பூகம்பம், எரிமலை, சுனாமி என இயற்கைச் சீற்றங்கள் பலவும் இருந்தாலும், டொர்னடோக்கள் அவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை வானத்தில் இருந்து வருவதால், டொர்னடோவின் நகர்வினை யாராலும் முழுமையாக கணக்கிட முடிவதில்லை. இதுவரை நிகழ்ந்தவற்றில் இருந்து கிடைத்த பொதுவான காரணிகளில் இருந்து, டொர்னடோ நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தோராயமாக மட்டுமே கணிக்க இயல்கிறது. அக்காரணிகள் என்னவென்றால்: தரையின் அருகே இருக்கும் சூடான, அதே சமயத்தில் ஈரப்பதமான காற்று, கிழித்து வீசும் காற்று, உயரம் போகப்போக காற்றின் வீச்சில் தெரியும் திசை மாற்றம் ஆகியவையாகும். இடி மின்னலோடு ஏற்படும் சூறாவளிக் காலங்களில், காற்றும் சுழன்று வீசுவதால், அக்காலங்களில் டொர்னடா நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
அமெரிக்காவில் நிகழும் டொர்னடாக்களில் பெரும்பான்மையானவை, மத்திய அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் உள்ள காலத்தில் ஏற்படுகின்றன. தெற்கு டகோடா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலம் வரைக்கும் இடைப்பட்ட மாநிலங்களில் தான், இவை அதிகமாக நிகழ்கின்றன. ராக்கி மலைத்தொடர்களில் இருந்து வரும் குளிர்ந்த மற்றும், வரண்ட காற்று, அதே சமயம் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வடக்கே நகரும் சூடான, மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகையில் - எதிர் எதிர் துருவங்கள் சந்தித்தால் என்னவாகும்? மழையும், பனிக்கட்டி மழையையும் பொழிய - இவற்றின் கலவை தான் காலிஃபிளவர் போன்ற தலையுடன் வானத்தை நோக்கி விரியும், டொர்னடோ. டொர்னடோவின் முழு சக்தியையோ, வீச்சையோ வல்லுனர்களால் நேரடியாக அளவிட இயலாததால், அவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டே அவற்றை அளவிட வேண்டியுள்ளது. எங்கள் வீட்டுப் பக்கத்தில், டொர்னடோ வருவதற்கு முன்பான ஆலங்கட்டி மழைகளால் மட்டுமே அவர்களின் வீட்டின் கூரைக்கு இழப்புகள் பல ஆயிரம் டாலர்கள். நல்ல வேளை டொர்னடோ தரையைத் தொடவில்லை அன்று. வீட்டின் கூரையின் மேல், படபடவென்று யாரோ கற்களை எறிந்ததுபோல இருக்க, நாங்களோ செய்தி அறிக்கையை கேட்டவாறே, அடுத்த 15 நிமிடங்களுக்கு, குளியலறையில், பாத்ரூம் டப்பில் பதுங்கிக் கொண்டோம்!
1996 இல் வெளிவந்த திரைப்படமான 'டிவிஸ்டர்' மிகவும் சுவாரஸ்யமாக டொர்னடோக் கதையைச் சொல்லி இருக்கும். இத்திரைப்படத்திற்குப்பின் டோர்னடோக்களைத் தேடிப்போய் அவற்றைப் புகைப்படம் எடுப்பவர்களும் அதிகமானார்கள். இது உயிருக்கு ஆபத்தான செயல் என்றாலும், அதையும் பணயம் வைத்து, இந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். மோசமான தட்பவெட்ப நிலையிலும், பற்கள் கடுகடுக்க, அவர்களின் வாகனங்களை பனிக்கட்டி மழைகள் பதம் பார்க்க, டொர்னடோ தொடருதல் நடைபெருகிறது. சில அஞ்சா நெஞ்சங்கள்(/ளை) டொர்னடோவைக் காட்டுவதற்கு டூர் அழைத்துப்போகும் கைட் போல வேலை செய்வதும் உண்டு. ஆனால் நிச்சயமாக அது நயகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுபோல எளிதானதாக இருக்காது! :-)அமெச்சூர் டொர்னடோ வேட்டையாளர்களைப் போலவே, அறிவியல் ஆராய்சியாளர்களும் டொர்னடோக்களைத் தேடிப்போவதுண்டு. நிலையான ராடார் கருவிகளைக் கொண்டு மட்டும் இவற்றை ஆய்வு செய்ய இயலாது. டொர்னடோ நிகழ்ப்போகும் இடத்தில் கொண்டுபோய் டாப்ளர் ராடார் கருவுகளைப் பொருத்துவதால் ஓரளவுக்கு பயனிருக்கிறது. இப்படி ஆராய்சியாளர்கள் தங்களால் இயன்ற அளக்கும் கருவிகளை தயார் செய்து, அங்கு வைத்து விட்டு வந்தால், பல சமயம், இந்த சுழற்காற்றுகள், ஒன்றுமில்லாமல் இற்றுப்போய் விடும். அடுத்த முறை வரை, அவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.
சமீப ஆண்டுகளில் சற்றே முன்னேறியிருக்கும் GPS போன்ற நுட்பங்களும் இந்தப் பணியில் கைகொடுக்கின்றது. டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவற்றுக்கு எவ்வளவு அருகே செல்லமுடியுமோ அவ்வளவு அருகில் சென்று அவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியமாகிறது. இதற்காக, ஆராய்சியாளர்கள், அமெச்சூர் காரார்களையும் உதவிக்கு கொள்கிறார்கள். டொர்னடோ பற்றியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் சின்னச்சின்னக் கருவிகளை, டொர்னடோ வரும் பாதையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். அவற்றில் ஒன்றான, 'டின்மேன்' எனப்படும் டொர்னடோக்களை படம் பிடிக்கும் கருவி, பிரபலம். இதன்மூலம், டொர்னடோவைப்பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை அவை மிக அருகாமையில் வரும் சமயம் பதிவு செய்ய முடிகிறது. இந்த தகவல்களின் உதவியால் வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் காற்றின் திசை ஆகியவற்றை மேலும் துல்லியமாக கணிக்க இயல்கிறதாம். தொடரும் ஆராய்ச்சிகள், டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடருகிறார்கள்.




