Showing posts with label கம்பன். Show all posts
Showing posts with label கம்பன். Show all posts

Monday, June 30, 2014

சுந்தர காண்டம் : ஊர் தேடு படலம்

1. என்னென்று சொல்வது இலங்கை நகர் அழகை!
பொன்னாலும் மணியாலும் இரத்தினங்களாலும்
மின்னும் கற்களாலும் இழைக்கப்பட்டு பளபளவென
கண்ணைப் பறித்து ஜொலித்தது.

2. மக்கள் கூட்டம் எங்கும் நிரம்பி வழிந்தது.
தேவர்கள் யாவரும் இங்கே சேவகம் புரிந்தனர்.
யானைகளும் குதிரைகளும் இலங்கைச் சேனையில்
மட்டுமே இருப்பதுபோல் தோன்றியது.

3. வாத்தியங்கள் பலவும் இசை முழங்கின.
நாலாபுறமும் முரசு ஒலித்தது.
யானைகளின் பிளிறல், அலைகளின் ஓசை,
இனிய இசையான பெண்களின் குரலும்,
காற் சிலம்பும் ஒலித்தது.

4. இலங்கைப் படைகளின் எது பெரிது?
விற்படையா வேற்படையா வேல்படையா மல்யுத்த
வீரர் படையா, அல்லது ஏனைய ஆயுதப் படையா?
அன்பு இராமனிடம் எதுவென்று சொல்வேன்
என வியந்தான் அனுமன்.

5. இரவு நேர வானத்தில் மின்னிய விண்மீன்கள்:
அனுமனை வாழ்த்தி தேவர்கள் தூவிய பூமழை
இராவணனுக்கு பயந்து மண்மீது செல்லாமலும்,
திரும்பிச் செல்ல இயலாமலும் இடையே
திண்டாடு கின்றனவோ?

6. கதிரவன் இராவணனிடம் பயந்துதான் நகரின்
மதிலின் உள்ளே நுழைவதில்லை என்பதைவிட, இம்
மதிலைக் கதிரவனும் தாண்டுவது கடினம்
என்பதே காரணமாக இருக்க வேண்டும்.



7. முன்னூறு வெள்ளம் வீரர் புறம் இரண்டிலும்
முனைப்புடனே புரிந்தனர் மதிற்காவல்.
எண்ணற்ற ஆயுதங்களை தாங்கிய அரக்கர் இவரோடு
வீணாய்ப் போர் புரியாமல் மதிலைத் தாவுவதே உசிதம்
என நினைத்தான் அனுமன்.

8. மதிலருகே சென்ற மாருதியை வழி மறித்தனள்
மாது இலங்காதேவி - "யாரடா நீ"  என்றே வினவி.
அனுமனோ நயமாய் "ஊரைப் பார்க்க ஆசை" என்றான்.
"முப்புரம் எரித்த சிவனும் இப்புறம் வர அஞ்சிட,
குரங்கான நீ எம்மாத்திரம்? ஓடிப்போ" என்றாள் அவ்வரக்கி.

9. இருவருக்கும் பேச்சு முற்றி கைகலப்பாயிற்று.
இறுதியில் அனுமன் விட்டான் பலமான குத்தொன்று.
அதில் அரக்கியும் மூர்ச்சையானள். பின் தெளிந்து,
அனுமன் யாரென்றும், தன் மதிற்காவல் தொழிலானது
அவனால் நிறவு பெற்றதையும் உணர்ந்து,
அவனை நகருக்குள் செல்ல அனுமதித்தாள்.

10. ஒவ்வொரு மலரிலும் தேனினை சேகரிக்கும்
வண்டு போல நகரில் ஒவ்வொரு இடமாய்
சென்று ஆராய்ந்தான். ஆங்கே கும்பகர்ணன்,
விபீஷணன், இந்தரஜித் முதலானோர்
மாளிகைகளை துழாவிச் சென்றான்.

11. நகரமே உறங்கிக் கொண்டிருக்கையில் அனுமன் மட்டும்
உறங்காமல் சீதா பிராட்டியைத் தேடினான்.
பெண்கள் இருக்கும் இடமெல்லாம், அங்கு சீதையைக்
காண்போமா என்று ஏங்கித் தேடினான்.

12. இறுதியில் இராவணனின் மாளிகையை அடைந்து
இனிதே உறங்கும் இராவணனைக் கண்டதும் கோபத்தில்
இவனை இப்படியே கொன்றால் என்ன? என நினைத்தான்.
பின்னார் ஆராய்ந்து அது தவறென்று தெளிந்தான்.

13. அங்கும் சீதையைக் காணமல் வருந்தினான்.
ஒருவேளை கொன்றானோ, இல்லை தின்றானோ?
ஒருவரும் எட்ட முடியாத இடத்தில் தான்
சிறை வைத்தானோ? என புலம்பினான்.

14. நல்வினை யாவும்  நீங்கியது, எனவே யானும்
அல்லல் அடைந்தேன் அன்னையைக் காணாமல்.
இல்லை இனிமேல் நன்மை! என மனம் உடைந்தான்.
அரக்கன் இராவணனை அடித்துக் கேட்கலாமோ
அன்னை இருக்கும் இடத்தை?

15. இனி எப்படி என் இனிய இராகவன் திருமுகம்
காண்பேன்? இப்போதே இலங்கையை தீக்கிரையாக்கிவிட்டு
தானும் உயர் துறப்பதே மேல் என்று
எண்ணுகையில் மலர்வனம் ஒன்றைக் கண்ணுற்றான்.

Monday, June 23, 2014

சுந்தர காண்டம் : கடல் தாவு படலம்

வாழ்த்து
அன்பெனும் அமுதைப் பொன்னெனப் பூண்டவன்
தன்மனம் முழுதிலும் இராமனை நிறைத்தவன்
அகிலமும் அவனை அனுமனெனப் போற்றிட
அன்பனின் அருமையைச் அடியேனும் சாற்றுவேன்.

கடல் தாவு படலம்
1. அன்பர் அனைவரின் விடைதனைப்பெற்று
அனுமன் பெற்றனன் பேருருவம்!
விண்வரை உயர்ந்தவன் இந்திர உலகத்தைக்
கண்டு ஐயுற்றான் இலங்கை இதுதானோ என்று;
பின் தெளிந்தான் இலங்கை இதுவல்ல வென்று.

2. பின்னர் கண்டனன் இலங்கை மூதூர் நகரை.
பொன்மதில்கள், கோட்டைகள், மாட வீதிகள்
எனப்பல கண்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்
அனுமனும் ஆகா வென்றே .

3. மூதூர் நோக்கி கால்களை அழுத்தி
வானில் எழும்பியபோது மகேந்திர
மலையோ பாவம் அழுந்திப் போனது அடியே.
மலையின் வயிறு பிதுங்கி அங்கிருந்த
மலைப்பாம்புகள் யாவும் வெளியே வந்து விழுந்தன.

4.  வானில் அனுமன் பறந்த காட்சி :
வால் எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி
கழுத்தினை சுருக்கி கை நீட்டி விசைத்தான்.
விண்ணவரும் முனிவரும் வாழ்த்த விரைவாய்
விண்ணிலே காற்றைக் கிழித்துப் பறந்தான்.
முன்னம் பரந்தாமன் காலால் அளந்த உலகை
அனுமன் வாலால் அளந்தானோ என
வானோர் மருண்டனர்.

5. காலனின் கயிற்றுக்கு இதுவரை இலங்கை
செல்லவே அச்சம்; ஆனால் இப்போது இல்லை.
ஏனெனில் தலைவனாம் அனுமனின் வாலின்
பின்னால் ஒளிந்து கொண்டு செல்லலாமே!

6. வான்வெளியை ஊடுறுவிப் பறந்த வேகத்தில்
வானவர்கள் ஆங்காங்கே பறந்து வந்த
விமானங்களோ அந்தோ ஒன்றோடு ஒன்று
விரைவாய் மோதி நசுங்கி வீழ்ந்தனவே!

7. இவன் பறந்த வேகத்தைக் கண்டு
இந்திரனும் வியந்தான் - ஆகா, இவ்வேகத்தில்
இலங்கை மட்டும் தான் என்னே?
இன்னுமும் பலதூரம் செல்வான் என்றான்!

8. ஆழ்கடலில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலம் முதலான
ஆபத்தான மீன்கள் எல்லாம் அந்தோ
அனுமனின் காற்று வேகத்தை தாக்குப் பிடிக்காமல்
தண்ணீரிலேயே மடிந்து மிதந்தனவே.

9. தடக்கை இரண்டையும் காற்றினில் செலுத்திப் பறக்க
தடக்கை இரண்டிலும் இருப்பது யாரோ?
தடக்கை இரண்டையும் இயக்க இருப்பது
சுடரொளி இராமனும் இலக்குவனும் ஆமே.

10. கடலின் மேலே விறையும் பாதையின் குறுக்கே
கடலினில் எழுந்தது மைந்நாகமலை.

அடடா இதுவென்ன தடை? என்று
அனுமனும் தன் காலினால் உதைத்திட
அம்மலையும் கடலினில் குப்புற வீழ்ந்தது.

அதன்பின் சிறு மானிட உருவம் கொண்டு,
அன்போடு உபசரித்து, இம்மலையில்
"இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லவும்" என்றது.

11. அனுமனும் அன்பினை மெச்சினான்.
அம்மலை விருந்துண்டுச் செல்ல வேண்டிட,
அனுமனோ, எண்ணிய கருமம் ஈடேறும் வரை
உண்ணேன் எனும் விரதம் தனை உரைத்தான்.
பின் திரும்பி வருங்கால் ஏற்பேன் என்றான்.


12. அடுத்து அனுமனின் வலிமைக்கு ஓர் சோதனை:

தக்கனின் மகளாம் சுரசையை
அரக்கி வடிவினில் அனுப்பினர் தேவர்.
இது மலையா? கடலா?
அல்லது மலை போன்றெழும் கடலா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
பிளந்த வாயில் "நீயாக வந்து விழுவாய்" என்றாள்.

அனுமனோ மிகச் சிறிய உருவம் கொண்டு,
கண் இமைக்கும் நேரத்தில் செவிக்குள் புகுந்து
வாய் வழியே வெளியே வந்தான்.

அஞ்சா நெஞ்சன் அனுமனனின் வேகத்தை
மெச்சி வாழ்த்தி வழி அனுப்பினர் தேவர் முதலானோர்.

13. முதலிரண்டு தடைகளும் அன்பால் என்றால்
மூன்றாவது தடையோ பகையால் வந்தது:

திடீரென கடலில் நடுவே எழுந்தனள்
அங்காரதாரை எனுமோர் அரக்கி.

 நிழலைப் பிடித்தே இழுக்கும் சக்தி கொண்ட அவள்,
பறக்கும் அனுமனை அவ்வாறே கீழே இழுத்தாள்.
"அடே என்னைக் கடந்து செல்வதார்" என வினவி,
அனுமனை விழுங்க தன் வாயைப் பிளந்தாள்.

அரக்கியின் வாய் வழியே நுழைந்த அனுமன்
அவளது வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான்.

அரக்கியும் அத்தோடு மாண்டிட,
தேவர் முதலானோர் அனுமனை வாழ்த்திட,
வீரன் விண்ணில் பறந்தான்.

14. இனிமேலும் இடர்கள் வாராமல் இருக்க
இனியதோர் உபாயம் இராம நாமம்
உச்சரிப்பதே எனத்தெளிந்து இராம நாமம்
செபித்தாவாறே பறந்தான் ஆஞ்சநேயன்.

15. இப்படியாக அனுமன் இலங்கை மூதூர் நகரில்
இலம்பகம் என்னும் பவழமலையில் வந்து இறங்கினான்.
இறங்கியபோது புயலில் சிக்கிய மரக்கலம் போலும்
ஆட்டம் கண்டு பின் நின்றது அம்மலை. அங்கிருந்து
அனுமன் இலங்கை நகர் தெரியக் கண்டான்.

Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Wednesday, March 31, 2010

கண்ணுதலும் மூவாறு கண்களும்


அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் - அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா!
அதிலிருது ஒருதுளி:

ஆதி சங்கரர் இயற்றிய 'சுப்ரமணிய புஜங்கம்' படித்திருப்பீர்கள்.
அதில் 'அஷ்டாதசலோசன்' என்றொரு வரி வரும்.
அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், 'சுப்பிரமண்யேன' எனத்துவங்கும் சுத்த தன்யாசி ராகப் பாடலில், முருகனை 'அஷ்டாதசலோசனா' என்றழைப்பார்.
அஷ்ட + தச = 8 + 10 = 18 கண்கள்!
எப்படி பதினெட்டு கண்கள் இருக்கமுடியும்?
அறுமுகம் என்றால் கூட பன்னிரண்டு கண்கள் தானே?

'கொடிய மறலியு மவனது கடகமு...' எனத்துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர்
'அறுமுகமும் வெகு நயனமும்' என, 'பலவான கண்கள்' என்கிறாரோ தவிர, குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

...
வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(கைக்கிளைப் படலம், 71).

எனக் கம்பன் சுவைக்கும் கண்ணுதற் கடவுளின் கண்மணி எப்படி இருப்பான்?
தகப்பன் சாயலில் தானே தகப்பன்சாமி!
நுதலிற் (நெற்றியில்) கண்ணினை உடைய கண்ணுதலாம்(கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்!
முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ, முருகய்யா!

கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்.
'பவளத்தன்ன மெனி' செவ்வேளும் சிவனும் சொல்லாடலில் குறிப்பது செந்நிறத்தையேயாம். 'சிவனை நிகர்' முருகனின் ஆற்றுப்படை இடம்கொண்டது, பதினோராம் திருமுறைத் தொகுப்பில்.

ஸ்ரீகுருகுஹ' எனத்துவங்கும் விருவிருப்பான கீர்த்தனையில் பல பதிகளும் சேவிக்கும் பரமனென முருகனைப் புகழ்வார் முத்துசாமி தீக்ஷிதர்.
அந்த பதிகளெல்லாம் யார் யாராம்?

சுரபதி - இந்திரன்
ஸ்ரீபதி - விஷ்ணு
ரதிபதி - மன்மதன்
வாக்பதி - பிரம்மா
க்ஷிதிபதி - அரசன்
பசுபதி - சிவன்

என சிவன் உட்பட, பல்வேறு பதிகளாலும் பூஜிக்கப்படுபவன் பாலசுப்ரமணியன் என்பார் பாடலின் பல்லவியில்.
இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:

Wednesday, December 24, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (3)

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"


என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.


நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.



அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே


இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:



ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.


தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)