள்ளே சென்று அன்னையின் திருவுருவின்மேல் கண் பதிக்கிறார். அங்கு அவர் கண்ணில் தெரிந்து கற்சிலையாக இல்லை. சாட்சாத் காளி தேவியே இருப்பதுபோலவே உணர்கிறார்; வேண்டும் வரத்தினை அளித்திடத் தயாராக - அது மகிழ்ச்சியான இல்லற வாழ்வாகவோ அல்லது ஆனந்தமயமான ஆன்மீக வாழ்வோ - எதுவாக இருப்பினும். இதைப்பார்த்து ஆகா, எனப் பரவசப்பட்ட நரேன், அன்னையிடம் கேட்டது - ஞானமும், பகுத்தறிவும், அன்னையின் இடையுறா தரிசனமும் மட்டுமே; பத்தும் செய்யும் பணத்தைப்பற்றி ஏதும் கேட்க மறந்து விட்டார் போலும். அங்கிருந்து ஆசரமத்தில் குருவின் அறைக்குத் திரும்பினார். குருவும், விடாது, 'என்னப்பா, பணத்தைப் பற்றிக்கேட்டாயா அன்னையிடம்?' என வினவ, இவர், 'அதை மறந்து விட்டேனே' என்கிறார். அதற்கு அவர், 'சரி அடுத்த முறை சென்று, மறக்காமல் கேள்' என்கிறார். நரேனோ, அடுத்தமுறையும் மறந்து விடுகிறார். இப்படியாக மூன்று முறைகளாக இந்த 'விளையாடல்' தொடர, நரேனுக்கு திடீரெனத் தோன்றுகிறது, ஒருவேளை, காளியைப்பார்த்த உடன், பொருள் கேட்காமல் மறந்து போவதும், தன் குரு இராமகிருஷ்ணரின் செயல்தானோ என்று - உலகியல் பொருட்களின் மீதான பற்றைப் போக்கத்தான் இப்படி செய்கிறாரோ என்று. பின்னர் இராமகிருஷ்ணரிடம் வந்து, 'ஐயா, பொருள் என் குடும்பத்தினைக் காப்பாற்றவே தேவைப்படுகிறது, நீங்கள் அவர்களுக்காவது ஏதாவது செய்ய வேண்டும்' எனக்கேட்டார்!. குருவும், 'நரேந்திரா, உலக வாழ்வை எல்லோரும் போல வாழ உனக்கு விதிக்கப்படவில்லை' என்று சொல்லி, 'உன் குடும்பத்திற்கு எளியதொரு வாழ்க்கை கிடைக்கும்' என உறுதி அளித்தார்.
மேற்சொன்ன சம்பவம் நரேந்திரனின் மனதில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியது எனலாம். அது அவரது ஆன்மீகப் புரிதலை வளப்படுத்தியது. கடவுள் எவ்வாறு இந்த உலகத்தின் நிகழ்வுகளில் தலைப்படுகிறார் என்பது பற்றிய புதியதொரு புரிதலை அவருக்கு கற்பித்தது. இதுகாறும் அவர் கடவுள் என்பவர் தன்னைச்சாரா வெளிப்பொருள் எனவும், மேல் உலகத்தில் இருந்து கொண்டு, இந்த உலகத்தைப் படைத்தவராகவோ மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தார். இப்போதோ, * கடவுளின் தலைப்படுதல் எல்லாப் பொருட்களின் ஆக்கத்திலும் இருப்பதையும், * அண்ட சராசரங்களிலும், அதிலுள்ள அனைத்திலும் விரிந்து பரந்திருப்பவர் என்பதையும், * ஒவ்வொரு பொருளின் உயிரிலும், பேரறிவிலும்(Consciousness) உட்புகுந்திருக்கிறார் என்பதையும், * உருவங்களில் வெளிப்பட்டும், மற்றவற்றில் வெளிப்படாமலும் இருக்கிறார் என்பதையும் உணர்கிறார்.
இப்படி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் 'உலக ஆத்மா'வினை - கடவுள் என்னும் 'நபர்' ஆகப் பார்க்கையில் - அதுதான் இஷ்ட தெய்வம் (அ) இஷ்ட தேவதை எனப்படும் Personal God. வெவ்வேறு மதங்கள், அந்த நபரை வெவ்வேறு உறவுப் பெயர் கொண்டும் பார்க்கின்றன - தந்தையாக, தாயாக, அரசனாக, அன்புக்குரிய காதலனாக - இப்படியெல்லாம். இந்த உறவு முறைகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடுகளைக் கொண்டிருப்பதாகவும் - அன்னை காளியும் அவற்றில் ஒன்று என்கிற புரிதலுக்கு வருகிறார்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக, குரு இராமகிருஷ்ணரின் அருகாமையில் இப்படியாக, நரேந்திரனின் ஆன்மீக வாழ்க்கை அச்சில் வார்க்கப்பட்டு வந்தது! எல்லா வகையிலும் இராமகிருஷ்ணர், ஒரு அற்புதமான குருவாக அமைந்திருந்தார் என்பதில் ஐயமில்லை.
(இன்னும் வளரலாம்...)
உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தர்
'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?' 'எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?'
இப்படி எல்லோரிடமும், இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கேட்ட அந்த வங்காளத்துச் சின்னப்பையன், நரேந்திரனைப் (நரேந்திரநாத் தத்தா) பற்றி நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். விவேகானந்தரான அவர் கதை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டு விட்டதல்லவா? அது சரி, நரேந்திரனின் பயிற்சிக்கூடம் எப்படி இருந்திருக்கும்? விவேகானந்தர் எப்படி கடவுளை கண்டறிந்தார்? சுவையான சில சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.
முதலாவதாக, இராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு இந்த ஒரு வழியினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை. அவரவர் பின்புலத்திற்கு தகுந்தவாறு தங்கள் வழியினில் தங்கள் இறைஅறிவுத் தேடலில் ஈடுபடலாம். அவ்வாறே நரேந்திரனுக்கும். அதே சமயம், நரேந்திரனின் பயிற்சி முறைகள் பரமஹம்சரால் நேரடியாக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.
பயிற்சிக்கூடத்தில் சக மாணவர்களுக்குள் பல சமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் வரும். பல கடவுள்களைப் பற்றியும், பல நம்பிக்கைகளைப் பற்றியும் விவாதங்கள் வளரும். இந்த விவாதங்களில் நரேந்திரனின் பேச்சுத் திறமைகளை தொலைவில் இருந்து ரசிப்பார் ராமகிருஷ்ணர். அப்படி ஒரு சமயத்தில், ராகல் என்னும் சக மாணவரின் காளி பக்தியை நரேந்திரன் கிண்டல் செய்வதைப் பார்த்து, மற்றவகள் இறை நம்பிக்கையை சிதைக்கும் படியாக ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.
இன்னொரு சமயம், இராமகிருஷ்ணர் விளக்கியிருந்த அத்வைதக் கோட்பாடுகளைப்பற்றி மாணவர்கள் விவாத்தித்து கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரனோ, 'இது என்ன பிதற்றல், இறைவன் எங்கேயும் இருக்கிறானாம். அருகிலிருந்த ஜாடியைக் காட்டி, இந்த ஜாடியிலும் இருக்கிறானம், அதன் மூடியிலும் இருக்கிறானாம்' - என்று கிண்டலாகச் சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டனர். இவர்களின் நகைப்புக்கு காரணம் அறிந்து அங்கு வந்த இராமகிருஷ்ணர், நரேந்திரனைத் லேசாக தொட்டுவிட்டு சென்று விட்டார். நரேந்திரனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நரேந்திரன் பார்ப்பதில் எல்லாம் பரப்பிரமம் தெரிந்ததாம்!. அத்வைதத்தின் சாரம் அப்போதே நரேந்திரனுக்கு காணக்கிடைத்தாலும் முழுஅறிவினைப் பெறுவதற்கு பின்னொரு நாளானது.
ராமகிருஷ்ணரும் தன் மாணவர்களை பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி வந்தார். ஒருமுறை, ஒரு காரணமே இல்லாமல் நரேந்திரனுடன் சில நாட்களாக பேசவே இல்லை. முகமெடுத்துக்கூட பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்தார். சில நாட்கள் கழித்து, அவரே நரேந்திரனிடம், 'உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறேன். நீயேன் தினமும் இங்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கிறாயே?' என்றார் கோபமாக. நரேனோ, சாந்தமாக, 'உங்கள் மீதுள்ள அன்பினால் உங்களைப் பார்க்க வருகிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்பதற்காக அல்ல' என்று சொன்னார். நரேனின் பதிலில் மகிழ்ந்த இராமகிருஷ்ணர், 'நல்லது, உன்னை சோதனை செய்யவே இப்படிச் செய்தேன். என் வெளி அணுகுமுறையில் மாற்றத்தினால் நீ மாறுகிறாயா என்று பார்த்தேன். வேறொருவாராய் இருந்தால் இங்கே திரும்பி வந்திருக்கமாட்டார்' என்றார்.
ஒருமுறை நரேந்திரனை அழைத்து, பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.
இராமகிருஷ்ணரைப்போல் நரேந்திரனால் உள்ளொளியில் அமைதியாக ஒளிர்ந்திட இயலவில்லை. தனக்கு தியானம் சொல்லித் தரும்படி மன்றாடிட, அதற்கு இராமகிருஷ்ணரோ, "கடவுள் நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ கடவுளைப் பார்க்கவும், பேசவும் முடியும் - என்னுடன் நீ பேசுவதைப் போலவே. அவர் பேசுவதைக் கேட்கவும் அவரைத் தொடுவதை உணரவும் முடியும்." என்றார். தொடர்ந்து, "நீ தெய்வங்களின் உருவங்களில் நம்பிக்கை அற்றவனாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால், அவனிடம் கேள் - 'இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்' என வேண்டிடு. உன் வேண்டுதல் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவன் அதற்கு செவி மடுப்பான்." என்றாரே பார்க்கலாம்.
உசாத்துணை : விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தா