Tuesday, December 28, 2010

பக்தியும் ஞானமும் (6) - சக்தி

ன்று, அன்று என்றில்லாமல் தொன்று தொட்டு சக்தி வழிபாடு நிலவி வருகிறது நம் நாட்டில். தட்சன் நடத்திய யாகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்ட தாட்சாயினியின் உடலை சிவன் சுமந்து மிக துயரத்தில் திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்த மஹாவிஷ்ணு, சக்தியின் உடலை சக்ராயுதத்தில் துண்டு துண்டாக வெட்டும்போது, அந்த துண்டுகள் 51 இடங்களில் விழுந்ததாகவும், அவையே 51 சக்தி பீடங்களாக பாரதம் மழுதும் அமைந்தன என்றும் புராணங்கள் சொல்லும். ஜ்வாலாமுகி, சித்தபூரணி, காசி, பிரயாக், வைஷ்ணவி, பத்ரிநாத், நேபாளம், காஞ்சி, மதுரை, திருவாரூர், திருக்குற்றாலம், மைசூர், கொடுங்களூர், சோட்டாணிக்கரை, சிருங்கேரி ஆகியவை முக்கியமான தலங்களாகும்.

சக்தி வழிபாடு இருவகைப்படும். ஒன்று அக வழிபாடு. இன்னொன்று புறவழிபாடு. அக வபாட்டில், யோகியானவன் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, சிரசிலிருக்கும் சஹஸ்ரதள கமலமான சிவனிடம் ஐக்கியமாகச் செய்து ஆனந்தத்தை அடைகிறான். சக்தியின் புறவழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது ஸ்ரீசக்ரம் ஆகும்.

ஸ்ரீசக்ரம்: பல கோணங்கள் கொண்ட வரைபடம் போல் பார்க்க இருந்தாலும், இதன் கண பரிணாமத் தோற்றத்தில் பார்க்கையில் மேரு மலையைப் போன்றது.

1. இதன் முதல் நிலையில் இருப்பது நான்கு வாயில் கொண்ட பூபுரம் எனும் சதுர வடிவான சுவர்கள். இதற்கு த்ரைலோக்ய மோஹன சக்ரம் என்றும், இதில் 28 சக்திகளுக்கு - பிரகடயோகினிகள் என்றும் பெயர் சொல்வார்கள்.
2. இதன் அடுத்த நிலையில் 16 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வாசா பரிபூரக சக்ரம் என்பது பெயர். இதில் 16 குப்த மோகினிகள் வசிக்கிறார்கள்.
3. அடுத்த நிலையில் 8 தாமரை இதகள் இருக்கும். இதற்கு சர்வ சம்க்ஷோபன சக்ரம் என்றும் இதில் 8 குப்த மோகினிகள் வசிப்பதாகவும் சொல்வார்கள்.
4. இதற்கு அடுத்த நிலையில் இருப்பது 14 கோணங்களை சர்வ சௌபாக்ய தாயக சக்ரம் என்னும் நிலை. இதில் வசிப்பவர்கள் 14 சம்பிரதாய யோகினிகள்.
5. ஐந்தாவது நிலையில், சர்வார்த்தசாதக சக்ரம் என்ற பெயருடன் 10 வெளிக்கோணங்கள் கொண்டது. இது 10 குளோத் தீர்ண யோகினிகளின் இருப்பிடம்.
6. ஆறாவதாக இருப்பது 10 உள்கோணங்கள் உள்ள சர்வ ரக்ஷாகர சக்ரமாகும். இதில் 10 நிகர்ப்ப யோகினிகள் வசிக்கிறார்கள்.
7. அடுத்தது, 8 திக்கு கோணமுடைய சர்வரோக ஹர சக்ரம். இதில் 8 ரகஸ்ய யோகினிகள் இருக்கிறார்கள்.
8. எட்டாவது நிலையில், முக்கோண வடிவில், சர்வசித்திப்ரத சக்ரத்தில் 3 ரகஸ்ய யோகொனிகள் வசிக்கிறார்கள்.
9. இறுதியாக, "பிந்து" என்கிற புள்ளியில், ஸ்ரீராஜராஜேஸ்வரி என்கிற பெயருடம் அன்னையவள் வீற்றிருக்கிறாள். இந்த ஆவரணத்திற்கு சர்வாநந்தமய சக்ரம் என்று பெயர்.

அம்பிகைக்கு கன்னிப் பருவத்தில் "பாலா" என்றும், குமரிப் பருவத்தில் "புவனேஸ்வரி" என்றும், முப்பது வயதுடன் "லலிதா" என்ற பெயரும், அகில உலக அன்னையாக "ராஜராஜேஸ்வரி" என்ற பெயரும் சொல்லப்படுகிறது. மேலும், தீமையை அழிக்க துர்கையாகவும் இருக்கிறாள் அன்னை. ஆதி சங்கரர் தோன்றுவதற்கு முன்பு, சக்தி வழிபாட்டின் தந்திர மார்க்கத்தில் பல்வேறு தவறான பிரயோகங்களும் இருந்தது. சங்கரர் அவற்றை அகற்றி, ஸ்ரீசக்ரத்தை சத் பூஜைகள் மூலம் ஆராதிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அவர் இயற்றிய சௌந்தர்ய லஹரி கீர்த்தனைகளாலும், சப்ததசி பாராயணம், குத்துவிளக்கு வழிபாடு போன்ற முறைகளாலும் - எளிமையான வழிபாடு இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.

இனி, முத்துசாமி தீக்ஷிதரின் சக்தி கீர்த்தனைகளை ஆராய்வோம்.
சுமார் 160 சக்தி உருப்படிகளில், 32 கீர்த்தனைகள் விபக்தி கீர்த்தனைகள் ஆகும். விபக்தி என்பது, வடமொயில் வேற்றுமை உருபு - இது மொத்தம் 8 எண்ணிக்கை ஆகும். அபையாம்பிகை, நீலோத்பலாம்பிகை, கமலாம்பிகை, மதுராம்பிகை என நான்கு அம்பாள் பெயரிலும் - ஒவ்வொன்றுக்கும் 8 விபக்தி கீர்த்தனைகள் என - 32 எண்ணிக்கை அமையப் பெறுகிறது. இதில் கமலாம்பிகையின் மீது பாடப்பட்ட கீர்த்தனைகள் யாவும் ஸ்ரீசக்கரத்தின் நவாவரணங்களாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த நவாவரணங்களைப் பார்த்தால்:
1. கமலாம்பா சம்ரக்ஷது (ஆனந்த பைரவி, மிஸ்ர சாபு)
2. கமலாம்பாம் பஜரே (கல்யாணி, ஆதி)
3. ஸ்ரீ கமலாம்பிகயம் (சங்கராபரணம், ரூபகம்)
4. கமலாம்பிகாயை (காம்போஜி, கண்ட)
5. ஸ்ரீ கமலாம்பா பரம் (பைரவி, மிஸ்ர ஜம்பை)
6. கமலாம்பிகயா (புன்னாக வராளி, ரூபகம்)
7. ஸ்ரீ கமலாம்பிகயம் (சஹானா, திஸ்ர திரிபுட)
8. ஸ்ரீ கமலாம்பிகே(கண்டராகம், ஆதி)
9. ஸ்ரீ கமலாம்பா ஜயதி (ஆகிரி, ரூபகம்)
இந்த ஒவ்வொரு உருப்படியும் ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு ஆவரணத்தையும், அதன் தேவதைகளையும் பாடுகின்றன. இதைத்தவிர, ஸ்ரீ சக்ரத்தின் அமைப்புகளை வேறுபல கீர்த்தனைகளிலும் இடத்திற்கு தகுந்தார்போல் மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார் தீக்ஷிதர்.
மேலும், லலிதா சகஸ்ரநாமவளிப் பெயர்களை தனது பல்வேறு கீர்த்தனைகளில் பிரோயோகப்படுத்தி இருப்பதை ஏற்கனவே இந்த இடுகையில் பார்த்திருக்கிறோம்.
மேலும்,
ஸ்ரீ மீனாக்ஷி (கல்யாணி) : இதில் காமாட்சி, விசாலாட்சி மற்றும் மீனாக்ஷி என்று முப்பெயர்களையும் சேர்த்திருக்கிறார்.
அன்னபூர்ணே (சாமர ராகம்) : பாயச அன்னத்தில் நிரம்பிய பாத்திரத்தையும், தங்க கரண்டியையும் வைத்திருப்பதாக அன்னபூரணியைக் குறிப்பிடுகிறார்.
ஆர்யாம் அபயாம்பாம் பஜரே (பைரவி): பராசக்தியை பூந்தோட்டம் அமைத்து பூமாலைகளை அணிவித்தல், சந்தனம் அரைத்தல், ஆலயம் கட்டுதல், சுத்தம் செய்தல், சுலோகம் படித்தல், வணங்குதல் முதலான உபசாரங்களால் அவளது அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறார்.
முக்கியமாக, மீனாக்ஷி மேமுதும் என்கிற பாடலைப்பாடி அன்னையின் முகத்தில் ஆனந்தக் கண்ணீரையும், சிரித்த முகத்தையும் வரவைத்தவர் என்பதை முன்பே இந்த பூர்விகல்யாணி இடுகையில் பார்த்திருக்கிறோம்.

இப்படியாக தீக்ஷிதர் தேவி கிருதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
குறிப்பாக, சாகித்ய வரிகளைப் பார்ப்பதற்காக, இங்கே பூர்ண சந்திரிகா இராக "ஸ்ரீராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி" எனும் பாடலை இங்கு பார்ப்போம்.

இப்பாடலை திருமதி.இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-rajarajeswari....


பல்லவி:
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி த்ரிபுர ஸுந்த3ரி
சிவே பாஹி மாம் வரதே3

அனுபல்லவி:
நீரஜாஸனாதி3 பூஜித பரே
நிகி2ல ஸம்சய ஹரண நிபுண-தரே

சரணம்:
சௌரி விரிஞ்சாதி3 வினுத ஸகலே
சங்கர ப்ராண வல்லபே4 கமலே
நிரதிசய ஸுக2 ப்ரதே3 நிஷ்கலே
பூர்ண சந்த்3ரிகா சீதலே விமலே

(மத்யம கால சாஹித்யம்)
பரமாத்3வைத போ3தி4தே லலிதே
ப்ரபஞ்சாதீத கு3ரு கு3ஹ மஹிதே
ஸுருசிர நவ ரத்ன பீட2ஸ்தே2
ஸுக2-தர ப்ரவ்ருத்தே ஸுமனஸ்தே2

பாடற்பொருள்:
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே - த்ரிபுரசுந்தரியே - சிவே -
சகல வரங்களையும் தருபவளே, என்னைக் காப்பாற்று.

பிரம்மா முதலானவர்களால் உபாசிக்கப் பட்டவளே,
எல்லாவித சந்தேகங்களையும் போக்குபவளே - பிரம்ம வித்யா நாயகியே.

சிவன், விஷ்ணு, பிரம்மா முதலானவர்களால் போற்றப்படுபவள்.
(உன்னைப் போற்றினால் அவர்கள் எல்லோரையும் உபாசித்தது ஆகும்.)
பரமேஸ்வரனின் நாயகியே, பரம பவித்திரமே.
ஈடு இணையற்ற சுகமான ஆத்ம சொரூப ஞானமே.
எந்த விதமான அம்சமோ அவையங்களோ அற்ற சைத்தன்யம் நீ.

பரம அத்வைதத்தைப் போதிப்பவளே, லலிதே.
பிரபஞ்சத்தின் தோற்ற விளைகளமான சைத்தன்யமே!
குருகுஹனாம் தீக்ஷிதரால் போற்றப்படுபவளே!
ஜொலிக்கும் நவரத்தின பீடத்தில் அமர்ந்திருப்பவளே!
சுகத்தைத் தருபவளே, அகங்காரமற்ற மனங்களில்
எல்லாம் பிராகாசிப்பவளே, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி!

~~~~~~
பிரம்ம வித்தையைச் சொல்லும் சாத்திரங்களால் அத்வைதமென போதிக்கப்படும் சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அன்னை.
"ஜகம் நேதம் நேதம்" - பிரபஞ்சம் சத்தியமில்லை என்று அது விலக்கப்பட்டு, சைத்தன்மாய் இருக்கும் பரம்பொருள் அன்னை.
பகவான் கண்ணன் கீதையில் உபதேசிப்பது போல
"இந்த பிரபஞ்சம் என்னால் உருவாக்கப்பட்டாலும் - அது என்னுள் இல்லை. எல்லாவற்றைக் காப்பாற்றுவதும் நான் என்றாலும், நான் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், இந்த பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து விலகி இருக்கிறேன்." (9.5)

மாயையினால் பிரபஞ்சம் சைத்தன்யத்தில் தோற்றுவிக்கப்பட - அதன் மூலமான சைத்தன்ய சொரூபமாக இருக்கிறாள் அம்பாள்.
அதே மாயையினால் தான், அதன் களமான அம்பாளையே உபாசிக்க இயல்கிறது. மாயை சேர்ந்தால் தானே சகுண உபாசனை.
அதே மாயையினால் தான், பிரபஞ்சம் சத்தியமில்லை, பரமன் மட்டுமே சாசுவதமானது என்னும் மெய்ஞான சித்தி வந்து கடைத்தேறக் கிடைக்கிறது.

8 comments:

  1. அருமையான இடுகை ஜீவா. பல முக்கியத் தகவல்களையும் சிறப்பாகவும், சுருக்கமாயும் தொகுக்கிறீர்கள். கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. நன்றி. ஒரு சின்னச் சந்தேகம் மட்டும்.


    //சக்தி வழிபாடு இருவகைப்படும். ஒன்று அக வழிபாடு. இன்னொன்று புறவழிபாடு.//

    எனக்குத் தெரிஞ்சு எங்க வீட்டினருகே இருக்கும் ஒரு சக்தி உபாசகர்(பெண்)ஷோடசி ஆவார். அவர் சொன்னது வாமாசாரம், தக்ஷிணாசாரம் என இருவகை என்றும் இரண்டுமே அக வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் வாமாசாரத்தில் கொஞ்சம் மாறுபடும் எனவும் தக்ஷிணாசாரம் தான் பிரபலம் என்றும் கூறினார். ம்ம்ம்ம்ம்?????

    ReplyDelete
  2. வாங்க கீதாம்மா,
    நீங்கள் குறிப்பிடும் வாமாசாரம், தக்ஷிணாசாரம் பற்றி இங்கேஸ்ரீரங்கன் என்பவரின் பதிவில் பார்க்கவும்,
    நன்றிகள்.

    ReplyDelete
  3. ரங்கனை நல்லாவே தெரியும், ஆனால் இது எழுதி இருக்கிறதைக் கவனிக்காம விட்டிருக்கேன் போல, அவருக்குத் தெரிஞ்சால் கேலி செய்வார். :))))))))) நன்றி ஜீவா. போய்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. இது படிச்சதுதான் ஜீவா, மின் தமிழிலும் போட்டிருந்தார். அதிலேயே படிச்சேன். ஆனால் நான் தேடியதுக்கு இதிலே பதில் இல்லை. ஓகே. நன்றி சுட்டிக்கு.

    ReplyDelete
  5. அடேயப்பா. கீதாம்மா சொன்னது போல் நிறைய தகவல்கள்; அருமையான தொகுப்பு. பாடல் மிக இனிமையாக இருந்தது. நன்றி ஜீவா.

    ReplyDelete
  6. வாங்க கவிநயாக்கா!
    நல்லது, நன்றிகள்.

    ReplyDelete
  7. இன்றுதான் இந்த இடுகையைப் பார்த்தேன். அழகு....நன்றிகள் ஜீவா.

    ReplyDelete
  8. அழகு என்று முத்தாய்ப்பாய் சொன்னமைக்கு நன்றிகள் மௌலி சார்!

    ReplyDelete