Sunday, February 15, 2009

வானத்தில் ஒரு மாடு : ரிஷபம்

தானென்று சொல்லி தனக்கு ஒப்பிலா
வானதன் வன்னமது காண்!

தான், நான், எனக்கு... - என்னும் கூற்றுகளில் சிக்கிட, தனக்கு ஒப்பிலா வானம் போல், எங்கும் நிறைந்திருக்கும் இறையையும் கண்டு கொள்ள இயலுவதில்லை. வானத்தில் எப்போதும் விண்மீன்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பினும், அவை யாவையென கண்டும் காணமல் இருப்பது போல. ஒப்பிலாதவனின் ஒருதுளியாய் இருப்பினும், அவனின் பூரண ஒளியினைக் காண்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. இருப்பினும், அவன்/அது எவ்வாறெல்லாம் சமைந்திருக்கிறான்/றது என்பதை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறியலாம் அல்லவா!

எங்கெங்கும் நிறையும் இறை, எத்தனை எத்தனை விந்தைகளில் சமைகிறான்!
அவற்றில் சில துளிகளை இங்கே படங்களில் பார்த்து பரம் வசப் படலாமா?

வானத்தில் தெரியும் விண்மீன் கூட்டங்களுக்கு பலவாறான உருவங்களைக் கொடுத்து, அவற்றைப் பற்பல பெயர்களில் வழங்குவது நமக்குத் தெரிந்ததுதான் அல்லவா. இங்கே 'ரிஷபம்' என்னும் மாடு வடிவிலான விண்மீன் தொகுதியினைப் பார்ப்போமா!

Stellarium எனும் மென்பொருள் மூலமாக கீழே இருக்கும் படங்கள், பிப்ரவரி மூன்றாம் தேதி எடுத்தவை. இவற்றில் சந்திரன், ரிஷப விண்மீன் தொகுதியினுள் இருப்பதைக் காணலாம்.

ரிஷபம்

மேலே இருக்கும் இரண்டு படங்களும் இந்த ரிஷப நட்சத்திரத் தொகுதியினைக் தொகுத்துக் காட்டுதல்லவா.
இத் தொகுதியில், அந்த மாட்டின் வலது கண் பக்கத்தில், பெரிதாய்த் தெரியும் நட்சத்திரம் தான் ரோகிணி. இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் Aldebaran (87 Alpha Tauri). நமக்கு, 65 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது.
அடுத்த படத்தில், ரோகிணி பற்றிய தகவல்களையும், அதன் அருகே உள்ள நட்சத்திரங்களையும் பற்றி விவரமாகக் காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்.


முதல் இரண்டு படங்களில், மாட்டின் வயிற்றுப் பக்கத்தில், சந்திரனுக்குப் பக்கத்தில், புள்ளி புள்ளியாக சில நட்சத்திரங்கள் தெரிகிறதல்லவா. அவற்றை அருகில் சென்று பார்ப்போம், அடுத்த படத்தில்:அட, ஆறு நட்சத்திரங்கள் எளிதாகத் தெரியுது!. இவை தான் கார்த்திகை நட்சத்திரம்(ங்கள்!). இவற்றோடு அங்கிருக்கும் ஏழாவது நட்சத்திரத்தினையும் சேர்த்து ஆங்கிலத்தில், இவற்றின் தொகுதியை Pleiadas என வழங்குவர். கிரேக்கக் கதைகளில், இவற்றை, 'Seven sisters'(Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno மற்றும் Asterope) என்பர். ஆறேழு மட்டுமல்ல, இருநூறுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இங்கே கொட்டிக் கிடக்கு. கீழே இருக்கும் படத்தில் பாருங்கள், நட்சத்திரப் படலமாகத் தெரியும் இவை:

ஜப்பானியர்கள், இந்நட்சத்திரத் தொகுதியினை 'Subaru' எனவும், ஈரானியர்கள் 'Soraya' எனவும் பெயரிட்டனர்!.

அடுத்து நாம பார்க்கப்போகிறது ஒரு நெபுலா.(Nebula). இது ஒரு நடசத்திரத் துகள் படலம். தூசிபோல, ஒரே நட்சத்திரத் துகள்களாப் படிந்து இருப்பது. இந்த ரிஷப தொகுதிக்குள்ளே, மாட்டின் முதல் கொம்புக்கு அருகே (முதல் படத்தில் சதுரக் கட்டத்தினுள் இருப்பது), இதுபோல ஒன்றைப் பார்க்கலாம்.அடுத்த படத்தில், இதே நெபுலாவினை, நமது தொலைநோக்கியை உற்று நோக்கச் செய்து, பக்கத்தில் போய் பார்க்கலாமா?
வாவ்!


இதற்குப் பெயர் Crab Nebula. நமக்கு 6,500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 1054ஆம் வருடம், இந்த நெபுலா ரொம்ப பிரகாசமாக இருந்ததாம், பகலிலேயே தெரிகிற அளவிற்கு!. பெரிய நட்சத்திரங்கள் வெடித்துப் போகும்போது, அதன் மீதமே, இதுபோன்ற படலங்கள். இந்த நெபுலாவுக்கு நடுவிலே, pulsar எனும், அந்த வெடித்துப்போன நட்சத்திரத்தின் கரு, இன்னமும் விட்டு விட்டு எரிந்துகொண்டே இருக்கிறதாம்!

25 comments:

 1. படங்கள் அருமை ஜீவா...அறியாத செய்திகள் அதிகம்...இன்னொரு முறை படித்து உள்வாங்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 2. வாங்க மௌலி!
  //இன்னொரு முறை...//
  நல்லது!

  ReplyDelete
 3. ரிஷபம் சுக்கிரனுடைய ஆட்சி செலுத்தும் இடம்.
  அங்கே அழகுக்கும் வண்ணங்களுக்கும் கேட்கவா வேண்டும் ?

  ரோஹிணியோ சந்திரனின் நக்ஷத்திரம்.
  மாடுமேய்க்கும் கண்ணனவன்
  மாயக்கண்ணன் இந்த நக்ஷத்திரத்தில் பிறந்ததாகக் கூறுவர்.
  ரோஹினியில் பிறந்தவர்கள் சந்திர ராசியில் தமது வாழ்வினைத்
  துவங்குவர்.


  ரிடபத்தில் துவங்கிவிட்டீர். அது சரிதான் !
  மேடத்தை ஏன் தள்ளிவிட்டீர் ! மேடம் என்பது அஜம் ஆகும்.
  என் போன்ற மட சாம்பிராணிகள் அந்த ராசி என்பதாலோ ?

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 4. //ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது//

  ரோகிணி சந்திரனின் பிரியமான துணைவி!
  நட்சத்திரங்களில் கூட துணைவிகள் தான் துணைவர்களைக் காட்டிலும் 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிக்கவங்களா இருக்காங்க போல! :)
  இதை வெளிப்படையா ஒப்புக்கிட்ட ஜீவாவை நான் பாராட்டுறேன்! :))

  //படங்களில் பார்த்து "பரம் வசப்" படலாமா?//

  சொல் விளையாட்டில் இறங்கிட்டாரு ஜீவா! :)
  பர விளையாட்டு கண்டு பர(ம்)-வசப் பட்டேன்! பிறவசப்படாது பரவசம் பட்டேன்! :)

  ReplyDelete
 5. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
  கண்ணனுக்கு மட்டுமல்ல,
  எங்க அப்பாவுக்கும் ரோகிணி தான்!
  அதான், ரிஷபம்!
  மேலும், இந்த மாதத்தில் வானில் எளிதாக கண்டுகொள்ளக் கூடிய விண்மீன் தொகுதி என்பதாலும்!
  தாங்கள் மேஷ ராசிக்காரரா! அங்கேயும் வந்திட்டாப் போச்சு!

  ReplyDelete
 6. வாங்க கே.ஆர்.எஸ்,
  பரம் வசம் படுதல் பரவசம் தான்!
  பிறிதென இலாமல் பரவசம்!

  ReplyDelete
 7. stellarium போலவே winstars என்ற மென்பொருள் மூலம் இதே மாதிரி பார்க்கலாம்.
  எங்கெங்க,ஊர் முழுக்க வெளிச்சத்தில் இருக்கும் போது வானத்தில் எதுவும் தெரியமாட்டேன் என்கிறது.
  இப்போதைக்கு துபாயில் வீனஸ் மாத்திரம் கொஞ்சம் பளிச் என்று மேற்கு பக்கம் தெரிகிறது.
  ரோகிணி போன்ற விபரங்கள் தெரிந்துகொண்டேன்,நன்றி.

  ReplyDelete
 8. வாங்க குமார், winstars - windows-லே மட்டும் தானே வேலை செய்யும், அது நமக்கு சரிப்படாது இல்லையா!

  ஊருக்குள்ளே இருந்து வானத்தைப் பார்த்து விண்மீன்களைக் கண்டுகொள்வது சிரமம் தான். ஊரைவிட்டு தள்ளி வசிப்பதில் இருப்பதில் ஒரு நல்ல விஷயம் - வானத்தைப் பார்ப்பது! சிலபேர் இதுக்காகவே அதிக வெளிச்சம் இல்லாத பகுதிகளுக்கு போய் பார்த்து விட்டு வராங்க!

  ReplyDelete
 9. தெரியாத செய்திகள். நன்றி ஜீவா. நான் வானத்தைப் பார்க்க வெயில் காலத்திற்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் குளிரில் எங்கே வெளியே வந்து வானத்தைப் பார்ப்பது? :-(

  ReplyDelete
 10. இரவி.

  நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

  ஜீவா பதிவில் ரோகிணி பகலவனை விட 40 மடங்கு பெரியதென்றும் 125 மடங்கு ஒளி மிக்கது என்றும் சொன்னார். நீங்களோ ரோகிணி சந்திரனை விட 40 மடங்கு பெரியதென்றும் 125 மடங்கு ஒளிமிக்கது என்றும் சொல்கிறீர்கள். இதில் எதனை நம்புவது?

  மதியவன் பகலவனை விட ஒளியிலும் உருவிலும் சிறியவன் என்பதால் நீங்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ தவறு இல்லை. ஆனால் நீங்கள் விட்ட தவற்றைக் கவனிக்காமல் விட்டால் நான் எப்படி என் பெயரைத் தக்க வைத்துக் கொள்வது? :-)

  ReplyDelete
 11. வாங்க குமரன்,
  If Winter comes, Can Spring be far behind! Its on the way!
  ஆனா, வானத்தைப் பார்ப்பதற்கு குளிர்காலம் தான் மிகவும் சரியான நேரம் - ஏனெனில் சூரியன் பூமியை விட்டு தொலைவில் இருப்பதால் - there is less light pollution in Space.
  ஆனா, குளிரை நினைத்தால் கடினமாத்தான் இருக்கு! கண்ணாடிப் பலகணி வழியே பார்க்க இயலாதா?
  எதுவும் இல்லாவிட்டால், மென்பொருளே கதி!

  ReplyDelete
 12. //ஜீவா பதிவில் ரோகிணி பகலவனை விட 40 மடங்கு பெரியதென்றும் 125 மடங்கு ஒளி மிக்கது என்றும் சொன்னார்//
  அனேகமா, அது வேலண்டைன்ஸ் டேயோட பாதிப்பு! இருக்கடும்-ன்னு விட்டதை பிடிச்சிட்டீங்க!

  ReplyDelete
 13. Anonymous12:05 AM

  விண்ணியல் குறித்துச் சிந்திக்கத் தொடங்கின் அஃது இயல்பாகவே இறையியலுக்குத்தான் இட்டுச் செல்லும்.

  நன்கு எழுதியுள்ளீர்கள்.

  ReplyDelete
 14. வாருங்கள் அ.நம்பி,
  இறையியல் வரும் பின்னே!
  சொன்ன விதம் என்னே!
  மிக்க நன்றி!

  ReplyDelete
 15. Anonymous8:59 PM

  தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

  ReplyDelete
 16. அறியாத விஷயங்களை அறிவித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 17. வாங்க தி.ரா.ச சார்!
  மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 18. நல்ல பயனுள்ள தகவல்கள்.
  அடுத்த ராசி இல்ல இந்த மாதிரி ஸ்பேஸ் சம்பந்தமான பதிவு எப்ப போடுவீங்க

  ReplyDelete
 19. வாங்க வாழவந்தான்!
  தங்களுக்கு இப்பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி!
  நேரம் கிடைக்கும்போது, அவசியம் இதுபோன்ற பதிவுகள் மேலும் தருகிறேன் - மாதத்திற்கு ஒன்றாவது!

  ReplyDelete
 20. நல்ல தகவல்கள், நட்சத்திரங்கள் குறித்த இந்தத் தகவல்கள் சேகரிக்கும் ஆர்வம் கடைசியில் எல்லையில்லாப் பேரொளியில் ஆழ்ந்து லயிக்க வைக்கும் என்பார்கள். பார்க்கப் பார்க்கப் பரத்தின் வசமே போய் விட்டேன்.

  ம்ம்ம்ம் யோசிச்சுப் பார்த்தேன், எங்க வீட்டிலே யாரும் ரோகிணி இல்லை, ஆனால் மேஷ ராசி உண்டு. அடுத்தது அதுவா?? காத்திருக்கேன்.

  ReplyDelete
 21. வாங்க கீதாம்மா,
  பரம் வசப் பட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  மேஷத்திற்கு மிகுந்த தேவைப்பாடு இருக்கிறது!

  ReplyDelete
 22. nandri thangal thakavalkaluku

  I am in Mumbai. I see the sky but i could not locate any rasi or star. You are already given detailed version on rohini. I am also born on Rohini. But I could not locate here. Kindly give some more explanation to locate the star.

  thank you

  ReplyDelete
 23. இந்த பக்கத்தில் online இல் எந்த நேரத்தில் எந்த விண்மீன் தெரியும் எனப் பார்க்கலாம்

  ReplyDelete
 24. I'm entering a comment more than a decade after, chanced upon this while researching Alderbaran as part of my Know your roots series on Tamil history

  A line in அகநானூறு 136
  சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து.....
  சகடம் ரோகிணி
  துகள்தீர் கூட்டம் is the Nebula I guess

  We need more scientific minds to read Sangam literature

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் பார்க்கவும்:
   https://tamilandvedas.com/2014/05/21/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/

   Delete

LinkWithin

Related Posts with Thumbnails