Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

Sunday, December 04, 2011

மெய்ப்பொருளின் சாயை

மகா காளியின் புகழ்
ராகம்-ஆனந்த பைரவி                                                                  
தாம்-ஆதி

காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி என்றபெயர் கொண்டு-ரீங்
காரமிட்டு உலவுமொரு வண்டு-தழல்

காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்
கால்கள் ஆறுடையதெனக் கண்டு-மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.

மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ

வேதமாய் அதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்தம் எந்தனேழை யுள்ளம்

அன்புவடி வாகிநிற்பள் துன்பெலாம் அவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண்டு உய்கை-அவள்

ஆதியாய் அநாதியாய் கண்டவறி வாவளுன்தன்
அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்
ஆனந்தத்தின் எல்லை அற்ற பொய்கை.

இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலாம் அவள்புரியம் மாயை-அவள்
ஏதுமற்ற மெய்ப் பொருளின் சாயை-எனில்

எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த
எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை.

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கும் எங்குமுள வாகும்-ஒன்றே
யாகினால் உலகனைத்தும் சாகும்-அவை

அன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.

நீதியாம் அரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த
நெறியுமெய்துவர் நினைத்தபோது-அந்த

நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கு இல்லையோர் தீது-என்றும்
நேர்மைவேதம் சொல்லும்வழி யீது.

மகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்:
1. எம்.எஸ் அம்மா
2. ராஜ்குமார் பாரதி 

ஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்!
பாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ!
அங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே!
எனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே!

மெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்:
சக்தியவள் இல்லாத பொருளுமில்லை.
சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை.
இதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்!
எல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும்.

Sunday, October 02, 2011

நவராத்ரி - இதன் பொருள் யாது?

ஒன்பது இரவுகள் - அன்னை சக்தியைத் துதிப்பதற்கு - குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுவது.
.... மேலும்....?

சக்தி?
இயக்க சக்தி - இயங்குவதற்கான சக்தி.
இந்த சக்தி உடலில் இருந்தால் தானே எந்த செயலையும் செய்ய இயலும்?
ஓட்டப்பந்தயத்தில் போல ஓடி தங்கப் பதக்கத்தைப் பெறவும் சக்தி வேண்டுமல்லவா!
ஒரே நோக்கத்தோடு உடலில் சக்தியை கவனத்தோடு செயலில் நடத்துகையில் நமது சக்தியின் திறனை அறிகிறோம்.  மன நிறைவைப் பெறுகிறோம்.
இது போலவே தான் இறைவனின் சக்தியும்.
இறைவனின் சக்தியில் கவனத்தைக் குவிக்கையில் - அந்த குவிமுனையில் விளையும் ஆக்கத்தினை அறிகிறோம். அவ்வாறு விளையும் ஆக்கமே அன்னை சக்தியாம்.

எப்படி உடலில் சக்தியினை அறிகையில் "நம்மால் இந்தச் செயலை செய்ய முடியும்" என்கிற திறனை அறிகிறோமோ, அதுபோல, இறைசக்தியெல்லாம் ஒன்று சேர - அவற்றின் ஆதாரத்தினை - அன்னையை அறிகிறோம்.

எப்படி குழந்தைக்கு அதன் அன்னை ஆதாரமோ அதுபோல உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும், உயிரில்லா பொருட்களுக்கும் அன்னை சக்தியே ஆதாரம். அந்த ஆதாரத்தினை, இறைவனின் சக்தியினை அறிகிறோம்.

"ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்"
என்பான் "பாட்டுக்கொரு புலவன்" பாரதி.

இவ்வாறு அன்னையை, இறை சக்தியின் ஆதாரத்தினை அறியும் சாதனையைச் செய்வதற்கான பண்டிகையே - நவராத்திரி எனப்பட்டது.

Monday, September 19, 2011

இலக்கும் இறுதியும்

இலக்கு தொலை தூரத்தில் இருக்கிறது.
இயற்கைக்குப் புறம்பாகவும் இருக்கிறது. ஆனால் அது,
நம்மை எப்போதும் தன்பால் ஈர்த்தபடியே இருக்கிறது!
அதனை அருகாமையில் வரச் செய்ய வேண்டும்.
அருகே அருகே என அருகாமையில் வர வர:
வானத்தின் இறைவன் இயற்கையில் தெரிகிறான். பின்னர்,
இயற்கையில் தெரிந்த இறைவன் இயற்கையாகவே மிளிர்கிறான்.
அடுத்து, உடலாகிய கோயிலில் உறைகிறான்.
பின்னர், உடலில் உறைந்த இறைவன் உடலாகவே ஆகிறான்.
இறுதியாய் அவனே அதன் ஆன்மாவாகிறான்.
அது வரை இலக்கானது நமக்கு கற்பித்துக் கொண்டே இருக்கிறது.
எங்கெங்கெலாமோ தேடப்பட்டவன்
இங்கேயே இதயக் கமலத்திலேயே இருக்கிறான்.
தத்வமஸி. நீயே அவன், ஓ மனிதா, நீயே அவன்.

- சுவாமி விவேகானந்தர்
மேற்கோள் : சகோதரி நிவேதிதாவின் "The Master as I saw Him"

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
     கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
     டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும்பொருளாய்ப் புன்மை தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கியதாய்
     நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

- மகாகவி பாரதி



Sunday, May 22, 2011

ஓம் சக்தி சிவசக்தி

ஓம் சக்தி! சிவசக்தி! பராசக்தி!
பாரெங்கும் பரவடிவம் அதுவே பராசக்தி வடிவம். வல்லமை தந்திட வேண்டும் வரமென
ஒரே பாட்டில் ஆறு துணை நாடும் அரும் பெரும் பாடல் - பாட்டுக்கொரு புலவன் பாரதி வடித்தது.
இப்பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடுவதை கேட்கலாமா?



ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி:
கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சக்தி:
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

முருகன்:
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

கலைமகள்:
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

கண்ணன்:
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

திருமகள்:
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

அடுத்த பாட்டு. சிவசக்தியைப் பாடும் பாடல். தக தக என ஆடி சக்தியைப் பாடும் பாடல். இரண்டு வாரங்களுக்குமுன் இங்கு அட்லாண்டாவில் நடந்த கச்சேரியிலும் நித்யஸ்ரீ மஹாதேவன் அற்புதமாய் பாடினார். அதே பாடல், அவரது குரலில்:



சக்திக் கூத்து

பல்லவி

தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ?
(தகத்)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.
(தகத்)

புகப்புகப் புக இன்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே
(தகத்)

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென
(தகத்)

இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்
(தகத்)

Sunday, December 19, 2010

பக்தியும் ஞானமும் (2) : கணபதி

காலைப் பிடித்தேன் கணபதி - நின் பதம் கண்ணிலொற்றி!
- மகாகவி பாரதி
(சென்ற பகுதியில் முகவுரையைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி இப்போது...)
புராணக் கதைகளில் பார்த்தால் விநாயகர் யாருடைய உதவியையும் நாடியது கிடையாது. ஆனால் எல்லோரும் அவரது உதவியை நாடி இருப்பார்கள். திரிபுர சம்ஹாரத்தின் போது தேர் முறிந்து இடையூறு ஏற்பட, சிவனே விநாயகரை பூஜை செய்து, அசுரர்களை வென்றார். பண்டாசுர அரக்கனை வெல்ல, தேவி விநாயகரை நாட, அரக்கனின் விக்ன யந்திரங்களை அகற்றி தேவிக்கு வெற்றியை அளித்தார். ஹேரம்ப மூர்த்தியாக ராமர் உபாசித்து, இராவணனை அழித்தார். அர்க்க கணபதியாக சூரியனால் வழபடப் பட்டவர். பிரம்மா விநாயகரை வழிபடாததால், சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாம். முருகனுக்கோ, வள்ளி மணம் புரிய துணை புரிந்தவர். இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். சரி, இப்படியெல்லாம் ஏன் சொல்கிறார்கள்? தெய்வத்திற்குள் ஏன் இந்த உயர்வு தாழ்வுகள் என யோசிக்கலாம். இப்படியெல்லாம் புராணக் கதைகள் சொல்வதின் பிண்ணணியில் தத்துவங்கள் அடங்கி இருக்கும்.

அது என்ன? எதையும் கணபதி துணையுடன் துவங்குதல் நன்மையில் முடியும் என்பது மரபு. இதற்கு ஆழமான காரணங்களுண்டு. கணபதி மூலாதார சக்கரத்தின் முதல்வன். அசுத்த மாயைகள் அண்டாமல் காப்பவன். வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களைந்தால் தான், மனமது முக்தி என்னும் நிலைக்குத் தயாராகிறாது. எந்த ஒரு தெய்வதை வணங்குவதற்கு முன்பாகவும் கணபதியை வணங்கிடுதல், குறுக்கிடும் இடர்களை களைவதற்கு துணை புரியும். இவ்வுண்மைகள் தான் திரும்பத் திரும்ப பல்வேறு புராணங்கள் மூலமாக சொல்லப்படுகின்றன!

முத்துசாமி தீக்ஷிதரின் கணபதி கீர்த்தனைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றில் சொல்லப்படும் குறிப்புகளைப் பட்டியலிடலாமா!

1. ஸ்ரீ மூலாதார சக்ர விநாயக (ஸ்ரீராகம்)
* மூலாதார சக்கரத்தின் அதிபதி
* 600 சுவாசங்களுக்கு அதிபதி
2. பஞ்ச மாதங்கமுக கணபதினா (பிலஹரி)
* பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்ச சிருஷ்டிக்கு காரணம்
3. ஸ்ரீ கணேசாத் பரம்
* பூமி முதல் சிவன் வரை 36 தத்துவங்களை தன்னுள் கொண்டவர்
4. விநாயக (வேஹவாகினி ராகம்)
* சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றை முக்கண்களாகக் கொண்டவர்
5. கஜானானயுதம் (வேஹவாகினி ராகம்)
* அர்த, காம, மோட்சம் என்னும் வாழ்வியல் குறிக்கோள்களை அடையத் தருபவர்
6. வாதாபி கணபதிம் (ஹம்சத்வனி)
* பிரணவ சொருபத்தினைக் கொண்டவர்
7. மஹா கணபதிம் (தோடி)
* திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனால் அர்ச்சிக்கப்பட்டவர்
8. வல்லப நாயகஸ்ய (பேகடா)
* முருகன் வள்ளி திருமணத்திற்கு உதவியவர்
9. லம்போதராய (வராளி)
* அகத்தியரால் வணங்கப்பட்டவர்

இப்படியாக முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளில் இருந்து பல்வேறு சுவையான குறிப்புகளையும் கண்டெடுக்கலாம்.

இந்த படத்தில் பார்த்தீர்களா. கள்ளமற்ற வெள்ளைக் குழந்தைகள் தங்கள் பிஞ்சுக்கைகளால் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனைமுகனும், குமாரசாமியும் அவர்களதுகூட எப்போதும் இருப்பார்கள்.

From என் வாசகம்


'ஸ்ரீகணேசாத் பரம்' என்னும் கீர்த்தனையை இங்கு பார்க்கலாம்.

இப்பாடலை திருமதி.ராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-ganesatparam-s...


ஸ்ரீ கணேசாத் பரம்
ராகம்: ஆர்த்ர தேஸி
தாளம்: ஜம்ப


பல்லவி
ஸ்ரீ க3ணேசாத் பரம் சித்த ந ஹி ரே ரே ஸிவாதி3 ஷட்-த்ரிம்ஸத்-தத்வ ஸ்வரூபிண:

அனுபல்லவி
வாகா3தி3 பஞ்சக வ்யாபார ரஹித - ஹ்ரு2த3யாகாஸ ஸம்ஸ்தி2தாத்- யோகி3 ராஜார்சிதாத்

சரணம்
மாதங்க3 வத3னாத்-உமா ருத்3ர த3ர்ஸிதாத் பூ4த பௌ4திக விஸ்வ பூஜித களேப3ராத் ஸ்வேதார்க ஸும த4ராத் ஸ்வேதர விவர்ஜிதாத் பீதாம்ப3ராவ்ரு2தாத் ப்3ரஹ்மாத்3யுபாஸிதாத் (மத்4யம கால ஸாஹித்யம்) பூ4தாதி3 நுத பதா3ம்போ4ஜாத்-ஸிவாத்மஜாத் ஸீதாம்ஸு த4ர பரம சிவ - கு3ரு கு3ஹாக்3ரஜாத்

பாடற்பொருள்:
சிவன் முதலான 36 தத்துவங்களையும் தன்னில் அடக்கிய கணபதியே, நீயே பரமன். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை. 'வாக்கு' முதலான ஐம்புலங்களும் நுழைய முடியாத இதயக் குகையில் - சிதாகாசத்தில் வசிப்பவனே - யோகியரால் வணங்கப்படுவனே!

யானை முகத்தவனே, சிவன் மற்றும் பார்வதியுடன் இருப்பவனே! வெள்ளை அர்க்க மலர் மாலை அணிபவனே! தன்னிலும், எல்லோரிலும் இருப்பவனே! பீதாம்பரம் அணிந்தவனே! பிரம்மனால் வணங்கப்பட்டவனே! தாமரை பாதங்கள் கொண்டவனே! பூத கணங்களால் போற்றப்படுபவனே! குருகுஹனாம் முருகனுக்கு மூத்தவனே! குளிர்பிறை தரித்த சிவனது மூத்த சேயே, உன்னில் உயர்ந்தது யாதுமில்லை.
~~~~~~~~~~~~

இவ்வாறாக, குணங்களோடு கூடிய தெய்வமாக போற்றினாலும், கணபதி முழுமுதல் பரமன், எல்லாவற்றிலும் உயர்ந்த பிரம்மம் என்றுதான் போற்றுப்படுகிறார். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை என்கிறார். இதன் காரணம், இறுதியில் அடைய வேண்டிய இலக்கான ஞானமதாகவே - பரம்பொருளாகவே - கணபதி இருப்பதுவேயாம்.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.

ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நான்மணிமாலை


அடுத்த பகுதியில் ஆனைமுகனுக்கு அடுத்தவனாம் அழகன் கார்த்திகேயனைப் பாடும் தீக்ஷிதர் கீர்த்தனைகளைப் பார்ப்போம்.

Friday, August 06, 2010

எது பகுத்தறிவு?

பகுத்தறிவு என்றால் பகுத்து அறியும் அறிவு. எதை பகுத்து அறிவது?
உடல் வேறு உயிர் வேறு என்று பகுத்து அறிவதே பகுத்தறிவாம்.

நம்மால் நம்ப இயலாதவற்றை 'மூட நம்பிக்கை' எனப்பெயரிட்டு, அம் மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவதே - பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தான் நாம் வெகுவாகப் பார்ப்பதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவான சமூகத்தில் நம்பிக்கைகள் பல்வேறு விதமாக உருவாகுவதும், அவை பலராலும் பல்வேறு விதத்திலும் தேவையில்லாமல் பின்பற்றப்பட்டும், நம்பப்பட்டும் வருவதும் இயல்பாகும். ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது? ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் 'இது நிஜம்', என நம்பப்படுவதால். அதுவே நம்பிக்கைகளுக்கு வித்தாகி, இன்னும் பலராலும் பின்பற்றப்படுகிறது. பின்பற்றும் சிலருக்கு, அவர் பின்பற்றும் நம்பிக்கை பொய்த்திட அவர்களில் சிலர் அப்போது அதிலிருந்து வெளிவருவதும் உண்டு. அவர்களில் சிலருக்கு வேறொரு நம்பிக்கை, நம்பிக்கை ஊட்டிட, அந்த நம்பிக்கைக்கு மாறி விடுவதும் உண்டு. வேறு சிலரோ, கேள்விகள் ஏதும் எழுப்பாமல் குருட்டுத்தனமாக நம்பிக்கைகளைப் பின்பற்றுவதும் உண்டு. நம்பிக்கை என்ற பெயரால் அறியாமைக்கு ஆளாகவும் கூடாது. மூடநம்பிக்கை என்ற பெயரால் அறிவை ஒதுக்கவும் கூடாது. மூட நம்பிக்கையா, இல்லையா? கண்டு பிடிப்பது எப்படி? சமீபத்தில் 'கண்ணாடி' என்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் அழகாகச் சொன்னார் - "எனக்கு எந்த நம்பிக்கை பயன் தருகிறதோ, அதுவே 'என் நம்பிக்கை'. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்றழைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றார்.

அறிவியல் வளர்ச்சியினால் நிரூபிக்க அல்லது ஏற்றுக்கொள்ளப் பட இயலாதவற்றைத் தான் மூட நம்பிக்கையா இல்லையா என்றொரு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, இங்கு, இன்றைய அறிவியல் வளர்ச்சிதான் அதற்கு அளவுகோலாக இருக்கிறது. பல அறிஞர்களும், அறிவியல் வளர்ச்சியால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவினைத் தர முடியும் என்று நம்பினார்கள், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். அறிவியிலை எப்படியாவது முன்னேற்றி எல்லா கேள்விகளுக்கும் ஒரு பரமத்துவமான பதிலினைத் தர முயன்று வருகிறார்கள்.

அறிவியல் ஆராய்சியாளர்களின் தேடுதல் ஒருபுறம் இருக்க, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மெய்ஞானிகள், இத்தேடுதல் எல்லாவற்றிக்குமான முடிவினை தம்முள்ளேயே கண்டும், களித்தும், அவற்றை ஆராதித்தும் ஆனந்தித்தும் வருவதினை யாரும் புறம் தள்ள இயலாது. அகக்கண்களால் அவர்கள் கண்டு சொன்ன உண்மைகளின் வீச்சு என்றென்றைக்கும் நிலையானதாகவும் இருப்பது. மாறாக, புறக் கண்கள் பார்க்கும் உலகத்தேயே எல்லாம் எனக்கொள்பவர்களின் அறிவின் உண்மையான வீச்சு எள்ளளவேயாம்.

தனோடும் நின்றோங்கும் றிவொன்றே தெய்வம் என்றோதி அறியீரொ?

அகத்தனை ஆய்ந்து அறியார், தூல உடலின் சூக்கும வடிவத்தினை கண்டு கொள்ளுவதில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து பார்த்து 'இல்லை' என்று சொல்லி என்ன பயன்? உள்ளே ஆழ்ந்து உணர்ந்த மெய்ஞானிகள், சூக்கும வடிவங்களை உற்று நோக்கி, அவற்றின் ஆதார சக்தியினை அறிந்து சொன்னார்கள், தெளிந்து சொன்னார்கள்:
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

அதுவே, இயற்கையின் சக்தி என்பதை ஞானிகள் உணர்ந்திருந்தனர். காற்று, மழை, இடி முதலியவற்றின் இயக்க சக்தியும் தெய்வீக சக்தி என்பதை அறிந்திருந்தனர். இயற்கையினை வணங்கிய பண்டைக் காலத்தை எள்ளி நகையாடி, அது அச்சத்தினால் ஏற்பட்டது எனக் காரணம் கற்பிக்கும் சிறு மதியார் சில கணமாவது தம்மை உணர்ந்திருப்பாரா? உணர்ந்திருந்தால்தான் உண்மை அறிந்திருப்பாரே. இறை மறுப்பினையே பகுத்தறிவு என்று வழங்கிக் கொண்டதிலேயே தெரியவில்லையா இவர்களது மடமையினை.
ஒன்று பிரமம் உளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரமம் உளதுண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

தமது உடலிலேயே சூக்கும ரூபமாய் அமைந்திருக்கும் பிரகிருதி குணங்களையும் குண காரியங்களையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள் ஜீவனின் உண்மையான வடிவினை எப்படிக் கண்டு கொள்ள இயலும்? அது பாரெங்கும் ஒளிர்விடும் பரமன், சேதனமாய் இருக்கும் தன்னில் ஒளிர்வதை எப்படிக் கண்டு இன்புற இயலும்?


(ஓவியம் நன்றி: ஹிமாலயன் அகாடமி)
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய்.

சித்தானது, உடலான அசித்துடன் இணைந்தது. அவ்உடலை ஆலயம் என்றார்கள். அந்த ஆலையம் அமையும் இடம் தலம் அல்லது க்ஷேத்திரம் எனலாம். சூக்கும சரீரங்களும், தூல சரீரங்களும் அபரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். குண வயப்பட்ட ஜீவன், பரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். உள்ளம் கடந்த இந்நிலைகளை, கட-உள் என்றார்கள் ஞானிகள். 'நான் கடவுள்' எனும் நிலையை அடைய, குணங்களைக் கடந்து, அவை மறைக்கும் உள்ளொளியினை உணர்ந்து, ஒன்றாய் இருக்கும் பரமனெனத் தெளிந்தார்கள் ஞானியர். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாக நிற்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்து தெளிகிறார்கள் ஞானியர். ஐம்பூதங்களின் கலவையான உலகையும், அது சமைந்திருக்கும் அண்ட சராசரங்களையும் சிதாகாசத்தில் - தன் இதயக்குகையில் கண்டு ஆனந்தக் களிப்படைவதுதான் பாரதி பாடும் "எத்தனைகோடி இன்பம்!" அன்றோ!

Sunday, July 12, 2009

"சக்தி" என்று தமிழ்க்கவிதை பாடி...

சக்தி என்பது யாதென்றேன்; சக்தி என்பாய் என்றாய்!
சக்தி சக்தி யென்றேன்; புதுசக்தி பிறக்குது.
பக்தியுடன் வேண்டிநிற்க பயமனைத்தும் விலகுது.
முக்தி நலம் பெற்றிடவே முனைப்பும் முளைவிடுது.
ரக்தியும் கூடுது; ராஜயோகம் பெருகுது.

(சக்தி என்பது யாதென்றேன்...)
திக்கெங்கும் தேடி திசையெங்கும் ஓடி
அஃதென்றே அறிந்திட, சக்தியுனை நாடி
சந்ததம் பணிந்து சரணம் அடைந்து
முந்தும் முழுமுதல் மூலம் கணபதி
பிந்திடாமல் பிழறாமல் இருத்திட,
வினைகளை வேரறுத்திட,
வேலவன் துணையுடன் விரைவில்
அச்சமதை அகற்றி உச்சிதனை அடைய,
மெச்சும் சக்தி சிவமதை அடைய,
சிவமும் சக்தியும் இணைந்து
சிவசக்தி யாகுமாமே.

(சக்தி என்பது யாதென்றேன்...)
பாரடா, பராசக்தி, எனச் சொன்னான் பாரதி!
பாரினில் ஈதடா, அன்னை அவளே, சிவனின் சக்தி!
எல்லாமுமாய் இருப்பவளாம் சக்தி!
நல்லதெல்லாம் தருபவளாம் சக்தி!
பவத்தினை மாய்த்திடும் சக்தி! - யோக
தவத்தினை புரிந்திடச் சக்தி!
உள்ளத்தொளிரும் விளக்காம் சக்தி!
ஊக்கம் தந்திடும் ஒளியாம் சக்தி!
ஓம் சக்தி, ஒம் சக்தி, ஓம்!



முண்டாசுக் கவிஞனின் தாக்கத்தில் விளைந்தது, மேற்சொன்ன கவிதை.
தாக்கத்தின் மூலம் ஈதே:

எடுப்பு:
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்திமாரி!
கேடதனை நீக்கிடுவாய் கேட்டவரம் தருவாய்.

தொடுப்பு:

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாம் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாம் தீர்ப்பாய்!

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி.
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்!

முடிப்பு:
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்!

துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

~~~~~~~~~~~
இராகம்: சிந்து பைரவி

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

இங்கும்:

Thursday, December 11, 2008

தமிழ்க்கவி யோகியர் மூவர்

தமிழிசை மூவரைப் பற்றிப் பார்த்தோம். தன்னிகரிலா தமிழ்க் கவிஞர்களுள், தவித்திரு யோகியர் மூவரை இவ்விடுகையில் பார்ப்போம். இந்த மூவரும் கிட்டத்தட்ட, ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர். நேரடியாக இல்லாவிட்டாலும், ஒவ்வொருவரும், அவருக்கு முன்னால் வந்தவர்களால், ஈர்க்கப்பட்டவர்கள்!
யாரோ, அவர் யாரோ? என்ன பேரோ?

* தாயுமானவர் (1706 - 1744)
* இராமலிங்க வள்ளலார் (1823 - 1874)
* மகாகவி பாரதியார் (1882 - 1921)

இம்மூவரைப் பற்றித்தான் சொல்ல விழைகிறேன்!. திருமூலர், அருணகிரியார், பட்டினத்தார், எனப்பல யோகியரும் சீரார்ந்த இந்நாட்டில், இம்மூவரையும், குறிப்பாகச் சொல்வதற்குக் காரணம், அவர்களது கருத்தில் ஒற்றுமைகளும், ஒருவர் பால் இன்னொருவர் ஈர்க்கப்பட்டதுமே!. விரிவாகப் பார்க்கலாமா?

தாயுமானவரைப் பற்றி நமக்குத் தெரியும். அரசாங்க பதவியில் இருந்தவாறே, யோக வழியில் நடந்தவர். அரசியே, அவருக்கு ஆபத்தாக, மதுரை அரசைத் துறந்து, இராமநாதபுரம் அரசுக்குச் சென்றவர். அங்கும், நாளும் நெடிதாய் தவத்தில் திகழ்ந்தவர். வஞ்சகர்களின் சூழ்ச்சியால், அவர் ஒரு சமயம் தவத்தில் இருக்கையில், அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டு, அவரது உடலுக்கு தீமூட்டி விடப்பட, தீப்பிடித்து எரியும் உடலோடு, தவம் கலைந்து எழுந்திட, பின்னர், இனியும் இவ்வுடலால் பயனில்லை, இந்நிலையிலேயே, இப்பிறவி முடியட்டும் என்றெண்ணி, முக்தி அடைந்தவர். அரசாங்க அலுவல்களிலும், தவத்தில் ஆழ்ந்த நேரங்களிலும் போக, இதர நேரங்களில், இவர் இனிக்க இனிக்க எழுதி வைத்த அருந்தமிழ் கவிதைகள், வையத்தில் மாந்தரை நன்னெறிக்கு உய்விப்பன. வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் சமரசம் செய்வதை இவரிடம் பார்க்கலாம்.

அருட்பெரும்ஜோதி வள்ளலார், சுத்த சன்மார்கம் மொழிந்தவர். வேதாந்தம், சித்தாந்தம் மட்டுமல்லாமல், ஆறு அந்தங்களுக்கும் சமரசம் செய்தவர். வள்ளலாரின், திருவருட்பா பாடல்களைப் பார்த்தால், தாயுமானவர் விட்ட இடத்திலிருந்து, வள்ளலார் தொடர்ந்து போல இருக்கும். ஒருமுறை அன்பர் ஒருவர், வள்ளலாரிடம், தாங்கள், முற்பிறவியில் தாயுமானவரோ என வினவ, அதற்கு சுவாமிகள் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். அந்த அன்பர், தொடர்ந்து, தனது வினாவை வலியுறுத்த, வள்ளலார், 'உம், இருக்கலாம்' என்றாராம்!. இந்த சம்பவம் சுவையானதாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், வள்ளலாரும், தாயுமானவரைப் போல, சமய சமரசத்தினை வலியுறித்தியவர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என முன்மொழிந்தவர். வள்ளலாரே, வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபினில் தானும் ஒருவன் என்கிறார்.

தாயுமானவர் பாடல்களில் 'ஆகாரபுவனம் - சிதம்பர இரகசியம்' என்றொரு பகுதி உண்டு. அப்பகுதியில் இருந்து:
சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப்பொருளும் தான் ஒன்று ஆகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்டது இல்லை;
பகர்வு அரிய தில்லைமன்றுள் பார்த்தபோது அங்கு
என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன
எச்சமயத்தவரும் வந்து இறைஞ்சா நிற்பர்
கல்மார்க்க நெஞ்சம் உள எனக்கும் தானே
கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும்.
ஆகாயத் தலமாம் தில்லைச் சிதம்பரத்தில் நடராசன் ஆடும் ஆனந்த நடத்திற்கு 'பொது நடம்' என்றொரு பெயர். அப்பெயர் போலவே, அவன் அரூபமாக சிதம்பர இரகசியத்தை உரைப்பது, அவன் எல்லா சமயங்களுக்கும் பொதுவானவன் - எனச் சன்மார்கம் சொல்லுகிறார். எல்லா சமயங்கள் உரைப்பதும், திருச்சிற்றம்பலத்திலேயே அடங்கி உள்ளது என்கிறார்.

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கி தரிசித்தபோது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய் உறவாம் பொருளே
காய்வகை இல்லா உளத்தே கவிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்பிரியும்
சோதிநடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே.(திருவருட்பா - 4133)
என்பார் வள்ளலார். எங்கும் நிறைப் பரவெளியில், ஆகாயத் தலமதில், பொன்னம்பலவன் நிறைந்திருந்தான் என, தான் சிறு வயதிலேயே கண்ட ஆனந்த களிப்பினை, சோதி வடிவானைப் பற்றி அருட்பெரும்சோதியார் போற்றுதல், என்னப் பொருத்தம்!

தாயுமானவர், மற்றும் வள்ளலாரின் தாக்கத்தினை மகாகவி பாரதியிடம் நிறையவே காணலாம். சுதேசமித்திரனில், பாரதி வள்ளலாரைப் போற்றி, 'தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு' ஆதிகர்த்தாவாக வள்ளலார் விளங்குகிறார் என்கிறார். மேலும், 'ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான் வங்கம், மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன' என்கிறார். 'எம்மதமும் சம்மதம்' எனும் வள்ளலாரின் சமய சமரச கொள்கையினை மகிழ்வுடன் பாரதியும் ஏற்றார். பாரதி, திருவருட்பாக்களையும் நன்கு அறிந்திருந்தார். 'நான் படும் பாடு சிவனே உலகோர் நவிலும் பஞ்சு...' எனத் தொடங்கும் திருவருட்பாவை அடிக்கடி பாடிக்கொண்டிருப்பாராம். 'களக்கமற பொதுநடம்...' எனத்துவங்கும் திருவருட்பாவினை சற்றே மாற்றி அமைத்து, அதில் கர்சன் பிரபுவினை, 'கர்சன் என்ற குரங்கு' என வருமாறு மாற்றி அமைத்திருந்தார்.

'எல்லா உயிரும் இன்புற்று வாழ்க' எனச்சொன்ன வள்ளலார் போலவே, பாரதியும் ஆகாயத்தின் மீதேறி, 'புவியில் துன்பமும், வருமையும் நீங்கி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்' என வேண்டுவார் - 'பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்', எனும் கவியில் பாரதி. 'பாருக்குள்ளே தெய்வம் ஒன்று' என பாரதியும் சமய சமரசம் பாடிடக் காணலாம். 'இகத்தில் பரம்' என்பார் வள்ளலார். 'செத்த பிறகு என்ன சிவலோகம், வைகுந்தம்? இத்தரை மீதினில், இதே நாளில், இப்பொழுதே முக்தியை நாடி சுத்த அறிவு நிலையில் களிப்போம்.' என்று சங்கினை முழங்குவார் பாரதி.

வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தின் முடிபு, 'மரணமில்லாப் பெருவாழ்வு'. பாரதியும், இக்கருத்தை, 'பாரதி - அறுபத்தாறு' பகுதியில் உரைப்பதைக் காணலாம். இப்பகுதியினை எழுதுவதற்கு முன்பு, நாற்பது நாள் மௌன விரதத்தினைக் கடைப் பிடித்தாராம், பாரதி. ஓயாது, ஏதாவது, பேசிக் கொண்டும் , பாடிக் கொண்டும் இருக்கும் பாரதி மௌன விரதம் இருந்தாரென்றால், அது அவருக்கு புதுச்சேரியில் ஏற்பட்ட யோகியர் தொடர்பாலாகும். தாயுமானவரின் குருவின் பெயர் 'மௌனகுரு தேசிகர்'. அவர், திருமூலர் வழியில் வந்தவர். இவர்கள் தாக்கம் பாரதிக்கு, புதுவையில் இருக்கும் காலத்தில் வளர்ந்திருந்தது. மேலும், பாரதி, தனது பகவத் கீதை உரையினில், தாயுமானவரை மேற்கோள் காட்டுகிறார். தனது 'ஆனந்தக் களிப்புச் சந்தத்திற்கு' 'தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்' என்றே பெயர் இடுகிறார் பாரதி. தேமாச் சீரில் முடியும் 'வந்த மாதரம் என்போம்', 'தாயின் மணிக்கொடி பாரீர்' போன்றவை இச்சந்தத்தில் வரும்.

இப்படியாக, பாரதிக்கும், தனக்கு முன் வந்த சித்தர்களின் மேலான ஈர்ப்புகள் தெளிவாகின்றன. பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமான காலத்தில், மருத்துவர்களையும், அவர்கள் தந்த மருந்துகளையும் துறந்து, கிட்டத்தட்ட, தன் பூவுடலைத் துறக்கும் முடிவினை பாரதி எடுத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதில் தாயுமானவரின் முடிவினையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. தாயுமானவரும், பாரதியும், ஒன்றுபோல கிட்டத்தட்ட 38 வயது வரைதான் வாழ்ந்திருக்கிறார்கள்.! 'முக்தி என்றொரு நிலை சமைத்தாய்' எனப் பரமனைப் பாடிய பாரதிக்கு, அந்நிலையைத் தழுவிடும் நேரமும் வந்திட, அதை இனிதே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

உசாத்துணை: ஊரன் அடிகள்

Thursday, September 11, 2008

அர்ஜூனன் சந்தேகம்! : பாரதி

வேடிக்கை கதைகள் என்கிற பகுதியில், சின்னச்சின்னதாய் சில கதைகளும் எழுதி வைத்திருக்கிறார் நம்ம பாரதி.
அவற்றில் ஒன்று - இந்த "அர்ஜூனன் சந்தேகம்":

ஊர்: ஹஸ்தினாபுரம்
இடம்: துரோணரின் பள்ளிக்கூடம்

பாண்டுவின் பிள்ளைகளும், துரியோதனாதிகளும் அங்கே பள்ளி பயில்கிறார்கள். ஒருநாள் சாயங்கால வேளையில்,
அர்ஜூனன், கர்ணனைப் பார்த்து, 'ஏ கர்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
'சமாதானம் நல்லது' என்று கர்ணன் சொன்னான்.
'காரணமென்ன?' என்று கிரீடி கேட்டான்.
கர்ணன் சொல்லுகிறான்: "அடே, அர்ஜூனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அதனால் உனக்குக் கஷ்டம். நானோ இரக்க சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால், சமாதானமே சிறந்தது' என்றான்!
அர்ஜூனன்: 'அடே, கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்' என்றான்.
அதற்கு கர்ணன்: "பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை' என்றான்.
இந்தப் பயலைக் கொன்றுபோட வேண்டும் என்று அர்ஜூனன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான்.

பிறகு துராணாச்சாரியாரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டான்.
'சண்டை நல்லது' என்று துரோணாச்சாரியர் சொன்னார்.
'எதனால?' என்று பார்த்தன் கேட்டான்.
அப்போது துரோணாச்சாரியர் சொல்லுகிறார்:
'அடே, விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும். இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம் - ச-ச-ச' என்றார்!

பிறகு அர்ஜூனன் பீஷ்மாச்சாரியாரிடம் போனான், 'சண்டை நல்லதா தாத்தா, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவர் சொல்லுகிறார்: 'குழந்தாய் அர்ஜூனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய க்ஷத்திரிய குலத்திற்கு நன்மையுண்டு. சமாதானத்தால் லோகத்திற்கே மகிமை' என்றார்.
'நீர் சொல்லுவது நியாயமில்ல' என்று அர்ஜூனன் சொன்னான்.
'காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும் அர்ஜூனா, தீர்மானத்தை அதன் பிறகு சொல்லுவாய்' என்றார் கிழவர்.
அர்ஜூனன் சொல்லுகிறான்: 'தாத்தாஜீ, சமாதானத்தில், கர்ணன் மேலாகவும், நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்' என்றான்.
அதற்கு பீஷ்மாச்சாரியார், 'குழந்தாய், தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால், உன் மனதில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப்போல பரஸ்பரம் அன்போடு இருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்.' என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.
...............................................
சில தினங்களாயிற்று...
ஹஸ்தினாபுரத்திற்கு வேத வியாசர் வந்தார். அர்ஜூனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான். அப்போது வேத வியாசர் சொல்லுகிறார்" 'இரண்டும் நல்லன. சமயத்துக்கு தக்கவாறு செய்ய வேண்டும்' என்றார்.
................................................
பல வருடங்களாயின...
காட்டில் இருந்து கொண்டு, துரியோதனாதிகளுக்கு தூது விடுக்கும் முன்பு, அர்ஜூனன், ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து 'கிருஷ்ணா, சண்டை நல்லதா?, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
அதற்குக் கிருஷ்ணன், 'இப்போதைக்கு, சமாதானம் நல்லது. அதனாலேதான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்' என்றாராம்.
------------------------------------------------
பாரதியின் கதை இத்துடன் இக்கதை முடிகிறது.
மகாபாரதக் கதையில் அதன்பின் நிகழ்ந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்ணனுக்கு அர்ஜூனனின் மேலே காழ்ப்பு.
அர்ஜூனனுக்கு 'நானா, கர்ணனா' எனக்கண்டறிவதே நோக்கம்.
துரணரோ, தனக்கு ஆகவேண்டியதைப் பேசுகிறார்.
பீஷ்மரோ சாகப்போகிற நேரத்தில் மட்டும் 'சங்கரா சங்கரா' என்கிறார்.
வியாசரோ, தத்துவம் சொல்கிறார்.
இறுதியில் கண்ணன், தக்க சமயத்தில் செய்ய வேண்டியதை செய்கிறார். :-)

Friday, August 29, 2008

மகாகவி காட்டும் மரணத்தை வெல்லும் வழி


இடம் : புதுச்சேரி
பாரதியும், குவளைக்கண்ணன் சுவாமிகளும் உரையாடுகிறார்கள்:

பாரதி : கண்ணா, ஆழ்வார்கள் எத்தனை பேர்?
குவளையார் : பன்னிரெண்டு பேர்
பாரதி : ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
குவளையார் : நாலாயிரம்
பாரதி : அப்படியா, அவர்கள் பன்னிரெண்டு பேர், நாலாயிரம் பாடினார்கள்.
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!

பாரதியின் மனோதிடத்தை என்னென்று சொல்வது. இப்புவியின் மீதேறி, அதன் நடுவில் ஒரு சிம்மாசனம் வைத்து, அதன் மீது அமர்ந்தவனாயிற்றே. என்ன, அவ்வாறு அவனால் நெடுநேரம் அமர முடிவதில்லை. அவனியிலே மாந்தர் படும் அல்லல் கண்டு ஓடோடி வந்து விடுகிறான். இங்கே, நாலாயிரம் போல், நானொரு ஆறாயிரம் படைப்பேன், நான் ஆறாயிரம் படைத்தால், அந்த ஆழ்வார்கள் படைத்த நாலாயிரம் போல வரும் என நினைத்தானோ!



ஆறாயிரம் பாடுகிறேன் பார் - இப்படிச் சொல்லி முடித்த உடனேயே ஆறாயிரம் பாடும் சங்கற்பத்தினை மேற்கொண்டார். அன்றே பாரதியார் மௌன விரதத்தினைத் துவங்கினார். நாற்பது நாளாக தொடர்ந்தது. எப்போதும் ஏதாவது பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் பாரதி, மௌனத்தில் இருந்தார்!. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் - அவரையே பாரதி - தன் மோனகுரு என்கிறார். அதோடு கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் தாக்கமும் இருந்திருக்கிறது. இவர்கள் மூவரின் நேரடித் சந்திப்புகளும், அரவிந்தரின் அருகாமையும், புதுவையில் பாரதியின் சுதந்திர வேட்கையைத் தணித்து, ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின.
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீதேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. (19)
என குள்ளச்சாமியைப் புகழ்கிறார் பாரதி. இதேபோல், கோவிந்தசாமியையும், யாழ்ப்பாணத்து சாமியையும் புகழந்து பாவிசைக்கிறார் இந்தப் பகுதியில்.

மௌனவிரதம் முடித்து, ஆறாயிரம் எழுதத் துவங்குகிறார். ஆனால், அந்தோ, அது அறுபத்தாறோடு நின்றுவிடுகிறது. இதற்கு காரணம் தன் ஆத்ம சக்தியினை வைத்து, விடுதலை பெற்றுத்தருகிறேன் பார், என்கிற வீராவேசமாக புதுவையை விட்டுக் கிளம்பியதாக இருக்கலாம். எனினும் அந்த 66 பாடல்களில் நமக்குத் தரும் அருஞ்செய்திகளில் இருந்து சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

'எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் - ஒரு சித்தன் இந்நாட்டில்' என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்தாக, பாராசக்தியைத் துதிக்கிறார். அடுத்ததாக,

மரணத்தை வெல்லும் வழி என்னும் தலைப்பிட்டுச் சொல்கிறார்:
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ? (4)
பொன்னான திருவடிகளே சரணம் எனப் போற்றியபின், அறிவேன் இந்த உண்மையெல்லாம்,
எந்த உண்மையெல்லாம்?
என் முன்னோர்கள் 'எவ்வுயிரும் கடவுள்' என்றதை.

கடவுள் எங்கே இருக்கிறார்? என்கிற தலைப்பிட்டு,
சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று இரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? (15)
என்கிறார்.
தொடர்ந்து அடுத்தா பாட்டில் தெள்ளத் தெளிவான விளக்கம் சொல்வார்:
...
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. (16)
அடுத்ததாக அச்சம், ஆசை, கோபம் ஆகியவை அசுர குணங்கள். மரணமில்லா பெருவாழ்விற்கு இவை மூன்றும் விலக்கல் வேண்டும் என்கிறார்.

அடுத்து,
...
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,

வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)

நஞ்சுண்டும் சாகமல் இருப்பது கற்றால், வேறென்ன வேண்டும்?
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டு தேம்பாமல், அஞ்சாமல் வாழ்வோம் புவியினிலே.

அடுத்ததாக 'பொறுமையின் பெருமை' என்கிற பகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களில் ஒன்று,
தணிகைமலை உறையும் வேலனை பொறுமையின் பெருமையெனச் சொல்கிறார்:

திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற்றிருக்கும் அதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை என்பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண்டீர், பகுதி'தணி'யெனுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! (11)
பின்னர் 27ஆம் பாடல் முதல் 36ஆம் பாடல் வரை உபதேசம் எனத்தலைப்பிட்டு பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். இவையெல்லாம் சித்தர் பாடல்கள் போல் இருப்பன.
...
வாசியை நீ கும்பகத்தால் வலியக்கட்டி
மண்போல, சுவர்போல வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதிற் பயனில்லை; அனுபவதாற்
பேரின்ப மெய்துவதே ஞான மென்றான் (28)
வாசி : மூச்சு; கும்பகம் : மூச்சை அடக்கியாளும் யோகமுறை
கிணற்றில் ஆழத்தில் பிம்பமாய் ஆதவன் தெரிவதுபோலே, ஈசனை, உன் ஆன்மாவில் சச்சிதானந்தத்தின் பிம்பமதைக் காணத்தெளிவாய். இதைப்பேசிப் பயனில்லை. உன்னால் உன்னில் உணர்ந்தால் மட்டுமே அது ஞானம்.

பாரதி அறுபத்தாறு - முழுமைக்கும் இங்கே பார்க்கவும்.

சுத்த அறிவே சிவம் என்று பறைசாற்றும் பாரதி, எல்லா உயிர்களிலும், எல்லா திடப்பெருள்களிலும் இருப்பது இறைவன் என அறுதியிட்டுக் கூறுகிறார். மேலே பாரதி சொல்லும் அசுர குணங்களை அழித்து அச்சம் ஒழித்து, பொறுமையுடன் அந்த இறைவனை, பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலாவின் வண்ணத்தில் பார்க்கத் தெரிந்தவரே, மரணத்தை வெல்வார் என்பது திண்ணமன்றோ!

மரணத்தை வெல்லும் வழி சொன்ன பாரதி ஏன் மாண்டான் என்போர் சிலர். மாண்டதெல்லாம் மரணமில்லை மதியிலிகாள், மரணத்தை வென்ற பின்னே, மரணம் வருமோ பின்னே? காலனைக் காலால் மிதித்தவனுக்கு ஏது மரணம்? ஸ்தூல உடலில், பரமனைப்பார்த்த பின்னே, இந்த உடலும் ஒரு பொருட்டோ, என அதனைத் துய்த்த பாரதி, அமரன். பாரலுகில் இவனைப்போல் இன்னொருவன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை.

Monday, November 05, 2007

கிளிப் பாட்டொன்று கேட்கலையோ...

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே!
மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே!
கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே!
அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
நெருங்கித் துயர் வருமோ?



மாண்டு ராகம் - ஆதி தாளம்
எஸ். சௌம்யா பாடிடக் கேட்கலாம்:

சென்ற வருடம் அக்டோபர் 12இல், சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்சியில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல் இது.

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் வினைப்பயன் என்று உணர்ந்தவர், எந்த செயலுக்கான விளைவிலும் தன்னை அலைக்கழிக்க விடார். மாறாக செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார். இன்பத்தில் திளைத்து தன்னை மறப்பதும் இல்லை. துன்பத்தில் வீழ்ந்து துழல்வதும் இல்லை. சூரியனைப்போல் நடு நிலமையுடன் தன் செயலின் பயன்களைக் கொள்வார், அழிவில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்.

வந்த துன்பத்தினை போக்குவதற்கான வழியாக அன்பை பயன்படுத்தச் சொல்லுகிறார். அன்பினால் துன்பம் செய்தவரை அணுகுங்கால் பகை விலகுவதோடு, தாம் கொண்ட துன்பமெல்லாம் அழியும். துயரம் விளைவிக்கும் சோர்வும், பயமும் நம்மிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும்.

அடுத்ததாக, இனிமேல் துயர் வராமல் இருப்பதற்கான வழியாக, அறிவுச்சுடராக விளங்கும் சுப்ரமணியனை பணிந்திட்டால் போதும், துயர் நெருங்கித்தான் வருமோ என்கிறார். யாமிருக்க பயமேன் என்று சொன்னவல்லவா அவன்!

திருவைப் பணிந்து செம்மையுடன் தினமும் நம் தொழில் செய்வோமடி கிளியே. வருவதெல்லாம் வரட்டும் என்று வருவதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் மகிழ்வுற்று இருப்போமடி கிளியே!

Tuesday, August 14, 2007

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!



ஆம், ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

இந்த இனிய சுதந்திர தினத்தில் பாரதியின் பாடல்களில் மலர்ந்த -


ஒரு இனிய இசை நிகழ்ச்சி - மலரும் நினைவுகளாக மலரட்டும்.



மா-நிலத்தில் நம் பெருமை உயரட்டும்!



MahakaviBharathiSp...


விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியாக

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!



அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

Saturday, February 24, 2007

பார் அதி சின்னத்தனம் :-(

பார் அதி சின்னத்தனம்.

பாரதியை பழிக்கும்
தமிழனும் இனியும்
இருக்கின்றானே....

தன்மானத் தமிழனும்
தலைகுனிந்து - வெட்கித்
தலைகுனிந்து போனானே...

தமிழினி மெல்லச்சாகும்
என்றொருவன் சொன்னான்.

தமிழ் மறைந்தாலாவது
இன வெறியில்
மத வெறியில்
சாதி வெறியில்
சிக்கித் தள்ளாடும்
உளரல்கள் தமிழில்
வராதல்லவா?

தமிழ் மறைந்தாலாவது
தமிழில்
உளரல் இம்சைகள்
ஒடுங்குமல்லவோ?

இதற்காவது
தமிழினி சடுதியில்
சாகட்டும்.

சின்னத்தனத்தில்
சிக்கிய சிறுமதியார்
தொல்லைகளில் இருந்து
தமிழாவது தப்பிக்கட்டும்,
தமிழினி சடுதியில்
சாகட்டும்.

Sunday, December 10, 2006

பாரதி - என் அரசவைக்கவி (மீள்பதிவு)

இன்னோர் வருடம் - உன் பிறந்தநாள் -
எம் மனத்தில் இன்னோர் வருடம் நீ செய்யும் ஆட்சியின் நினைவாய் இந்த மீள்பதிவு.


திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
வழக்கத்திற்கு ஓர் மாற்றாக,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள்:

பாரதி - என் அரசவைக்கவி.
-------------------------

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என் அவைக்கு அழைத்தேன்,
கவி எழுத.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உறுதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொரு நாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.

Sunday, March 27, 2005

பாரதி - என் அரசவைக்கவி

திடீரென்று பாரதி என் மனதிற்குள் புகுந்துகொண்டு
அடேய், நீ அரசன், நான் உன் அரசவைக்கவி,
எழுது என்பால் ஒரு கவி என ஆணையிட்டான்.
எழுந்தது என்னுள் ஓர் கவி.
பாரதி - என் அரசவைக்கவி.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதினால் - பாரதியை
என் அரசவைக்கவியாக்குகிறேன்!
என்ன, அந்த முறுக்கு மீசைக்காரனிடம்
எனக்கு சிறிது பயம், அவ்வளவே.
எட்டயபுரத்து ஜமீனையே
எள்ளி நகையாடியவன்,
என்னை என்செய்வானோ?

அச்சம் தவிர் என்று ஆத்திச்சூடியில் சொன்னதினால்,
மிச்சம் ஏதுமின்றி என்பயத்தை தள்ளிவைத்து,
கவிஞனை என்னவைக்கு அழைத்தேன்,
கவி பாட.

முண்டாசுக் கவிஞனும் வந்தான்,
முறுக்கிய மீசையுடன்,
ராஜநடைபோட்டு.
கவிஞன் கவிக்கு மட்டுமல்ல,
கம்பீரத்திற்கும் பிரதிநிதி.
பாரதிக்கு முன்னால்,
அரசன் - நான்,
சிற்றரசனானேன் - ஒருவேளை
கப்பம் வசூலிக்க வந்தானோ கவிஞன்.
ஒற்றர்படைத்தலைவன் இதுபற்றியேதும்
உளவு சொல்லவில்லையே.

போகட்டும்,
பாரதி, கவிதை ஏதும் உண்டோ? என்றேன்.
நமட்டுச்சிரிப்புடன் தன் மீசைக்கு
முறுக்கேற்றிக்கொண்டிருந்தான் மகாகவி.

காக்கை குருவியைப் பற்றி பாடியவன், நம்மை
காக்கை, குருவி, என்றால்
என் செய்வது, பயந்தேன்.
ஆணாதிக்கத்தை எதிர்த்தவன்,
பெண்விடுதலை வேண்டும் என்றவன், இங்கே
மக்களாட்சி வேண்டும் என்றால்
என் செய்வது, மருண்டேன்.
நல்லவேளை, உன்
'மனதில் உருதி வேண்டும்' என்ற வார்த்தைகள்
ஞாபகம் வந்தது, சற்றே தணிந்தேன்.

அன்றொருநாளினிலெ,
அழகுத்தமிழின்
அருமைகளை அழகாய் இயம்பி,
அழகுத்தமிழர்வாழ்நாட்டினை வாழ்த்தி
வெண்பாக்கள் இயற்றி,
உன்பாவினிலே சொன்னாய்,
பாரினிலே உயர்நாடு நம்
பாரதநாடென்று.

அடிமைத் தளைகளினால்
பாரதத்தாய் பட்டபாட்டினைத் தாளாது,
விடுதலை வேள்வியில் கனல் வளர்த்தாய்.
வீர சுதந்திரத்தினை வேண்டி நின்றார்க்கு
சுகபோகமாய்
சுதந்திர்ப்பயிர் வளர்த்தாய்.
இன்முகத்தாள் எங்கள்தாய்,
இன்னமும் துயிலுதியாது கண்டு,
திருப்பள்ளி எழுச்சி படைத்தாய்.
உன் ஞான விளக்குதனில்
கீதையின் சாரம்தனை படித்தாய்.
நிலைகெட்டுத் திரியும் மனிதரிடம்
அறிவே சிவமென்று அறிவுரை சொன்னாய்.
வலிமை கெட்ட பாரதத்தில்
போவதற்கும்
வருவதற்கும் வேண்டியன இவையென்று
பட்டியலிட்டாய்.

கண்ணனை உன் காதலனாக்கினாய்,
கண்ணம்மாவை உன் காதலியாக்கினாய்,
எங்களை மட்டும் ஏன் மன்னராக்கினாய்?
என்றென்றும் எங்கள் மனதில்
அரசவைக்கவியாகி
அதிகாரம் செய்யத்தானோ?
ம்ம், தந்திரம் புரிந்தது,
வாழ்க நீ எம்மான் எம்மனத்தில் எல்லாம்.

Monday, March 21, 2005

விட்டு விடுதலை...

என்னுடைய முந்தைய பதிவான பாரதியாரின் 'விட்டு விடுதலை...' கவிதையை படித்திருப்பீர்கள்.
படிக்காதவர்களுக்கு சுட்டி இங்கே.

அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒரு ஆமெரிக்க சுவாமியிடம் (துறவி) காட்டி, அவரிடன் ஒரு கேள்வி கேட்டேன்: (அவர் இந்தியாவில் தீக்க்ஷை பெற்றவர்)
இப்படி பறவைகளும், விலங்குகளும் தங்கள் கடமையை செவ்வனே செய்யுமாயின், மனிதர்களை விட, அவற்றுக்கு கர்ம யோகத்தினால், பிறவி என்னும் பெருங்கடலைக் கடந்து முக்தி அடைய வாய்ப்பு அதிகமாக இருக்கிறாதா? என்று.

அதற்கு அவர், விவேகானந்தரை மேற்கோள் காட்டி சொன்னார்.
கர்ம யோகம், செவ்வனே பக்குவப்படுத்தும். ஆனால் மனதர்களுக்கு மட்டுமே பக்குவப்பட்டு சூட்சுமத்தை புரிந்து கொண்டு உயரிய முக்தி நிலையை அடைய முடியும் என்று.

ஒளவ்வையாரும், மானிடராய்ப்பிறத்தல் அரிது, அரிதிலும் பெரிது என்பார்.

நாமோ ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், இன்றைய பொழுதை எப்படி செலவு செய்யலாம் என்று யோசிப்பதிலையே, வாழ்நாளை கடத்திக்கொண்டு இருக்கிறோம்.

கர்ம யோகத்தினைப்பற்றி படிக்க விரும்புவர்களுக்கு, விவேகானந்தரின் 'கர்ம யோகம்' புத்தகம் நல்லதொரு முன்னோடி.
அதன் ஒரு சில பகுதிகள் இங்கே.

Sunday, March 20, 2005

Vittu Vidhuthalai - A Mahakavi Bharathi Poem

விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்த

சிட்டு குருவியைப் போலே...

(விட்டு...)

எட்டு திசையும் பறந்து திரிகுபை,

ஏரிய காற்றில் விரைவோடு நீந்துவை,

மட்டுப்படாதெங்கும் கொட்டிக்கிடக்கும்

வானொளி என்னும் மதுவின் சுவையிண்டு...

பெட்டையினோடின்பம் பேசிக்களிப்புற்று...

பீடையில்லாத்தோர் கூடு கட்டிக்கொண்டு...

முட்டைத்தரும் குஞ்சை காத்து மகிழ்வெய்தி

முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு...

(விட்டு...)

முற்றத்திலேயும் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம்தன்னை கொணர்ந்துண்டு...

மற்றப்பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்

வைகறையாகுமுன் பாடி விழிப்புற்று...

(விட்டு...)

In English - (My Translation)


Get freed from the shakles

Like a sparrow...

(Get freed...)

who swings the wings

in all the eight directions


who swims to pace

in all mighty space


who tastes the limitless

light spilled like wine

(Get freed...)


who mates to joy

and builds herself a nest



to hatch the eggs

and guard the little ones.

(Get freed...)


who fetches grains

from floors and faraway fields


who fixes food

not just for herself.

(Get freed...)

who tells tales

to make her babies sleep and

who wakesup to sing, yet

much before the dawn

(Get freed...)