Showing posts with label அருணாசலக்கவி. Show all posts
Showing posts with label அருணாசலக்கவி. Show all posts

Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, August 26, 2008

தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்

மிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் உருவாக்கிய முன்னோடிகளான இம்மூவரில், மற்ற இருவரான முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை பற்றி ஏற்கனேவே முன்பொரு இடுகையில் பார்த்தோம்.

அருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:
  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • எப்படி மனம் துணிந்ததோ என் சுவாமி
    இராகம் : ஹூசைனி, தாளம் : கண்ட சாபு
    பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

    பாடலை இங்கு கேட்கலாம்:
    Eppadi Manam .mp3


பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.