Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, June 03, 2024

ஆடல் வல்லான் - எம்மை ஆளவந்தான்!

எடுப்பு

டல் வல்லான் - எம்மை ஆளவந்தான்!

பாடல்பெற்றத் தலங்கள் பலவிருக்கையில்

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


தொடுப்பு

தேடிய இருவர் காணக் கிடைக்காகூத்தன்,

தேய்ந்த பிறை சூடிய பெருமான் நினைவில்

தேய்ந்த இடை இன்னமும் தேய்கையில் 

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


முடிப்பு

காவிரியின் இருகரை நெடுகிலும் 

கயற்கொடி பாண்டிய நாட்டிலும்

தொண்டை கொங்கு மலை நடுநாட்டிலும்

துளுவம் ஈழம் வடநாட்டிலும் பாடல் பெற்ற

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


------------

இன்று காலை எழுகையில் மனதில் நிலைத்த வரிகளை விரித்து எழுதியது.

------------

Sunday, August 30, 2020

என்ன காரணம்? ஏனிந்த தாமதம்?

இராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ஆதி
 
எடுப்பு
ஏன்ன காரணம்? ஏனிந்த தாமதம்?
என்பால் கருணை இலையோ உன்னிடம்?
 
தொடுப்பு
இன்னொரு புகல் ஏதும் அறியேன் 
உன்னையே யான் எனவே அடுத்தேன்
பின்னமும் ஏனோ எனக்கிந்த இடர்கள் ஆயிரம்?
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...)

முடிப்பு
முன்னம் இடர்களை களைந்தது போதவில்லை
இன்னமும் இடர்கள் தொடர்வது தீரவில்லை
அறிவேன் நின் அருளின் பொருளை
உரக்கச் சொல்வேன் உன் பெயரை... ஈசனே...
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...) 
 
வண்டுகள் ரீங்காரம் புதுக்கொன்றைத் திகழாரம்
பிரணவ ஓம்காரம் சுவேதாரண்யத் தாண்டவம்
ஈரேழு சதங்கைகளும் ஜதி போடும்
ஈசனின் திருவெண்காட்டுறைத் தலமாகும்.
(என்ன காரணம்? ஏனிந்த தாமதம்? ...) 
 

 

Friday, June 12, 2020

நாலும் இரண்டும்

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
- நாலடியார்

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
- திருக்குறள்

இந் நாலும் இரண்டும் தரும் நல்வழி தனைப் பாடிடப் புனைந்த பாடல்.

எடுப்பு
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும் - உலகில்
சாலப் பழுத்த மரமே கல்லடி பெறும்.

தொடுப்பு
நாலும் இரண்டும் கற்றோர்க்கு - பொல்லா
உலகில் இல்லையே பவ பயம்.

முடிப்பு
ஓலைக் குடிசையில் இருந்தாலும்
வேலை முடிந்து கோரைப்பாயிற் படுத்தாலும்
நாலும் இரண்டும் தரும் நல்வழிதனைப் பற்றிட
(உலகில் இல்லையே பவ பயம்)

பாலை நிலத்தில் நீர் அதனைத் தேடி
மூலை முடிக்கெங்கும் அலைந்து திரியாமல்
கள்ளிச் செடியிலும் காண்பாரே.
(நாலும் இரண்டும் கற்றோர்க்கு)

காலை மாலை என வேளை எதுவாகிலும்
ஆலும் வேலும் போல் நாலும் இரண்டும் என
நூலைக் கற்று வழி நடந்தார்க்கு
(உலகில் இல்லையே பவ பயம்)

Friday, January 08, 2016

குறிப்பினை பகர்ந்திடு குமரேசா

அகமதில் நின்முகமது அனுதினம் நிலைத்திட
அறுமுகவேளே அருள்வாயே

இகமதில் துயரது இனியேனும் வாராது
இவனுக்கினி அருள்வாயே

உலகினில் உழல்வோருக்கு ஒருபகை அண்டாது
தலைமுதல்கால்வரை காப்பாயே

பலகணி வழிதனில் நினதொளி படர்ந்திட
பனிமுகம் தெரிந்திட அருள்வாயே

வழிதனில் விழிவைத்து எதிர்பார்த்திடும் அன்பரது
விழிதனில் தெரிந்தே அருள்வாயே

எனதிருசெவி தனிலும்  ஓம்கார நாதமெனும்
உனதொலி ஒலித்திட அருள்வாயே

நாசிவழி சுவாசம்தனை ஒருநிலைப்படுத்தி
வாசியோகம் செய்ய அருள்வோனே

பாயும் மனமதை சுழிதனில் அடக்கிடும்
மாயம் தன்னை அருள்வாயே

குணமது மூன்றும் குறையின்றி சமமாகிடும்
குறிப்பினை பகர்ந்திடு குமரேசா.

Saturday, January 10, 2015

விடலைப் பருவமடி!

இன்று காலை கண் விழிக்கையில் மனதில் தோன்றிய வரிகள். மால் மருகன் முருகனை எண்ணி மருகும் பாடல் வரிகள்.

எடுப்பு
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

தொடுப்பு
வெகுண்டு விரைவாய் துடிக்குது மனது
வேட்கை அதனில் புதிதாய் புகுந்தது
விடலைப் பருவமடி - வெண்ணிலா
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 1
சுடலைப் பொடி பூசும் சுந்தரேசன் மகன்
சுகுணகுமாரன் சுந்தர ரூபனை நாடி
இகபரசுகம் பெறவே துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 2
விரைந்தெனைக் காண வேலவன் வருவான்
பரிவோடு என்னை பார்த்திட வருவான்
பாலகன் இவனை வாரி அணைத்து
ஆவலைத் தீர்க்க அன்பிலே தவிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

முடிப்பு
அறிந்தது யாவும் அகந்தையை தூண்டுது
அங்கம் எங்கும் அவித்தையே மிஞ்சுது
அறிந்தது யாவையும் அடியோடு மறக்க
அழகன் முருகனைக் காணத் துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

Sunday, May 18, 2014

உன்பாலே ஈர்ப்பதுமேன்?

விருத்தம்:

உன்னுருவைக் கண்டறியேன்
....உன்வரவைக் கண்டறியேன்
உன்பேச்சைக் கேட்டறியேன்
....உன்னிடத்தை தெரிந்தறியேன்
ஒன்றான என்மனத்தை
...உன்பாலே ஈர்ப்பதுமேன்?
என்றென்றும் எவ்வுருவிலும்
....எங்கெங்கும் இருப்பதாலோ!


Sunday, October 13, 2013

சமீபத்திய பிரதிபலிப்புகள்

சென்ற வார இறுதியில் நாங்கள் ஒரு குழுவாக தனியொரு இடத்தில் தங்கி பட்டறை ஒன்றில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டியது. இதற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுக்க St.Louisஇல் இருந்து சுவாமி நிஷ்பாபானந்தர் வந்திருந்தார். இந்த வருடம், சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் வருடமாகையால், பாடங்களின் தலைப்பே விவேகானந்தர் தான்!. முதல் நாளின் இறுதியில் சுவாமி விவேகானந்தரின் கவிதை ஒன்று தரப்பட்டது. அந்த கவிதையில் இருந்து அடுத்த நாள் நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்குப் பிடித்த வரிகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதும் பணிக்கப்பட்டது.


இரண்டாம் நாள் காலையில் எழுந்து, அரை மணி நேரம் தியானம் செய்து விட்டு, தங்கி இருந்த இடைத்தைச் சுற்று சற்றே நடக்கலானேன். கண்கள் பதிவு செய்த காட்சிகளை காமிராவில் பதிவு செய்து கொண்டவாறு.
காலை விடியல் நேரம். Chattahoochee national forest எனப்படும் வனத்தின் எல்லைப்பகுதியில் தங்கி இருந்தால், சுற்றி இருந்த இடம் முழுதும் அடர் மரங்கள். சாலையில் இருந்து உள்ளே வருவதற்கான பாதை மட்டும் இருந்தது, அப்பாதை ஜல்லிக் கற்களால் செப்பனிடப் பட்டிருந்தது.






நடக்கையில் காலணிகள் கற்களோடு உரசி எழுப்பிய ஓசையும் என்னுள்ளே எழும்பிய கேள்விகளுக்கு கவிதை வடிவம் தந்தது:

As I am taking this leisurely stroll, 
I hear my sandals rubbing on the gravel   
and making a grinding sound.
As the grind begins to rhyme,
Wont my heart sing an hymn?
Listening to the pauses between the grind -
Is the Peace bestowed in those pauses?
Or Is it in the rhyming sound too?
Do the distant mountains indicate
how far I am away from the peace,
even if it is really so close.
The sun attempts to brighten the sky,
yet blocked by the murky clouds.
Oh nature, while you are a silent witness
on the outside, is there a
natural witness right within me?

இந்த எண்ண ஓட்டங்களுக்குக் காரணம் வேறொன்றும் இல்லை. நேற்றுப் படிக்கப் பணிக்கப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் கவிதைதான். "Peace" என்று தலைப்பிடப் பட்டிருந்த அக்கவிதையின் முதல் வரியிலேயே விவேகானந்தரின் அறிவுரை அறிவிப்பாய் அமர்ந்திருந்தது. கவிதை வரிகளை காட்சிப் படமாக இங்கு பார்க்கலாம்.


Composed at Ridgely Manor, New York, 1899.

Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,
The shade in dazzling light.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.

It is not joy nor sorrow,
But that which is between,
It is not night nor morrow,
But that which joins them in.

It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion --
It is the calm of heart.

It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

To it the tear-drop goes,
To spread the smiling form
It is the Goal of Life,
And Peace -- its only home!
-Swami Vivekananda

"The Power that is not the Power" என்று விவேகானந்தர் எதைக் குறிக்கிறார்? அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம். அதற்குள் உங்களுக்குத் தோன்றியதைப் பகிர்ந்து கொள்ளலாமே?



Monday, July 22, 2013

கண்ணனைக் காணவில்லை

எடுப்பு
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கனிமுகமும் என் நினைவில் இல்லை
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கார்குழலும் என் காதினில் கேட்கவில்லை

தொடுப்பு

வண்டுகள் சூழும் சோலையில் தேடியும்
வான்முகில்களின் இடையே தேடியும்
வருவான் வருவான் - வருவான் என
வழிமேல்விழி வைத்தும் மணி வண்ணணைக்
 (கண்ணனை இன்னமும்...)

வீதியில் ஆடும் கோபியர் பின்னேயும்
மாடுகள் மேய்க்கும் ஆயர் பின்னேயும்,  தயிர்
கொட்டி வைத்திருந்த உரியின் பின்னேயும், அவனைக்
கட்டி வைத்திருத்த உரலின் பின்னேயும்
தேடியும் தேடியும் தேடியும்
 (கண்ணனை இன்னமும்...)

முடிப்பு
முன்னம் முலையில் விடம் உண்டதனால்
இன்று இப்போது காணாமற் போனானோ? மண்
தின்ற வாய் திறந்து அண்டம் காட்டியதனால்
அண்டம் தனை விட்டு அகன்றே போனானோ?
ஆலிலையில் ஒரு காலைத் தூக்கியதால்
அமிழ்ந்தே அமிழ்ந்தே ஆழ்கடலுக்கடியே போனானோ?
(கண்ணனை இன்னமும்...)

சகடனை உதைத்து அவன் உருள்வதைக்
காணச் ஓடிச் சென்றானோ!
காளியன் வாலினால் கட்டுண்டது போல் மயங்கிப் போனானோ?
குழலூதி கறவையை அடக்கச் சென்றானோ?
கன்றினை தடியாய் மாற்றி விளாங்கனி பறிக்கச் சென்றானோ?
குன்றினைத் தூக்கி குடைபிடிக்கச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)
பிணை மருத மரங்களை சாய்க்கச் சென்றானோ?
ஆனையை காலனும் அண்டாது காக்கச் சென்றானோ?
வஞ்சகன் கஞ்சனை வாட்டவே சென்றானோ?
பாஞ்சாலியின் மானம் காக்கவே சென்றானோ?
பஞ்சவர்க்குத் தூதாகச் சென்றானோ? பின்னர்
பார்த்தனுக்குத் தேரோட்டச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)

பாவை நான் பாடும் பாவைக் கேளானோ
பாவையின் வாட்டத்தைத் தான் தீர்ப்பானோ
மாலையும் வாடுது - மாலை நேரமும் கூடுது
மன்னவா மன்னவா - மனதுக்கினிய
(கண்ணனை இன்னமும்...)

















எங்கும் எங்கும் கண்ணன் என இருக்க
எங்கோ எங்கோ ஏன் தேடினேன்
எங்கும் மறைபவன் கண்ணன்
எங்கும் தெரிபவன் கண்ணன்
எல்லாம் எல்லாம் எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம் எல்லாமும் கண்ணன்!

Wednesday, June 19, 2013

ஓடும் கங்கை நாறும் கொன்றை

ஓடும் கங்கை நாறும் கொன்றை

சுடாத நிலவு சூடும் பிரான்

விடாது உலையில் வாட்டி எடுத்தனன்

விடாது ஒட்டும் வினையை.


தண்டை ஒலிக்க வெண்டையம் இனிக்க

கிண்கிணி கிலுகிலுக்க சதங்கைகள் கொஞ்ச  

கண்கழலில் வாணியும் சிலம்பில் பரவிந்தும்

அணியழகு சிங்கார செந்தில் வேலவன்;



பிரானின் குமாரன் உமாவின் சுதனாம்

சூரனை வேலினால் வென்ற செவ்வேள் மா

மரத்தை இரண்டாயப்் பிளந்து தன் செங்

கரத்தால் காட்டினான் அருள்.


--------------------------------------------

கந்தன் அணியும் ஆபரணங்களுக்கான மேற்கோட்கள்:


தண்டை:

சிந்திக்கில்லேன் நின்று சேவிக்கில்லேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கில்லேன்
- கந்தரலங்காரம்


வெண்டையம்:

காலின் கழலோசையு நூபர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களின் ஓசைய தாநட மிடுவோனே
- திருப்புகழ்


கிண்கிணி:

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினாலுலகம் கேட்டதுவே.
- கந்தரலங்கரம்


சதங்கை:

மறைசதுர் விதந்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ
- திருப்புகழ்

தண்கழல்:

மதுரவாணியுற்ற கழலோனே
- திருப்புகழ்

சிலம்பு:

இனியநாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
- திருப்புகழ்


Friday, November 02, 2012

காற்றுக்கேது வேலி?

உன் இலக்கணம், உன் எல்லைகள், உன் வரம்புகள்,

என இவை எல்லாமே,

உன்னை ஒரு வரையுரைக்குள் அடைத்து,

அதனை நீ மீறிடாமற் குறுக்குவதாகவே உள்ளது.

உனக்கென ஒரு பெயர்.

உனக்கென ஒரு உயிர்.

சிக்குண்டாய் இங்கேயே.

நின்று ஒரு கணம் யோசி.

காற்றைப் பார்.

காற்றுக்கேது வேலி?

வானமும் எல்லை இடுமோ காற்றுக்கு?

அடைத்து வைத்தாலும்

உயிருடன் இருக்குமோ காற்றும்?

அறிவாய் மனமே,

எல்லைகள் இல்லாமல்

எங்கும் திரிந்து பறந்திட.

எங்கும் எதிலும் வியாபித்திட.

Sunday, October 21, 2012

நவராத்ரிப் பாடல்


ஆதியவன் சோதியாம் அன்னையவள் சக்தி
ஆதரிப்பாள் அன்புடனே அனுதினமும் போற்றி
நீதிநிலை நாட்டிடவே தீமையாவும் ஓட்டிடுவாள் சக்தி
நீடுதனி சூலமதை ஏந்திடுவாள் போற்றி
மூடச்சித்தமும் சிதைபட விடுவாளோ சக்தி
பாடியுன்னை சரண் புகுவேன் போற்றி

வையமெல்லாம் நினது கண்மணியாம் அலர்மேல்மகளே
வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வாயே நீயே
பொன்னென மணியென மின்னிடும் அன்னையே
உன்னையன்றி உலகத்தோர் உழல்வாரில்லையே.
இணைமலர்த் திருவடி இறைஞ்சிப் புகுந்திட
இனியில்லைத் துயரென அடைந்தேன் தஞ்சம்.

ஆலயமாய் அமைந்ததுபார் அன்பர் மனதும்நீ அமர
காலமெல்லாம் காத்திடுவாய் கருத்ததனை கலைமகளே
வேதமும் நாதமும் தாயே நின் உறைவிடம்
வேண்டுவோர் திகழ்ந்திட வரமளிப்பாய் நித்தமும்
போனது போகட்டுமெனப் பணிவேன் நின்பதம்
போகாமல் நீயெனக்களிப்பாய் ஞானம் யாவும், உயர் ஞானம் யாவும். ===================================================

கேட்கமாலேயே பால் நினைந்தூட்டுவதுவாம் அன்னையின் கருணை.

அதுபோலவே,

கேட்காமலேயே பாடிப் பதிவேற்றி இருக்கிறார் சுப்பு தாத்தா,

அனைவரும் கேட்டு அன்னையின் அருள் பெற:

 

Sunday, August 21, 2011

கண்ணன் அன்றி வேறில்லை

ஆற்றங்கரையோரம் சேற்றுத்தென்னை மரநிழலில் இளைப்பாறுகையில் எங்கிருந்தோ இனியதொரு கானம் தென்றல் காற்றொடு இழைந்து வருகுதே! இப்படியொரு இணையிலா இனிமை ததும்பும் இசையை இதுநாள்வரை கேட்டிலையே. கோலக்குயில் ஓசைபோல் குழலிசைத்தார் யாரோவென என்மனம் திகைக்க காரணமெதுவென கண்டிலேனே. அதைக்கேட்கக் கேட்க என் மனத்திலும் கவிதைகள் பிறக்குதே:

மருத நிலத்தின் மேன்மை மண்ணொடு வயலொடு செழுமை!
ஆற்றுநீரும் அந்தக் குழலிசையோடு சேர்ந்திசை பாடும்!
எப்படிப்பாடும்? துள்ளித்துள்ளிக் குதித்துப் பாடும்!
ததிங்கிணத்தோம் தத்திங்கணத்தோம் என ஜதி போடும்!
ஏனிப்படி அடியே, ஏனிப்படி நதியே? எனக்கேட்டால்,
கண்ணன் குழலிசையே எனச் சொல்லும்!, அது சொல்லும்!

காத்திருத்தலே நிமித்தம் முல்லை நிலத்தில் - அதுபோலே
காத்திருந்தேன் நானும் குழலிசையைக் கேட்டே.
கண்ணன் கனிமுகத்தைக் காண்பேனா மாட்டேனே அறியேனே.
அடி நீயாவது சொல்லேனடி சற்றே ஆறுதலாய்க் கண்ணே.

காத்திருந்த முல்லை மலர்களும் ஏங்கும் - எப்போது
எங்களிறைவன் முடி சேர்வோம் என ஏங்கும்.
முல்லை மலராவது பரவாயில்லை, அவன் முடிசேர முயலும்.
அடியேன் அவன் அடியாவது அடைவேனா அறியேனே.

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்போல் வருவான்
கண்ணன் வருவான், நான் பொய்யொன்றும் சொல்ல வில்லை.
எங்கள் கண்ணன் அன்றி வேறில்லை,
கண்ணன் அன்றி வேறில்லை, வேறில்லை.
-ஜீவா

கவிதைகளில் கற்பனையை வடிப்பவர் சிலருண்டு!
கதைகளில் கற்பனையை வடிப்பவர் பலருண்டு!
ஆனால், கற்பனையும் இல்லாமல் கதையும் இல்லாமல் கண்ணனோடு தனது நேரடி அனுபவத்தினைக் கவின்மிகு கவிதைகளாக, இசைநயத்தோடு வடித்துப்போனவர் வெகு சிலரே.
அவ்விடத்தில் தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் முன்னிற்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
அப்பாடற்தொகுதியில் இன்னுமொரு பாடலை இந்தப்பதிவுல் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்!

ராகம்: காவடிச்சிந்து
தாளம் : திஸ்ரகதி
இயற்றிவர்: ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணை யாதென
தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வரவில்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)

இப்பாடலை பாம்பே சகோதரிகள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Sunday, August 14, 2011

முருகினைக் காணா விடில்

ஒருகண் உலகதைக் காணப்போது மெனினும்
இருகண் இருந்தும் பயனென்கொல் எனதருமைத்
திருமுருகினைக் காணா விடில்.
முக்கண்ணனுமை மைந்தன் செந்திற்பதியே தேவாதிதேவா
இக்கணமே எனைக்காக்க விரைவாய் அருள்வாய்.
ஈராறுகண் இருந்தும் எனைக்காணதிருப்பதேன்
ஓராறு அவையங்களும் உனைத்துதி செய்ய
வேறேது கதியேது விரைவாய் அருள்வாய்.
-ஜீவா
----------------------------------------------------------------------------------------------------------
அடுத்து இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது செந்திற்பதியைப் பாடும் சந்தமொன்று சாவேரி ராகத்தில், பெரியசாமித் தூரன் அவர்கள் இயற்றியது.

ஸ்ரீபாலகோபல பாலா எனும் தீக்ஷிதர் கிருதியும்,
சங்கரி சங்குரு சந்திரமுகி எனும் ஷ்யாமா சாஸ்திரிகள் கிருதியும் போலவே
இப்பாடலில் சாவேரி இராகத்தில் இழைந்தோடும் இனிமைய இரசிக்கலாம்.

ராகம்: சாவேரி
தாளம்:ஆதி

எடுப்பு
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ
(முருகா முருகா என்றால்)


தொடுப்பு

ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்
(முருகா முருகா என்றால்)


முடிப்பு

தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே
(முருகா முருகா என்றால்)

பாடுபவர்: அருணா சாய்ராம்




தேவாதிதேவன் : தேவாTheதேவன்!

Friday, July 29, 2011

விழிக்கும் மொழிக்கும் பழிக்கும் வழிக்கும்

கேள்வியும் பதிலும்:

இது கேள்விக்கேற்ற பதிலல்ல - அதற்குப்
பதில் பதிலுக்கேற்ற கேள்வி.

அடியேன்:
பழித்திருக்கும் பாதக உலகம் பாழுங்கிணற்றில் தள்ளப்பார்க்க
விழித்திருப்பதே விழிக்கும் வழிக்கும் துணையாமோ?
செழித்திருக்கும் மொழியும் எம்மை அணையாய் தடுத்திருக்க
வழித்தடமெல்லாம் வானோர் கண்திறந்து பார்த்திடச்செய்திடும்
விழித்திருத்தலே வாடிக்கையாய்ப் போகாதோ?

கந்தரலங்காரம்:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


|

Wednesday, June 29, 2011

தொலைநோக்கி

தொலைநோக்கி ஒன்றினை தொட்டுப் பார்க்கிறேன்
தொலைதூரத்தை அதில் தொட்டுப் பார்க்க இயலுமோ?
தூரம் தொலைவானது தொலைந்த இடைவெளியால்தானே?
இல்லை, விட்டுப் போகாமல் இருக்கும் வாசனைகளாலோ?
சொல் சபேசா, அவை விட்டுப்போவது எந்நாள்?
நானும் தொட்டுப்பார்ப்பது எந்நாள்?
பட்டுப்போனவற்றிலும் பச்சையம் தடவிப்பார்த்தது நீயே.
பாரெங்கும் படரவிட்டுப் பார்ப்பதும் நீயே.
சட்டென்று கைவிட்டுப் பார்ப்பதும் ஏனோ?
எட்டுத்திசைகளிலும் சுற்றித்திரியும் என்மனதை
கட்டிப்போடக் கச்சையொன்று கிட்டாதோ?
கட்டிப்போடும் வித்தையதை அறிவேனோ?
சட்டிப்பானை அது கெட்டிப்பனையானாலும்
விட்டுப்போட்டுடைத்தால் மிஞ்சுமோ ஏதும்?
சட்டிப்பானைக்கு முன்னேயும் பின்னேயும்
ஏன் எப்போதும் எங்கெங்கும் இருக்கும் ஒன்றின் அறிவுதான்
கட்டிப்போடும் கச்சையோ, அல்லது வித்தையோ!
நீள் தூரத்தை குறுக்கிக் காட்டும் தொலைநோக்கியே
நீயே உன் நீளத்தைக் குறைத்துக் கொண்டு
நீ வந்தமர்வாய் எம் கண்களில்.

Monday, May 30, 2011

முதல் வணக்கம்

அன்பெனும் கணபதிக்கு முதல் வணக்கம்
ஆனைமுகனுக்கு முதல் வணக்கம்
அரும்பெரும் செவியனுக்கு முதல் வணக்கம்
ஆதாரத் துணைவனுக்கு முதல் வணக்கம்!

உமைபாலனுக்கு முதல் வணக்கம்
ஊறும் சக்தியதன் உறைவிடமே முதல் வணக்கம்
ஊழ்வினை விலக்குபவனே முதல் வணக்கம்
உந்தீபறவென உரைக்கின்றேன் முதல் வணக்கம்!

மதியணி சங்கரன் மகனுக்கு முதல் வணக்கம்
மாலவன் மருகனுக்கு முதல் வணக்கம்
மனங்கவர் முருகனின் மூத்தவனுக்கு முதல் வணக்கம்
மூஷிக வாகனனுக்கு முதல் வணக்கம்
மறையதன் மெய்ப்பொருளுக்கு முதல் வணக்கம்
மூலாதார முதல்வனுக்கு முதல் வணக்கம்
முழுமுதற் கடவுளுக்கு முதல் வணக்கம்!

அகர உகர மகரமென ஒலிக்கும்
ஓங்காரப் பிரணவமே முதல் வணக்கம்!

Sunday, October 17, 2010

ஏதும் கலக்கம் இலன்.

ஆடும் அரவம் படம்பிடித் தாடுமண்ணல்
ஆடும் அகிலமாம் அம்பலம் தன்னைப்
பாடும் நாவினில் நின்ற நாதன்
நாமம் நமசிவாய வே.

நாளும் தேடும் இடமும் பலப்பலவாம்
நாளும் தேடும் பொருளும் பலப்பலவாம்
யாதும் ஒன்றென ஈசன் மலர்பதமென
அறியா மாந்தர் கலக்கம் யாதும்
தீர்க்கும் மருந்தென
ஈர்க்கும் திருநீறென
சேர்க்கும் அவனடி சேர் அடியார்
நாற்கவி போற்றும் நாதன்
நாமம் நமசிவாய வே.

பாலும் தெளிதேனும் நாலும் இரண்டும்
நவிலும் தேன்சொல் மறைநெறி சாரமதை
நாடும் நெஞ்சில் ஓதும் சொல்லில்
ஏதும் கலக்கம் இலன்.

Wednesday, September 15, 2010

முரண்களின் அரண்

காற்றே உன்னை வேற்றூருக்கு
திருப்பி விடவா?

கவிதையே உன்னை அயலூருக்கு
அனுப்பி விடவா?

பெற்றுத் தருவதற்கு அரிதான விடியல்
முற்றுப் பெறுவதோ அன்றாடம்!

உறக்கம் கலைந்தவுடம் கனவுகள் மட்டும்
பறப்பது ஏன்?

விற்றுத் தீர்ந்துபோன செங்கல் யாதும்
சுற்றுச்சுவரில் இடம்பெறுமோ?

அகலும் மோதிரம் விரல்கள் மெலிந்ததை
அறிவிக்கின்றதோ?

சரித்திரம் சொல்லும் சாக்ரடீஸ் கதைகள் மட்டும்
சாகாவரம் பெறுவது ஏன்?

மௌனத்தின் மொழியில் ஓசை நயத்தினை
மனதிற்குமட்டும் உரைப்பது யார்?

முரண்களின் அரணில் விழுந்த வட்டத்தில்
முளைத்துதான் புதுக்கவிதையோ?

Saturday, June 12, 2010

எத்தனை யாவும் எத்தனை சொல்லடா

எத்தனை யாவும் எத்தனை சொல்லடா,
எத்தனை யாக்கை எத்தனை வினைகள்
எத்தனை யாவும் எத்தனை சொல்லடா.

நெட்டிபோல் நீரில் நாளெலாம் மிதந்து
வித்தினை மறந்து மற்றதைப் பிடித்தேன் பாரடா.

பித்தனாய் பிழற பித்ததைப் பீடிக்கும்
சொத்தெலாம், கொண்ட சொத்தெலாம் உதவா.

சந்ததம் வீணென அசதியில் தளர்ந்திட
எஞ்சியதில் வீடும் சடுதியில் வாராதா.

இத்தனை துயரையும் இடரையும் ஓட்டும்
சித்தினில் நவமெனச் சுடர்வது யாதடா?

மொத்தமும் சிவமென சிவசக்தியின் முகமென
மெச்சிட உச்சியதை அடைந்தே உய்யடா.

Friday, June 04, 2010

பெய்யெனப் பெய்யும் மழை

பெய்யெனப் பெய்யும் மழையாய் மனமதிற்
பெய்திடும் மெய்யருளும் மேனியெங்கும் ஓங்கிட
உய்யவே வேண்டும்; உந்தன் உகப்பை
செய்யவே வேண்டும் சிறப்பு.