Showing posts with label அத்யாத்ம ராமாயணம். Show all posts
Showing posts with label அத்யாத்ம ராமாயணம். Show all posts

Sunday, August 03, 2008

ஸ்ரீராம இருதயம்

சென்ற பகுதிகளில், சக்திக்கு சிவன் தந்த விளக்கமும், அந்த விளக்கத்தின் உள்ளே சிவன் மேற்கோள் காட்டிய சம்பவத்தினில், அனுமனுக்கு சீதை தந்த விளக்கமும் பார்த்தோம். அவற்றிலெல்லாம், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகவே இராமனின் உண்மை உருவம் இருப்பதாகப் பார்த்தோம். நம் அறியாமையினால்தான் இராமனை அவன் மாயா சக்தியில் இருந்து பிரித்தறிய இயலாமல் இருப்பதால் நம்மால் அவனை பரப்பிரம்மமாக உணர இயலவில்லை என்பதையும் பார்த்தோம்.

தொடர்ந்து சக்திக்கு சிவன் இராமனைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். அதில் அனுமனுக்கு சீதை இராமனின் உண்மை உருவத்தினை விளக்கியதைத் தொடர்ந்து, சீதை அருகிலேயே இருந்த இராமனும் தொடர்ந்து அனுமனுக்கு உயர்ஞான உபதேசம் செய்யலானார்!.

இராமரின் உரை: அன்பின் அனுமனே, இப்போது உனக்கு நான் ஆத்மா, அனாத்மா மற்றும் பரமாத்மா பற்றியான உண்மையை சொல்லப்போகிறேன்:

ஒரு விளக்கத்திற்காக, ஆகாசத்தை எடுத்துக் கொள்வோம். அதை மூன்றாக பிரித்துக் கொள்வோம். முதலில் எங்கெங்கும் வியாபித்திருக்கும் வானம். அடுத்தாக, அந்த வானத்தின் ஒரு பகுதியாக, மண்ணில் நீர்நிலைகளின் பிம்பமாகத் தெரியும் வானம். இறுதியாக, ஒரு பானையிலோ அல்லது குடத்திலோ நிரப்பியிருக்கும் நீரில் பிம்பமாகத் தெரியும் வானம்.

இந்த ஆகாசப் பிரிவுகளைப்போலவே, சுத்த சைத்தன்யமும்(சைத்தன்யம் : உயர் ஞானமாய் விளைந்திருக்கும் பிரம்மம் - Consciousness) மூன்று பகுதிகளாகச் சொல்லலாம். முதலில் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த சைத்தன்யம். அடுத்ததாக புத்தியினால் தெரியும் சைத்தன்யம். மூன்றாவதாக, ஜீவனின் புத்தியில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யம்.

எங்கெங்கும் வியாபித்திருக்கும் சுத்த சைத்தன்யம், எங்கெங்கும் விரிந்திருக்கும் ஆகாசத்தைப் போன்றது. அடுத்ததாக புத்தியில் தெரியும் சைத்தன்யம், ஒரு நீர் நிலையில் பரப்பளவிற்குள் அதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அடுத்ததாக, ஒரு சிறிய குடத்தில், அந்த நீர் நிலையில் இருந்து முகந்து வைக்க, அது தனிப்பட்ட ஆன்மாவிற்கு ஒப்பாகும். ஆக அந்த குடத்தில் பிம்பமாகத் தெரியும் வானம், அந்த குடத்தின் எல்லைகளுக்கு உட்பட்டது.

இப்போது, ஆன்மஞானம் முழுமையாக அடையாதவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்றால், புத்தியில் அல்லது ஜீவனில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யத்தினை உண்மையானதாகக் கொள்வதுதான். அதாவது, தங்கள் அக உறுப்புகளால் செய்யும் செயலின் விளைவுகளுக்கு தாங்களே மூலம் என நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒரு கருவி தான் என அறியார். அப்படித் தவறாக கொள்ளும் ஆத்மா, ஜீவனே ஆன்மாவின் மூலம் எனக் கொள்கிறது. அதானால்தான் அது ஜீவாத்மாவாகவே இருக்கிறது. அவர்களுடைய புத்தியானது, சித்தில் சேமித்திருக்கும் அனுபவங்களின் மூலமாக மட்டுமே முடிவு எடுத்ததினால் ஏற்படும் விளைவு இது. தத்வமஸி (அதுவே நீ) என்னும் மகாவாக்கியத்தினை கேட்டிட, ஓதிட, தியானித்திட, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமையை உணரலாம். எல்லைகளால் சிறைப்பட்ட ஜீவனையும், அதன் புத்தியையும் மாயை என உணர, தானே எல்லாம் என்னும் அகங்கார மடமையும் அழிவதைக் காணலாம்.

தொடர்ந்து இராமர் சொல்கிறார்: என்னுடைய பக்தன் எவனொருவன், இந்த பேருண்மையை புரிந்து கொள்கிறானோ, அவனே என் நிலையை அடைவதற்கு தகுதியானவன். வெறுமனே, இந்த உண்மையைத் தேடி, மறைகளை மட்டும் கற்று அலசியும், என்னிடம் பக்தி இல்லாமல் இருக்கிறவன், என்னைப் பற்றி அறிய இயலாதவனாய் இருக்கிறான். அவனால் நூறு பிறவி எடுத்தாலும் பக்தி இல்லாமல் முக்தியை எட்ட இயலாது.

இப்படியாக இராமர் அனுமனிடம் சொல்லி முடித்தார்: "எந்த ஒரு தீவினையும் அண்டாதவனே, "ஸ்ரீராம இருதயம்" என்னும், என் உண்மை நிலையை உரைக்கும் இவ்வுரையை நானே உனக்கு நேரடியாக வழங்கிடும் பேறு பெற்றாய். இதனால் பெறும் பேரறிவானது, இந்திர லோகம் ஆளும் பேறினைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது.

அதானால் தான் தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
"பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!"
என்றாரோ!

அத்யாத்ம இராமாயணத்தில் மேற்கூறிய ஸ்ரீராம இருதயம் எனப்படும், அனுமனுக்கு இராமர் அளித்திட்ட உரையை, பரமசிவன், பார்வதி தேவிக்கு உரைத்திட்டு சொல்கிறார்: "இந்த சுலோகங்களை இராம பக்தியோடு படிப்பவரும் கேட்பவரும் நிச்சயம் முக்தி அடைவர். பெரும் துயர் தரும் தீவினையாவும் கூட இவற்றைப் படிப்பவரிடம் இருந்து பறந்தோடிப் போகும். அவர்கள் பெரும் யோகியரும் பெருந்தவத்தால் அடையக் கடினமான பெரும் பேறினையெல்லாம் அடைவார்கள்".

உசாத்துணை:
* அத்யாத்ம இராமயணம் : சுவாமி தபஸ்யானந்தர் அவர்களின் ஆங்கில உரை.
* ஆதித்ய ஹ்ருதயமும் ஸ்ரீராம ஹ்ருதயமும் - பகுதி 2 : திரு. ச.நாகராஜன்.

Sunday, March 09, 2008

சீதை விளக்கும் இராமனின் உண்மை வடிவம்

சென்ற பகுதியில் சக்தி சிவனிடம் இராமனைப் பற்றி விளக்கங்கள் கேட்கிறதாகப் பார்த்தோம். மகேஸ்வரன் உண்மையில் இராமன் யாரெனச் சொன்னதுடன், அதை மேலும் விளக்கும் பொருட்டு, சீதை அனுமனுக்குச் சொன்ன விளக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்.

இந்தப் பகுதியில் சீதா பிராட்டியின் உரையினைப் பார்ப்போமா?

தேவி சீதை: ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி சாட்சாத் பரப்பிரம்மமே. அவனே சத்-சித்-ஆனந்தம். ஒன்றென ஒன்றேயானவன். அவனைப் புலன்களால் ஒரு பொருளென உணர இயலாது, எனெனில் அவன் எந்த குணங்களும் அற்றவன். இராமன் மாசற்ற தூய ஆனந்தம். அவன் மாறுதலற்றவன். அறியாமையின் அறிகுறிகள் அற்றவன். எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
சீதையாகிய நானோ பிரகிருதி. எல்லாப் பொருட்களும் உருவாகுவதற்கான இயக்கப்பொருளாகவும், உருப் பொருளாகவும் இருக்கிறேன். அந்த பிரம்மாகிய இராமனின் 'இருப்பினால்' என்னால், அதாவது அவன் சக்தியான பிரகிருதியானால், இந்த அண்ட சராசரங்களை நான் படைத்தது.
(தொடர்ந்து, அயோத்தி நகரில், ரகுகுலத்தில் தசரதநந்தனன் இராமன் பிறந்தது முதல் தொடங்கி, தனக்கு அவனுடன் திருமணம் நடந்ததையும், இராவணன் மாயசீதையை அபகரித்ததையும், போரில் இராவணனை வதைத்து, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகம் நிறைவுற்றது வரை விவரமாக விவரித்தார்.)
இராமன் மேலே செய்தவை யாவும் பிரகிருதி ஆகிய என் மூலமாக நிறைவேற்றியவை. ஆனால் இராமனோ எந்த மாற்றங்களும் அற்றவன்.
மேலும், இராமன் நடப்பதுமில்லை, உட்காருவதும் இல்லை. சோகப்படுவதும் இல்லை. எதற்கும் ஆசைப்படுவதும் இல்லை. எதையும் வெறுத்து ஒதுக்குவதும் இல்லை. மொத்தத்தில் அவனிடம் எந்த ஒரு செயலும் நிகழ்வதற்கான தடையம் கூட ஒன்றுமில்லை. அவன் சுத்த ஆனந்தமாக நிறைந்திருப்பதால், அவனில் அசைவேதும் இல்லை, யாதொரு மாறுதலும் அவனில் இல்லை.
அதே சமயத்தில், இராமனை அவன் மாயையில் இருந்து பிரித்தறியும் உயர்ஞானம் இல்லாதவர்களுக்கு, மேற்சொன்ன மாறுதல்கள் யாவும் அவனில் நிகழ்வாதாக தவறாகக் கொள்வர். ஆனால் உண்மையில் மாயையின் உள்ளுக்குள் தான் மாறுதல்கள் எல்லாம் நிகழ்கின்றன.

இவ்வாறாக இராமனின் உண்மை சொரூபத்தினை பிராட்டியார் இயம்பி முடித்தார்.

---------------------- அத்யாத்ம ராமாயணம் : பின் குறிப்புகள் ----------------
மேலே தேவி சீதையின் உரையினைப் பார்க்கையில் அத்யாத்ம ராமாயணத்தின் இலக்குகள் தெளிவாகத் தெரிகின்றன. இராம காதையினைக் கொண்டு ஆன்ம உபதேசத்தினை தருவது என்பதே அந்த இலக்காகும். இராமனை பரப்பிரம்மாக பார்க்கும் இந்நூல் - இப்படித்தான் என்று நேரடியாக விளக்க இயலாத பிரம்மத்தினை இக்காதை மூலம் விளக்குகிறது. அதே சமயத்தில் பரமன் ஒருவனாக காட்டப்படுவதுடன், அவனே இஷ்ட தெய்வமாக - ஈஸ்வரனாகவும் பார்க்கப்படுகிறான்.
இராமன் காட்டுக்குச் செல்வதும், கைகேயி மற்றும் மந்திரை மூலமாக நிகழும் சம்பங்கள் அனைத்தும் அவன் மாயையின் திருவிளையாடலே என்று விளக்குகிறது அத்யாத்ம ராமாயணம்.
மேலும்: இராவணனால் கவரப்பட்ட சீதையும் உண்மையான சீதையல்ல. இராமனின் மாயசக்தியால் உருவாக்கப்பட்ட மாயசீதை. உண்மையான சீதையோ அக்னி தேவதைக்குள் ஒளித்து வைக்கப்படுகிறார். யுத்த காண்டத்தின் நிறைவில், மாயசீதை அக்னிப்பிரவேசம் செய்ய, இராமன் தன் சீதையை அக்னியிடம் இருந்து பெற்றுக் கொள்கிறான்.
இராவணன் மற்றும் கும்பகர்ணன் போன்றோரோ, வன் கையாலேயே முக்தி அடைய விரும்பியதால், போரும் மூண்டு, அதில் தங்கள் அஞ்ஞானத்தை முடித்துக் கொள்கின்றனர். அவர்கள் விபீடனனைப்போல் பக்தி மார்கத்தில் செல்லாமல், இராமனுடன் சண்டை இடுவதே தங்களுக்கு எளிதாக முக்தி அடைவதற்கான வழியாகக் கொண்டனர்.
-----------------------------------------------------------------
கம்பராமாயணத்திலும்:

போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

முன்பு தன் அண்ணன் விபீடனனார் சொன்னதுபோல்,

'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

சிவன், பிரம்மன், திருமால் - இவர்களில் யாருமல்லன் இராமன் - இவர்களுக்கெல்லாம் மேலான பரமன் - வேதமுதல்வனோ என்கிறான்.

Friday, March 07, 2008

இராமனைப்பற்றி சக்தி சிவனிடம் கேட்ட விளக்கம்

இடம் : கைலாயம்
சக்தியும், சிவனும் ஏதோ சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னதான் பேசுகிறார்கள் என்று கொஞ்சம் கேட்டுப்பார்ப்போமா?

சக்தி : உலகில் ராம பக்தி என்பது பிறவிக் கடலைக் கடக்க உதவும் உன்னதக் கப்பல் என்பது அனைவரும் அறிந்ததே, இருந்தாலும் இராமனைப் பற்றி எனக்கு சில ஐயங்கள் உண்டு, தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும், மகேசனே!

சிவன், புன்னகைத்தவாறு: கேள், சக்தி.

சக்தி: ஸ்ரீராமன், பரமனின் உருவமாக கருதப்படுவது அனைவரும் அறிந்ததே. உலகில் பலரும், அப்படிப்பட்ட புனிதனை அல்லும் பகலும் வணங்கி, வேண்டி, உருகி, அவனே பரமனாக, அவனை அடைய முயலுகின்றனர்.
ஆனால், வேறு சிலரோ, பிரம்மா சொன்ன பின்னர்தான், இராமனுக்கே தன் பரம சொரூபம் தெரிந்தாக சொல்கின்றனர். இன்னொருவர் சொல்லி எப்படி ஒரு ஆன்மா தன் பரம சொரூபத்தினை உணர இயலும்?

எல்லா உண்மையும் அறிந்த பரமனாக இருப்பின், சீதையை ராவணன் கவர்ந்த பின் எதற்காக அழுது புலம்ப வேண்டும்?

இராமன் பரமனை அறிந்திராமல், சாதரண மானுடனாகவே வாழ்ந்ததாகக் கொண்டாலோ, எல்லோராலும் போற்றத்தக்கதாகவோ, துதிக்கத்தக்கதாகவோ ஏற்றவன் என எப்படிக் கொள்ள இயலும்?

இந்த கேள்விகளுக்கான தக்க விளக்கங்களைக் கூறி என் சந்தேகங்களை களைவீர்களாக.

(இதைக்கேட்ட நமக்கு, சரிதான், நாரதர் இல்லாமலேயே நன்றாக கலகம் நேர்கிறது என்று நினைத்துக்கொண்டு, சற்றே உற்றுக் கேட்கலானோம்... சிவன் என்னதான் விளக்கம் தரப் போகிறார் என்ற ஆவலுடன்...)

சிவன் : சக்தி, உன்னுடைய அருமையான கேள்விகளுக்கான விளக்கங்களைச் சொல்லத் துவங்குமுன், ரகுகுலத் திலகன் இராமனுக்கு என் வணக்கங்கள்.
இராமன் எல்லாவற்றிலும் மேலானவன். அவன் பிரகிருதி அல்ல. அவனில் எல்லாமே உண்டு. தூய்மையான ஆனந்தமயமானவன் அவன்.
அண்ட சராசரங்களிலும், அனைத்து உயிர்களிலும் அவன் நிறைந்திருந்தாலும்,
அவன் இருப்பதை அவர்களுக்கு அறிவிக்காமல் இருக்கிறான். அவித்தையினால், அவர்களும் அதை அறியாமல் இருக்கிறார்கள். தங்கள் அறியாமையினால், தங்கள் பொன்,பொருள், பந்தம் போன்ற தளைகளோடு கட்டுண்டு, தங்கள் இருதயத்திலேயே மிளிரும் ஸ்ரீராமனைக் கண்டுகொள்ளாக் குருடராய் உள்ளனர் - கழுத்தில் ஆபரணம் இருந்தும் அதை மறந்து எங்கெங்கோ தேடுபவர் போல.
நான், எனது என்கிற அகங்காரத்தின் மமதை தலைக்கேற, ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில், செயல்கள் நிகழ்வதெல்லாமும் தன்னால்தான் எனக் கொள்வர்.
இந்த அறியாமைகளுக்கு எதிரே வன் ஒரு பார்வையாளனாகத்தான் இருக்கிறானே தவிர, அதனால் அவனுக்கு பாதிப்பேதும் கிடையாது. அறியாமையின் சக்தியான மாயையும் அவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறதோ தவிர, அதனால் அவனுக்கேதும் தாழ்வோ, குறைவோ கடுகளவும் கிடையாது.

என்னில் சரிபாதி கொண்ட உமையே, இதுபற்றி மேலும் விளக்க, முன்பொரு முறை நடந்த சம்பவம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறேன். இது மோட்சம் அடைதல் பற்றியானதும் கூடவாகும்.
இராவணனை வென்று, சீதையை மீட்டு, அயோத்தி திரும்பி, இராம பட்டாபிஷேகமும் இனிதே நிறைவேறிய பின்னர், இராமனும் சீதையும் அரியாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது அனுமனோ, ஒரு ஓரத்தில், அமைதியாக, இருகையையும் கூப்பியவாறு, தன் கடமைகளை நிறைவேற்றிய திருப்தியில், ஆசைகள் அற்று, உயர் ஞானம் ஒன்றே வேண்டி நிற்கிறான். இதைக் கண்ட இராமனும், சீதையைப் பார்த்து,
"என் அன்பின் சீதை, நம் பிரிய அனுமனுக்கு உயர் மெய்ஞானத்தை உபதேசித்தருள்வாயாக. அகத்தில் அப்பழுக்கற்ற அன்பன் அனுமன், பக்தியில் கரை கண்டவன். ஆக, ஞான ஒளி பெற ஏற்ற தகுதிகள் அவனுக்குண்டு." என்றான்.

அன்னை சீதா பிராட்டி - உலகெங்கும் அவள் ஆன்மாவின் உண்மையான சொரூபம் பற்றியான குழப்பங்களை தீர்த்து வைப்பவள். இராம பக்தன் அனுமனுக்கு, இராமன் உண்மையில் யாரென்பதை தெள்ளத் தெளிவாக உபதேசிக்கத் துவங்கினாள்.

(வளரும்...)

---------------- அத்யாத்ம இராமயணம் - ஒரு சிறு பின் குறிப்பு ------
இந்திய இதிகாசம் வால்மீகி இராமயணத்தை தழுவி பல்வேறு இராமயணங்கள் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டன. அவற்றில் ஒன்று அத்யாத்ம இராமயணம். இந்நூல் முழுவதும் சிவன் - சக்தி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வால்மீகி, இராமனின் இறைத்தன்மையை பின்புலத்தில் வைத்து, பொதுவாக மானுடனாக, காட்டியிருப்பார். ஆனால் அத்யாத்ம இராமயணத்தில் இராமன் பரமனாகவே காட்சி தருகிறான். இந்நூல் முழுதும், காவியப் பாத்திரங்கள் மூலமாக நீளமான தத்துவப் பாடல்களும், உரைகளும் படிக்கப்படுவது, இதன் சிறப்பம்சமாகும்.
சுவேதஸ்வதார உபநிடதம் சொல்லுவதுபோல், "பக்தியில்லாமல், எவ்வளவுதான் நூல்களைத் கற்றுத் தேர்ந்தாலும், எள் அளவும் ஞானம் கிட்டாது. பக்தியால் மட்டுமே ஞானம் சித்தியாகும்." என்பதனை இராமகாதை மூலமாக ஆன்ம ஞானத்தினை போதிக்கும் காவியமாக மிளிர்கிறது. பிற்காலத்தில், துளசிதாசரின் ராமயணத்திலும், அத்யாத்ம ராமயணத்தின் ஈடுபாட்டினைப் பார்க்கலாம்.