Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, January 23, 2011

நானொரு நாத்திகன்

குப்பறையில் அந்த ஆசிரியர் தன் முன்னாலிருந்த மாணவர்களைப் பார்த்து பெருமையுடன் சொன்னார், "நானொரு நாத்திகன்" என்று. அவருக்கு எப்போதுமே இதிலொரு தனிப்பெருமை இருக்கத்தான் செய்தது. இல்லாத ஒரு கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனையைக் கடவுளெனக் கொள்வாரும் உண்டோ? கண்ணால் காண்பது மட்டுமே மெய். அதுவே அறிவியல். அறிவியல் உலகத்துக்குப் பற்பல அற்புதங்களைச் சமைத்துத் தந்திருக்கிறது. கடவுள் என்றிருந்தால், அறிவியல்தான் அந்த கடவுள். அதைவிடுத்து கல்லையும் கற்பனை மூட்டைகளையும் சுமந்து கொண்டு காலத்தை விரையம் செய்பவர்களைப் பார்த்தால் - அவர்களைப் புரிந்து கொள்வது என்பது அவருக்குச் சற்றுக் கடினமாகவே இருந்தது.

அவர் எப்போதும் தன் சக ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் தானொரு நாத்திகன் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருப்பது வழக்கம். அன்றைக்கு அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை - தானொரு நாத்திகன் என்னும் அறிவியல் உண்மையினை(?!) தனதருமை மாணவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கின்ற அற்புத அவா அவரையும் மீறி அதை அவர்களிடம் வெளிப்படுத்தச் செய்தது.

"அன்பு மாணவ மணிகளே, நானொரு நாத்திகன். உங்களில் யாரெல்லாம் நாத்திகர்களோ, உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம்." என்றார். மாணவர்களில் பலருக்கும் 'நாத்திகன்' என்றால் என்னதென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஆசிரியரை மறுத்துச் சொல்லவோ எதிர்த்துச் சொல்லவோ அவர்களுக்கு துணிவில்லை. எல்லோரும் தங்களை கைகளை உயர்த்தினார்கள் - ஒரேயொரு சிறுமியைத் தவிர.

ஒரு சிறுமியைத் தவிர அனைவரும் தத்தம் கரங்களை உயர்த்தியது, ஆசிரியருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு சிறுமி மட்டும் தன் கரத்தை உயர்த்தாது அவரை வியப்பினில் ஆழ்த்தியது.

அந்த வியப்பினூடே, "சின்னஞ்சிறு பெண்ணே! - நீ மட்டும் இங்கே ஆத்திகப் பெண்ணோ!." என்றார்.

"ஆம். ஐயா. கண்ணன் தான் என் கடவுள்." என்றாள் அந்தச் சிறுமி.

காணத ஒன்றுக்குக் கண்ணன் என்று பெயரும் இட்டு, அதைக் கடவுள் என்றும் வணங்குவது அவருக்கு என்றுமே விளங்காதது. தனக்குப் புரியாதது, அச்சிறுமிக்கும் புரியாதது என்கிற முடிவில், "அதற்குக் காரணம் என்ன?" என்று வினவினார்.

"ஐயா, கண்ணன் எனக்கு கடவுள் மட்டுமல்ல, ஒரு தோழனும் கூட. அவனோடு நான் விளையாடும் நேரங்களில் எல்லாம் எல்லையில்லா ஆனந்தம் என்னுள் மேலிடுகிறது. என்னவென்று சொல்லவியலா ஆனந்தம் அது. ஏனிப்படி என எண்ணிப்பார்த்தால் என் என் அப்பாவையும், அம்மாவையும் தான் காரணம் சொல்ல வேண்டும். என் அப்பாவும், அம்மாவும் ஆத்திகர்கள். அதனால் நானும் அப்படியே இருக்கின்றேன் போலவும்!" என்றாள் அந்தச் சிறுமி.

"அப்பாவும், அம்மாவும் தான்" என்றதைக் கேட்டதும் ஆசிரியருக்கு உடனே கோபம் நிறையவே வந்தது. "என்னது?. இதெப்படி ஒரு நல்ல காரணமாக இருக்க முடியும்? அப்பாவும் அம்மாவும் ஆத்திகர்களானால், நீயும் அப்படித்தான் ஆக வேண்டுமா என்ன? அப்படியானால், உன் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்தால், நீ எப்படி இருப்பாயோ?" என்றார் கிண்டலாக.

சிறுமியிடம் இருந்து நிதானமாக பதில் வந்தது. "ஐயா, ஒருவேளை என் அப்பாவும் அம்மாவும் முட்டாள்களாக இருந்திருந்தால் - நான் நாத்திகப் பெண்ணாகி இருப்பேனோ என்னவோ" என்றாளே பார்க்கலாம்! - சக மாணவர்களின் கைத்தட்டல்கள் அவ்வகுப்பறையை நிறைத்திட.

Thursday, August 28, 2008

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு...

ழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணார்ந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை - அது என்ன? என்பார்கள்.
'தேங்காய்' என்று உடனே பதில் வரும்! பசுமரத்தாணி போல பதிந்து விட்டது இவ்விடுகதை. சிறுவயதில் விடுகதையாய் இந்தக் கேள்வி வரும் போதெல்லாம், அதோடு சேர்ந்து ஆவலும் இருந்ததுண்டு. ஒரு தேங்காயை மண்ணில் நட்டு வைத்தால், அது மரமாய் வளர்ந்தபின் அந்த ஒன்றில் இருந்து தொண்ணூறு தேங்காய் வருமாமே! (இப்போது கேட்டால், தொண்ணூறு என்ன, எல்லாமே பரமன் ஒருவனில் இருந்து வந்ததுதான் என வேதாந்தம் சொல்வேன்!)

காஞ்சிபுரத்தில் சொந்தவீட்டில் வசித்த போது, வீட்டின் இடப்பக்கம் முழுதும் செடிகள் நிறைந்த தோட்டமாய் அம்மா அமைத்திருந்தார்கள். வாழை மரமும், செம்பருத்தி, துளசி, டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், நந்தியாவட்டை போன்ற செடிகளும் இருக்கும். டிசம்பர் மாதத்தில் ஏராளமாய் பூக்கும் டிசம்பர் பூக்களை பறிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்கும். குட்டி குட்டியாய் பூத்திருக்கும் அந்த பூக்களைப் பறித்துப் பறித்து தட்டில் சேர்க்க, இன்னமும் நிறைய இருக்கே என்ற மகிழ்ச்சியினால்!. அவற்றிலும் விதவிதமான வகைகள் - வெள்ளை, வெளிர் சிவப்பு, ஊதா, நாமம் என பல வகைகளில்!. வீட்டு வாசலில் கொடியாக படந்திருக்கும் நித்திய மல்லியும் அதன் அருகே, சம்பங்கிப் பூவின் கொடியும் படர்ந்திருக்க, சொல்லவே வேண்டாம், நறுமணமே, நான் இங்கே இருக்கிறேன் எனச் சொல்லும்!

தக்காளி,மணத்தக்காளி,சுண்டைக்காய் ஆகிய செடிகளும் இருந்தது. மனத்தக்காளி காய்க்கையில், காய் பச்சை நிறத்திலும், பின்னர் பழுத்தவுடன் திடீரென கறுப்பு நிறத்திலும் மாறி இருப்பது வியப்பைத் தரும். கனிந்த மணத்தக்காளிகளை, உடனே பறித்து வாயில் போட்டுக் கொள்வேன்! மணத்தக்காளிக் கீரைக் கூட்டும் அம்மா செய்து பறிமாற, அமுதாய் இருக்கும். ஆனால் பொதுவாக, காய்களாக இருக்கும்போதே அவற்றைப் பறித்து, மோரில் ஊறவைத்து, பின் வெய்யிலில் காய வைத்து, வற்றலாக்கி விடுவது வழக்கம்.

இந்தச் செடிகளை ஆடுமாடுகள் வந்து மேய்ந்திடாமல் தடுக்க, முதலில் 'ஆடாதோடா' செடிகளை வேலி போல நட்டு வைத்திருந்தார்கள். பின்னாளில் காம்பௌண்ட் சுவர் கட்டும் வரை, இந்த இயற்கையான வேலியே காப்பு! வீட்டில் இருந்து வெளியேறும் நல்ல தண்ணீர் எல்லாம் ஒரு கால்வாய் வழியாக செடிகளுக்குச் செல்லுமாறு வழி அமைத்திருப்பார்கள். சின்னப்பையனாய், அந்தத் தண்ணீர் செல்ல இயலா மற்ற இடங்களுக்கு ஹோஸ் பைப் மூலம் செடிகளுக்கு தண்ணீரை விடுவதும், பூக்களைப் பறித்து வந்து பூஜை அறையின் சுவரில் தலை முன் பக்கமாய் 'சற்றே சரிந்து நிற்கும்' சாமிப்படங்களுக்கு (செம்பருத்திப் பூவினை) வைத்ததும் இன்னும் மறக்கவில்லை!

ஓர் ஆண்டு, அவரை விதைத்து, அது கொடியாய்ப் படர, அதை, மொட்டை மாடியில் இருந்து கீழே வரும் மழைநீர் வடிகால் குழாயில் கட்டி விட, அது கொஞ்சம் கொஞ்சமாய் படர்ந்து, மொட்டை மாடியையே தொட்டு விட்டது. பின்னர் அங்கேயும், துணி உலர்த்தும் கம்பியில் தொடர்ந்து படர்ந்து வளர்ந்தது. பின்னர் அவரை காய்க்கும் பருவத்தில், அவரைக்காய் எக்கச்சக்கமாய் காய்த்துத் தள்ளியது!. வீட்டின் முன்புறத்தில் செடியாய் வைத்த முருங்கையும், சில ஆண்டுகளில் மரமாய் வளர்ந்து சுவையான முருங்கைகளை அள்ளித் தந்தது. முருங்கைக்காய்களைப் பறிக்க நீண்ட குச்சியில் ஆன தொரடு ஒன்றிருக்கும். (கே.ஆர்.எஸ், இந்த தொரடு என்கிற சொல்லைத் தேடியதில் தெரிந்தது - நீங்கதான், இந்த சொல்லைப் பதிந்த முதல் மற்றும் ஒரே பதிவர்!). தொரடின் நுனியில் இருக்கும் கொக்கியை தூக்கிப்பிடித்து, முருங்கையின் காம்புப் பக்கத்தில் இழுத்தால், கிளை முறியாமல், காய் மட்டும் கீழே வந்து விழும்.

----------------------------------------------------------
இவையெல்லாம் சின்னவயதின் நினைத்துப் பார்க்க இனிக்கும் நினைவுகள். இப்போ, அங்கிருந்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து அமெரிக்கா வருவோம். அங்கே அத்தனைச் செடிகளைப் பார்த்துவிட்டு, இங்கே?
அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் கொஞ்சம், வீட்டைச் சுற்றி வளர்த்த பூச்செடிகளை, நீங்களே பாருங்களேன். இவற்றைத் தவிர தொட்டிச்செடியாக, ஸ்டார் மல்லியும், துளசியும், ஆரஞ்சும் உண்டு.

* செம்பருத்தி (மே மாதம் முதல் செம்டம்பர் வரை பூக்கிறது); வெளிர் சிவப்பு (இது தவிர வெள்ளை நிறத்திலும் பூக்கிறது) - பெரினியல் (வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்திடும்)


* ரோஜா (மே முதல் அக்டோபர் வரை பூக்கிறது); சிவப்பு - பெரினியல்


* டே லில்லி (ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) (வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை) - பெரினியல் பல்ப்


* ஃபோர்சைத்தியா (மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் பூக்கும்) (மஞ்சள்) - பெரினியல்


* கிளாடியோலஸ் (ஜூன், ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) - பெரினியல் பல்ப்

Sunday, April 10, 2005

மகரந்த மழை

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கிறோம். காய்ந்து, மொட்டையாய்போன மரங்களெல்லாம் நன்றாக துளிர் விடத்துவங்கி விட்டன.

அட்லாண்டாவில் இந்த வாரத்தின் புதுவரவு என்ன தெரியுமா?
மகரந்த மழை.
நகரெங்கும் பச்சை வண்ணத்தூளை தூவினாற்போல் உள்ளது. புதிதாக பூக்கும் பூக்களிலல் இருந்து மகரந்தத் தூள் வெளியேறி நகரெங்கும பரவுகிறது.
இது இயற்கை நடத்தும் பச்சை ஹோலிப்பண்டிகையோ என வியக்கிறேன்.
வீட்டின் கதவுகள் மீதும், வீட்டின் வெளிப்புறத்திலும், வாகனங்கள் மீதும் பச்சைப்பொடி படியத்துவங்கி விட்டது.
கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களுக்கு இது இருக்கும்.
இதற்கு அப்பால் வண்ணமற்ற/கண்ணுக்குத்தெரியாத மகரந்த தூள்களின் அளவும் காற்றில் கலந்திருக்கும்.

சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தும். சென்ற வருடம், இந்த சமயம் வசந்தம் வந்துவிட்டது, டென்னிஸ் விளையாடலாம் என்று துவங்கி, சளி பிடித்துக் கொண்டதுதான் மிச்சம். ஃப்ளோநேஸ் போன்ற ஒவ்வாமை தடுக்கும் மருந்துகளும் அதிக விற்பனயாகும் இந்த காலத்தில். தொலைக்காட்சி பெட்டியில் விளம்பரங்களில் பாதி இந்த மருந்துகளாகவே இருக்கும்!.

வெறுங்காலுடன் தோட்டம் அல்லது திண்ணை சென்று வந்தால் ஞாபகமாக கை/கால்களை சுத்தம் செய்ய வேண்டும். மற்ற காலங்களைக் காட்டிலும் இந்த காலத்தில் மேலும் சில முறைகள் தரைக் கம்பளத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
தும்மல் வரும்போது தூக்கி எறியக்கூடிய நேப்கின் கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். நோய்கள் அண்டாமல் இருந்தால்தானே இயற்கையை அனுபவிக்க முடியும்.

Saturday, April 09, 2005

நான் எந்த காலிங் கார்ட் பயன்படுத்துகிறேன்?

புலம் பெயர்ந்தவர்கள் தாய் நாட்டுடன் தொடர்புகொள்ள எளியதொரு சாதனம் காலிங் கார்ட்.
நான் எந்த காலிங் கார்ட் பயன்படுத்துகிறேன் என சமீபத்தில் கேட்பவருக்கு சொல்வது - எதுவும் இல்லை என்பதுதான்!
ஏனெனில், அமெரிக்காவில் இப்போது Voice over IP (VOIP) தெலைபேசி நிறுவனங்கள் வந்து விட்டன. அவற்றின் மூலம் அதிகம் செலவாகாமல் உங்கள் தொலைபேசியிலிருந்தே எந்த ஒரு நாட்டு தொலைபேசியுடனும் தொரட்பு கொள்ளலாம்.
இந்தியாவிலும் இருக்கிறது என கேள்விப்பட்டேன். சென்னையில் BSNL, 'Internet Phone' என்ற பெயரில் வழங்குகிறது என அறிகிறேன்.

இங்கு அமெரிக்காவில் எனது VOIP தொலைபேசி நிறுவனத்தின் பெயர் வானேஜ்.
(Vonage). இதற்கு உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு பிராட்பேண்ட் (broadand) இணையத்தொடர்பு மட்டுமே. உங்களுடைய பழைய தொலைபேசி நிறுவனத்தின் இணைப்பு தேவையில்லை.

VOIP தொலைபேசி எப்படி வேலை செய்கிறது?
இதன் முக்கியபாகம், உங்கள் தொலைபேசியிலிருந்து வெளிவரும் அனலாக் சிக்னலை, டிஜிடல் சிக்னலாக மாற்றும் சாதனமே. பின்னர் இந்த டிஜிடல் சிக்னலை இணையத்தொடர்பு மூலமாக செலுத்தி, கடைசியாக, நீங்கள் டயல் செய்த தொலைபேசி எண்ணை அடையும். இவ்வாறு பேசுவதற்கு உங்களிடமோ அல்லது நீங்கள் பேசும் நபரிடமோ கணிணி இருக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் கேபிள்/டி.எஸ்.எல் போன்ற வேகமான இணையத்தொடர்பு வேண்டும். 'டயல்-அப்' போதாது. மேற்சொன்ன சாதனத்தை தொலைபேசி நிறுவனமே இலவசமாக உங்களுக்கு தருகிறது, அவர்களது சேவையை பயன்படுத்தத் தொடங்கினால்.

எவ்வளவு செலவாகிறது?
அமெரிக்காவிலிருந்து சென்னைக்குப்பேச நிமிடத்திற்கு 10 cent மட்டுமே ஆகிறது. மற்ற இடங்களுக்கு, இடத்திற்கு தகுந்தாற்போல் சற்றே வேறுபடுகிறது.
அமெரிக்காவிற்குள்ளேயே அளவின்றி 'long-distance' பேசிக்கொள்ள மாதத்திற்கு 25 டாலரும், மாதம் 500 நிமிட அளவிற்கு 15 டாலரும் ஆகிறது. இது சம்பிரதாய தொலைபேசி நிறுவனங்களைவிட விலை குறைவுதான்.

தரம்?
அமெரிக்காவிற்குள்ளேயே பேசிக்கொள்வதில் எந்த வித்யாசமும் இல்லை. இந்தியாவிற்கு பேசும்போது, சிறிது குறைவாக இருப்பதுபோல் இருக்கிறது. ஆனால், காலிங் கார்ட்களைவிட எவ்வளவோ தேவலாம். மேலும் காலிங் கார்ட்டில் ஒவ்வொரு சமயம் தரம் வெவ்வேறாக இருக்கும். எந்த ஒரு புது கார்டையும் அதிக நபர்கள் பயன்படுத்த துவங்கினால் அம்பேல்!

அனுகூலம்?
காலிங்கார்ட்களைப்போல் 1-800 எண்களை டயல் செய்ய வேண்டாம். அந்த எண் டயல் செய்தால் சில சமயம் கிடைக்காமல் தவிக்க வேண்டியதில்லை.
நேராக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் எண்ணை சொடுக்கினால் போதும். ஒவ்வொரு கார்ட் கட்டினம் முடிந்தவுடன் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கட்டினம் முடியப்போகிறதே என்று பேச்சை குறைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பதை இணைய தளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். வாய்ஸ் மெயில் போன்ற இதர வசதிகளும் உண்டு.

Sunday, March 20, 2005

ஒரு உண்மைச்சம்பவம்

இது அட்லாண்டாவில் சென்ற வாரம் நடந்த உண்மைச்சம்பவம்.
இந்த சம்பவத்தில் அதிசயத்தக்க புத்திசாலிதனத்துடன் செயல்பட்ட பெண்மணி - ஆஷ்லி ஸ்மித். இவர் திருமணமாகி, கணவரை நான்கு வருடங்களுக்கு முன்பு இழந்தவர். இவருக்கு ஒரு 5 வயது பெண் குழந்தை உண்டு. சம்பவம் நடந்தபோது, குழந்தை வீட்டில் இல்லை.
இப்போது சம்பவத்திற்கு வருவோம்.
இடம்: டுலுத் (அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதி))
அதிகாலை 2:30 மணி அளவில், பக்கதில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்புகிறார், ஆஷ்லி ஸ்மித்.
அப்போது, மறைந்து இருந்த வாட்ட சாட்டமான, ஆஃப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஒருவனும் வீடு புகுந்து விடுகிறான்.
அவனை பார்த்தவுடன் தெரிகிறது. அவன் நேற்று தோலைக்காட்சிப்பெட்டியில் காட்டப்பட்ட ஆள். கற்பழிப்பு குற்றத்திற்காக, நேற்று விசாரணை நடக்கும் பொழுது, காவலர்களிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கிகொண்டு நீதிபதியையும், உதவி ஷெரிஃப்-ஐயும் (அவர் பெண்) சுட்டுதள்ளிவிட்டு, நீதிமன்றத்திலிருந்து தப்பிவிட்டான்.
அவன் பெயர் ப்ரையன் நிக்கலோஸ்.
கையில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த அவன், முதலில், ஆஷ்லி ஸ்மித்-ஐ டேப், திரைச்சீலை மற்றும் வயர்கள் கொண்டு நாற்காலியில் கட்டிப்போடுகிறான். கத்த முயன்ற ஆஷ்லி ஸ்மித்தை, கத்தினால் மேலும் உயிர்சேதம் ஏற்பட்டக்கூடும் மிரட்டி மேலும் அதை தான் விரும்பவில்லை என்றும் கூறுகிறான். ஏதேனும் ஏடாகூடம் செய்தால் ஸ்மித்-ஐ பிணையக்கைதியாய் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் மிரட்டுகிறான். பயந்து போயிருக்கும் ஆஷ்லி ஸ்மித்-ஐ பார்த்து, தான் யாரையும் கொல்ல விரும்பவில்லை என்றும், தனக்கு தற்போது வேண்டியதெல்லாம் சற்று ஓயவும், நல்ல சாப்பாடும் தான் என்கிறான்.
பின்னர் அவன் போய் குளித்துவிட்டு, பழைய ட்-ஷ்ர்ட் ஒர்றை கேட்டு வாங்கி போட்டுக்கொள்கிறான்.
இப்படியே, காலை மணி 6 ஆகிறது.
காலையில், தன் குழந்தையை பார்க்க்ப்போகவதற்ககா, அனுமதி கேட்கிறார் ஆஷ்லி ஸ்மித். நிக்கலோஸோ அனுமதி மறுக்கிறான். தன் கணவர் இறந்து விட்டார் என்றும், தன்னை விட்டால் தன் குழந்தைக்கு வழியேதும் இல்லை என்றும் சொல்கிறார். அப்போதும் அனுமதி இல்லை.
பின்னர், பேச்சு தோடர்கிறது. இருவரின் சொந்த வாழ்க்கையைப்பற்றி, குடும்பம், உற்றார் உறவினர் பற்றி. இடையில் அவனுக்கு சாப்பிட பேன் கேக் செய்து தருகிறார்.
பின்னர், ஏதாவது புத்தகத்தை படித்து காட்டட்டுமா என்று கேட்கிறார். அவன் சரி என்கிறான்.
பைபிளையும், தான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகமான "பயனுள்ள வாழ்க்கை" என்ற புத்தகத்தையும் எடுத்துக்கொள்கிறார். அந்த புத்தகத்தில் தான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் பக்கத்தை திருப்பி, அதில் ஒரு பத்தி படித்து முடிக்கிறார். அது அவன் மனதைத் தொட்டிருக்க வேண்டும். அந்த பத்தியை நிக்கலோஸ் மறுபடியும் படிக்கச் சொல்கிறான்.
பின்னர் வாழ்க்கையப்பற்றியும் வாழ்க்கையின் அர்த்தங்ககளைப்பற்றியும் பேச்சு செல்கிறது.
இந்த பேச்சு அவன் மனதில் ஏதோ மாறுதலை உண்டாக்குகிறது. ஒரு சமயத்தில், அவன் ஆஷ்லி ஸ்மித்-ஐ கடவுள் அனுப்பிய தேவதையாகவே பார்க்கிறான் - தான் மேன்மேலும் செய்ய இருக்கும் தவறுகளை திருத்துவதற்காக.
பின்னர் அவன் கேட்கிறான், 'நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?".
"நீங்கள் சரணடைய வேண்டும், ஏனெனில் நீங்கள் வெளியே இருந்தால், அது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் உயிருக்கும் ஆபத்து" என்கிறார்.
அவன் கேட்கிறான், "நான் இன்னமும் இரண்டு, மூன்று நாட்களாவது இங்கு தங்கி இருக்கிறேனே, எனக்கு அமைதியாக சிந்திக்க இடமும், உணவும் வேண்டும்".
இவவாறு பேசிக்கொண்டே, அவனுடய நம்பிக்கையப்பெற்றபின், தன் குழந்தையை பார்க்கச்கெல்ல அனுமதி கேட்கிறார். அவனும் ஒருவாறு சம்மதிக்கிறான்.
பின்னர் காரில் ஏறியவுடன் செல்ஃபோன் மூலமாக, போலிஸுக்கு 911 கால் செய்கிரார். போலிஸ் வந்தவுடன், எந்தவித அசம்பாவிதமும் நிகழாவண்ணம், அமைதியாக சரணடைகிறான் நிக்கலோஸ், தனது வெள்ளை ட்-ஷ்ர்ட் -ஐ சமாதானக்கொடி போல வீசியபடி.

சம்பவத்தின் செய்தி

பயனுள்ள வாழ்க்கை புத்தகம்

ஆஷ்லி ஸ்மித் - 40,000$ பரிசு செய்தி

Saturday, March 19, 2005

வெள்ளைப் பூக்கள்

மார்ச் மாதமாகிவிட்டது. குளிர் காலத்தின் கடைசி மாதம். குளிர் இன்னமும் முழுதாய் விட்டபாடில்லை.
சூரியன் மேகங்களுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருக்கும். பகலில் ஒரு சில சமயம் சூரியன் எட்டிப்பார்த்தால் மட்டுமே வெப்பம்.
நாங்கள் வசிக்கும் அட்லாண்டாவில், மேலை அமெரிக்காவைப்போல் வாட்டி எடுக்கும் குளிர் இல்லாவிட்டாலும், குளிரானாலும், வெய்யிலானாலும் சரி மிதமானதகவே இருக்கும்.

மார்ச் மாதத்தின் தொடக்கதிலேயே, காய்ந்து போன மரங்கள் துளிர் விடத்தொடங்கிடும். ஒரு சில வகையான மரங்கள் பூ வைக்கத்துவங்கிவிடும். இவற்றில் ஒன்று, வெள்ளை பூக்களை கொண்டிருக்கும். இம்மரத்தை, நகரெங்கிலும் பார்க்கலாம். இந்த மரத்தில் என்ன விசேஷம் என்றால், இந்த மாததில், மரத்தில் இலைகளே கிடயாது. மரம் முழுதும் வெள்ளை பூக்கள் தான். நிறத்தை சரியாகச்சொல்ல வேண்டுமெனால், வெளிர் பச்சை நிற பூக்கள் இவை. தூரத்தில் இருந்து பார்ப்பதற்க்கு வெள்ளை பூக்கள் போலத்தோன்றும். நவம்பர் மாதத்தில் இதே மரம் பழுப்பு நிற இலைகளை கொண்டு அழகாகக் காட்சி அளித்தது. இலையுதிர் காலத்திற்குப்பின், அனைத்து இலைகளையும் இழந்து மொட்டையாக மூன்று மாதங்கள்.
இப்போதும், இலைகளில்லை, அனால், பூக்களுண்டு.

இயற்கையின் சீரான மாற்றங்களில்தான் எத்தனை வினோதம்!


Vellai pookal Posted by Hello