Showing posts with label வேதாத்திரி மகரிஷி. Show all posts
Showing posts with label வேதாத்திரி மகரிஷி. Show all posts

Saturday, April 16, 2011

கறை கரைந்து காணும் தெய்வம்!

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓரமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்.
நித்தம் நித்தம் உயிருடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வளவு அழகான கவியாய் வடித்திருக்கிறார் பேருண்மையை!

எண்ணம் என்ற மூலம் என்னிடத்தில் இருக்கும் வரை அது எனது எனது என்று என்னையே நினைத்து, என்னைச் சுற்றி வருகிறது.
ஆனால் அதே எண்ணத்தை என்பால் அகற்றி எல்லாமுமான இறையவனை நினைக்கும்போது...
"ஓரு அமைதி" கிட்டுகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்பின் கிட்டும் அவ்வமைதி பேரமைதி.

அந்த அமைதி நிலையில் நிலைத்து நிற்க. "எழுமின், விழிமின்" என நிலையில் விழிப்புடன், வழிமேல் விழி வைத்து நிற்க, தானாக ஏற்படும் நிறைநிலை. மெய்பொருள் யாதென உணந்திடும் தற்செயலும் இறை செயலேயாம்.

ஒருமுறை அந்நிலையை அடைந்து விட்டால், அந்நிலையை அடுத்து பழகப்பழக, காணும் காட்சியும், நுகரும் நாற்றமும், கேட்கும் ஒலியும் என எல்லாவற்றிலும் நந்தலாலா.

பின் எல்லாக் கறைகளும் களைந்தாயிற்று என்றால், தன் முனைப்பு தானாய்க் கரைந்து போகும்.
கண்ணுக்கினியவனை கண்ணாறக் கண்டு கைக்கொளலாம்!

Saturday, June 14, 2008

சாமியே சரணம் ஐயப்பா! : ஜேசுதாஸ் & ஒக்கேனக்கல்

இறைவனை பிரார்த்திப்பது நமது மனித இனத்திற்கே கிடைத்த பெரும் பேறு. அந்தப் பேறு கிட்டி இருப்பினும், அவனை என்ன கேட்பது? ஒரு வரம் கேட்பின், அவன் வேறெதையும் எதிர்பார்ப்போனோ? துன்பம் நேருங்கால் அதைத் துடைக்குமாறு கிடைக்கலாம். நல்ல பண்பு பெற்று நல்வாழ்வு வாழும்போது, நாதன் அருள் இருந்து, நற்செயல்களேயே செய்யும் போது, வேறெந்த துன்பமும் அண்டாதபோது வேறென்ன கேட்கலாம்? நம் அருகில் இருப்பவர்கள் நலமுடன் வாழ வேண்டலாம். ஏன் இந்த உலகமே நலமாக வாழப் பிரார்த்தனை செய்யலாம்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் வரிகளில்:

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய் ஞான ஒளி வீசட்டும்
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


இங்கே ஒருவர் சபரி ஐயப்பனை என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்:

எடுப்பு

என்ன வரம் கேட்பேன் நானே

என் மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே,

என்ன வரம் கேட்பேன் நானே?

புகழை நான் வேண்டவா, பொருளை நான் வேண்டவா,

நல்ல பண்பை நான் வேண்டவா,

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே,

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

தொடுப்பு

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகணும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியணும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கணும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டணும்,

மனிதனாகப் பிறந்து விட்டேன், எப்படி நான் வாழணும்?

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கணும்.

மதங்கள் எனும் மலைகள், ஆதி எனும் தடைகள் கடந்திட

ஐயன் உன் அருளினை நான் பெறணும்.

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

முடிப்பு
பறவையாக நான் பிறந்தால், கருடனாக ஆகணும்

திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகணும்

மலராக நான் பிறந்தால், கமலமாகப் பூக்கணும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டணும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடணும்

பேரசை என்றபோதும் ஐயன் இதை நிறைவேற்றணும்:

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணமே!

(என்ன வரம், வேறென்ன வரம் ...)

என்ன வரம் கேட்பேன் நானே?


சாமியே சரணம் ஐயப்பா!

இன்னொரு விஷயம்:
சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒக்கேனக்கல் பிரச்சனை சூடாகி, விஷமிகளின் வன்மச் செயலால் நம் மனம் புண்பட்டபோது, ஜேசுதாஸ் அவர்களுக்கு பங்களூர் ராம் சேவா மண்டலியில் கச்சேரி. கச்சேரியில் கன்னடர்களுக்கு மிகவும் விருப்பமான கிருஷ்ணா நீ பேகனே பாரோ பாடலைப் பாடி முடித்த கையோடு, அவர்களுக்கு நல்லதொரு அறிவுரையும் வழங்கினாரே பார்க்கலாம்! நீங்களே கேளுங்கள்:

ஜேசுதாஸ்-அறிவுரை

Saturday, November 10, 2007

எங்கிருக்கிறான் இறைவன்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு முதன் முதலில் சொல்லித்தந்த வரிகள் - இந்த வள்ளலாரின் வைர வரிகள் தான். ஏதோ ஒரு வகுப்பு, எதுவென்று நினைவில்லை - தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்:


எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.

அந்த வயதில், கடவுள் என்றால் படங்களில் பார்த்த சிவனோ, முருகனோ, திருமாலோ, விநாயகனோ - இப்படி இன்னும் பலரின் திருமுகங்கள் தான் நினைவுக்கு வரும். அந்தப் பருவத்தில் - இப்படி யார் ஒருவரின் பெயரும் இல்லாமல், இறைவன் இவன் என்று சொன்ன அந்த வரிகள் என் கவனத்தை கயிற்றால் கட்டி இழுத்தன போலும். எளிதான அந்த வரிகளின் சக்தி இன்றைக்கும் பிரம்மிப்பாகவே இருக்கிறது.

யார் இறைவன் என்றெல்லோரும் தேடி அலைகின்றார். ஓராயிரக்கணக்கில் கதைகள் சொல்லி எப்படியெல்லாமோ அவனைப் பற்றி பலரும் சொல்லி விட்டார். எனினும் அந்த தேடல் தீர்ந்த பாடில்லை. மண்ணில் எத்தனை மூலை முடிக்கிலும் தேடினாலும் அவன் மாயவனாகவே இருக்கிறான். ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. மனிதர் தேடும் வேறு எந்த பொருளுக்கும் இப்படி ஒரு தனித்துவமான குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவது ஒரு குறிப்பிட்ட உருவத்தில் இறைவனைக் குறிக்குவது போலாகாதா? அப்படி குறுக்கப்பட்ட கடவுளும் கடவுளாகுமோ என்று கேட்கலாம். கடவுளே இவ்வுலகம். அனைத்து உருவங்களும் அவர் உருவங்களே. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் அவரை வழிபடலாம். கீதையில், இறைவன் ஸ்ரீகிருஷ்ண உருவத்தில் அர்ஜூனனுக்கு இவ்வாறு உபதேசம் சொல்கிறார். "இறைவனான என்னிடம் இருந்தே அனைத்தும் தோன்றுகினறன, நிலை பெறுகின்றன, ஒடுங்குகின்றன".

எங்கும், என்றும், எவ்வுயிரும் எல்லாமும் ஆன இறை அவன் பிரதிபலிக்கும் இடங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பரம்பொருளான சைதன்யமோ அளவற்றது. எல்லையில்லாதது. அதே சைதன்யம் என்னும் பேரறிவுதான் (Super Consciousness), மேலே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதா உபதேசத்தில் 'என்னிடம் இருந்து' என்ற சொல்லாக மலருகிறது. அதே சைதன்யம்தான் நம்மையும் 'நான்' எனச் சொல்ல வைக்கிறது. நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்களும் நானும் கூடச் சொல்லலாம். நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் என் அவையங்கள் அல்ல, நான் புத்தியா, நான் ஒன்றுமில்லாமல் சூன்யமா, பின் நான் யார், என்ற சுய வினவலின் மூலமாக அறிந்து, அந்த அறிவின் மூலமாக நான் அந்த சைதன்யமாகவே இருக்கிறேன் என்று உணர்ந்து சொல்லலாம்.

வேதாத்திரி மகரிஷி அழகான எடுத்துக்காட்டு ஒன்று தருவார். எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தினை, ஒரு பெருங்கடலுக்கு ஒப்பாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒரு குடுவையில் நீர் முகர்ந்து கொண்டால், அந்த குடுவை நீர்தான் நம் ஜீவன். குடுவை நீர் மீண்டும் கடலில் கலக்கும்வரை, அது வெறும் நீர்தான். கடலில் கலந்த பின்னோ அது கடல். கடலில் எந்தப் பகுதி நீர் இந்தக் குடுவை நீர் எனப்பிரித்தறிய இயலாது.அதுபோலவே ஜீவன் பரமனை அடைந்த பின்னரும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி கடலின் அலைகளுடன் ஒப்பிடுவார். பெருங்கடலில் சிறிய அலை ஒன்று கரையை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் அழிந்து விடுவேனே என்ற வருத்ததுடன். "நான் அழியுமுன் என்னை காப்பாற்ற யாருமில்லையா" என ஓலமிடுகிறது. அதைக்கேட்டு அருகில் வந்த பேரலை ஒன்று, சிற்றலையிடம், "வருத்தப்படாதே, கண நேரமே தோன்றி மறையும் அலையல்ல நீ, இந்த பெருங்கடல் நீ என உணர்வாய். உன்னையும், என்னையும், ஏனைய அலைகளையும் படைத்த கடவுள் இந்த கடலே. உன்னில், என்னில் மற்றும் ஏனைய அலைகளிலும் இந்த கடலே நீராக வியாபித்து இருக்கிறது. நீயும் இந்தக் கடலும் வேறல்ல, அனைவரும் இந்தக் கடலில்தான் இறுதியில் ஒடுங்குவோம்." என்று கூறுகிறது.

இறைவனும் நாமும் உண்மையில் அளவற்ற சைதன்யம்தான். சைதன்யமான நம்மிடத்தில்தான் அனைத்துலகமும் இருக்கிறது. அதைப்படைத்த இறைவனும் இருக்கிறான்.