Showing posts with label மெய்யியல். Show all posts
Showing posts with label மெய்யியல். Show all posts

Sunday, November 01, 2020

எப்படி மனம் துணிந்ததோ?

ராமயணத்தில் தந்தையின் சொற்படி காட்டுக்குச் செல்லத் தயாராகிறான் இராமன். சீதையை அயோத்தியிலேயே விட்டுவிட்டு இராமன் மட்டும் காட்டுக்குச் செல்வதா?


இதைக் கேட்டதும் சீதையின் மனம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் அவள் மனதில் தோன்றும்?
படம் பிடித்துக் காட்டுகிறார் அருணாசலக் கவிராயர்.
 

இராகம்: உசேனி (ஹூசேனி)

இயற்றியவர்: அருணாசலக் கவிராயர் 

 பல்லவி

எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன் 

என்றால் இதை ஏற்குமோ பூமி?

 

அனுபல்லவி 

எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே

ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே              (எப்படி)

 

சரணம் 1 

கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக் 

காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல 

வார்த்தையால் கொல்லாமல் கொல்ல 

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல 

என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல                (எப்படி) 

 

சரணம் 2 

அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத் தள்ளவோ - நீர்

அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?

குன்னமோ? உமக்கென்னைத் தாரம் 

கொடுத்தவன் மேல் அல்லவோ நேரம்?

என்னை இட்டுக்கொண்டு போவதோ பாரம்?

இதுவோ ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி) 

 

சரணம் 3 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை 

நினைத்துக் கொண்டு இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்   

கூடி நாம் உகந்திருக்கும் காடு 

குறைவில்லா என் மிதிலை நாடு 

காடு நீர் இல்லாத வீடு 

கால் வையும் தெரியும் என் பாடு (எப்படி)

 

 ---------

குன்னம் = அவமானம்

______

நம்பினார் கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?

~வடிவாய் நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?

கொஞ்சம் பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு பாடுகிறார்:

பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்

பாரினில் வந்தது பாரும்!

பாரினில் பரப்பிரம்ம் அவதராம் எடுக்கணும்னாலும் பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்ம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ, எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி நிறைவேறும்?

ஆதலினால் கலங்குகிறாள் பிராட்டி.

சாதரணப் பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும் காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ் கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில் எல்லாம் பண்ணறாங்க.

அப்படியாவது இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.

இதனால், சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

நம்முடைய உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி ஆதாரமாக இருக்கிறது.

எப்பிறப்பிலும் பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின், வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப் பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான். 

இந்த இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க, அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.   

இதைவிடுத்து இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்.   

எஸ் சௌம்யா அவர்கள் பாடிட கேட்கலாம்:



சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட கேட்கலாம்:



Tuesday, August 30, 2016

இதயமெனும் கண்ணாடி

தெளிவான தண்ணீரில் தெரியும் பகலவனின் பிம்பத்தினைப்போல,
இதயக் கண்ணாடியில் தெரியக்கூடிய சக்தியானது - 
சகுணப் பிரம்மம். 
ஆனால் இந்தக் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது!
ஏனெனில் மாசு படிந்த கண்ணாடியில் தெரியும் பிம்பமானது சரியான ஒன்றாக இருப்பதில்லை.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்முடைய புறக் கண்ணாடிகளில் அழுக்கு படிந்தாலும் தெரியும் பிம்பமானது மாறுவதில்லை. என்ன மங்கலாகத் தெரியும், அல்லது சில இடங்களில் தெரியாமல் போகும்.



இதயக் கண்ணாடியில் படிந்த மாசு என்பது - நான்/எனது என்பது போன்ற எண்ணங்கள். இந்த மாசினைத் துடைக்காவிட்டால், இதயக் கண்ணாடியில் - எந்த பரமனின் துகளாக இந்த ஜீவன் இருக்கிறதோ - அந்த பரமனின் சகுண பிம்பத்தினைக் காண இயலாமல் போகிறது. அதற்கு பதிலாக அவித்தையினால்  தன் வயப்படுதலே நிகழ்கிறது. இதனால் தன் செயல்கள் எல்லாம் தன்னாலேயே நடக்கின்றதென நினைக்கின்றோம். உண்மையில் நம்மை ஆட்டுவிக்கும் சக்தியின் கையில் நாம் வெறும் கருவிதான் என்பதனை உணர முடிவதில்லை.

சுஃபி கவிஞர் ரூமியும் சொல்லுவார்:


இந்த மாசானது பிறக்கும்போதே இந்த ஜீவனோடு இணைந்தவிட்ட ஒன்று. சக்தியினால் பிறப்பானது நிகழச் செய்யப்பட்ட சித்து வேலை. இதனால் தான் சக்தி அன்னையை உலகத்தை ஈன்ற அன்னையாகச் சொல்கிறோம். அவள் அந்த மாயையினை ஏற்படுத்தியதனால் உலகில் உழல்கிறோம்.



இந்த கண்ணாடியை என்ன செய்வது?

இந்த கண்ணாடியில் மேல் படிந்த மாசினால் தெரியும் பிம்பமானது - நான், எனது போன்ற எண்ணங்களயே தோற்றுவிக்கிறது. ஆகையால் இந்த கண்ணாடியைப் புறந்தள்ளி வைக்க வேண்டியதாகிறது. மாயையினால் ஏற்படும் பிம்பத்தினை ஒதுக்க வேண்டியதாகிறது. 

விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் - எவ்வாறு இந்த கண்ணாடியை புறந்தள்ளி வைத்து, ஜீவனானது உண்மையில் பரமனின் பிம்பம் என்பதனைக் கண்டறியும் வழியினை 16 சுலோகங்களில் சொல்கிறார். 

கண்ணாடியை புறந்தள்ளி வைப்பதினை - மனதினைக் கலைப்பது எனவும் சொல்லலாம். ஆழ்நிலை தூக்கத்தில் - கனவுகள் இல்லாத நிலையில் மனமானது கலைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். அந்நிலையில் இருந்து வெளி வரும்போது, மீண்டும் மனமானது செயல்படத் தொடங்குகிறது.

வசிஷ்ட மாமுனி இராமருக்கு சொல்லும் உபதேசத்தில் இருந்து:
ஓ இராமா! உடல், உணர்வு முதலான மனதில் தோற்றுவிக்கப்பட்ட கூற்றுகள் உண்மையானவையல்ல. உண்மையில் ஆன்மாவனது இதுபோன்ற கூற்றுகளால் குறுக்கப்பட்டவையல்லை. மாற்றாக, சுதந்திரமாக எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பது. 

ஆகையால், நான் எனக் கண்ணாடியில் தெரிவதை நீக்கிட, நான் என்பது என் உடல் அல்ல, என் மனம் அல்ல. நான் அறிந்த எதுவுமே அல்ல, ஆனால் எல்லாமுமான நீ, நீ மட்டுமே - என்பதுவே பிறப்பின் இலக்கினை அடைதல் ஆகும்.

Monday, October 21, 2013

Peace : விவேகானந்தர் கவிதை



சென்ற பதிவில் பார்த்த சுவாமி விவேகானந்தரின் கவிதையை இங்கு விரிவாகப் பார்ப்போமா?

சற்றே முரணான வார்த்தைகளைக் கொண்ட அக்கவிதையின் பொருள்தான் என்ன?
முதல் நான்கு வரிகளுடன் துவங்குவோம்:




Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,

The shade in dazzling light.

விழித்திரு, அது வலிமையில் வருகிறது.
சக்தி இருப்பினும் வெளிப்படாத சக்தி அது,
இருளிலும் இருக்கும் வெளிச்சம் அது,
சுடரொளியிலும் இளைப்பாற நிழல் அது.

எப்போதும் எதையோ தேடிக் கொண்டே இருக்கும் அன்றாட வாழ்வில், எப்போது நாம் ஆன்ம சாந்தியை நாடி இருக்கிறோம்? எப்போதும் இல்லை. இருப்பினும் அது நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆன்ம சாந்தியின் இருப்பிடத்தை, இருப்பினை, அதன் வலிமையில் உணர்ந்திடுவாய், அதற்காக விழித்திரு என அறைகூவல் விடுக்கிறார் முதல் வரியிலேயே. சில நேரங்களில் விவேகானந்தர் தன் சீடர்களுக்கு இதுபோன்ற அறிவுரைகளை வழங்குவதுண்டு.

அதில் சக்தியும் அடக்கம் என்றாலும், அது எந்த ஒரு தனித்துவமான பொருளாகவும் இல்லாததால் அதில் தனியானதொரு சக்தியும் இல்லை. "இந்த குணத்துடன் கூடிய", இந்த நபர் என்று சொல்ல இயலாமல் போவது போல. மாற்றாக எல்லா குணங்களும் கூடி, சகலமும் சாந்தி பெற்று அடங்குதல். 
சக்தி தனியாக விளைவிப்பது ஆக்கம். ஆக்கமற்ற நிலையில் சக்தி இருப்பினும் அது வெளிப்படாத நிலையில் இருப்பது அது.

ஒளி இல்லாத இருளில் வேறுபாடு இல்லை. எல்லாம் ஒடுங்கிய பின் இருளில் கிடைப்பது அமைதி. எல்லா புலன்களையும் கடந்து மனமும் அமைதி அடைகையில், எல்லாமும் ஆன ஆன்ம சாந்தி ஒளி - அமைதியான இருளிலும் அஃதே பேரொளி!

சுடரொளியானாலும், அமைதியான மனம் வெண்மையான நிழற்குடையின் நிழலின் நிலைபெறும் சாந்தி. ஆகையால், அந்த நிழற்குடையாய் இருப்பதும் அது.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.


அது மௌனமான இன்பம்

மனதால் உணரப்படாத பாரம், ஆழமான பொருள்,
அமரத்துவமான, வாழாத வாழ்க்கை
அமரத்துவமான, துயரமில்லா இறப்பு.

இன்பமும் மகிழ்ச்சியும் எப்போதும் ஓசையோடு வெளிப்படுவது வழக்கம். ஆனால்  அதனில் ஓசையில்லாமால் மௌனமும் இன்பம். இன்பம் மட்டுமல்ல துயரமும் கூட - ஆனால் அது மனதால் உணரப்படாத பாரம். அது சாதாரணமாக மறந்து விடக் கூடியதான வழக்கமான நிகழ்வல்ல. அது ஆழமான பொருள் தருவது.
அது இறப்பில்லாத அமரத்துவமான வாழ்க்கை - ஆனால் யாரும் - அதை எந்த ஒரு ஜீவனும் வாழ்க்கையாக வாழந்ததில்லை. அதை நித்யமான இறப்பென்றும் சொல்லலாம். ஆனால் அவ்விறப்பில் துயரப்படுவதற்கோ, சோகப்படுவதற்கோ ஏதுமில்லை. 



It is not joy nor sorrow,
But that which is between,
It is not night nor morrow,
But that which joins them in.

அது, இன்பமும் இல்லை, துயரமும் இல்லை
ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்று.
அது இரவும் இல்லை அதன் மறுநாளும் இல்லை
ஆனால் அவ்விரண்டையும் இணக்கும் பாலம்.



It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion --
It is the calm of heart.


அது இசையின் இடையே இனிய நிறுத்தம்
மற்றும் வரைகலையில் தொடர்வுக்கு முன்னே நிறுத்தம் ;
பேச்சிற்கு இடையே மௌனம்
ஆர்வ வெளிப்பாட்டிற்கு இடையே -
மனதின் அமைதி.




It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

அது பார்த்திராத அழகு
மற்றும் தனியாக நிற்கும் அன்பு
அது பாடப்படாத பாடல்
மற்றும் அறியப்படாத அறிவு.



It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

அது இரண்டு ஜென்மங்களுக்கு இடையேயான இறப்பு
மற்றும் இரண்டு புயல்களுக்கு இடயேயான அமைதி
அது படைப்பிற்கு முன்னேயான வெறுமை
மற்றும் படைப்பின் பின்னேயான பரிணாமங்கள் 




To it the tear-drop goes,
To spread the smiling form
It is the Goal of Life,
And Peace -- its only home!

அதற்கான கண்ணீர்
அதன் புன்னகையை எங்கும் எடுத்துச் சென்றிட
அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்
ஆம், ஆன்ம சாந்தியே - அதன் ஒரே வீடு!.

Monday, November 26, 2012

வாழும் இறைவன் : சுவாமி விவேகானந்தர்


"வாழும் இறைவன்" என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதையின் தமிழாக்கம்:

மீண்டும் மீண்டும் பிறந்து, ஆயிரமாயிரம் துயர் பட வேண்டும்.
ஏனெனில், நிஜமான இறைவனை வழிபட வேண்டும்.
நான் நம்பும் ஒரே இறைவன் - அவன்
எல்லா ஆன்மாக்களின் கூட்டுத் தொகுதியாய் இருக்கிறான்.

அவன் உன்னுள்ளும், அதன் வெளியேயும் இருந்து,
உழைப்பாளிகளின் ஒவ்வொரு கையிலும்  செயல்பட்டு,
நடமாடும் ஒவ்வொரு கால்களிலும் நடந்து வருகிறான்.
அவன் உடலில் இருப்பது நீ.
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

உயர்விலும் தாழ்விலும், துறவியிலும் பாவியிலும்,
கடவுளிலும் புழுவிலும்,
காணக்கூடிய, அறியக்கூடிய, உண்மையான எங்கும் நிறைந்த
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

முற்பிறவியும் அடுத்த பிறவியும் இல்லாமல்,
இறப்பும் இல்லாமல்,
வருவதும் போவதும் இல்லாமல்,
எப்போதும் நாம் 'ஒன்றேயென' அவனில் இருப்பதுமான,
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

இப்படிப்பட்ட "வாழும் இறைவனை"யும் அவனது பிரதிபலிப்பையும்
புறந்தள்ளி, பொய்யான நிழல்கள் பின்னால் அலையும் மூடர்களே,
இதனால் சண்டையும் சச்சரவும்தான் மிச்சம். கண்கண்ட
இறைவனயே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

================================

இதன் ஆங்கில வரிகளையும், ஆங்கிலப் பாடலாகப் பாடுவதையும் இங்கே பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.

Sunday, October 14, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே - 2

சென்ற பகுதியைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியொன்று எழுதுவேன் என்று நானே நினைத்துப் பார்க்கவில்லைதான் அப்போது. ஆனால், இந்த காணொளிப் படத்தினைப் பார்த்தபின்பு அதன் தொடர்ச்சியாகத் தோன்றத் தான் செய்தது.





காட்சிப் படத்தின் கருவினை, சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில்:
ஜில் போல்ட் டெய்லர் என்கிற மூளை சம்பந்தபட்ட நோய்கள் பிரிவு மருத்துவர் / ஆராய்சியாளர்  தனக்கே ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாக சுவைபட விவரிக்கிறார்.


நோயாளிக்கு நோய் வருகையில் மருத்துவரைச் சென்று பார்க்கிறார்.
ஆனால் மருத்துவருக்கே நோய் வருங்கால்?
இந்த காட்சிப் படத்தில் அவர் தன்னைத்தானே ஆராய்சி செய்துகொள்ளும் பேறு பெற்றேன் என்கிறார். அப்படியொரு ஆராய்சியில் அவர் என்னதான் சொல்கிறார்?
மூளையில் இரண்டு பகுதிகளான வலது மூளை மற்றும் இடது மூளை ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் இருந்து தனித்தனியே செயல்படும் பொழுது:
(காணொளிக் காட்சிப் படத்தின் இறுதியில் 17:09 நிமிடங்கள் கடந்தபின்) 
வலது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நானே அண்ட சராசரங்களையும் இயக்கிடும் சக்தி. என் உடலில் உள்ள 50 டிரில்லியன் மூலக்கூறுகளுக்கும் (molecule) நான் ஆதார சக்தியாகவும், எல்லாப்பொருள்களுடனும் ஒன்றாகவும் தெரிகிறேன்."
இடது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நான் மற்றவர்களில் இருந்து தனிப்பட்டு, நான் என்கிற தனித்துவமானவர். நான் ஒரு மருத்துவர்...என்றெல்லாம்.".
"ஆகவே மக்களே, நமக்குள் இப்படியாக இரண்டு சாய்ஸ்கள் இருந்தால், எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? எப்போது?" என்கிற கேள்வியைக் கேட்டதோடு, இவாறு நிறைவு செய்கிறார்: "எந்த அளவிற்கு நாம் வலது மூளையில் அமைதியையும் சாந்தத்தையும் நிலைபெறச் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், உலகத்திலும் அமைதியையும், சாந்தத்தையும் திகழ்ச்செய்வோம்".

---------------------------------------------------------------------------

சென்ற பகுதியில் ஐம்புலன்களும் எப்படி ஆழ்மனதிற்கு "இடையூறு" என்பதைப் பார்த்தோம். அதுபோலவே, நமது வெளி உலக அனுவங்களும், நமது வெளியுலகக் கல்வியும் ஆழ் மனதிற்கு இடையூறாகவே இருக்கின்றன. அது எப்படி? நமது புத்தியில் சேகரிக்கப்படும் அனுபவங்களும், உணர்வுகளும் நம்மை திருப்பி வெளியுலக அனுபவதிற்கே இட்டுச் செல்கிறன.



படத்தில் காட்டியுள்ளபடி, மனதின் செயல்பாட்டுப் பகுதிகளாக, ஆழ்மனம், சித்தம், அகங்காரம், புத்தி எனப் பிரிக்கலாம். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் பகுதியாகும். சித்தம் என்னும் பகுதியில், மனதினால் அறிந்ததை, புத்தி என்னும் சேமிப்பு கிடங்கிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், "முடிவுகளை" எடுக்கிறது. அகங்காரத்தின் உதவியால் எல்லா செயல்களையும, முடிவுகளையும் தன்னோடு (ஜீவனோடு) இணைத்துப்பார்க்க இயல்கிறது.

மேலே குறிப்பிட்ட மனதின் வரை படத்தின் எல்லைகளை ஒரு அமீபா செல்லின் செல் சுவர்களோடு ஒத்து நோக்கவும். ஆமீபாவின் செல் சுவர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரையுரைக்குள் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக பெருத்தும் சிறுத்துமாகிக் கொண்டே இருக்கும். அதற்கு ஒப்பாக, மனதில் சித்தம் விகாரமடைத்து, ஆழ் மனமானது புத்தி, அகங்காரம் மற்றும் ஐம்புலன்களின் ஈடுபாட்டால், தன் வயப்பட இயலாமல் போகிறது.

இதனாலேயே நம்மால், "தன்னை" அறியாமல் போவதற்கு ஏதாகிறது.



Wednesday, September 19, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே!

எனது ஆண்டிராய்ட் கைபேசியில் எப்.எம் இணைய வானொலி ஒன்றைத் துழாவிக்கொண்டிருக்கையில் பாட்டொன்று ஒலித்தது:
"அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே...
அய்யங்காரு வீட்டு அழகே."  (அன்னியன் திரைப்படப் பாடல்)

அறியாமை எப்போதாவது பேரின்பமாகுமா?
"... அறியாத" மானிடரை வையம் சுமப்பது வம்பன்றோ!

"Ignorance is Bliss" என்பார்கள் ஆங்கிலத்தில்.  சில சமயம் தெரிந்து துன்பப்படுவதை விட தெரியாமல் இருப்பதே தேவலை என்பதால் போலும்.

வேதாந்தம் உரைத்த ஞானியர் சொல்வார்:
அவித்தை என்னும் அறியாமையாவது தவறான அல்லது குறைவான புரிதலினால் விளைவது. அவித்தையின் விளைவால் மனதானது, தன் கண் போன போக்கிலே தன் கால் போகலாம் என நினைக்கிறது. "துய்ப்பது பரமன்" என்னும் உண்மையை உணராது, தனது புற அவையங்களால் துய்க்கப் படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொண்டு பெருமிதத்தில் புரண்டோடுகிறது.
ஆகவே ஐம்புலங்களால் தான் இந்த அவித்தையே ஏற்படுகிறது அல்லவா? இன்புட்டே இல்லாமல் இருந்தால்?
இதைத்தான் அருணகிரியார் வேண்டுவார்:
"ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்
அந்தி பகல் அற்ற நிலை அருள்வாயே" என்று.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகத்தைச் சுற்றி வலம் வந்த ஐங்கரனைப் போல் அலைபாயும் மனது - அவ்வாறு செயல்படுவதற்கு - அதன் அவையங்களே பெரிதும் துணை புரிகின்றன. உள்வயப்படமால் வெளியுலக ஈர்ப்பிலேயே மனமானது உழல்கிறது. அதனால், ஐம்புலன்களையும் அகற்றிய நிலையினை வேண்டுகிறார்.

அல்லது, ஐம்புலன்களுக்கும் மனதிற்கும் இடையே ஒரு பெருஞ்சுவரை எழுப்பியாக வேண்டும். மனதிற்கும் ஐம்புலன்களுக்கும் தொடர்பே இல்லாமல் செய்ய வேண்டும்.

அல்லது மனம் ஐம்புலன்களைப் பற்றியே அறிவே இல்லாமல், மனமானது "ஐம்புலன் அறியாமை" தனில் இருக்க வேண்டும். அப்படியொரு நிலையில் இருந்தால், அந்த அறியாமையும் பேரின்பம் விளைவிக்கலாம். ஏனென்றால், ஐம்புலன்கள் மனதில் மயக்கத்தினை விளைவிக்காத பொழுது, அது தனக்குள்ளே, தன் புத்தியில் பிரதிபலிக்கும் பரமனின் பிம்பத்தினைக் கவனிக்கத் தொடங்குகிறது. வாட்டத்தை ஓட்டும் நாட்டத்தை நாடி இருக்கிறது. அவ்வாறான "தன் வயப்பட்ட" நிலையில் வெளி உலகப் புலன் வழிச் செய்திகள் ஏளிதாக மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பகவான் கண்ணன் கீதையில் உரைப்பதினை:
மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: | 
மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||
"நானே ஜீவனாய் இருக்கிறேன். பிரகிருதியில் இருப்பதும் நானே. மனம் மற்றும் ஐந்து புலன்களையும் நானே கவர்கிறேன்."
மனதில் நிறுத்திட வேண்டும்.




Sunday, January 16, 2011

அருணகிரி வேண்டும் உபதேசம்

"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:

தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்

(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,

பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,

திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,

திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே

(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.

பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.

அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)

இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை

ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!

Friday, December 24, 2010

பக்தியும் ஞானமும் (4) - சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை
தரிசித்தளவில் முக்தி பெறலாம்.
- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.
-நடராஜப் பத்து.


சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


(என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.)

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

னி, முத்துசாமி தீஷிதரின் கிருதிகளில் இருந்து:

* சதாசிவனே (சிந்து ராமக்ரியா ராகம்) : சத்யோதாதி பஞ்சமுகன்
* தியாகராஜனே: 'பஞ்சக்ருத்யகரணேன': ஐந்து தொழில்களும் குறிப்படப்படுகின்றன.
* தியாகராஜாயே நமஸ்தே (பேகடா ராகம்): முனிவர்கள் முதல் பூச்சிகள் வரை எல்லா உயிரனங்களுக்கும் முக்தி தர வல்லவர்.
* ருத்ரகோப ஜாத வீரபத்ரமாஸ்ரயே (ருத்ரபிரியா ராகம்): வீரபத்ரர்
* கால பைரவம்: (பைரவி) : காலபைரவர்
* மாரகோடி கோடி லாவண்யாய (ஆரபி) : பிக்ஷாடணர், விபூதி ருத்ராக்ஷ அபிமானர்
* ஸ்ரீதக்ஷிணாமூர்திம் (பேனத்யுதி ராகம்) : வேதங்களால் போற்றப்படுபவர், ஆலமரத்தடியில் வசிப்பவர்
* சங்கர அபிராமி மனோகரம் (மனோகரி) : மார்கண்டேயனைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது
* நீலாசலநாதம் (சம்யுக்தி ராகம்) : அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்த்ரம் வழங்கியது
* ஸ்ரீமாத்ருபூதம் (கானடா) : தாயுமானவர்
* அருணாசல நாதம் (சாரங்கா) : நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாம் திருவண்ணாமலையில் 'தேஜோமய லிங்கம்' தனைக் குறிப்பிடுகிறார்.
* சிந்தயமாகந்த மூலகந்தம் (பைரவி) : காஞ்சி ஏகாம்பரர்- மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவர், பிருத்வி லிங்கம்
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்) : நடராஜர் - பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு திருவடி தரிசனம் தந்தது.

- இப்படியாக, பட்டியலில் இவரது பாடல்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

குறிப்பாக, தில்லைக்கூத்தனைப் பாடும் இக்கீர்த்தனையைப் பார்ப்போம்:
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்)
பாடுபவர்: டி.எம்.கிருஷ்ணா


பல்லவி
ஆனந்த3 நடன ப்ரகாசம் சித்ஸபே4சம்
ஆச்ரயாமி சிவ காம வல்லீசம்


அனுபல்லவி
பா4னு கோடி கோடி ஸங்காசம்
1பு4க்தி முக்தி ப்ரத3 த3ஹராகாசம்
தீ3ன ஜன ஸம்ரக்ஷண சணம்
தி3வ்ய பதஞ்ஜலி வ்யாக்4ர பாத3-
த3ர்சித 2குன்ஞ்சிதாப்3ஜ சரணம்


சரணம்
சீதாம்சு க3ங்கா3 த4ரம் நீல கந்த4ரம்
ஸ்ரீ கேதா3ராதி3 க்ஷேத்ராதா4ரம்
பூ4தேசம் சார்தூ3ல சர்மாம்ப3ரம் சித3ம்ப3ரம்
பூ4-ஸுர த்ரி-ஸஹஸ்ர முனீச்வரம் விச்வேச்வரம்
நவனீத ஹ்ருத3யம் ஸத3ய 3கு3ரு கு3ஹ தாதம்
ஆத்3யம் வேத3 வேத்3யம் வீத ராகி3ணம்
அப்ரமேயாத்3வைத ப்ரதிபாத்3யம்
ஸங்கீ3த வாத்3ய வினோத3 தாண்ட3வ -
ஜாத ப3ஹு-தர பே4த3 சோத்3யம்


பாடற்பொருள்

ஆனந்த நடனம் - பேரொளிப் பிரகாசம் - சிற்சபை தன்னில் சரணடையும்
என்னைக் காத்தருள்வாய், சிவகாமவல்லி பதியே, சிவனே.

கோடிகோடி சூரிய பிரகாசமானவனே - சூரியன் முதலான எல்லா ஒளிக்கும் மூல ஒளியே.
தகராகாசம் என்னும் இதய ஆகாசத்தில் - சைத்தன்ய சொருபமாய் இருப்பவனே,
சித்த சுத்தி வந்து கடைத்தேறச் செய்பவனே, நீ தீனர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவன்.
பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு தன் பொற்பாதத்தைக் காட்டிய பொன்னம்பலவனே.

சிவன், சந்திரன் மற்றும் கங்கையைத் தரித்தவன், நீலகண்டன்.
கேதாரம் முதலான 12 தலங்களை இருப்பிடமாய்க் கொண்டவன். (இப்பாடலின் இராகமும் கேதாரம்!)
பூதகணங்களுக்கு அதிபதி. புலித்தோலை அணிந்தவன்.
சித் + அம்பரம் = சிதம்பரம் : அவனது சித்தம் சைத்தன்யமாய் ஆகாச வெளியில் எங்கெங்கும் பரவியிருக்க, எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
முனிவர்களால் கொண்டாடப் படுபவன். உலகங்களுக்குத் தலைவன்.
இளகிய மனம் கொண்டவன். குருகுஹனாம் முருகனின் - வேதத்தின் உட்பொருளின் - தந்தையானவன்.
ஈடு இணையிற்றவன், அத்வைதமாய் இருப்பவன். அத்வைத வேதாந்தத்தைப் பிரகாசிப்பவன்.
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.

இப்படியாக, ஈசன் குணங்களோடு கூடிய ஈஸ்வரனாக காட்சி அளிப்பது - பக்தர்கள் அவனைப்போற்றிப் பாட ஏது செய்யத்தான். மாயையுடன் சேர்ந்த நிலையில் சகுண பிரம்மமாவதும், நிர்குணமாய் இருப்பதும் - அவன் ஒருவனே - அவனே பரம்பொருள் எனும் மெய்ப்பொருள் தனை அறிவோம்.

Wednesday, December 15, 2010

பக்தியும் ஞானமும் - பகுதி 1

பொதுவாக எல்லோருக்கும் ஞான மார்க்கம் என்பது பக்தி அல்லாத வழி என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் முக்தி அடைவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, என்றாலும், 'முக்தியானது ஞானத்தால் மட்டுமே கிட்டும்' என்பது ஆதி சங்கரரின் முடிபு. அதே சமயம், பலரும் ஞான மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு - மிக முக்கியமான பங்குண்டு என்பதையும் உணர வேண்டும். ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான 'சைவம்', 'சாக்தம்', 'வைணவம்', 'கணாபத்யம்', 'கௌமாரம்' மற்றும் 'சௌரம்' ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடி கோலினார். அதற்குக் காரணமென்ன என்று பார்த்தால், ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது தெளிவாகும். நாம் எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கருவி பக்தியாகும்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249)

ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை.

ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில்.
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

- நம்மாழ்வார்
வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது?

வேதாந்தத்தில் 'பிரம்மம்' இரண்டு நிலைகளில் விளக்கப்படுகிறது. முதலாவது, 'நிர்குண பிரம்மம்' - அதாவது, குணங்கள் இல்லாத பிரம்மம் குணங்கள் இல்லாததால் - அது கருப்பா, சிவப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் அதனில் இல்லாத நிறமில்லை. அது நெட்டையா, குட்டையா எனச் சொல்ல முடியாது. இடத்தாலோ, காலத்தாலோ அல்லது வேறு எந்த வரையுறைக்கு உட்படுத்தப்பட்டு குறிக்கிட இயலாதது. அதை உபநிடதங்கள் - "சத்யம், ஞானம், அனந்தம்" என்றும் "சத், சித், ஆனந்தம்" என்றும் பேசுகின்றன. இந்த நிர்குண பிரம்மத்துடன் மாயை சேரும்போது - அது "சகுண பிரம்மம்" என வழங்கப்படுகிறது - அதாவது குணங்கள் கூடிய பிரம்மம். இந்த நிலையில் சகுண பிரம்மத்தினை - சிவனாகவோ, திருமாலாகவோ அல்லது வேறு ஒரு இஷ்ட தெய்வமாகவோ போற்றிப் பாடிட வழி வகுக்கிறது. நம்மால் போற்ற, ஆடிப்பாடி பக்தி செய்ய ஏதுவானதொரு கருணை பொழியும் வதனமாகத் திகழ்கிறது. மாயையுடன் சேர்ந்ததால் சகுண பிரம்மமாக - வழிபாட்டுக்கு உரியதொரு தெய்வம் என்னும் நிலை பெற்று, நாம் அருள் பெற வழி வகுக்கிறது. மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சொரூபம் தான் இந்த தெய்வங்களாக இருக்க, அந்த தெய்வங்களையே போற்றிப் பாடி, வணங்கி, அவர்களது அருளால் ஜீவனாக இருந்தது, தனது உண்மையான நிலையினை உணரச் செய்திட, மெய்ஞானம் பெற ஏதுவாகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்.

பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்:
முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது.
அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது.
அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம்.
இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

க்தி செய்திட கீர்த்தனம் ஒரு கருவி என்று பார்த்தோம். நமது நீண்ட பாரம்பரியத்தில் பலநூறு அறிஞர்களும், புலவர்களும், கவிஞர்களும் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றி நமக்கு அருமையான பக்தி செய்யும் கருவிகளை செய்து தந்திருக்கிறார்கள். சண்மதம் முன் நிறுத்திய ஆறு இறைகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே எத்தனை எத்தனை கீர்த்தனைகள்!. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரை எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டியல் பெரிதாய் நீளும். நீங்களே பாருங்களேன், மூர்த்திகள் வகையில் பிரித்த இவரது கீர்த்தனைப் பட்டியலை:

கணபதி : 27
சிவன் : 131
சக்தி : 176
முருகன் : 36
திருமால் : 41 (27 +14)
சூரியன் உட்பட நவகிரகங்கள் : 9
பெரும்பாலும் 'குருகுஹ' என்ற முத்திரையோடு அமைந்த இக்கீர்த்தனைகள் அத்வைத சாரத்தை எடுத்துச் சொல்லுவதோடு, நமது மறைகள், பிரபந்தங்கள் மற்றும் புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை இசையோடு சேர்த்து ஊட்டுகின்றன.

இந்த தெய்வங்களைப் போற்றுவதில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக கருதப்படும். "We can have preferences, but no exclusions." என்பார்கள். தனக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக, ஒரு தெய்வத்தை பற்றிக் கொள்ளலாம். கண்ணன் கீதையில், "என்னைப் பற்றிக்கொள். உனக்குத் தேவையான ஞானத்தை நான் தருகிறேன்", சொல்வதை நினைவில் கொண்டு, பக்தி என்னும் கருவி கொண்டு சகுண பிரம்ம உபாசனை செய்து உயர் ஞானம் பெற்று முக்தி என்னும் வீடுபேறினை பெற்று உய்யும் உபாயத்தினை நம் பெரியவர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள். ஆயினும், பக்தியும் ஞான மார்க்கமும் வெவ்வேறானது, தொடர்பில்லாதது என்கிற ஐயப்பாட்டு பலரிடம் நிலவத்தான் செய்கிறது.

மேலே சொன்ன ஆறு இறைகளையும் எடுத்துக்கொண்டு, முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் வழியாக பக்தி பண்ணிப் பாடிப்போற்றி இந்தத் தொடரில் பயணிக்கப் போகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இறையை எடுத்துக்கொண்டு, தீக்ஷிதரின் கிருதிகளை முன்னிருத்தி, அதிலிருந்து பக்தி செய்வதற்கான உந்துதலைப் பெற முனைவோம்.

அடுத்த பகுதியில் முமுதற் கடவுள் கணபதியைப் பாடித் துவங்க இருக்கிறோம்...

Tuesday, December 07, 2010

கபீரின் கவிதைகள் மூன்று

கபீரின் கனிமொழிகள் வலைப்பதிவு தொடங்கி நான்காண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, நண்பர் கபீரன்பன் அப்பதிவிற்காக விருந்தினர் இடுகையொன்றை இயற்றித் தருமாறு கேட்டிருந்தார். அவ்விடுகைக்காக மகான் கபீரன் கவிதைகளில் இருந்து மூன்று கவிதைகளை மொழி பெயர்க்கக் கிடைத்தது பெரும் பேறு. அவற்றை நீங்களும் கபீரின் கனிமொழிகள் வலைப்பதிவிற்கு வந்து வாசித்திட்ட வேண்டும்.
இடுகையின் சுட்டி இங்கே.
நன்றிகள்.

Friday, August 06, 2010

எது பகுத்தறிவு?

பகுத்தறிவு என்றால் பகுத்து அறியும் அறிவு. எதை பகுத்து அறிவது?
உடல் வேறு உயிர் வேறு என்று பகுத்து அறிவதே பகுத்தறிவாம்.

நம்மால் நம்ப இயலாதவற்றை 'மூட நம்பிக்கை' எனப்பெயரிட்டு, அம் மூட நம்பிக்கைகளை புறம் தள்ளுவதே - பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தான் நாம் வெகுவாகப் பார்ப்பதுண்டு. பல்லாயிரம் ஆண்டுகளாக உருவான சமூகத்தில் நம்பிக்கைகள் பல்வேறு விதமாக உருவாகுவதும், அவை பலராலும் பல்வேறு விதத்திலும் தேவையில்லாமல் பின்பற்றப்பட்டும், நம்பப்பட்டும் வருவதும் இயல்பாகும். ஒரு நம்பிக்கை எப்படி உருவாகிறது? ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் 'இது நிஜம்', என நம்பப்படுவதால். அதுவே நம்பிக்கைகளுக்கு வித்தாகி, இன்னும் பலராலும் பின்பற்றப்படுகிறது. பின்பற்றும் சிலருக்கு, அவர் பின்பற்றும் நம்பிக்கை பொய்த்திட அவர்களில் சிலர் அப்போது அதிலிருந்து வெளிவருவதும் உண்டு. அவர்களில் சிலருக்கு வேறொரு நம்பிக்கை, நம்பிக்கை ஊட்டிட, அந்த நம்பிக்கைக்கு மாறி விடுவதும் உண்டு. வேறு சிலரோ, கேள்விகள் ஏதும் எழுப்பாமல் குருட்டுத்தனமாக நம்பிக்கைகளைப் பின்பற்றுவதும் உண்டு. நம்பிக்கை என்ற பெயரால் அறியாமைக்கு ஆளாகவும் கூடாது. மூடநம்பிக்கை என்ற பெயரால் அறிவை ஒதுக்கவும் கூடாது. மூட நம்பிக்கையா, இல்லையா? கண்டு பிடிப்பது எப்படி? சமீபத்தில் 'கண்ணாடி' என்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்மணி ஒருவர் அழகாகச் சொன்னார் - "எனக்கு எந்த நம்பிக்கை பயன் தருகிறதோ, அதுவே 'என் நம்பிக்கை'. மற்றவர்கள் அதை மூடநம்பிக்கை என்றழைப்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்றார்.

அறிவியல் வளர்ச்சியினால் நிரூபிக்க அல்லது ஏற்றுக்கொள்ளப் பட இயலாதவற்றைத் தான் மூட நம்பிக்கையா இல்லையா என்றொரு விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு, இங்கு, இன்றைய அறிவியல் வளர்ச்சிதான் அதற்கு அளவுகோலாக இருக்கிறது. பல அறிஞர்களும், அறிவியல் வளர்ச்சியால் இந்த மூடநம்பிக்கைகளுக்கு ஒரு முடிவினைத் தர முடியும் என்று நம்பினார்கள், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். அறிவியிலை எப்படியாவது முன்னேற்றி எல்லா கேள்விகளுக்கும் ஒரு பரமத்துவமான பதிலினைத் தர முயன்று வருகிறார்கள்.

அறிவியல் ஆராய்சியாளர்களின் தேடுதல் ஒருபுறம் இருக்க, பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மெய்ஞானிகள், இத்தேடுதல் எல்லாவற்றிக்குமான முடிவினை தம்முள்ளேயே கண்டும், களித்தும், அவற்றை ஆராதித்தும் ஆனந்தித்தும் வருவதினை யாரும் புறம் தள்ள இயலாது. அகக்கண்களால் அவர்கள் கண்டு சொன்ன உண்மைகளின் வீச்சு என்றென்றைக்கும் நிலையானதாகவும் இருப்பது. மாறாக, புறக் கண்கள் பார்க்கும் உலகத்தேயே எல்லாம் எனக்கொள்பவர்களின் அறிவின் உண்மையான வீச்சு எள்ளளவேயாம்.

தனோடும் நின்றோங்கும் றிவொன்றே தெய்வம் என்றோதி அறியீரொ?

அகத்தனை ஆய்ந்து அறியார், தூல உடலின் சூக்கும வடிவத்தினை கண்டு கொள்ளுவதில்லை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைந்து பார்த்து 'இல்லை' என்று சொல்லி என்ன பயன்? உள்ளே ஆழ்ந்து உணர்ந்த மெய்ஞானிகள், சூக்கும வடிவங்களை உற்று நோக்கி, அவற்றின் ஆதார சக்தியினை அறிந்து சொன்னார்கள், தெளிந்து சொன்னார்கள்:
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

அதுவே, இயற்கையின் சக்தி என்பதை ஞானிகள் உணர்ந்திருந்தனர். காற்று, மழை, இடி முதலியவற்றின் இயக்க சக்தியும் தெய்வீக சக்தி என்பதை அறிந்திருந்தனர். இயற்கையினை வணங்கிய பண்டைக் காலத்தை எள்ளி நகையாடி, அது அச்சத்தினால் ஏற்பட்டது எனக் காரணம் கற்பிக்கும் சிறு மதியார் சில கணமாவது தம்மை உணர்ந்திருப்பாரா? உணர்ந்திருந்தால்தான் உண்மை அறிந்திருப்பாரே. இறை மறுப்பினையே பகுத்தறிவு என்று வழங்கிக் கொண்டதிலேயே தெரியவில்லையா இவர்களது மடமையினை.
ஒன்று பிரமம் உளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரமம் உளதுண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.

தமது உடலிலேயே சூக்கும ரூபமாய் அமைந்திருக்கும் பிரகிருதி குணங்களையும் குண காரியங்களையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள் ஜீவனின் உண்மையான வடிவினை எப்படிக் கண்டு கொள்ள இயலும்? அது பாரெங்கும் ஒளிர்விடும் பரமன், சேதனமாய் இருக்கும் தன்னில் ஒளிர்வதை எப்படிக் கண்டு இன்புற இயலும்?


(ஓவியம் நன்றி: ஹிமாலயன் அகாடமி)
சித்தினை அசித்துடன் இணைத்தாய் -
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்.
அத்தனையுலகமும் வர்ணக்களஞ்சியமாகப்
பலபல நல்லழகுகள் சமைத்தாய்.

சித்தானது, உடலான அசித்துடன் இணைந்தது. அவ்உடலை ஆலயம் என்றார்கள். அந்த ஆலையம் அமையும் இடம் தலம் அல்லது க்ஷேத்திரம் எனலாம். சூக்கும சரீரங்களும், தூல சரீரங்களும் அபரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். குண வயப்பட்ட ஜீவன், பரப்பிரகிருதி க்ஷேத்திரம் எனப்படும். உள்ளம் கடந்த இந்நிலைகளை, கட-உள் என்றார்கள் ஞானிகள். 'நான் கடவுள்' எனும் நிலையை அடைய, குணங்களைக் கடந்து, அவை மறைக்கும் உள்ளொளியினை உணர்ந்து, ஒன்றாய் இருக்கும் பரமனெனத் தெளிந்தார்கள் ஞானியர். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாக நிற்கிறது என்பதை அனுபவத்தில் அறிந்து தெளிகிறார்கள் ஞானியர். ஐம்பூதங்களின் கலவையான உலகையும், அது சமைந்திருக்கும் அண்ட சராசரங்களையும் சிதாகாசத்தில் - தன் இதயக்குகையில் கண்டு ஆனந்தக் களிப்படைவதுதான் பாரதி பாடும் "எத்தனைகோடி இன்பம்!" அன்றோ!

Thursday, July 08, 2010

எல்லாம் நீ எனில் நான் எங்கே? - கீதை (அத் 15) - பகுதி 3

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...

11. மனமயக்கம் அகன்றிட, யோக பாதையில் நடந்திட, அது மனதைத் தூய்மை பெறச் செய்திடும். மனத்தூய்மை அடையாதவர்களாலோ, என்ன முயன்றாலும் அவர்களால் இலக்கினை அடைய முடிவதில்லை. எது இலக்கு? 1) அது இன்னொரு பொருளால் ஒளிர்விக்க இயலாதது 2) அது, உயரிய நிலையை அடைந்தபின், அதிலிருந்து திரும்பிட இயலாதது 3) அதனில், ஆன்மாக்கள் எல்லாம் சிறு சிறு பகுதிகளாய் இருப்பது.

மனமது தூய்மை அடைதல் என்றால் என்ன? மனமதில் எதை நீக்க வேண்டும் தூய்மை அடைய? மனமதில், ஐம்புலங்களை துய்ப்பது நான் என்று ஏற்படும் எண்ணத்தைத் தான். பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகிய சாதனங்கள் கொண்டு, எண்ணச் சீரமைப்பு மேற்கொள்வதே யோக நெறியாம்.

அடுத்த நான்கு சுலோகங்கள், பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறான் என்பதனை எடுத்துச் சொல்கின்றன:

12. ஒளிரும் எல்லாப்பொருளும் ஒளிருவது பரமனின் ஒளியினைத்தான். ஐம்புலன் காட்டும் காட்சியானது, அக ஒளியால் புலப்படும்பொழுது தெளிவான மயக்கமற்ற காட்சி கிட்டும்.

சக்தியின் தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். மின்சார சக்தியின் வெளிப்பாடு, மின்சார பல்பில் வெளிச்சமாகவும், மின்சார விசிறியில் அதன் சுழற்சியாகவும், மின்சார உலையில் வெப்பமாகவும் வெளிப்படுவது போல, அவற்றுக்கு தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை சக்தி ஒன்றுதான். அது போலவே, உலகில் ஒளிரும் எப்பொருளும், பரமனின் சைத்தன்ய ஒளியின் வெளிப்பாடுதான்.

மேலும்,

13. பரிதியின் ஒளியினை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியிலும் பயிர்கள் வளர்வதுபோல, அகத்தில் பிரதிபலிக்கும் பரமனின் ஒளிதான் இப்பிரபஞ்சத்தினை வளர்ப்பதாம்.

இயற்கை செழித்து வளர்வதும், பரிதியின் ஒளி மற்றும் வெப்பத்தினால் தாவரங்களும் செழிப்பது போலவும், நிலவொளியினைப் பெற்றும் தாவரங்கள் வளர்வதும் - இப்படியாக, சூரியன், சந்திரன், அக்னி - என சக்தியூட்டும் அனைத்திற்கும் மூல சக்தியாக இருப்பது எல்லையிலா சைத்தன்யமாகும்.

மேலும்,
14. உணவாகவும், உணவின் சுவையாகவும் அமைந்து உடல் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் காரணமாய் அமைகிறான் பரமன்.

உண்ணும் உணவினை செரிக்கச் செய்து, அவற்றின் சத்தினை உடல் வளர்சிக்குப் பயன் படுத்திக்கொண்டு, இதரவற்றினைக் கழிக்கும் ஜீரண உறுப்புகளின் சக்தியாகவும் பரமன் இருக்கிறான்.

"அர்ஜூனா, நானே சூரியன், சந்திரன், பூமியின் இயற்கை வளங்கள்" என்றவன் தொடர்ந்து "நானே உனக்கு உணவாகும் செடிகொடிகள். நான் அவற்றை உண்பவன். நானே உன் வயிற்றின் ஜீரண சக்தியாவும் இருக்கிறேன்" என்று சொல்வதன் மூலம் - அவன் மறைமுகமாக கேட்கும் கேள்வியாக - "இதில் ஜீவனான நீ எங்கே?" என்பதும் புலனாகிறது.

மேலும், பகவான் கண்ணன் சொல்கிறான்:

15. "நானே அனைவரது இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். எல்லா வேதங்களும் பரமன் என விளக்குவதும், அவற்றைக் கற்றால் அறியப்படுவதும் நான் தான். வேதாந்தத்தின் ஆசிரியனும் நான் தான்."

இதயக்கமலத்தில் அமர்ந்தவாறு, ஆத்ம ஒளியினைப் பார்த்து, அதனொடு ஐக்கியப் படுத்திக் கொள்ளுதல் மூலம், காண்பவன், கண்ட காட்சி எனும் இரு நிலை மாறி, 'காணும் மெய்யறிவு' என்ற ஒன்று மட்டுமே மிஞ்சும்.

மெய்யியலில் 'இதயம்' எனக்குறிப்பிடப்படுவது மனத்தைத்தான். நற்பண்புகளால் செழித்து - அமைதியாகவும், விழிப்புடன் இருக்கும் மனத்தை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கும் போது, இதயத்தில் மட்டும் அமர்வதாகச் சொல்வதேன்? மனம் எனும் அங்கேதான் அவன் தன்னைத்தான் காட்டிக்கொள்கிறான். அங்கேதான் நாம் அவனை தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு கண்டு கொள்ள இயலுவதால்.

உயிரில்லாத பொருட்களிலும் அவன் இருக்கிறான்; - என்றால் ஏன் அவற்றில் அசைவில்லை, ஏன் அவை வளர்வதில்லை?
ஜீவனின் ஆன்மா பரமனின் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறது. சைத்தன்யத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அனைத்துமே பிரகிருதி மட்டுமே. பிரகிருத்தியில் சில பொருட்களில் மட்டும், சைத்தன்யம் பிரதிபலிப்பதால், அவை உயிர் மற்றும் அறிவு இருப்பதாக (இதனை 'சேதனம்' என்பார்கள்) நாம் சொல்கிறோம். பிரதிபலிக்கக் கூடியதை சூட்சுமம் என்றும், பிரதிபலிக்க இயலாதவற்றை (ஸ்)தூலம் எனவும் சொல்லலாம். நமது சூட்சும உடலும் பிரதிபலிக்கக் கூடியதால், அதனை 'சேதனம்' எனலாம். நம் மனம், சைத்தன்யத்தால் ஒளிர் விடக்கூடைய தன்மை உடையது. அவ்வொளியைப் பெற்று மனம், ஐம்பொறிகளைப் பிரகாசப் படுத்துகிறது. உயிரற்ற பொருட்களில் சூட்சும உடல் இல்லாததால், அவற்றால் சைத்தன்யத்தை பிரதிபலிக்க இயலுவதில்லை.

இவ்வாறாக, பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுறுவி வியாபித்து இருக்கிறான் என்பதை மேற்கண்ட சுலோகங்களில் பார்த்தோம். தொடர்ந்து பகவான் சொல்கிறான்:



16. இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இருகிறார்கள். ஒரு வகை - அட்சர புருஷன் - மாறுதலுக்கு உட்படாதவர்கள். இன்னொரு வகை - சர புருஷன் - மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.." என மணிவாசகர் குறிப்பிடுவது எந்த நிலையில்லா மாறுதலுக்கு உட்பட்டர்களை.
இன்னொரு வகை - ஜீவன் முக்தர்கள் - பிறவிச் சுழல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் கொல்லன் பட்டரையில் பயன்படுத்தும் "பட்டை தீட்டும் கல்" போன்றவர்கள். எத்தனை அடி விழுந்தாலும், அசையாமல் இருந்தவாறு, தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இடம் கொடுத்து - அவற்றை 'பதம்' செய்ய உதவுவார்கள்.

இந்த இரண்டு வகை புருஷர்களைக் காட்டிலும் மேலானவன் பரமன். இவ்விரு புருஷர்களுக்கும் அப்பால், மேலான நிர்குண நிலையில் நிற்பவன். ஆகையால் அவன் புருஷோத்தமன், என்பதை அடுத்த இரண்டு சுலோகங்களும் சொல்லுகின்றன:

17. பரமனே, எல்லா வடிவமும் கொண்டு உலகைப் பலவிதமாய் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸ்வரன். சர புருஷன், அட்சர புருஷன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலான புருஷோத்தமன்.

18. "அழிவிலாதன், பரமன்; அவனே புருஷோத்தமன்", என உலகிலும், வேதங்களிலும் ஓதப்படுபவன்.

19. குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

ஜீவன் அடையும் வெவ்வேறு நிலைகளை இவ்வாறாக பகுக்கலாம்:

குணங்கள் கொண்டது : ஜீவன்

குணங்கள் நீங்கிய ஜீவன் : ஜீவன் முக்தன்

ஜீவன் முக்தன் -> சகுண பிரம்மம் அடைகிறான்

சகுண பிரம்மம் -> நிர்குண பிரம்மத்துள் அடங்கும்

இந்நிலைகளை அனுபவ அறிவில் அறிபவன் மெய்ஞானி. அவன் எப்போதும் பிரம்மமன்றி வேறொன்றும் காணான்.

20. இதுவரை படித்த சுலோகங்களை மனதில் நிறுத்தி தியானித்துத் தெளிவோர் ஞானியாவர். இக்கடமையெனும் யோக நெறியில் ஈடுபடுவோர் பிறந்த மனிதப் பிறவியின் கடன் நிறைவேறப் பெறுவர்.

பரமனின் உண்மையான தன்மையை எடுத்துரைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். அதை அநுபவத்தில் அறிந்து கொள்வதே மானிடப் பிறப்பின் கடனாகவும், இலக்காகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே கீதாசாரியனின் அறிவுரையாம்.

ஓம் தத் சத்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Sunday, July 04, 2010

நான் என்பது நீ அல்லவோ : கீதை (அத் 15) - பகுதி 2

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...



7. மனிதனின் ஜீவனும், எங்கெங்கும் பரவியிருக்கும் பரமாத்மாவும் உண்மையில் ஒன்றே. குடத்தின் உள்ளேயுள்ள காற்றும், குடத்தின் வெளியே இருக்கும் காற்றும் ஒன்றே என்பது போலவே. அது பின்னமில்லாமல், ஒன்றேயென எப்போதும் எங்கெங்கும் ஒளிர் விடுகிறது. இன்னும் சிலர், இப்படியும் சொல்வார்கள்: பல்வேறு பூக்களின் பல்வேறு மகரந்தங்களில் ஈர்க்கப்பட்ட தேன் துளிகள், அதன் தனித்துவமெல்லாம் இழந்து 'தேன்' எனும் ஒற்றை அடையாளத்தைப் பெற்றது போல, பல்வேறு ஜீவன்களும் பரமன் எனும் ஒற்றை ஒளிக்கற்றையில் இணையுங்கால், தாம் தரித்துவந்த உருவம், பெயர் முதலான அனைத்தையும் இழந்து, ஒன்றாய் ஒளிருகின்றது.

பரமனின் ஒரு பகுதியான ஜீவன், உண்மையில் எல்லைகளால் குறிக்கிட இயலாதது. ஆனால் இவ்வுண்மையினை அறியாதவர் கண்களிலோ, தன்னைச் சுற்றியுள்ள உடலெனும் சுவரைத் தாண்ட இயலாமற் போகிறது. ஐம்புலன்களின் வழியாய் உணரப்படும் எந்த உணர்வும் அந்த அங்கங்களின் சக்தியாலோ அல்லது அந்தக்கரணங்களின் சக்தியோ இல்லை. பிரகிருதிக்கு உட்பட்டு, இவ்வங்கங்களின் வெளிப்பாடுகளெல்லாம், பரமனின் ஒளியின் பிரதிபலிப்பேயாம். பரமனின் சைத்தன்யம் ஏப்போதும் இந்த ஐம்புலன்களையும், மனதையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

8. அதே பரமன், இந்த ஐம்புலன்களையும், மனதையும் முடிவில் தன் பால் முழுதுமாய் ஈர்த்துக் கொள்கிறான். அது எப்போது? உடலை விட்டு உயிர் பிரியும்போது, ஐம்புலன்களையும், மனதையும் - இது வரை மனத்தில் சேர்த்து வைத்த வாசனைகளையும் கவர்ந்து கொண்டு செல்லும் - வீச்சிய காற்றில், பூத்திருக்கும் பூவின் மணம் காற்றோடு கலந்து பரவுவதுபோலவாம்!

இறப்பில், தூல உடலை விட்டு அருஉடல்(சூட்சும உடல்) பிரிகிறது. ஐம்புலன்களும், மனமும் அருஉடலில் அடங்கும். ஆகவேதான், தூல உடலில் புலன்களுக்கான அறிகுறிகள் ஏதும் அதற்கப்புறம் இருப்பதில்லை. பணிமாற்ற உத்தரவு வந்தவுடன், ஒரு அலுவலர் எப்படி, தனது பொருட்களையும், குடும்பத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு, வேறு ஊருக்கு போகிறாரோ, அது போல, அருஉடல் தனது உடமைகளான, ஐம்புலன்களும், மனதையும், மனம் சுமக்கும் வாசனைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, தான் இதுகாறும் இருந்த தூல உடலெனும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறது. பின்னர், தனக்கான இன்னொரு உடலை அடைந்தபின், தான் கட்டிக் கொண்டுவந்த மூட்டையை இறக்கி வைத்து, புற உலகை துய்க்கத் துவங்கி விடுகிறது. முற்பிறப்பிலிருந்து கொண்டு வந்த வாசனைகள் மூலமாக, கர்ம வினைகள் என்னும் வங்கிக் கணக்கு தொடரப்படுகின்றது.

9. பரம்பொருளே, தன்னொரு பகுதியினை மாயையில் ஆழ்த்தி, இப்படியொரு உலக வாழ்க்கையினைப் படைக்கிறான். ஆன்மாவிற்கு சுகங்களை அனுபவிக்கும் இயல்பு இல்லை. ஆனால், குண மயக்கங்களினால், அது ஐம்பொறிகள் மூலமாக பரமன் துய்க்கும் சுகங்களை, ஜீவனோ தான் அனுபவிப்பதாக கருதுகின்றது. இந்த மயக்கம் நீடிக்கும் வரை, இந்நிலை மாறுவதில்லை.

பரம்பொருளின் சைத்தன்ய ஒளி மனதின் புத்தியில் பிரதிபலிக்கும்போது, அதனால், ஐம்புலன்களும் ஒளிர்விக்கப் படுகின்றன. இதனால் தாம், நாம் ஆழ்ந்த கவனத்தில் இருக்கும்போது, இன்னொருவர் அருகே வந்து பேசினாலும், அவர்பால், உடனடியாக கவனத்தை திருப்ப இயலுவதில்லை. ஏனெனில், நமது கவனம் - அல்லது ஆழ்மனம் வேறிடத்தை நாடியிருக்கிறது. ஆழ்மனத்தின் மூலமாக, ஐம்புலன்களின் துணையோடு, ஜீவன் ஐம்புலன்கள் வழியாக நுகரப்படும் உணரப்படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொள்கிறது.

பரம்பொருள் நம்மில் இருந்து கொண்டே, நம்மை இயக்கிக்கொண்டே, ஐம்பொறிகள் வழியாக சுகத்தை துய்த்துக் கொண்டிருக்கையில், அப்பரமனை நாம் அன்றாட செயல்களில் ஏன் அறியாமலே இருக்கிறோம்?

10. ஏனெனில், அகத்தின் ஞானக் கண்ணால் மட்டுமே காணக்கூடயது அஃதாம். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாய் மட்டுமே நிற்கிறது என்பதை அனுபவத்தில் ஞானியர் அறிவர். அவர்களது அறிவே வற்றாத பேரறிவாம். மெய்ஞானமாம். இவ் உண்மையினை அறியாமல், பொறிகள் மூலமாக துய்க்கும் சுகங்கள் யாவையும் தான் அனுபவிப்பதாக ஜீவனும் நினைப்பதால், அன்றாடம் எல்லாச் செயல்களிலும் பரமனை, அறியாமலே காலம் கழிக்கிறோம். விளைவு? மீண்டும் மீண்டும் பிறவி எனும் மீளாச்சுழலில் சிக்கித் தவிக்கிறோம்.

இலக்கியத்தை எல்லோராலும் படித்திட இயலும். ஆனால் அதன் சுவையை சுவைத்திட, இலக்கிய ரசனை வேண்டும். எல்லோராலும் நவரத்தின நகைகளை அணிந்து கொள்ள இயலும். அதன் சரியான மதிப்பை, நகைக்கடைக்காரரால் தான் துல்லியமாக மதிப்பிட இயலும். எல்லோராலும் இசையினை கேட்க முடியும். ஆனால் இசை ரசனை இருந்தால் தான், அதை ரசித்து அனுபவிக்க முடியும். அதுபோல, உயர் ஞானம் அமையப் பெற்றால் மட்டுமே, தன்னில் உறையும் பரமனே தன்னைத் துய்க்கிறான் என்பதை அறிந்து, தான் என்னும் அகந்தை அழிந்து, எல்லையில்லா பேரின்பத்தை துய்க்க முடியும்.

எப்போது ஒருவனால் ஞானியாக முடியும்? அகக்கண்ணால் எப்போது பரமனை உணர முடியும்?
அதற்கான வழியாக பகவான் கண்ணன் சொல்கிறான் "யோகம் செய்" என்று...
அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் படித்துப் பார்ப்போம்.

Thursday, July 01, 2010

தலைகீழ் அரச மரமும் அதை வெட்டும் வழியும்

இந்த உலகத்தையும் அதில் சஞ்சரிக்கும் வாழ்க்கைகளையும் தலைகீழாய் இருக்கும் ஒரு அரசமரத்துக்கு ஒப்பாக சொல்கிறது கீதையின் பதினைந்தாவது அத்தியாயம், கொஞ்சம் படித்துப் பார்க்கலாமா?


எல்லாவற்றுக்கும் மேலான பரமனை சரண் புகுந்து யோகத்தில் இறங்குவது 'புருஷோத்தம யோகம்'. யோகமே செயல் யாவுக்கும் திறனாய் அமைவது. விசாலமான பார்வையினைத் தருவது. எங்கும் இருக்கும் கடவுளை எங்கும் காணும் திறனைத் தருவது.

----------------------------------------------------------------
1. பிரக்ருதியும், ஆன்மாவும் சேர்ந்து வானளாவிய 'அச்வதம்' எனும் அரசமரமாய் இப்பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. பிறவி, செயல், பலன், இறப்பு, மீண்டும் பிறவி, செயல் என எல்லாமும் இம்மரத்தில் அடங்கும். இம்மரத்தின் ஆணிவேரோ மேலிருந்து கீழேயாக, நிர்குண பிரமத்திடம் இருந்து வருகிறது. மேலே இருந்து வரும் வேர்களுக்குச் சமமானதாக, நிர்குணமாய் இருக்கும் பரமன், சர்குண நிலை பெற்று, ஆக்கம், நீக்கம் முதலியவற்றை செயல்படுத்துகிறான்.

இந்த மரத்தின் இலைகள் நன்நெறிகளைக் காட்டும் மறைகளுக்கு ஒப்பாகும். நன்நெறிகளால் விளையும் நற்பயன்கள் இலைகளில் இருந்து வரும் பழங்களுக்கு ஒப்பாகும். இந்த மரத்தின் சாராம்சத்தை எவன் உணர்கிறானோ, அவன் உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். மெய்ஞானத்தினை ஆணி வேருக்கு ஒப்பாகவும், அதிலிருந்து ஏற்படும் கிளை வேர்களை அஞ்ஞானத்திற்கும் ஒப்பாகவும் கொள்ளலாம். அஞ்ஞானத்தினால் மேலும் மேலும் கிளை வேர்கள் ஏற்பட்டு, ஆணி வேரிலிந்து பிரிந்து, மேலும் பலமாக இந்த மரம் பரந்து விடுகிறது.

பி.கு: தலைகீழாய் இருக்கும் இந்த மரத்தை மனிதனின் உடலுக்கு ஒப்பாகவும், மரத்தின் வேர்கள் மூளையின் அமைப்புக்கு ஒப்பாகவும் கூடச் சிலர் சொல்லுவார்கள்.

2. கிளைகள் மூலமாக குணங்கள் இலைகளைச் சென்றடையும். தான் சேர்த்து வைத்த குணங்கள் மூலமாக இலைகள் செழித்து வளர, அதனால் அந்த மரம் வளர்ந்து பெரிதாகிறது. சில கிளைகள் மேலேயும், சில கிளைகள் கீழே செல்லுவதுமாய் இருக்கின்றன. செயல்களில் தர்மச் செயல்கள், அதர்மச் செயல்கள் என இருப்பது போல. நற்செயலா, தீஞ்செயலா, என்பது 'ரஜஸ், தமஸ், சாத்வீகம்', எனும் முக்குணங்களின் கலவையால் தீர்மானிக்கப் படுகிறது.

மனித வாழ்க்கையில் தேடுதல் கிளைகளைக்கு ஒப்பு. இலைகளால் செழிக்கும் மரம் போல, வேதங்களால் உலகமும் செழிக்கிறது. மேலே இருந்து வரும் சத்தினை கீழ் நோக்கி செலுத்தி நிலத்தில் வேரூன்றும். இது மேலும் மேலும் வளர, கர்ம வினைகளால் இவ்வுலகத் தொடர்புகள் நீட்டித்து, உலக வாழ்க்கை என்னும் மரமும் செழித்து வளருகின்றது. புதுப்புது வினைகளையும் தோற்றுவிக்கின்றன.

பரவிச் செல்லும் கிளைகள் போல, வாழ்வின் பல்வேறு தேடுதல்களில் விளையும் ஆசையினால், செயல்களைப் புரிந்து, அவற்றால் பலனையும், மீண்டும் மீண்டும் செயல்களில் ஈடுபடவும் செய்கிறோம். கண் போன போக்கில் கால் போக நடக்க, மறைகள் சொல்லும் பாதையை மறந்து போனவர் வழி தடுமாறிட, கீழே போகும் கிளைகளாய், அவர்தம் அடுத்தடுத்த பிறவிகள், இன்னும் கீழான பிறப்புகளுக்கே இட்டுச் செல்கின்றது.

3. நம்மால் இந்த மரத்தின் ஆணிவேரின் ஆதியையோ, முடிவையோ காண இயலாது. பரமேஸ்வரனின் அடி, முடியினை அரியும் அயனும் தேடிக் காண இயலாதது போல, ஆணி வேரின் மூலத்தினையும், முடிவினையும் கண்டு கொள்ள இயலாது.

மேலும் மேலும், விழுதுகளால் நிலைபெற்று நிலத்தில் ஊன்றி விடுகிறது இம்மரம். குணங்களின் விளைவுகளுக்கு அடிமையாகி, மாந்தர் தம் வினைகள் பெருகிப் பெருகி, பிறவிப் பெருஞ்சுழலில் சிக்கித் தவிக்க, இதிலிருந்து அவர்கள் தப்புவதற்கான ஒரே வழி பற்றின்மையை பற்றிக்கொள்வதே. விளைவுகளில் விழுந்து விடாமல் நிஷ்காம்யமாக இருப்பதே, இம்மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கான வாள் போன்றதாகும். சூரபதுமன் மாமரமாய் நின்றதும், ஞான வேலால் அவன் வெட்டுண்டு வீழ்ந்ததையும் ஒத்து நோக்குக.

கடற்கரையில் அலைகளைப் பார்க்கிறோம். நுரையோடு மேலெழும்பிக் கீழே விழும் நீரைத்தான் அலை என்கிறோம், 'நீர்' என்று சொல்லாமல். அந்த அலையின் உருவதை அகற்றி விட்டுப் பார்த்தால், தெரிவது நீர்தானே? அதுபோல, இந்த மரத்தின் உருவத்தையும், பெயரையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இருப்பது, பரமன் மட்டுமே. இந்த மரம் நம்மை உலக வாழ்க்கை என்னும் வட்டத்திற்குள்ளும், பிறவிச் சுழலுக்குள்ளும் அடைத்து வைக்கிறது. ஆன்ம விசாரம் செய்து பார்த்தால், இந்த மரம் என்று ஒன்று உண்மையில் இல்லாமல் இருப்பது புலனாகும். அதுவரை அந்த மரம் தெரிந்து கொண்டே இருக்கும். ஆகவேதான், "பிறவிச்சுழல், என்னும் இந்த மரத்தை, பற்றின்மை என்னும் கோடாலியால் வெட்டி வீழ்த்து" என்கிறான் பகவான் கண்ணன்.

4. இம்மரத்தை வெட்டி வீழ்த்தியபின், அந்த மரம் செழித்து வளர்ந்ததற்கு காரணமான பரமனையே சரண் புகுந்திட, அதுவே மோட்சமெனும் வீடுபேறு ஆகும். பரமனின் சத்தே வேர்களை மேலிருந்து கீழாக விழுதுகளை நிலத்தில் ஊன்றச் செய்தது. இது இயற்கையான நிகழ்வுதான். செயல்களைச் செய்ய வைத்ததும் அவன் நடத்தும் நாடகத்தில்தான். நிலத்தில் ஊன்றச் செய்ய வைத்த சத்தின் மூலமான பரமனை திரும்பிப் பார்ப்பதுவே யோகமாம் - புருஷோத்தம யோகமாகும்.

அலை என்ற எண்ணம் இருக்கும் வரை நீருக்கு தன்னுடைய தனிப்பட்ட உருவம் இருக்க, அதற்கு, 'தான், தனது' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். அது நீர்தான் - அதை சுற்றி சின்னதும், பெரியதுமாய் இருக்கிற பலப்பல அலைகளும், எல்லாமும், இந்தக் கடல் முழுதும் வியாபித்து இருக்கும் நீரெல்லாம் - ஒன்றேயான ஒட்டுமொத்த கடல்நீர் தான் என்பது உணர - அதற்கு அகந்தையற்ற நிலையில் - அது பரமன் எனும் பேரின்பக் களிப்பினைப் பருகுவதற்கான நிலைக்குத் தயாராகின்றது.

5. உயர்வான இந்நிலையினை அடைவதற்கான தகுதி என்ன? பகவான் கண்ணன் சொல்கிறான்: தானெனும் அகந்தை, தானெனும் மயக்கம், தானெனும் பற்று ஆகிவற்றை நீக்கி நிற்பதேயாம். அக்குணங்களைப் பெற்றவன், ஆத்ம ஞானத்தில் நிற்க, இன்ப துன்பங்கள் தரும் விருப்பு வெறுப்புகளைக் கடந்து நிற்க, அப்பேறு பெற்றவன் பரமபதம் என்னும் முடிவில்லா நிலையினை அடைகிறான்.

6. உயர்வான இந்நிலை எப்படி இருக்கும்? பரமபதம் என்னும் நிலைக்குச் சென்றவர், அவ்வின்ப நிலையில் இருந்து திரும்பிவரா நிலையாம் அது. (கண்டவர் விண்டிலர்). அவ்விடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளிர்ந்திட இயலா. ஏனெனில், அவ்விடம், எவ்வொளிரும் பொருளுக்கும் மூலமாகவும், எல்லா ஒளி தரும் பொருளைக்காட்டிலும் பற்பல மடங்குகள் ஒளிர்வதான பரஞ்சோதியாம். எத்தனையோ மில்லியன் மைல்கள் கடந்து வர இயன்ற சூரியஒளியானாலும், புறக்கண்களை மறைக்கும் அளவிற்கு அது எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், அதனால் அகத்தினை ஒளிர்விக்க இயலுமா என்ன? அதை பரமனின் அருள் ஒளியால் மட்டுமே இயலும்.


----
இவ்வாறாக, 15ஆம் அத்தியாயத்தின் முதல் ஆறு சுலோகங்களின் பொருள் விளக்கத்தினைப் படித்துப் பார்த்தோம். தொடர்ந்தும் பார்ப்போம்.
------