Showing posts with label தாலாட்டு. Show all posts
Showing posts with label தாலாட்டு. Show all posts

Monday, October 13, 2008

ஆ!

ஆ!, அன்பர்களுக்கு இந்த தலைப்பு, பிடித்திருப்பதால்(!), இதனையே வைத்துவிடுகிறேன்!
ஆ! = ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

இந்த அழகான தாலாட்டுப்பாட்டைப் பார்க்கலாமா?

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே, பொக்கிஷமே, கண்மணியே, கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

யாரடித்தா நீ அழுதாய், அழுதகண்ணில் நீர் ததும்ப,
பேருரைத்தால் நான், பெருவிலங்கு பூட்டிடுவேன்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அத்தை அடித்தாளோ, உனக்கு அமுதூட்டும் கையாலே
சற்றே மனம்பொறுத்து சந்திரனே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பாட்டி அடித்தாளோ, உனக்கு பால் வார்க்கும் கையாலே
கூப்பிட்டு நான் கேட்பேன், குஞ்சரமே கண் வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

மாமி அடித்தாளோ, உனக்கு மை தீட்டும் கையாலே
சாமி, மனம் பொறுத்து, சண்முகனே கண் வளராய்!
(சாமி, மனம் பொறுத்து, அம்பிகையே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

தமையன் அடித்தானோ, உன்னை தயிரூட்டும் கையாலே
நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் கோமகனே!
(நிமிடம் மனம் பொறுத்து நித்திரை செய் பூமகளே!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அக்காள் அடித்தாளோ, உன்னை அம்மான்மார் வைதாரோ
விக்கவே தேம்புவதேன் வித்தகனே கண் வளராய்!
(விக்கவே தேம்புவதேன் வித்தகியே கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

பெற்றோர் அடித்தாரோ அறியாமல் செய்தாரோ
எங்கள் ஆரமுதே கண்வளராய்!

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

அழாதே, அழாதே! எங்கள் அரசே நீ
தொழுவார் பலர் இருக்க துரையே நீ கண் வளராய்!
(அழாதே ,அழாதே! எங்கள் அரசி நீ
தொழுவார் பலர் இருக்க தூயவளே நீ கண் வளராய்!)

ஆராரோ, அரீராரோ! ஆராரோ, அரீராரோ!

(அடைப்புக் குறியில் இருப்பவை, பெண் குழந்தைக்கான மாற்றங்கள்!)

பாடுபவர்: திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ

Monday, May 26, 2008

தாலாட்டு : கண்ணன் என் கண்மணி

விருத்தம் பாடி பின்னர் தொடர்ந்து கிருதியினைப் பாடுவது நமது இசையில் ஒரு மரபு.
அதன்படி இங்கொரு விருத்தமும், பாடலும் பார்ப்போமா?
விருத்தம் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க, தொடர்ந்து வரும் உருப்படியோ இன்னொருவரால் இயற்றப்பட்டிருக்கும். இரண்டுக்கும் இடையே பாடகரால் நெய்யப்படும் தொடர்புதான் இருக்கிறதே, அது இயற்கையானது போலவே அமைந்திருப்பின், அது கேட்பவரை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும்!

அப்படிப்பட்ட ஒரு பாடலை இங்கு திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிடக் கேட்கலாம். முதலில் பாடும் விருத்தமானது, திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டது. இந்த செய்யுள் உட்பட, பாணரின் பத்து செய்யுள்கள் நாலயிர திவ்ய பிரபந்தத்தினில் அடங்கும். "கொண்டல் வண்ணனை, கோவலனை, வெண்ணை உண்ட வாயனை" என கண்ணனை விளித்த பெருந்தகையாளார் இவர்.

கண்ணன் வெண்ணை உண்பான் சரி, ஆனால், அவன் ஏழு உலகங்களையும் உண்டது எப்போது?
ஆகா, பரம்பொருளாய் எங்கெங்கும் நிறைந்திருப்பதைத் தான் அன்று கண்டாளோ அன்னை யசோதை.
எழில் நிறை நீல மேனியனின் வடிவழகு எல்லையில்லாமல் எங்கும் நிறைந்து பரம்பொருளாக நிரவி இருக்கிறது.
இப்போது இந்த ஆலமரத்திலை பாலகன் அழகில் லயித்திட, என் நெஞ்சமெல்லாம் அவன் நீலமேனி அழகும் நிறைந்திட,
ஐயோ, அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!,
அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!

விருத்தம்:

இயற்றியவர் : திருப்பாணாழ்வார்

ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும்
எழில் நீல மேனி...முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ...
எழில் நீல மேனி அம்மா...
நிறை கொண்டதென்
நெஞ்சினையே...நெஞ்சினையே... நெஞ்சினையே...
கண்ணா...கண்ணா...
தாலேலோ...
தா லே லோ...
தாலேலோ...


இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?

கண்ணே என் கண்மணியே!

(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)

இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!

பாடல்:

ராகம்: குறிஞ்சி
தாளம்: திச்ரஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)

தொடுப்பு
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே
தாலோ தாலேலோ....

முடிப்பு
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே
தாலோ தாலேலோ....

Friday, May 23, 2008

ஜோ ஜோ ராமா ஜோ ஜோ!

இராமனுக்கு தாலாட்டுப்பாடும் ஸ்ரீஇராம ஹிருதயம் நிறையும் தியாகராஜர் தாலாட்டுகிறார்!
தன் நெஞ்சம் முழுதும் நிறையும் அன்பின் நிறைவில் தாலாட்டு பாடுகிறார்!
கேட்போமா இந்த இதயம் இனிக்கும் தாலேலோவை!

பல்லவி

ஜோ ஜோ ராமா ஆனந்த
கன ஜோ ஜோ ராமா ராமா
(ஆனந்த வடிவோனே தாலேலோ...)

சரணம்
(1)
ஜோ ஜோ தசரத பால ராமா
(தசரத மைந்தா தாலேலோ...)
ஜோ ஜோ பூஜா லோல ராமா
(நிலமகள் காதலா தாலேலோ...)

(2)
ஜோ ஜோ ரகு குல திலக ராமா
(ரகுகுல திலகனே தாலோலோ...)
ஜோ ஜோ குடில தராலக ராமா
(சுருள் முடியானே தாலேலோ...)

(3)
ஜோ ஜோ நிர்குண ரூப ராமா
(குணங்களுக்கு அப்பாற்பட்டவனே தாலேலோ...)
ஜோ ஜோ சுகுண கலாப ராமா
(எல்லா நற்குணங்களும் நிறைந்தவனே தாலேலோ...)

(4)
ஜோ ஜோ ரவி சசி நயன ராமா
(சூரியனும் சந்திரனும் கண்ணானவனே தாலேலோ...)
ஜோ ஜோ பணி வர ஸயன ராமா
(அரவணையில் சயனித்தருப்பவனே தாலேலோ...)

(5)
ஜோ ஜோ ம்ருது தர பாஷ ராமா
(இன்மொழியானே தாலேலோ...)
ஜோ ஜோ மஞ்சுள வேஷ ராமா
(இனிய திரு உருவத்தானே தாலேலோ...)

(6)
ஜோ ஜோ த்யாகராஜார்சித ராமா
(தியாகராஜன் அர்சிக்கும் ராமனே தாலேலோ...)
ஜோ ஜோ பக்த ஸமாஜ ராமா ஜோ ஜோ!
(பக்தர்கள் குழுமத்தில் நிறை ராமனே தாலேலோ...)

இராகம் : ரீதி கௌளை (இந்த ராகம் ஞாபகம் இருக்கா, 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' என Dr. பாலமுரளி கிருஷ்ணா பாடுவாரே!, அதே ராகம்.)

அருணா சாய்ராம் அவர்கள் இங்கே பாடியிருப்பதைக் கேட்கலாம்.