Showing posts with label கண்ணன். Show all posts
Showing posts with label கண்ணன். Show all posts

Monday, July 14, 2014

அவன் செயலும் துரியோதனனும்

பகவத் கீதையானது மகாபாரத்தில் பிற்காலத்து இடைச்சொருகல் என்று வாதிடுபவர்கள் மகாபாரதத்து நிகழ்சிகள் எப்படி கீதையின் சாரத்தை பிரதிபலிக்கின்றன என்று அறியாமலே இருக்கிறார்கள்.

அதற்கான ஒரு சான்றாக ஒரு மகாபாரதத்து நிகழ்வினை இங்கே பார்ப்போம். சமீபத்தில் விஜய் டி.வி மகாபாரதத்தொடரில் இக்காட்சி காட்டப்பட்டது.

கண்ண பெருமான் பாண்டவர் தரப்பில் இருந்து தூதுவனாக அஸ்தினாபுரத்து அரண்மணையில் நுழைகிறான். மாபாரதப் போர் நிகழாமல் தடுக்க இரு தரப்பிலும் முயற்சிக்கிறார்கள்.

சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில் கண்ணன் பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களையாவது தர வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கிறான். சகுனியும் துரியோதனும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். துரியோதனன், ஐந்து கிராமங்கள் என்ன, ஐந்து ஊசி முனை நிலம் கூடத் தர முடியாது என்று மறுக்கிறான்.

சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வி அடைகையில் போர் நிச்சயம் என்றாகிறது. போரில் கண்ணன் பாண்டவர் தரப்பில் போர்களம் புகுந்து விடக்கூடாது என்கிற சகுனியின் அறிவுரையின் பேரில், கண்ணனை கைது செய்யத் துணிகிறான் துரியோதனன். கண்ணனை இரும்புச் சங்கிலியால் பிணைக்க வீரர்களை ஆணியிடுகிறான். வீரர்கள் அச்சங்கிலியைத் தூக்கிக்கொண்டு அரசவைக்குள்ளே நுழைகிறார்கள். ஆனால் கண்ணனைப் பார்த்த உடனே அவர்களால் அச்சங்கிலியைத் தூக்க முடியாமல் கீழே விட்டு விடுகிறார்கள். அவர்களால் அதை இம்மியளவும் அசைக்கவும் முடியவில்லை.



அதைப்பார்த்து கண்ணன் துரியோதனனிடம் உரைக்கிறான். "துரியோதானா, உன் பாவச்சுமைகளை அவ்வீரர்களால் சுமக்க இயலாது. உன்னால் மட்டுமே அச்சங்கிலியை அசைக்கவும் முடியும். நீயே சங்கிலியைக் கொண்டு வந்து என்னை பிணைப்பாய்" என்கிறான். வியப்பில் துரியோதனன், சங்கிலியின் அருகில் சென்று அதை மெள்ள அசைத்துப் பார்க்கிறான். அதை எளிதாக அவனால் தூக்கவும் முடிகிறது. "ஆகா, என் பலத்தைப் பார். இத்தனை வீரர்களாலும் தூக்க இயலாத சங்கிலியை யான் ஒருவனே தூக்கி உன்னை பிணைப்பேன் பார்" என்ற அகந்தையில் அச்சங்கிலியால் கண்ணனைக் கட்டி, அவனைச் சிறையில் அடைக்கின்றான்.

இந்தக் கதையில் இருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்ன?

துரியோதனன் போலத்தான் கிட்டத்தட்ட நாம் அன்றாடம் நடந்து கொள்கிறோம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், ஆகா இது என்னால் செய்யப்பட்டது என்கிற இறுமாப்பினைக் கொள்கிறோம்.  ஆனால் ஒரு செயலை ஒருவரால் செய்ய இயலாமற் செய்வதும், செய்ய இயலச் செய்வதும் அவன் செயல் என்பதை அறியாமலே. அத்தனை வீரர்கள் இரவு பகலாக உழைத்து மிகவும் கடினமான, இந்திரனின் ஐராவதத்தாலும் முறிக்க முடியாத மிக உறுதியான இரும்புச் சங்கிலியைச் செய்ய இயன்றது என்றால் அதுவும் அவன் செயல் அன்றோ? அதனை அரசவை வரை எடுத்து வர வீரர்களால் இயன்றதும் அவன் செயல் அன்றோ? அவன் நினைத்திருந்தால் இச்செயல் எல்லாம் முதலிலேயே முடியாமல் போயிருக்கும் அல்லவா?

அரசவை வரை எடுத்துவரச் செய்து பின் வீரர்களால் தீடீரென அதைச் சுமக்க இயலாமற் செய்ததன் காரணம் என்ன? துரியோதனன் இன்னும் ஒரு பாவம் செய்யத் துணிகிறான் என்றால் அதற்குப் பொறுப்பாளி அவன் மட்டுமே என்று அவனைத் தனிமைப் படுத்துவதா? இல்லை. துரியோயதனனுக்கு தன் தவறுகளை உணர இன்னுமோர் வாய்ப்பு தரப்படுகிறது. "வீரர்களால் அசைக்க முடியாமற் போன சங்கிலியை தான் அசைக்க இயன்றதக்கு காரணம் தான் அல்ல! " என்று உணர்வதற்காக ஓர் நடமுறை வாய்ப்பு தரப்பட்டது. மூடனான அவனால் அவ்வாய்ப்பை பயன் படுத்த இயலாமற் போனது.

அன்றாடம் நமக்கும் இதுபோன்று வாய்ப்புகள் பலவும் வரவர துரியோதனன் போலவே மூடனாக இருப்பதும் அல்லது கிடைத்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதும் நம் கையில் தானே உள்ளது!

Monday, July 22, 2013

கண்ணனைக் காணவில்லை

எடுப்பு
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கனிமுகமும் என் நினைவில் இல்லை
கண்ணனை இன்னமும் காணவில்லை - அவன்
கார்குழலும் என் காதினில் கேட்கவில்லை

தொடுப்பு

வண்டுகள் சூழும் சோலையில் தேடியும்
வான்முகில்களின் இடையே தேடியும்
வருவான் வருவான் - வருவான் என
வழிமேல்விழி வைத்தும் மணி வண்ணணைக்
 (கண்ணனை இன்னமும்...)

வீதியில் ஆடும் கோபியர் பின்னேயும்
மாடுகள் மேய்க்கும் ஆயர் பின்னேயும்,  தயிர்
கொட்டி வைத்திருந்த உரியின் பின்னேயும், அவனைக்
கட்டி வைத்திருத்த உரலின் பின்னேயும்
தேடியும் தேடியும் தேடியும்
 (கண்ணனை இன்னமும்...)

முடிப்பு
முன்னம் முலையில் விடம் உண்டதனால்
இன்று இப்போது காணாமற் போனானோ? மண்
தின்ற வாய் திறந்து அண்டம் காட்டியதனால்
அண்டம் தனை விட்டு அகன்றே போனானோ?
ஆலிலையில் ஒரு காலைத் தூக்கியதால்
அமிழ்ந்தே அமிழ்ந்தே ஆழ்கடலுக்கடியே போனானோ?
(கண்ணனை இன்னமும்...)

சகடனை உதைத்து அவன் உருள்வதைக்
காணச் ஓடிச் சென்றானோ!
காளியன் வாலினால் கட்டுண்டது போல் மயங்கிப் போனானோ?
குழலூதி கறவையை அடக்கச் சென்றானோ?
கன்றினை தடியாய் மாற்றி விளாங்கனி பறிக்கச் சென்றானோ?
குன்றினைத் தூக்கி குடைபிடிக்கச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)
பிணை மருத மரங்களை சாய்க்கச் சென்றானோ?
ஆனையை காலனும் அண்டாது காக்கச் சென்றானோ?
வஞ்சகன் கஞ்சனை வாட்டவே சென்றானோ?
பாஞ்சாலியின் மானம் காக்கவே சென்றானோ?
பஞ்சவர்க்குத் தூதாகச் சென்றானோ? பின்னர்
பார்த்தனுக்குத் தேரோட்டச் சென்றானோ?
(கண்ணனை இன்னமும்...)

பாவை நான் பாடும் பாவைக் கேளானோ
பாவையின் வாட்டத்தைத் தான் தீர்ப்பானோ
மாலையும் வாடுது - மாலை நேரமும் கூடுது
மன்னவா மன்னவா - மனதுக்கினிய
(கண்ணனை இன்னமும்...)

















எங்கும் எங்கும் கண்ணன் என இருக்க
எங்கோ எங்கோ ஏன் தேடினேன்
எங்கும் மறைபவன் கண்ணன்
எங்கும் தெரிபவன் கண்ணன்
எல்லாம் எல்லாம் எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம் எல்லாமும் கண்ணன்!

Sunday, September 11, 2011

கண்ணன் விடு தூது

மிழ் இலக்கியத்தில் தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக பேசப்படும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. அகம் இது, புறம் இது என அளபெடுத்த தமிழர் அவற்றில் ஒவ்வொரு பகுதியினையும் ஆராய்ந்து அழகு படுத்தியுள்ளனர். அகம், புறம் இரண்டிலும் இடம்பெறக் கூடிய சிறப்பு தூதிற்கு உண்டு. பற்பல காப்பியங்களில் அவற்றை அலங்கரிக்கும் பாத்திரங்கள் தமக்குள்ளே ஏற்பட்ட ஊடலையோ அல்லது பிரிவையோ அல்லது சச்சரவினையோ தீர்க்கும் பொருட்டு இரு தரப்பிற்கும் பொதுவான ஒருவரையோ, அல்லது பொருளையோ, ஏன் தமிழ் மொழியைக்கூடத் தூது விட்டதுண்டு!

மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால், அக்காப்பியத்திலேயே பல தூது உண்டு என்றாலும் அவற்றில் கண்ணன் தூது சிறப்பிலும் சிறப்பு. சரி, கண்ணன் விடு தூது என்று சொல்லலாமா அல்லது கண்ணன் விடும் தூதா? மான் விடும் தூது/ மயில் விடு தூது என்றால் மானையோ மயிலையோ தூதாக அனுப்பப்பட்டதைச் சொல்லலாம். பாண்டவர்கள் சார்பில் கண்ணன் தூதனாக கௌரவர்களிடம் சென்றான் என்பதினைக் கண்ணன் விடு தூது எனலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமுதலாகக் கண்ணன் இருக்கையில் தூதனாகச் செல்வதும், செல்லச் சொல்வதும் கண்ணன் அல்லவோ! கண்ணன் அன்றி வேறில்லை.

கண்ணன் தூதுச் சருக்கத்தில், வில்லிபுத்துரார், கடவுள் வாழ்த்துப் பாடலில், பாரளந்த அண்ணலைப் பாடுகிறார்:
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் 
பிரியான் ஆகி, 
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
அருளும் செங் கண் மாலை
பார் படைத்த சுயோதனற்கு, 'படை எடேன் அமரில்!' 
எனப் பணித்த கோவை, 
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு 
ஆழிக் கரை கண்டாரே. 
- வில்லி பாரதம் 

கௌரவர்களிடம் இருந்து சஞ்சயன் தூதனாக வந்து போன பின்பு, தருமர் தன் தரப்பு நியாத்தை எடுத்துரைக்க வேண்டி திருத்துழாய் மாலை சூடும் கமலக்கண்ணனைத் தூதாக அனுப்ப எண்ணி இருந்தார். கண்ணனை அழைத்து அவரிடமும், தனது தம்பியர் நால்வரிடம் அவ்வெண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.   "கண்ணா, போர் என்று வந்தால் அனைவரும் மாள்வார். ஆகையால் போர் வேண்டாம். சமாதானம் வேண்டு. நாட்டில் எங்களது பகுதியினை வேண்டு. அதைத் தர அவர்கள் மறுத்தால் ஐந்து ஊர்கள் வேண்டு. அதையும் தர மறுத்தால், ஐந்து வீடுகளாவது வேண்டு. அதனையும் தர மறுத்தால், பின் போர் வேண்டு" என்றான் தருமன். 

தருமனது மேற்சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வெஞ்சினம் கொண்டு வெதும்பிச் சொன்னான் வீமன்:

சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
                  சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
                  செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
                  வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
                  கொற்ற வேந்தே! 
 
தேவர்களும், முனிவர்களும், வேதங்களும் தேடப்பெற்ற சிறப்புடைய கண்ணனை - போயும் போயும் நமக்கு அரசு வேண்டி தூது அனுப்பலாமோ, வேண்டாம் வேந்தே, என்னத் தூதாக அனுப்பு. நான் போய் என் கதையால் கௌரவர்கள் கதையை முடித்து விட்டு வருகிறேன் என்றான். வீமனது சினத்தைக்  தணித்தபின் கண்ணன் அர்ஜூனனை நோக்கி, "விஜயா, உன் கருத்து யாது?" என வினவினான். விஜயனோ, "கண்ணா, அண்ணன் வீமனும் போக வேண்டாம், யாரும் போக வேண்டாம், இங்கிருந்தே என் காண்டீபத்தால் அவர்களைப் பொடிப்பொடி ஆக்குவேன்" என்றான். அடுத்து கண்ணன் நகுலனைக் கேட்க, "தூதினால் பயனில்லை" என்றே பெயர்ந்தனன். இறுதியாக ஐவரில் இளையவனாம் சகாதேவனது கருத்தைக் கண்ணன் கேட்டான்:

நகுலன் இவை உரைத்ததற்பின், 'நன்று!' எனக் கை
                  அமைத்தருளி, 'நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
                  யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
                  திறல் உடையோய்! புகல், நீ' என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
                  உருக, மொழிகின்றானே:

ஐவரில் ஞானி சகாதேவன் தான் போலும். சொல்லுதற்கு அரியதான மெய்யறிவை உடையவனாம் இளையோன் மொழிந்தான்: 

'சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
                  செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
                  என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
                  என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
                  தெரியுமோ?-ஆதி மூர்த்தி! 

"கண்ணா, தருமன் சொல்வதுபோல் நீயும் தூது சென்றால் என்ன? அல்லது செல்லாவிட்டால்தான் என்ன?துரியோதனன் எங்களுக்கு நிலம் தந்தால் என்ன? தராவிட்டால் என்ன? சபதமிட்ட பாஞ்சாலியும் தன் கூந்தலை முடித்தால் என்ன? முடியாமல் விரித்தால் என்ன? எந்த செய்கையும் எப்படி முடியும் என்று அறிந்தவன் நீ. எனக்கு என்ன தெரியும்? எது எப்படி நடந்தாலும் அது உன் விருப்பத்தால் விளைந்தது அல்லவோ!" என்றான்!:

'முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
                  அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
                  பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
                  அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!'
                  என்றான், தெய்வம் அன்னான். 

"அன்று நீ பாலகனாய் இருந்தபோதே, விடம் தடவி முலைப்பால் தந்து உனைக்கொல்ல வந்த பேய்மகளையும் அறிந்து கொண்டாய். மேலும் உரலோடு உன்னைக் கட்டி வைத்த பின்னும், அதனோடு மருது மரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்றாய். உயர்ந்து நின்ற சகடாசுரனும் நிலத்தில் விழச்செய்தாய். இடையர் மாளிகையில் வளர்ந்து இப்படியெல்லாம் இந்திரஜாலம் புரிந்த கண்ணா, நீ செய்யும் மாயை தனை இங்கு இருக்கும் ஒருவரும் அறியார். ஆனால் அதன் உட்பொருளை அடியேன் அறிவேன். உன் திருவுளத்தில் இருக்கும் கருத்தே என் கருத்தாகும். உன் சுதந்திரமே என் சுதந்திரம் ஆகும்" என்றான் கடவுளைப் போன்ற சகாதேவன்.

உடனே கண்ணன் சகாதேவனை தனியே அழைத்துச் சென்று நகைப்புடன் அவனது தந்திரமான பேச்சை மெச்சி, "சகாதேவா, நன்று உரைத்தாய். ஆனால், பாரதப் போர் நடக்காமல் இருக்க நீயே ஒரு உபாயம் சொல்." என்றான். அதற்கு சகாதேவன்:
'நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?  
கண்ணனை "புயல்வண்ணன்" என்றழைப்பதைப் பாருங்கள்! பூமியின் பாரத்தைக் குறைக்க புயலாகப் புறப்பட்டான் போலும் புயல்வண்ணன்! உன் திருவுளக் கருத்து அப்படி இருக்க, பாரதப் போர் ஏற்படாமல் தடுக்க உன்னால் மட்டுமே இயலும். எனினும் பாரதப்போரை தடுக்க ஓர் உபாயத்தினைக் கேட்பதால், உன்னைக் கட்டிப்போட்டல் இயலும் என்றான் சகாதேவன். அன்பனின் மனமதை அறிந்த கண்ணனும் பதினாறாயிரம் உருவங்கள் கொண்டு, "இப்போது என்னைக் கட்டுக பார்க்கலாம்" என்றான். மாயவனின் விளையாட்டை அறிந்த தூயவனாம் சகாதேவன், உலகளந்த உத்தமன் பாதங்களைத் தன் மனமாகிய கருத்தினால் கட்டினான்!  

பக்தியும் ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற சகாதேவனை, "அன்பால் என்னை அறிந்த அன்பனே சகாதேவா" என கண்ணனும் அழைக்க, சகாதேவனும் "கண்ணா, வன் பாரதப்போரில் பாண்டவரை உன் பார்வையாலே காத்தருள வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.

Sunday, August 21, 2011

கண்ணன் அன்றி வேறில்லை

ஆற்றங்கரையோரம் சேற்றுத்தென்னை மரநிழலில் இளைப்பாறுகையில் எங்கிருந்தோ இனியதொரு கானம் தென்றல் காற்றொடு இழைந்து வருகுதே! இப்படியொரு இணையிலா இனிமை ததும்பும் இசையை இதுநாள்வரை கேட்டிலையே. கோலக்குயில் ஓசைபோல் குழலிசைத்தார் யாரோவென என்மனம் திகைக்க காரணமெதுவென கண்டிலேனே. அதைக்கேட்கக் கேட்க என் மனத்திலும் கவிதைகள் பிறக்குதே:

மருத நிலத்தின் மேன்மை மண்ணொடு வயலொடு செழுமை!
ஆற்றுநீரும் அந்தக் குழலிசையோடு சேர்ந்திசை பாடும்!
எப்படிப்பாடும்? துள்ளித்துள்ளிக் குதித்துப் பாடும்!
ததிங்கிணத்தோம் தத்திங்கணத்தோம் என ஜதி போடும்!
ஏனிப்படி அடியே, ஏனிப்படி நதியே? எனக்கேட்டால்,
கண்ணன் குழலிசையே எனச் சொல்லும்!, அது சொல்லும்!

காத்திருத்தலே நிமித்தம் முல்லை நிலத்தில் - அதுபோலே
காத்திருந்தேன் நானும் குழலிசையைக் கேட்டே.
கண்ணன் கனிமுகத்தைக் காண்பேனா மாட்டேனே அறியேனே.
அடி நீயாவது சொல்லேனடி சற்றே ஆறுதலாய்க் கண்ணே.

காத்திருந்த முல்லை மலர்களும் ஏங்கும் - எப்போது
எங்களிறைவன் முடி சேர்வோம் என ஏங்கும்.
முல்லை மலராவது பரவாயில்லை, அவன் முடிசேர முயலும்.
அடியேன் அவன் அடியாவது அடைவேனா அறியேனே.

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்போல் வருவான்
கண்ணன் வருவான், நான் பொய்யொன்றும் சொல்ல வில்லை.
எங்கள் கண்ணன் அன்றி வேறில்லை,
கண்ணன் அன்றி வேறில்லை, வேறில்லை.
-ஜீவா

கவிதைகளில் கற்பனையை வடிப்பவர் சிலருண்டு!
கதைகளில் கற்பனையை வடிப்பவர் பலருண்டு!
ஆனால், கற்பனையும் இல்லாமல் கதையும் இல்லாமல் கண்ணனோடு தனது நேரடி அனுபவத்தினைக் கவின்மிகு கவிதைகளாக, இசைநயத்தோடு வடித்துப்போனவர் வெகு சிலரே.
அவ்விடத்தில் தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் முன்னிற்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
அப்பாடற்தொகுதியில் இன்னுமொரு பாடலை இந்தப்பதிவுல் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்!

ராகம்: காவடிச்சிந்து
தாளம் : திஸ்ரகதி
இயற்றிவர்: ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணை யாதென
தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வரவில்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)

இப்பாடலை பாம்பே சகோதரிகள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Sunday, December 26, 2010

பக்தியும் ஞானமும் (5) - திருமால்

என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும்நிறை பரப்பிரம்மம் அம்மா
என்றழைக்க, என்ன தவம் செய்தனை!
- ஊத்துக்காடு வேங்கடகவி

திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்தவுமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும். குழந்தைக் கண்ணன் தன் வாய் திறந்து அண்ட சராசரங்களையும் காட்டி அன்றே சொல்லிவிட்டான், சகுணப் பிரம்மமாக அவன் காட்சி அளித்தாலும், அவன் பரப்பிரம்மம் தான் என்று.

யாரோ என்றெண்ணாமலே நாளும் - இவன்
அதிசயங்களைச் சொல்லக் கேளும்!
சூராதிசூரன் இராமன் என்னும் பேரன்!
...
இங்கே வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை!
- அருணாசலக் கவிராயர்.

ஆம், குணங்களோடு கூடியதான பரப்பிரம்மம் போற்றிப்பாடிட வழி செய்து பரமனை அறிய மற்றும் அடைய மனிதனுக்கு வழி வகை செய்திட, அது நம் பெருந்தவப் பலன் தான்.

முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளில் இராமனையும் கண்ணனையும் பாடும் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகளை இவ்விடுகையில் பார்க்கவிருக்கிறோம்.

முதலில் ஜகம் புகழும் புண்ணிய கதை : இராமகாதை.
* மாமவ இரகுவீரா (மாஹாரி ராகம்) : இராம சொருபம் தத்வ சொருபம்
* ராமசந்திரேண சம்ரஷிதோஹம் : பிரம்ம, விஷ்ணு, ருத்ர சொரூபம்
* ஸ்ரீ ராமச்சந்ரோ (ஸ்ரீரஞ்சனி) : விஸ்வாமித்திரரின் யாகத்தை காத்தது, தாடகை வதம், மிதிலைப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதை மணம், பரசுராமரின் கர்வத்தை அடக்குதல் - என்று பாலகாண்டம் பளிச்சிடுக்கிறது.
* இராமச்சந்திராதன்யம் (தன்யாசி) : சுபாகு, மாரீசன், கரன், தூஷணன் போன்றோர்களைக் கொன்றது குறிப்படப்படுகிறது.
* மாமவ பட்டாபிராம (மணிரங்கு) : அனுமனால் பாடப்பட்டு, பரதன், இலக்குவன், சத்ருக்கணன், விபீடணன் மற்றும் சுக்ரீவன் போன்றவர்களால் சேவிக்கப்பட்டு, முனிவர்களின் ஆசிகளுடன் நவரத்தின மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்மாசனத்தில் அன்பின் சீதையுடன் கொலு வீற்றிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியினை தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது - பாடலில் தான்.

அடுத்து கவின்மிகு கண்ணன் கதை.
* பாலகோபால (பைரவி) : கம்ச வதம், துரோண, கர்ண, துரியோதனன் முதலானவர்களை ஒஇத்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது.
* ஸ்ரீகிருஷ்ணம் பஜரே (ரூபவதி): பாரதப் போரில் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தது.
* பார்த்தனின் சாரதியானதை ஒரு பாட்டில் 'தனஞ்சய சாரதே' என்கிறார்
* கிருஷ்ணாநந்த முகுந்தமுராரே (கௌடிபந்து) : நாராயணன், வாசுதேவன், கோவிந்தன், பத்மநாபன் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

மேலும், பிளிறு கேட்டோடி வந்து களிறு மீட்டது - கஜேந்திரனைக் காப்பாறியது பல கீர்த்தனைகளில் குறிப்படப்பட்டுள்ளது.
பக்தன் பிரகலாதனை பரிபாலித்தது, கூர்மாவதாரம், வாமனாவதாரம் போன்றவயும் அவரது கீர்த்தனைகளில் இடம்பெற்றுள்ளன.
அஜாமிளன், அம்பாரிஷன் கதைகளும் கூட இடம்பெற்றுள்ளன.

திருமால் திருத்தலங்களை இவரது பாடல்கள் மூலமாகவே தரிசித்து விடலாம். திருப்பதி, காஞ்சி, சோளங்கிபுரம், திருவரங்கம், சிதம்பரம், திருக்கண்ணமங்கை, அழகர் கோவில், குருவாயூர், திருவனந்தபுரம் என நெடியோன் தலப்பட்டியல் நீள்கிறது. "சேஷாசல நாயகம்" என்னும் வராளிராக கீர்த்தனையில் திருவேங்கடத்தானின் அலங்கார அகுகளை வர்ணிப்பார்.

இந்த இடுகையில் நாம் சாகித்யத்துடன் பார்க்கப் போகும் பாடல் 'சந்தான ராமசுவாமினம்' என்னும் பாடல்.
இராகம் : ஹிந்தோள வசந்தம்
பாடற்தலம்: நீடாமங்கலம் (திருவாரூர்)

திருமதி, இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்:
santhanaramaswamin...


பல்லவி

சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே

அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்

சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்

பாடற்பொருள்:
பாடலில் பல்லவியிலேயே தீஷிதர் பிரம்மத்தின் இரண்டு பரிணாமங்களை எடுத்து இயம்பி விட்டார். சந்தான இராம சாமி - இவரே தான் குணங்களோடு கூடியவர் - இவரேதான் குணங்கள் இல்லாமலும் இருப்பவர். எதற்காக இப்படி இருக்க வேண்டும் என்றால் - நமக்கு அருள் செய்வதற்குதான் - அதற்காகத்தான் குணங்கள் பொருந்திய சகுண பிரம்மமாகத் திககிறார்.

எப்போதும் யமுனாம்புரமதில்(நீடாமங்கலம்) வாசம் செய்பவர். ஹிந்தோள வசந்தம் என்னும் இராகத்தில் பாடப்படும் மாதவர்.
சச்சிதானந்த சொருபம். சத்யம் - ஞானம் - ஆனந்தம் - என மூன்று சொருபங்களிலும் ஆனவர்.
"சிவம்" - சிவம் என்னும் நிலை - துரியம் - இதுவே சைத்தன்யம்.

பக்தர்களுக்கு சந்தான சௌபாக்கியங்களை அருள் செய்பவர்.
அவரது தாமரைப் பாதங்கள் சாதுக்களின் இருதயத்தில் தெரிகிறது. (அகங்காரம் அற்றவர்களிடமெல்லாம் அவர் இருப்பார்)
சிந்தாமணி முதலான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்.
சைத்தன்ய சொருபமானவர்.
சூரியன் மற்றும் சந்திரன் இவரது கண்களாய் அமைந்தன.
குருகுஹனான தீக்ஷிதரால் துதிக்கப்படுபவர்.
பொய்யானது இங்கே இல்லை, ஜடமானது இங்கே இல்லை. துக்கம் இங்கே இல்லை. பின் என்ன?
சத்யமாயும், ஞானமாயும், ஆனந்தமாயும் திகழும் சச்சிதானந்த சொரூபம் மட்டுமே. ஆதி அந்தமில்லா சச்சிதானந்தம்.

~~~
திருமாலைப் பற்றிச் சொல்லும்போது அவனது திருமார்பினை விட்டு அகலாத திருமகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமகள் பெருமையினைப் பாடும் 'ஹிரண்மயிம் லக்ஷ்மீம்' எனும் லலிதா ராகப் பாடலை இங்கு முன்பே பார்த்திருக்கிறோம்.
~~~
ஸ்ரீ சத்யநாராயணம் (சுபபந்துவரளி) கிருதியில் தீக்ஷிதர் சொல்லுவது போல, சத்யம் - ஞானம் - ஆனந்தம் எனும் வடிவில் எப்போதும் உள்ளார் நாராயணர். பரமாத்ம சொரூபத்தைத் தவிர பிரபஞ்சத்திற்கு தனியான ஒளி இல்லாததால், சர்வமாக நாராயணர் இருக்கிறார்.

குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மமாக போற்றப்பட்டாலும் - குணங்களற்ற நிர்குண பிரம்மமாய் இராமன் இருப்பவன் என்பதை மகான் கபீர்தாஸர் எப்படி வலியுருத்தி இருக்கிறார் என்பதனை சூரி சாரும் கபீரன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாய் இருக்கும்.

Thursday, November 04, 2010

தீபாவளிப் பாட்டு

சமீபத்தில் தீபாவளியின் கதை என்ன என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தீபாவளி இராமன் அயோத்தி திரும்பி முடிசூட்டிய நாளென்றார். இன்னொருவர், கண்ணன் நரகாசுரனை வதைத்த நாள் என்றார். அது எப்படி இரண்டு தொடர்பில்லாத இதிகாசங்களிலும் தொட்டுத் தொடர்ந்தது இந்த தீபாவளி என இருவரும் வியந்தனர்.

தீபாவளி கொண்டாடுவதற்கு அவரவர் மாநிலத்தில் அவரவர்க்கு காரணங்கள் வேறாக இருக்கலாம். அது எல்லோருக்கும் இருள் முடிந்து நன்மைகள் பிறக்கும் நன்னாளாக அமைய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் அமைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவில் மத்யமாவதி இராகத்தில் தீபாவளிப் பாட்டொன்று பார்க்கலாமா!
பாடலில் மத்யமாவதியின் அம்சம் அப்படி அருமையாக வெளிப்படும்படி இயற்றியிருப்பார் பாபநாசம் சிவன் அவர்கள்.
பூமி பிராட்டி தோரோட்ட & மங்கள தீபாவளி ஒளி - என்ற இடங்களில் எதுகை நயம் அழகாய் மிளிரும்!

இராகம் : மத்யமாவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
பாடுபவர் : காயத்ரி வெங்கட்ராகவன்






எடுப்பு

கண்ணா காத்தருள் மேகவண்ணா
கடைக்கண் பார்த்தருள் கமலக்கண்ணா

தொடுப்பு
விண்ணாடரும் முனிவரும் வணங்கிவேண்ட
நரகாசுர வதம் செய்ய விரைந்துவந்த
(கண்ணா...)

முடிப்பு
பாமை வடிவான பூமிபிராட்டி தேரோட்ட
அசுரர் குலம் அழத்தவா!
சக்ரபாணி! உலகெலாம்
மங்கள தீபாவளி ஒளி
வீச அருள் புரிந்த (கண்ணா...)

Thursday, July 08, 2010

எல்லாம் நீ எனில் நான் எங்கே? - கீதை (அத் 15) - பகுதி 3

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...

11. மனமயக்கம் அகன்றிட, யோக பாதையில் நடந்திட, அது மனதைத் தூய்மை பெறச் செய்திடும். மனத்தூய்மை அடையாதவர்களாலோ, என்ன முயன்றாலும் அவர்களால் இலக்கினை அடைய முடிவதில்லை. எது இலக்கு? 1) அது இன்னொரு பொருளால் ஒளிர்விக்க இயலாதது 2) அது, உயரிய நிலையை அடைந்தபின், அதிலிருந்து திரும்பிட இயலாதது 3) அதனில், ஆன்மாக்கள் எல்லாம் சிறு சிறு பகுதிகளாய் இருப்பது.

மனமது தூய்மை அடைதல் என்றால் என்ன? மனமதில் எதை நீக்க வேண்டும் தூய்மை அடைய? மனமதில், ஐம்புலங்களை துய்ப்பது நான் என்று ஏற்படும் எண்ணத்தைத் தான். பக்தி யோகம் மற்றும் கர்ம யோகம் ஆகிய சாதனங்கள் கொண்டு, எண்ணச் சீரமைப்பு மேற்கொள்வதே யோக நெறியாம்.

அடுத்த நான்கு சுலோகங்கள், பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுருவியிருக்கிறான் என்பதனை எடுத்துச் சொல்கின்றன:

12. ஒளிரும் எல்லாப்பொருளும் ஒளிருவது பரமனின் ஒளியினைத்தான். ஐம்புலன் காட்டும் காட்சியானது, அக ஒளியால் புலப்படும்பொழுது தெளிவான மயக்கமற்ற காட்சி கிட்டும்.

சக்தியின் தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருக்கலாம். மின்சார சக்தியின் வெளிப்பாடு, மின்சார பல்பில் வெளிச்சமாகவும், மின்சார விசிறியில் அதன் சுழற்சியாகவும், மின்சார உலையில் வெப்பமாகவும் வெளிப்படுவது போல, அவற்றுக்கு தோற்ற வெளிப்பாடுகள் வெவ்வேறாக இருந்தாலும் அடிப்படை சக்தி ஒன்றுதான். அது போலவே, உலகில் ஒளிரும் எப்பொருளும், பரமனின் சைத்தன்ய ஒளியின் வெளிப்பாடுதான்.

மேலும்,

13. பரிதியின் ஒளியினை பிரதிபலிக்கும் நிலவின் ஒளியிலும் பயிர்கள் வளர்வதுபோல, அகத்தில் பிரதிபலிக்கும் பரமனின் ஒளிதான் இப்பிரபஞ்சத்தினை வளர்ப்பதாம்.

இயற்கை செழித்து வளர்வதும், பரிதியின் ஒளி மற்றும் வெப்பத்தினால் தாவரங்களும் செழிப்பது போலவும், நிலவொளியினைப் பெற்றும் தாவரங்கள் வளர்வதும் - இப்படியாக, சூரியன், சந்திரன், அக்னி - என சக்தியூட்டும் அனைத்திற்கும் மூல சக்தியாக இருப்பது எல்லையிலா சைத்தன்யமாகும்.

மேலும்,
14. உணவாகவும், உணவின் சுவையாகவும் அமைந்து உடல் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் காரணமாய் அமைகிறான் பரமன்.

உண்ணும் உணவினை செரிக்கச் செய்து, அவற்றின் சத்தினை உடல் வளர்சிக்குப் பயன் படுத்திக்கொண்டு, இதரவற்றினைக் கழிக்கும் ஜீரண உறுப்புகளின் சக்தியாகவும் பரமன் இருக்கிறான்.

"அர்ஜூனா, நானே சூரியன், சந்திரன், பூமியின் இயற்கை வளங்கள்" என்றவன் தொடர்ந்து "நானே உனக்கு உணவாகும் செடிகொடிகள். நான் அவற்றை உண்பவன். நானே உன் வயிற்றின் ஜீரண சக்தியாவும் இருக்கிறேன்" என்று சொல்வதன் மூலம் - அவன் மறைமுகமாக கேட்கும் கேள்வியாக - "இதில் ஜீவனான நீ எங்கே?" என்பதும் புலனாகிறது.

மேலும், பகவான் கண்ணன் சொல்கிறான்:

15. "நானே அனைவரது இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். எல்லா வேதங்களும் பரமன் என விளக்குவதும், அவற்றைக் கற்றால் அறியப்படுவதும் நான் தான். வேதாந்தத்தின் ஆசிரியனும் நான் தான்."

இதயக்கமலத்தில் அமர்ந்தவாறு, ஆத்ம ஒளியினைப் பார்த்து, அதனொடு ஐக்கியப் படுத்திக் கொள்ளுதல் மூலம், காண்பவன், கண்ட காட்சி எனும் இரு நிலை மாறி, 'காணும் மெய்யறிவு' என்ற ஒன்று மட்டுமே மிஞ்சும்.

மெய்யியலில் 'இதயம்' எனக்குறிப்பிடப்படுவது மனத்தைத்தான். நற்பண்புகளால் செழித்து - அமைதியாகவும், விழிப்புடன் இருக்கும் மனத்தை.

இறைவன் எல்லா இடத்திலும் இருக்கும் போது, இதயத்தில் மட்டும் அமர்வதாகச் சொல்வதேன்? மனம் எனும் அங்கேதான் அவன் தன்னைத்தான் காட்டிக்கொள்கிறான். அங்கேதான் நாம் அவனை தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு கண்டு கொள்ள இயலுவதால்.

உயிரில்லாத பொருட்களிலும் அவன் இருக்கிறான்; - என்றால் ஏன் அவற்றில் அசைவில்லை, ஏன் அவை வளர்வதில்லை?
ஜீவனின் ஆன்மா பரமனின் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறது. சைத்தன்யத்தின் பார்வையில் இருந்து பார்த்தால், அனைத்துமே பிரகிருதி மட்டுமே. பிரகிருத்தியில் சில பொருட்களில் மட்டும், சைத்தன்யம் பிரதிபலிப்பதால், அவை உயிர் மற்றும் அறிவு இருப்பதாக (இதனை 'சேதனம்' என்பார்கள்) நாம் சொல்கிறோம். பிரதிபலிக்கக் கூடியதை சூட்சுமம் என்றும், பிரதிபலிக்க இயலாதவற்றை (ஸ்)தூலம் எனவும் சொல்லலாம். நமது சூட்சும உடலும் பிரதிபலிக்கக் கூடியதால், அதனை 'சேதனம்' எனலாம். நம் மனம், சைத்தன்யத்தால் ஒளிர் விடக்கூடைய தன்மை உடையது. அவ்வொளியைப் பெற்று மனம், ஐம்பொறிகளைப் பிரகாசப் படுத்துகிறது. உயிரற்ற பொருட்களில் சூட்சும உடல் இல்லாததால், அவற்றால் சைத்தன்யத்தை பிரதிபலிக்க இயலுவதில்லை.

இவ்வாறாக, பரமன் எப்படி எல்லாவற்றிலும் ஊடுறுவி வியாபித்து இருக்கிறான் என்பதை மேற்கண்ட சுலோகங்களில் பார்த்தோம். தொடர்ந்து பகவான் சொல்கிறான்:



16. இவ்வுலகத்தில் இரண்டு வகை புருஷர்கள் இருகிறார்கள். ஒரு வகை - அட்சர புருஷன் - மாறுதலுக்கு உட்படாதவர்கள். இன்னொரு வகை - சர புருஷன் - மாறிக்கொண்டே இருப்பவர்கள்.

"புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்.." என மணிவாசகர் குறிப்பிடுவது எந்த நிலையில்லா மாறுதலுக்கு உட்பட்டர்களை.
இன்னொரு வகை - ஜீவன் முக்தர்கள் - பிறவிச் சுழல் இவர்களுக்கு இல்லை. இவர்கள் கொல்லன் பட்டரையில் பயன்படுத்தும் "பட்டை தீட்டும் கல்" போன்றவர்கள். எத்தனை அடி விழுந்தாலும், அசையாமல் இருந்தவாறு, தன்மீது வைத்து அடிக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் இடம் கொடுத்து - அவற்றை 'பதம்' செய்ய உதவுவார்கள்.

இந்த இரண்டு வகை புருஷர்களைக் காட்டிலும் மேலானவன் பரமன். இவ்விரு புருஷர்களுக்கும் அப்பால், மேலான நிர்குண நிலையில் நிற்பவன். ஆகையால் அவன் புருஷோத்தமன், என்பதை அடுத்த இரண்டு சுலோகங்களும் சொல்லுகின்றன:

17. பரமனே, எல்லா வடிவமும் கொண்டு உலகைப் பலவிதமாய் படைத்தும், காத்தும் வருகின்ற யோகத்தைச் செய்யும் யோகேஸ்வரன். சர புருஷன், அட்சர புருஷன் ஆகியவர்களைக் காட்டிலும் மேலான புருஷோத்தமன்.

18. "அழிவிலாதன், பரமன்; அவனே புருஷோத்தமன்", என உலகிலும், வேதங்களிலும் ஓதப்படுபவன்.

19. குணங்கள் செய்யும் மாயங்களைக் கடந்து, எவனொருவன் பரமனை இவ்வாறு அறிகிறானோ, அவனே எல்லாம் அறிந்தவனாகிறான். இவ் உண்மையினை அறிய முயல்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

ஜீவன் அடையும் வெவ்வேறு நிலைகளை இவ்வாறாக பகுக்கலாம்:

குணங்கள் கொண்டது : ஜீவன்

குணங்கள் நீங்கிய ஜீவன் : ஜீவன் முக்தன்

ஜீவன் முக்தன் -> சகுண பிரம்மம் அடைகிறான்

சகுண பிரம்மம் -> நிர்குண பிரம்மத்துள் அடங்கும்

இந்நிலைகளை அனுபவ அறிவில் அறிபவன் மெய்ஞானி. அவன் எப்போதும் பிரம்மமன்றி வேறொன்றும் காணான்.

20. இதுவரை படித்த சுலோகங்களை மனதில் நிறுத்தி தியானித்துத் தெளிவோர் ஞானியாவர். இக்கடமையெனும் யோக நெறியில் ஈடுபடுவோர் பிறந்த மனிதப் பிறவியின் கடன் நிறைவேறப் பெறுவர்.

பரமனின் உண்மையான தன்மையை எடுத்துரைப்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். அதை அநுபவத்தில் அறிந்து கொள்வதே மானிடப் பிறப்பின் கடனாகவும், இலக்காகவும், நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதே கீதாசாரியனின் அறிவுரையாம்.

ஓம் தத் சத்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

Sunday, July 04, 2010

நான் என்பது நீ அல்லவோ : கீதை (அத் 15) - பகுதி 2

சென்ற பகுதியினைத் தொடர்ந்து கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தினை படித்துக் கொண்டிருக்கிறோம்...



7. மனிதனின் ஜீவனும், எங்கெங்கும் பரவியிருக்கும் பரமாத்மாவும் உண்மையில் ஒன்றே. குடத்தின் உள்ளேயுள்ள காற்றும், குடத்தின் வெளியே இருக்கும் காற்றும் ஒன்றே என்பது போலவே. அது பின்னமில்லாமல், ஒன்றேயென எப்போதும் எங்கெங்கும் ஒளிர் விடுகிறது. இன்னும் சிலர், இப்படியும் சொல்வார்கள்: பல்வேறு பூக்களின் பல்வேறு மகரந்தங்களில் ஈர்க்கப்பட்ட தேன் துளிகள், அதன் தனித்துவமெல்லாம் இழந்து 'தேன்' எனும் ஒற்றை அடையாளத்தைப் பெற்றது போல, பல்வேறு ஜீவன்களும் பரமன் எனும் ஒற்றை ஒளிக்கற்றையில் இணையுங்கால், தாம் தரித்துவந்த உருவம், பெயர் முதலான அனைத்தையும் இழந்து, ஒன்றாய் ஒளிருகின்றது.

பரமனின் ஒரு பகுதியான ஜீவன், உண்மையில் எல்லைகளால் குறிக்கிட இயலாதது. ஆனால் இவ்வுண்மையினை அறியாதவர் கண்களிலோ, தன்னைச் சுற்றியுள்ள உடலெனும் சுவரைத் தாண்ட இயலாமற் போகிறது. ஐம்புலன்களின் வழியாய் உணரப்படும் எந்த உணர்வும் அந்த அங்கங்களின் சக்தியாலோ அல்லது அந்தக்கரணங்களின் சக்தியோ இல்லை. பிரகிருதிக்கு உட்பட்டு, இவ்வங்கங்களின் வெளிப்பாடுகளெல்லாம், பரமனின் ஒளியின் பிரதிபலிப்பேயாம். பரமனின் சைத்தன்யம் ஏப்போதும் இந்த ஐம்புலன்களையும், மனதையும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

8. அதே பரமன், இந்த ஐம்புலன்களையும், மனதையும் முடிவில் தன் பால் முழுதுமாய் ஈர்த்துக் கொள்கிறான். அது எப்போது? உடலை விட்டு உயிர் பிரியும்போது, ஐம்புலன்களையும், மனதையும் - இது வரை மனத்தில் சேர்த்து வைத்த வாசனைகளையும் கவர்ந்து கொண்டு செல்லும் - வீச்சிய காற்றில், பூத்திருக்கும் பூவின் மணம் காற்றோடு கலந்து பரவுவதுபோலவாம்!

இறப்பில், தூல உடலை விட்டு அருஉடல்(சூட்சும உடல்) பிரிகிறது. ஐம்புலன்களும், மனமும் அருஉடலில் அடங்கும். ஆகவேதான், தூல உடலில் புலன்களுக்கான அறிகுறிகள் ஏதும் அதற்கப்புறம் இருப்பதில்லை. பணிமாற்ற உத்தரவு வந்தவுடன், ஒரு அலுவலர் எப்படி, தனது பொருட்களையும், குடும்பத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு, வேறு ஊருக்கு போகிறாரோ, அது போல, அருஉடல் தனது உடமைகளான, ஐம்புலன்களும், மனதையும், மனம் சுமக்கும் வாசனைகளையும் மூட்டை கட்டிக்கொண்டு, தான் இதுகாறும் இருந்த தூல உடலெனும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறது. பின்னர், தனக்கான இன்னொரு உடலை அடைந்தபின், தான் கட்டிக் கொண்டுவந்த மூட்டையை இறக்கி வைத்து, புற உலகை துய்க்கத் துவங்கி விடுகிறது. முற்பிறப்பிலிருந்து கொண்டு வந்த வாசனைகள் மூலமாக, கர்ம வினைகள் என்னும் வங்கிக் கணக்கு தொடரப்படுகின்றது.

9. பரம்பொருளே, தன்னொரு பகுதியினை மாயையில் ஆழ்த்தி, இப்படியொரு உலக வாழ்க்கையினைப் படைக்கிறான். ஆன்மாவிற்கு சுகங்களை அனுபவிக்கும் இயல்பு இல்லை. ஆனால், குண மயக்கங்களினால், அது ஐம்பொறிகள் மூலமாக பரமன் துய்க்கும் சுகங்களை, ஜீவனோ தான் அனுபவிப்பதாக கருதுகின்றது. இந்த மயக்கம் நீடிக்கும் வரை, இந்நிலை மாறுவதில்லை.

பரம்பொருளின் சைத்தன்ய ஒளி மனதின் புத்தியில் பிரதிபலிக்கும்போது, அதனால், ஐம்புலன்களும் ஒளிர்விக்கப் படுகின்றன. இதனால் தாம், நாம் ஆழ்ந்த கவனத்தில் இருக்கும்போது, இன்னொருவர் அருகே வந்து பேசினாலும், அவர்பால், உடனடியாக கவனத்தை திருப்ப இயலுவதில்லை. ஏனெனில், நமது கவனம் - அல்லது ஆழ்மனம் வேறிடத்தை நாடியிருக்கிறது. ஆழ்மனத்தின் மூலமாக, ஐம்புலன்களின் துணையோடு, ஜீவன் ஐம்புலன்கள் வழியாக நுகரப்படும் உணரப்படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொள்கிறது.

பரம்பொருள் நம்மில் இருந்து கொண்டே, நம்மை இயக்கிக்கொண்டே, ஐம்பொறிகள் வழியாக சுகத்தை துய்த்துக் கொண்டிருக்கையில், அப்பரமனை நாம் அன்றாட செயல்களில் ஏன் அறியாமலே இருக்கிறோம்?

10. ஏனெனில், அகத்தின் ஞானக் கண்ணால் மட்டுமே காணக்கூடயது அஃதாம். குண அனுபவங்களுக்கு ஆன்மா சாட்சியாய் மட்டுமே நிற்கிறது என்பதை அனுபவத்தில் ஞானியர் அறிவர். அவர்களது அறிவே வற்றாத பேரறிவாம். மெய்ஞானமாம். இவ் உண்மையினை அறியாமல், பொறிகள் மூலமாக துய்க்கும் சுகங்கள் யாவையும் தான் அனுபவிப்பதாக ஜீவனும் நினைப்பதால், அன்றாடம் எல்லாச் செயல்களிலும் பரமனை, அறியாமலே காலம் கழிக்கிறோம். விளைவு? மீண்டும் மீண்டும் பிறவி எனும் மீளாச்சுழலில் சிக்கித் தவிக்கிறோம்.

இலக்கியத்தை எல்லோராலும் படித்திட இயலும். ஆனால் அதன் சுவையை சுவைத்திட, இலக்கிய ரசனை வேண்டும். எல்லோராலும் நவரத்தின நகைகளை அணிந்து கொள்ள இயலும். அதன் சரியான மதிப்பை, நகைக்கடைக்காரரால் தான் துல்லியமாக மதிப்பிட இயலும். எல்லோராலும் இசையினை கேட்க முடியும். ஆனால் இசை ரசனை இருந்தால் தான், அதை ரசித்து அனுபவிக்க முடியும். அதுபோல, உயர் ஞானம் அமையப் பெற்றால் மட்டுமே, தன்னில் உறையும் பரமனே தன்னைத் துய்க்கிறான் என்பதை அறிந்து, தான் என்னும் அகந்தை அழிந்து, எல்லையில்லா பேரின்பத்தை துய்க்க முடியும்.

எப்போது ஒருவனால் ஞானியாக முடியும்? அகக்கண்ணால் எப்போது பரமனை உணர முடியும்?
அதற்கான வழியாக பகவான் கண்ணன் சொல்கிறான் "யோகம் செய்" என்று...
அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில் படித்துப் பார்ப்போம்.

Thursday, July 01, 2010

தலைகீழ் அரச மரமும் அதை வெட்டும் வழியும்

இந்த உலகத்தையும் அதில் சஞ்சரிக்கும் வாழ்க்கைகளையும் தலைகீழாய் இருக்கும் ஒரு அரசமரத்துக்கு ஒப்பாக சொல்கிறது கீதையின் பதினைந்தாவது அத்தியாயம், கொஞ்சம் படித்துப் பார்க்கலாமா?


எல்லாவற்றுக்கும் மேலான பரமனை சரண் புகுந்து யோகத்தில் இறங்குவது 'புருஷோத்தம யோகம்'. யோகமே செயல் யாவுக்கும் திறனாய் அமைவது. விசாலமான பார்வையினைத் தருவது. எங்கும் இருக்கும் கடவுளை எங்கும் காணும் திறனைத் தருவது.

----------------------------------------------------------------
1. பிரக்ருதியும், ஆன்மாவும் சேர்ந்து வானளாவிய 'அச்வதம்' எனும் அரசமரமாய் இப்பிரபஞ்சமெங்கும் பரவியிருக்கிறது. பிறவி, செயல், பலன், இறப்பு, மீண்டும் பிறவி, செயல் என எல்லாமும் இம்மரத்தில் அடங்கும். இம்மரத்தின் ஆணிவேரோ மேலிருந்து கீழேயாக, நிர்குண பிரமத்திடம் இருந்து வருகிறது. மேலே இருந்து வரும் வேர்களுக்குச் சமமானதாக, நிர்குணமாய் இருக்கும் பரமன், சர்குண நிலை பெற்று, ஆக்கம், நீக்கம் முதலியவற்றை செயல்படுத்துகிறான்.

இந்த மரத்தின் இலைகள் நன்நெறிகளைக் காட்டும் மறைகளுக்கு ஒப்பாகும். நன்நெறிகளால் விளையும் நற்பயன்கள் இலைகளில் இருந்து வரும் பழங்களுக்கு ஒப்பாகும். இந்த மரத்தின் சாராம்சத்தை எவன் உணர்கிறானோ, அவன் உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். மெய்ஞானத்தினை ஆணி வேருக்கு ஒப்பாகவும், அதிலிருந்து ஏற்படும் கிளை வேர்களை அஞ்ஞானத்திற்கும் ஒப்பாகவும் கொள்ளலாம். அஞ்ஞானத்தினால் மேலும் மேலும் கிளை வேர்கள் ஏற்பட்டு, ஆணி வேரிலிந்து பிரிந்து, மேலும் பலமாக இந்த மரம் பரந்து விடுகிறது.

பி.கு: தலைகீழாய் இருக்கும் இந்த மரத்தை மனிதனின் உடலுக்கு ஒப்பாகவும், மரத்தின் வேர்கள் மூளையின் அமைப்புக்கு ஒப்பாகவும் கூடச் சிலர் சொல்லுவார்கள்.

2. கிளைகள் மூலமாக குணங்கள் இலைகளைச் சென்றடையும். தான் சேர்த்து வைத்த குணங்கள் மூலமாக இலைகள் செழித்து வளர, அதனால் அந்த மரம் வளர்ந்து பெரிதாகிறது. சில கிளைகள் மேலேயும், சில கிளைகள் கீழே செல்லுவதுமாய் இருக்கின்றன. செயல்களில் தர்மச் செயல்கள், அதர்மச் செயல்கள் என இருப்பது போல. நற்செயலா, தீஞ்செயலா, என்பது 'ரஜஸ், தமஸ், சாத்வீகம்', எனும் முக்குணங்களின் கலவையால் தீர்மானிக்கப் படுகிறது.

மனித வாழ்க்கையில் தேடுதல் கிளைகளைக்கு ஒப்பு. இலைகளால் செழிக்கும் மரம் போல, வேதங்களால் உலகமும் செழிக்கிறது. மேலே இருந்து வரும் சத்தினை கீழ் நோக்கி செலுத்தி நிலத்தில் வேரூன்றும். இது மேலும் மேலும் வளர, கர்ம வினைகளால் இவ்வுலகத் தொடர்புகள் நீட்டித்து, உலக வாழ்க்கை என்னும் மரமும் செழித்து வளருகின்றது. புதுப்புது வினைகளையும் தோற்றுவிக்கின்றன.

பரவிச் செல்லும் கிளைகள் போல, வாழ்வின் பல்வேறு தேடுதல்களில் விளையும் ஆசையினால், செயல்களைப் புரிந்து, அவற்றால் பலனையும், மீண்டும் மீண்டும் செயல்களில் ஈடுபடவும் செய்கிறோம். கண் போன போக்கில் கால் போக நடக்க, மறைகள் சொல்லும் பாதையை மறந்து போனவர் வழி தடுமாறிட, கீழே போகும் கிளைகளாய், அவர்தம் அடுத்தடுத்த பிறவிகள், இன்னும் கீழான பிறப்புகளுக்கே இட்டுச் செல்கின்றது.

3. நம்மால் இந்த மரத்தின் ஆணிவேரின் ஆதியையோ, முடிவையோ காண இயலாது. பரமேஸ்வரனின் அடி, முடியினை அரியும் அயனும் தேடிக் காண இயலாதது போல, ஆணி வேரின் மூலத்தினையும், முடிவினையும் கண்டு கொள்ள இயலாது.

மேலும் மேலும், விழுதுகளால் நிலைபெற்று நிலத்தில் ஊன்றி விடுகிறது இம்மரம். குணங்களின் விளைவுகளுக்கு அடிமையாகி, மாந்தர் தம் வினைகள் பெருகிப் பெருகி, பிறவிப் பெருஞ்சுழலில் சிக்கித் தவிக்க, இதிலிருந்து அவர்கள் தப்புவதற்கான ஒரே வழி பற்றின்மையை பற்றிக்கொள்வதே. விளைவுகளில் விழுந்து விடாமல் நிஷ்காம்யமாக இருப்பதே, இம்மரத்தினை வெட்டி வீழ்த்துவதற்கான வாள் போன்றதாகும். சூரபதுமன் மாமரமாய் நின்றதும், ஞான வேலால் அவன் வெட்டுண்டு வீழ்ந்ததையும் ஒத்து நோக்குக.

கடற்கரையில் அலைகளைப் பார்க்கிறோம். நுரையோடு மேலெழும்பிக் கீழே விழும் நீரைத்தான் அலை என்கிறோம், 'நீர்' என்று சொல்லாமல். அந்த அலையின் உருவதை அகற்றி விட்டுப் பார்த்தால், தெரிவது நீர்தானே? அதுபோல, இந்த மரத்தின் உருவத்தையும், பெயரையும் நீக்கி விட்டுப் பார்த்தால், இருப்பது, பரமன் மட்டுமே. இந்த மரம் நம்மை உலக வாழ்க்கை என்னும் வட்டத்திற்குள்ளும், பிறவிச் சுழலுக்குள்ளும் அடைத்து வைக்கிறது. ஆன்ம விசாரம் செய்து பார்த்தால், இந்த மரம் என்று ஒன்று உண்மையில் இல்லாமல் இருப்பது புலனாகும். அதுவரை அந்த மரம் தெரிந்து கொண்டே இருக்கும். ஆகவேதான், "பிறவிச்சுழல், என்னும் இந்த மரத்தை, பற்றின்மை என்னும் கோடாலியால் வெட்டி வீழ்த்து" என்கிறான் பகவான் கண்ணன்.

4. இம்மரத்தை வெட்டி வீழ்த்தியபின், அந்த மரம் செழித்து வளர்ந்ததற்கு காரணமான பரமனையே சரண் புகுந்திட, அதுவே மோட்சமெனும் வீடுபேறு ஆகும். பரமனின் சத்தே வேர்களை மேலிருந்து கீழாக விழுதுகளை நிலத்தில் ஊன்றச் செய்தது. இது இயற்கையான நிகழ்வுதான். செயல்களைச் செய்ய வைத்ததும் அவன் நடத்தும் நாடகத்தில்தான். நிலத்தில் ஊன்றச் செய்ய வைத்த சத்தின் மூலமான பரமனை திரும்பிப் பார்ப்பதுவே யோகமாம் - புருஷோத்தம யோகமாகும்.

அலை என்ற எண்ணம் இருக்கும் வரை நீருக்கு தன்னுடைய தனிப்பட்ட உருவம் இருக்க, அதற்கு, 'தான், தனது' என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். அது நீர்தான் - அதை சுற்றி சின்னதும், பெரியதுமாய் இருக்கிற பலப்பல அலைகளும், எல்லாமும், இந்தக் கடல் முழுதும் வியாபித்து இருக்கும் நீரெல்லாம் - ஒன்றேயான ஒட்டுமொத்த கடல்நீர் தான் என்பது உணர - அதற்கு அகந்தையற்ற நிலையில் - அது பரமன் எனும் பேரின்பக் களிப்பினைப் பருகுவதற்கான நிலைக்குத் தயாராகின்றது.

5. உயர்வான இந்நிலையினை அடைவதற்கான தகுதி என்ன? பகவான் கண்ணன் சொல்கிறான்: தானெனும் அகந்தை, தானெனும் மயக்கம், தானெனும் பற்று ஆகிவற்றை நீக்கி நிற்பதேயாம். அக்குணங்களைப் பெற்றவன், ஆத்ம ஞானத்தில் நிற்க, இன்ப துன்பங்கள் தரும் விருப்பு வெறுப்புகளைக் கடந்து நிற்க, அப்பேறு பெற்றவன் பரமபதம் என்னும் முடிவில்லா நிலையினை அடைகிறான்.

6. உயர்வான இந்நிலை எப்படி இருக்கும்? பரமபதம் என்னும் நிலைக்குச் சென்றவர், அவ்வின்ப நிலையில் இருந்து திரும்பிவரா நிலையாம் அது. (கண்டவர் விண்டிலர்). அவ்விடத்தை சூரியனோ, சந்திரனோ, நெருப்போ ஒளிர்ந்திட இயலா. ஏனெனில், அவ்விடம், எவ்வொளிரும் பொருளுக்கும் மூலமாகவும், எல்லா ஒளி தரும் பொருளைக்காட்டிலும் பற்பல மடங்குகள் ஒளிர்வதான பரஞ்சோதியாம். எத்தனையோ மில்லியன் மைல்கள் கடந்து வர இயன்ற சூரியஒளியானாலும், புறக்கண்களை மறைக்கும் அளவிற்கு அது எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், அதனால் அகத்தினை ஒளிர்விக்க இயலுமா என்ன? அதை பரமனின் அருள் ஒளியால் மட்டுமே இயலும்.


----
இவ்வாறாக, 15ஆம் அத்தியாயத்தின் முதல் ஆறு சுலோகங்களின் பொருள் விளக்கத்தினைப் படித்துப் பார்த்தோம். தொடர்ந்தும் பார்ப்போம்.
------

Sunday, June 27, 2010

நீள்முடி ஐந்து : ஆழ்வார் மறைமொழி

ஆழ்வார்கள் அருளிய தமிழ்வேதம் இனிக்க இனிக்கச் சொல்லும் அமுதத்துளிகளில் இருந்து ஒரு துளிகள் இப்பகுதியில் பார்ப்போம்.

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப் பற,
தூமணி வண்ணனைப் பாடிப் பற. (313)

-பெரியாழ்வார்
கண்ணன் பொய்கையிற் பாய்ந்து, நீள்முடி ஐந்திலும் நடம் செய்து, காளியனை *மீள்*வித்தானாம்.காளிங்கன் எனப்படும் காளியன் ஏன் ஐந்து தலை அரவமாய் உருவகப் படுத்தப்படுகிறான்?

ஆணவம் மிகுந்தவரை என்ன சொல்கிறோம் - அவருக்கு தலைக்கனம் அதிகம் என்றல்லவா. இந்த "தான்,தனது" என்கிற எண்ணங்கள் படுத்துகிற பாடு இருக்கிறதே, அது சொல்லி மாளாது. தலையை ஊதிப் பெரிதாக்கி, என்று வெடித்துவிடுமோ என எல்லோரையும் அச்சப்படச் செய்யும். ஒரு தலை இருக்கையிலே இப்படியென்றால், ஐந்து தலை இருந்தால்?

பொய்கையில் நீர் அருந்தச் சென்ற அப்பாவிச் சிறுவர்கள், அதிலிருந்த விடமதை அறியாமல் அருந்தி மாண்டனராம். இப்படி நஞ்சாக நின்று அனைவரையும் கெடுக்கும் ஆணவம் என்ன செய்யும்?

கண்ணன் பொய்கையிற் குதித்தவுடன், கலங்கிய பொய்கையினைக் கண்டு சீற்றம் கொள்ள, நீரிலிருந்து எழும்பிக் குதித்து, தன் வால்களில் சிக்குண்டதுபோல் நடிக்கும் கண்ணனைப் பிடித்து அடிக்கத் துவங்கியது. அதற்கு அத்துணை பலம் எப்படி வந்தது. செருக்கு செய்யும் மாயம் கொலோ?

நாமும் பெரும்பாலும் இப்படித்தான் - ஐம்புலன்களும், முக்குணங்களும் செய்யும் மாயத்தால் - அகக்கண் மறைக்கப்பெறுகிறோம். அதன் விளைவால் சீற்றம் மிகுந்து 'தாம், தூம்' தான். தலைக்கேறிய செருக்கு சென்ற இடம் தெரியாமல், இருக்கும் இடத்தை மறக்கச் செய்து, குதிக்கச் செய்கிறது.

அறியாமை காளியனுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். காளியனால் கட்டுண்ட கண்ணனைப் பார்த்த கோகுலச் சிறுவர்கள், அச்சுற்று அலறிக்கொண்டுபோய் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டார்கள். சிலர் பெரிய நாகம் கண்ணனைப் பிடித்தது என்றார்கள். சிலர் ஐந்து தலைப் பாம்பு என்றார்கள், சிலர் நூறு தலைப் பாம்பு என்றார்கள். பார்த்தீர்களா, ஆணவம் தாண்டவமாடும் இடத்தில் ஐந்து நூறாகவும் பயமுறுத்துவதை!

கண்ணனுக்கோ காளியன் சிறுபுல். மிகுந்த உற்சாகத்துடன் காளிங்கன் தலைகளில் மாற்றி மாற்றி 'தா தை தத்தித்தை' என நர்த்தனம் செய்து - அவன் செருக்கை அடக்கினான். கண்ணனிடம் சரணடைந்த காளியன் மீள்கிறான். தன்னை யாரென உணர்ந்து மீள்கிறான் - மாயையில் இருந்து மீள அவன் கண்ணன் அருள் பெறுகிறான்.

காளியனை அடக்கிவிட்டு மீண்டு வந்த கண்ணனைச் சூழ்ந்து கொண்ட சிறுவர்கள் கேட்டார்கள் - கண்ணா, இந்த ஐந்து தலைப்பாம்பை எப்படி அடக்கினாய் - நாங்கள் பயந்தே போய் விட்டோம் என்று. கண்ணன் சொல்கிறான் - ஐந்து தலைப் பாம்பா? அது ஒரு தலைப் பாம்புதான்; அதன் நான்கு குட்டிகளும் அதனுடன் சேர்ந்து கொண்டு ஐந்துதலைப் பாம்புபோல் வேடமிட்டன என்று. கண்ணனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டுதான். அது ஐந்து தலைப் பாம்பும் இல்லை என்கின்றான்!

ஆம், இல்லைதான். ஐந்து கருவிகளால் ஏற்படும் அல்லல் அகற்றப் பெற்றால் ஐந்தில்லையே. ஐயனே - ஒன்றேயெனத் தான் உன்னையே உணர்வேனோ!.
உணர்ந்த காளியனை மீள்வித்தவன், நம்மையும் மீள்விப்பானோ!

ஐந்து கருவிகளும் ஆன்மாவை உடலெனும் செக்கிலிட்டுப் பிழிகையில் பீடிக்கும் ஐம்பெரும் நோய்களில் இருந்து காப்பாற்றும் ஒரே மருந்தும் நீயல்லவோ!

தீர்மருந் தின்றி ஐந்து நோயடும்
செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
ஒக்கின்றாய்,
ஆர் மருந்தினி யாகுவர்? அடலாழி
யேந்தி அசுரர் வன்குலம்,
வேர் மருங்கறுத் தாய். விண்ணுளார் பெருமானேயோ. (3457)
-நம்மாழ்வார்

அசுரர் குலத்தை வேரறுத்த எம்பெருமான், அதுபோல இப்போது எம் பிறவிப் பிணியினை தீர்க்க வேண்டும்.

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவருளென்னும் ஒள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (1461)
-திருமங்கை ஆழ்வார்


அருள் என்னும் வாள் உருவி அறுத்து எறிந்தேன் ஐம்புலன்களை என்பார் திருமங்கை ஆழ்வாரும். பகவத்கீதை அத்தியாயம் 15 இல், பகவான் கண்ணன் வழிகாட்டுவது இதைத்தான் - "பற்றின்மை எனும் கோடாலியால், சம்சார விருட்சத்தினை வெட்டி வீழ்த்து" என்று.

இந்த ஐம்புலன்களும் அப்படியென்ன காளியன் என்னும் பாம்பின் ஐந்து தலைகளுக்கு ஒப்பாகச் சொல்லும் அளவிற்கு மோசமா? இந்த அடுத்த பாசுரத்தில் பாருங்களேன், ஐம்புலன்களை 'வன் கயவர்' என்கிறார் ஆழ்வார்.


ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத

ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல்கிற்பனுன் திருவருளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
அலைகடலரவம் அளாவி, ஓர்
குன்றம் வைத்த எந்தாய். கொடியேன் பருகின்னமுதே. (3459)

- நம்மாழ்வார்

இந்த ஐந்து கயவர்களையும் உன் திருவருள் இல்லாமல் என்னால் எப்படி வெல்ல முடியும்?. கௌரவ கூட்டத்தை வெல்ல பாண்டவர்கள் உன் துணையை நாடியது போலவும், அலைபாய்ந்து கொண்டே இருக்கக் கூடியதும், ஒரே இடத்தில் நிலையாக நிற்க வைக்க கடினமானதுமான ஐம்புலன்களை அடக்க, கோகுலத்துச் சிறுவர்கள் செய்ததைத் தான் நாமும் செய்ய வேண்டும் - கண்ணனை அழைக்க வேண்டும். அவன் அருளால் மட்டும் தான் - நீள்முடி ஐந்திலும் நடம் செய்து இக்கயவரை அடுக்குதல் இயலும்.
அன்பாழி யானை யணுகென்னும்,
நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி
காணானைக் காணென்னும்
கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ். (2153)
- பொய்கையாழ்வார்

ஐம்புலங்களும் துளசிமாலை அணிந்த நெடுமாலை நினைந்து (கை கூப்பித் தொழுது, வாய் நிறைய புகழுரை வாழ்த்தி, கண் நிறையக் கண்டு, செவி இரண்டிலும் கேட்டு) இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். அலையும் புலன்களை அவன் வழி செலுத்தி நன்றான ஒன்றில் நாட்டம் செலுத்துவதே உய்வதற்கான வழியாய் நம்மறை நவிலும், கேளீரோ நல்லுலகத்தாரே!

Saturday, January 16, 2010

நாராயணீயம்

குருவாயூரப்பனே அப்பன் என, திருமதி. அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடலை முன்பொரு பதிவில் பார்த்தோம் அல்லவா, இந்தப்பதிவில், ஸ்ரீகிருஷ்ணன் புகழ் பாடும் நாராயணீயம் பற்றிப் பார்ப்போம். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தினைப் பொழியும் நாரயணீயமதில் அத்வைத பக்தியில் ஆழ்ந்து திளைத்திடலாம். நாராயண பட்டாத்ரி என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்டவை இப்பாடல்கள். தன் உடலைத் தானே சுமந்து அதன் உபாதைச் சுமைகளால் மனம் நொந்து, துயர் தீர வழி யாதெனத் தேடலின் விளைவுகள் இப்பாடல்கள். இப்பாடல்களை பாடியபின் பட்டாத்ரி அவர்களின் துயர் தீர்ந்தது. இப்பாடல்களைப் படிப்போருக்கும் அதுபோல துயரெலாம் களைய குருவாயூரப்பன் துணையிருப்பானாக. 

குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி குருவாயூர் தலமதில் கோவில் கொண்டு கலியுகத் துயர்தீர கருணைகொண்டான் கண்ணன்! மணிகள் முழங்கட்டும், மங்களம் பெருகட்டும், கலியுக வரதன் கார்மேக வண்ணன் கமலக் கண்ணன் புகழெங்கும் ஓங்குகவே! 

ஸ்ரீமந் நாரயணீயம் சுலோகத் தொகுதிகளை இங்கே படிக்கலாம். அவற்றில் இருந்து முதல் தசகத்தினை இங்கே தமிழில் படித்துப் பார்க்கலாமா? 

தசகம் 1: சுலோகம் 1 எல்லா இடத்திலும் நிறைந்தது, காலம் மற்றும் இடத்தினில் குறுகாதது, மெய்யான, எல்லையில்லா ஆனந்தம், தூய மெய்ஞானம் பரப்பிரம்மம்! கணக்கிலா மறைகள் உரைசெய்திட்டினும், கண்டு தெளிந்திட கடினமானதும், தெளிந்திட உன்னதக் குறிக்கோளான வீடுபேறாகவே விளைந்தது! அதுவே, இதோ, நம்கண் முன்னே குருவாயூரினில் திகழ்வது, ஆகா, என்ன அற்புதம்! இஃதே மனிதரின் பாக்கியமன்றோ! ~~~~ கேட்டதைக் கொடுப்பவனாம் கீதையின் நாயகன் குருவாயூர் கண்ணனை பரப்பிரம்மம் என இப்பாடல் சொல்கிறது. பிரம்மமானது உருவம் என்ற வரையறைக்கு உட்பட்டதா என்கிற கேள்வி எழலாம். பிரம்மம், அதாவது குணங்கள் இல்லாத நிர்குண பிரம்மம், எப்படி நம் கண்முன்னே திகழ முடியும்? மேலே எப்படி என்கிற கேள்வியினை சற்றே மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். கண் முதலான புலன்களால் துயத்திடும் பொருளனுபவம், எப்போதும் வரையறைக்கு உட்பட்ட பொருட்களையே துய்த்திட இயலும். இவை சாதாரண, நிலையிலா இன்பத்தினையே தந்திட இயலும். அப்பொருள் இல்லையேல் அவ்வின்பம் இல்லை. நிலையான பேரின்பத்தினைத் தருவது பரப்பிரம்மமாக மட்டுமே இருக்க இயலும். அப்படிப்பட்ட பிரம்மம் குருவாயூரினில் திகழ்ந்திட, அப்பேரின்பத்தினைக் கண்டு களித்திட இவ்விரு கண்களால் மட்டுமே இயன்றிடுமா? உபநிடதமும் சொல்லும்:
குருவின் துணையுடன் மனதால் மட்டுமே காணக்கூடியது பிரம்மம். அதில் வேற்றுமை என்பதே இல்லை. - பிரஹதாரண்யக உபநிடதம் 4.4.19
~~~~ தசகம் 1: சுலோகம் 2 பிரம்மம், மானிடப்பிறப்பு, பக்தியோகம் மற்றும் ஸ்ரீமத் பாகவதமென, கிடைத்தற்கரிய பொருட்கள் நான்கிருப்பினும் நெய்யிருக்க வெண்ணையைத் தேடி அலைபவர் ஆயிரம்! தந்திரங்களையும் மந்திரங்களையும் தரிசனங்களையும் நம்பித் தம்பொழுதை வீணாக்கியவரே அவரெல்லாம்! நாமெல்லாம் இங்கே திடமாய் மனதில் முழுதாய் குருவாயூரப்பனையே நாடிடுவோம்! - அவனே, எல்லாப் பொருட்களிலும் உறைபவன், எல்லாக் குறைகளையும் களைபவன். ~~~~ இப்படியாகச் சொல்லி, அடுத்த வரும் சுலோகம் குருவாயூரப்பனின் திருஉருவத்தினை எடுத்தியம்புகிறது. ~~~~ 

தசகம் 1: சுலோகம் 3 சாத்வ குணத்தின் தூய வெளிப்பாடே நின் திருவுருவமென வேதவியாசரின் சொற்களும் பலமுறை ஒலித்திடுமே. சச்சிதானந்தப் பேரொளியில் திகழும் பரமன் செவிக்கும் மனதுக்கும் இன் அமுதமேயாம். கைக்கொள்ள எளிதாய் கிடைத்ததென்றே அருள்பெற்ற அடியார் யாரும் உரைப்பரே. ~~~~ ஒப்பிலா பிரம்மத்தினைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது, அடுத்த சுலோகம்! இரண்டுக்கும் பொதுவானதை, அழகாகப் பட்டியலிடுகிறது: 

தசகம் 1: சுலோகம் 4 பிரம்மம் எனும் ஆழமான பெருங்கடல் செயலற்றதாம், எப்போதும் 'நிறை'ந்தாம், ஆனந்தம் தரும் அமுதினைக் கொண்டதாம், எண்ணிடலடங்கா விடுபெற்ற ஆன்மாக்களை தன்னிடத்தே முத்துக்களாய் கொண்டதாம், தூய சாத்வகுணமே வெள்ளை அலைகளாய் வீச, எல்லையிலாமல் எல்லாமுமாய் ஆனவனே தனித்தனியென இல்லாமல் முழுமையாய் இருப்பதென்னே! ~~~~ 

தசகம் 1: சுலோகம் 5 ஆதி அந்தமில்லாதவனே, செயலற்றதாய், பிரம்மமாய் இருப்பினும், மாயைதனை எம்மேல் வீசும் தொழில்கொண்டதேனோ வைகுந்தனே! தூய அறிவால் இடரேதும் இலாது, சத்வகுணமே நிறைந்திட, தூய தெளி தேனே! ~~~~~~~~~~~~ செயலே இலாமால் மாயைதனை எப்படி விளைவிக்க இயலும்? காந்தம் போலவோ? தன்னிடம் எந்த அசைவும் இல்லாமல், தன் வசம் இரும்பை இழுப்பதுபோலவோ! உபநிடதமும் சொல்லும்:
பிரகிருதி அல்லது இயற்கையினை மாயை அல்லது தோற்றமயக்கம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதனை நடத்தி வைக்கும் மாயாவி பரம்பொருளேயாம். - ஸ்வேதஷ்வதார உபநிடதம் 4/10.
எனினும் இந்த மாயையினால் பரமனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவன் சத்வ குணத்தினால் நிறைந்தவன். அவனிடம் 'நான், எனது' எனும் எண்ணங்கள் தோன்றுவதில்லை. அவனிடத்தில் இருந்து பிரம்ம சைதன்யம் மறைவுபடாமல் திகழ்கிறது. ~~~~~~~~~~~~~ நாம் தியானிப்பதற்காக குருவாயூரப்பனின் வடிவழகை எடுத்தியம்புகிறது அடுத்த வரும் சுலோகங்கள்: 

தசகம் 1: சுலோகம் 6 புதிய மழை மேகங்கள் போலும் புதிதாய் பூத்த காசாம்பூ மலர்கள் போலும் அழகாய்த் திகழும் குருவாயூரப்பனே, நல்லவைகளின் முழுவடிவமாம், இலக்குமியின் இருப்பிடமாம். அழிபொழியாய் இதயமதில் அருள்பொழிபவனே, நின்னுருவை எப்போதும் தியானித்திடுவோமே. 

தசகம் 1: சுலோகம் 7 மாயைகளைத் தாண்டிய மாயவனே, முன்னம் நினைத்தேன் புரியாத புதிர் உன் செயலென்று. மாந்தர் மாயையில் சிக்க துயர் பல ஏன்பட வேண்டும்? மானிடராய் பிறப்பதன் பயன் இப்போது அறிந்தேன். இல்லாமல் எப்படி எல்லையில்லா இன்பத்தைப் பருகிப்பின் அவ்வின்பத்தினை வெளிப்படுத்ததான் இயலும்? இத்தலத்தில் இவ்வடிவில் அந்த பிரம்மானந்தம் இருப்பது, இனி எல்லாம் இன்பமயமன்றோ! 

தசகம் 1: சுலோகம் 8 உன்னை வணங்கியவருக்கு உன் வடிவினைக் காட்டுபவன் நீ. கேட்காமலே வாழ்வின் குறிக்கோளினை அடையக் கொடுப்பவன். இந்திரலோக சுகங்களை ஏங்கும் வீணர்கள் அறியார் எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பாரிஜாதம் எம்தலைவன் ஹரியென்று. கணக்கிலா பரிசுகளைத் தருபவன் நீயன்றோ. 

தசகம் 1: சுலோகம் 9 கருணையை மட்டும் தரும் தெய்வங்கள் இருக்க, தன்னையே தருபவன் தனித்துவமான குருவாயூரப்பன்! உன்னருகே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னொளியில் திளைப்பவர் கொடுத்து வைத்தவரே! நின்னொளியில் திளைப்பது நீயுமல்லவோ! கணக்கிலா நன்னெறிகளின் இருப்பிடமே, சுரசேனையின் தலைவனே, உனக்கு வணக்கங்கள்! 

தசகம் 1: சுலோகம் 10 உயர்தலைவா, முரனை வதம் செய்தவனே, சங்கரன் முதல் எல்லா தெய்வங்களையும் ஆள்பவனே, எல்லா வலிமைகளையும் விட வலிவானவான் நீ. குறையற்ற நின்புகழை துறந்தோரும் பாடுவர். திருமகளை எப்போதும் நின்திருமார்பில் கொண்டவனே, எல்லாம் அறிந்தவனே, பற்றுகளற்ற குருவாயூரப்பனே, பகவன் என்ற போற்றுதலுக்கு உரிய முதல்வன் நீ மட்டுமே.

Friday, December 05, 2008

கண்ணன் காட்டும் கர்மயோகம்

நம்ம திவாய்யா பதிவில், கண்ணன் காட்டும் கர்ம வழி என்கிற தலைப்பில், கீதை மூன்றாம் அத்தியாய சுலோகங்களைச் சொல்லி, கர்ம யோகம் பற்றி விளக்கமா சொல்லியிருந்தார். அதன் முடிவில், அதைப்படித்ததில், நமக்குப் புரிந்ததை எழுதித் தரச் சொல்லி இருந்தார். இதோ அது:

செயலா, துறவா? செயல்களைத் துறந்து, தியானித்து,
சச்சிதானந்த சொரூபத்தினைக் காண விழைவது ஞான வழி.

செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!)
செயல்களை செய்யும்போதோ, நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக் கண்ணாடிகளால்,
இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்
ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை.

விருப்பு, வெறுப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?
செயலில் எப்படிப்பட்ட பலன் ஏற்படினும், அதை ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால்.
இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

கர்ம யோகம்:
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,
நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக் கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.

எல்லாம், இயற்கையால், முக்குணங்களின் தூண்டுதலால், நடப்பவை.
ஆகவே, தன்னால் நடந்தது என்ற ஆணவத்தினை அழித்தொழி.

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

இராஜச குணத்தால், தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி
- இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே குறிக்கோள்.

அந்த உயரிய குறிக்கோளை அடைய, ஆசையை ஒழித்து, பலன்களில் மேல் பற்று வைக்காமல்,
பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

Sunday, November 09, 2008

எல்லாம் கண்ணனுக்கே!

கண்ணனைப் பாடுவதென்றாலே, எப்போதுமே சொல்லிலடங்கா சுகம். கண்ணன் உருவம் என்றதுமே, நமக்கு பற்பலத் தோன்றும். ஒன்றா, இரண்டா, நொடியில் சொல்லி முடிக்க. ஓராயிரம் வேண்டுமே!. எதைச்சொல்ல, எதை விட!
காற்பாத விரலை வாயிலே சுவைக்கும் ஆலிலைக் கண்ணன் முதல், பார்த்தசாரதியாய், கர்மயோகம் உரைக்கும் கண்ணன் வரை, அவன் புரிந்த விந்தைகள்தான் எத்தனை, எத்தனை!. அவ்விந்தைகளில் மயங்கி, அவன் நினைவன்றி வேறொன்றும் அறியா கோபியர் போல், அவன் நினைவில் திளைத்திடும் சாதகம் போல் வேறொன்றோ, சொல் மனமே!.

இங்கே, பாபநாசம் சிவன் அவர்கள், மிக எளிதாக, கண்ணனைப் பாடுகிறார் பாருங்கள். கண்ணன் பாடலுக்கு, கர்ணரஞ்சனி இராகம்!

இராகம் : கர்ணரஞ்சனி
இயற்றியவர்: பாநாசம் சிவன்

எடுப்பு
தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே!

தொடுப்பு
கானவிலோலனே, கௌஸ்துப மாலனே,
கனகாம்பரதர வனமாலாதரனே,

முடிப்பு
சியாமள ரூபனே, சரசிஜ நேத்ரனே,
சகலபுவன பரிபாலனே சீலனே,
மாமணி வண்ணனே, மரகதக் கண்ணனே
மங்கையர் மனங்கவர் மாயனே, ஆயனே,
(தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே.)

இப்பாடலை திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.

தீன சரண்யனே தேவகி பாலனே...

இம்முறை, பாடலுக்கு விளக்கம் சொல்லும் இன்பத்தை, உங்களிடமே விட்டுவிடுகிறேன்!. வாருங்கள் அன்பர்களே!. பாடல் வரிகளுக்கு, தங்கள் விளக்கம் வேண்டும். குறிப்பாக - கானவிலோலன், கௌஸ்துப மாலன், கனகாம்பரதர வனமாலாதரன், சியாமள ரூபன், சரசிஜ நேத்ரன், இப்படியெல்லாம், சிவனார் புகழ்வதென் பொருளென்னவோ!. ஒருவரிப் பொருள்தான் என்றில்லை, கதையாக இருந்தாலும் சொல்லலாம்!

எல்லாமுமே கண்ணனுக்கே போய்ச் சேரட்டும்.

Thursday, September 18, 2008

இப்பேர்பட்டவரு யாருங்க? : குளிர்மழை

என்னவோ போங்க, இவரை இப்படியெல்லாம் சொல்லறாங்க, யாரு இவரு? கிரிதாரியாமே, பெரிய உபகாரியாமே, அப்புறம் சக்ரதாரியமே, அப்படிப்படவரு யாருங்க?

கிராமத்து அதிகாரி சரி, அது என்ன கிரிதாரி? கிரின்னா மலையாமே. மலைக்கு அதிகாரியா?, அல்லது மலையை தூக்கியவரா? ஓ, தன் சுண்டு விரலில், கோவர்த்தன மலையைத் தூக்கி நிறுத்தி, அங்கே இருக்கிற கிராமம், குளிர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படாம, மலையையே குடையா பிடிச்சவாரா! ஓகோ!

அப்புறம் என்ன சொல்லறாங்க, உபகாரி?, பெரிய உபகாரம் செஞ்சவராமே - அப்படி என்ன செஞ்சாரு? ஓ, கதறி அழைத்த பெண்ணின் மானத்தைக் காத்தவராமே. ஆமாங்க அது பெரிய உபகாரம் தான்.

இன்னமும் சொல்லறாங்க என்னவோ, சக்ரதாரி என்று. சக்கரம் கொண்டவரு என்ன செஞ்சாரு?. பிளிரு கேட்டபோது, பதறிப்போய் காப்பதினாராமே. அது என்ன பிளிறு, ஓ அதுவா, இந்த யானைகள் கத்துமே, அந்த சப்தம் தானே பிளிறு.
அட, களிறுனா யானை இல்லையா. களிறு - அதன் சப்தம் - பிளிறு : என்ன சொற்பொருத்தம்!.
அட, ஆமாம், அன்று, முதலை தன் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தபோது, அக்களிறின் பிளிரிடும் சப்தம் கேட்டு ஓடி வந்து, தன் சக்கரம் விட்டு, அந்தக் களிறைக் காப்பாற்றினாராமே!

இப்பேர்பட்டவரு, யாருங்க, கொஞ்சம் படம் போட்டுக் காட்டுங்களேன்?

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி:

துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி:

பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி:


ஓ, அப்படியா, இவரு கிட்ட நாம என்ன கேட்கலாம்?,

வளர்த்தென்னை இங்கு பரிபாலி. என்னை உன்பால் மிகுந்த அன்பு காட்டுமாறு வளர்த்து விடு.
உன் நாமம் அதைப்பாடி, நற்கதி பெறும் வழிகாட்டு.
களிறு மீட்டதுபோல், களபம் என் அறியாமை போக்கிடு.
துகில் மீட்டியதுபோல், என் அறிவினை மீட்டிடு.
கூக்குரல் கேட்டிட, வந்து காத்திடு.

குடை பிடித்த கிரிதாரி, துகில் மீட்டிய உபகாரி, களிறு மீட்ட சக்ரதாரி என்னை இங்கு பரிபாலி!. நம்ம தமிழ் மறை என்ன சொல்லுது பார்ப்போமா:

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
- நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (3042)

...
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே.
- தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (915)

ஆமாங்க, நீந்திக் கடக்க முடியாத, பிறவிக் கடலைக் கடக்க இவர் உதவியை நாடினால், கடக்க முடியுமாமே.
அலோ, சாரு,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
நேரா வந்து இங்கே என்ன பரிபாலிக்கணுமுங்க!

விருத்தம்

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி,
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி,
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி.


பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி
குளிர் மழை

Thursday, September 11, 2008

அர்ஜூனன் சந்தேகம்! : பாரதி

வேடிக்கை கதைகள் என்கிற பகுதியில், சின்னச்சின்னதாய் சில கதைகளும் எழுதி வைத்திருக்கிறார் நம்ம பாரதி.
அவற்றில் ஒன்று - இந்த "அர்ஜூனன் சந்தேகம்":

ஊர்: ஹஸ்தினாபுரம்
இடம்: துரோணரின் பள்ளிக்கூடம்

பாண்டுவின் பிள்ளைகளும், துரியோதனாதிகளும் அங்கே பள்ளி பயில்கிறார்கள். ஒருநாள் சாயங்கால வேளையில்,
அர்ஜூனன், கர்ணனைப் பார்த்து, 'ஏ கர்ணா, சண்டை நல்லதா? சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
'சமாதானம் நல்லது' என்று கர்ணன் சொன்னான்.
'காரணமென்ன?' என்று கிரீடி கேட்டான்.
கர்ணன் சொல்லுகிறான்: "அடே, அர்ஜூனா, சண்டை வந்தால் நான் உன்னை அடிப்பேன். அதனால் உனக்குக் கஷ்டம். நானோ இரக்க சித்தமுடையவன். நீ கஷ்டப்படுவதைப் பார்த்தால் என் மனம் தாங்காது. ஆகவே இரண்டு பேருக்கும் கஷ்டம். ஆதலால், சமாதானமே சிறந்தது' என்றான்!
அர்ஜூனன்: 'அடே, கர்ணா, நம் இருவரைக் குறித்து நான் கேட்கவில்லை. பொதுப்படையாக உலகத்தில் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா? என்று கேட்டேன்' என்றான்.
அதற்கு கர்ணன்: "பொது விஷய ஆராய்ச்சிகளில் எனக்கு ருசியில்லை' என்றான்.
இந்தப் பயலைக் கொன்றுபோட வேண்டும் என்று அர்ஜூனன் மனதுக்குள்ளே தீர்மானம் செய்து கொண்டான்.

பிறகு துராணாச்சாரியாரிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டான்.
'சண்டை நல்லது' என்று துரோணாச்சாரியர் சொன்னார்.
'எதனால?' என்று பார்த்தன் கேட்டான்.
அப்போது துரோணாச்சாரியர் சொல்லுகிறார்:
'அடே, விஜயா, சண்டையில் பணம் கிடைக்கும்; கீர்த்தி கிடைக்கும். இல்லாவிட்டால் மரணம் கிடைக்கும். சமாதானத்தில் சகலமும் சந்தேகம் - ச-ச-ச' என்றார்!

பிறகு அர்ஜூனன் பீஷ்மாச்சாரியாரிடம் போனான், 'சண்டை நல்லதா தாத்தா, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான். அப்போது கங்கா புத்திரனாகிய அந்தக் கிழவர் சொல்லுகிறார்: 'குழந்தாய் அர்ஜூனா, சமாதானமே நல்லது. சண்டையில் நம்முடைய க்ஷத்திரிய குலத்திற்கு நன்மையுண்டு. சமாதானத்தால் லோகத்திற்கே மகிமை' என்றார்.
'நீர் சொல்லுவது நியாயமில்ல' என்று அர்ஜூனன் சொன்னான்.
'காரணத்தை முதலாவது சொல்ல வேண்டும் அர்ஜூனா, தீர்மானத்தை அதன் பிறகு சொல்லுவாய்' என்றார் கிழவர்.
அர்ஜூனன் சொல்லுகிறான்: 'தாத்தாஜீ, சமாதானத்தில், கர்ணன் மேலாகவும், நான் தாழ்வாகவும் இருக்கிறோம். சண்டை நடந்தால் உண்மை வெளிப்படும்' என்றான்.
அதற்கு பீஷ்மாச்சாரியார், 'குழந்தாய், தர்மம் மேன்மையடையும். சண்டையாலேனும், சமாதானத்தாலேனும் தர்மம் வெல்லத்தான் செய்யும். ஆதலால், உன் மனதில் கோபங்களை நீக்கி, சமாதானத்தை நாடு. மனுஷ்ய ஜீவரெல்லாம் உடன் பிறந்தாரைப்போல பரஸ்பரம் அன்போடு இருக்க வேண்டும். அன்பே தாரகம், முக்காலும் சொன்னேன். அன்பே தாரகம்.' என்று சொல்லிக் கண்ணீர் ஒரு திவலை உதிர்த்தார்.
...............................................
சில தினங்களாயிற்று...
ஹஸ்தினாபுரத்திற்கு வேத வியாசர் வந்தார். அர்ஜூனன் அவரிடம் போய்ச் சண்டை நல்லதா, சமாதானம் நல்லதா என்று கேட்டான். அப்போது வேத வியாசர் சொல்லுகிறார்" 'இரண்டும் நல்லன. சமயத்துக்கு தக்கவாறு செய்ய வேண்டும்' என்றார்.
................................................
பல வருடங்களாயின...
காட்டில் இருந்து கொண்டு, துரியோதனாதிகளுக்கு தூது விடுக்கும் முன்பு, அர்ஜூனன், ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து 'கிருஷ்ணா, சண்டை நல்லதா?, சமாதானம் நல்லதா?' என்று கேட்டான்.
அதற்குக் கிருஷ்ணன், 'இப்போதைக்கு, சமாதானம் நல்லது. அதனாலேதான் சமாதானம் வேண்டி ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்படப் போகிறேன்' என்றாராம்.
------------------------------------------------
பாரதியின் கதை இத்துடன் இக்கதை முடிகிறது.
மகாபாரதக் கதையில் அதன்பின் நிகழ்ந்ததுதான் உங்களுக்குத் தெரியுமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கர்ணனுக்கு அர்ஜூனனின் மேலே காழ்ப்பு.
அர்ஜூனனுக்கு 'நானா, கர்ணனா' எனக்கண்டறிவதே நோக்கம்.
துரணரோ, தனக்கு ஆகவேண்டியதைப் பேசுகிறார்.
பீஷ்மரோ சாகப்போகிற நேரத்தில் மட்டும் 'சங்கரா சங்கரா' என்கிறார்.
வியாசரோ, தத்துவம் சொல்கிறார்.
இறுதியில் கண்ணன், தக்க சமயத்தில் செய்ய வேண்டியதை செய்கிறார். :-)

Friday, August 08, 2008

அம்புஜம் கிருஷ்ணா : குருவாயூரப்பனே அப்பன்

மக்கு மிக சமீப காலத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களை வழங்கிய பெருமை பெற்றவர் திருமதி. அம்புஜம் கிருஷ்ணா (1917 -1989) அவர்களாவர். அவரது பாடல் ஒன்றை இங்கே கேட்கப்போகிறோம். அதற்கு முன்னால் அவரைப்பற்றி சில வரிகள் வாசிப்போமா?

1951 இல் இவர் திருவையாறு வந்து சென்றபின் ஏற்பட்ட மாற்றத்தின் பின் பாடல்கள் பலவற்றை இயற்றினார் எனச் சொல்லப்படுகிறது. இவரது முதல் பாடலான 'உன்னை அல்லால் உற்ற துணை வேறுண்டோ...', தேவி மீனாட்சி அம்மனைப் பாடுகிறது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயற்கையாக பாடல்களை இயற்றி இருக்கிறார். இவர் அறுநூறுக்கும் மேலான பாடல்களையும் இயற்றி இருந்தாலும், அவற்றுக்கான உரிமையைக் கொண்டாடாத எளியவர். பாடல்களுக்கான இராகங்களை அமைத்தாலும், அவை தன் சிறிய இசை ஞானத்தால் அமைக்கப்பட்டவை எனச்சொல்லி, அவற்றை வாசிக்கும் இசை கலைஞரின் விருப்பதிற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம் எனச் சொன்னவர். கண்ணன் பாடல்களை பெரிதும் இயற்றிய இவர் கணவரின் பெயரும் 'கிருஷ்ணா' என அமைந்தது என்ன பொருத்தம்!.

இவர் இயற்றிய பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவை:
மனநிலை அறியேனடி மனங்கவர் - பாக்யஸ்ரீ
ஓடோடி வந்தேன் கண்ணா - தர்மவதி
என்ன சொல்லி அழைத்தால் - கானடா
பொழுது மிகவாச்சுதே - ரேவதி
காண்பதெப்போது - பிலஹரி
குருவாயூரப்பனே அப்பன் - ரீதிகௌளை

இந்த இடுகையில் 'குருவாயூரப்பனே அப்பன்' பாடலை திரு.உன்னி கிருஷ்ணன் பாடிடக் கேட்கலாம்: (ரீதிகௌளையில் அருமையான ஆலாபனை முடிந்தபின் பாடலைக் கேட்கலாம்)
(இப்பாடல் சென்ற வருடம் அகஸ்டா,ஜார்ஜியாவில் நடைபெற்றக் கச்சேரியல் பாடியது: நன்றி திரு.மஞ்சுநாத்)

குருவாயூரப்பனே அப்பன்



எடுப்பு
குருவாயூரப்பனே அப்பன்
ஸ்ரீ கிருஷ்ணன்
குருவாயூரப்பனே அப்பன்

தொடுப்பு
நாராயணா என நாவாற அழைப்போர்க்கு
வருமிடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
(குருவாயூரப்பனே அப்பன்)

முடிப்பு
விழிகட்கு அமுதூட்டும் எழில் திருமேனி
தழுவக் கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்
முழுமதி முகம் திகழ் அருள்விழிச் சுடர்கள்
அழைக்கும் அன்பர்க்கு அருளும் அடிமலர் இணையும்

முன்னம் யசோதை மைந்தனாய் வந்தவன்
இன்று நமக்கிரங்கி இங்கு(/எங்கும்) எழுந்தருளி
பாலனாய் யுவனாய்ப் பாலிக்கும் தெய்வமாய்
பரவச நிலைகாட்டும் பரம புருஷன்

(குருவாயூரப்பனே அப்பன்)

* திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.
* திருமதி. சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்.
* இந்த பாடலுக்கான ஸ்வரக் குறிப்புகளை இந்த PDF மென் இதழில் பார்க்கலாம் - நன்றி திரு. சிவ்குமார்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடல்களின் பட்டியல் இங்கே. - நன்றி திரு. லக்ஷ்மணன்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் நிழற்படம் - நன்றி தி ஹிந்து நாளிதழ் தளம்