Sunday, December 26, 2010

பக்தியும் ஞானமும் (5) - திருமால்

என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும்நிறை பரப்பிரம்மம் அம்மா
என்றழைக்க, என்ன தவம் செய்தனை!
- ஊத்துக்காடு வேங்கடகவி

திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்தவுமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும். குழந்தைக் கண்ணன் தன் வாய் திறந்து அண்ட சராசரங்களையும் காட்டி அன்றே சொல்லிவிட்டான், சகுணப் பிரம்மமாக அவன் காட்சி அளித்தாலும், அவன் பரப்பிரம்மம் தான் என்று.

யாரோ என்றெண்ணாமலே நாளும் - இவன்
அதிசயங்களைச் சொல்லக் கேளும்!
சூராதிசூரன் இராமன் என்னும் பேரன்!
...
இங்கே வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை!
- அருணாசலக் கவிராயர்.

ஆம், குணங்களோடு கூடியதான பரப்பிரம்மம் போற்றிப்பாடிட வழி செய்து பரமனை அறிய மற்றும் அடைய மனிதனுக்கு வழி வகை செய்திட, அது நம் பெருந்தவப் பலன் தான்.

முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளில் இராமனையும் கண்ணனையும் பாடும் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகளை இவ்விடுகையில் பார்க்கவிருக்கிறோம்.

முதலில் ஜகம் புகழும் புண்ணிய கதை : இராமகாதை.
* மாமவ இரகுவீரா (மாஹாரி ராகம்) : இராம சொருபம் தத்வ சொருபம்
* ராமசந்திரேண சம்ரஷிதோஹம் : பிரம்ம, விஷ்ணு, ருத்ர சொரூபம்
* ஸ்ரீ ராமச்சந்ரோ (ஸ்ரீரஞ்சனி) : விஸ்வாமித்திரரின் யாகத்தை காத்தது, தாடகை வதம், மிதிலைப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதை மணம், பரசுராமரின் கர்வத்தை அடக்குதல் - என்று பாலகாண்டம் பளிச்சிடுக்கிறது.
* இராமச்சந்திராதன்யம் (தன்யாசி) : சுபாகு, மாரீசன், கரன், தூஷணன் போன்றோர்களைக் கொன்றது குறிப்படப்படுகிறது.
* மாமவ பட்டாபிராம (மணிரங்கு) : அனுமனால் பாடப்பட்டு, பரதன், இலக்குவன், சத்ருக்கணன், விபீடணன் மற்றும் சுக்ரீவன் போன்றவர்களால் சேவிக்கப்பட்டு, முனிவர்களின் ஆசிகளுடன் நவரத்தின மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்மாசனத்தில் அன்பின் சீதையுடன் கொலு வீற்றிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியினை தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது - பாடலில் தான்.

அடுத்து கவின்மிகு கண்ணன் கதை.
* பாலகோபால (பைரவி) : கம்ச வதம், துரோண, கர்ண, துரியோதனன் முதலானவர்களை ஒஇத்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது.
* ஸ்ரீகிருஷ்ணம் பஜரே (ரூபவதி): பாரதப் போரில் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தது.
* பார்த்தனின் சாரதியானதை ஒரு பாட்டில் 'தனஞ்சய சாரதே' என்கிறார்
* கிருஷ்ணாநந்த முகுந்தமுராரே (கௌடிபந்து) : நாராயணன், வாசுதேவன், கோவிந்தன், பத்மநாபன் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

மேலும், பிளிறு கேட்டோடி வந்து களிறு மீட்டது - கஜேந்திரனைக் காப்பாறியது பல கீர்த்தனைகளில் குறிப்படப்பட்டுள்ளது.
பக்தன் பிரகலாதனை பரிபாலித்தது, கூர்மாவதாரம், வாமனாவதாரம் போன்றவயும் அவரது கீர்த்தனைகளில் இடம்பெற்றுள்ளன.
அஜாமிளன், அம்பாரிஷன் கதைகளும் கூட இடம்பெற்றுள்ளன.

திருமால் திருத்தலங்களை இவரது பாடல்கள் மூலமாகவே தரிசித்து விடலாம். திருப்பதி, காஞ்சி, சோளங்கிபுரம், திருவரங்கம், சிதம்பரம், திருக்கண்ணமங்கை, அழகர் கோவில், குருவாயூர், திருவனந்தபுரம் என நெடியோன் தலப்பட்டியல் நீள்கிறது. "சேஷாசல நாயகம்" என்னும் வராளிராக கீர்த்தனையில் திருவேங்கடத்தானின் அலங்கார அகுகளை வர்ணிப்பார்.

இந்த இடுகையில் நாம் சாகித்யத்துடன் பார்க்கப் போகும் பாடல் 'சந்தான ராமசுவாமினம்' என்னும் பாடல்.
இராகம் : ஹிந்தோள வசந்தம்
பாடற்தலம்: நீடாமங்கலம் (திருவாரூர்)

திருமதி, இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்:
santhanaramaswamin...


பல்லவி

சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே

அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்

சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்

பாடற்பொருள்:
பாடலில் பல்லவியிலேயே தீஷிதர் பிரம்மத்தின் இரண்டு பரிணாமங்களை எடுத்து இயம்பி விட்டார். சந்தான இராம சாமி - இவரே தான் குணங்களோடு கூடியவர் - இவரேதான் குணங்கள் இல்லாமலும் இருப்பவர். எதற்காக இப்படி இருக்க வேண்டும் என்றால் - நமக்கு அருள் செய்வதற்குதான் - அதற்காகத்தான் குணங்கள் பொருந்திய சகுண பிரம்மமாகத் திககிறார்.

எப்போதும் யமுனாம்புரமதில்(நீடாமங்கலம்) வாசம் செய்பவர். ஹிந்தோள வசந்தம் என்னும் இராகத்தில் பாடப்படும் மாதவர்.
சச்சிதானந்த சொருபம். சத்யம் - ஞானம் - ஆனந்தம் - என மூன்று சொருபங்களிலும் ஆனவர்.
"சிவம்" - சிவம் என்னும் நிலை - துரியம் - இதுவே சைத்தன்யம்.

பக்தர்களுக்கு சந்தான சௌபாக்கியங்களை அருள் செய்பவர்.
அவரது தாமரைப் பாதங்கள் சாதுக்களின் இருதயத்தில் தெரிகிறது. (அகங்காரம் அற்றவர்களிடமெல்லாம் அவர் இருப்பார்)
சிந்தாமணி முதலான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்.
சைத்தன்ய சொருபமானவர்.
சூரியன் மற்றும் சந்திரன் இவரது கண்களாய் அமைந்தன.
குருகுஹனான தீக்ஷிதரால் துதிக்கப்படுபவர்.
பொய்யானது இங்கே இல்லை, ஜடமானது இங்கே இல்லை. துக்கம் இங்கே இல்லை. பின் என்ன?
சத்யமாயும், ஞானமாயும், ஆனந்தமாயும் திகழும் சச்சிதானந்த சொரூபம் மட்டுமே. ஆதி அந்தமில்லா சச்சிதானந்தம்.

~~~
திருமாலைப் பற்றிச் சொல்லும்போது அவனது திருமார்பினை விட்டு அகலாத திருமகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமகள் பெருமையினைப் பாடும் 'ஹிரண்மயிம் லக்ஷ்மீம்' எனும் லலிதா ராகப் பாடலை இங்கு முன்பே பார்த்திருக்கிறோம்.
~~~
ஸ்ரீ சத்யநாராயணம் (சுபபந்துவரளி) கிருதியில் தீக்ஷிதர் சொல்லுவது போல, சத்யம் - ஞானம் - ஆனந்தம் எனும் வடிவில் எப்போதும் உள்ளார் நாராயணர். பரமாத்ம சொரூபத்தைத் தவிர பிரபஞ்சத்திற்கு தனியான ஒளி இல்லாததால், சர்வமாக நாராயணர் இருக்கிறார்.

குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மமாக போற்றப்பட்டாலும் - குணங்களற்ற நிர்குண பிரம்மமாய் இராமன் இருப்பவன் என்பதை மகான் கபீர்தாஸர் எப்படி வலியுருத்தி இருக்கிறார் என்பதனை சூரி சாரும் கபீரன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாய் இருக்கும்.

5 comments:

 1. // குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மமாக போற்றப்பட்டாலும் - குணங்களற்ற நிர்குண பிரம்மமாய் இராமன் இருப்பவன் என்பதை மகான் கபீர்தாஸர் எப்படி வலியுருத்தி இருக்கிறார் //

  பிரும்மனை எல்லாம் நிறைந்தவன், எவ்விடத்திலும் நிறைந்தவன், எல்லாம் வல்லவன் என வர்ணித்தபின்,
  " குணங்கள் அற்ற " எனச்சொல்ல இயலுமா என்ன ? பிரும்மனிடம் இது இல்லை என்று சொல்ல முடியுமா
  என்ன ?

  நிர்குணம் என்றால் குணங்கள் இல்லாத என்னும் பொருளில் அல்லாது குணங்களுக்கெல்லாம்
  அப்பாற்பட்ட என்னும் பொருளில் புரிந்துகொள்ளவேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்.

  வழக்கம்போல உங்கள் பதிவு அதுவும் தீக்ஷிதர் க்ருதிகளுடன் விளங்குவதால், நவ ரத்ன மாலையாக‌
  திகழ்கிறது.

  சுப்பு ரத்தினம்.
  http://movieraghas.blogspot.com

  ReplyDelete
 2. வாங்க சுப்ப்ரத்தினம் ஐயா,
  //குணங்களுக்கெல்லாம்
  அப்பாற்பட்ட//
  அப்படியே ஆகட்டும் ஐயா.
  இன்ன ஒரு குணம் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியமற் - எல்லாக் குணங்களும் நீக்கமற நிறைந்திருக்க - எல்லா நிறங்களும் சேர்ந்த வெள்ளை நிறம் போல - பரமன் இருக்கிறான்.
  நன்றிகள்.

  ReplyDelete
 3. சூரிசாரின் விளக்கமும், உங்கள் பதிவும் அருமை. ஆழமான சிந்தனைகள் வழக்கம்போலவே!

  ReplyDelete
 4. சூரி சாருக்கு புரிதல் சாலிட் ஆ இருக்கு! :-))

  ReplyDelete
 5. //சூரி சாருக்கு புரிதல் சாலிட் ஆ இருக்கு! //

  திவா ஸார் கரெக்டா தான் சொல்றார். ஸாலிட் ஆ இருப்பது ஒண்ணு தான். அது
  களிமண் தானே !!
  நிறையாவே இருக்கு. எங்க கிராமத்து வீட்டை கூட கட்டுறதுக்கு
  என் மூளைலேந்து தான் எடுத்துண்டோம் அப்படின்னு எங்கப்பா சொல்வார்.

  சுப்பு ரத்தினம்
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails