Showing posts with label பட்டினத்தார். Show all posts
Showing posts with label பட்டினத்தார். Show all posts

Monday, January 12, 2009

மார்கழி : அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவது எந்நாளோ?

ம்ம ஊரில் இறைவனுக்கு அடியார்களாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டும் அல்லாமல், அவ்வடியார்களுக்கு அடியாராகவும் இருப்பவர்களும் இருந்திருக்கிறார்கள். அடியார்க்கு செய்யும் தொண்டே, ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாக, கொண்டாடி இருக்கிறார்கள். தொண்டாடுவதே, கொண்டாடுவது எனக் கொண்டாடி இருக்கிறார்கள். நாயன்மார்களாக நாம் போற்றும் பலரும், இப்படித்தான். அடியார்க்கு அடியாராக இருப்பதே சிவத்தொண்டு என வாழ்ந்த அந்நாயன்மார்களின் பட்டியலினை இங்கு ஒரு பாடலில் நாம் பார்க்கப் போகிறோம்.
என்ன பாடலா? பட்டியலா? இரண்டும் தாங்க!
அதற்கு முன்னால், ஒரு பட்டினத்தார் பாடலைப் பார்ப்போம்.

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ ...?

இதுதான் பட்டினத்தார் பாடல். இதில் அவர் குறிப்பிடும் மூன்று நாயன்மார்கள்:
சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் என மூன்று நாயன்மார்களை குறிப்பிடுகிறார்.

இப்போது, மூன்றிலிருந்து, அறுபத்து மூன்றுக்குச் செல்வோமா!

ஊத்துக்காடு வேங்கடகவி(1700(?)-1765(?)) அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். 'அலைபாயுதே, கண்ணா...', 'தாயே யசோதா' போன்ற அற்புதமான கண்ணன் பாடல்களை இயற்றியவர். அப்படிப்பட்டவர், சிவனடியார்களையும் ஒரு நீண்ட பட்டியலெடுத்துப் பாடுகிறார்!
பார்ப்போமா! பாடல், தொடங்குவதைப் பாருங்கள், மேலே பார்த்த பட்டினத்தார் பாடல் விட்ட இடத்தில் இருந்து, தொடங்குவது போல உள்ளது.

இராகம் : பரசு
தலைப்பு : பெரியபுராணக் கீர்த்தனை
வழங்குபவர் : அருணா சாய்ராம்
நிகழ்ச்சி : மார்கழி மகா உற்சவம் 2008
வயலின் : H.N.பாஸ்கர்
மிருதங்கம் : J.வைத்யநாதன்
கடம் : கார்த்திக்



~~~~~~~~~~~~~~~~~~~
பாட்டைக் கேட்டுக்கொண்டே, வரிகளைப் பார்ப்போமா?

எடுப்பு
ஆளாவது என்னாளோ சிவமே
அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் - உன்
அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் (ஆளாவது...)

தொடுப்பு
கேளாது அளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே
இளம் தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும்
துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவது...)

முடிப்பு
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால்
புண்ணிய பிறவியாக வேணும்

இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும்
இல்லா பதத்திணையாக வேணும்(இன்னவரில்)

1. காழிமணம் சிவபாதமகன் (1), திருநாவரசன் (2), மணிவாசக(3), சுந்தரன்(4) எனும் (இன்னவரில்)

2. சிறுத் தொண்டர்(5), திருநீலகண்ட(ர்)(6), விறன் மீண்ட(ர்)(7), நமி நந்தி(8), தண்டி அடிகளெனும்(9) (இன்னவரில்)

3. ஐயடிகள் காடவர்கோன் (10) ஆனாய(11) கணம் புல்லர்(12) நின்றசீர் நெடுமாற(13)
கணநாத (14) முனையாடுவாரொடு (15) திருநாளைப் போவாரெனும்(16) (இன்னவரில்)

4. மெய்பொருளார் (17) பெருமிழலைக் குறும்பர்(18) ஏனாதிநாத(19) கலிக்கம்பர் (20)
அமர்நீதி(21) நரசிங்க முனையரய (22) சடைய(23) சண்டேச (24) கலிய(25) காரியாரெனும்(26) (இன்னவரில்)

5. மானக்கஞ்சாற(27) நேச(28) பூசலாரொடு(29) வாயிலார்(30)
சோமாசிமாற(31) மங்கையர்க்கரசி(32) குங்கிலியக் கலயார்(33) இளையான்குடி
மாற(34) அரிவாட்டாயரி(35) கூற்றுவர்(36) கோட்புலி(37) சாக்கியர்(38) சத்தியள்(39) - சிறப்
புலியர் (40) செருத்துணையர் (41) புகழ்த்துணையர்(42) குலச்சிறையர்(43) கழற்றறிவர்(44) இயற்பகையரெனும் (45) (இன்னவரில்)

6. திருமூல(46) முருக(47) மூர்த்தி (48) அப்பூதி(49) ருத்தர பசுபதியார்(50) இசைஞானியர்(51)
நீலநக்கர்(52) இடங்கழியர்(53)அதிபத்தர்(54) எறிபத்தர்(55) ஏயர் கோனொடு(56)
நீலகண்ட யாழ்பாண(57) புகழ் சோழ(58) கோட்செங்கட்சோழ(59) கழற்சிங்கர்(60)
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு(61) கண்ணப்பர்(62) குறிப்புத் தொண்டரெனும்(63) (இன்னவரில்)

இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆளாவது...)

~~~~~~
புதிர் பக்கம்:
1) ஆகா, 63 நாயன்மாரையும் ஒரே பாட்டில் அடுக்கிட்டாரே!
ஆனா, ஒருத்தரை விட்டுட்டாரு போல இருக்கு? அப்படியும் இருக்குமோ? அப்படீன்னா, ஏனோ?
புதிருக்கான குறிப்பு இங்கே இருக்கு, பார்த்துச் சொல்லுங்க!
2) இந்தப் பாட்டில், நாயன்மார்களை, ஊத்துக்காடார், குறிப்பிடுகையில், எதேனும் வரிசை இருக்கிறதா? முதல் வரியில் சமயக்குரவர் நால்வரையும் குறிப்பிட்டி விட்டார். அவர்கள் முதன்மையானவர்கள் என்பதனால். மற்றவர்ளைக் குறிப்பிடுகையில் வரிசை ஏதுமுண்டா? அப்படியானால், அது என்ன?. பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் வரிசைக்கும், இவ்வரிசைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
~~~~~~
பி.கு : ஒவ்வொரு நாயன்மார் பெயருக்கும் சுட்டி தந்துள்ளேன். தமிழ் விக்கிபீடியாவில் அவரைப்பற்றிய விவரங்கள் அறியலாம்.
~~~~~~
அடியார்க்கு அடியார் மட்டுமல்ல,
அடியார்க்கு, அடியார்க்கு, அடியனாம்!
அடியார்க்கு அடியாராய் இருப்பவருக்கு அடியாராய் ஆகும், உயர் நிலைக்கு, உகந்த ஆளாவது எப்போதோ?
நாயன்மார்கள் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி, அவர்களெல்லாம் அடைந்த, ஈடு இணையில்லாத, இறையடி எனும் பதத்திற்கு இணையான பதத்தினை அடைய வேண்டும்! சிறுமையான, இப்பிறவி போக வேண்டும். இன்னொரு பிறவி வாய்த்தால், அது புண்ணிய பிறவியாக வேண்டும்.
தொடுப்பில் பாருங்கள், எப்படி, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன! அற்புதம்!

பாட்டைக் கேட்டீங்களா?
பாட்டென்றால் இப்படி இருக்க வேணும்.
பாட்டுக்கு இசை என்றால் இப்படி இருக்க வேணும்.
அதை அனுபவித்து பாடும் பாடகர் என்றால் இப்படி இருக்க வேணும்.
இப்படி எல்லாவற்றுக்கும் இலக்கணம், இப்பாடல்!