Showing posts with label தில்லை. Show all posts
Showing posts with label தில்லை. Show all posts

Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Wednesday, January 05, 2011

சுதந்திரமும் சிதம்பரமும்

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை"

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

இவை எல்லாம் பார்வையின் வீச்சின் பழுதுகள் தானோ.

"குலோத்துங்கா, சோழநாடு முன்னூற்று முப்பது காத தூரம் தானே பரவியுள்ளது. உனக்குப்பின் யார் திரிபுவனச் சக்ரவர்த்தி என பட்டப்பெயர் தந்தது?. பட்டத்தினாலோ, விருதினாலோ நாடு விரிந்துவிடாது." என்று கம்பன் கேட்டதுபோல, நமது பார்வையின் வீச்சு முன்னூற்று முப்பது காத தூரம் வரைதான் செல்கிறது. இருப்பினும், நமக்கு நாம் தான் புவியாளும் மன்னன் என்ற எண்ணம். நான் சுதந்திரமாய் நினைப்பதைச் செய்வேன். என் விருப்பங்களுக்கு குறுக்கே வரும் யாரையும் துச்சமெனக் கொள்வேன். எப்படியும் என் எண்ணத்தை நிறைவேற்றி விடுவேன். இப்படிப்பட்ட நினைப்புகளில் நாம் நம்மைச் சக்ரவர்த்தியாகத்தான் எண்ணிக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் நினைப்பதெல்லாம் நிகழ்த்திவிடும் சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா? இருக்கிறது, ஆனால் நாம் நினைப்பது போலில்லை. அது வன் நினைப்பது போல்.

இராமலிங்க வள்ளலார் பெருமான் இறைவனிடம் இவ்வாறு முறையிடுகிறார்:
“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

"என்னிடம் உண்மையில் ஒரு சுதந்திரமும் இல்லை. உன்னால் நிகழுவதே எல்லாம். என் மூலமாய் நடப்பது எல்லாமும் உன்னால். ஓரளவிற்கு நீ தயவு செய்வது போல், நின் சகல சுதந்திரத்தையும் என்பால் காட்டி தயை செய்." என்கிறார்.

இதன் மூலம், உண்மையான சுதந்திரம் பெற்றவன் இறைவன் மட்டுமே என்பது தெளிவாகிறது.

தமிழ் இசை மூவரில் ஒருவரான முத்துத்தாண்டவர் இதே கருத்தை
"தில்லை சிதம்பரமே" என்று பாடுவார் காபிநாராயணி இராகப் பாடலில்:


எடுப்பு
தில்லை சிதம்பரமே - அல்லாமல்
வேறில்லை சுதந்திரமே!

தொடுப்பு
சொல்லுக் கெளிது நெஞ்சே
சொல்லுவாய் - சிவகாம வல்லிக்கு அன்புள்ள
சபைவாணன் வீற்றிருக்கும்

முடிப்பு
காசினி தன்னில் கைலாசன் என்றொரு
நடராஜன் இருந்து பாபநாசம் செய்வதிதுவே
வாசம் செய்வோருக்கு மோசம் வராது - எம
பாசம் வராது - மனக்கேசம் வராது!

~~~~~~
தொடர்ந்து வள்ளலார் பெருமான், தற்சுதந்திரமின்மை என்கிற பகுதியில் சொல்வதைப் பார்த்தோமேயானால்,


"நான் என்று எதைச் சொல்வேன் அது நீயே ஆனாய்
ஞானம் சேர் ஆன்மாணு நானோ நீ தானே
ஊன் என்னும் உடல் எனதோ அதுவுமுனதாமே
உடல்பெற்ற உயிர் உணர்வும் உடமைகளும் எல்லாம்
தான் இன்று தயவாலே தருகின்றாய் இந்த
தனித்த சுதந்தரம் உனக்கே உளதாலே நீதான்
மேல்நின்று மேதினிமேல் எனைக் கலந்து நானாய்
விளங்கற்குத் தயவுசெய்வாய் வேறுபுகல் இலனே."

நான் என்பது நீ அல்லவோ! என்று வள்ளலார் என்றும் தன்னை உணர்ந்த ஞானத்தில் சொல்கிறார்: "தனித்த சுதந்திரம் தரும் தயவெல்லாம் அவன்பால் இருக்கிறது" என்றும், "அதனாலே, அச்சுதந்திரத்தை எனக்களித்து நானாய் விளங்கத் தயவு செய்வாய்" எனும் அவரது வேண்டுதலும் தெளிவாகிறது.

அவன் எது வேண்டத்தக்கது என்பதை அறிந்தவனாய் இருக்கிறான்.
அதை முழுதுமாய் தருபவனாயும் இருக்கிறான்.
அவன் அருள் செய்வதையே நான் வேண்டினேன்.
அவன் அருள் செய்வதல்லாததை நான் வேண்டிலேன். சுதந்திரமாய் வேண்டிலேன்.

“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினன் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே”
- திருவாசகம், எட்டாம் திருமுறை.

என்றும் மாணிக்கவாசகர் வேண்டுவதுபோல், தனக்குவமை இலாதன் அருள் செய்ய, அதுவே நம் சுதந்திரமாய் இருக்கவே வேண்டுதல்கள்.

Friday, December 24, 2010

பக்தியும் ஞானமும் (4) - சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை
தரிசித்தளவில் முக்தி பெறலாம்.
- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.
-நடராஜப் பத்து.


சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


(என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.)

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

னி, முத்துசாமி தீஷிதரின் கிருதிகளில் இருந்து:

* சதாசிவனே (சிந்து ராமக்ரியா ராகம்) : சத்யோதாதி பஞ்சமுகன்
* தியாகராஜனே: 'பஞ்சக்ருத்யகரணேன': ஐந்து தொழில்களும் குறிப்படப்படுகின்றன.
* தியாகராஜாயே நமஸ்தே (பேகடா ராகம்): முனிவர்கள் முதல் பூச்சிகள் வரை எல்லா உயிரனங்களுக்கும் முக்தி தர வல்லவர்.
* ருத்ரகோப ஜாத வீரபத்ரமாஸ்ரயே (ருத்ரபிரியா ராகம்): வீரபத்ரர்
* கால பைரவம்: (பைரவி) : காலபைரவர்
* மாரகோடி கோடி லாவண்யாய (ஆரபி) : பிக்ஷாடணர், விபூதி ருத்ராக்ஷ அபிமானர்
* ஸ்ரீதக்ஷிணாமூர்திம் (பேனத்யுதி ராகம்) : வேதங்களால் போற்றப்படுபவர், ஆலமரத்தடியில் வசிப்பவர்
* சங்கர அபிராமி மனோகரம் (மனோகரி) : மார்கண்டேயனைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது
* நீலாசலநாதம் (சம்யுக்தி ராகம்) : அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்த்ரம் வழங்கியது
* ஸ்ரீமாத்ருபூதம் (கானடா) : தாயுமானவர்
* அருணாசல நாதம் (சாரங்கா) : நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாம் திருவண்ணாமலையில் 'தேஜோமய லிங்கம்' தனைக் குறிப்பிடுகிறார்.
* சிந்தயமாகந்த மூலகந்தம் (பைரவி) : காஞ்சி ஏகாம்பரர்- மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவர், பிருத்வி லிங்கம்
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்) : நடராஜர் - பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு திருவடி தரிசனம் தந்தது.

- இப்படியாக, பட்டியலில் இவரது பாடல்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

குறிப்பாக, தில்லைக்கூத்தனைப் பாடும் இக்கீர்த்தனையைப் பார்ப்போம்:
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்)
பாடுபவர்: டி.எம்.கிருஷ்ணா


பல்லவி
ஆனந்த3 நடன ப்ரகாசம் சித்ஸபே4சம்
ஆச்ரயாமி சிவ காம வல்லீசம்


அனுபல்லவி
பா4னு கோடி கோடி ஸங்காசம்
1பு4க்தி முக்தி ப்ரத3 த3ஹராகாசம்
தீ3ன ஜன ஸம்ரக்ஷண சணம்
தி3வ்ய பதஞ்ஜலி வ்யாக்4ர பாத3-
த3ர்சித 2குன்ஞ்சிதாப்3ஜ சரணம்


சரணம்
சீதாம்சு க3ங்கா3 த4ரம் நீல கந்த4ரம்
ஸ்ரீ கேதா3ராதி3 க்ஷேத்ராதா4ரம்
பூ4தேசம் சார்தூ3ல சர்மாம்ப3ரம் சித3ம்ப3ரம்
பூ4-ஸுர த்ரி-ஸஹஸ்ர முனீச்வரம் விச்வேச்வரம்
நவனீத ஹ்ருத3யம் ஸத3ய 3கு3ரு கு3ஹ தாதம்
ஆத்3யம் வேத3 வேத்3யம் வீத ராகி3ணம்
அப்ரமேயாத்3வைத ப்ரதிபாத்3யம்
ஸங்கீ3த வாத்3ய வினோத3 தாண்ட3வ -
ஜாத ப3ஹு-தர பே4த3 சோத்3யம்


பாடற்பொருள்

ஆனந்த நடனம் - பேரொளிப் பிரகாசம் - சிற்சபை தன்னில் சரணடையும்
என்னைக் காத்தருள்வாய், சிவகாமவல்லி பதியே, சிவனே.

கோடிகோடி சூரிய பிரகாசமானவனே - சூரியன் முதலான எல்லா ஒளிக்கும் மூல ஒளியே.
தகராகாசம் என்னும் இதய ஆகாசத்தில் - சைத்தன்ய சொருபமாய் இருப்பவனே,
சித்த சுத்தி வந்து கடைத்தேறச் செய்பவனே, நீ தீனர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவன்.
பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு தன் பொற்பாதத்தைக் காட்டிய பொன்னம்பலவனே.

சிவன், சந்திரன் மற்றும் கங்கையைத் தரித்தவன், நீலகண்டன்.
கேதாரம் முதலான 12 தலங்களை இருப்பிடமாய்க் கொண்டவன். (இப்பாடலின் இராகமும் கேதாரம்!)
பூதகணங்களுக்கு அதிபதி. புலித்தோலை அணிந்தவன்.
சித் + அம்பரம் = சிதம்பரம் : அவனது சித்தம் சைத்தன்யமாய் ஆகாச வெளியில் எங்கெங்கும் பரவியிருக்க, எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
முனிவர்களால் கொண்டாடப் படுபவன். உலகங்களுக்குத் தலைவன்.
இளகிய மனம் கொண்டவன். குருகுஹனாம் முருகனின் - வேதத்தின் உட்பொருளின் - தந்தையானவன்.
ஈடு இணையிற்றவன், அத்வைதமாய் இருப்பவன். அத்வைத வேதாந்தத்தைப் பிரகாசிப்பவன்.
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.

இப்படியாக, ஈசன் குணங்களோடு கூடிய ஈஸ்வரனாக காட்சி அளிப்பது - பக்தர்கள் அவனைப்போற்றிப் பாட ஏது செய்யத்தான். மாயையுடன் சேர்ந்த நிலையில் சகுண பிரம்மமாவதும், நிர்குணமாய் இருப்பதும் - அவன் ஒருவனே - அவனே பரம்பொருள் எனும் மெய்ப்பொருள் தனை அறிவோம்.

Sunday, January 25, 2009

கால்வண்ணம் கண்டு கொண்டோம்!

இந்தப் பகுதியில் ஒரு அருமையான பாடலை பார்க்கப்போகிறோம். இப்பாடலை வஞ்சகப் புகழ்ச்சி அல்லது 'தூற்றுமறைத் துதி' (நிந்தாஸ்துதி) என்கிற வகையில் சொல்லலாம். அதாவது, தூற்றுவது போல போற்றும் பாடல். சமீபத்தில் தான், வஞ்சகப் புகழ்ச்சி அணியினை, அகரம்.அமுதா அவர்கள், காளமேகப் புலவரின் கவியினைக் கொண்டு வெண்பா வகுப்பினில் விளக்கி இருந்தார்.

தில்லையில் ஆனந்த நடம் ஆடும் ஈசன், கூத்தன், விரிசடை விண்ணவன், எப்போதும் ஒரு காலைத் தூக்கி நின்றாடுகிறான் அல்லவா! எதனால்? அவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடுவதன் மறைபொருள் ஒருபுறம் இருக்க, அவன் காலைத் தூக்கி நிற்பதால், அவன் முடமாகி நிற்கிறானோ, என்பதுபோல பலவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார் பாடலாசிரியர் இப்பாடலில். கவி காளமேகப் புலவரின் இந்த வெண்பா போல:
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாங்க, இவிங்க குடும்பமே நோய்வாய்ப்பட்ட குடும்பம் போல! இவிங்க நோய்களையே தீர்த்துக்கக் காணும், எங்கே நம்ப வினையை தீர்க்கறது?!!!

வாதம் - சீதம் என வருகிற மாதிரி, ஒரு நீண்ட பாடலே இயற்றி இருக்காரு, பாபவிநாசம் முதலியார் அவர்கள். இவர், நிறைய தமிழ்ப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இவர் இயற்றிய பெரும்பாலுமான பாடல்கள், இந்த வகையைச் சார்ந்த இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பாடலில் பாருங்கள் எப்படி அருமையா எதுகை அமைச்சிருக்காரு! :
நடம் - முடம் - திடம் - சடை
எடுப்பும், தொடுப்பும் என்னமா துடிக்குது!

இராகம் : காம்போதி
இயற்றியவர் : பாபவிநாச முதலியார்
(1650-1725)

எடுப்பு
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!

தொடுப்பு
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
(நடமாடித்..)

முடிப்பு
1. திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!

ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!

பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)
2. தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?

இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? - முறிந்ததுவோ?

கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று


(நடமாடித்..)
3. பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?

சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?

சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?
(நடமாடித்..)

இந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடிடக் கேட்கலாம். அவர் முடிப்பில் முதல் சரணத்தை மட்டுமே பாடுகிறார். சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் இடம் பெறுவதில்லை. மேலும், சில புத்தகங்களில், இப்பாடல், கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டதென தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.
பாடலைக் கேட்டவாறு, அதன் பொருளை மேயலாமா?



நடம் - நடனம் ஆடித் திரியும்
இதர கவிகளால், இப்படியெல்லாம், சிவன் நடம் ஆடுவதைப் பாடிவார்:
* ஆனந்த நடம் ஆடுவார் தில்லை, அம்பலம் தன்னில் ஆனந்த நடம் ஆடுவார் தில்லை (நீலகண்ட சிவன் : பூர்வி கல்யாணி)
* ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)
* நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே, கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (கோபால கிருஷ்ண பாரதி : வசந்தா)
* ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ (முத்துத்தாண்டவர் : மாயமாளவகௌளை)

இடதுகால் முடம் :
இடதுகாலைத் தூக்கி நிற்பதால், இவருக்கு கால் முடமோ?, இவரால் காலை ஊன்றி நிற்க இயலாததன் காரணம் என்னவோ என வினவுகிறார்!
இதர கவிகள் இப்படியெல்லாம் 'காலை தூக்கி நின்றாடுவதை' பாடுவார்கள்:
* இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே, நெஞ்சே (பாபநாசம் சிவன் - கமாஸ்)
* காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே, எனை கைதூக்கி ஆள் தெய்வமே! (மாரிமுத்தாப்பிள்ளை - காம்போதி)
இவரோ, இடது கால் தூக்கி நிற்பதை 'முடம்' என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமாம் 'நமசிவாய' தனில் தொடக்கமாம் 'ந' வெனும் எழுத்தும், உனைப்போல் தூக்கிய காலுடன் நிற்பதுவே!

திடமேவும் தில்லை நகர்
தில்லைத் தலம் என்று சொல்லத் தொடங்கினால், இல்லை பிறவி, பிணியும் பாவமும்! (கோபாலகிருஷ்ண பாரதி - சாமா)
அப்படிப்பட்ட தில்லைநகரில், "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்", சடைதனை விரித்த வண்ணம், பேரானந்தம் தரும் சத்-சித்-ஆனந்தம். எங்கெங்கும், எல்லாமுமாய் ஆகாசத்தில் பரந்து விரிந்து நிறைந்திருக்கும் பரப்பிரம்மம்.

சீதமும் வாதமும்
சுடலைப்பொடி பூசும், உள்ளம் கவர் கள்வனே, திரு-நீறை உடலில் பூசியதால், சீதமாகியதோ, அதனால், வாத குணமும் வந்து, இடது காலைக் கீழே வைக்க இயலாமல் தவிக்கிறீரோ? நமக்கெல்லாம், திருநீறைப் பூசினால், நமது நீர் குறையும். ஆனால், இங்கே எதிர்மறையா சொல்லுகிறாரே!. ஒருவேளை, திருநீறை நாம் பூசி, நம் சீதம் குறைந்து, அதெல்லாம் அவனுக்குப் போய்விட்டதோ! ஹ ஹா!

காலனை ஒரு காலால் உதைத்த 'ஒரு-காலன்':
நீரோ ஒற்றைக் காலில் ஆடுபவன்! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, உன் காலால், காலனை உதைத்க, அப்போது, உம் காலில் தான் சுளுக்கு ஏறியதோ? அதனால் தான், ஒற்றைக் காலை எப்போதும் தூக்கியவாறே நிற்கிறீரோ?

வாசல் படி இடறிற்றோ?
ஈசனே, உமது 'நண்பர்' சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனைவி பரவையாரை மீண்டும் சேருவதற்காக தூது போனீரோ!. அப்படி அவசர அவசரமாக அவரது வீட்டுக்குள் நுழையும்போதுதான், பரவையாரின் வீட்டு வாசற்படித் தடுக்கி கீழே விழுந்து, அதனால் முடமாகிப் போனீரோ?

எந்தன் பாவமோ?
ஒருவேளே, நான் செய்த பாவங்களால், அதனால் உனக்கு குறைவு வந்ததோ, அதனால் தான், நீர் முடமாகிப் போனீரோ?

இப்படியாக மற்ற இரண்டு சரணங்களிலும், ஒவ்வொரு கதையினைச் சொல்லி, அதில் தன் கற்பனையைப் புகுத்தி, இதனால் தான் சிவன் முடமாகிப் போனதுவோ, என்பதுபோல பாட்டினை வடிவமைத்திருக்கிறார் பாபவிநாசம் முதலியார்!

* சிவன் வேடனாக, தனஞ்செயன்(அர்ஜூனன்) உடன் போரில் நீர் அடிபட்டு விழ, அப்போது, உமது இடுப்பு எலும்பு இணைப்புகளில் வலி ஏற்பட்டு, அதனால், உம்காலைத் தூக்க இயலவில்லையோ? (சந்து: இடுப்பு; முடி:முடிச்சு:எலும்பு இணைப்புகள்; சமர்:போர்)
* தாருகா வனத்தில் பிச்சை எடுப்பவன் போல் திரிந்ததில், முள்ளும் உன்காலைத் தைத்ததுவோ?
* கனகசபை தன்னில், உமது ஆனந்த நடனம் கண்டு அதிசயத்தவர்களில் கண்பட்டுத்தான் இவ்வாறு நேரிட்டதோ?
* உன் இடது பாகத்தில் இருக்கும் சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?
* சத்தியலோக அதிபதியாம், பிரம்மனின் வேகமான தாளத்திற்கு ஏற்ப, நடமாடினீரே! அந்நடனமதில், உமக்குப் பிடித்த, அருமையான நடன முத்திரை இதுவென, ஒருகாலைத் தூக்கிக் காட்டுகிறீரோ எமக்கு!

ஏனையா, நடராஜனே, எனிப்படி ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறீர்?
ஆணவம், மற்றும் மாயை ஆகியவற்றில் இருந்து விடுபட, "இந்தா என் அருள்" என வழங்கிடும் வண்ணம்தனைக் குறிக்கத்தான், இப்படித் தூக்கிய காலுடன் நின்றீரோ, ஐயா!. பக்தி செய்பவர்களின் பாவமெல்லாம் நாசம் செய்யும், "பரமபதம் இதுவென" உன் பாதம் தனைக் காட்டும் கருணையுள்ளம் கொண்ட பெருமானே, வந்தனம் செய்வேன் உம்மை!.

பி.கு:
* அடைப்புக்குறியில் () குறிக்கப்பட்டவை பாடலை இயற்றியவர் பெயரும், பாடலின் இராகமும்.
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் சென்னை ஆன்லைன் தளத்தில் இப்பாடலைப்பற்றி, தந்துள்ளவற்றை இங்கே பார்க்கவும்.
* இப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தந்துதவிய திரு.ஸ்ரீநிவாசன் சபாரத்தினம், திரு.சேதுராமன் சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றிகள்.

Thursday, July 31, 2008

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ?

ந்த இடுகையில் தமிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் மூவரில் ஒருவர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் பாடலில் ஒன்று பார்க்கவிருக்கிறோம். 'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழிசை நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை - மாயாமாளவகௌளை
ஈசனே கோடி சூரிய பிராகசனே - நளினகாந்தி
தரிசித்தளவில் - லதாங்கி

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

இந்த இடுகையில் நாம் கேட்கப்போகும் 'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது! Hats off Sanjay!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

உசாத்துணை:
* திரு. வி. சுப்ரமணியம் - சுருதி இதழ்
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் - சென்னை ஆன்லைன்

Tuesday, September 25, 2007

யாரிந்த நடராஜன்?

எந்த நடராஜனைப் பற்றி இந்த பதிவென்று பார்க்க இந்தப் பதிவின் பக்கம் வருகை தந்த வாசகருக்கு என் வாசக சொல்வதென்ன? எத்தனையோ நடராஜன் இங்கே இருந்தாலும் எல்லா நடராஜனுக்கும் ஆதியாய் ஆதி சிவன்் - ஆனந்த தாண்டவன் - தில்லையின் கூத்தன் - தென்னவர் தலைவன் பற்றித் தான்!

இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜ சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன என வரலாறு சொல்வதைப் படித்திருப்போம். நடராஜ சிலை முழுதும் குறியீடுகளாக நிறைந்திருப்பதை பார்க்கலாம்.

அந்தக் குறியீடுகளில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.

ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.



இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?

முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.



பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில்:

சேஷநாகம் - கால சுயற்சியையும்
கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை - அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.


பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.


வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.


தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது.


இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.


அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!



அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
- பன்னிரெண்டாம் திருமுறை

Wednesday, January 10, 2007

கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல்கள்

கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு:

1. அறிவுடையோர் பணிந்தேத்தும் தில்லை

2. ஆடும் சிதம்பரமோ என் ஐயன் கூத்தாடும் சிதம்பரமோ

3. ஆண்டிக் கடிமைக்காரன் அல்லவே

4. ஆருக்கு பொன்னம்பலவன் கிருபை இருக்குதோ

5. இரக்கம் வாராமல் போனதென்ன காரணம் என் சுவாமி

6. எப்போ தொலையும் இந்த துன்பம்

7. எப்போ வருவாரோ எந்தன் கலி தீர

8. எந்நேரமும் உன் சந்நிதிலே நானிருக்க வேணுமைய்யா

9. ஏதோ தெரியாமல் போச்சுதே என் செய்வேன்

10. கட்டை கடைதேறவேணுமே

11. கனகசபாபதி தரிசனம் ஒருநாள் கண்டால் கலிதீரும்

12. கனகசபாபதிக்கு நமஸ்காரம் பண்ணடி பெண்ணே

13. காரணம் கேட்டு வாடி (சகி) காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத காரணம்

14. சங்கரனை துதித்திடு - இனி சலனமில்லை என்று பாடு

15. சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா - தில்லை

16. சம்போ கங்காதரா சந்திரசேகர ஹர சம்போ

17. சிதம்பரம் அரஹரவென்றொருதரம் சொன்னால் சிவபதம் கிடைக்கும்

18. சிதம்பரம் போவேன் நாளைச் சிதம்பரம்

19. சிந்தனை செய்து கொண்டிருந்தால் உங்களுக்கு

20. சிவலோகநாதனை கண்டு சேவித்திடுவோம்

21. தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே தரிசனம்

22. திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன் தேவாதி தேவா நின் திருவடி

23. தில்லை சிதம்பரம் என்றே நீங்கள் ஒருதரம் சொன்னால் பரகதியுண்டு

24. தில்லை தலமென்று சொல்லத்தொடங்கினால் இல்லைப் பிறவிப்பிணியும் பாவமும்

25. நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்

26. நந்தன் சரித்திரம் ஆனந்தம் ஆனாலும் அத்தியந்தம்

27. நமக்கினி பயமேது - தில்லை நடராஜனிருக்கும்போது

28. நீசனாய் பிறந்தாலும் போதும் ஐயா

29. பக்தி செய்குவீரே நடேசனைப் பக்தி

30. பக்திகள் செய்தாரே பரமசிவனையே பக்திகள்

31. பார்த்துப் பிழையுங்கள் நீங்கள் பார்த்துப் பிழையுங்கள்

32. பெரிய கிழவன் வருகிறான் பேரானந்தக் கடலாடி

33. மற்றதெல்லாம் பொறுப்பேன்

34. வருகலாமோவையா உந்தன் அருகில் நின்று கொண்டாடவும் பாடவும் நான்

35. வருவாரோ வரம் தருவாரோ எந்தன் மனது சஞ்சலிக்குதையே எப்போது வருவாரோ

பாடல்களின் முழு வரிகளுக்கு செல்லவும் சைவம்.ஆர்க்

இந்த தொகுப்பினை தமிழ் விக்கிபீடியாவிலும் ஏற்றியுள்ளேன்.