Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts
Showing posts with label சிலப்பதிகாரம். Show all posts

Saturday, December 20, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (1)

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;





சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

பிற்சேர்க்கை:
கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
(இவ்விரண்டும் , ஜெயா டி.வி யின் ஒளிபரப்பில் இடம்பெறவில்லையென்பது வருத்தமானதே.)

(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)

Sunday, May 22, 2005

வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்

இந்த சிலப்பதிகாரப் பாடல் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் பாடப்பெற்று பிரபலமடைந்த பாடல். 1966 இல் ஐ.நா சபையில் நடந்த எம்.எஸ் கச்சேரியில் இந்த பாடல் இடம் பெற்றது. பாடல் வரிகளும் பொருளும்:
1.
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
வடமலையாம் மேருவை மத்தாக்கி,
வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு
அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால்
கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!

2.
அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த
உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள,
நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!.
அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை,
கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?

3.
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

பொருள்:
அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின்
இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே!
அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும்
தூதனாகவும் இருந்தது விந்தைதானே!

4.
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

பொருள்:
மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று,
நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே!
உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ?
திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?

5.
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே

பொருள்:
பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும்
உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும்,
கையும், திருவாயும் வேலை செய்ய,
கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ?
மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?


பாடலை இங்கே கேட்கலாம்: