Sunday, December 19, 2010

பக்தியும் ஞானமும் (2) : கணபதி

காலைப் பிடித்தேன் கணபதி - நின் பதம் கண்ணிலொற்றி!
- மகாகவி பாரதி
(சென்ற பகுதியில் முகவுரையைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி இப்போது...)
புராணக் கதைகளில் பார்த்தால் விநாயகர் யாருடைய உதவியையும் நாடியது கிடையாது. ஆனால் எல்லோரும் அவரது உதவியை நாடி இருப்பார்கள். திரிபுர சம்ஹாரத்தின் போது தேர் முறிந்து இடையூறு ஏற்பட, சிவனே விநாயகரை பூஜை செய்து, அசுரர்களை வென்றார். பண்டாசுர அரக்கனை வெல்ல, தேவி விநாயகரை நாட, அரக்கனின் விக்ன யந்திரங்களை அகற்றி தேவிக்கு வெற்றியை அளித்தார். ஹேரம்ப மூர்த்தியாக ராமர் உபாசித்து, இராவணனை அழித்தார். அர்க்க கணபதியாக சூரியனால் வழபடப் பட்டவர். பிரம்மா விநாயகரை வழிபடாததால், சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாம். முருகனுக்கோ, வள்ளி மணம் புரிய துணை புரிந்தவர். இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். சரி, இப்படியெல்லாம் ஏன் சொல்கிறார்கள்? தெய்வத்திற்குள் ஏன் இந்த உயர்வு தாழ்வுகள் என யோசிக்கலாம். இப்படியெல்லாம் புராணக் கதைகள் சொல்வதின் பிண்ணணியில் தத்துவங்கள் அடங்கி இருக்கும்.

அது என்ன? எதையும் கணபதி துணையுடன் துவங்குதல் நன்மையில் முடியும் என்பது மரபு. இதற்கு ஆழமான காரணங்களுண்டு. கணபதி மூலாதார சக்கரத்தின் முதல்வன். அசுத்த மாயைகள் அண்டாமல் காப்பவன். வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களைந்தால் தான், மனமது முக்தி என்னும் நிலைக்குத் தயாராகிறாது. எந்த ஒரு தெய்வதை வணங்குவதற்கு முன்பாகவும் கணபதியை வணங்கிடுதல், குறுக்கிடும் இடர்களை களைவதற்கு துணை புரியும். இவ்வுண்மைகள் தான் திரும்பத் திரும்ப பல்வேறு புராணங்கள் மூலமாக சொல்லப்படுகின்றன!

முத்துசாமி தீக்ஷிதரின் கணபதி கீர்த்தனைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றில் சொல்லப்படும் குறிப்புகளைப் பட்டியலிடலாமா!

1. ஸ்ரீ மூலாதார சக்ர விநாயக (ஸ்ரீராகம்)
* மூலாதார சக்கரத்தின் அதிபதி
* 600 சுவாசங்களுக்கு அதிபதி
2. பஞ்ச மாதங்கமுக கணபதினா (பிலஹரி)
* பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்ச சிருஷ்டிக்கு காரணம்
3. ஸ்ரீ கணேசாத் பரம்
* பூமி முதல் சிவன் வரை 36 தத்துவங்களை தன்னுள் கொண்டவர்
4. விநாயக (வேஹவாகினி ராகம்)
* சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றை முக்கண்களாகக் கொண்டவர்
5. கஜானானயுதம் (வேஹவாகினி ராகம்)
* அர்த, காம, மோட்சம் என்னும் வாழ்வியல் குறிக்கோள்களை அடையத் தருபவர்
6. வாதாபி கணபதிம் (ஹம்சத்வனி)
* பிரணவ சொருபத்தினைக் கொண்டவர்
7. மஹா கணபதிம் (தோடி)
* திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனால் அர்ச்சிக்கப்பட்டவர்
8. வல்லப நாயகஸ்ய (பேகடா)
* முருகன் வள்ளி திருமணத்திற்கு உதவியவர்
9. லம்போதராய (வராளி)
* அகத்தியரால் வணங்கப்பட்டவர்

இப்படியாக முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளில் இருந்து பல்வேறு சுவையான குறிப்புகளையும் கண்டெடுக்கலாம்.

இந்த படத்தில் பார்த்தீர்களா. கள்ளமற்ற வெள்ளைக் குழந்தைகள் தங்கள் பிஞ்சுக்கைகளால் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனைமுகனும், குமாரசாமியும் அவர்களதுகூட எப்போதும் இருப்பார்கள்.

From என் வாசகம்


'ஸ்ரீகணேசாத் பரம்' என்னும் கீர்த்தனையை இங்கு பார்க்கலாம்.

இப்பாடலை திருமதி.ராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-ganesatparam-s...


ஸ்ரீ கணேசாத் பரம்
ராகம்: ஆர்த்ர தேஸி
தாளம்: ஜம்ப


பல்லவி
ஸ்ரீ க3ணேசாத் பரம் சித்த ந ஹி ரே ரே ஸிவாதி3 ஷட்-த்ரிம்ஸத்-தத்வ ஸ்வரூபிண:

அனுபல்லவி
வாகா3தி3 பஞ்சக வ்யாபார ரஹித - ஹ்ரு2த3யாகாஸ ஸம்ஸ்தி2தாத்- யோகி3 ராஜார்சிதாத்

சரணம்
மாதங்க3 வத3னாத்-உமா ருத்3ர த3ர்ஸிதாத் பூ4த பௌ4திக விஸ்வ பூஜித களேப3ராத் ஸ்வேதார்க ஸும த4ராத் ஸ்வேதர விவர்ஜிதாத் பீதாம்ப3ராவ்ரு2தாத் ப்3ரஹ்மாத்3யுபாஸிதாத் (மத்4யம கால ஸாஹித்யம்) பூ4தாதி3 நுத பதா3ம்போ4ஜாத்-ஸிவாத்மஜாத் ஸீதாம்ஸு த4ர பரம சிவ - கு3ரு கு3ஹாக்3ரஜாத்

பாடற்பொருள்:
சிவன் முதலான 36 தத்துவங்களையும் தன்னில் அடக்கிய கணபதியே, நீயே பரமன். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை. 'வாக்கு' முதலான ஐம்புலங்களும் நுழைய முடியாத இதயக் குகையில் - சிதாகாசத்தில் வசிப்பவனே - யோகியரால் வணங்கப்படுவனே!

யானை முகத்தவனே, சிவன் மற்றும் பார்வதியுடன் இருப்பவனே! வெள்ளை அர்க்க மலர் மாலை அணிபவனே! தன்னிலும், எல்லோரிலும் இருப்பவனே! பீதாம்பரம் அணிந்தவனே! பிரம்மனால் வணங்கப்பட்டவனே! தாமரை பாதங்கள் கொண்டவனே! பூத கணங்களால் போற்றப்படுபவனே! குருகுஹனாம் முருகனுக்கு மூத்தவனே! குளிர்பிறை தரித்த சிவனது மூத்த சேயே, உன்னில் உயர்ந்தது யாதுமில்லை.
~~~~~~~~~~~~

இவ்வாறாக, குணங்களோடு கூடிய தெய்வமாக போற்றினாலும், கணபதி முழுமுதல் பரமன், எல்லாவற்றிலும் உயர்ந்த பிரம்மம் என்றுதான் போற்றுப்படுகிறார். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை என்கிறார். இதன் காரணம், இறுதியில் அடைய வேண்டிய இலக்கான ஞானமதாகவே - பரம்பொருளாகவே - கணபதி இருப்பதுவேயாம்.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.

ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நான்மணிமாலை


அடுத்த பகுதியில் ஆனைமுகனுக்கு அடுத்தவனாம் அழகன் கார்த்திகேயனைப் பாடும் தீக்ஷிதர் கீர்த்தனைகளைப் பார்ப்போம்.

12 comments:

  1. // கர்ம வினைகளைக் களைந்தால் தான், மனமது முக்தி என்னும் நிலைக்குத் தயாராகிறாது.//

    முக்தியை நாடுவோருக்கு இது மிக முக்கியமான குறிப்பாகத் தெரிகிறது.

    ReplyDelete
  2. ப்ரஹ்ம ஞானத்திற்கு வழிகாட்டுவது பக்தி. 100
    அந்த பக்திக்கு வலு சேர்ப்பது இசை.
    இசை துவங்குவதோ ஏழு ஸ்வரங்களில்.
    ஸ்வரங்கள் அவதானிப்பது ஒலியில்
    ஒலியில் பிறப்பதும் அடங்குவதும் அண்டம்.
    அண்டத்தை ஈண்டவன் ப்ரஹ்மன். 150
    Goto 100
    சுப்பு ரத்தினம்
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  3. வருக ஜீவி ஐயா,
    நீங்கள் தனி மடலில் குறிப்பிட்டிருந்த திருத்தங்களையும் செய்து விட்டேன், நன்றிகள்.

    ReplyDelete
  4. கணபதி வணக்கம்

    காயமெனுங் கூடத்து மோகக் கம்பங்
    கற்பனையாங் கணையமவை முறித்துக் காலின்
    மாய விலங்கினையொடித்துக் கருமப்பேராய்
    வரும்பரிக்கா ரரைத்துரத்து வளைத்து நிற்கு ந்
    தீயகுணக் காரணமாம் பாகர் சற்றுஞ்
    சேராத வக்வீசி சிவவே கத்தாற்
    பாயுமருண் ஞானமத வேழத் தின்பொற்
    பாதமுற வேதமுறும் பவங்கள் போமே.

    கண்ணுடைய வள்ளல் எனும் கவிஞர், ராச ராசன் அரசாட்சிகாலத்து இயற்றிய‌
    திரு நெறி விளக்கம் எனும் நூலில் காணப்படும் கணபதி வணக்கம்.

    உங்கள் தொடர் சிறப்பாக அமைய அந்தக் கணபதியை நானும் வணங்குகிறேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. வாங்க சுப்புரத்தினம் ஐயா.
    'goto' வின் சுழற்சியும் இயற்கையும் - தங்கள் கவிதைக்குத் தலைப்பு
    !

    கூடவே கூடுதல் இரண்டு வரிகள்:
    ஒலிகளின் மூலம் ஓம்காரம்.
    ஓம்கார சொரூபம் கணபதி.

    நன்றிகள்.

    ReplyDelete
  6. சூரி ஐயா,
    தாங்கள் பாரதியின் பாடலை தன்யாசி இராகத்தில் இங்கு பாடியிருப்பது அருமை, நன்றிகள்.

    ReplyDelete
  7. சூரி ஐயா,
    கண்ணனின் வள்ளலின் கவிதையைக் குறிப்பிட்டமைக்கு நன்றிகள்.
    தொடருக்காக தங்கள் வணக்கங்களுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  8. கணபதியைப் பற்றி கணக்கில்லாத செய்திகளை அழகுற அள்ளித் தந்திருக்கிறீர்கள். முழுமுதற் கடவுளை நானும் பணிந்து கொள்கிறேன். நன்றி ஜீவா.

    ReplyDelete
  9. வாங்க கவிநயக்கா,
    நன்றிகள்.
    செய்திகள் யாவும் தீக்ஷிதர் தம் பாடல்களில் சொன்னது!

    ReplyDelete
  10. அட, நம்ம சிநேகிதரும் இருக்காரா?? எப்படிக் கவனிக்கலை?? நல்லா இருக்கார் பாட்டுக்கேட்டுண்டு. நன்றி ஜீவா.

    ReplyDelete
  11. உங்க சினேகிதரை கடைசியா கவனிச்சா எப்படிங்க கீதாம்மா! அவரில்லாம எப்படி, அவர்தானே எல்லாவற்றுக்கும் முதல் படி!

    ReplyDelete
  12. அருமையான பாடல் அறிமுகத்திற்கு நன்றி ஜீவா. கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete