Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Friday, January 08, 2016

குறிப்பினை பகர்ந்திடு குமரேசா

அகமதில் நின்முகமது அனுதினம் நிலைத்திட
அறுமுகவேளே அருள்வாயே

இகமதில் துயரது இனியேனும் வாராது
இவனுக்கினி அருள்வாயே

உலகினில் உழல்வோருக்கு ஒருபகை அண்டாது
தலைமுதல்கால்வரை காப்பாயே

பலகணி வழிதனில் நினதொளி படர்ந்திட
பனிமுகம் தெரிந்திட அருள்வாயே

வழிதனில் விழிவைத்து எதிர்பார்த்திடும் அன்பரது
விழிதனில் தெரிந்தே அருள்வாயே

எனதிருசெவி தனிலும்  ஓம்கார நாதமெனும்
உனதொலி ஒலித்திட அருள்வாயே

நாசிவழி சுவாசம்தனை ஒருநிலைப்படுத்தி
வாசியோகம் செய்ய அருள்வோனே

பாயும் மனமதை சுழிதனில் அடக்கிடும்
மாயம் தன்னை அருள்வாயே

குணமது மூன்றும் குறையின்றி சமமாகிடும்
குறிப்பினை பகர்ந்திடு குமரேசா.

Saturday, January 10, 2015

விடலைப் பருவமடி!

இன்று காலை கண் விழிக்கையில் மனதில் தோன்றிய வரிகள். மால் மருகன் முருகனை எண்ணி மருகும் பாடல் வரிகள்.

எடுப்பு
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

தொடுப்பு
வெகுண்டு விரைவாய் துடிக்குது மனது
வேட்கை அதனில் புதிதாய் புகுந்தது
விடலைப் பருவமடி - வெண்ணிலா
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 1
சுடலைப் பொடி பூசும் சுந்தரேசன் மகன்
சுகுணகுமாரன் சுந்தர ரூபனை நாடி
இகபரசுகம் பெறவே துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

சரணம் 2
விரைந்தெனைக் காண வேலவன் வருவான்
பரிவோடு என்னை பார்த்திட வருவான்
பாலகன் இவனை வாரி அணைத்து
ஆவலைத் தீர்க்க அன்பிலே தவிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

முடிப்பு
அறிந்தது யாவும் அகந்தையை தூண்டுது
அங்கம் எங்கும் அவித்தையே மிஞ்சுது
அறிந்தது யாவையும் அடியோடு மறக்க
அழகன் முருகனைக் காணத் துடிக்கும்
விடலைப் பருவமடி - அறியா
விடலைப் பருவமடி!

Wednesday, June 19, 2013

ஓடும் கங்கை நாறும் கொன்றை

ஓடும் கங்கை நாறும் கொன்றை

சுடாத நிலவு சூடும் பிரான்

விடாது உலையில் வாட்டி எடுத்தனன்

விடாது ஒட்டும் வினையை.


தண்டை ஒலிக்க வெண்டையம் இனிக்க

கிண்கிணி கிலுகிலுக்க சதங்கைகள் கொஞ்ச  

கண்கழலில் வாணியும் சிலம்பில் பரவிந்தும்

அணியழகு சிங்கார செந்தில் வேலவன்;



பிரானின் குமாரன் உமாவின் சுதனாம்

சூரனை வேலினால் வென்ற செவ்வேள் மா

மரத்தை இரண்டாயப்் பிளந்து தன் செங்

கரத்தால் காட்டினான் அருள்.


--------------------------------------------

கந்தன் அணியும் ஆபரணங்களுக்கான மேற்கோட்கள்:


தண்டை:

சிந்திக்கில்லேன் நின்று சேவிக்கில்லேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கில்லேன்
- கந்தரலங்காரம்


வெண்டையம்:

காலின் கழலோசையு நூபர
வார்வெண்டைய வோசையு மேயுக
காலங்களின் ஓசைய தாநட மிடுவோனே
- திருப்புகழ்


கிண்கிணி:

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினாலுலகம் கேட்டதுவே.
- கந்தரலங்கரம்


சதங்கை:

மறைசதுர் விதந்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி வணங்க என்று பெறுவேனோ
- திருப்புகழ்

தண்கழல்:

மதுரவாணியுற்ற கழலோனே
- திருப்புகழ்

சிலம்பு:

இனியநாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்
- திருப்புகழ்


Thursday, September 27, 2012

வேலும் மயிலுமே



இராகம்: சுசரித்ரா
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: கோட்டீஸ்வர ஐயர்



எடுப்பு

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! 

தொடுப்பு

காலை மாலையுமே மனமே துதி  கந்தனை!

காலை மாலையுமே மனமே துதி காலன் வரினுமே - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

முடிப்பு

சித்ரகவி நக்கீரன் தத்தை தவிர்த்த தீரன்

கஜபத்ர வீரபத்ர வீரபாகு சோதரன்

ஆறுபத்ர வசீகரன் சுசரித்ர சுசீகரன்

விசித்ர கவி குஞ்சரதாச மித்ர ருசீகரன் - சக்தி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

---------

பாடுபவர்: சஞ்சய் சுப்ரமணியம்


Tuesday, March 13, 2012

மனம் ஏதய்யா

ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி
புனைந்தது: அடியேன்

பல்லவி

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா - உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

அனுபல்லவி

தொட்டுத் தொடர்ந்திடும் பழவினைகளும் தொடரவே  - உனை 

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

சரணம்

சொட்டு சொட்டெனத் தூர்த்திடும் நின்னருளுக் கேங்கிட

பட்டுப்போனதொரு பாலையில் நீரனெ நின்னருள்

மட்டிலா மகிழ்ச்சியை தந்ததே முருகய்யா - நிதம் உனை

விட்டுப் பிரிந்தாலும் விட்டுப்பிரிய மனம் ஏதய்யா

Sunday, August 14, 2011

முருகினைக் காணா விடில்

ஒருகண் உலகதைக் காணப்போது மெனினும்
இருகண் இருந்தும் பயனென்கொல் எனதருமைத்
திருமுருகினைக் காணா விடில்.
முக்கண்ணனுமை மைந்தன் செந்திற்பதியே தேவாதிதேவா
இக்கணமே எனைக்காக்க விரைவாய் அருள்வாய்.
ஈராறுகண் இருந்தும் எனைக்காணதிருப்பதேன்
ஓராறு அவையங்களும் உனைத்துதி செய்ய
வேறேது கதியேது விரைவாய் அருள்வாய்.
-ஜீவா
----------------------------------------------------------------------------------------------------------
அடுத்து இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது செந்திற்பதியைப் பாடும் சந்தமொன்று சாவேரி ராகத்தில், பெரியசாமித் தூரன் அவர்கள் இயற்றியது.

ஸ்ரீபாலகோபல பாலா எனும் தீக்ஷிதர் கிருதியும்,
சங்கரி சங்குரு சந்திரமுகி எனும் ஷ்யாமா சாஸ்திரிகள் கிருதியும் போலவே
இப்பாடலில் சாவேரி இராகத்தில் இழைந்தோடும் இனிமைய இரசிக்கலாம்.

ராகம்: சாவேரி
தாளம்:ஆதி

எடுப்பு
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ
(முருகா முருகா என்றால்)


தொடுப்பு

ஒருகால் முறைசெய்தாலும் நின்பதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான்
(முருகா முருகா என்றால்)


முடிப்பு

தெரியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ
அன்பேவடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே
(முருகா முருகா என்றால்)

பாடுபவர்: அருணா சாய்ராம்




தேவாதிதேவன் : தேவாTheதேவன்!

Friday, July 29, 2011

விழிக்கும் மொழிக்கும் பழிக்கும் வழிக்கும்

கேள்வியும் பதிலும்:

இது கேள்விக்கேற்ற பதிலல்ல - அதற்குப்
பதில் பதிலுக்கேற்ற கேள்வி.

அடியேன்:
பழித்திருக்கும் பாதக உலகம் பாழுங்கிணற்றில் தள்ளப்பார்க்க
விழித்திருப்பதே விழிக்கும் வழிக்கும் துணையாமோ?
செழித்திருக்கும் மொழியும் எம்மை அணையாய் தடுத்திருக்க
வழித்தடமெல்லாம் வானோர் கண்திறந்து பார்த்திடச்செய்திடும்
விழித்திருத்தலே வாடிக்கையாய்ப் போகாதோ?

கந்தரலங்காரம்:
விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!


|

Sunday, June 05, 2011

திருமுருகன் உதித்தனன் உலகம் உய்ய!

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய!
- கந்தபுராணம்

"பிறவா யாக்கைப் பெரியோன்" என்று சிலம்பு உரைக்கும் ஈசனே, அறுமுகச் செவ்வேள் முருகனாக உதித்தனனாம். அருணகிரியார் முருகனை "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்பார். காளிதாசன் "குமார சம்பவம்" எனப் பெயரிட்டதுபோல; அந்த நிகழ்வை விளக்கும் காண்டத்தைக் கந்தபுராணத்தில் "உற்பத்திக் காண்டம்" எனப் பெயரிட்டுள்ளது போல;- உலகம் உய்வதெற்கன ஈசனே குழந்தை வடிவம் கொண்டு தோன்றிய அரும்பெரும் நிகழ்வு அஃது.

ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதம் கடந்து நின்ற விமல! ஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க! என்றார்.
-கந்தபுராணம்

தேவர்கள் ஈசனிடம் வந்து வேண்டுகிறார்களாம். எப்படி? "வேதங்களையும் கடந்து நின்ற விமலனே! நீ உன்னிடத்திலிருந்து, உன்னையே நிகரான ஒப்பற்ற குமரனைத் தந்திடுதல் வேண்டும்!”. நின்னையே நிகர்த்த மேனியாய் வேண்டும் என வேண்ட - அதன்படி நடந்த நிகழ்வது - திருமுருகத் தோற்றம். தந்தை இல்லாதாதோர் பரமனை தந்தையாகக் கொண்டவன் கந்தன் என்பார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

முகங்கள் ஆறு:
முருகனுக்கு முகங்கள் ஏன் ஆறு?

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

ஆதி அருணாசலம் அமரும் ஈசனாகவே குமரக்கடவுள் இருப்பதால், முருகனுக்கும் ஆறு முகங்கள்.
சிவனுக்கும் அறுமுகங்களா? சிவனுக்கு ஐந்து முகங்கள் தானே என்றால், ஆம் பொதுவாக ஐந்து முகங்கள்தான்.
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் தவிர, உள்நோக்கி இருக்கும் 'அரோமுகம்' என்றொரு முகமும் சொல்லப்படுகிறது - அது ஞானிகளுக்கு மட்டுமே புலப்படுமாம். அந்த அரோமுகம் வெளிப்பட்ட நேரத்தில், ஆறு முகத்தின், ஆறு நெற்றிக்கண்ணில் இருந்தும் வெளிப்பட்ட ஆறு அருட்பெரும்ஜோதிகளாக வெளிப்பட்டனவாம்.
பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பானது - ஆறு ஜோதிகளாய், ஆகாசம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி என ஐம்பெரும் பூதங்களால் சரவணப்பொய்கைக்கு வந்து, ஆங்கே உதித்தனன் திருமுருகன்.
(தந்தையின் முகம் ஐந்து + தாயின் முகம் ஒன்று - இரண்டும் சேர்ந்து ஆறுமுகன் என்றும் சொல்வதுண்டு.)

கரங்கள் பன்னிரெண்டு, கண்கள் பதினெட்டு
சிவனுக்கு கரங்கள் பத்து. சிவனைவிடப் பெருமை வாய்ந்தது அவனது முருகப் பெருமான் தோற்றம் எனக்குறிக்கவோ அவனுக்கு பன்னிரெண்டு கரங்கள்!
சூரியன், சந்திரன், அக்னி - இவை மூன்று கண்களாக ஒவ்வொரு முகத்திலும் என, அவனுக்கு மூவாறு கண்கள்.
முன்பொரு பதிவிலும் பதினெட்டு கண்களைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம்.

அப்படியாக ஆங்கு வந்து கந்தப்பெருமான் உதித்ததன் பொருள் சூரபதுமன் வதம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் உய்யவதற்கான உக்தியினைத் தந்திடத்தான்.

அப்படிப்பட்ட கந்தபெருமாளை நாவினிக்கப் பாடும் திருப்புகழ் சொல்வது:

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது

(ஓலமிடும் மறைகளால் 'ஒன்றென' உரைக்கப்படும் பரம்பொருள் அது. மேலைப் பெருவெளிதனில் ஒளிர்கின்ற பரஞ்சுடர் அது. ஓதும் நூல்களால் சொல்லப்படும் மூன்று வழிகளை பின்பற்றுபவர்களாலும் "இது தான் அது" என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அளவிற்கு துரிய நிலைதனைக் கடந்தது பரம்பொருள் அது.)

போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
(அருவம், உருவம் - இரண்டு நிலைகளிலும் இருப்பது அது.
பிரபஞ்சம், உடல், உயிர் - என எல்லாவற்றிலும் வியாபித்து இருப்பது அது.)

சால வுடைய தவர்கண்டு கொண்டது
(சிவஞான சித்தி மிகுந்த தவயோகியர் கண்டுகொண்டது அது.)
மூல நிறைவு குறைவின்றி நின்றது
(மூலப் பொருளாய், குறைவு ஏதுமின்றி நின்றது அது.)
சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
(சாதி, குலம் போன்றவை அற்றது.)

சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
(அனுபவம் வாய்ந்தவர்கள் ஒடுங்கும் வீடுபேறு பரமானந்தக் கடலான,
நின் பாத மலர்களை, நான் அடையப் பெறுவேனோ.)

வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
(பாலன், குமரன், குகன், கந்தன், கிரொஞ்ச மலையைப் பிளந்தோன், மயில் வாகனன்
என்றெல்லாம் துதித்துப் போற்றிய இந்திரன் கடும் துயரத்தைக் களைந்தவனே)

வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
(சந்தனம், மங்கலம், கடகம் முதலியவற்றை அணிந்த புயங்களை உடையோனே,
சிங்கம் போன்ற கம்பீர அழகு பொருந்தியவனே,
வெற்றி சூடி போர்களத்தில் சிறந்த சிகாமணியே வயலூரா)

ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலி கவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
(ஞாலத்தின் முதல்வியும் இமவான் மகளுமான நீலி/ கௌரி,
குண்டலினி சக்தியான அம்பிகையாம்)

நாத வடிவி யகிலம் பரந்தவ
ளாலி னுதர முளபைங் கரும்புவெ
ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
(நாத வடிவினளாள், அகிலம் எங்கும் பரந்தவள்
அன்னை பராசக்தி தந்தருளிய பெருமாளே)

Monday, May 16, 2011

நல்லூரான் பாட்டு : நற்சிந்தனை

நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!

எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!

Sunday, January 16, 2011

அருணகிரி வேண்டும் உபதேசம்

"வீடு பெற நில்"
- ஆத்திச்சூடி, ஔவையார்
மும்மூர்த்திகளும் பிரணவ மந்திரத்தின் உபதேசப் பொருளை நாடித்திரிகையில், அவர்களும் கிடைக்கப்பெறாத - கிடைத்தற்கரிய ஒன்றை - எளியேனாம், அடியேனுக்கு உபதேசித்து அருளும் என அருணகிரிநாதர் வேண்டும் பாடல்:

தலம் : திருச்செந்தூர்
ராகம் : ரஞ்சனி
தாளம் : ஆதி - திஸ்ர நடை (12)

தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிக் தங்கிப் ...... பொலிவோனும்

(புகர)புள்ளிகளை உடைய, (புங்க)தூய்மையான, (பகர)அழகிய குன்று போன்ற வெள்ளை யானையிலும்,(புயலின்) மேகத்தின் மீதும் தங்கிப் பொலிவோனாம் இந்திரனும்,

பொருவிற் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும்

(பொருவில்)இணையிலா, (தஞ்சம்)எல்லாக் கலைகளும் தங்கும், (சுருதி சங்கப்பொருளை)வேதங்களின் பொருளை முறையுடன் உரைக்கும் பிரம்ம தேவனும்,

திகிரிச் செங்கட் செவியிற் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்

(திகிரி செங்கட் செவி) மலைபோன்ற பெரிய அரவின் அணையில் துயிலும், செங்கையினில் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும்,

திரியப் பொங்கித் திரையற்று உண்டு
உள் தெளிதற்கு ஒன்றைத் ...... தரவேணும்

திரிந்து பொங்கி (திரையற்று)அலைகள் அடங்கி
உள்ளம் தெளிவதற்கு ஒன்றைத் தர வேண்டும்.

தகரத்து அந்தச் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் ...... துறைவோனே

(தகரத்து) தகர வித்தாகிய (அந்த) அழகிய, சிகரத்தை ஒத்த பேரிடத்தில்
(தடநல்) நல்ல இடமாகிய (கஞ்சத்தில்)இதயக்கமலத்தில் உறைவோனே,

தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித்து அன்புற் ...... றருள்வோனே

(இளமையான தனங்களைக் கொண்ட வள்ளிக்கு பேரின்பத்தை
அளித்து, அன்பு உற்று அருள்வோனே)

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் ...... தொடும்வேலா

(பகர) ஒளியுடைய பசும்பொன் சிகர குன்றமாம் கிரவுஞ்ச மலை
பொடிபட வேலைத் தொடுத்த வேலவா

பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் ...... பெருமாளே.

பவளம் போன்ற சிவந்த மதில் சூழ்ந்த திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே.

~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில்பதியாம் திருச்செந்தூரில் அமர்ந்த கந்தபெருமாளைப் பாடும் இப்பாடலில் 'ஒன்றை'த் தருமாறு வேண்டுகின்றார்.
அந்த ஒன்று எது? எது ஒன்றென எல்லாமுமாய் இருப்பதோ - அந்த ஒன்று. எதை அடைந்தால் - இன்னொன்று என்றில்லாமல், ஒன்றேயெனும் என்னும் நிலை வருகிறதோ - அந்த ஒன்று. அந்த ஒன்று ஓம்காரமாய் ஒலிக்கிறது!
எங்கே?
இதய ஆகாசமாம் தகராகாசத்தின் நடுவே.
ஞானமயமாய் விளங்கும் பரமன், ஓம்கார ஒலியாகவும், வேதங்கள் ஒலிக்கும் பொருளாய் இருக்கிறான்.

அணுவிலும் அணுவாய் பெரிதிற் பெரிதாய்
ஜீவனின் இதயக் குகையில் உறையும் பரமனை
அருளினால் அறிவான் - ஆசைகள் அற்றவன் .
ஈசனின் பிரசாதமாய் தன் மகிமையை
சோகமிலாதவனாய்க் காண்கிறனன்.
(ஸ்வேதாஸ்வதர உபநிடதம் 3.20)

இதுவேயாம் பிரமபுரம் - இதிலேயாம்
இருப்பது தகரபுண்டரீக வீடு. இதிலேயாம்
இருப்பது தகராகாசம்.
அறியவும் நாடவும்
அரிதாய் இருப்பது.
(சாமவேத சாந்தோக்ய உபநிடதம் 8.1.1)
தஹ்ரம் விபாப்மம் பரவேச்மபூதம்
யத்புண்டரீகம் பரம்த்ய ஸம்ஸ்தம்
தத்ராபி தஹரம் ககநம் விசோகஸ்
தஸ்மிந் யதந்தஸ்த துபாஸிதவ்யம்.
(தைத்திரீயாருணை சாகை 12-16)
(பாவமில்லாததாயும், பரமனுக்கு ஏற்ற வீடாகவும் இருக்கிற இதய கமலம் எதுவே, அதுவே சோகமிலாததாய் - தகராகாசமாய் உளது. அதன் உள்ளே உளது, உபாசிக்கத் தக்கதாய் உளது.)
இதயக் கமலத்தை - புண்டரீகபுரமென்றும், சிதம்பரத் தலத்தையும் புண்டரீகபுரமென்றும் வழங்குவதில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தீர்களா!
புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்
புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே
ஏன் மலைக்கிறாய் மனமே!
- மாரிமுத்தாப்பிள்ளை

ஈடு இணையிலா அந்த புண்ணிய தலம், இதயக் கமலமன்றி வேறேது!

Tuesday, December 21, 2010

பக்தியும் ஞானமும் (3) : தண்டாயுதபாணி

சப்தமும் அறியேன், அந்த சப்தத்தின் அர்த்தமும் அறியேன். ஆனால் என் இதயத்தில் ஆறு முகம் கொண்ட சத்யமான பொருள் ஒன்று பிராகசிக்கின்றது.
- சுப்ரமணிய புஜங்கம், ஆதி சங்கரர்.
ர்நாடக இசையில், முத்துசாமி தீக்ஷிதர் என்ற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது அவரது 'குருகுஹ' என்னும் அவரது இயற்றியவர் முத்திரையும், அதில் பொதிந்திருக்கும் கார்த்திகேயனது பெயரும் தான். 'குருகுஹ' என்னும் முத்திரைக்குக் காரணம், அவர் பாடல் இயற்றுவதை துவக்கி வைத்த அவது குருவும், குகனான திருத்தணி முருகனும் என்பதால். தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் மனக்குகையில் பிரகாசிப்பவனாகவும், ஞானத்தை உபதேசிக்கும் குருவாகவும் அமைந்திருப்பதுதான் அப்பெயருக்கு எப்பொருத்தம்!

ஷண்முகனுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள்!!! முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளின் சாகித்யத்தில் அவையாவும் விரவியிருப்பது கண்கூடு. 'பரமசிவன் குமாரன்', 'பார்வதி புத்திரன்', 'கார்த்திகைப் பெண்டிரால் அரவணைக்கப்பட்டவன்', 'கந்தன்', 'குகன்', 'வேலாயுதன்', 'சேவல் கொடியோன்', 'தண்டாயுதபாணி', 'மயில் வாகனன்', 'தேவசேனதிபதி', 'ஆறு எழுத்தோன்', 'சரவணபவ', 'வள்ளி மணாளன்', 'தெய்வயானையின் கணவன்', 'அசுரர்களை அழித்தவன்', 'பிரணவ மந்திரத்தை உபயோகித்தவன்' போன்ற பற்பல பெயர்களால் குமரனை அழைத்து மகிழ்ந்திருக்கிறார் தீக்ஷிதர் பெருமான்.

குறிப்பாக, கீகண்ட தீக்ஷிதரின் கிருதிகளில் இருந்து:
* குருகுஹாதன்யம் (பல ஹம்ச ராகம்) :
'குப்த ஆகமார்த்த தத்வ ப்ரபோதினோ': மறைந்திருக்கும் வேத பொருளை அறிந்தவர்
'வாதிதராந்த தத்வஸ்வரூபிண': பூமி முதல் சிவன் வரையான 36 தத்துவங்களை உடையவர்
'சக்ஸ்ரதள சரசிஜ மத்ய நிவாசின' : 1000 தாமரை இதழ் கொண்ட சக்கரத்தின் மத்தியில் அமர்ந்தவர்
'ஜீவைக்யாத்மனோ' : ஜீவனோடு ஐக்கியமானவர்
'தஹரவித்யா ப்ரதாயக பரமாதனோ' : தஹர வித்யைக்கு காரணமானவர்
போன்ற பொருள் பொதிந்த பதங்களைக் காணலாம்.

* சுவாமிநாத (நாட்டை ராகம்)
'பூமிஜலாக்னி வாயுககன் கிரண' : பஞ்ச பூதங்களின் சொரூபமானவர்
'ப்ரப்ரவாமதி பூஜிதபதேன' : ப்ரப்ரவாம முதலான மந்திரங்களால் பூஜிக்கப்பட்டவர்

* ஷடானனே (கமாஸ் ராகம்)
'ஷட் ஆதாராதி சக்தியாத்மகே' : ஆறு சக்தியாக இருப்பவர் , அறுகோனங்களின் மத்தியில் இருப்பவர்

* ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே (காம்போதி ராகம்)

'தாரக சிம்மமுக சூரபத்மாசுர சம்ஹர்த்ரே': தாரகாசுரன், சிம்மமுகன், சூரபத்மாசுரன் முதலிய கொடியவர்களை வதைத்தவர்.

* மானச குருகுஹ ரூபம் பஜரே (ஆனந்த பைரவி)

திருத்தணி முருகனைப் பாடும் அற்புதமான பாடல். இப்பாடலில் முருகப் பெருமானை குருவாய் பாவிக்கிறார். சத்வ குணம் நிறைந்த சதாசிவமாய் இருபவர் சண்முகன். இவ்வுருவத்தில் இருந்துதான் எல்லா ஜீவனும் அவித்தையுடன் பிறந்தது. அண்ட சராசரமும் அவனது தாமச குணத்தின் குறிப்புதானோ!. தாரகேஸ்வரனாகவும் முருகப் பெருமான் இருந்து பிறவிக்கடலைக் கடக்க பேருதவி புரிகிறார்.அவரே 'ஆனந்தபைரவராக' - பேரானந்தப் பெருவொளியாய்த் திகழ்கிறார்.
இப்பாடலை சமீபத்தில் நடந்த ஜெயா டி.வி மார்கழி மகோற்சுவத்தில் மல்லாடி சகோதரர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



அடுத்து, ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த 'தண்டாயுதபாணிம்' என்கிற கீர்த்தனையை கொஞ்சம் விரிவாகப் பார்த்தால்:

மனமே, தண்டாயுதபாணியை நினை. அசுரரை தண்டித்தவனை, கருணைக் கடலானவனை, தேவர்களால் போற்றப்படுவனை நினை மனமே.

நூறுகோடி சூரியனாய் பிரகாசிப்பவனே! எப்போதும், எல்லாவிடத்திலும் நிறைந்து, எதனாலும் குறுக்கப்படாதவனே! உயர்ந்த கற்களை மாலையாய் அணிந்தவனே! தாரகாசுரனையும், சூரபதுமனையும் தண்டித்தவனே!

புன்னகை தவழும் தாமரை முகத்தவனே! மாதவன் மருகனே! தேவர்கள் பணியும் தேவசேனாபதியே! முனிகளின் மதிப்பே! முசுகுந்த வம்சத்தைக் காப்பாற்றியவனே! பிரம்மா மற்றும் விஷ்ணுவால் வணங்கப்பட்டவனே! உனது அதரங்கள் தேனானது. பூமிதத்துவத்தினை உனது சந்தனத்தில் தெரிவிப்பவனே! ஆகாச தத்துவத்தினை, மலரின் மணத்தில் தெரிவிப்பவனே! வாயு தத்துவத்தினை தூபத்திலும், நெருப்பினை, தீப வரிசையிலும், நீரினை உனது பிரசாதமாகவும் தருபவனே!

குருகுஹனே - நீயே பேரானந்தமாய் இருப்பவன். தாமரைப் பாதங்களைக் கொண்டவன். தனது சேனையில் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொண்டவனே! தூய ஞானமதைத் தரும் பேரானந்தமே!

பாடலை திருமதி இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
dandayudapAni-song...


தண்டாயுத பாணிம்
ராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ரூபகம்

பல்லவி
த3ண்டா3யுத4 பாணிம் த3ண்டி3த தை3த்ய ஸ்ரேணிம்
த3யா நிதி4ம் ப4ஜ ரே ஹ்ரு2த3ய ஸததம் ஸுர வினுதம்

அனுபல்லவி
சண்டா3ம்ஸு1 ஸ1த கோடி ஸங்காஸம் ஜக3தீ3ஸம்
அக2ண்ட3 ரூபம் அண்ட3ஜ மணி மண்ட3ல-மய குண்ட3லாதி3 -
(மத்4யம கால ஸாஹித்யம்)
மண்டி3தாங்க3 ஸுகுமாரம் க2ண்டி3த தாரகஸூரம்
பண்டி3த-தர நவ வீரம் சண்டி3கேஸாவதாரம்

சரணம்
மந்த3ஸ்மித வத3னாரவிந்த3ம் மாதுல கோ3விந்த3ம்
ஸரணாக3த ஸுர ப்3ரு2ந்த3ம் ப3ஹு மானித முனி ப்3ரு2ந்த3ம்
பரிபாலித முசுகுந்த3ம் ப்ரணத விரிஞ்சி முகுந்த3ம்
அத4ர மது4ர மகரந்த3ம் ம்ரு2து3-தர வசனம் அனிந்த3ம்
மாயா மூல கந்த3ம் ஸ்கந்த3ம் ஸந்த3ம்
ப்ரு2தி2வ்யாத்மக க3ந்த4ம் க3க3னாத்மக ஸும க3ந்த4ம்
வாயு-மய தூ4ப க3ந்த4ம் வஹ்னி-மய தீ3ப ப்3ரு2ந்த3ம்
அம்ரு2தாத்மக ரஸ ப்3ரு2ந்த3ம் ஸ்ரீ கு3ரு கு3ஹம் ஆனந்த3ம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸுந்த3ர கர சரணாரவிந்த3ம் ரத2 க3ஜ துரக3 ப்3ரு2ந்த3ம்
ஸத்ய ஞானானந்த3ம் அதி ஸ்வச்ச2ந்த3ம்

ராஜ யோகத்தில் மணிபுர சக்கரத்தின் அதிபதி கந்தன். மூலாதாரத்தில் இருந்து மூலக்கனலை மேலெழுப்பி, சகஸ்ரத்தில் சேர்ப்பதில் துணை செய்பவன். 'சேனைகளுக்குள் ஸ்கந்தன்' என கீதை சொல்லுவதுபோல் இவன் தேவசேனாதிபதி. மனதில் எழும் பயங்களைப் போக்க 'யாமிருக்க பயமேன்?' போக்கிடுபவனாய் வேலுடன் நிற்பவன். விரைந்தோடி துணை புரிபவன் - அதனால் விரைவான ஊர்தியாம் - மயில் வாகனன். மணிபுர சக்ரத்திற்கான வாகனாக செம்மறி ஆடு சொல்லப்படும். குமரனுக்கு ஆடும் வாகனமாய் இருப்பதை திருப்புகழ் உரைக்கும்.

'சுப்ரமண்யன்' என்றாலே வேதத்தின் உட்பொருள் என்பது பொருள். பொன்னேரகம்பதியான சுவாமிநாதன் - ஞான பண்டிதன். அருணகிரியாருக்கு 'சும்மா இரு, சொல்லற' எனும் ஞான உபதேசம் சொன்னவன். அண்டி வரும் அடியார் மனமதில் குகனாய் வாசம் செய்து, அவர்தாம் மன இருள் அகற்றுபவன். உபநிடதங்களில், நாரதர் தனது துன்பங்களை போக்க வேண்டிட, சனத்குமாரர் அவரது அவித்தைகள் அகல, ஆத்ம உபதேசம் செய்திடுவார். அப்படிப்பட்ட சனத்குமாரர் சாட்சாத் குமரக் கடவுளின் அவதாரம் எனவும் உபநிடதங்கள் சொல்லும். கேட்டதைக் கொடுக்கும் குழந்தை - குறிப்பாக ஆன்ம ஞானத்தைக் கொடுக்கும் குழந்தை குமரன். கேட்க வேண்டியது மட்டுமே நம் பணி. குமாரா, கொடுத்தருள் செய்திட வேண்டும். முருகனை நினைந்துருகி ஒருதரம் பாடி நின்றால், கருணையுடனே வந்து காட்சி தருவான். முருகா! முருகா! முருகா!.

குணங்கள் பொருந்திய சகுணப்பிரம்மமாக குமரக் கடவுள் வழிபடப்பட்டாலும், அவன் உண்மையில் நிர்குணபிரம்மம் என உணர்வோம். எந்த ஒரு பொருளால் சூரியன் முதலான ஒளி தரும் பொருட்கள் எல்லாம் ஒளி விடுகிறதோ - அந்த மூலப்பொருளாக இருப்பது கந்தன். எந்த ஒரு பொருள் எல்லாமுமாக இருக்கிறதோ, எந்த ஒரு பொருளாக அறிந்தால் வேறொன்றில்லை என்கிற நிலை ஏற்படுகிறதோ அப்பொருளாம் பரம்பொருளாய் இருக்கிறான் முருகன். அதே பரம்பொருள் குன்று தோறும் சகுணப் பிரம்மமாக வீற்றிருந்து அடியார்களின் குறை தீர அருள் பாலிப்பது நாம் செய்த தவப்பயனால் தான்!

அடுத்த பகுதியில் ஆனந்த நடமாடும் தில்லை ஈசனைப் பாடும் தீக்ஷிதர் கிருதிகளைப் பார்ப்போம்.
கடந்த பகுதிகள்:
பக்தியும் ஞானமும் (2) : கணபதி
பக்தியும் ஞானமும் (1) : முகவுரை

Sunday, May 23, 2010

கான ரசிகன் கந்தன்

இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!
குமாரசாமியின் இசை ரசனைக்கு, 'ரசிகசிகாமணி' என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை பார்த்திருக்கிறோம் இங்கே. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் 'கவி குஞ்சரதாசன்' எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.

எடுப்பு
கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா
எனக்கருள் நீயே தினம்

தொடுப்பு
கனிநய சொல்பொருள் கனகம்பீரம்
இனிய சுருதியோடு இயை லய தீர

முடிப்பு
ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம
பஞ்சம தைவத நிஷாத வித
சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்
அனவரதம் தரும் நின்னருள் மய
-----------------------------
* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
-----------------------------
"கன, நய, தேசிக" என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.
இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!

என்னவெல்லாம் இருக்கும்?:
சொல்
பொருள்
சுருதி

எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?
சொல்லிலும் பொருளிலும் - கனிநயம் நிறைந்திருக்க வேண்டும்.
அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.
இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.

சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் - ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி'யின் தாசனாகிய அடியேன் 'குஞ்சரதாசன்', எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.

"கனிநயம்":
சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர்.
கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.
அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே.
நயமெனில் யாது?
நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.
கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.
கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.

--------------------------------------------------
இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக 'நாதசுதாரசம்' கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:

வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான
நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.

"சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்
இராகம் அவனது கோதண்டமாகவும்
கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,
கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது"
என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.
---------------
இப்பாடலை, ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை இந்த பாடல் தொகுதியில் இருந்துகேட்கலாம்.

Wednesday, March 31, 2010

கண்ணுதலும் மூவாறு கண்களும்


அருணகிரி நாதர், முத்துசாமி தீக்ஷிதர் என கந்த அநுபூதி அடைந்த பெரியவர்கள் தாம் பெற்ற இறையனுபவத்தினை அழகான பாடல்களாக வடித்து தந்திருக்கிறார்கள் என்றால் - அவற்றில் மிளிரும் இறையனுபவத்தினை நாமும் உணரத்தான் அல்லவா!
அதிலிருது ஒருதுளி:

ஆதி சங்கரர் இயற்றிய 'சுப்ரமணிய புஜங்கம்' படித்திருப்பீர்கள்.
அதில் 'அஷ்டாதசலோசன்' என்றொரு வரி வரும்.
அதுபோலவே, முத்துசாமி தீக்ஷிதரும், 'சுப்பிரமண்யேன' எனத்துவங்கும் சுத்த தன்யாசி ராகப் பாடலில், முருகனை 'அஷ்டாதசலோசனா' என்றழைப்பார்.
அஷ்ட + தச = 8 + 10 = 18 கண்கள்!
எப்படி பதினெட்டு கண்கள் இருக்கமுடியும்?
அறுமுகம் என்றால் கூட பன்னிரண்டு கண்கள் தானே?

'கொடிய மறலியு மவனது கடகமு...' எனத்துவங்கும் திருப்புகழில் அருணகிரிநாதர்
'அறுமுகமும் வெகு நயனமும்' என, 'பலவான கண்கள்' என்கிறாரோ தவிர, குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

...
வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(கைக்கிளைப் படலம், 71).

எனக் கம்பன் சுவைக்கும் கண்ணுதற் கடவுளின் கண்மணி எப்படி இருப்பான்?
தகப்பன் சாயலில் தானே தகப்பன்சாமி!
நுதலிற் (நெற்றியில்) கண்ணினை உடைய கண்ணுதலாம்(கண்ணுதல்: ஆறாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை)முக்கண்ணனைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் என்பார்!
முகத்திற்கு மூன்று என, ஆறுமுகத்திற்கு பதினெட்டானதோ, முருகய்யா!

கந்தன் சாயலில் மட்டுமல்ல, முழுக்க முழுக்க சிவனே. சிவனே கதிர்வேலன்.
'பவளத்தன்ன மெனி' செவ்வேளும் சிவனும் சொல்லாடலில் குறிப்பது செந்நிறத்தையேயாம். 'சிவனை நிகர்' முருகனின் ஆற்றுப்படை இடம்கொண்டது, பதினோராம் திருமுறைத் தொகுப்பில்.

ஸ்ரீகுருகுஹ' எனத்துவங்கும் விருவிருப்பான கீர்த்தனையில் பல பதிகளும் சேவிக்கும் பரமனென முருகனைப் புகழ்வார் முத்துசாமி தீக்ஷிதர்.
அந்த பதிகளெல்லாம் யார் யாராம்?

சுரபதி - இந்திரன்
ஸ்ரீபதி - விஷ்ணு
ரதிபதி - மன்மதன்
வாக்பதி - பிரம்மா
க்ஷிதிபதி - அரசன்
பசுபதி - சிவன்

என சிவன் உட்பட, பல்வேறு பதிகளாலும் பூஜிக்கப்படுபவன் பாலசுப்ரமணியன் என்பார் பாடலின் பல்லவியில்.
இப்பாடலை அருணா சாய்ராம் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:

Sunday, February 21, 2010

அறிவியலுக்கு அப்பால்

பூவுலகில் நடப்பது யாவும்
சிவனின் சித்தமே என்றாலும்,
ஒவ்வொரு நொடியும் நடப்பதுயாவும்
கணபதி வரையும் நுண்ணிய ஓவியமேயாம்.
உடனடியாய் வருவான் ,
உடனேயே இருப்பான் ,
புவி ஈர்ப்பு விசை போலே.

தன்னுடனேயே இருந்து
தன்னைச் சாதிக்கச் செய்ததெல்லாம்
ஆனைமுகன் செயலேயாம்.
அழகாக வந்து மடியில் அமர்ந்து
ஆகா, சாதித்து விட்டோம் என்பான்.
எத்தனை எத்தனை எதிர்ப்புகள் வரினும்
அத்தனையும் தகர்த்தெரிவான்;
ஆனை நடந்துவந்த வழியில்
அத்தனை வினைகளும் மடியுது பார், அது போல.

ஆனைமுகனின் பானை வயிறில்தான்
புவியும் அடக்கம் என்பர். அவன் செயல்
புவி ஈர்ப்பு விசைபோல்
அத்தனை அண்டங்களையும்
கட்டி இழுத்திடும் விசையாம்.
வழிமாறிப்போனவற்றை
சமன் செய்யும் விசையாம்.

கணபதியின் இளையவன், கதிர்வேலனோ,
அகிலமெல்லாம் அகண்டிருக்கும்
அணுத்துகள்களை இணைத்திருக்கும்
மின்காந்த சக்தி போலேயாம்.

அன்றாட நடப்பில் நம்முடன் நடப்பவன் கணபதி.
ஆழ்மனதில் அதன் சக்தியாய் உரைபவன் முருகன்.
முருகன் மாற்றங்களை விளைவிப்பவன்.
இச்சையில் தொடங்கி, அதை அடையும் செயலில் முடித்து,
ஞானமதை அடைந்திட கூர்வேலும் குறி சொல்லும்,
வள்ளிக்குச் சொன்னது போல.

மின்காந்த சக்திபோல மறைமுகமாய் இருந்தாலும்
அன்றாட நிகழ்வுகளில் ஒளியாகவும் சக்தியாகவும்
திகழ்கிறான் கார்த்திகேயன்.
கண்ணுக்குப் புலப்படா ஒளி அலைகளின்
வெளிச்சம் மட்டும் புலப்படும்.
அவன் அன்றாட நிகழ்வுகளில் புலப்படாவிட்டாலும்,
அவன் சக்தி புலப்படும்.

அன்றாட செயல்களில் அறமது தழைத்திட
அன்பது துளிர்த்திட அழகன் முருகனது சக்தி
முந்தி மேலேற்றட்டும் மூலக்கனலை.
வேலவன் வேலதுவும்
யாமிருக்க பயமேன் எனக் கேட்கும்.
துணையெனக் கொண்டு தூர்ந்திடும் அன்பொடு
குமரனும் குன்றேற்றிடுவான்.

இரண்டு சக்திகளைப் பார்த்தாதிற்று - இறுதியாய்
பார்க்கவிருப்பது, அணு சக்தி! - அவன்
சக்தியவளை இடமொருபாகமாய் கொண்டவன்.
எல்லாவற்றுக்கும் மேலானவன் - மகேஸ்வரன்.
அணுத்துகள்களை இணைப்பது மின்காந்த சக்தியென்றால்,
அணுவிற்குள் ஒளிந்திருப்பது அணுசக்தி.

கணபதி அசுத்த மாயைகளின் அதிபதி.
கந்தன் சுத்தாசுத்த மாயைகளின் அதிபதி.
சிவன் சுத்த மாயைகளின் அதிபதி.

அண்ட சராசரம் ஆடுவதெல்லாம் அவன் ஆட்டத்திற்கே.
பொன்னம்பலத்தில் பொதிந்த ஆட்டமதில்
அணுத்துகள்கள் அன்றாடம் 'உள்ளே, வெளியே' ஆடும்.
அணுத்துகள்களில் வெளியேற்றமும் உள்வாங்கலுமாய்
அனைத்து மாற்றங்களிலும் இருப்பது ஈசன்,
அணுத்துகள்களின் அணுசக்தியாய்!
அவையனைத்திலும் இருக்கும் சக்தி ஆட்டமே
அம்பலத்தரசனின் ஆனந்தத் தாண்டவம்.
ஆக்கமும், அழிதலும், மீள் ஆக்கமும் என பிரபஞ்சமதில்
ஆதி அந்தமில்லா வேதகம வினோதம்.

இவையெல்லாம்
அறிவியலா, அதற்கும் அப்பாலா, ஆரறிவார்!

Wednesday, October 15, 2008

துணை நீயே, குமரா, துணை நீயே!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(...?!).

அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.

இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி

எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா - என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.

தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, கந்தனே, கருணைக் கடலே.

முடிப்பு
கன்னித்தமிழ் கண்ட ஆண்டவனே, தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ?

பாடல் வரிகள் அழகாக இருக்கிறதல்லவா!
இப்போ பாடலை, பாலமுரளி சார் பாடிக் கேட்கலாம்:
துணை நீயே : இங்கே கேட்கலாம் : [play]
(Pop-Up window needs to be opened)

இராமா வர்மா அவர்கள் பாடிட யூ-ட்யூபில் இங்கு கேட்கலாம்.

பாலமுரளி சாரின் நடை அப்படியே பாடலில் தொனிக்கிறது. மெதுவாக பாடிடும் நடையை, இப்பாடலை வேகமாகப் பாடினால், எப்படி இருக்கும் என வியக்க வைத்தாலும், இந்நடையும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போ, வரிகளைப் பார்ப்போம்.

துணை நீயே குமரா, வினை தீர்ப்பாய் முருகா - என அட்டகாசமானதொரு எடுப்பு!

தொடுப்பில் - பார்தனில் என்ற இடத்தில் - அவர் பாடுவதைக் கேட்டால், சில சமயம் - 'பார்த்தனின்' என்று பாடுவது போல் இருக்கிறது.
அதனால், சற்றே வரிகளை இப்படியாக மாற்றிப் பார்க்கிறேன்!:
பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
கார்முகில் வண்ணன் மருகோன் கந்தனே, கருணைக் கடலே.
ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

முடிப்பில் - துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ? என்ற வரிகளுக்கு என்ன பொருள்? முரளி (குழலின்) கானத்தில் எப்போது முருகன் தன்னை மறந்தார்? நமக்குத் தெரியாமல் ஏதேனும் புராணம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும், நம்ம ஊரில் புரணாக்கதைகளுக்குத் தான் பஞ்சமே இல்லையே!
அப்படி ஏதும் இல்லையென்றால், இப்படி இருக்குமோ?. 'முரளி' என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் 'முரளி' என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?
அல்லது தன்னடக்கமாக இப்படிச் சொல்கிறாரோ?:
குமரா, உன்னை இதுநாள் வரை கானங்களால் துதித்து வந்தேன். என் துன்பங்களும் அதனால் மறைந்து வந்தன... ஆனால் இன்று, என்ன ஆயிற்று உனக்கு?
என் கானத்தில் தான் ஒருவேளே நீ மயங்கி விட்டாயோ?
கானத்தில் மயங்கி, என் குறைகளை தீர்ப்பதையெல்லாம் மறந்துவிட்டாயோ?
இருப்பினும், என்றும் துணை நீயே, குமரா.

நீங்க என்ன நினைக்கறீங்க?

Wednesday, July 09, 2008

அருள் செய்ய வேண்டும் அய்யா!

ந்த இடுகையில் நாம் பார்க்கப்போகிற பாடலில் ஆசிரியர் மிகவும் இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார் என்பதே இவரது இசைப்புலமையை பறை சாற்றும். நீதிமதி இராகத்தில் இவர் இயற்றிய 'மோகன கர முத்துக்குமரா' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தி. அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இவர் யார்? கோடீஸ்வர ஐயர் (1870-1936), என்பது இவரது பெயர்.
"கவி குஞ்சர பாரதி" என்றொரு பெரும் புலமை வாய்ந்த கவியின் பேரன். "கவிகுஞ்சர தாசன்" என்று தன் தாத்தாவின் பெயரோடு 'தாசன்' என சேர்த்துக் கொண்டார், இவரது சாகித்ய முத்திரைகளில்.

இவரது படைப்புகளின் பட்டியலைப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது:
* சித்தி விநாயகர் பதிகம்
* சண்முக மாலை
* சுந்தரேஸ்வர பதிகம்
* கயற்கண்ணி பதிற்றுப்பத்து
* மீனாட்சி அந்தாதி

இங்கு பார்க்கப்போகிற பாடலின் இராகம் இரசிகப்பிரியா. 72 மேளகர்த்தா இராகங்களில் கடைசி இராகமாகிய இந்த இராகம், மிகவும் சுவையானது. இது, விறுவிறுப்பான பாடல்களை அமைப்பதற்கு ஏற்ற இராகம். முன்பொருமுறை திரு.சிமுலேஷன் அவர்கள் இந்த இராகத்தைப்பற்றி எழுதி இருந்தார். இதோ அதன் சுட்டி. இரசிகப்பிரியாவில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் சித்ரவீணை இரவிகிரண் அவர்கள் இயற்றிய 'இரசிகப்பிரிய, இராக இரசிகப்பிரியே!. அந்தப்பாடலை இங்கு கேட்கலாம். அந்தப் பாடல் போலவே, இந்த இடுகையில் நாம் பார்க்கப்போகும் இந்தப் பாடல் வரியிலும் இராகத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பது, தற்செயலோ, தவச்செயலோ!

இராகம்: இரசிகப்பிரியா
(72வது மேளம்)
இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
பாடுபவர் : டி.எம்.கிருஷ்ணா

எடுப்பு
அருள் செய்ய வேண்டும் அய்யா - அரசே முருகய்யா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

தொடுப்பு
மருளுரவே என்னை மயக்கிடும்
மாய வல் இருள் அறவே ஞான
சூரியன் என வந்தோர் சொல்
அருள் செய்ய வேண்டும் அய்யா!

முடிப்பு
நிலையா காயம் இலையே இதனை
நிலையென்று
எண்ணுவதென்ன மாயம்?
நிலையென்று உனையே
நினைந்து நான் உய்ய

நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரியா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

arulseyya_vEndum_i...


பாடலைக் கேட்டீர்களா, எப்படி விறுவிறுப்பாக அமைந்துள்ளதல்லவா!. பாடல் வரிகளில் நான் வியந்தது என்னவென்றால், பல சொற்கள், மிகச்சிரிய சொற்கள் - மருள் உர, இருள் அற, மாய, வல், ஞான, நேச, கவி என இப்படியாக!
விறுவிறுப்பில், அருணகிரியாரை அல்லவா நினைவு படுத்துகிறது!

இவ்வளவு எளிய பாட்டில் எவ்வளவு உயர்ந்த தத்துவமும் அடங்கி இருக்கு! இப்பாடலில், முருகனின் அழகைப்பற்றிப் பாடவில்லை. அவன் அணிந்திருக்கும் வேல், மயில் அல்லது சேவல் பற்றிக் குறிப்பில்லை. அவன் சிவன் சுதன் என்றோ அவனே சிவனே எனவோ சொல்லவில்லை. அவன் முகுந்தன் மருகன் எனச் சொல்லவில்லை. வேறு எதைப்பற்றித்தான் இருக்கு? எதைப்பற்ற வேண்டும் என்றிருக்கு! எதைப்பற்ற வேண்டும்? நிலையானதைப் பற்ற வேண்டும். நிலையிலா உடலைப்பற்றி என்ன பயன்? மிஞ்சுவது மாயை தரும் மருள் மட்டுமே. தொடக்கமில்லா மாயை, இங்கே இப்போதே முடிவு பெற, முடிவில்லா, நிலையான, முருகனை நினைக்க, அதுவே துன்பங்களில் இருந்து மீள்வதற்கான வழி. உன்னைப் பற்றிட அருள் செய்ய வேண்டும் முருகய்யா!

ஓவியரும் இசைக்கலைஞருமான திரு.S.ராஜம் அவர்கள் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள் என்பது கேள்வி. இதுபோன்ற தமிழ் கீர்த்தனைகளை மக்களிடையே பரவிடச் செய்திடல் வேண்டும். இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிகளில் நிறைய தமிழ் கீர்த்தனைகளைக் கொடுத்து, தமிழிசையை வளர்க்க வேண்டும்.

பி.கு: இந்தப் பாடலை இன்னும் சில பாடகர்கள் பாடிக் கேட்கையில், பாடல் வரிகளில் சற்றே மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்களும் சற்றே மாற்றத்துடன் இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம்!

உசாத்துணை:
* கர்நாடிகா.நெட்
* வித்வன்.காம்

Thursday, April 03, 2008

உனை எப்படி நான் மறப்பேன்? : இதயக் கமலத்தில்...

சென்ற பதிவில் என்னை மறவாமல் இருக்க வேண்டும் என தியாகராஜர் இறைவனிடம் மன்றாடுவதை பைரவி ராகக் கீர்த்தனையில் பார்த்தோம் அல்லவா?

இந்தப் பதிவில் எப்படி மறப்பேன் ஐயா என்கிற உருப்படியினைப் பார்ப்போம். அழகு தமிழில் நிறைவான பாடல்கள் பல படைத்துள்ள கடலூர் எம்.சுப்ரமணியன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அவரது தமிழிசைத் தொண்டு போற்றுதலுக்கு உரியது. 'பாடலீசன்' என்பது அவரது முத்திரை என நினைக்கிறேன். அவருடைய இன்னொரு பாடல் மிகப் பிரபலமானது - இராகமாலிகையில் அமைந்தது - நீங்களே சொல்லுங்களேன்.

இந்தப் பாடலைக் கேட்குமுன் சிறியதொரு முகவுரை: இதயக் கமலத்தில், அனஹதத்தில், தூய அன்பாக மலர்ந்திடும் முருகனை எப்படி மறக்க இயலும்? சந்தோக்ய உபநிடதம் அத்தியாயம் எட்டில் (1.3) சொல்லப்பட்டுள்ளதை இங்கே நினைவு கூறுகிறேன்: "இந்த இதயக் கமலத்தில் தான் எல்லாமும் இருக்கிறது. சொர்கமும், பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஆகாசமும், நெருப்பும், காற்றும், சூரியனும், சந்திரனும், சுடர் விடும் விண்மீன்களும் இங்கேதான் இருக்கின்றன."
இப்படி எல்லாமுமாய் இருக்கும் தூய சச்சிதானந்தம், தூய அன்பில் துலங்கிடும். துலங்கித் துலங்கி துளிர் விடும். துளிர் துளிர் விட, தூர்ந்து வளரும். தூர்ந்து வளர வளர, துரியம் அதை அடைந்திட பாதை தனைக் காட்டிடும்.
இதயக் கமலத்தில் அன்பே வடிவாய், ஆனந்தப் புன்னகையுடன், அருந்தவப் புதல்வனாய், பழனியப்பனாய், அவன் அருள் வேண்டி, இந்தப் பாடலை படித்திடுவோம்:

எடுப்பு:
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா? - முருகா - என்
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா?

தொடுப்பு:
பதமலரை தினம் இசை என்னும் மலராலே
பாடிப் பணிந்தேனய்யா - பழனியப்பனே...

முடிப்பு:
பட்டம் பதவி என்ற புகழறியேன் - நான்
பட்டம் பதவி என்ற புகழறியேன்... கந்தக்
கோட்டமே சதமென்று நம்பி வந்தேன்
கஷ்டமே வந்தாலும்... முருகா...
கஷ்டமே வந்தாலும், கை தூக்கி விடுவாயே
கண்கண்ட தெய்வமே - பாடலீசன் குமரா...

என் இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா, முருகா...

----------------------------------
இராகம்: சூத்ரதாரி (நடபைரவி ஜன்யம்) (ஸ ரி2 ம ப த1 ஸ் - ஸ் த1 ப ம ரி2 ஸ)
தாளம்: ஆதி
இயற்றியவர்: கடலூர் எம்.சுப்ரமணியம்
பாடுபவர்: நித்யஸ்ரீ மஹாதேவன்

இதயக் கோயிலில் வசித்திடும்


[play]

Sunday, February 17, 2008

மூன்றாம் படை வீடு, பழநி - திருப்புகழில்...

திமிர வுததி அனைய நரக

செனன மதனில், விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு

சிறிது மிடியும் அணுகாதே


அமரர் வடிவும் அதிக குலமும்

அறிவு நிறையும் வரவேநின்


அருள தருளி யெனையு மனதோடு

அடிமை கொளவும் வரவேணும்


சமர முகவெல் அசுரர் தமது

தலைகள் உருள மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை

தகர அயிலை விடுவோனே


வெம் அரவணையில் இனிது துயிலும்

விழிகள் நளினன் மருகோனே

மிடறு கரியர் குமர பழநி

விரவும் அமரர் பெருமாளே.

-------------------------------
அருஞ்சொற் பொருள்:

திமிர - இருண்ட

உததி - கடல்

சமரம் - போர்

சலதி - கடல்

பதலை - மலை

அயில் - வேல்

மிடறு - தொண்டை

-------------------------------------------------------------

பிறப்பின் தொடக்கமே இருளில் தானே, என் இறைவா,

கருவின் இருளில் தானே, இருண்ட கடலாய், இருளில் தானோ?

நிரந்தரம் இல்லா இவ்வுலகில் பிறப்பதும் நரகம் தானே?

இறைவா, இவ்வுலகம் எனக்கு நரகம் தானே?


இந்நரகம் தனில் உழலச் செய்தாலும், நீ எனைச் செய்தாலும்,

செவிடு, குருடு, ஊனம் அல்லது வறுமை,

பிறக்கும்போதே பிணித்திடும் மரபணு நோய்கள்,

என பலவும் எனை வாட்டி வருத்தாமல்,

அமரர் அழகும், நிறைந்த குலமும், அறிவின் நிறைவும்

பெற்றிட தருவாய் உனது திருவருளை.


சிறுபதரென என்னைப் புறம் தள்ளாது,

என்னையும் உன்மனதில் பொருட்படுத்தி

என்னையும் அடிமையென ஆட்கொள்ள வரவேண்டும்.


போர் முனையில், அசுரர் தலைகள் சிதறிட

அலறலில் ஓயாக் கடலலை போல் ஒலிகள் எழ,

நீண்ட மலையாக எழுந்து நின்ற அசுரனும் பொடிப்பொடியாக,

நெடிய வேலாயுதத்தினை செலுத்திய என் இறையே,


நீ யாரென என்று யாரேனும் கேட்டால் நான் இவ்வாறு சொல்வேன்:

அரவணையில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் மருகனும்

கருநீலகண்டம் கொண்ட சிவனாரின் குமாரனுமான

பழனி மலையில் தண்டம் தனைத் தரித்து

அமரர்கள் அருகில் வந்து தொழுதிடும் குமரன் என்று.

Sunday, November 25, 2007

அறுபடைவீடும் ஆறு சக்கரங்களும்

திருபரங்குன்றம்: மூலவருக்கு இங்கு சுப்ரமணிய சுவாமி என்று நாமம். தேவசேனாதிபதி தேவசேனையை மணந்த தலம். தங்கள் அழுக்குகளை, மூலாதாரத்திற்கு கீழுள்ள சக்கரங்களை மறந்து, இறைவனுடம் இணைவதைக் குறிப்பது, தேவசேனை-திருமுருகன் திருமணம். இந்த தலத்தில் இருக்கும் கற்பக விநாயகனை முதலில் மனத்தில் இருத்தி, அவன் அருள் பெற்று, அறுபடைவீடு தரிசனத்தை துவங்குவோம். மூலாதாரத்தில் அவனுடன் இணைந்து, சரவணபவ எனும் திருநாமம் சொல்லி, மேலான நிலைகளை, சக்கரங்களை அடைவோம்.

திருச்செந்தூர்: மூலாதாரத்தில் துவக்கிய கனல்தனை வளர்த்து அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்தை அடைய, தவ நிலையில் ஜப மாலையுடன் நின்றிடும் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமியை துதித்திடுவோம். அலைகடல் ஓசை எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதைப்போல ஓம்கார நாதம் எப்போதும் ஒலித்திக் கொண்டே இருப்பதைக் கவனிப்போம். பதஞ்சலி முனிவர் அருளியபடி ஓம்காரத்தினை ஒலித்திட, ரீங்காரமாய் சுழலாதோ சுவாதிஷ்டானம் திருச்செந்தூரில்.

பழனி - தியான மலை : பழனி மலையில் தண்டாயுதபாணி போகரின் யோகமதில் அருமருந்தாய் ஔஷதமாய் உறைகிறான்.

அவன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாகவும், காந்தமாகவும் இருக்கிறான், இழுக்கிறான். ராஜ யோகத்தில் மணிப்பூரத்தில் ஏற்படும் பயத்தினை நீக்கிட, 'யாமிருக்க பயமேன்?" என அபயம் காட்டுகிறான் பழனி மலையில் ஞான பண்டிதன்.

சுவாமிமலை: காவிரிக் கரையில் திருவேரகத்தில் அருளும் சுவாமிநாதன். அருணகிரியார் நாதனை திருப்புகழால் பாடிய அருந்தலம்.
இங்குள்ள கொடிமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது ஏற்றது. சுவாமிநாதனின் உபதேச மந்திரம் ஓம் ச-ர-வ-ண-ப-வ. இம்மந்திரத்தை தொடர்ந்து தியான நிலையில் ஒலிக்க, இதயக் கமலமாம் அனஹதத்தில் ஒளிர்வான் சரவணன். இங்கே மலையாகிய ஞானமதை நொடிப்பொழுதில் அடைந்திட இயலும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரப் பிரயோகத்தினால், அவரவர் அகத்திலேயே ஆறு சக்கரங்களில் அறுபடை வீடுகளின் தரிசனம் பெறலாம்.

திருத்தணிகை: குன்றுதோறாடல் என திருமுருகாற்றுப்படையில் அழைக்கப்படும் இந்த தலத்தில் காப்பாற்றும் கடவுளாக ஆதிமுதலே வணங்கப்பட்டவன்.

குளுமையும் அமைதியும் தவழும் இடமாதலால், விசுத சக்ரத்தில் தூய அன்பினைக் கொண்டு முருகனை அடைய ஏற்ற இடம். தன் உணர்வையெல்லாம் மறந்து இறை உணர்வு மட்டுமே இருத்தி, எல்லாவற்றிலும் முருகானாக ஆனந்த பரவசத்தினை அடைய ஏற்ற இடம்.
இந்த தலத்தின் விசேஷம் - கல் வேல் - முருகனின் வேலே முருகனாக ஆதிமுதல் வழிபட்ட இடம். அஞ்ஞானத்தை கூரிய வேலால் பிளந்து உள்ளொளி பெருகிட வழி வகுக்கும்.
பழமுதிர்ச்சோலை: அடுத்ததாக ஆக்ஞை சக்கரத்தில் அவன் அருள் பெருவதற்கு ஏற்ற தலம் பழமுதிர்ச்சோலை.

வீசிய வேல், கார்த்திகேயனின் கையிலேயே திரும்பி வருவதுபோல், எழுப்பிய குண்டலினி சக்தி நம் அஞ்ஞானத்தை அழித்து, ஞானமாக நமக்கு திரும்பித் வருவதைக் குறிக்கும்.

கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான்.

பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.



உசாத்துணை :
1 )ரத்னா நவரத்னம் (Navaratnam, Ratna.
Karttikeya, the divine child: the Hindu testament of wisdom. Bombay, Bharatiya Vidya Bhavan, 1973.)
2) Himalayan Academy - Hinduism Today Magazine

Friday, November 23, 2007

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா - என்
அகம்அது வீடு கொள்ள வரும்முருகா

வருவது வரட்டும் என உனை நான் பற்றிட
உறுதுணை இருக்குது உன் ஆற்றுப்படை.

அறுபடை வீடுதன் பொருளென்ன பெருமானே?
அருமருந்தாய் யோகியரும் சொல்வதென்னே?

கனல் அது பொறியாகி எழுந்தி(ட்)ட மூலதாரத்தில்
கருவாகி தண்டினில் ஏற்றிடும் திருப்பரங்குன்றமோ

மறைபொருள் உணர்த்திடும் சுவாதிஷ்ட்டானத்தில்
தவநிலையில் நின்றி(ட்)ட திருச்செந்தூரோ

பயம்தனை அகற்றிடும் மணிப்பூரத்தில்
தடைகளை தகர்த்தி(ட்)ட பழநியோ

நேரடியாய் தன்அறிவு தூர்ந்திடும் அனஹதத்தில்
சுழன்றிடும் இதயச் சுடராக சுவாமிமலையோ

இறை அன்புக்கதவை திறந்திடும் விசுத்தியில்
நிறை அன்பினை அருளும் திருத்தணிகையோ

உச்சியில் உறைந்திடுவானை பற்றிட ஆக்ஞைசக்ரத்தில்
நெற்றிக்கண் பற்ற எரியும் பழமுதிர்ச்சோலையோ

அறுபடை வீடுதன் பொருள்தனை அருள்வாயே,
அருமருந்தாம் உனை பற்றிடச் செய்வாயே,

முருகா, முருகா, முருகா, முருகா, முருகா, முருகா.