இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா!
ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி - கமலாம்பாள் அன்னையே - என்னைக் காத்து அருள்வாய்.
இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் முதலாவது கிருதி. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஸ்ரீசக்ர ஆவரணம் என ஒன்பது ஆவரணங்களையும் பாடுவதாக அமைத்துள்ளார்.
ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு முறையினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
ஸ்ரீசக்ரத்தின் முதலாவது ஆவரணமாகிய த்ரை லோக்ய மோஹன சக்ரம் பாடற்பெருவதைப் பார்க்கலாம். இந்த சக்ரத்தின் தேவதை பூபுரம் எனப்படும். மேலும் விவரங்களுக்கு இத்தளத்தில் பார்க்கலாம்.
இந்த கிருதியை இரஞ்ஜனி-காயத்ரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
தியாகராஜர் "இராமா நீ சமானம் எவரு?" என்பார், கோபால கிருஷ்ண பாரதி "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?" என்பார், ஷ்யாமா சாஸ்த்ரிகள் இந்த கிருதியில் குமார ஜனனியாம் உமையே - உனக்கு சமானம் எவரும் இல்லை என்கிறார்!
தஞ்சை பெரிய கோவிலின் பெருவுடையார் - பிரஹதீஸ்வரின் இடது பாகமாம் - பிருஹநாயகி அன்னையைப் பாடும் பாடலாகும் இது.
இப்பாடலை சௌம்யா அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
இராகம் : ஆனந்தபைரவி தாளம் : ஆதி இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்த்ரிகள் பல்லவி
ஹிமாசல தனய ப்ரோசூடகிதி
மஞ்சி சமயமுராவே அம்பா
அடுத்த சரணத்திலோ, "மா" வில் இருந்து "தா"விற்கு தாவினதோ?
சதா
நத தாயகீ தாசூடனு
கதா
வினதா
துரித -------------------------------------------------------------------------------------------
மேற்சொன்ன பாடல் பிரஹநாயகி அம்பாளின் மீது என்றால்,
அடுத்த பாடல் பிரகதீஸ்வரர் மீதானது.
இடப்பக்கத்தில் இருந்து அடுத்து வலப்பக்கத்திற்கு!
இராகம் : ஆனந்தபைரவி தாளம் : ஆதி இயற்றியவர்: தஞ்சை சிவானந்தம்
எடுப்பு
காப்பதுவே உனது பாரம்
தொடுப்பு
வாய்ப்பதுவே உனது அருள்
வையகத்தில் வாழச் செய்து
(சிட்டை ஸ்வரம்)
முடிப்பு
இன்பதென்பது அறியாத ஏழை
எனை மறந்திடாமல்
நின் புகழைப் பாடிடவே
நெஞ்சில் உறை தஞ்சை பிரகதீசா!
(சிட்டை ஸ்வரம்)
இப்பாடலை காயத்ரி வெங்கட்ராகவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.
இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்
பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.
இது ஒரு வங்காளப் பாடல் - ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி அன்னையை இப்பாடலில் பாடுவது வழக்கம்!
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
காளி காளி காளி போலே
காளி காளி காளி போலே
அஜபா ஜதி ஃபுராய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
(கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
"காளி காளி காளி" என்று நானும் சொன்னால்
என் கடைசி மூச்சு வரையிலும் சொன்னால்
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
திரி சந்த்யா ஜே போலே காளி
பூஜா சந்த்யா செ கி சாய்
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
சந்த்யா தார் சந்த்யானெ பெரெ
கபு சந்தி நஹி பாய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
மூன்று சந்தி வேளையிலும் காளி என்ற பெயரைச் சொன்னால்
பூஜைகளும் பிரார்த்தனைகளும் தேவையா?
பூஜைகள் அருகாமையில் இட்டுச் செல்லலாம், ஆனால்
பூஜைகள் தன்னைக்காட்டிலும் தாண்டிச் செல்ல இயலா.
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)
ஜப யக்ன பூஜா ஹோம
ஆர் கிச்சு நா மன லய்
மதனெர ஜாக யக்ய
பிரம்மமயீர் ராங்கா பாய்
(ஜபங்கள், யக்னம், பூஜை மற்றும் ஹோமங்கள்
மனதை லயிக்க விட வில்லையே
மதனின் ஜபம் எப்போதும்
அன்னையின் பாத மலர்களே.)
காளி நாமெர் எத குன்
கெபா கா ஜான்டெ பாரெ டாய்
தேவாதிதேவ் மஹாதேவ் ஜர்
பஞ்சமுகெ குன காய்
கயா கங்கா ப்ரபாசாதி
காசி காஞ்சி கெபா சாய்
(காளி அன்னையின் பெயரில் அத்தனை சக்தி
இருப்பதை யார் அறிவார்?
தேவாதிதேவன் மகாதேவனே அன்னையின் பெயரை
தன் ஐந்து முகங்களின் ஐந்து வாய் வழியே பாடிட
கயை, கங்கை, பிரபாஸ் (சோம்நாத்),
காசி அல்லது காஞ்சி ஏன் செல்ல வேண்டும்?)
மகாகளியின் புகழ் என்று தலைப்பிட்டு மகாகவி பாரதி வடித்த இந்த காவடிச்சிந்தினை இங்கே பாடிக் கேட்கலாம்:
1. எம்.எஸ் அம்மா
2. ராஜ்குமார் பாரதி
ஆதியாய், ஆதியின் சோதியாய் அன்னையவள் இருப்பள்!
பாதியாய் வேணியனின் மேனியதில் ஏகினாளோ!
அங்கும் இங்கும் எங்கும் உள்ளாளே!
எனினும் ஏதுமற்ற மெய்பொருளின் சாயையாமே!
மெய்ஞானமென்று மேதினியில் இதனைச் சொல்வார்:
சக்தியவள் இல்லாத பொருளுமில்லை.
சக்தியவள் இல்லாமல் ஏதுமில்லை.
இதையறியும் அறிவேதான் பரம ஞானமாகும்!
எல்லாத் துயரமும் இதையறிந்தால் இல்லாமல் ஆகும்.
ஒன்பது இரவுகள் - அன்னை சக்தியைத் துதிப்பதற்கு - குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுவது.
.... மேலும்....?
சக்தி?
இயக்க சக்தி - இயங்குவதற்கான சக்தி.
இந்த சக்தி உடலில் இருந்தால் தானே எந்த செயலையும் செய்ய இயலும்?
ஓட்டப்பந்தயத்தில் போல ஓடி தங்கப் பதக்கத்தைப் பெறவும் சக்தி வேண்டுமல்லவா!
ஒரே நோக்கத்தோடு உடலில் சக்தியை கவனத்தோடு செயலில் நடத்துகையில் நமது சக்தியின் திறனை அறிகிறோம். மன நிறைவைப் பெறுகிறோம்.
இது போலவே தான் இறைவனின் சக்தியும்.
இறைவனின் சக்தியில் கவனத்தைக் குவிக்கையில் - அந்த குவிமுனையில் விளையும் ஆக்கத்தினை அறிகிறோம். அவ்வாறு விளையும் ஆக்கமே அன்னை சக்தியாம்.
எப்படி உடலில் சக்தியினை அறிகையில் "நம்மால் இந்தச் செயலை செய்ய முடியும்" என்கிற திறனை அறிகிறோமோ, அதுபோல, இறைசக்தியெல்லாம் ஒன்று சேர - அவற்றின் ஆதாரத்தினை - அன்னையை அறிகிறோம்.
எப்படி குழந்தைக்கு அதன் அன்னை ஆதாரமோ அதுபோல உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும், உயிரில்லா பொருட்களுக்கும் அன்னை சக்தியே ஆதாரம். அந்த ஆதாரத்தினை, இறைவனின் சக்தியினை அறிகிறோம்.
"ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்"
என்பான் "பாட்டுக்கொரு புலவன்" பாரதி.
இவ்வாறு அன்னையை, இறை சக்தியின் ஆதாரத்தினை அறியும் சாதனையைச் செய்வதற்கான பண்டிகையே - நவராத்திரி எனப்பட்டது.
ஓம் சக்தி! சிவசக்தி! பராசக்தி! பாரெங்கும் பரவடிவம் அதுவே பராசக்தி வடிவம். வல்லமை தந்திட வேண்டும் வரமென ஒரே பாட்டில் ஆறு துணை நாடும் அரும் பெரும் பாடல் - பாட்டுக்கொரு புலவன் பாரதி வடித்தது. இப்பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடுவதை கேட்கலாமா?
ஆறு துணை
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதி: கணபதி ராயன்-அவனிரு காலைப் பிடித் திடுவோம்; குண முயர்ந் திடவே-விடுதலை கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சக்தி: சொல்லுக் கடங்காவே-பரா சக்தி சூரத் தனங்க ளெல்லாம்; வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி வாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
முருகன்: வெற்றி வடிவேலன்-அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ!-பகையே! துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
கலைமகள்: தாமரைப் பூவினிலே-சுருதியைத் தனியிருந் துரைப்பாள் பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப் புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
கண்ணன்: பாம்புத் தலைமேலே-நடஞ் செயும் பாதத்தினைப் புகழ்வோம்; மாம்பழ வாயினிலே-குழலிசை வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
திருமகள்: செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு சிந்தனை செய்திடுவோம்; செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி திக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
அடுத்த பாட்டு. சிவசக்தியைப் பாடும் பாடல். தக தக என ஆடி சக்தியைப் பாடும் பாடல். இரண்டு வாரங்களுக்குமுன் இங்கு அட்லாண்டாவில் நடந்த கச்சேரியிலும் நித்யஸ்ரீ மஹாதேவன் அற்புதமாய் பாடினார். அதே பாடல், அவரது குரலில்:
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம் துதி சயமானன சுந்தரவல்லி, துணை இரதி பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம் மதி சயமாகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே? - அபிராமி அந்தாதி
இப்படி, அப்படி என எப்படிச் சொல்ல இயலும்? பெரொளி கூட்டி, பெருநிறைக் காட்டி, ஈதன்றி வேறில்லை எனவிருக்கையில் வேறெப்படிச் சொல்ல இயலும். அதிசயம்! ஆம், அதிசயம்!
ஒப்பிலா சொல்லில் அதிசய வடிவில் மெச்சிடும் பேச்சாய் நிற்பாள் அன்னை!
அன்னையவளைப் பாடும் அபிராமிபட்டரின் அந்தாதி சொல்லும் சந்தத்தை சிந்தித்திருக்கையில் அங்கயற்கண்ணியைப் பாடும் மாமேதை நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய பாடல்கள் - ஒன்று மட்டுமல்ல - மூன்று பாடல்களைச் இங்கே சுவைக்கப்போவது சுகம். ~~~~~~~~~~~ 1. இராகம் : கரஹரப்ரியா தாளம் : ஆதி பாடுபவர் : திரு. உன்னி கிருஷ்ணன்
இன்று, அன்று என்றில்லாமல் தொன்று தொட்டு சக்தி வழிபாடு நிலவி வருகிறது நம் நாட்டில். தட்சன் நடத்திய யாகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாட்சாயினியின் உடலை சிவன் சுமந்து மிக துயரத்தில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த மஹாவிஷ்ணு, சக்தியின் உடலை சக்ராயுதத்தில் துண்டு துண்டாக வெட்டும்போது, அந்த துண்டுகள் 51 இடங்களில் விழுந்ததாகவும், அவையே 51 சக்தி பீடங்களாக பாரதம் மழுதும் அமைந்தன என்றும் புராணங்கள் சொல்லும். ஜ்வாலாமுகி, சித்தபூரணி, காசி, பிரயாக், வைஷ்ணவி, பத்ரிநாத், நேபாளம், காஞ்சி, மதுரை, திருவாரூர், திருக்குற்றாலம், மைசூர், கொடுங்களூர், சோட்டாணிக்கரை, சிருங்கேரி ஆகியவை முக்கியமான தலங்களாகும்.
சக்தி வழிபாடு இருவகைப்படும். ஒன்று அக வழிபாடு. இன்னொன்று புறவழிபாடு. அக வபாட்டில், யோகியானவன் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, சிரசிலிருக்கும் சஹஸ்ரதள கமலமான சிவனிடம் ஐக்கியமாகச் செய்து ஆனந்தத்தை அடைகிறான். சக்தியின் புறவழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது ஸ்ரீசக்ரம் ஆகும்.
ஸ்ரீசக்ரம்: பல கோணங்கள் கொண்ட வரைபடம் போல் பார்க்க இருந்தாலும், இதன் கண பரிணாமத் தோற்றத்தில் பார்க்கையில் மேரு மலையைப் போன்றது.
1. இதன் முதல் நிலையில் இருப்பது நான்கு வாயில் கொண்ட பூபுரம் எனும் சதுர வடிவான சுவர்கள். இதற்கு த்ரைலோக்ய மோஹன சக்ரம் என்றும், இதில் 28 சக்திகளுக்கு - பிரகடயோகினிகள் என்றும் பெயர் சொல்வார்கள். 2. இதன் அடுத்த நிலையில் 16 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வாசா பரிபூரக சக்ரம் என்பது பெயர். இதில் 16 குப்த மோகினிகள் வசிக்கிறார்கள். 3. அடுத்த நிலையில் 8 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வ சம்க்ஷோபன சக்ரம் என்றும் இதில் 8 குப்த மோகினிகள் வசிப்பதாகவும் சொல்வார்கள். 4. இதற்கு அடுத்த நிலையில் இருப்பது 14 கோணங்களை சர்வ சௌபாக்ய தாயக சக்ரம் என்னும் நிலை. இதில் வசிப்பவர்கள் 14 சம்பிரதாய யோகினிகள். 5. ஐந்தாவது நிலையில், சர்வார்த்தசாதக சக்ரம் என்ற பெயருடன் 10 வெளிக்கோணங்கள் கொண்டது. இது 10 குளோத் தீர்ண யோகினிகளின் இருப்பிடம். 6. ஆறாவதாக இருப்பது 10 உள்கோணங்கள் உள்ள சர்வ ரக்ஷாகர சக்ரமாகும். இதில் 10 நிகர்ப்ப யோகினிகள் வசிக்கிறார்கள். 7. அடுத்தது, 8 திக்கு கோணமுடைய சர்வரோக ஹர சக்ரம். இதில் 8 ரகஸ்ய யோகினிகள் இருக்கிறார்கள். 8. எட்டாவது நிலையில், முக்கோண வடிவில், சர்வசித்திப்ரத சக்ரத்தில் 3 ரகஸ்ய யோகொனிகள் வசிக்கிறார்கள். 9. இறுதியாக, "பிந்து" என்கிற புள்ளியில், ஸ்ரீராஜராஜேஸ்வரி என்கிற பெயருடம் அன்னையவள் வீற்றிருக்கிறாள். இந்த ஆவரணத்திற்கு சர்வாநந்தமய சக்ரம் என்று பெயர்.
அம்பிகைக்கு கன்னிப் பருவத்தில் "பாலா" என்றும், குமரிப் பருவத்தில் "புவனேஸ்வரி" என்றும், முப்பது வயதுடன் "லலிதா" என்ற பெயரும், அகில உலக அன்னையாக "ராஜராஜேஸ்வரி" என்ற பெயரும் சொல்லப்படுகிறது. மேலும், தீமையை அழிக்க துர்கையாகவும் இருக்கிறாள் அன்னை. ஆதி சங்கரர் தோன்றுவதற்கு முன்பு, சக்தி வழிபாட்டின் தந்திர மார்க்கத்தில் பல்வேறு தவறான பிரயோகங்களும் இருந்தது. சங்கரர் அவற்றை அகற்றி, ஸ்ரீசக்ரத்தை சத் பூஜைகள் மூலம் ஆராதிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அவர் இயற்றிய சௌந்தர்ய லஹரி கீர்த்தனைகளாலும், சப்ததசி பாராயணம், குத்துவிளக்கு வழிபாடு போன்ற முறைகளாலும் - எளிமையான வழிபாடு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
இனி, முத்துசாமி தீக்ஷிதரின் சக்தி கீர்த்தனைகளை ஆராய்வோம். சுமார் 160 சக்தி உருப்படிகளில், 32 கீர்த்தனைகள் விபக்தி கீர்த்தனைகள் ஆகும். விபக்தி என்பது, வடமொயில் வேற்றுமை உருபு - இது மொத்தம் 8 எண்ணிக்கை ஆகும். அபையாம்பிகை, நீலோத்பலாம்பிகை, கமலாம்பிகை, மதுராம்பிகை என நான்கு அம்பாள் பெயரிலும் - ஒவ்வொன்றுக்கும் 8 விபக்தி கீர்த்தனைகள் என - 32 எண்ணிக்கை அமையப் பெறுகிறது. இதில் கமலாம்பிகையின் மீது பாடப்பட்ட கீர்த்தனைகள் யாவும் ஸ்ரீசக்கரத்தின் நவாவரணங்களாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த நவாவரணங்களைப் பார்த்தால்: 1. கமலாம்பா சம்ரக்ஷது (ஆனந்த பைரவி, மிஸ்ர சாபு) 2. கமலாம்பாம் பஜரே (கல்யாணி, ஆதி) 3. ஸ்ரீ கமலாம்பிகயம் (சங்கராபரணம், ரூபகம்) 4. கமலாம்பிகாயை (காம்போஜி, கண்ட) 5. ஸ்ரீ கமலாம்பா பரம் (பைரவி, மிஸ்ர ஜம்பை) 6. கமலாம்பிகயா (புன்னாக வராளி, ரூபகம்) 7. ஸ்ரீ கமலாம்பிகயம் (சஹானா, திஸ்ர திரிபுட) 8. ஸ்ரீ கமலாம்பிகே(கண்டராகம், ஆதி) 9. ஸ்ரீ கமலாம்பா ஜயதி (ஆகிரி, ரூபகம்) இந்த ஒவ்வொரு உருப்படியும் ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு ஆவரணத்தையும், அதன் தேவதைகளையும் பாடுகின்றன. இதைத்தவிர, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்புகளை வேறுபல கீர்த்தனைகளிலும் இடத்திற்கு தகுந்தார்போல் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார் தீக்ஷிதர். மேலும், லலிதா சகஸ்ரநாமவளிப் பெயர்களை தனது பல்வேறு கீர்த்தனைகளில் பிரோயோகப்படுத்தி இருப்பதை ஏற்கனவே இந்த இடுகையில் பார்த்திருக்கிறோம். மேலும், ஸ்ரீ மீனாக்ஷி (கல்யாணி) : இதில் காமாட்சி, விசாலாட்சி மற்றும் மீனாக்ஷி என்று முப்பெயர்களையும் சேர்த்திருக்கிறார். அன்னபூர்ணே (சாமர ராகம்) : பாயச அன்னத்தில் நிரம்பிய பாத்திரத்தையும், தங்க கரண்டியையும் வைத்திருப்பதாக அன்னபூரணியைக் குறிப்பிடுகிறார். ஆர்யாம் அபயாம்பாம் பஜரே (பைரவி): பராசக்தியை பூந்தோட்டம் அமைத்து பூமாலைகளை அணிவித்தல், சந்தனம் அரைத்தல், ஆலயம் கட்டுதல், சுத்தம் செய்தல், சுலோகம் படித்தல், வணங்குதல் முதலான உபசாரங்களால் அவளது அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறார். முக்கியமாக, மீனாக்ஷி மேமுதும் என்கிற பாடலைப்பாடி அன்னையின் முகத்தில் ஆனந்தக் கண்ணீரையும், சிரித்த முகத்தையும் வரவைத்தவர் என்பதை முன்பே இந்த பூர்விகல்யாணி இடுகையில் பார்த்திருக்கிறோம்.
இப்படியாக தீக்ஷிதர் தேவி கிருதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். குறிப்பாக, சாகித்ய வரிகளைப் பார்ப்பதற்காக, இங்கே பூர்ண சந்திரிகா இராக "ஸ்ரீராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி" எனும் பாடலை இங்கு பார்ப்போம்.
இப்பாடலை திருமதி.இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
சிவன், விஷ்ணு, பிரம்மா முதலானவர்களால் போற்றப்படுபவள். (உன்னைப் போற்றினால் அவர்கள் எல்லோரையும் உபாசித்தது ஆகும்.) பரமேஸ்வரனின் நாயகியே, பரம பவித்திரமே. ஈடு இணையற்ற சுகமான ஆத்ம சொரூப ஞானமே. எந்த விதமான அம்சமோ அவையங்களோ அற்ற சைத்தன்யம் நீ.
பரம அத்வைதத்தைப் போதிப்பவளே, லலிதே. பிரபஞ்சத்தின் தோற்ற விளைகளமான சைத்தன்யமே! குருகுஹனாம் தீக்ஷிதரால் போற்றப்படுபவளே! ஜொலிக்கும் நவரத்தின பீடத்தில் அமர்ந்திருப்பவளே! சுகத்தைத் தருபவளே, அகங்காரமற்ற மனங்களில் எல்லாம் பிராகாசிப்பவளே, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!
~~~~~~ பிரம்ம வித்தையைச் சொல்லும் சாத்திரங்களால் அத்வைதமென போதிக்கப்படும் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அன்னை. "ஜகம் நேதம் நேதம்" - பிரபஞ்சம் சத்தியமில்லை என்று அது விலக்கப்பட்டு, சைத்தன்மாய் இருக்கும் பரம்பொருள் அன்னை. பகவான் கண்ணன் கீதையில் உபதேசிப்பது போல
"இந்த பிரபஞ்சம் என்னால் உருவாக்கப்பட்டாலும் - அது என்னுள் இல்லை. எல்லாவற்றைக் காப்பாற்றுவதும் நான் என்றாலும், நான் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இந்த பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து விலகி இருக்கிறேன்." (9.5)
மாயையினால் பிரபஞ்சம் சைத்தன்யத்தில் தோற்றுவிக்கப்பட - அதன் மூலமான சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அம்பாள். அதே மாயையினால் தான், அதன் களமான அம்பாளையே உபாசிக்க இயல்கிறது. மாயை சேர்ந்தால் தானே சகுண உபாசனை. அதே மாயையினால் தான், பிரபஞ்சம் சத்தியமில்லை, பரமன் மட்டுமே சாசுவதமானது என்னும் மெய்ஞான சித்தி வந்து கடைத்தேறக் கிடைக்கிறது.
பாபநாசம் சிவன் அவர்களின் இரண்டு அழகான பாடல்கள் துணையுடன்! முதலில் தேவி நீயே துணை என்று, அங்கயற்கண்ணியாம் அம்மை உமையன்னையைப் பாடும் பாடல். இவள் புவன சுந்தரி, புவனேஸ்வரி। மலையத்வஜன் மாதவத்தின் பலனாய் பிறந்தவள்। காஞ்சனமாலை புதல்வி. அமுதாய் இனிக்கும் செந்தமிழ் வளர்த்த தேவி நீயே துணை!
பாடல் : தேவி நீயே துணை இராகம்: கீரவாணி இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இப்பாடலுக்கான சுரக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
எடுப்பு தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி...)
பூவுலகில் நடப்பது யாவும் சிவனின் சித்தமே என்றாலும், ஒவ்வொரு நொடியும் நடப்பதுயாவும் கணபதி வரையும் நுண்ணிய ஓவியமேயாம். உடனடியாய் வருவான் , உடனேயே இருப்பான் , புவி ஈர்ப்பு விசை போலே.
தன்னுடனேயே இருந்து தன்னைச் சாதிக்கச் செய்ததெல்லாம் ஆனைமுகன் செயலேயாம். அழகாக வந்து மடியில் அமர்ந்து ஆகா, சாதித்து விட்டோம் என்பான். எத்தனை எத்தனை எதிர்ப்புகள் வரினும் அத்தனையும் தகர்த்தெரிவான்; ஆனை நடந்துவந்த வழியில் அத்தனை வினைகளும் மடியுது பார், அது போல.
ஆனைமுகனின் பானை வயிறில்தான் புவியும் அடக்கம் என்பர். அவன் செயல் புவி ஈர்ப்பு விசைபோல் அத்தனை அண்டங்களையும் கட்டி இழுத்திடும் விசையாம். வழிமாறிப்போனவற்றை சமன் செய்யும் விசையாம்.
கணபதியின் இளையவன், கதிர்வேலனோ, அகிலமெல்லாம் அகண்டிருக்கும் அணுத்துகள்களை இணைத்திருக்கும் மின்காந்த சக்தி போலேயாம்.
அன்றாட நடப்பில் நம்முடன் நடப்பவன் கணபதி. ஆழ்மனதில் அதன் சக்தியாய் உரைபவன் முருகன். முருகன் மாற்றங்களை விளைவிப்பவன். இச்சையில் தொடங்கி, அதை அடையும் செயலில் முடித்து, ஞானமதை அடைந்திட கூர்வேலும் குறி சொல்லும், வள்ளிக்குச் சொன்னது போல.
மின்காந்த சக்திபோல மறைமுகமாய் இருந்தாலும் அன்றாட நிகழ்வுகளில் ஒளியாகவும் சக்தியாகவும் திகழ்கிறான் கார்த்திகேயன். கண்ணுக்குப் புலப்படா ஒளி அலைகளின் வெளிச்சம் மட்டும் புலப்படும். அவன் அன்றாட நிகழ்வுகளில் புலப்படாவிட்டாலும், அவன் சக்தி புலப்படும்.
அன்றாட செயல்களில் அறமது தழைத்திட அன்பது துளிர்த்திட அழகன் முருகனது சக்தி முந்தி மேலேற்றட்டும் மூலக்கனலை. வேலவன் வேலதுவும் யாமிருக்க பயமேன் எனக் கேட்கும். துணையெனக் கொண்டு தூர்ந்திடும் அன்பொடு குமரனும் குன்றேற்றிடுவான்.
இரண்டு சக்திகளைப் பார்த்தாதிற்று - இறுதியாய் பார்க்கவிருப்பது, அணு சக்தி! - அவன் சக்தியவளை இடமொருபாகமாய் கொண்டவன். எல்லாவற்றுக்கும் மேலானவன் - மகேஸ்வரன். அணுத்துகள்களை இணைப்பது மின்காந்த சக்தியென்றால், அணுவிற்குள் ஒளிந்திருப்பது அணுசக்தி.
கணபதி அசுத்த மாயைகளின் அதிபதி. கந்தன் சுத்தாசுத்த மாயைகளின் அதிபதி. சிவன் சுத்த மாயைகளின் அதிபதி.
அண்ட சராசரம் ஆடுவதெல்லாம் அவன் ஆட்டத்திற்கே. பொன்னம்பலத்தில் பொதிந்த ஆட்டமதில் அணுத்துகள்கள் அன்றாடம் 'உள்ளே, வெளியே' ஆடும். அணுத்துகள்களில் வெளியேற்றமும் உள்வாங்கலுமாய் அனைத்து மாற்றங்களிலும் இருப்பது ஈசன், அணுத்துகள்களின் அணுசக்தியாய்! அவையனைத்திலும் இருக்கும் சக்தி ஆட்டமே அம்பலத்தரசனின் ஆனந்தத் தாண்டவம். ஆக்கமும், அழிதலும், மீள் ஆக்கமும் என பிரபஞ்சமதில் ஆதி அந்தமில்லா வேதகம வினோதம்.
முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் - பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா!
பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்
-----------------------------------------
1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ!)
சமீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.
பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.
நமக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.
சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.
மூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து மூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட எப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்; எப்போதும் அதனைக்கவனித்து இருப்பாய்.
சக்தி என்பது யாதென்றேன்; சக்தி என்பாய் என்றாய்! சக்தி சக்தி யென்றேன்; புதுசக்தி பிறக்குது. பக்தியுடன் வேண்டிநிற்க பயமனைத்தும் விலகுது. முக்தி நலம் பெற்றிடவே முனைப்பும் முளைவிடுது. ரக்தியும் கூடுது; ராஜயோகம் பெருகுது.
(சக்தி என்பது யாதென்றேன்...) திக்கெங்கும் தேடி திசையெங்கும் ஓடி அஃதென்றே அறிந்திட, சக்தியுனை நாடி சந்ததம் பணிந்து சரணம் அடைந்து முந்தும் முழுமுதல் மூலம் கணபதி பிந்திடாமல் பிழறாமல் இருத்திட, வினைகளை வேரறுத்திட, வேலவன் துணையுடன் விரைவில் அச்சமதை அகற்றி உச்சிதனை அடைய, மெச்சும் சக்தி சிவமதை அடைய, சிவமும் சக்தியும் இணைந்து சிவசக்தி யாகுமாமே.