Showing posts with label மார்கழி. Show all posts
Showing posts with label மார்கழி. Show all posts

Sunday, December 06, 2009

மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி 'ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க' என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்...)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை 'வினராதா நா மனவி...' என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி 'ஓ ரங்கசாயி..', மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!



இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா - நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா...)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா...)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, "ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்" என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் 'ரங்க சாயி' எனச்சொல்வது மட்டுமல்ல. 'காவேரி தீரே, கருணா விலோலே...' போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)

Saturday, January 03, 2009

மார்கழி : ராகம் தானம் பல்லவி

"இராகம்,தானம்,பல்லவி", என்பது நமது பாரம்பரிய இசை வழக்கங்களில் ஒன்று. என்னதான் அது என்று கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா? இராகம் மற்றும் தானம் பகுதிகளில் பாடல் வரிகள் இருக்காது. பொதுவான ஆலாபனை தான் இருக்கும். இது என்ன 'ததரினஅஆஆஅ..' ன்னு பாடிக்கிட்டு இருக்காங்களேன்னு, முதலில் கேட்பவர்களுக்கு இருப்பவர்களுக்குத் தோன்றும். நானும் அப்படி நினைத்தது உண்டு. ஆனால், நிறையக் கேட்க கேட்க, இந்த இராகம், தானம் பல்லவியில், இராகத்தினை ஆழ்ந்து இரசிக்க லயிக்க இயலும், என்பது புரிகிறது.

RTP - என வழங்கப்படும், "இராகம்,தானம்,பல்லவி" யில்
இராகம் பகுதி :- இராக ஆலாபனை செய்வது போன்றது. ஆனால், சற்றே விரிவாக ஆலாபனை செய்வது. திரு.ஜி.என்.பாலசுப்ரமணியம், இதைச் சிறப்பாகச் செய்து, அதில் முத்திரை பதித்தவர். அவர் RTP பாடுகையில், முதலில் இராகத்தின் சாயலைக் காட்டும் ஆலாபனை, தொடர்ந்து வயலின், பின்னர் நீண்ட, ஆழ்ந்த ஆலாபனை, மீண்டும் வயலின் - எனப் பகுதி பகுதியாக இராகம் பகுதியினை சுவையாகத் தருவார். இப்போதெல்லாம், அதைக் காண்பது அரிது, பாடகர் ஆலாபனையை முழு மூச்சில் முடித்துவிட, வயலினார் ஆலாபனையைத் தொடருவார். இரண்டு அல்லது மூன்று வேகங்களிலும் பாடுவது உண்டு.

தானம் பகுதி :- தாளம் + ஆலாபனை = தானம். தாளத்தோடு சேர்த்த ஆலாபனையான இதை, பொதுவாக மத்தியம காலத்தில் பாடுவார்கள், இந்தப் பகுதியில். இதில் குறிப்பாக 'தா', 'னம்', 'தோம்', 'நொம்' போன்ற சொற்கட்டுக்களால் நிறைந்திருக்கும். பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு.

பல்லவி பகுதி :- இறுதியாக, பல்லவி பகுதியில் தான், பாடலின் வரிகளையும் சேர்த்து பாடப்படும். அதுவும், பொதுவாக ஒரே ஒரு வரிதான் இருக்கும். அந்த ஒரு வரியினையே தங்கள் கற்பனைக்கேற்ப, விரிவாக பலவாறு விரித்துப் பாடுவார்கள். இப்பகுதியினை 'நிரவல்' என அழைப்பர். அதன் பின், பல்லவியை மூன்று முறைப் பாடும், திஸ்ரம் அல்லது திரிகாலம் என்பதைப் பாடுவர். அதன் பின், பல்லவியை, நான்கு முறை பாடுவர். நடையையோ அல்லது தாளத்தையோ வெவ்வேறாக மாற்றி, பல்லவி்யைப் பாடிட, பாடலுக்கு 'வேகம்' சேர்க்கும் அழகினைப் பார்க்கலாம். ஒரு இராகத்தோடு நிற்காமல், பல்லவியை, இராகமாலிகையாகவும் பாடுவர்.

பல்லவி முடிந்தபின், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் வாசிப்பது வழக்கம்.

பெரும் பாடகர்கள் அனைவரும், தங்களுக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதும் வழக்கம். ஜி.என்.பி அவர்களுக்கு, ஆலாபனையில் கவனம் என்றால், அரியக்குடியாரும், செம்மங்குடியாரும் தானம் பகுதியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். டி.என்.சேஷகோபாலன் அவர்கள் ஒன்றரை மணி நேரம் வரை கூட, ஒரே ராகம் தானம் பல்லவியைப் பாடியிருக்கிறார். அந்த அளவிற்கு, பாடகர் தனது கற்பனைத் திறனை பயன்படுத்தி, விதவிதமான கணக்குகளில் சஞ்சரிக்கும் சங்கதிகளைப் பாடுவதற்கான தளமாக இந்த இராகம்-தானம்-பல்லவி அமைகிறது. இசையின் சுரங்களின் கணக்கில் அமையும் அறிவியலும், அவ்வறிவியலுக்கு அப்பால், அங்கே அது கலையாக பரிமாணிப்பதும், என்ன அழகு, எத்தனை அழகு!

இங்கே, ஒரு இராகம், தானம், பல்லவியினைக் கேட்கலாமா?

இயற்றியவர்: மகா வைத்யநாத சிவன்
பாடுபவர் : செம்பை வைத்யநாத பாகவதர்
இராகம் : தோடி
பல்லவி வரி : உனது பாதம் துணையே, ஓராறு முகனே, உனது பாதம் துணையே!

Ragam Thanam Palla...



(படத்தில் : செம்பை வைத்யநாத பாகவதரும், செம்மங்குடி அவர்களும்; வயலினில் இருப்பது பிடில் சௌதய்யா அவர்கள்)

மேலும், மதுரை மணிஐயர் அவர்கள் பாடிட, பல்லவி பகுதியினை மட்டும் இங்கே கேட்கலாம்:


மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் பாடிட, இராகம் (தானம்) பல்லவியினை இங்கு கேட்கலாம்:


மேலே எப்படி மூன்று இசை விற்பன்னர்கள், மூன்று விதமாக பாடியுள்ளார்கள் என்பதைக் கேட்கையில், நமது பாரம்பரிய இசையிலும் கற்பனைக்கேற்ப பாடுவதற்கு இடமும், கட்டமைப்பும் இருக்கத்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது. சமீபத்தில், டி.எம்.கிருஷ்ணா அவர்கள், மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில், சற்றே மாறுதலாக, ராகம், தானம் முடிந்தபின், பல்லவிக்கு பதிலாக, வர்ணம் பாடி, வர்ணத்தின் வரிகளைக் கொண்டு நிரவல், திரிகாலம் மற்றும் ஸ்வரம் ஆகியவற்றைப் பாடினார். இதுபோல், அவ்வப்போது, பாரம்பரியத்திற்கு இழுக்கு வராமல், அதே சமயம், புதுமைகளையும் படைத்தவாறு வீறுநடை போடும் இசைக் கலைஞர்களைப் பார்க்கையில் வியப்பாகவும், இருக்கிறது!

Sunday, December 21, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

Saturday, December 20, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (1)

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;





சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

பிற்சேர்க்கை:
கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
(இவ்விரண்டும் , ஜெயா டி.வி யின் ஒளிபரப்பில் இடம்பெறவில்லையென்பது வருத்தமானதே.)

(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)

Tuesday, December 16, 2008

மார்கழி : எப்படிப் பாடினாரோ!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.