இங்க பார்க்கப் போகிற இரண்டு பாடல்களும் ஒரே ராகம் தான். இரண்டுமே காம்போதி இராகம் தான். இரண்டு பாடல்களை இயற்றியவரும் ஒருவர் தான் - பாபநாசம் சிவன் அவர்கள். இந்த இரண்டு பாடலிலும் "இராமதாசன்" அல்லது "சௌரிராஜன்" ஆகிய அவருடைய இயற்றியவர் முத்திரைகளைக் காணோம். ஆனா இந்த பாடல்களில் சொல்நயம் தான் எவ்வளவு அருமையாக அமைஞ்சு இருக்கு! இரண்டு பாடல்களிலும் சரளமான சொல்லாடல்கள் வந்து விழுந்திருக்கு!
முதல் பாடல்:
எடுப்பு
ஆடும் தெய்வம் நீ அருள்வாய் இடது பாதம் தூக்கி (ஆடும்)
முடிப்பு
சுபம் சேர் காளியுடன் ஆடிப் படு தோல்வி அஞ்சி திருச் செவியில் அணிந்த மணித்தோடு விழுந்ததாக மாயம் காட்டியும் தொழும் பதம் உயரத் தூக்கியும் – விரி பிரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின் திருப் பதம் தஞ்சம் என உன்னை அடைந்தேன் பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே சபை நடுவில் தத்திமி என்று (ஆடும்)
உக்கர கோலத்தில் உலகை உலுக்கும் காளியுடனான ஆட்டத்தில்
ஊர்த்துவ தாண்டவம் காட்ட திருச்செவி வரை தூக்கிய காலானது!
எப்போதும் விரிந்து கொண்டே இருக்கும் இப்பிரபஞ்சம் முழுதையும் ஆட்டுவிக்கும் ஈசனது திருப்பாதமானது!
இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியன் பாடிட இங்கு கேட்கலாம்:
அடுத்த பாடல் :
எடுப்பு காணக் கண் கோடி வேண்டும்- கபாலியின் பவனி காணக் கண் கோடி வேண்டும் (காணக்) தொடுப்பு மாணிக்கம் வைரம் முதல் நவரத்னாபரணமும் மணமார் பற்பல மலர் மாலைகளும் முகமும் மதியோடு தாராகணம் நிறையும் அந்தி வானமோ கமலவனமோ என மனம் மயங்க அகளங்க அங்கம் யாவும்- இலங்க அபாங்க அருள் மழை பொழி பவனி (காணக்) முடிப்பு மாலோடையன் பணியும் மண்ணும் விண்ணும் பரவும் மறை ஆகமன் துதிக்கும் இறைவன் அருள் பெறவே காலம் செல்லுமுன் கனதனமும் தந்தார்க்கு நன்றி கருதிக் கண்ணாரக் கன்டுள்ளுருகிப் பணியப் பலர் காண அறுமுகனும் கணபதியும் சண்டேச்வரனும் சிவகணமும் தொடரக்கலை வாணி திருவும் பணி கற்பக நாயகி வாமன் அதிகார நந்தி சேவைதனைக் (காணக்) களை நிறை திருக்கபாலி மயிலை வீதிகளில் பவனி வரும் காட்சியானது கண்ணாறக் கண்டாலும் போதாது, கண்ணாயிரம் இருந்தாலும் போதாது. பாபநாசம் சிவனின் வர்ணனை தான் என்னே! தரித்த பிறை மதியோடு, விண்மீன் கூட்டங்களையும் காண - இது என்ன அந்தி வானமோ என மயங்கியதில் விந்தை இல்லை. கணபதி முதல் சண்டிகேஸ்வரர் வரை சிவகணங்கள் தொடர கற்பகாம்பாளுடன் பவனி வரும் காட்சியைப் இப்பாடலில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்! இப்பாடலை மதுரை மணி ஐயர் பாடிட இங்கு கேட்கலாம்:
சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே! சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.
பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய "மா ரமணன் உமா ரமணன்" ஹிந்தோள இராகப் பாடல்.
சமீபத்தில் தீபாவளியின் கதை என்ன என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தீபாவளி இராமன் அயோத்தி திரும்பி முடிசூட்டிய நாளென்றார். இன்னொருவர், கண்ணன் நரகாசுரனை வதைத்த நாள் என்றார். அது எப்படி இரண்டு தொடர்பில்லாத இதிகாசங்களிலும் தொட்டுத் தொடர்ந்தது இந்த தீபாவளி என இருவரும் வியந்தனர்.
தீபாவளி கொண்டாடுவதற்கு அவரவர் மாநிலத்தில் அவரவர்க்கு காரணங்கள் வேறாக இருக்கலாம். அது எல்லோருக்கும் இருள் முடிந்து நன்மைகள் பிறக்கும் நன்னாளாக அமைய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் அமைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இந்த பதிவில் மத்யமாவதி இராகத்தில் தீபாவளிப் பாட்டொன்று பார்க்கலாமா! பாடலில் மத்யமாவதியின் அம்சம் அப்படி அருமையாக வெளிப்படும்படி இயற்றியிருப்பார் பாபநாசம் சிவன் அவர்கள். பூமி பிராட்டி தோரோட்ட & மங்கள தீபாவளி ஒளி - என்ற இடங்களில் எதுகை நயம் அழகாய் மிளிரும்!
இராகம் : மத்யமாவதி தாளம் : ஆதி இயற்றியவர் : பாபநாசம் சிவன் பாடுபவர் : காயத்ரி வெங்கட்ராகவன்
பாபநாசம் சிவன் அவர்களின் இரண்டு அழகான பாடல்கள் துணையுடன்! முதலில் தேவி நீயே துணை என்று, அங்கயற்கண்ணியாம் அம்மை உமையன்னையைப் பாடும் பாடல். இவள் புவன சுந்தரி, புவனேஸ்வரி। மலையத்வஜன் மாதவத்தின் பலனாய் பிறந்தவள்। காஞ்சனமாலை புதல்வி. அமுதாய் இனிக்கும் செந்தமிழ் வளர்த்த தேவி நீயே துணை!
பாடல் : தேவி நீயே துணை இராகம்: கீரவாணி இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இப்பாடலுக்கான சுரக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
எடுப்பு தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி...)
நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது! இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்! ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா!
இராகம் : சரஸ்வதி தாளம்: ஆதி இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
எடுப்பு சரஸ்வதி, தயைநிதி - நீ கதி, தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!
எம்பெருமானின் திருவடியில் அபயம் பெறும் பேறன்றி வேறென்ன வேண்டும். அபயம் என வந்தோர்க்கு அருள் தரும் தீன சரண்யன், விபீடனன் போல என்னையும் காப்பான் எனத் திண்ணமாய் இருப்பேன். திகழொளி தருவன். அவன் திருமேனிக்குத் திருமங்கள நீராட்டுப் பாடிட, செங்கமலக் கண்ணன், செம்மை சேர்ப்பான்.
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தமை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் வாசமாமலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கெல்லாம் தேசமாய்த் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே
- திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி.
திரு நீராட்டு முடிந்து, அடுத்து அலங்காரம் செய்யலாமா. நம்ம தமிழ்த்தியாகய்யா, பாபநாசம் சிவன் ஹம்சாநந்தியில் அழகான கீர்த்தனை வடிச்சிருக்காரே, அதைக் கேட்டவாரு, அலங்காரப் பிரியனை, அலங்கரித்து, அகமகிழ்வோமா!
முன்னம், இங்கு ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பாடிட, குலசேகர ஆழ்வார் திருமொழிகளில் இருந்து மூன்று பாசுரங்களைக் கேட்டோம் அல்லவா, அதில் மூன்றாவது பாசுரம் ஹம்சாநந்தி இராகமாக அமைந்திருந்தது. விருத்தம் பாடிய பின்னர், தொடர்ந்து இந்தக் கிருதியினை, அதே ஹம்சாநந்தி இராகத்தில் இங்கே தொடருகிறார்கள், கேட்கவும்:
இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.
பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ! இராகம் : மயாமாளவகௌளை
மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.
இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.
12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896) பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை இராகம் : தேவமனோகரி இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.
13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891) இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.
இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.
பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து) இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன் மயில் வாகனன், ஒரு கானவன் - எனப் புனத்தைக் காக்கும் வள்ளி தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.
தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத் தீமையாம் இருளினில் காமலாகிரியும் மீறுதே.
மார வேளினாலே கோர மனகாம் வாதையே எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி வாட்டம் தீர் குகனைக் கூட்டி வாடியடி கோதையே!
(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)
14. பாபநாசன் சிவன் (1890 - 1973) 'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.
(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.) இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.
கண்ணனைப் பாடுவதென்றாலே, எப்போதுமே சொல்லிலடங்கா சுகம். கண்ணன் உருவம் என்றதுமே, நமக்கு பற்பலத் தோன்றும். ஒன்றா, இரண்டா, நொடியில் சொல்லி முடிக்க. ஓராயிரம் வேண்டுமே!. எதைச்சொல்ல, எதை விட! காற்பாத விரலை வாயிலே சுவைக்கும் ஆலிலைக் கண்ணன் முதல், பார்த்தசாரதியாய், கர்மயோகம் உரைக்கும் கண்ணன் வரை, அவன் புரிந்த விந்தைகள்தான் எத்தனை, எத்தனை!. அவ்விந்தைகளில் மயங்கி, அவன் நினைவன்றி வேறொன்றும் அறியா கோபியர் போல், அவன் நினைவில் திளைத்திடும் சாதகம் போல் வேறொன்றோ, சொல் மனமே!.
இங்கே, பாபநாசம் சிவன் அவர்கள், மிக எளிதாக, கண்ணனைப் பாடுகிறார் பாருங்கள். கண்ணன் பாடலுக்கு, கர்ணரஞ்சனி இராகம்!
இப்பாடலை திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.
இம்முறை, பாடலுக்கு விளக்கம் சொல்லும் இன்பத்தை, உங்களிடமே விட்டுவிடுகிறேன்!. வாருங்கள் அன்பர்களே!. பாடல் வரிகளுக்கு, தங்கள் விளக்கம் வேண்டும். குறிப்பாக - கானவிலோலன், கௌஸ்துப மாலன், கனகாம்பரதர வனமாலாதரன், சியாமள ரூபன், சரசிஜ நேத்ரன், இப்படியெல்லாம், சிவனார் புகழ்வதென் பொருளென்னவோ!. ஒருவரிப் பொருள்தான் என்றில்லை, கதையாக இருந்தாலும் சொல்லலாம்!
சில சமயங்களில், இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான், என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில், எளிய, இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனதும், இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும், மனது அமைதி அடையும். அகம் ஆதாரமானவனின் அருளில் திளைக்கும். இந்த இடுகையும் ஒரு கணேச சத்சங்கம் தான்!
ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்படித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன். வாயிற் காப்போன். மூலாதாரத்திற்கு கீழே உள்ள சக்கரங்களில் ஆன்ம சக்தி விரைந்தோடாமல், மேலே மேலே மட்டும் எழுப்பிட துணை நிற்பவன்.
கணேசனை, வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத, சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன். இந்த சதுர்த்தி தினத்தில், சங்கர பாலனுக்கு பாடல்கள் பாடி, நன்றி செலுத்துவோம்.
பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.
பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல், நமது பாராம்பரிய சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி. சுமார் மூன்று வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா. அது இன்னமும் மனதை அகலாமல் நிறைந்திருப்பதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.
வாதாபி கணபதிம் - இங்கே எம்.எஸ் அம்மா பாடிடக் கேட்கலாம்:
பாடல் வரிகள் மற்றும் ஸ்வர நோட்ஸ்கள் திரு.சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது. இம்மின்நூலை தரவிறக்கிக் கொண்டு நீங்களும் பாடிப் பழகலாமே!
இந்தப் பாடலில், தீக்ஷிதர் சுவாமிகள், 'ஹம்சத்வனி ஹே பூஷித...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!. எத்தனை சிறப்பு பாருங்கள் இந்த இராகத்திற்கு. எனவேதான், பல கணபதி கிருதிகள், ஹம்சத்வனி இராகத்தில் அமைந்திருக்கின்றன.
தமிழில், பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த கணபதி துதிப் பாடலாகும்.
பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:
ஹம்சத்வனி ராகம், கல்யாணி ராகத்தைப்போலவே, மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!
கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.
அடுத்தாக இந்த ஸ்ரீரஞ்சனி இராகக் கீர்த்தனை - எனக்கு மிகவும் பிடித்த பாடல் - பத்ம பூஷன் திரு.ஜேசுதாஸ் பாடியுள்ள - "கஜவதனா கருணா சதனா..." பாடல். இதுவும் பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்:
எடுப்பு கஜவதனா கருணா சதனா சங்கரபாலா லம்போதர சுந்தர
தொடுப்பு அகனமரேந்திரனும் முனிவரும் பணி பங்கஜ சரணம் சரணம் சரணம்
முடிப்பு நீயே மூவுலகிற்கு ஆதாரம் நீயே சிவாகம மந்திர சாரம் நீயே வாழ்வின் என் ஜீவாதாரம் நீயருள்வாய் ஓம்காராப் பொருளே!
தமிழ் தியாகராஜர் எனப்போற்றப்படும் திரு. பாபநாசம் சிவன் அவர்களின் ஆபோகி இராக வர்ணம் தனை இங்கே பார்க்கப்போகிறோம்.
வர்ணம் : இதனை கச்சேரியின் துவக்கத்தில் பாடுவது வழக்கம். வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவியினைத் தொடர்ந்து முக்தாயி ஸ்வரங்கள் இருக்கும். அதைத் தொடர்ந்து சரணம் இரண்டு அல்லது மூன்று கால அளவில் வாசிக்கப்படும். இவற்றுடன் சிட்டாயி ஸ்வரங்களும் இருக்கும். சரணத்தில் ஒரே ஒரு வரி தான் இருக்கும். அதனையே வெவ்வேறு கால அளவிலும் வாசிக்க வேண்டும். இசைக் கலைஞருக்கு, அது நல்லதொரு பயிற்சியினைத் தருவதற்காக வர்ணத்துடன் கச்சேரியினைத் துவங்குவதை வழக்கமாக கொண்டார்கள் போலும்.
இந்தப் பாடலில் வரிகளின் வர்ணங்களும் மிகப் பொலிவு. நீங்களே பாருங்களேன், வார்த்தைகள் வர்ண ஜாலங்கள் புரிகின்றன:
இராகம்: ஆபோகி தாளம் : ஆதி
பல்லவி தஞ்சம் என்றாலே நெஞ்சம் அருள் சுரந்தே வலிய தண்முகில் போல வந்து அஞ்சேல் என்று உவந்தருளும் அய்யா,
அனுபல்லவி வஞ்சம் கொண்டோர்போல வன்மம் கொண்டே மிகமனம் வருந்தும் என்மேல் அருள் சிறிதும் இன்றி மறந்த விந்தை என்னென்பேன் அய்யா?
முக்தாயி ஸ்வரம்
தா ஸ் ஸ் த ம கா ம க ம க ரீ க ம க ரீ ஸ் ரீ த ஸ் ரீ ......
(தஞ்சம்...)
சரணம்
உயர் மாதவர்பணி கபாலி, ஆள மனமும் உண்டோ இலையோ சொல்?
(தஞ்சம்...)
திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கே கேட்கலாம்.
90 களில் இறுதியில் நான் பணியில் சேர்ந்தபின் மும்பையில் ஆடியோ கேசட் கடைக்கு தேடிப்போய் வாங்கிக் கேட்ட ஒலித்தொகுப்பான 'குறிஞ்சி' யில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று இது. இந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களும் அற்புதமான நித்தலங்கள். நித்யஸ்ரீ அவர்களின் குரலோ கேட்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் இனிமை நிறைந்தது. இதற்குப்பின் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருந்தாலும், அப்போது முதன் முதலில் கேட்டதின் நினைவுகள் என்றும் பசுமையாய் நிறைந்துள்ளது!. அதை மீண்டும் நினைவு படுத்துகையிலும் இனிமை!. இந்நாள் வரை இனித்திடும் இசை ரசனைக்கு இப்பாடல் தொகுப்பு ஒர் அடித்தளமாய் அமைந்தது என்பேன்!.
சென்ற பதிவில், "நீர் தள்ளினால், எங்கு நான் செல்வேன்...?" என பெ.தூரனார் கேட்கப் பாடல் கேட்டோம். இந்தப் பாடலில், "நீ இரக்கம் கொள்ளாவிட்டால், எனக்கு புகலிடம் ஏது...?" என கிட்டத்தட்ட அதே கேள்வியைக் கேட்கிறார் பாபநாசம் சிவன். என்ன மாற்றம் என்றால், இங்கே வேண்டப்படுவது, தாயாரிடம். மகாலட்சுமியைப் பாடிடும் நற்றமிழ்ப் பாடல்களை நான் அதிகம் அறியேன். ஆகவே இந்தப் பாடலை, ஆகா எனச்சொல்லி, இரண்டு செவிகளையும் நன்றாக தீட்டிக் கொண்டு கேட்கிறேன்!
தாயின் பெருமையைச் சொல்லாத இலக்கியம் இல்லை. "பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தெனை காத்திடும்..." எனத் தாயுமானவனைப் பாடுவார், மாணிக்க வாசகர் பெருமான். தாய் பரிந்து கவனிக்காவிட்டால், சேய் தனை காப்பவர் யார்? தாய்க்குத் தாயாக பேருலகம் தனை ஈன்ற பெருந்தேவி, அன்னை மகாலட்சுமி அல்லவோ அகில உலகிற்கும் அருள் சுரக்கும் தாய்! அம்மா, எனைக்காத்து இரட்சிப்பாய்.
இராகம் : அடானா இயற்றியவர் : பாபநாசம் சிவன்
எடுப்பு நீ இரங்காயெனில் புகல் ஏது? - அம்பா, நீ இரங்காயெனில் புகல் ஏது? நிகில ஜகன்நாதன் மார்பில் உறை திரு, நீ இரங்காயெனில் புகல் ஏது?
தொடுப்பு தாயிரங்காவெனில் சேய் உயிர் வாழுமோ? சகல உலற்கும் நீ தாயல்லவோ?
முடிப்பு பாற்கடலில் உதித்த திருமணியே சௌபாக்கியலக்ஷ்மி எனை கடைக்கணியே நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் மெய்ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும், அம்பா நீ இரங்காயெனில் புகல் ஏது?
விருத்தம் பாடி பின்னர் தொடர்ந்து கிருதியினைப் பாடுவது நமது இசையில் ஒரு மரபு. அதன்படி இங்கொரு விருத்தமும், பாடலும் பார்ப்போமா? விருத்தம் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க, தொடர்ந்து வரும் உருப்படியோ இன்னொருவரால் இயற்றப்பட்டிருக்கும். இரண்டுக்கும் இடையே பாடகரால் நெய்யப்படும் தொடர்புதான் இருக்கிறதே, அது இயற்கையானது போலவே அமைந்திருப்பின், அது கேட்பவரை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும்!
அப்படிப்பட்ட ஒரு பாடலை இங்கு திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிடக் கேட்கலாம். முதலில் பாடும் விருத்தமானது, திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டது. இந்த செய்யுள் உட்பட, பாணரின் பத்து செய்யுள்கள் நாலயிர திவ்ய பிரபந்தத்தினில் அடங்கும். "கொண்டல் வண்ணனை, கோவலனை, வெண்ணை உண்ட வாயனை" என கண்ணனை விளித்த பெருந்தகையாளார் இவர்.
கண்ணன் வெண்ணை உண்பான் சரி, ஆனால், அவன் ஏழு உலகங்களையும் உண்டது எப்போது? ஆகா, பரம்பொருளாய் எங்கெங்கும் நிறைந்திருப்பதைத் தான் அன்று கண்டாளோ அன்னை யசோதை. எழில் நிறை நீல மேனியனின் வடிவழகு எல்லையில்லாமல் எங்கும் நிறைந்து பரம்பொருளாக நிரவி இருக்கிறது. இப்போது இந்த ஆலமரத்திலை பாலகன் அழகில் லயித்திட, என் நெஞ்சமெல்லாம் அவன் நீலமேனி அழகும் நிறைந்திட, ஐயோ, அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!, அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!
விருத்தம்:
இயற்றியவர் : திருப்பாணாழ்வார்
ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான் கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் எழில் நீல மேனி...முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ... எழில் நீல மேனி அம்மா... நிறை கொண்டதென் நெஞ்சினையே...நெஞ்சினையே... நெஞ்சினையே... கண்ணா...கண்ணா... தாலேலோ... தா லே லோ... தாலேலோ...
இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?
(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)
இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!
பாடல்:
ராகம்: குறிஞ்சி தாளம்: திச்ரஆதி இயற்றியவர்: பாபநாசம் சிவன்
எடுப்பு கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய் மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)
தொடுப்பு குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே தாலோ தாலேலோ....