Showing posts with label ஷ்யாமா சாஸ்திரி. Show all posts
Showing posts with label ஷ்யாமா சாஸ்திரி. Show all posts

Tuesday, September 20, 2016

ஆனந்த பைரவியில் ஆனந்தமான இரண்டு!

தியாகராஜர் "இராமா நீ சமானம் எவரு?" என்பார்,
கோபால கிருஷ்ண பாரதி "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பார்,
ஷ்யாமா சாஸ்த்ரிகள் இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே - உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்!

தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் - பிரஹதீஸ்வரின் இடது பாகமாம் - பிருஹநாயகி அன்னையைப் பாடும் பாடலாகும் இது.

இப்பாடலை சௌம்யா அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்த்ரிகள்

பல்லவி
ஹிமாசல தனய ப்ரோசூடகிதி
மஞ்சி சமயமுராவே அம்பா

அனுபல்லவி
குமார ஜனனி சமானம் எவரு?
குமார ஜனனி சமானம் எவரிலனு
மானவதி ஸ்ரீ ப்ருஹநாயகி

சரணம்
உமா ஹம்ஸகமா! தாமசமா?
ப்ரோவ திக்கெவரு நிக்கமுகனு
மாகி இபுட அபிமானமு சூப
பாரமா சலமா வினுமா தயதோனு

சதா நத வர தாயகீ நிஜ
தாசூடனு ஷ்யாம க்ருஷ்ண சோதரி
கதா மொர வினதா துரித
நிவாரிணி ஸ்ரீ ப்ருஹநாயகி

தமிழில்:

இமயனின் புதல்வியே! காப்பதற்கு இதுவே
நல்ல சமயமே! வாராயோ? அம்பாள்!

குமாரனை ஈன்றவளே! உனக்கு நிகர் எவருமில்லை!
மதிப்பிற்குரிய பெரிய நாயகியே!

உமையே! அன்ன நடையாளே! தாமதமா!
காத்திட வழியேது? உறுதியாக
என்மீது இப்போது அன்பு காட்ட
கடினமோ? மலையோ? கேளாயோ? தயை காட்ட

எப்போதும் பணிபவர்க்கு வரம் அளிப்பவளே!
நான் நிஜ பக்தனம்மா!

நீ நீல கிருஷ்ணனின் சகோதரி அன்றோ!
நீ என் முறைதனைக் கேளாயோ!

பாவங்களைப் போக்குபவளே!
பெரிய நாயகியே!

----------------------------------------------
ஆனந்த பைரவி இராகமானது, ஷ்யாமா சாஸ்திரிகளின் சொத்து எனச்சொன்னால், இப்பாடல் அதில் ஒரு இரத்தினம்.

எனினும் அனுபல்லவியில் மானவதி எனும் ஐந்தாவது மேளகர்த்தா இராகத்தின் பெயர் வருவதைக் கவனிக்க. ஒருவேளை தற்செயலோ?

பல்லவி, அனுபல்லவி மற்றும் முதல் சரணத்தில் எத்தனை எத்தனை "மா" வருகிறது சாகித்யத்தில் என்று பார்க்க!

ஹிமாசல
குமா
மானம்
மானவதி
மா
ஹம்ஸகமா
தாமசமா
மாகி
அபிமா
பாரமா
சலமா
வினுமா

அப்பாடா! இத்தனை "மா" போதுமா?

அடுத்த சரணத்திலோ, "மா" வில் இருந்து "தா"விற்கு தாவினதோ?

தா

தாயகீ
தாசூடனு
தா
வினதா
துரி

-------------------------------------------------------------------------------------------
மேற்சொன்ன பாடல் பிரஹநாயகி அம்பாளின் மீது என்றால்,
அடுத்த பாடல் பிரகதீஸ்வரர் மீதானது.
இடப்பக்கத்தில் இருந்து அடுத்து வலப்பக்கத்திற்கு!

இராகம் : ஆனந்தபைரவி
தாளம் : ஆதி
இயற்றியவர்: தஞ்சை சிவானந்தம்

எடுப்பு
காப்பதுவே உனது பாரம்

தொடுப்பு
வாய்ப்பதுவே உனது அருள்
வையகத்தில் வாழச் செய்து
(சிட்டை ஸ்வரம்)

முடிப்பு
இன்பதென்பது அறியாத ஏழை
எனை மறந்திடாமல்
நின் புகழைப் பாடிடவே
நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா!
(சிட்டை ஸ்வரம்)

இப்பாடலை காயத்ரி வெங்கட்ராகவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


Wednesday, October 14, 2015

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:
சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி
சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:
சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி
சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:
ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி
கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி
அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி
மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி
ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி
சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:
குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி - சங்கரனின் துணைவி
சம்குரு - நலங்களை எமக்கு வழங்கிடு,
அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி - மனதுக்கு இயைந்த இறைவி - அகிலாண்டேஸ்வரி.
சாம்பவி - சாம்புவின் துணைவி.
தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி - சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.
எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
ஜகத் ஜனனி - உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.
ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.
சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.
அகில உலகங்களையும் போஷிப்பவள் - பேணுபவள்.
மங்களங்களைத் தருபவள்.
ம்ருதானி - மிருடனின் (கருணையுடையவன்) - சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி - அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி - மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு 'சதோதரன்' என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே - பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

---------------
இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:




டி.கே.பட்டம்மாள்:


மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்: